அத்தியாயம் 14 :
“ஓய்…”
மல்லிகை பந்தலில் ஏணி வைத்து ஏறி, பூ பறித்துக்கொண்டிருந்த சிவா.. திடீரெனக் கேட்ட சத்தத்தில், அதிர்ந்து திரும்ப.. ஏணியில் வைத்திருந்த கால் வழுக்கி கீழே விழயிருந்தவளை மலர் பொதியென கைகளில் ஏந்தினான் நானிலன்.
அவளின் கைகளிலிருந்து மலர்கள், வான் தேவர்களின் ஆசீர்வாதமென இருவரின் மீதும் பொழிந்தது.
சத்தத்தை எழுப்பி சிவா விழக் காரணமாக இருந்தவனே, அவள் விழுவதையும் தடுத்திருந்தான்.
விழப்போகின்றோமென்கிற பயத்தில் கண்களை அழுந்த மூடியவள், பற்றுக்கோளாய் தன்னை தாங்கியவனின் சட்டையின் கழுத்துப் பட்டையை தன்னிரு கரங்களால் இறுக பற்றினாள்.
தன்னவளின் மதி முகத்தை மிக அருகில் பார்த்தவன் சித்தம் கலங்கினான். மூடிய விழிகளில் அங்குமிங்கும் ஓடிய கருமணிகள் அவளின் பயத்தை பறைசாற்றின.
தன்னவளின் அச்சத்தை போக்கும் பொருட்டு, மூடிய இமைகளின் மீது அழுத்தமாக தன் முத்திரையை பதித்தான். தன்னவனின் உடல் ஸ்பரிசமும், இதழ் தீண்டலும் உள்ளுக்குள் பல வண்ண உணர்வுகளை ஏற்படுத்த மெல்ல விழி திறந்தாள்.
“ஏன் மாமா இப்படி பயம்காட்டுறீங்க, கீழே விழுந்து கால் உடைஞ்சிருந்தா என்ன ஆகுறது.”
“ம்ம்… காலம் முழுக்க இப்படியே கைக்குள்ள வச்சு தாங்கியிருப்பேன்.”
தான் விளையாட்டாக கேட்டதற்கு கூட காதலாக விடையளித்தவனை இமை சிமிட்டாது பார்த்தவள்,
“இதுதான் சாக்குன்னு கையிலே தூக்கிட்டு நிக்குறீங்களா? எனக்கு ஒன்னுமில்லை இறக்கிவிடுங்க.”
“என் பொண்டாட்டியை நான் தூக்கி வைத்திருக்கேன், உனக்கென்ன?” என்ற நானி அவர்களின் பக்கமாக கேட்ட பாண்டியம்மாளின் குரலில் சட்டென்று தன்னவளை கீழிறக்கிவிட்டான்.
பாண்டியம்மாளின் மீதுள்ள நானியின் பயத்தில் சிவா கலகலத்து சிரிக்க,
“அப்பத்தாவை பொறுத்தவரை இக்கல்யாணம் அப்பாவினால் முடிவு செய்யப்பட்டதா இருக்கவேண்டுமென்பதால் தான் காதலிக்கும் வேலையை ஒதுக்கி வைக்கிறேன்” எனக் கூறி சிவாவின் நெற்றியில் இதழ் பதித்து, பாண்டியம்மாள் அங்கு வருவதற்குள் ஓடிவிட்டான்.
சிவாவிடம் வந்த பாண்டியம்மாள்,
“இங்க பாரு புள்ள…”
பாண்டியம்மாள் சிவாவை எப்படி அழைத்திருந்தாலும் அவள் பிறந்தது முதல் இந்த பத்தொன்பது வருடத்தில் அவரே வந்து அழைக்கும் முதல் அழைப்பு இது.
தன்னுடைய பாட்டி முதல் முறையாக தன்னிடம் பேசுவதற்காக அழைக்கும் முதல் விளிப்பு என்பதிலேயே மகிழ்ந்த சிவா கண்கள் குளம்கட்ட,
“சொல்லுங்க அம்மத்தா” என்றாள்.
சிவாவின் அன்பு கலந்த விளிப்பு அவருக்கு ஒரு உணர்வையும் ஏற்படுத்தவில்லை போலும், நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தார்.
“நானி எம்பேரன், அவனுக்கு என்னுடைய மூத்த மகள் வயிற்று பேத்தி மீனாவை தான் கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு விருப்பம், ஊடால நீ புகுந்து ஆட்டத்தை காலைக்களான்னு பாக்குறியா.. உன்னை ஆஞ்சி புடுவேன் ஆஞ்சி… எம்மவன் என்னமோ, நீ தான் அவனுக்கு மருமவன்னு குதிச்சிட்டு திரியுறான்.. நீயே இந்த கல்யாணத்தில் உனக்குவிருப்பமில்லைன்னு சொல்லிப்புடு, அப்படி சொல்லலை இந்த பாண்டியம்மாளை காளியம்மாளா நீ பார்க்க வேண்டியிருக்கும்” என்றவர், சிவாவின் பதிலை கூட கேட்காது சென்றுவிட்டார்.
நான் உன்னிடம் யாசகம் கேட்டகவில்லை உனக்கு உத்தரவிடுகின்றேன், என் கட்டளையை நீ மீறக் கூடாதென்ற உட்பொருள் அவரின் பேச்சிலும்.. உடல்மொழியிலும் நன்கு தெரிந்தது.
முதன் முதலாக தன் வாழ்வில் தான் விரும்பிய ஒன்று கை சேர்கிறதென்ற நினைப்பு மண்ணாகிறதே.
‘மனதோடு குமுறியவள், நிச்சயம் மாமாவை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது’ என்ற திடத்தை மனதிற்குள் வளர்த்தாலும், பாண்டியம்மாள் பேசிச்சென்ற வார்த்தைகளினால் கண்களில் உடைப்பெடுத்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்வதென தெரியாது கால்கள் மறுத்துப்போக நின்றிருந்தவளின் விழிநீரை வலிய கரமொன்று துடைத்தது.
கரத்திற்கு சொந்தக்காரனான நானியின் தொடுகையில் சுற்றம் உணர்ந்தவள், அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
“நீ எனக்கு இல்லையா மாமா?”
உயிர் உருக்கும் குரலில் அவள் கேட்டது நானியின் இதயத்தை வலியில் பிசைந்தது.
பாண்டியம்மாள் பேசியதை அவனும் ஒளிந்திருந்து கேட்டானே, தன் சிவா அழுவதற்கு காரணமான அப்பத்தாவை கொன்று புதைக்க வேண்டுமென்ற வெறி அவனுள் தோன்றினாலும், சிவா முழுவதும் தன்னவளாக ஆனபிறகே உரிமையுடன் அவளுக்காக அவரிடம் எதிர்த்து நிற்க முடியுமென நினைத்து தன் கோபத்தை அடக்கினான். ஆனால் அதன் பின்னரும் தன்னால் ஒன்றும் செய்திட முடியாதென்பதை அவன் அறியவில்லை.
“யார் என்ன சொன்னாலும், நீயே என்னை வேண்டான்னு சொன்னாலும் நீதான் என் பொண்டாட்டி, அதேபோல் நானே உன்னை வெறுத்து ஒதுக்கினாலும் நான் தான் உன் கணவன்”, என ஆறுதல் கூறினான்.
எந்நேரத்தில் இவ்வார்த்தைகளைக் கூறினானோ… அவனே அவனவளை ஒதுக்கி வைக்கைப்போகின்றான் என்பதை நினைத்து விதி மெல்ல சிரித்தது.
“எந்த தடங்கலுமின்றி நம் திருமணம் நடைபெற வேண்டும், அதுவரை சற்று பொறுமையாகவே அனைத்தையும் கடந்து விடலாம்” என்றவன் அவள் கண்ணீரை நிறுத்தும் பொருட்டு… அணைத்துக்கொண்டேன்.
நாணம் குடிக்கொள்ள, அவனை விலக்கி தள்ளியவள், “கல்யாணத்துக்கு அப்புறம் கொடுக்க கொஞ்சம் மிச்சம் வை மாமா” என்றபடி ஓடிவிட்டாள்.
அவளின் இத்தகைய சிறு புன்னகையே தனக்கு போதுமென நினைத்தவன் தன் தந்தையை தேடிச் சென்றான்.
பாண்டியம்மாள் சிவாவிடம் பேசியதை ஒரு வார்த்தை மாறாமல் கூறியவன், “உங்க அம்மாவை கொஞ்சம் அடக்கி வைங்க.”
தந்தைக்கே ஆணை பிறப்பித்தான்.
செல்லும் மகனையே பார்த்திருந்த அழகேசனுக்கு, “இன்னும் கல்யாணமே ஆகலை… அதுக்குள்ள பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணி அப்பனையே மிரட்டிட்டு போறான்.
ஒருத்தர் மீது ஒருத்தர் உயிரையே வைத்திருக்கும்போதா பிரிவு ஏற்படப்போகிறது” அழகேசனின் முகத்தில் உண்மையில் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது.
தன் மகனும் மருமகளும் அளவுக்கு அதிகமான அன்புடன் வாழ்வதைவிட அவருக்கு வேறென்ன சந்தோஷம் இருந்துவிடப் போகிறது.
திருமணம் நடைபெறும் நாள் நெருங்க நெருங்க வீட்டில் பல வித மாற்றங்கள் குடிபுகுந்தன.
அழகேசனும் பத்மாவும் பம்பரமாக சுழன்றனர். அரசியும் பல வேலைகளை தன் கைக்கொண்டு செய்தார். இதற்கிடையில் பாண்டியம்மாள் இத்திருமணத்தை நிறுத்த பல வழிகளில் முயன்றும் ஒன்றும் பலனில்லை.
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாதென்று நினைத்த பாண்டியம்மாள், ஒரு உயிர் போய் தான் இத்திருமணம் நிற்க வேண்டும் போலிருக்கிறதென தனக்குத்தானே கூறிக்கொண்டு, சிவாவின் உயிரை நீக்க சந்தர்ப்பத்தை உருவாக்கத் தயாராகினார்.
திருமணமென்றாலே பெண்களுக்கு இயற்கையாகத் தோன்றும் சிறு அச்சமும் படபடப்பும் சிவாவிற்கும் ஏற்பட, இதிலே உழன்று கொண்டிருக்க முடியாதென நானியின் அறைக்குள் நுழைந்தாள்.
நானி கதவு திறக்கும் ஓசையில் யாரென பார்க்க, சிவா தெளிவில்லா மனதுடன் நின்றிருந்தாள். அன்று தான் முதல் நாள் நலங்கு வைத்திருந்ததால் புடவை அணிந்திருந்தாள்.
“குட்டச்சி புடவையில அம்சமாவே இருக்காள்… இவளை போய் சின்னப்பொண்ணுன்ணு தள்ளி இருந்துட்டோமே” மனதோடு சொல்லிக்கொண்டான்.
உள் நுழைந்தவள் இன்னும் தன்னிடம் வராது அமைதியாகவே நின்றிருக்க, நானியும் எதுவும் பேசாது தன்னவளை ரசித்தபடி பார்வையால் அவளை தின்றுக்கொண்டிருந்தான்.
நானியை நிமிர்ந்து பார்த்தவள், எதுவும் கூறாது வேக எட்டுக்களுடன் சென்று மெத்தையில் கால் நீட்டி அமர்ந்து,
“கால் வலிக்குது மாமா கொஞ்சம் பிடித்து விடு” என்றாள்.
“மேடம் அப்படியென்ன வெட்டி முறிச்சீங்க” என்று நானி கேட்டாலும், அவளருகில் அமர்ந்து மெல்ல தன்னவளின் காலினை பிடித்துவிட்டான்.
“உனக்கு நான் இப்படி செய்ய சொல்லி சொன்னது கோபம் வரலையா மாமா?”
“ஹேய் நீ என் ரனிம்மா, என்கிட்ட தான் இப்படி உரிமையா கேட்க முடியும்” எனக் கூறியவன் கால் பிடித்துவிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.
“போதும் மாமா என்ற சிவா, என்னன்னு தெரியல.. கொஞ்சம் படப்படப்பா பயமா இருக்கு, என் கை இப்படியே இறுக்கமா பிடிச்சிக்கோ மாமா” என சொல்லியவாறு நானியின் கையோடு தன் கை பிணைத்து அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
திருமணம் என்பதில் பயம் தோன்றியிருக்கும் என்பதை நொடியில் புரிந்துகொண்டவன் அவளின் மனநிலையை மாற்ற,
“நம் திருமணத்திற்கு பிறகு நாம் எப்படியெல்லாம் வாழணும் உனக்கு ஏதாவது ஆசையிருக்கா ரனிம்மா” எனக் கேட்டான்.
நானியின் கேள்வியில் படபடப்பு நீங்கியவளாய் உற்சாகமாக நிமிர்ந்து அமர்ந்து பேசத் தொடங்கினாள்.
“பெருசா எந்த ஆசையுமில்லை மாமா, ஆனால் சின்ன சின்ன ஆசை நிறையயிருக்கு” என்றவள்,
“காலையில் நீ தான் எனக்கு பெட் காபி போட்டு வந்து எழுப்பணும்.”
“கிழிஞ்சுது… ஆரம்பமே அசத்தல், மேலே சொல்லு.”
சிவா சொல்லிய முதல் பாலிலே இனி நான் மொத்தமாக அவுட் என்பதை நானி புரிந்துக்கொண்டான்.
“வாசல் தெளித்து நான் கோலம் போடும்போது, நீ என்னை வாசல் படியில் உட்கார்ந்து பார்த்துட்டே இருக்கணும்.”
“சைட் தானே அடிக்கணும், சிறப்பா செஞ்சிடுவோம்.”
“நான் சமையல் செய்யும் போது நீ வந்து என்னை நிறைய தொல்லை பண்ணனும்.”
“கிச்சன்லயும் ரொமான்ஸ் பண்ண சொல்ற… ரைட்டு, பண்ணிடலாம். அப்புறம்…”
“மூணு வேளையும் நீ தான் எனக்கு சாப்பாடு ஊட்டு விடணும், உனக்கும் எனக்கும் ஒரே பிளேட் தான்.”
“நம்ம வீட்டுல தட்டுக்காடி பஞ்சம்.”
“ச்சீ, போ மாமா… நீ இப்படி கவுண்ட்டர் கொடுத்துட்டு இருந்தால், நான் எதுவும் சொல்ல மாட்டேன்.”
சிவா சொல்ல சொல்ல உள்ளுக்குள் ரசித்தவன், வெளியில் அவளை வெறுப்பேற்றினான். சிவா சிறிது முறுக்கிக்கொண்டதும், “சொல்லுடி பொண்டாட்டி… நீ சொல்றது நல்லாயிருக்கு” என்று குழைந்தான்.
சிவா மேலும் சொல்லத் தொடங்கினாள், இனி நீ குறுக்கே எதுவும் பேசக்கூடாதென்ற நிபந்தனையுடன்,
“நீ லேட்டா தான் ஆபீஸ் போகணும் பட் நான் உனக்காக காத்திட்டு இருக்கேன்னு சீக்கிரம் வந்திடனும். உனக்கு நான் தான் தலை வாறி விடுவேன். நீ எனக்கு தினமும் குங்குமம் வச்சிவிடணும். அரை மணிக்கு ஒருமுறை கால் பண்ணி கொஞ்சணும். உனக்கு எப்பவும் என் ஞாபகம் மட்டும் தான் இருக்கணும். நீ என்னை நல்லா பார்த்துக்கிற மாதிரி நானும் உன்னை நல்லா பார்த்துப்பேன். அடிக்கடி குட்டி சண்டை போடணும், ஆனால் சண்டை நடந்த மாதிரியே இருக்கக்கூடாது.. அடுத்த நொடியே நிறைய ரொமான்ஸ் பண்ணனும். தினமும் நம்ம லைஃப் புதுசு புதுசா அனுபவிச்சு வாழணும் மாமா. உன்னை விட்டு பிரியாமல் உனக்காக மட்டுமே வாழணும்.”
கண்கள் மின்ன அனைத்தையும் கூறி முடித்தவள் நானியின் முகம் நோக்க, அவனோ இரு கைகளாலும் தனது கன்னத்தை தாங்கியபடி சிவாவையே பார்த்திருந்தான்.
“மாமா அவ்வளவு தான்” என்றவாறு நானியை சிவா பிடித்து உலுக்க, அவளை நெருங்கி உரசி அமர்ந்தவன்…
“பகலில் என்னென்ன பண்ணனும் சொன்னியே, ராத்திரியில் என்ன பண்ணனும் சொல்லவேயில்லையே”, அப்பாவியாக அவளின் விழியோடு தன் விழிகளை கலக்கவிட்டு கேட்க,
நாணம் கொண்டவள் அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு,
“அதெல்லாம் கல்யாணத்துக்கு, என் படிப்பு, உன் வேலைக்கு பிறகுதான்” எனக்கூறி சலங்கையொலியாய் சிரித்தவாறு ஓடிவிட்டாள்.
“நீ சொன்ன எல்லாம் நடக்கும்” என்ற நானியின் குரல் அவளின் முதுகை தீண்டியது.
இருவரின் மனமும் தாங்கள் வாழப்போகும் வாழ்வை நினைத்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது.
வழக்கம்போல் ஓடிவந்த சிவா பாண்டியம்மாளின் மீது மோதி நிற்க இம்முறை வழக்கத்திற்கு மாறாக அவர் அவளை ஒன்றும் சொல்லாது, தன் கையிலிருந்த சிறு பெட்டியை சிவாவிடம் கொடுத்து மச்சு அறையில் வைத்துவிடென்றார்.
“அந்த அறை இருட்டா இருக்குமே”
“பதில் பேசாமல் சொன்னதை செய்” என்ற பாண்டியம்மாள் சிவாவை வெறிகொண்டு பார்த்தார்.
அவரின் பார்வை குளிறெடுக்க, எதுவும் கூறாது திரும்பிப் பார்த்தபடி மச்சு அறையை நோக்கி நகர்ந்தாள்.
அந்த காலத்தில் தரை தளத்திற்கு கீழே பூமிக்கு அடியில் படியமைத்து பெரியளவில் ஒரு அறையினை உருவாக்கி வைத்திருப்பர். இதில் விதை நெல், தானியங்கள் மற்றும் வீட்டின் முக்கிய பொருட்களை வைத்து பாதுகாப்பர். தரைக்கு அடியிலிருப்பதால் இருட்டாகவும், காற்று குறைவாகவும் இருக்கும். இங்கு பத்து நிமிடத்திற்கு மேல் சுவாசிப்பது அவ்வளவு எளிதல்ல.
சிவா அவ்வறையின் தரையோடு தரையாகயிருந்த பலகின் பூட்டை திறந்து தூக்கியவள், ஏணி அமைப்பில் கீழிறங்கிய படிகளில் மெல்ல கால் வைத்து இறங்கினாள்.
அவள் பின்னோடு வந்த பாண்டியம்மாள், யாருக்கும் தெரியாத வகையில் பலகினை சாற்றி தாளிட்டு ஒன்றும் தெரியாதவர் போன்று சென்று விட்டார்.
பெட்டியை அங்கிருந்த அலமாரியில் வைத்துவிட்டு திரும்பியவளின் கண்களில் நானியின் சிறு வயது புகைப்படம் தென்பட, அதனை கைகளிலெடுத்து தன்னையும் மறந்து பார்த்திருந்தாள். நிமிடங்கள் பல கடந்த பின்னர் காற்றுக்கு ஏங்கி சுவாசக்குழல் தவிக்க, உடம்பில் வியர்வை ஊற்றாய் சுரந்த பின்னரே தானிருக்கும் அறையின் நினைவு வர படிகளில் ஏறி மேலேவற.. மூடியிருந்த கதவு திகில் மூட்டியது.
எவ்வளவு முயன்றும் திறக்க முடியாமல் போக, தன் பலம் கொண்ட மட்டும் யாராவது இருக்கீங்களாவெனக் குரல் கொடுத்தாள். வீட்டின் பின்பகுதியில் இறுதியிலிருக்கும் அறையென்பதால் ஆளரவமற்று நிசப்தமாக இருந்த இடத்தில் சிவாவின் கதறல் மட்டுமே எதிரொலித்தது.
நிமிடங்கள் மணியாக கடக்க, காற்றற்ற அறையில் சுவாசிக்க முடியாது, நா வறண்டு சத்தம் எழுப்பும் திராணியற்று மேல் படியில் நின்றிருந்தவள் மயங்கி சரிந்து, உருண்டு கீழே விழுந்தாள்.
தட்டுத்தடுமாறி சுவாசக்குழலில் ஜீவன் மிச்சமிருக்க, நெஞ்சுக்கூடு ஏறி இறங்க சுயநினைவின்றி தரையில் வீழ்ந்து கிடந்தாள்.
தன் நண்பனை காணச் சென்ற நானி.. திடீரென என்னவென்று பிரித்தறிய முடியாத வகையில் ஓர் படபடப்பு, இதயத்தில் நடுக்கமென ஏற்பட… தன் உயிர் ஊசலாடுவதை போல் நிழற்படம் கண்முன்னேத் தோன்றி மறைவதை உணர்ந்தான்.
சிவாவிற்கு ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறதென உள்ளுணர்வு உந்த, அவளை பார்த்தால் தான் தவிக்கும் தன் மனம் சீராகுமென தன்னிடம் பேசிக்கொண்டிருந்த நண்பனிடம் கூட சொல்லாது வீட்டிற்கு விரைந்தான்.
நானி உள்ளே வரும் சமயம், சிவாவின் அறையிலிருந்து வெளிவந்த பத்மா, “எங்க போனான்னு தெரியலையே, முன்னவே சாப்பிட வாடின்னு சொல்லிட்டு போனேன். சொல்லி ஒரு மணி நேரத்திற்கு மேலாச்சு, ஆளையே காணோம். எங்கன போயிருப்பாள்” என புலம்பியபடி எதிரில் வந்தார்.
தன் தாயின் புலம்பலிலிருந்து சிவா இங்கில்லை என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. வீட்டிற்கு வெளியில் காலணிகளை விடுமிடத்திலிருந்த சிவாவின் பாதுகைகளும், அவனின் உள்ளுணர்வும் ஆபத்தான நிலையில் ‘உன்னவள் இங்கு தான், வீட்டிற்குள் தான் இருக்கிறாள்’ என அடித்துக் கூறியது.
அவனின் மனமும், கண்களும் தன்னவளை கண்டு விட மாட்டோமாவென பரபரத்தது.
தன்னவளைத் தீண்டி போராடும் காற்று அவனிற்கு வழி காண்பித்திட கூடாதா? விதியும் என்ன செய்வேன் நானென கைகட்டி ஊமையாய் வேடிக்கை பார்த்தது.
அந்த பெரிய வீடு முழுக்க தன்னவளை தேடி தேடி சோர்ந்து விட்டான். அரசி கூட இங்கு தான் பக்கத்தில் எங்காவது சென்றிருப்பாளென கூற நானியின் மனம் அதனை ஏற்க மறுத்தது.
நானியின் தீவிரமான தேடுதல் வீட்டின் மற்றவர்களையும் தேட வைத்தது.
இன்னும் சில நிமிடங்களில்… ‘உன்னவள் உன்னை விட்டு நீங்க போகிறாள்’ என்ற வார்த்தைகள் நானியின் காதில் ஒலிக்க, மெல்ல தன் பதட்டத்தையும், வேகத்தையும் கட்டுப்படுத்தி மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்தவன், தன் மனதையும் செவியையும், தன் உணர்வுகளையும் கூர்மையாக்கினான்.
வீட்டின் மையமான பெரிய கூடத்தின் நடுவில் நின்றிருந்தவனின் கண்கள் மெல்ல சுழன்று ஒவ்வொரு அடியையும் கண்காணித்தன. சிவாவின் ஒலி தன்னை தீண்டி விடாதாவென நானியின் செவிகள் நுண் சத்தத்தையும் அலசியது. தன் மனம் முழுக்க, உடலின் ஒவ்வொரு செல்லிலும் நிறைந்திருப்பவளின்.. தான் மட்டுமே அறிந்திட வேண்டிய அவளின் பிரத்யேகமான வாசனையை அறிந்திட நானியின் நாசி மனதோடு சேர்ந்து நுகர்ந்தது.
ஆழ்மனம் வரை சிவாவின் நினைவே மூழ்கியிருக்க, அவனின் மூளை செயலின்றி கிடக்க, விழித்துக்கொண்ட மனம் அவனையும் மீறி நானியின் கால்களுக்கு உத்தரவிட தானாக மனம் செல்லும் வழியில் சென்றது.
தன் கட்டுப்பாடின்றி நடந்த அவனின் கால்கள் தேங்கி நின்ற இடம் வீட்டின் பின்பகுதி.
இங்கு எதற்காக வந்தோமென அலசியவனின் பார்வையில் விழுந்தது மச்சு அறையின் பூட்டிடப்படாத கதவு. அதனுள் செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பூட்டியே இருக்கும் அறை இன்று வெறும் தாளிடப்பட்டு மட்டும் இருப்பது நெருடலை ஏற்படுத்த நொடியும் தாமதியாது.. கதவினை தூக்கி திறந்து படிகளில் வேகமாக இறங்கியிருந்தான். சிறு விளக்கொளியில் நானியின் பார்வை அறையை முற்றிலும் சுழன்றது.
படிகளில் உருண்ட வேகத்தால் அறையின் ஓரத்தில் விழுந்திருந்தவளை கண்டதும் நானியின் இதயம் நின்று துடித்தது.
தன்னவளின் அருகில் சென்றவன் மூர்ச்சையாகியிருந்தவளை தன் மடியில் தாங்கி,
“ரனிம்மா…” அவளின் பெயரை வீடே அதிர உச்சரித்தான்.
நானியின் பின்னோடு வந்தவர்களும் சிவாவின் நிலையை கண்டு பதறி துடிக்க, நொடியில் தன்னை சுதாரித்துக்கொண்ட நானி விரைந்து அவளை வெளியே தூக்கி வந்து இயற்கை காற்று அவளின் முகத்தில் படுமிடத்தில் படுக்க வைத்தான்.
அசைவின்றி கிடைந்தவளின் முகத்தில் நீரினை அடிக்க அப்போதும் அவளிடம் எவ்வித அசைவுமில்லை. தன் நடுங்கும் கரங்களால் அவளின் முகத்தை வருடியவன், “ரனிம்மா எழுந்திருடி.. என்னை பயமுறுத்தாதே, உனக்கு ஒன்றுமில்லைதானே” என உயிர் உருக மன்றாடினான்.
நானியிடம் அப்பட்டமாக நடுக்கம் தெரிய, அவனின் தோள்தொட்ட அழகேசன் “பதற்றமடையும் நேரம் இதில்ல நானி, படபடப்பை முதலில் குறை” எனக் கூறினார்.
பத்மா சிவாவின் பாதத்தை நன்கு தேய்த்து விட, தன்னை ஒருநிலைப்படுத்திய நானி, சிவாவின் இதயப்பகுதியில் தன் உள்ளங்கையினை வைத்து அழுத்தம் கொடுத்தான்.
மூன்று நான்கு முறை முயற்சித்தவன் எவ்வித பலனுமின்றி சோர்ந்து போக, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாமென்ற தந்தையை ஒரு பார்வை பார்த்து, தன்னை சுற்றியிருக்கும் யாரையும் பொருட்படுத்தாது.. சிவாவின் அதரங்களை பிரித்து தன் அதரங்களோடு பொருத்தி, தனது நுரையீரலில் சுழன்று கொண்டிருந்த மூச்சுக்காற்றை உயிர்காற்றாய் மாற்றி சிவாவின் வாய் வழியே அவளின் நுரையீரலை சென்றடைய செய்தான்.
சுவாசக் காற்றுக்கு ஏங்கி தவித்த மூச்சுக்குழலின் வழியே நுரையீரலைத் தாக்கிய தன்னவனின் உயிர்காற்றை உணர்ந்து கொண்ட இதயம் மெல்ல தன் துடிப்பினை துவங்க, சிவாவின் மூடியிருந்த விழிகளில் கருமணி உருண்டோடியது. அவளின் விழியசைவை அறிந்த நந்து வேகமாக அவளருகில் அமர்ந்து ரஞ்சி என சத்தமாக அழைக்க, நானி தன் முதலுதவியை மீண்டும் மேற்கொண்டான்.
நானியின் செயலால் சீரற்ற சுவாசம் தடையின்றி சீராக மெதுவாக இமை பிரித்த சிவா, மாமாவென்ற விளிப்புடன் தன்னவனைக் கட்டிக்கொண்டாள்.
அவ்வளவு நேரம் வாய்பொத்தி மௌனமாக அழுது கொண்டிருந்த அனைவரும் ஒன்றாக அவளை அணைத்து பயம் நீங்க மகிழ்ந்தனர்.
நடந்தவற்றை ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த பாண்டியம்மாளுக்கு நானி இறுதியாக செய்த செயல் சிவாவின் மீது மேலும் வன்மத்தை வளர்த்தது.
எல்லாவற்றையும் கெடுத்து விட்டானென்று தன் பேரனை மனதோடு திட்டியவர் மீண்டும் சிவாவை அழிக்கும் எண்ணத்தோடு அங்கிருந்து நகர்ந்தார்.
அனைவரும் சகஜ நிலைக்குத் திரும்ப, “எதற்கும் ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வா” என நானியிடம் கூற, “சரிப்பா” என்றவன் உடனடியாகப் புறப்பட்டான்.
உடன் வருகிறேனென்ற அனைவரையும் தடுத்தவன் தான் மட்டும் அழைத்து செல்வதாகக் கூறி, சிவாவை கைத்தாங்களாக கூட்டிக்கொண்டு வெளிவாசல் வந்தான்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பினில் நானி ஏறப்போக, அவனை தடுத்த சிவா… ஜீப்பின் அருகில் நின்று கொண்டிருந்த புல்லட்டினை கை காண்பித்தாள்.
“இப்போதிருக்கும் நிலையில் உன்னால் பைக் பின்னால் அமர்ந்து வர முடியாது” என எவ்வளவோ அவன் எடுத்துக்கூறியும்.. இறுதியில் சிவாவின் பிடிவாதமே வெற்றிபெற புல்லட்டில் மருத்துவமனை நோக்கி பயணித்தனர்.
மாலை நேர இளங்காற்று சில்லென்று மேனியை தழுவ, நானியின் இடையோடு கையிட்டு இறுக்கி அவனோடு உரசியவாறு, அவனின் முதுகில் தனது கன்னம் பதித்திருந்தவள் மௌனமாக அவனின் அருகாமையை ரசித்திருந்தாள். அவளின் நெருக்கம் அவனுக்கும் தேவையானதாக இருக்க, நானியும் அமைதியாக அந்நேரத்தினை அனுபவித்தபடி வண்டியினை சாலையில் செலுத்திக் கொண்டிருந்தான்.
பேசும் நொடிகளை விட பேச்சற்ற நீண்ட மௌனம் ஆயிரம் கதை பேசுமாம்… ஒற்றை மௌனம் அவர்களின் காதல் மனத்தை ஒருவருக்கொருவர் தழுவி வார்த்தைகளற்று கதைக்க… சாலையென்பதும் மறந்து சிவாவின் நெருக்கம் கூடியது.
“நான் செத்து போயிருந்தாலோ அல்லது எனக்கேதேனும் ஆகியிருந்தாலோ என்ன மாமா செய்திருப்ப?”
சிவாவின் செத்து போயிருந்தாலோ என்ற வார்த்தையிலேயே நடு சாலை என்பதையும், பின்னால் வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும் மறந்தவனாக வண்டியின் வேகத்தை சிறிதும் குறைக்காது சட்டென்று பிரேக் பிடித்து நிறுத்தினான்.
நானியின் பின்னால் வந்து கொண்டிருந்த கார், நொடியில் சுதாரித்து காரினை வலதுபுறம் ஒடித்து திருப்பி விபத்தினை தடை செய்திருந்தது.
சிவாவை திரும்பி அழுத்தமாக பார்த்தவன் எதுவும் கூறாது அமைதியாக வண்டியை கிளப்பி மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
இதற்கு முன்னால் இருவருக்கிடையேயான மௌனம் சந்தோஷத்தை கொடுத்தது என்றால், இப்போது அவன் காட்டும் மௌனம் அவளுக்கு உயிர் வலியை கொடுத்தது.
வண்டியிலிருந்து இறங்கியதும், கலங்கிய விழிகளுடன் சிவா நானியை ஏறிட.. அவன் சிறிதும் அவளை கண்டு கொள்ளாது மௌனத்தையே கடைபிடித்தான்.
மௌனம்… அன்பு நிறைந்த உள்ளத்தை கொல்லாமல் கொன்று புதைக்கும் மிகச்சிறந்த ஆயுதம்.
விரும்பி ஏற்கும் போது இனிக்கும் அதே மௌனம் விருப்பமற்று கொடுக்கும் போது கசப்பினை உட்கொள்வது போலாகும்.
நானியின் இம்மௌனத்திற்குள் இருக்கும் விடை யாதோ?