வெள்ளைப்பூவே நீ எந்தன் காதலடி 11

அத்தியாயம் 11 :

கண் இமைக்கும் நேரத்தில் ஒருவருடம் கடந்திருந்தது.

இந்த ஒரு வருடத்தில் படிப்பே தன் கவனம் என்பதைப்போல் சிவா நடந்துகொண்டாள். எதிரே நானி வந்தாலும் சிறு புன்னகையுடன் கடக்க பழகியிருந்தாள்.

‘இவள் தான் பிடிவாதமாக தன்னை காதலிப்பதாகக் கூறியவளா?’ என்று சந்தேகம் எழுமளவிற்கு சிவாவின் நடவடிக்கைகள் இருந்தது.

நானியே ஏதேனும் பேச வேண்டுமென நினைத்து பேசினாலும், கேட்ட கேள்விக்கு பதில் என்பதை போன்று அளவோடு நடந்து கொண்டாள்.

இருவரின் நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டிருந்த நந்து, இந்த புள்ளையா அன்று அண்ணன் தன்னிடம் பேசவில்லையென அழுதவளென அதிசயத்தாள்.

இதைப்பற்றி நானியிடம் கேட்ட போது, “என் பொண்டாட்டி என்னை காதலிப்பதற்காக வளர்ந்து கொண்டிருக்கிறாள்”, என்றானே தவிர வேறெதும் சொல்லவில்லை.

அழகேசனும் தனிப்பட்ட முறையில் நானியிடம் “உண்மையிலே சிவாவை விரும்புறியா… எனக்கு ஆசை காட்டி ஏமாற்றிவிடாதே” எனக் கேட்க,

“எனக்கு இந்த ஜென்மத்தில் மட்டுமில்லை, எல்லா ஜென்மத்திலும் சிவா மட்டுமே என் மனைவி.” உறுதியாகக் கூறியவன் “அவள் கொஞ்சம் வளரட்டும் ப்பா, அதன் பிறகு நான் நிறைய லவ் பண்ணிக்கிறேன்” என்றவனின் முகத்தில் வழிந்த சந்தோஷம் அழகேசனுக்கும் சந்தோஷத்தை அளித்தது.

அழகேசனுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக நானி பேசியிருந்தாலும், அவனுள்ளும் சிறு பயமிருந்தது.

‘இந்த ஒரு வருடத்தில் அவளுக்குள் மாற்றமாக என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அதன்படி அன்று என்மீது காதலாகத் தோன்றிய உணர்வு இன்று அவளுக்கு விளையாட்டான ஓர் உணர்வு என்று கூட தோன்றலாம். ஒருவேளை என்மீதான காதல் இந்த இடைவெளியில் காணாமல் போயிருக்குமோ.’ நினைக்கவே உள்ளம் பதறியது.

“இந்த குட்டச்சி அன்னைக்கு அவ்வளவு சட்டமா காதலை சொன்னதென்ன, இப்போ நடந்துகொள்வதென்ன… சரியாக என்னை பார்ப்பது கூட இல்லை. உண்மையிலே என் மீது காதலிருந்திருந்தால் இவ்வளவு நாட்கள் விலகியிருக்க முடியுமா?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டவன் ஒன்றை மறந்தான் அவளாக விலகியிருக்கவில்லை தாம் தான் தள்ளியிருக்கக் கூறினோம் என்பதை… ‘தேர்வு முடிந்ததும் மீண்டும் என்னிடம் வந்து காதலை சொல்லுவாளா…’ சிந்தித்தவனுக்கு விடை தான் இல்லை.

நானி தனது படிப்பின் இறுதியில் இருக்க, சிவா தன்னுடைய பள்ளி படிப்பின் முடிவிற்கான இறுதி தேர்வினை எழுதி முடித்து சந்தோஷமாக வீடு வந்தாள்.

“தேர்வு நல்லா எழுதுனியா?” என்ற அரசிக்கு நின்றுகூட பதிலளிக்காது தனது அறைக்கு ஓடியவள், அடுத்த பத்து நிமிடங்களில் வெண்மை நிற சுடிதாரில் தேவதையென வெளி வந்தாள்.

அவளை பார்த்த நந்துவே, “இவ்வளவு அழகையும் இத்தனை நாளா எங்க ஒளித்து வைத்திருந்த?” என கேலி செய்ய, அதை கண்டு கொள்ளாது மாடியையே பார்த்திருந்த சிவா “உங்க அண்ணன் வந்துட்டாரா?” எனக் கேட்டாள்.

“ஓ… ஓ… அது தான் இந்த பலமான மேக்கப்பா?” என்ற நந்து, “மேடம் வளர்ந்துட்டீங்களா?” எனக் கேட்டு சிரித்தாள்.

“நீங்க பேசறது ஒண்ணுமே புரியல” என்ற சிவா, “நானே போய் பார்த்துக்கிறேன்” என்று மின்னலாக ஓடிவிட்டாள்.

ஓடிய வேகத்தில் ஒளியிழந்து கீழிறங்கி வந்தவளின் தோற்றமே நானி அறையிலில்லை என்பதை உணர்த்திவிட, “அண்ணா கிட்ட என்ன சொல்லணுமோ அதை என்னிடம் சொல்” என்ற நந்தினியிடம் நாக்கை துறுத்திஅழகு காட்டியவள், “நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்க அண்ணா தான் எனக்கு பதில் சொல்லணும்” என்றுக் கூறி நானியின் வருகைக்காக காத்திருந்தாள்.

இரவு உணவு நேரம் கடந்தும் நானி வரவில்லை. அவனுக்காக காத்திருந்து மனதில் ஏக்கம் அதிகரித்தது. சிவாவின் கண்கள் நொடிக்கு பல முறை வாயிலை பார்ப்பதை கவனித்த நந்துவிற்கு பாவமாக இருந்தது.

‘இந்த அண்ணா இன்று பார்த்து ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறார்’ என்று நானிக்கு மனதிற்குள் அர்ச்சனை செய்தாள் நந்தினி.

“அவன் வர லேட்டாகுன்னு உங்க அப்பா சொன்னாரு… நீங்க ரெண்டு பேரும் அவனுக்காக காத்திருக்காம வந்து சாப்பிடுங்க” என்ற பத்மாவை சிவா முறைத்துவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

தானும் சாப்பிடாமல் சென்றால் நிச்சயம் பத்மா வாயால் வசவு வாங்குவோம் என பயந்து நந்து சிறிதளவு சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு உறங்கச் சென்றாள்.

“இந்த சிவா ஏன் சாயங்காலத்திலிருந்து ஒரு மாதிரியிருக்கா” என்ற பத்மாவிற்கு, “இன்னையோட பள்ளிக்கு கடைசி நாளில்லையா அதான் தோழிகளை பார்க்க முடியாதுன்னு கவலை படுறாள் போல,” அவள் நானியை எதிர்பார்த்து தான் காதிருக்கிறாளென நன்கு தெரிந்தும் அரசி பத்மாவிடம் அவ்வாறு கூறினார்.

இரவு மிகவும் தாமதமாக வந்த நானி… ஏற்கனவே தன் தந்தையிடம் கூறிச்சென்ற காரணத்தை பத்மாவிடம் கூறினான்.

“ஈவினிங் காலேஜ் முடிச்சிட்டு ப்ரொபஸ்ஸர் வீட்டுக்கு போயிருந்தேன் ம்மா… பாட சந்தேகங்களை கேட்டு கிளம்பவே எட்டு மணிக்கு மேலாகிட்டு. வர வழியில் பைக் வேற திடீரென ஆஃப் ஆகிட்டது. அதான் லேட்டாகும்ன்னு அப்பாக்கு போன் செய்தேன்” என்றான்.

“சரிப்பா… நீ சாப்பிடு.”

அரசி சொல்ல அவன் கண்கள் மாடியிலிருக்கும் சிவாவின் அறைப்பக்கம் சென்றது.

நானியின் பார்வைக்கான பொருளுணர்ந்த அரசி, சிவாவின் அறைக்கு சென்று வரமறுத்தவளை பிடிவாதமாக உணவு மேசைக்கு இழுத்து வந்தார்.

அங்கு நானி அமர்ந்திருப்பதை கண்டதும், பிடிவாதத்தை கைவிட்டு.. இருக்கையில் அமர்ந்தாள்.

“எனக்கு தூக்கம் வருது அரசி, பிள்ளைங்க சாப்பிட்டதும் இப்பவே பாத்திரங்களை கழுவி வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை.. நீயும் சீக்கிரம் சென்று ஓய்வெடு” எனக் கூறிய பத்மா, சிவாவை பார்த்து.. “ஒழுங்கா சாப்பிடு” என சொல்லிச் சென்றார்.

பத்மாவிற்கு சரியென பதில் கூறினாலும் சிவாவின் கண்கள் நானியை முறைத்து பார்த்தபடி இருந்தன.

‘அய்யோ குட்டச்சி எதுக்கு முறைக்குறா தெரியலையே…’ மனதிற்குள் காரணம் புரியாமல் முழித்தாலும், “இவ்வளவு நாள் கண்டும் காணாத மாதிரி இருந்துட்டு இன்னைக்கென்ன பார்வையெல்லாம் பயங்கரமாயிருக்கு” தனக்குள்ளே கேட்டுக்கொண்டான்.

“அப்படி பார்க்காதடி குட்டச்சி.. உன் கோபப்பார்வை கூட மாமாக்கு உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுதுல.. சும்மாயிருக்கவனை உசுப்பேத்தி விட்ருவா போலிருக்கே…” மனதிற்குள் புலம்பியபடி இருந்தவன், உணவு பரிமாறிக்கொண்டிருந்த அரசியிடம் “நந்து சாப்பிட்டாளா” என்றான்.

“அவ, அண்ணி திட்டுவாங்கன்னு பயந்து அப்போவே சாப்பிட்டாள், நீ சாப்பிடுப்பா…” அரசி பதிலளித்ததும் சிவாவை பார்த்துக்கொண்டே சாப்பிடத் துவங்கினான்.

நானி ஒரு வாய் உணவினை உண்டு முடித்ததும் சிவாவும் தனது தட்டிலிருந்த உணவை அள்ளி வாய்க்குள் தள்ள ஆரம்பித்தாள்.
தான் சாப்பிட்ட பிறகே அவள் சாப்பிடுகிறாளென்ற பொருளை சிவாவின் செயலில் உணர்ந்தவன்… “குட்டச்சி மாமா மேல அவ்வளவு லவ்வாடி” என மனதிற்குள்ளாக கேட்டுகொண்டான்.

நானி சாப்பிட்டு முடிப்பதற்குள் தட்டிலிட்டதை காலி செய்தவள், தட்டிலே கை கழுவி விட்டு, நானியை அதே கோபப்பார்வை பார்த்து சென்று விட்டாள்.

“அத்தை… இப்போ எதுக்கு உம் பொண்ணு என்னை மொறச்சிட்டேயிருக்காள், நீயும் கண்டுக்காத மாதிரி இருக்க என்ன இப்போ அவளுக்கு பிரச்சினை?”

“அவ, என்ன எல்லாத்தையும் என்கிட்டவா சொல்லுற… அதென்ன முறைச்சி பார்த்தால் மட்டும் எம் பொண்ணு மத்த நேரத்துலலாம் பொண்டாட்டியா.. நீயாச்சு அவளாச்சு,” நானி கேட்டதற்கு பதிலளித்த அரசி…  “எங்க அண்ணி என்னை சீக்கிரம் தூங்க சொன்னாங்க நான் போறேன்” என்று சொல்லி அவன் முன்னிருந்து மறைந்தார்.

தனது அறைக்கு செல்ல நானி படியேறுகையில், “சிவா உனக்காக பள்ளி விட்டு வந்ததிலிருந்தே காத்திருந்துச்சுப்பா.. நீ ஒரு எட்டு புள்ள ரூமுக்கு போய் என்னென்னு கேட்டுட்டு வா” என அழகேசன் அவனின் நடையை தடை செய்திருந்தார்.

‘ஹோ… மேடத்தோடு கோபத்துக்கு காரணம், நான் சீக்கிரம் வரலங்கிறது தானா… இந்நேரத்தில் அவள் ரூமுக்கு போனால், பார்த்தே டெம்ட் பண்ணிடுவாளே’ என சிந்தித்த நானி “காலையில் பேசிக்கிறேன்ப்பா” எனக் கூறி நகர்ந்துவிட்டான்.

அழகேசனும் சென்றுவிட, இவர்கள் இருவரும் பேசியதை மறைந்திருந்து கேட்ட பாண்டியம்மாள் நாளைக்கே தனது திட்டத்தை செயல்படுத்திட வேண்டுயதுதான் என்றவாறு கட்டிலில் உடலை சாய்த்தார்.

நள்ளிரவு கடந்திருந்த வேளையில்,
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்த சிவா… இவ்வளவு நாள் காத்திருந்ததே பெரியது இனி ஒரு நொடி கூட முடியாதென்கிற மனநிலைக்கு வந்திருந்தாள். இந்த நொடியே நானியின் பதிலென்ன என தெரிந்துகொள்ளும் வேகம் அதிகரிக்க.. எதைப்பற்றியும் யோசிக்காது தனது அறைக்கு எதிர்பக்கமிருக்கும் நானியின் அறையின் முன்பு சென்று நின்றாள்.

கதவில் கை வைக்க அது உட்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. எப்படி திறப்பதென யோசித்தவள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த வெண்கல பூ ஜாடியை கீழே தட்டிவிட்டு மறைவாக நின்று கொண்டாள்.

சத்தம் கேட்டு.. சிவாவின் அறைக்கு பக்கத்து அறையிலிருக்கும் நந்துவும், நானியும் வெளியில் வர பூச்சாடி தரையில் உருண்டு கொண்டிருந்தது.

காற்றில் விழுந்திருக்குமென நினைத்த நானி தன் தங்கையை அறைக்குள் செல்லுமாறு சொல்லிவிட்டு, சில நொடிகள் தன்னவளின் மூடிய அறையை பார்த்து விட்டு, தன்னறையில் உள்நுழைந்து கதவினை மூட, கதவுக்கு பின்னாலிருந்து சிவா வெளிவந்தாள்.

‘இந்நேரத்தில் அறைக்குள் குட்டச்சி எப்படி வந்தாள்’ என யோசித்தவனுக்கு, ‘சாடியை தள்ளிவிட்டு என்னை கதவினை திறக்க வைத்து மேடம் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்’ என்பதை நொடியில் கண்டுகொண்டான்.

இரவு நேரத்தில் உனக்கு இங்கென்ன வேலை என்பதை போல் நானி சிவாவை உறுத்து விழிக்க… தைரியமாக உள் வந்த சிவா அவன் பார்வை வீச்சில் நா குழற “எனக்கு பதில் வேண்டும்” என சொல்லியிருந்தாள்.

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ட போது கண்ணில் படாத அவளின் அழகு… சன்னல் வழியே ஒளி வீசிய நிலவின் மங்கிய வெளிச்சத்தில் கண்ணில் நுழைந்து கருத்தில் பதிந்தது.

வெண்ணிற ஆடையில் தேவதையென நிலவு மகள் தரையிரங்கிதைப்போல் நின்றிருந்தவளை கண்டு இத்தனை நாள் கட்டுப்படுத்தி வைத்திருந்த காதலெல்லாம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டோட தன்னையும் மீறி வெளிவரத் துடித்திருந்த உணர்வுகளை கட்டுப்படுத்தத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவனை சுய உணர்விற்கு கொண்டுவந்தது சிவாவின் பதில் வேண்டுமென்ற வார்த்தைகள்.

“குட்டச்சி இதுக்குத்தான் எனக்காக காத்திருந்தீங்களோ…” வெளிப்படையாக நானி கேட்க சத்தமேயில்லாமல் ஆமென்றாள்.

“தைரியமா இந்நேரத்தில் ஒரு பையனோட ரூமுக்கு வந்துட்டு இப்போ என்னவோ பயப்படுற மாதிரி ஸீன் போடுற,”
நானியின் வார்த்தைகளில் வெகுண்டெழுந்தவள், “இங்க பாருங்க நீங்க சொன்ன மாதிரி நான் ஸ்கூல் முடிச்சிட்டேன்… எக்ஸாம் எல்லாம் பக்காவா எழுதியிருக்கேன்.. நிச்சயம் இன்னும் மூன்று மாதங்களில் காலேஜ் போய்டுவேன். அதுக்கு அப்புறம் நானும் பெரிய பொண்ணுதான். இதுக்கு மேலையும் காத்திருக்க முடியாது உங்க பதிலென்ன, அதை சொல்லுங்க…” படபடவென மூச்சு விடாமல் பொறிந்தவள் தன் காரியத்தில் கண்ணாக முடித்தாள்.

எதற்கான பதில் அவள் கேட்கிறாளென தெரிந்து கொண்டே,

“என்ன பதில் நான் சொல்ல வேண்டும்?” எனக் கேட்டிருந்தான்.

அவன் இதழில் நெளிந்த புன்னகையை கண்டு கொண்டவள்… ‘வேணும்ன்னு தெரிஞ்சிகிட்டே வம்பு பண்றீங்களா’ என மனதில் சொல்லியவாறு… வெளியில், “நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்” என முருக்கிக்கொண்டவளாக அறையிலிருந்து வெளியேற, நொடியில் சிவாவின் கைபிடித்து இழுத்திருந்தான்.

நானி இழுத்த வேகத்தில் அவனின் பரந்த மார்பில் பூங்கொடியென மோதியவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். அவனின் அணைப்பில் மெல்ல அடங்கி, அன்றொரு நாள் சாய நினைத்த அவனின் நெஞ்சுப்பகுதியில் உரிமையுடன் முகம் பதித்து சாய்ந்துகொண்டாள்.

இருவருக்குமேயான தன்னவர்களின் முதல் தீண்டல், முதல் ஸ்பரிசம், முதல் அணைப்பு எல்லாம் எங்கோ ஓர் தனி உலகத்திற்கு இருவரையும் இட்டுச் சென்றது.

முதலில் உணர்வுகளின் பிடியிலிருந்து வெளிவந்த சிவா… கண்கள் மூடியிருந்த நானியின் முகத்தை ஏறிட்டு பார்த்து, “மாமா நீங்க இன்னும் பதிலே சொல்லலையே” என மீண்டும் கேட்டாள்.

“என் அணைப்பு உன் கேள்விக்கான பதிலை சொல்லலயா ரனிம்மா…” கண்கள் மூடியவாறே மென்மையான குரலில் அவன் சொல்ல,
அவனின் நெஞ்சில் மீண்டும் ஆழப் புதைந்தவளாய், “எனக்கு உங்க வாய் வார்த்தையாக்கேட்க வேண்டும்.”

“அப்போ கேள்வியை நீ திரும்ப கேள்.”

நானியின் அணைப்பிலிருந்தவாறே, அவனின் கால் மீதேறி நின்றவள், தனது பூங்கரம் கொண்டு தன்னவனின் இரு கன்னங்களையும் பற்றி முகத்தை தன் முகத்தருகே கொண்டு வந்தவள் சிறிதும் யோசியாது, நானியின் இதழை தன் இதழ் கொண்டு மூடினாள்.

கண்களை மூடியவாறே அவளின் செயல்களை ரசித்திருந்தவன் தன்னவளின் திடீர் முத்தத்தில் கண்களை திறக்க, தனது இதழ் சிறையை விடுத்தவள் அவனின் கண்களோடு தன்னுடைய விழிகளை ஆழ கலக்கவிட்டு… 

“மை ஐஸ் ஆர் ஈகர் டூ சீ யூ… மை ஈர்ஸ் ஆர் ஈகர் டூ லிஸன் யூ… மை ஹார்ட் இஸ் ஈகர் டூ பீல் யூ… எஸ் மாமா, அம் மேட்லி லவ் வித் யூ.. வில் யூ ஸ்பெண்ட் தி பெஸ்ட் ஆஃப் யூர் லைஃப் வித் மீ….?”, என தன் ஒட்டுமொத்த காதலையும் அழகாக வார்த்தைகளால் வெளிப்படுத்தினாள்.

{My eyes are eager to see you, my ears are eager to listen you, my heart is eager to feel you.. yes, am madly love with you, ll you spend the best of your life with me?}

தன்னவள் உணர்த்திய காதலில் மொத்தமாக மூழ்கினான்.

“குட்டச்சி பிண்றியேடி…” என்றவன் மீண்டும் தன்னவளை தனக்குள் புதைத்து, இறுக அணைத்து… “லவ் யூ டி பொண்டாட்டி… லவ் யூ பிரம் பாட்டோம் ஆஃப் மை ஹார்ட்.. ஐ வான்ட் டூ ஸ்பெண்ட் தி ரெஸ்ட் ஆஃப் மை லைஃப் வித் யூ..”, என காதலாக மொழிந்தான். 

(Love you from bottom of my heart… I want to spend the rest of my life with you.)

ஒரு வருட காத்திருப்பிற்கு பின் தான் கேட்க நினைத்த வார்த்தைகள் தன்னவனின் வாய் மொழியாக கேட்டதில் அவளடைந்த மகிழ்வினை சொல்ல வார்த்தைகளே இல்லை.
நானியின் முகமெங்கும் தன் முத்திரையை ஆவேசமாக பதித்தவள், படிப்பதற்காக எழுவதற்கு அவன் வைத்திருந்த அலார்ம் ஒலியில் சட்டென அவனிடமிருந்து பிரிந்தாள்.

நானியின் முகம் காண வெட்கியவள், “நான் வர்றேன்” எனக் கூறி வெளியேற… “எப்போ” எனக் கேட்டிருந்தான்.

ஒரு நொடி நின்று அவனை பார்த்தாள்… அவனின் கண்களில் இந்த அறையில் இருவரும் ஒன்றாக வாழும் வாழ்விற்கான எதிர்பார்ப்பும், ஏக்கமும் போட்டிபோட்டதை புரிந்து கொண்டவள்… “சார் கலெக்டர் ஆகுங்க, நான் ஓடி வந்துடுறேன்” என்றவள் தன் அறைக்கு சிட்டாக பறந்து விட்டாள்.

இதழ் விரித்து புன்னகைத்தவன் தன்னவள் சாய்ந்திருந்த தன்னுடைய இதயத்தை மெல்ல வருடினான். “இந்த இடம் எப்போதும் உனக்குத்தான் ரனிம்மா” என்றவன் படிக்கும் எண்ணமில்லாது, தன் மனம் கவர்ந்தவளின் எண்ணத்தோடு மஞ்சத்தில் சரிந்தான்.

மிக மிக அழகாக அன்றைய பொழுது விடிந்தது. காலையிலேயே புத்தம் புது மலராய் காட்சியளித்த சிவாவை தன் கண்களில் நிரப்பிக்கொண்டான்.

மாடி வரவேற்பறையில் அமர்ந்திருந்த நந்து சிவாவிடம் சினிமா கதைகள் பேசிக்கொண்டிருக்க சிவா நந்துவிற்கு தெரியாமல் அடி கண்களால், அறையின் வாயிலில் நின்று தன்னை பார்த்திருக்கும் நானியை ரசித்திருந்தாள்.

தான் இவ்வளவு பேசியும் சின்ன பிரதிபலிப்பு கூட இல்லாமல் அமர்ந்திருக்கும் சிவாவை கவனித்து பார்க்க, அவளின் பார்வை சென்ற இடத்தில் நானியை கண்டு அவனருகில் சென்ற நந்து…

“பொண்ணு நல்ல அம்சமா அழகாயிருக்காள் இல்லையா அண்ணா” என்க,
ஆமாமென்று தலையசைத்தவாறு அவன் திரும்ப, தன் தோளில் கரம் பதித்து தனக்கருகில் நின்றிருந்த நந்துவிடம் அசட்டு சிரிப்பை உதிர்த்தவன் “நான் காலேஜ் கிளம்பனும்” எனக்கூறி அறைக்குள் நுழைந்து தப்பித்தான்.

மீண்டும் சிவாவின் அருகில் வந்தமர்ந்தவள், “எனக்கு தெரியாம இங்கு ஒரு காதல் கதை ஓடுது போலிருக்கே” என கேலி செய்து… சிவாவின் வெட்கத்தில் சத்தமாக சிரித்தாள்.

“உனக்கு வெட்கப்படத் தெரியும்ன்னு இப்போ தான் அண்ணி தெரியும்…” அண்ணியில் பலமாகவே அழுத்தமிருந்தது.

“அண்ணியா…!” ஆச்சரியமாகக் கேட்ட சிவா, நந்து கூறியதன் பொருளறிந்து கைகளில் முகத்தை புதைக்க.. “ரொம்ப சந்தோஷமாயிருக்கு ரஞ்சி” எனக் கூறி சிவாவை அணைத்துக் கொண்டாள் நந்தினி.

கல்லூரி செல்ல கிளம்பி வந்தவனை, கல்லூரி முடிய இன்னும் எத்தனை நாட்களிருக்கிறதென்ற அழகேசனுக்கு.. பதினைந்து நாட்களென பதிலளித்த நானி சிவாவைத் தேடி வீடு முழுக்க பார்வையால் அலசினான்.

அவளிருக்கும் சுவடே தென்படாததால்.. தனது அத்தையிடம் சென்று “காலேஜ் போயிட்டு வர்றேன்” என்றவனை,

“பெத்த ஆத்தா அப்பன் இருக்கும்போது இந்த மூதேவிகிட்ட ஏன் கண்ணு சொல்லிட்டு போற… இந்த நாள் உறுப்புடுமா?, ஏண்டி அவன் தான் ஏதோ வந்து சொல்றான்னா நீயும் தினம் அவன் வெளியே போற நேரம் முன்னாடி வந்து நிக்குற” என பாண்டியம்மாள் காலையிலேயே ஆரம்பித்துவிட்டார்.

“அப்பத்தா…” பாண்டியம்மாளை அதட்டிய நானி, “எனக்கு என் அப்பா அம்மா விட அத்தை தான் முக்கியம். இவ்வளவு நாளா அவங்கிக்கிட்ட சொல்லிட்டு போறதால் தான் நல்லபடியா வீடு வந்து சேர்றேன்.. இனியொரு முறை என் முன்னால் அத்தையை எதாவது சொன்னீங்க அப்பத்தான்னு கூட பார்க்க மாட்டேன்” என்று பொங்கியெழுந்தான்.

“என் பேரனை கூட மயக்கி வச்சிட்டாளே…” தன் நெஞ்சில் அடித்தபடி கைகளை அகல விரித்து முதலை கண்ணீர் வடித்து பாண்டியம்மாளை வெறுப்பாக பார்த்த அழகேசன்… “அம்மா என்ன பேச்சு பேசுறீங்க, அரசி மட்டும் நல்லபடியா நானியை குழந்தை பருவத்தில் கவனிக்காதிருந்திருந்தால் இன்னைக்கு உங்க பேரன்னு நீங்க சொல்லிட்டிருக்க முடியாது” என்றவர் “நீ பார்த்து போயிட்டு வாப்பா” என தன் மகனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

பத்மாவிற்கு பிரசவத்தில் எழுந்த சிக்களால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் நன்கு தேறி வரும்வரை நானியை ஓர் அன்னை போல் கவனித்துக்கொண்டது திருமணமாகமால் வீட்டிலிருந்த அரசி தான்.. இன்று அதை தான் அழகேசன் சுட்டிக்காட்டினார்.

‘இன்னைக்கு என்ன இவனுங்களுக்கு இப்படி கோபம் வருது.. இந்த நிலையில் நம் மனதிலிருப்பதை கூறினால் மறுத்துடுவாங்களோ’ என்று யோசித்த பாண்டியம்மாள்.. கொஞ்ச நாளாகட்டுமென பொறுமை காத்தார். 

நானி தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு பயணித்துக்கொண்டிருக்க, எதிரே மிதிவண்டியில் சிவா வந்துகொண்டிருந்தாள்.

சிவாவை கவனித்துவிட்ட நானி அவளின் சைக்களின் முன் சக்கரத்தில் இடித்தவாறு தனது பைக்கினை நிறுத்தி.. “ஓய் குட்டச்சி” என அழைக்க, யாருடா அது தன் மீது மோதுவதென கோபத்தை பிரதிபலித்த அவளின் கண்கள் நானியை கண்டதும் காதலை காட்டியது.

தீடிரென அவள் கண்கள் காட்டிய காதலில் மனம் தலைகுப்புற அவளின் காலில் விழுவதை உணர்ந்தவன்… இடம் பொருள் மறந்து “லவ் யூ டி” என்றான்.

நானியின் வார்த்தைகளில் சிவந்த முகத்தை அவனுக்கு காட்டாது மறைத்தவள், “காலையில் எழுந்ததும் பார்த்தது எங்கடி போயிட்டு வர” என்ற நானியின் கேள்வியில் ஞாபகம் வந்தவளாக.. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி, கூடையிலிருந்த திருநீற்றை எடுத்து தனது விரல் கொண்டு அவனின் நெற்றியில் அழுத்தமாக வைத்து… “நீயும் என்னை லவ் பண்றன்னு சொன்னால் பதினோரு குடம் தண்ணீ ஊத்தரன்னு நம் அரசமரத்தடி பிள்ளையாருக்கு வேண்டிக்கிட்டேன் மாமா” என சொல்லியபடி.. மெல்ல தன் இதழ் குவித்து, நானியின் கண்களை தன் கரம் கொண்டு மறைத்தவளாக நெற்றியில் வைத்த திருநீறு துகளினை ஊதினாள்.

அவளின் செயலில் நெகிழ்ந்தவன்… ‘நீ இப்படியெல்லாம் என்னை டெம்ப்ட் பண்ணிட்டே இருந்தன்னு வை.. இப்போவே கூட்டிட்டு போய் தாலி கட்டிடுவேன் பார்த்துக்கோ” என்று செல்லமாக மிரட்டியவன் அவள் கூறிய “நான் ரெடி மாமோய்” என்ற வார்த்தையில் “படு ஸ்பீடா தான்டியிருக்க, உன்னை மாலை வீடு வந்து கவனித்துக்கிறேன்” எனக் கூறி புன்னகைமுகமாக அவளிடமிருந்து விடைபெற்றான்.

வண்டியை ஸ்டார்ட் செய்து சில அடி தூரம் சென்றவனை “ஓய் மாமா” என்ற சிவாவின் அழைப்பு ப்ரேக்கிட்டு நிற்க வைத்தது.

நானியின் அருகில் ஓடி வந்தவள்.. அவன் என்னவென்று கேட்க, அவனின் நெற்றியோடு தன் நெற்றி பதித்து.. நானியின் நெற்றியில் சற்று நேரத்திற்கு முன் தான் வைத்துவிட்ட திருநீற்றை தனது நெற்றிக்கு மாற்றிக்கொண்டாள். 

சிவா தன்னையுமாறியாது தன்னுடைய சிறு சிறு செயல்களால் நானியை தான் எந்தளவிற்கு உயிராக நேசிக்கிறேனென்று அவனுக்கு உணர்த்திக்கொண்டிருந்தாள்.

நானியும் தான் ஏங்கி தவித்த காதல் கிடைக்கப்பெற்றத்தில் திகட்ட திகட்ட அனுபவித்தான். அவள் காட்டும் அதேயளவு காதலை நானியும் சிவாவிற்கு அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாய் அளித்தான்.

இவர்களின் காதல் எந்தளவிற்கு வேர்விட்டு வளர்ந்ததோ அதேயளவு சிதையும் நாளையும் எதிர்நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை இருவருமே அறியவில்லை.

error: Content is protected !!
Scroll to Top