அத்தியாயம் 12 :
காலம் யாருக்காவும் நிற்பதில்லை…
இந்த பரந்த பூமியில் ஒரு நொடி கூட ஓய்வெடுக்காது தன் பணியை கண்ணாக செய்வது கால தேவன் ஒருவனே… அவனின் மும்முரமான பணியால் மூன்று மாதங்கள் வெகு விரைவில் ஓடிவிட்டன.
நானிலன் தனது கல்லூரி படிப்பினை மொத்தமாக முடித்துவிட்டு முழுநேரப் பயிற்சி வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தான்.
இதற்குள் சிவாவும் தேர்வில் வெற்றியடைந்து நானியின் வற்புறுத்தலால் பொறியியல் சேர்ந்தாள்.
ஒரே கல்லூரி என்பதால் தினமும் நந்துவுடன் ஒன்றாக சென்று வருவாள்.
சிவாவை கல்லூரி செல்ல அனுமதிக்க மாட்டேனென்று பாண்டியம்மாள் செய்த அனைத்து ரகளைகளையும் தன் ஒற்றை பார்வையில் தடுத்து நிறுத்தியிருந்தான் நானிலன்.
ஆறு மாதத்திற்கு பிறகு வரும் யூபிஎஸ்சி தேர்வில் எப்படியும் தேர்ச்சியடைந்தே ஆக வேண்டுமென்ற வெறியுடன் படித்தான்.
அவனின் முயற்சிக்கு தான் தடையாக இருக்கக் கூடாதென்று சிவாவும் தன் பார்வையோடும், ஓரிரு வார்த்தைகள் பேசுவதோடும் நிறுத்திக்கொண்டாள்.
தன்னை புரிந்து நடந்து கொள்ளும் அச்சிறு பெண்ணின் மீது நானிக்கு ஆழி அலையாய் காதல் உயர்ந்தது.
இன்னும் ஆறு மாதம் தான் அதன் பிறகு தன்னவளை மூன்று வருடங்களுக்கும் மேல், அவள் கல்லூரி படிப்பினை முடிக்கும் வரை திகட்ட திகட்ட தெவிட்டாத காதலை தன்னவளுக்கு காட்டிடலாமென்ற அதிதீவிரமாக படிப்பில் மூழ்கியிருந்தான்.
ஆனால் தான் நினைப்பது நடக்க போவதில்லை, காதலை அளிக்க நினைக்கும் தானே தன்னவளை வலியிலும் வேதனையிலும் துவளச் செய்யப் போகிறோம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
காதலை கொட்டி கொடுத்தவனே… மரண வலியையும் வெகு சாதாரணமாக அவளுக்கு பரிசளிக்கவிருக்கின்றான்.
அன்று விடுமுறை நாள்… ஞாயிற்று கிழமைகளில் கூட பயிற்சி வகுப்பிற்கு விடுமுறை எடுக்காது சென்று கொண்டிருந்த நானிலன் அன்று வீட்டிலிருந்தான்.
பல நாட்களுக்கு பிறகு.. நானி வீட்டிலிருப்பதால், அவனுக்கு பிடித்த உணவாக அரசியும் பத்மாவும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்க.. சிவா சிறு சிறு உதவிகள் செய்து கொண்டிருந்தாள்.
நந்து உதவி எனும் பெயரில் துருவி வைத்த தேங்காய் நறுக்கிக் கொண்டிருந்த காரட் என ஒவ்வொன்றாக தன்னுடைய வயிற்றுக்கு தள்ளிக்கொண்டிருந்தாள்.
“என்ன இங்கு சமைக்கிறங்கிற பேரில் என்னை சாய்க்க திட்டம் போடுறீங்களோ!”
அடுப்படி வாசலில் ஒலித்த பாண்டியம்மாளின் அதட்டலான குரலில், சிவா இங்கிருந்தால் எதாவது சொல்லி அவளை நோகடிப்பாரென யூகித்த பத்மா,
“சிவா நாளைக்கு ஏதோ பரீட்சையிருக்கு படிக்கணும் சொன்னியே அதைவிட்டு இங்கென்ன செய்யுற போ, போய் படிக்கிற வேலையை பார்” எனக் கூற…
“நாளைக்கு எக்ஸாம் இல்லையே” என சிந்தித்த சிவா, பத்மா பாண்டியம்மாளை கண் காட்டியதும் எதற்கென்று புரியாவிட்டாலும் அங்கிருந்து சென்றிருந்தாள்.
பத்மாவின் பேச்சு பார்வையெல்லாம் சிவாவுக்குத்தான் புரியவில்லை, ஆனால் பாண்டியம்மாளுக்கு நன்கு தெளிவாக புரிந்தது.
“நம்ம மருமகள் இவள் மேல வச்சிருக்கும் பாசத்தை பார்த்தால், அவளுக்கு மருமகளா இவளை கொண்டு வந்துடுவாள் போலிருக்கே, இனியும் அமைதியாக இருந்தால் நம் திட்டம் பலிக்காது”, சிந்தித்த பாண்டியம்மாள்…
“நெல் ஏற்றுமதி விஷயமாக வெளியூருக்கு சென்றிருக்கும் அழகேசன் வந்ததும் நாம் நம் வேலையை நடைமுறை படுத்த வேண்டியது தான்” என்று முடிவெடுத்தார்.
விடுமுறை நாளில் என்ன செய்வதென்று தெரியாமல் தான் கிச்சனில் அத்தை அம்மாவிற்கு உதவலாமென்று அங்கு சென்றாள். இப்போது அங்கு மீண்டும் போக முடியாது என்ன செய்யலாமென யோசித்தப்படி மாடியேறி மேல்தளம் வந்தவளின் பார்வை தானாக தன்னவனின் அறைபக்கம் சென்றது.
கதவு திறந்திருந்ததால் உள்ளே அவன் அவளுக்கு முதுகு காட்டியவாறு அமர்ந்திருந்தது நன்கு தெரிந்தது.
வீட்டில் தன்னுடைய அறையில் தானே இருக்கின்றோமென கையில்லா டி ஷர்ட் மற்றும் முட்டி வரையிலான ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். அவனின் அத்தகைய தோற்றம் பெண்ணவளின் காதல் நெஞ்சத்தை ரசிக்க தூண்ட, அவளின் காதல் அவளை சுனாமியாய் சுருட்டி அவனை நோக்கி நகர வைத்தது.
மெல்ல அடி மேல் அடி வைத்து அவனது அறைக்குள் நுழைந்தவள், கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்டாள். புத்தகத்தில் பார்வையை பதித்திருந்தவன் தன்னவளின் வருகையை கவனிக்கத் தவறினான்.
“நலன்…”
திடீரென தனது அறையில் யாரோ யாரையோ அழைக்கும் சத்தம் கேட்டு அறையை முற்றிலும் அலச சந்தேகப்படும்படியாக எதுவுமில்லையென மீண்டும் புத்தகத்தில் கண்களை பதித்தான்.
மீண்டும் “நலன்” என்றழைப்பு செவியைத் தீண்ட, தன்னவளின் குரலை அவனின் காதல் மனம் கண்டு கொண்டது.
“குட்டச்சி இங்கதான் எங்கோ ஒளிந்து இருக்கிறாள், ஆனால் அவள் வேற ஏதோ ஒரு பெயரை சொல்லி அழைக்கிறாளே அதென்ன…” அவன் யோசிக்க,
மீண்டும் ஒருமுறை நலன் என அழைத்தவள் மெல்ல சிரிக்க, அவளின் சிரிப்பும் சேர்ந்து அவளிருக்கும் இடத்தை காட்டிக்கொடுத்தது.
குரல் வந்த திசையில் பார்க்க, கட்டிலிற்கு கீழே அவளின் வெண்பஞ்சு மலர் பாதங்கள் நீட்டிக்கொண்டிருந்தன.
சிவாவைப்போன்றே மெல்ல கட்டிலிற்கு மறுபுறம் சென்ற நானி, தானும் அடியில் அவள் போலவே அவளுக்கருகில் படுத்துக் கொண்டான்.
மீண்டும் அவள் நலனென்று அழைத்து வாய் பொத்தி சிரிக்க, அவளின் முதுகில் கை போட்டு நெருங்கி அவளை உரசியவாறு படுத்தவன்.. “அது யாருடி நலன்” என்று கேட்டான்.
“அய்யோ மக்கு மாமா உங்க பெயரைத் தான் அப்படி சுருக்கி செல்லம்மா கூப்பிட்டேன்.”
தனக்கு மிக அருகிலிருப்பவனை அப்போது தான் உணர்ந்து தன் நாக்கை கடித்து.. ஒற்றை கண்ணை மட்டும் மூடி, “நீங்க எப்போ வந்தீங்க” என்றாள்.
“அதெல்லாம் வந்து 24 வருஷமாச்சு” என்றவனை பார்த்து நக்கலாக சிரித்தவள்..
“இது ரொம்ப பழைய ஜோக் டா நலன்” என்க,
“அடிங்… என்னடி சும்மா சும்மா புருஷனை பேர் சொல்லி கூப்பிட்டிட்டு இருக்க” அவன் கோபமாக கேட்பதைப்போன்று நடிக்க…
“சாரி மாமா உன்னை எல்லாரும் கூப்பிடற மாதிரியில்லாம, பிரத்யேகமா சொல்லனும்னு எவ்வளவு யோசித்து உங்க பேருக்குள்ளிருக்கும் நலனை கண்டுபிடித்தேன் தெரியுமா??” என்றவள், “நான் உன் பேர் சொல்லக் கூடாத” எனக் கேட்டிருந்தாள்.
மூக்கை சுருக்கி கொஞ்சலாக அவள் பேசிய விதம் நானியின் இளமை உணர்வுகளைத் தூண்ட, அங்கேயே.. திரும்பி மல்லாக்க படுத்தவன் தன்னவளை தன் மார்பில் இழுத்து போட்டுக்கொண்டான்.
“நீ என்னை வாடா போடான்னு கூட சொல்லலாம்… யூ கேன் கெட் எனி ரைட்ஸ் ஃபிரம் மீ” என காதலாகக் கூறியவன், “நீ என்னை பெயர் சொல்றதும் நல்லாத்தான்டி இருக்கு” என்றான்.
எனக்கு உன்னிடம் எல்லா உரிமையும் இருக்கிறதென சொல்லும் உறவை விட, என்னிடமிருந்து நீ எத்தகைய உரிமையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமென்று கூறும் ஒரு உறவு கிடைப்பது வரம்.
அவனின் அத்தகைய வார்த்தைகளில் அவன் உணர்த்திய காதலில் சுகமாய் கரைந்தவள்.. உரிமையுடன் நானியின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி தன் கன்னத்தை தேய்த்தவள் நறுக்கென்று அவன் இதயப்பகுதியில் தன் பற்கள் பதிய கடித்தாள்.
“ஷ்..ஹ்ஹ்…” வலியில் முணகியவன்,
“ஏன்டி அம்மாகிட்ட சிக்கன் மட்டன்னு செய்து தர சொல்லி சாப்பிட வேண்டியது தானே” என்றவன்… தன் நெஞ்சத்தை சுட்டி, “இனி இங்கு இப்படி கடிக்கும் வேலையெல்லாம் வைத்துக்காதே உள்ளிருக்கும் என் தமயந்திக்கு வலிக்கும்” என்றான்.
“யாறந்த தமயந்தி?” கண்களில் அனல் தெறிக்க கேட்டவளைப் பார்த்து சத்தமாக சிரித்தவன்,
“இந்த நலனுக்கேற்ற தமயந்தி நீதான்டி..” எனக் கூறி அவளின் நெற்றியில் காதலாக முட்டினான்.
அதில் அவளின் முகம் அந்திவானமாய் சிவக்க, நானியின் இளமை உணர்வுகள் பேயாட்டம் ஆடியது.
‘இனி இவ்விடத்தில் இவ்வளவு நெருக்கமா இவளிடம் ஒட்டியிருந்தா குட்டச்சி வெட்கப்பட்டே ஆளை கவுத்துவிடுவாள். அப்புறம் நடக்கும் நிகழ்வு விபரீதத்தில் தான் முடியும்’ என்று நினைத்தவன், பட்டென்று கட்டிலின் அடியிலிருந்து எழுந்து… அவளையும் கை பிடித்து வெளியில் இழுத்திருந்தான்.
“என்னாச்சு மாமா…” அப்பாவி குழந்தையாக முகத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் புரியாததைப் போல் பார்த்தவளை..
“அய்யோ குட்டச்சி உசுப்பேத்தராளே!!” என்றவன் “ஒண்ணுமில்லடி… நான் படிக்கணும். நீ போ!” என்றான்.
அவளை பார்க்காது திரும்பி நின்று.
அவள் நகர்ந்ததற்கான சிறு அறிகுறிகூட தென்படாததால் திரும்பி அவளை பார்த்து அடக்கப்பட்ட உணர்வுகளுடன் “என்னடி?” என்றான்.
கைக்கு எட்டும் தூரத்தில் தன்னவளை வைத்துக்கொண்டு விலகியிருப்பது அவனுக்கு மிகவும் கடினமாகத்தான் இருந்தது.
இருப்பினும் அதற்கான சரியான வயதோ, காலமோ இருவருக்குமில்லை என்பதை உணர்ந்ததால் தான் அவளை வெளியே போகச் சொன்னான். அதனை புரிந்து கொள்ளாமல், கண்களில் ஒட்டுமொத்த உயிர் காதலையும் தேக்கி வைத்தபடி.. உதட்டை அழுந்த கடித்துக்கொண்டு தன்னையே பார்த்திருப்பவளை, வேகமாக நெருங்கி இறுக்கி அணைத்தவன்,
“புரிஞ்சிக்கோடி ரனிம்மா… நீ இங்கிருந்தா நான் என் கட்டுப்பாட்டை நிச்சயம் இழந்துடுவேன்டி” என தன் இயலாமையால் உண்டான வருத்தத்துடன் கூறியிருந்தான்.
சரியென்பதைப்போல் தலையை அசைத்தவள் அவனிடமிருந்து பிரிந்து அவனையே பார்த்தபடி வெளியேற… அவள் கண்களில் வழிந்த ஏமாற்றத்தை காணமுடியாது.. வாவென கண்ணசைத்தான்.
நானி அழைத்ததும் வில்லிலிருந்து புறப்படும் நாணாக ஒடிச்சென்று அவன் நெஞ்சத்தில் சாய்ந்தவள்,
“மாமா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லவ் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டிருந்தாள்.
சிவாவின் குரலில் வழிந்தோடிய ஏக்கத்தை உணர்ந்தவன்.. “நான் ரெடிடி பொண்டாட்டி! ஆனால், நான் கலெக்டர் ஆகணும் அப்புறம் தான் மத்ததெல்லான்னு யாரோ சொன்னாங்க” என்று நக்கல் குரலில் கூறியவனை தோளில் அடித்தவள்,
“சாரி மாமா இனி இந்த மாதிரி கேட்க மாட்டேன். உள்ளுக்குள்ள நாளுக்கு நாள் உன் மீது ஆசை கூடிட்டே போகுது மாமா, என்ன பண்றது? கன்ட்ரோல் பண்ணவே முடியல. அதான், சாரி” என்றவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்,
“நானும் சாரிடி… உன்னை ரொம்ப தான் ஒதுக்கி வைக்கிறேன்.. இன்னும் கொஞ்ச நாள் தான். அப்புறம் எக்ஸாம் மட்டும் முடிஞ்சிட்டா இந்த மாமன் உனக்கே உனக்குத்தான்” என்றான்.
தன்னவனின் வருத்தம் அவளையும் வதைக்க, அவனை மாற்றும் பொருட்டு… “உனக்காக நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருக்கேன்..” என்றாள்.
அவளின் இத்தகைய வார்த்தைகள் பின்னாளில் பலிக்க போகிறது என்பது தான் உண்மை… காலம் முழுக்க அவனுக்காக இவள் காத்திருக்கும் நிலை உண்டாகுமென்று தெரிந்திருந்தால் உனக்காக காத்திருக்கின்றேன் என சொல்லாமல் இருந்திருப்பாளோ?
