வெள்ளைப்பூவே நீ எந்தன் காதலடி 13

அத்தியாயம் 13 :

தேர்வினை முடித்துவிட்டு தன்னவளை காதல் செய்யும் உல்லாச மனநிலையில் வீடு வந்தவன் தான் கண்ட காட்சியில் அதிர்ந்து கல்லென இறுகி நின்றது ஒரு நொடியே!

பட்டுப்புடவை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து கைகளில் காஃபி தம்ளர்கள் அடங்கிய ட்ரேயினை ஏந்தியவாறு, அழுததால் ஏற்பட்ட சிவந்த விழிகளுடன் நின்றிருந்த சிவாவை கண்டதும் நானியின் மொத்த கோபமும் அவள் மீது திரும்பியது.

வாயிலில் அரவம் உணர்ந்து கூடத்தில் அமர்ந்திருந்த அனைவரும் திரும்பி பார்க்க, யாரையும் கண்டு கொள்ளாது மாடியேறி தன்னறைக்குள் புகுந்தான்.

கூடத்திலிருந்த சிவாவை நானி கடக்கும்போது அவன் பார்த்த பார்வையில் அவளின் தண்டுவடம் சில்லிட்டது.

அறைக்குள் நுழைந்தவன் சட்டையை கழட்டி விசிறியடித்தான்.

“இந்த குட்டச்சிக்கு எவ்வளவு தைரியமிருந்தால், மனசு முழுக்க என்னை சுமந்துகிட்டு, பொண்ணு பார்க்கன்னு வந்திருக்கும் எவனோ ஒருத்தன் முன்னாடி அலங்காரம் பண்ணிட்டு போய் நிற்பாள். கொழுப்புத் தானே அவளுக்கு,” நானியின் மனம் ஆத்திரத்தில் கொதித்தது.

ஆம், சிவாவை பெண் பார்ப்பதற்காக நானி மற்றும் அழகேசன் இல்லாத நேரமாக பார்த்து ஆட்களை அழைத்து வந்திருந்தார் பாண்டியம்மாள். சிவா நானி மீது தான் கொண்ட காதலை வெளிக்காட்டாது, படிப்பை காரணம் காட்டி கூறிய காரணங்கள் யாவும் பாண்டியம்மாளின் முன் எடுபடவில்லை.

தன் தாயை எதிர்த்து வாய் கூட திறந்திடாத அரசி வேதனையுடன் நின்றிருக்க,

“இப்போ அவளுக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம், சிவாவை விட மூத்தவளான நந்துவே வீட்டில் தானே இருக்கிறாள்” என்ற பத்மாவை தன் பார்வையாலே அடக்கியிருந்தார்.

இனியும் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதென நினைத்த பெண்கள் இருவருக்கும் சிவாவை அவர்கள் முன் கொண்டு நிறுத்துவதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

எவ்வளவோ அழுது வர மறுத்த சிவாவை நானியும் அழகேசனும் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாமென்று சமாளித்து கூடத்திற்கு வந்திருந்தோர் முன் கூட்டிச்சென்று நிறுத்தினார் அரசி.

சிவாவின் கைகளில் காஃபியினை பாண்டியம்மாள் வற்புறுத்தி திணித்த நேரத்தில் தான் நானி வந்திருந்தான்.

நானியை கண்டதும் பாண்டியம்மாளுக்கு, இவன் வந்து ஆட்டத்தை கலைத்து ஏதும் குழப்பிடக் கூடாதென உள்ளுக்குள் பயம் மூண்டது உண்மை தான்.

ஆனால் பாண்டியம்மாளின் எண்ணத்திற்கு நேர்மாறாக, அவன் அங்கு நடப்பதையே கண்டு கொள்ளாது சென்றது அவரின் வயிற்றில் பால் வார்த்தது.

‘மேலே சென்றவன் எங்கு திரும்பி வந்துவிடுவானோ’ என நினைத்த பாண்டியம்மாள், “மாப்பிள்ளைக்கு காபி கொடுத்தா” என்றார், சிவாவின் மீது பாசம் இருப்பதை போன்று வந்திருப்போரிடம் காட்டிக்கொண்டார்.

அதுவரை வரமாட்டேனென்று முரண்டுபிடித்து அழைத்து வரப்பட்டவள் யாரையும் கண் கொண்டு பார்த்திடாது தலை தாழ்த்தியிருக்க… நானியை பார்த்ததும் இனி அவன் பார்த்துக்கொள்வனென்று மூச்சினை ஆழ்ந்து சுவாசிக்க… அவனோ தன்னவளை வெறியுடன் பார்வையாலே குதறி சென்றிருந்தான்.

பாண்டியம்மாள் காப்பியினை கொடுக்க மீண்டும் மீண்டும் சொல்ல, ‘மாமா ஏதாவது பண்ணு மாமா… இவன் முன்னாடி நிற்பதே உடம்பெல்லாம் எரியுது மாமா… பார்வையை பாரு மூஞ்சி, காணாததை கண்ட மாதிரி… அய்யோ மாமா…’ மனதிற்குள் தன்னவன் எதாவது செய்ய வேண்டுமேயென அரற்றினாள்.

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த நானியின் கோபம் நொடிக்கு நொடி அதிகரித்தது. அப்பா இல்லாத நேரம் தானேதேனும் செய்து சிக்கலாகி விட்டால் கஷ்டமென சிந்தித்தவனின் பார்வையில் பட்டது, அன்று சுவற்றில் சிவா கிறுக்கி வைத்த பெயர்.

ர(னி)நா.. முன்பிருந்து படித்தால் அவளின் பெயரும், பின்பிருந்து படித்தால் அவனின் பெயரும் வருமாறு அவள் கிறுக்கி வைத்ததை தன் கையால் வருடியவன்.. இனி ஒரு நொடி கூட தன்னவளை அடுத்தவன் முன்பு காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கமாட்டேனென்று தனக்குள் முடிவெடுத்தவனாய் “சிவா” என வீடே ஒலிக்க கத்தி அழைத்திருந்தான்.

நானியின் அழைப்பு செவியைத் தீண்டியதும், யாரையும் பொருட்படுத்தாது, கையில் வைத்திருந்த ட்ரேயினை கீழே போட்டவள் மின்னல் வெட்டும் நேரத்தில் அங்கிருந்து நானியின் அறை நோக்கி விரைந்திருந்தாள்.

பாண்டியம்மாளுக்கு நானியின் அழைப்பே ஆச்சரியமாக இருக்க, தானிங்கிருந்தும் தன்னை மதிக்காது அவனின் ஒற்றை அழைப்பிற்கு ஓடியவளை அதிசயமாகப் பார்த்திருந்தார்.

வந்திருந்தோர் நடந்ததை பார்த்துவிட்டு, “உங்க பேரன் கூப்பிட்ட குரலுக்கு இந்தபொண்ணு ஓடுது, அப்போ இருவருக்கும் விருப்பம் இருக்குமானால் அவர்களுக்கே திருமணம் முடித்து வையுங்களேன், அதைவிட்டு வெளியிலிருந்து எங்களை அழைத்து வந்து ஏன் அசிங்கப்படுத்துறீங்க” என பாண்டியம்மாளிடம் கேள்வி கேட்டு வந்த வழியே சத்தமில்லாது சென்று விட்டனர்.

அப்போதுதான் வெளியூருக்கு சென்றிருந்த அழகேசன் வீடு வந்து சேர… நடந்ததை ஓரளவு யூகித்து, அங்கிருந்து சென்றவர்களிடம் தன் மன்னிப்பை வேண்டினார்.

அவர்களும், “பிள்ளைங்க மனம் அறிந்து நடந்துக்கோங்க” என இலவச இணைப்பாக அறிவுரை வழங்கிச் சென்றனர்.

நானியின் அழைப்பிற்கு வேகமாக அவனது அறைக்கு வந்திருந்தாலும் உள்ளே செல்லாது கைகளை பிசைந்தபடி வெளியே நின்றுவிட்டாள் சிவரஞ்சனி.

அலங்காரத்தில் பதுமையென காட்சியளித்தவளை நானியின் காதல் மனம் ரசித்தாலும், அதனை வெளிக்காட்டாது…

“உள்ள வாங்க மேடம்…”

நானியின் வரவேற்பில் சிவாவிற்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.

அடி மேல் அடியெடுத்து வைத்து உள்ளே வந்தவளை…
“பாருடாஆஆ… பொண்ணு பார்க்க வந்ததும் பொண்ணாவே மாறீட்டீங்க போல… (டேய் நானி அவள் பொண்ணு தானேடா) பொண்ணு மாதிரி அன்ன நடையெல்லாம் பலமாத்தான் இருக்கு” என்றான்.

அவனின் வார்த்தையில் குனிந்திருந்த தலையை சிவா விலுக்கென நிமிர்த்த, அங்கு உட்காரென கட்டிலை சுட்டிக் காட்டினான்.

நானியின் வார்த்தைக்கு மறுப்பேதுமின்றி அமர்ந்தவள், ‘போச்சு இந்த மாமா செம கோபத்துல இருக்காங்க போல, எப்படி சமாளிக்கிறது தெரியலையே.’

“என்ன சொல்லி, எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலையா?”

‘நம்ம மனசுல நினைக்கிறது கூட இந்த மாமாக்கு கேட்குது போலவே’, மனதில் கூறிக்கொண்டு வெளியில் இல்லையென தலையசைத்தாள்.

“ம்ம்… பரவாயில்லை, இந்த காஸ்டியூமில் பார்க்க நல்லா அம்சமா தான் இருக்க, என்ன பையனை பிடிச்சிருக்கா… அவங்க ஓகே சொல்லிட்டாங்களா… எப்போ கல்யாணம்.”

“அய்யோ மாமா நிறுத்திரீங்களா…”

நானி சொல்ல சொல்ல மனதில் அருவெறுப்பை உணர்ந்தவள்… ஆத்திரத்தில் கத்தியிருந்தாள்.
சிவா கத்தியதும், “நான் ஏண்டி நிறுத்தனும்… அப்படிதான் பேசுவேன்…” ஆங்காரமாகக் கூறியவன் அவளின் கழுத்தை ஒரு கையால் பிடித்து மெத்தையில் சாய்த்தவன் அவளின் முகத்தருகே தன் கோப முகத்தை கொண்டு சென்று அவள் விழிகளோடு கோபத்தில் சிவப்பேறிய தன் விழிகளை ஆழ பதித்து… “உனக்கு உயிர் நான்தான்னு எனக்குத் தெரியும்… உன் மனசு முழுக்க எனக்கான காதல் அளவிட முடியாத அளவுக்கு இருக்குன்னும் எனக்குத் தெரியும். உன் அளவுக்கு என்னால் காதலிக்க முடியாதென்றும் தெரியும். நீ என் பொண்டாட்டி டி, உன்னால எப்படி டி இன்னொருத்தன் முன்னாடி போய் நிற்க முடிந்தது?” எனக் கேட்டான்.

கோபம் அவனின் முகத்திலும் செயலிலும் மட்டுமே இருந்தது. வார்த்தைகளில் வருத்தம் மட்டுமே மேலோங்கியிருந்தது.

அவன் கழுத்தை உடும்பாய் பிடித்திருப்பதில் தொண்டை அடைக்க இரும்பியதும் தன் கையையை எடுத்தவன், அவன் அழுத்தியதால் சிவந்திருந்த கழுத்தை பார்த்து தன்னையே கடிந்துகொண்டவனாக… “சாரிடி” என்றவாறு தன்னவளை அணைத்துக் கொண்டான்.

அத்தகைய நேரம் அவளுக்கும் அவனின் அணைப்பு தேவைப்பட்டதாக இருக்க, தன்னவனை இறுக்கி கட்டிக்கொண்டாள்.

“சாரி நான் தான் மாமா சொல்லணும், அம்மத்தா சொல்லியும் நான் முடியாதுன்னு எவ்வளவோ சொன்ன மாமா, அம்மா அத்தையை கூட அவங்க திட்டிட்டாங்க.. நீயும் இல்லையா எனக்கு என்ன பண்றது தெரியல… நான் நிறைய அழுதேன், அத்தை தான் மாமா வந்ததும் பேசிக்கலான்னு எனக்கு இந்த புடவை நகையெல்லாம் போட்டு கூட்டிட்டு போயிட்டாங்க.. சத்தியமா நான் வந்திருந்தவங்க முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கல மாமா, அவன் பார்க்கும் போது உடம்பெல்லாம் எரியுற மாதிரி இருந்துச்சு தெரியுமா.. உன்னை பார்த்ததும் தான் தைரியம் வந்துச்சு, ஆனால் நீ கண்டுக்காம வந்துட்ட… எனக்கு அழ அழையா வந்துச்சு… சரியா நீ கூப்பிட்டதும் அம்மத்தா முன்னாடியே ஓடி வந்துட்டேன்.. என்னை நம்பு மாமா, நான் வேணுன்னே போகல.”
நடந்த அனைத்தையும் அவன் மீது மொத்தமாக சாய்ந்தபடி, அவள் சொல்லிய விதம் அவளை சிறுபிள்ளையென நினைக்க வைத்தது.

“எவ்வளவு ஆசையா வீட்டுக்கு வந்தேன் தெரியுமா… வந்ததும் உன்னை அப்படி பார்த்ததும் என் உயிர் என் கிட்ட இல்லைடி, அப்பத்தா உன்னை கட்டாயப்படுத்தியிருக்கும் எனக்குத் தெரியும், இருந்தாலும் என் பொண்டாட்டியை இனொருத்தன் பார்க்கிறதான்னு கோவம் அதை தான் உன் மேல் காட்டிட்டேன் சாரிடி.” தன்னிலையை சிவாவிற்கு விளக்கிக்கூறிய நானி, “முதல்ல நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணு. எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு” என்றவன் அவளின் நெற்றியில் அழுத்தமான முத்தம் ஒன்றை வைத்து ருத்ரமூர்த்தியாக தனது அப்பத்தாவை தேடி வந்தான்.

அவன் சென்ற விதமே வீட்டில் பெரிய புயல் வீசப்போகிறதை சிவாவிற்கு உணர்த்தியது.

நானி கீழே வந்த சமயம் அழகேசன் தன் அன்னையுடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்பா பேசும் போது, தான் இடையிடுவது நன்றாக இருக்காதென நினைத்தவன் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.

“அம்மா நீங்க செய்த காரியம் உங்களுக்கே சரியெனப்படுதா?”
அழகேசன் பாண்டியம்மாளிடம் கேட்க, “இதிலென்னடா சரி தப்புன்னு இருக்கு.. வயசுக்கு வந்துட்டா அடுத்தது கல்யாணம் தானே அதுக்குத்தான் மாப்பிள்ளையை கூட்டியாந்தேன்.” தான் செய்த செயலிற்கு நியாயம் பேசினார்.

“உங்க வழிக்கே நான் வர்றேன், சிவாவுக்கு முன்னாடியே பெரிய பிள்ளையாகி வீட்டிலிருக்கும் நந்துவிற்கு ஏன் நீங்க மாப்பிள்ளை பார்க்கவில்லை… அதென்னமா திடீர்ன்னு வேண்டாத பேத்தி மேல் இவ்வளவு அக்கறை?”
அழகேசனின் கேள்வியில் பாண்டியம்மாளிற்கு வாயை திறக்க முடியவில்லை.

“சிவாவிற்கு எப்போ கல்யாணம் செய்யனும்ன்னு முடிவு பண்ண வேண்டியது நீயோ நானோ இல்லைம்மா, அதை அரசி தான் முடிவு செய்ய வேண்டும்.. அந்த விஷயத்தில் அரசிக்கு மட்டும் தான் உரிமையிருக்கிறது.” அழுத்தமாகக் கூறிய அழகேசன், “சிவா படிக்கும் வரை கொஞ்சம் அமைதியா இருங்க… உங்க விருப்பத்திற்கு யாரையோ அழைத்து வந்து காட்டுவதற்கு சிவா ஒன்றும் பொம்மையில்லை,” முதல் முறையாக தன் தாயை எதிர்த்து காட்டமாகக் கூறினார்.

தன் பிள்ளை எவளோ ஒருதிக்காக தன்னிடமே வாதிடுகிறானே என்று கொதித்த பாண்டியம்மாளிற்கு… சிவாவை இந்த வீட்டை விட்டு வெளியேற்றும் வெறி அதிகமாகியது.

“அவளின் அம்மாவையே நான் ஒதுக்கி வைத்திருக்கும் போது.. சிவா எங்கே தன் பேரனுக்கு மனைவியாகி இந்த வீட்டுக்கு இளவரசியாகி விடுவாளோ” என்று பயந்தார். அதற்காகவே இந்த கல்யாண ஏற்பாடு. தான் தொடங்கியதை முடித்தே ஆக வேண்டுமென்கிற வெறி அதிகரிக்க தன் மகனை பார்த்து,

“அம்மா மாதிரியே பொண்ணும் ஓ****யா இருந்துட்டா என்னடா பண்றது…”

“அம்மாஆஆ…”

அழகேசனின் கத்தலில் நானிக்கே உடல் நடுங்கியது.

தன்னைப்பற்றி தன் அன்னை கூறிய சொல் தாங்காது சேலை தலைப்பை வாயில் பொத்திக்கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார் அரசி. அவருக்கு ஆதரவாக அருகில் சென்று நின்ற நானி ஆறுதலாய் கரம் பற்றினான்.

அதனை கண்ட பாண்டியம்மாள்,

“பாருடா நல்லா பாரு… சின்ன பையன் கூட பார்க்காம எப்படி மயக்கி வச்சிருக்காள் பாரு…” நானியையும், அரிசியையும் சுட்டிக்காட்டி அவர் பேச..

அவரின் பேச்சு அங்கிருந்தோருக்கு அருவெறுப்பை கொடுத்தது.
நானி ஏதோ பேச வருகையில் அவனை கை நீட்டித்தடுத்த அழகேசன், தன் அன்னையை பார்த்தார்.

அதில் பாண்டியம்மாள் மேலும் தன் மனகுப்பையை வெளியே இரைத்தார்.

“அம்மா மாதிரி தானே பொண்ணும் இருக்குன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க” என்றவரை உருத்து விழித்த நானி தன் தந்தையின் கட்டுப்பாட்டையும் மீறி, “ஊர் பேசுதா இல்லை நீ பேசுறியா அப்பத்தா” என்றான்.

அவனின் ஒருமை விளிப்பை பாண்டியம்மாள் கண்டு கொண்டாரோ இல்லையோ, அழகேசன் கண்டு கொண்டார். தன் மகன் தனது தாயின் மீது எல்லையில்லா கோபத்திலிருக்கின்றான், அது எப்போது வேண்டுமானாலும் கரையை கடக்கலாமென யூகித்தார்.

நானியின் கேள்விக்கு… “ஆமா நான் தான் சொல்றேன்னு வச்சிக்கோ… எனக்கு என் குடும்ப மானம் வெளியே போகக்கூடாது. ஏற்கனவே ஆத்தாக்காரி பண்ணியதையே மகளும் செய்துட கூடாதில்லையா” என்றார் பாண்டியம்மாள்.

“சும்மா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்காதீங்க, உங்களுக்கென்ன அரசி பண்ண மாதிரி, சிவாவும் காதல் கல்யாணம் பண்ணிப்பாளோன்னு தானே உங்களுக்கு பயம்…” அழகேசன் கேட்டதற்கு சட்டென்று ஆமென்று கூறினார் பாண்டியம்மாள்.

“சரிம்மா… சிவாவின் கல்யாணத்திற்கு நான் சம்மதிக்கிறேன்.”

அழகேசனின் வார்த்தைகளில் பாண்டியம்மாளின் முகம் ஒளிர, அனைவரது முகமும் அதிர்வினை பிரதிபலித்தது.

நானிக்கு மட்டும் தன் தந்தை உள்ளொன்று வைத்து பேசுகிறாரென்பது தெளிவாக விளங்கியது. அதனால் அமைதி காத்தான்.

அனைவரின் முகத்தையும் சுற்றி ஒருமுறை அலசியவர், பாண்டியம்மாளின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து… “எனக்கே ஒரு மகனிருக்கும் போது நானெதற்கு என் தங்கச்சி மகளுக்கு வெளிய மாப்பிள்ளை பார்க்க வேண்டும். அடுத்த முகூர்த்தத்திலே நானிக்கும் சிவாவிற்கும் திருமணம்” என்றார்.

அழகேசனின் குரலிலிருந்த தீவிரம் உறுதி தெளிவு யாவும் பாண்டியம்மாளை திருத்திருக்க செய்ததே தவிர.. தன் மகனை எதிர்த்து பேச வேண்டுமென்ற எண்ணத்தை தடை செய்திருந்தது.

அவரின் முடிவில், பத்மா தன் வயதையும் மறந்து கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டார்.

தன் அண்ணனுக்கும் சிவாவிற்கும் திருமணமென்றதும், இதனை உடனே சிவாவுக்கு சொல்ல வேண்டுமென்று நந்து ஓடினாள்.

நந்துவின் ஓட்டத்தில் தன்னிலை திரும்பிய பாண்டியம்மாள்… அழகேசனிடம் பேச வாய் திறக்க,

“நீங்க நினைத்த மாதிரியே சிவாவிற்கு திருமணம் நடக்க போகிறது. சந்தோஷம் தானேம்மா, நான் இப்பவே நம்ம ஜோசியரை பார்த்து வர முகூர்த்தத்திலே நல்ல நேரம் குறித்து வர்றேன்” என அவரை பேசவிடாது செய்தவர் பத்மாவையையும் கூட்டிக்கொண்டு.. சென்று விட்டார்.

தன் திட்டம் தனக்கே எதிராக திரும்பியதை எப்படி சரி செய்வதெனத் தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் பாண்டியம்மாள்.

அவரின் முகத்தை பார்த்து வரும் சிரிப்பை அடக்கும் வழி தெரியாது நானி தவிக்க, அவனின் முதுகில் அடியொன்றை வைத்தார் அரசி.

“அய்யோ அத்தை…” என்று அரசியின் அடியையும் பொருட்படுத்தாது உற்சாகமாக அவரை கட்டிக்கொண்டவன், “நீ எனக்கு மாமியாராகப்போற அத்தை… என்னை நீ கொடுமையெல்லாம் செய்யக்கூடாது” என்று வம்பு செய்தான்.

நானியின் குறும்பு செயலை ரசித்தபடி அவனின் கன்னம் வழித்தவர், “நீ சந்தோஷமா இருந்தால் அதுவே போதும்” என்றார்.

நந்துவின் மூலம் செய்தியறிந்த சிவா இறக்கை ஏதுமின்றியே வானில் பறந்தாள். அவளை சுற்றி பல வர்ண வண்ணத்துப்பூச்சிகள் பறக்க… நானியைத் தேடி ஓடினாள்.

நாயகியின் எண்ணத்து நாயகனே படியேறி மேலே வர… வேகமாக ஓடியவள் அவன் மீது மோதிய கணத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து உருண்டனர்.

அதனை பார்த்து பதறிய நந்து என்னாவோ ஏதோவென்று.. தரையில் விழுந்து கிடந்தவர்கள் அருகில் சென்று பார்க்க… நானி தரையில் கிடக்க, சிவா அவன் மீது ஜம்மென்று படுத்தபடி.. இருவரும் காதல் வானில் ஊர்வலம் போய்க்கொண்டிருந்தனர்.

இருவரது இமையும் அசையாது ஒருவரையொருவர் பார்த்தபடி இருக்க, அவர்களை பிரிக்க நந்து செய்த எந்தவொரு செயலுக்கும் பலனின்றி போனது.

“இது சரிப்பட்டு வராது, நாமலா நடத்தி வைக்கிற மாதிரி இவங்க கல்யாணத்தை அப்பா ஏற்பாடு செய்தா, இதுங்க ரெண்டும் ரொமான்ஸ் பண்ணியே காதல் கல்யாணம்ன்னு அப்பத்தாவுக்கு காட்டிக் கொடுத்துடுங்க போல்…” புலம்பிய நந்து சமயலறைக்குச் சென்று குடம் நிறைய தண்ணீர் கொண்டு வந்து இருவர் மீதும் ஊற்றினாள்.

சில்லென்று தண்ணீர் படவும் அடித்துப்பிடித்து எழுந்து நின்ற இருவரையும் பார்த்து நந்து சிரிக்க, தங்கையின் தலையில் வலிக்காது கொட்டியவன்… “சிவா மீது எதுக்கு பிசாசே ஊத்தின.. அவளுக்கு ஜலதோஷம் ஏதாவது பிடிச்சுது நீ அவ்வளவு தான்” என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்டினான்.
தன் மீது நானி கொண்ட அக்கறையில் சிவா அவனையே ரசித்துப் பார்க்க… “ஏண்டி ஈரத்தோட இப்படியென்ன சைட் அடிச்சிட்டிருக்க.. போடி போ, முதலில் தலையை துவட்டு” என அதட்டினான்.

நானியின் அதட்டலலிலும்… அவனின் அன்பை உணர்ந்தவள் நந்து இருப்பதையும் கருத்தில் கொள்ளாது, “லவ் யூ மாமா” எனக் காதலால் கசிந்துருகினாள்.

அவளது வார்த்தைகளில் சுகமாக கரைந்தாலும், ஈரத்தோடு அவள் நிற்பதை தாங்க முடியாதவன்… “நீ முதல்ல பின்னலை அவிழ்த்து காயவிடு.. அப்புறம் லவ் பண்ணலாம்” என்று சிவாவை அவளது அறைக்கு விரட்டினான்.

சிவா சென்றதும், தனது அண்ணனின் தோளில் கைபோட்டு நின்ற நந்து… அவனின் ஈர உடை மற்றும் தலையை காண்பித்து, “இங்கையும் ஈரமாத்தான் இருக்கீங்க போங்க போய் நீங்களும் ட்ரெஸ் மாத்துங்க” என்று கிண்டல் செய்தாள்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு கிண்டலா பண்ற…” நானி அடிக்க வர நந்து தப்பித்தோமென ஓடிவிட்டாள்.

நானி அவனின் அறையில் தனக்கும் தன்னவளுக்கு நடைபெற போகும் திருமண கனவில் மிதந்திருக்க, அவனின் அறைக்கு பாண்டியம்மாள் வருகைத் தந்தார்.

எதுவும் நடவாததைப்போன்று அவரை வரவேற்றவன்… “என்ன அப்பத்தா” எனக் கேட்டான்.

கண்களில் வராத கண்ணீரை வரவழைத்தவராக, “ஏன் கண்ணு நீ அந்த சிவா புள்ளைய கல்யாணம் கட்டிக்கிட போறியா” என்றார் அப்பாவியாக,

நானி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “அவ உனக்கு வேண்டாம் ராசா… உனக்கேத்த மாதிரி ராணியாட்டம் நான் பொண்ணு பாக்குறேன் ராசா… இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்காதய்யா…” அரசியை காரணம் வைத்து பேசினால் நானியிடம் எடுபடாதென்று நயமாக பேசினார்.

நானியோ அவரின் நோக்கம் புரிந்து… அவரின் பேச்சிற்கு பிடிகொடுக்காது, “அப்பா சொல்லியதை இதுவரை நான் மீறியதில்லை அப்பத்தா… இதிலும் அப்பா பேச்சினை என்னால் மீற முடியாது” என்றான்.

எங்கே தான் சிவாவை விரும்புவதால் தான் அப்பா கல்யாணம் ஏற்பாடு செய்கிறாரென்று தெரிந்தால், தன் அப்பத்தாவின் கோபம் முழுக்க சிவா மீது திரும்பிவிடுமென பயந்தவன் அழகேசனையே காரணம் காட்டி பேசினான்.

“இப்பவும் அப்பா இந்த கல்யாணம் வேண்டாமென்றால் எனக்கும் வேண்டாம்…” நானி கூறியதில் தனக்கொரு வாய்பிருப்பதாகக் கருதிய பாண்டியம்மாள்,

“உனக்கெதுக்கு கண்ணு பிடிக்காத கல்யாணம்.. உன் அப்பன்கிட்ட நான் பேசிக்கிறேன்” என்று கிளம்பிவிட்டார்.

‘நீங்க என்ன பேசினாலும் அப்பா இறங்கி வர போவதில்லை…’ நானி தனக்குள் கூறிக்கொண்டான்.

வீட்டிலிருந்து கிளம்பிய அழகேசனும் பத்மாவும் அடுத்த அரை மணி நேரத்தில் தங்களது குடும்ப ஜோசியரின் முன் அமர்ந்திருந்தனர்.

நானி மற்றும் சிவாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்… “இரண்டும் அமோகமான ஜாதகம்… ஒருவருக்கொருவர் உயிராக இருக்கும் ஜாதகம், இவர்கள் வாழ்க்கை நூறு சதவிகிதம் சந்தோஷமாக இருக்கும்.. ஆனால், இவர்கள் ஒன்று சேருவது அவ்வளவு எளிதல்ல. இந்த சந்தர்ப்பத்தை விட்டாலும் இவர்கள் திருமணம் இதன் பிறகு நடைபெற வாய்ப்பேயில்லை” என்றார்.

“பிள்ளைகள் இருவருமே எங்க பிள்ளைகள் … ஒருவருக்கொருவர் நேசிக்கின்றனர், அப்புறம் எப்படி இவர்கள் சேருவதில் சிக்கல் ஏற்படும்?”

ஜோதிடர் முதலில் கூறியதை மகிழ்வுடன் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், அவர் இறுதியில் கூறியதில் சந்தேகமெழ.. அழகேசனும், பத்மாவும் ஒரு சேர வினா எழுப்பினர்.

“நான் இவர்கள் திருமணத்தில் சிக்கல் வருமென்றோ அல்லது தடைப்படுமென்றோ சொல்லவில்லையே ஐயா…. திருமணம் எவ்வித தடையுமின்றி நடைபெற்றாலும், இவர்கள் இருவரிடையேயும் குறைந்தபட்சம் இரண்டு வருடமாவது பிரிவு ஏற்படும்.”

ஜோதிடர் கூறியதில் மனம் கலக்கம் கொண்டாலும், தன் மகன் சிவாவின் மீது கொண்டுள்ள நேசத்தில் நம்பிக்கை வைத்தவர் இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு நல்ல நாள் குறித்து தர சொன்னார் அழகேசன்.

“பத்து நாட்களில் வரும் முகூர்த்தம் அமோகமானது… அன்றைக்கே திருமணத்தை வைத்துக்கொள்ளுங்கள்.” ஜோதிடர் சொல்லியதும் நன்றி தெரிவித்து கணவன் மனைவி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

அனைவரும் படுக்கையில் விழும் நேரம் நானி தன் தந்தையை தேடி வந்தான்.

“இப்போ இத்திருமணம் வேண்டுமாப்பா?”

நானியின் கேள்வி ஜோதிடர் சொல்லியதை உண்மையாகிவிடும் போலிருக்கே என்று நினைத்தார்.

“என்னப்பா இப்படியொரு கேள்வி கேட்கிற… இதுதான் நல்ல சந்தர்ப்பம் நானி, உங்க அப்பத்தாவை எதிர்த்து பின்னால் நம்மளால் அவ்வளவு எளிதா உனக்கும் சிவாவிற்கும் திருமணம் செய்ய முடியாது.. உன் திருமணம் சிவாவுடன் நடப்பதற்கு அவரே சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதை நாம் பயன்படுத்திக் கொள்ளணும் நானி.”

தன் தந்தை சொல்வதும் சரியெனப்பட, “அவள் இப்போதான் முதல் வருஷம் படிக்கிறாள்… இது தவறில்லையா” என்றான்.

“அதுதான் முதல் வருட படிப்பு முடிய போகிறதே, அடுத்த மாசம் பதினெட்டு முடியுது. கல்யாணம் பண்ணிக்கட்டும் படிக்கட்டும். நீயும் பாஸ் பண்ணிட்டா பயிற்சிக்கு போயிடுவியே! உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ வாழ்க்கையை ஆரம்பிங்க. ஆனா இப்போ கிடைச்சிருக்க சந்தர்ப்பத்தை விட்டுட வேண்டாம்” என பல்வேறு பேசி நானியை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தார் அழகேசன்.

தந்தையின் கூற்றில் தெளிவு பெற்றவன், எவ்வித சஞ்சலமுமின்றி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.

error: Content is protected !!
Scroll to Top