அத்தியாயம் 15 :
“மாமா…
இப்போ பேசுவியா? மாட்டியா?”
மருத்துவரை பார்த்துவிட்டு வெளியில் வரும் வரை கூட நானி சிவாவின் முகத்தை ஏறிட்டு பார்க்கவில்லை.
மருத்துவமனையை விட்டு வெளியில் வந்ததும் வண்டியில் ஏறப்போனவனின் கரம் பற்றி திருப்பியவள், கண்களில் குளம் கட்டியிருக்க.. தாவணியின் முனையை முகத்தை குனிந்தபடி திருகிக்கொண்டே, “இப்போ ஏன் மாமா பேசமா இருக்க, நான் அப்படி கேட்டது தப்பு தான்.. சாரி” என்றாள்.
சிவரஞ்சனியை அழுத்தமாக பார்த்து வைத்தவன், ஒற்றை விரல் கொண்டு முகத்தை நிமிர்த்தினான்… கீழே விழாவா வேண்டாவாயென்று யோசித்த விழிநீர் வழிந்தோட காட்சியளித்த அவளின் கன்னங்களை தன் இருகைகளால் ஏந்தியவன், தன்னவளின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து…
“இப்படித்தான் அமைதியா நானும் செத்து போயிருப்பேன்” என்றான்.
எந்தவொரு இடத்திலுமே சிவா தான் தனது அதிகப்படியான காதலை வெளிப்படுத்தியிருக்கின்றாள். ஆனால், இன்று நானி கூறிய வார்த்தைகள் அவனின் காதலை உணர்த்தியது மட்டுமல்லாமல், அவன் தன் மீது வைத்திருக்கும் காதலைவிட தான் அவன் மீது கொண்ட அன்பு குறைவோயென்று எண்ண வைத்தது.
“நான் செத்துபோயிருந்தா என்ன செய்திருப்ப?” இதனை சிவா கேட்டது விளையாட்டு நோக்கிலிருந்தாலும், அவன் தன் செயலால் உணர்த்தி அதற்கான பதிலை அவளை உணரச்செய்து தன் காதலின் முடிவற்ற எல்லையை காண்பித்துவிட்டான்.
“நீயில்லையென்றால் நானுமில்லை” எனக் கூறும் ஒரு உறவு கிடைப்பது வரம். அத்தகைய வரம் வாய்க்கப்பெற்றும் பாண்டியம்மாள் எனும் நஞ்சுப் பாம்பின் விஷத்தால் பிரிவை நோக்கி இவர்களின் பயணம் தொடங்கியுள்ளதை அவர்களே அறியவில்லை.
நானி தன்னுடைய பதிலை சொல்லியதும், வேகமாக அவன் நெஞ்சின் மீது பாய்ந்து இறுக அணைத்தவள்… “ஐ லவ் யூ மாமா… லவ் யூ டூ மச்” என்ற வார்த்தைகளையே விடாது சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளின் கண்ணீர் சட்டை தாண்டி அவனின் இதயத்தை ஊடுருவ,
“ஹேய்..”
“ம்ம்…”
“அழு மூஞ்சி…”
“ம்ம்ம்…”
“அடியேய் குட்டச்சி…”
“என்ன மாமா…”
“எல்லாரும் நம்மையே பார்க்குறாங்கடி, வீட்டுக்கு போலாமா” என்ற நானியின் கேள்விக்கு சரியென்று தலையசைத்தாளே தவிர அவனை விட்டு இம்மியளவும் நகரவில்லை.
“இப்படியே நின்னுட்டு இருக்க ஆசையாத் தான் இருக்கு, ஆனால் எல்லாருக்கும் ஃபிரீ ஷோ காட்ட வேண்டாம்.”
நானி கூறியதில் சட்டென்று விலகி நின்றவள் “போலாம்” என்க,
“கேட்கல” என்றான்.
அவள் மீண்டும் “போலாம் மாமா” என்று சிணுங்க,
“கேட்கல” என்று மீண்டும் கூறினான். அதில் கடுப்பானவள்,
“டேய் தடியா, போலாம் டா” எனக் கத்தினாள்.
“தடியாவா.. யாருடி தடியன், நான் பாரு ஸ்லிம்மா, ஜிம் போகமலே சிக்ஸ் பேக் வச்ச மாதிரி எவ்ளோ ஹண்ட்ஸம்மா இருக்கேன்” என்று வம்புக்கு இழுத்தவனை பாவமாக பார்த்த சிவா,
“இங்க நின்னு பேசிக்கிட்டேயிருந்தா, கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் வீடு போய் சேருவோம் போலிருக்கே” என புலம்ப… சத்தமாக சிரித்த நானி “வாங்க பொண்டாட்டி போலாம்” என வண்டியை கிளப்பி வீடு வந்து சேர்ந்தான்.
அதன் பிறகு நேரம் றெக்கைக்கட்டி பறந்தது.
நாளை காலை திருமணமென்ற நிலையில் இன்று நானி எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளிவந்தன.
மாநிலத்தில் முதல் இடத்திலும், இந்தியாவில் நான்காம் இடத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தான்.
அழகேசனுக்கு பெருமை தாங்கவில்லை. தன் மகனை கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீரில் திளைத்தார்.
பத்மாவும், அரசியும் சொல்ல முடியா சந்தோஷம் அடைந்தனர். நானிக்கு பிடித்த உணவாக செய்ய வேண்டுமென இருவரும் தங்களின் ஆஸ்த்தான அறைக்குள் புகுந்துக் கொண்டனர். பெண்கள் அதிகபட்சமாக தங்களின் மகிழ்வினை வெளிக்காட்டும் விதம் சமையல் தான்.
நந்துவும் , ரஞ்சியும் வாழ்த்துக் கூறி அவனுக்கு இனிப்பினை ஊட்டி மகிழ்ந்தனர்.
பாண்டியம்மாளும் அனைத்தும் மறந்து தன் பேரனை உச்சி முகர்ந்தார். “நீ நம்ம ஜில்லாவுக்கே கலெக்டரா வந்திருப்பா” என்றார்.
அந்நேரம் நானியின் அருகில் வந்த அழகேசன்… “பாருடா, எம்மருமவ உன் வாழ்க்கையில வர நேரம் நீ எம்புட்டு பெரிய இடத்துக்கு போற…” தன் அன்னைக்கு கேட்க வேண்டுமென்றே கூறினார்.
அதற்கு, தனது முகவாயினை தோள் பட்டையில் இடித்து நொடித்து காண்பித்துவிட்டு பாண்டியம்மாள் அமைதியாக சென்று விட்டார்.
அவரின் அமைதிக்கும் காரணமிருக்கின்றது. அவரின் திட்டம் அப்படி, தானெதாவது சிவாவை சொல்லப்போக… பின்னால் இதுவே தன் மீது சந்தேகிக்க கூடமென அமைதியை பின்பற்றினார்.
தான் சொல்லியதற்கு எதுவும் சொல்லாமல் செல்லும் தன் தாயை ஆச்சரியமாகப் பார்த்த அழகேசன்… அவரும் சிவாவை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டாரென்று தவறாக எண்ணிக்கொண்டார்.
அன்றே அரசாங்கத்திடமிருந்து நானிக்கு ஆர்டரும் வந்து சேர்ந்தது.
“ட்ரெய்னிங் எங்கப்பா, எப்போ போகணும்…” அழகேசனின் கேள்விக்கு சற்று கவலையாக முகத்தை வைத்துக்கொண்ட நானி… “இன்னும் ஒரு வாரத்தில் போகணும் ப்பா” என்றான்.
“ரொம்ப தொலைவா கண்ணு,” அரசி தான் கேட்டிருந்தார்.
“ஆமா அத்தை என்றவன், உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தில் ஒரு வருடம் பயிற்சி பெறுவதற்காக சப் கலெக்டரா போஸ்டிங் போட்டு இருக்காங்க” எனக் கூறினான் சுரத்தே இல்லாமல்.
அவனின் வாடிய தோற்றமும்… உற்சாகமற்ற குரலோசையும் தங்களை பிரிந்து செல்வதில் மனவருத்தம் அடைகின்றானென்று புரிந்து கொண்ட அழகேசன்… “இது உன் கனவு கண்ணா, சந்தோஷமாக போய் வா” என்று கூறினார்.
அவரின் உள் மனமோ… திருமணம் நடைபெற்றாலும் அவர்களுகிடையேயான பிரிவு நிச்சயமென ஜோதிடர் சொல்லியது நினைவு கூர்ந்து… இப்பிரிவினைத் தான் அவர் குறிப்பிட்டார் போலுமென்று நிம்மதி கொண்டார்.
அவரின் நிம்மதி நாளையே பறிபோகப் போகிறதென்பதை நினைத்து பார்த்தது விதி.
அழகேசன் கூறியதில் தெளிவு பெற்றவன்… சிவாவின் மீது அர்த்த பார்வை பதித்தான்.
தன்னவனின் பார்வையின் பொருளுணர்ந்தவள், “திருமணம் செய்துகொண்டு என்னை எப்படி தனித்து விடுவதென்று, நீ என்னை நினைத்து ஃபீல் பண்ணாத மாமா… ஒரு வருடம் தானே, நொடியில் கடந்துவிடும். நானும் படிக்கணுமே மாமா சோ, நீ சந்தோஷமா போயிட்டு வா” என்று தனது வருத்தத்தை மறைத்துக் கொண்டு பேசினாள்.
அவளின் உள்ளுக்குள் மறைந்திருக்கும் சோகத்தை காதலனாக உணர்ந்து கொண்டவன், பெண் அழைப்பெல்லாம் முடிந்து அனைவரும் உறங்கிய பிறகு சிவாவை அழைத்துக்கொண்டு மாடிக்கு வந்திருந்தான்.
தங்களது வீடே பெரியதாக மாளிகை போன்று இருக்கவும், நானி வீட்டிலே திருமணமேடை அமைத்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாமென்று சொல்ல அனைவரும் அதற்கு சம்மதித்திருந்தனர்.
திருமண மேடை அமைப்பதற்கான அலங்கார வேலைகள் மட்டும் நடை பெற்றுக் கொண்டிருந்தன. அதனை மேற்பார்வை செய்து கொண்டிருந்த அழகேசன், இருவரும் ஒளிந்து மாடியேறுவதைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டார்.
மாடிக்கு அழைத்து வந்தவன்… கீழே அமர்ந்து தன் கால்களுக்கிடையே சிவாவையும் அமர்த்தி, அவளின் கை விரல்களோடு தன் விரல்களையும் பிணைத்துக்கொண்டு தன்னவளின் அருகாமையை விழி மூடி அனுபவித்தான்.
நானியின் மனமறிந்தவளும், அவனுக்கு ஏற்றவாறு அவன் மீது சாய்ந்து விழி மூடி அமர்ந்திருந்தாள்.
சில நிமிட அமைதிக்கு பிறகு,
“என்னை விட்டு ஒரு வருடம் இருந்துடுவியா ரனிம்மா”… என்ற நானியின் கேள்வியில் சரேலென்று நிமிர்ந்து தன்னவனின் முகம் நோக்கியவள்… கண்கள் பனிக்க, உதடு துடிக்க முடியாதெனும் விதமாக இட வலமாக தலை ஆட்டினாள்.
“ரனிம்மா…” என்ற விளிப்போடு தன் நெஞ்சில் சிவாவின் முகம் பற்றி அழுத்தியவன், “நானும் எப்படி உன்னைவிட்டு இருக்கப் போறேன்னு தெரியல டி” என்றான். அவனின் குரலில் சோகம் இழையோடியது.
நானியின் வருத்தத்தை காண சகியாதவள் தன்னை தேற்றிக்கொண்டு,
“ச்சூ… இதுக்கா மாமா சோக கீதம் வாசிக்கிற… உன்னை பார்க்கணும் தோணுச்சுன்னா நான் மாமாவை கூட்டிட்டு அங்கு வந்துடுறேன். தினமும் போனில் பேசிக்கலாம்,” என்றுக் கூற.. ஆதூரமாக அவளை பார்த்து ரசித்தவன்,
“ரனிம்மா… முடியலடி, ஒரு கிஸ்” என்றுக் கேட்டிருந்தான்.
அவளுக்கும் அவனின் இதழ் மருந்து தேவைப்பட்டது போலும், நானி அவ்வாறு கேட்டு முடித்ததும்.. தன் இதழை, அவனின் இதழோடு பொருத்திக் கொண்டாள்.
தென்றலின் குளுமையில் சுற்றம் மறந்து, இதழமுதில் மொத்தமாய் தங்களை தொலைத்து… உலகமே மறந்த நிலையில் இதழ் யுத்தம் முடிவின்றி தொடர்ந்து கொண்டே சென்றது. ஒரு வருட பிரிவு என்ற எண்ணமே இப்போது இதழ் முத்தத்தில் அவர்களை பிரிய விடாது இணைந்திருக்க செய்தது.
மூச்சுக்கு ஏங்கி தவித்தபோதும், தங்களின் இணைக்கு சுவாசமாக தாங்களே மாறினவே அன்றி, நூலிழை கூட பிரித்தெடுக்காது சேர்ந்திருந்தனர்.
அவர்களின் காதல் காட்சி சந்திரனுக்கும் வெட்கத்தை ஏற்படுத்தியதோ… மேகக் கூட்டங்களுக்குள் மறைவாக தன்னை புகுத்திக் கொண்டான்.
இந்திரனோ… காதலில் தன்னையும் மிஞ்சிவிடுவான் போலிருக்கே என்று பொறாமை கொண்டு, அவர்களை விலக்க எண்ணி இடியாய் தன் பாணத்தை இறக்க.. சிறு அசைவின்றி தங்களது காதல் உலகத்திலேயே சஞ்சரித்திருந்தனர்.
முற்றுப்பெறாது நீடித்த அவர்களின் உணர்வுக்குவியலை கண்டு அதிசயித்து மேகக் கூட்டங்களை ஒன்று சேர்த்து முடிவுக்கு கொண்டுவர எண்ணி மழையாய் அவர்களின் மீது பொழிய வைத்தான் வருணன்.
சில்லென்ற மழை நீர் மேனியில் விழவே, நிகழ் காலம் மீண்டவர்கள்… நனையாமலிருக்க வீட்டிற்குள் ஓடினர்.
பாதி நனைந்து வந்தவர்களை கண்ட அழகேசன்… “இன்னும் மூன்று மணி நேரம் தான் நானி இருக்கிறது. கொஞ்ச நேரமாவது ஓய்வெடுங்க” எனக் கூறி, சிவாவின் தலையை பரிவுடன் வருடிச் சென்றார்.
பார்வையாலே தங்களுக்குள் விடைபெற்றவர்கள் திருமணம் நடை பெறவிருக்கும் தருணத்தை எதிர் பார்த்து தத்தம் அறைக்குள் நுழைந்தனர்.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அரசி வீட்டு உறுப்பினர்களையும், வந்திருக்கும் விருந்தினரையும் சூடான தேநீருடன் எழுப்பிவிட, வீடே அடுத்த ஐந்து நிமிடங்களில் பரபரப்பானது.
ஐந்து மணிக்கு மேல்.. சிவாவை நந்துவுடன் சேர்ந்து சில உறவுக்கார பெண்களும் அலங்கரிக்க, ஒரு மணி நேரத்திற்கெல்லாம் வானுலக தேவதையென தயாராகிவிட்டாள்.
அப்போது அறைக்குள் வந்த அரசியும், பத்மாவும் சிவாவின் கன்னம் வழித்து முத்தம் பதிக்க…
“நானிக்கும் கொஞ்சம் அவளை மிச்சம் வையுங்கள்” என்ற பெண்களின் வார்த்தையில் அவ்விடமே சிரிப்பில் மூழ்கியது.
ஹோமத்திற்கு முன்பு அமர்ந்து ஐயர் சொல்லும் அனைத்தையும் கர்ம சிரத்தையாக செய்து கொண்டிருந்த நானி,
“பெண்ணை அழைத்து வாங்கோ” என்ற ஒலியில்… தன்னவள் வரும் திசையை திரும்பிப் பார்த்தான்.
வெங்காய சருகு நிறத்தில் பட்டுடுத்தி, அதற்கேற்ப ஆபரணங்கள் பூட்டி, தன் தங்கையின் கரம் பற்றி ஒயிலாக நடந்து வரும் தன்னவளை இமை மூடாது விழியால் பருகினான்.
ஐயர் சொல்லியவற்றை அவனின் கைகள் செய்து கொண்டிருந்தாலும், அவனின் பார்வை தனக்கு அருகில் உரசியவாறு அமர்ந்திருந்தவளின் மீதே பதிந்திருந்தது.
தன்னவனின் பார்வை உள்ளுக்குள் மழைச்சாரலை வீச, சுற்றியிருப்போர் அனைவருக்கும் தெரியாத வகையில் தலை குனிந்து தன் முகச்சிவப்பையும், நாணத்தையும் மறைத்தாள்.
அவளின் கன்னச்சிவப்பு உடலை சூடேற்ற, ‘குட்டச்சி அசத்துறாளே, இவளை விட்டு எப்படி இருக்க போறேன்னு தெரியலையே’ என்று தனக்குள் கூறியபடி இருந்தவனை ஐயரின் குரல் கலைத்தது.
“முதலில் தாலியை கட்டுடா அம்பி.. அதற்கு அப்புறம் உன் ஆம்படையாளை மடியிலே உட்கார வச்சுண்டு நன்னா சைட் அடிக்கலாம்.” ஐயர் சொல்லிய வார்த்தையில் நானியின் முகத்தில் வெட்கம் படர… வந்திருப்போர் அனைவரிடத்திலும் சிரிப்பலை படர்ந்தது.
“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…”
வீடெங்கும், மத்தளம் முழங்க… நாதஸ்வரத்தின் நாதம் ஒலிக்க… ஐயர் மந்திரத்தினை சொல்லிட,
மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட பொன் தலையினை நானியின் முன் நீட்டினார்.
முகத்தில் பூரிப்போடும், மனதில் சந்தோஷத்துடனும் தாலியை வாங்கியவன்.. “என்றும் எப்போதும்… இம்மையிலும் மறுமையிலும்… வாழ்விலும் இறப்பிலும்… உன்னுடன் உனக்குத் துணையாக இருப்பேன்,” என்றுக்கூற.. அவனின் வார்த்தைகளில் தன்னவனை அவள் நிமிர்ந்து பார்க்க, நான்கு விழிகளும் ஒரே கோட்டில் கலந்து நிற்க… தன்னவளின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
பெரியவர்களின் ஆசீர்வாதம், அரிசி கலந்த மலராய் அவர்கள் மீது வீழ்ந்தன.
அழகேசன், பத்மா, அரசி மூவரும் தங்களது பிள்ளைகளின் வாழ்வு சிறக்க வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்க…. நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் வெறிக்கு உரமாக மாற்றிய பாண்டியம்மாள் ‘கல்யாண கோலத்திலேயே உன்னை அனுப்பி வைக்கிறேன்’ என்று சிவாவை பார்த்தவாறு மனதோடு கருவினார்.
தாலி கட்டிய பின்னர் நடக்க வேண்டிய அனைத்து விதமான சடங்குகளும் முடிந்து, விருந்தினர் அனைவரும் வயிறார உண்டு மணமக்களை வாழ்த்திச் செல்ல, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
அழகேசனின் தோட்டத்தில் வேலை செய்யும் வயதான பாட்டி ஒருவர், மணமக்களை ஆசீர்வதித்து… “இன்னும் பத்து மாசத்துல புள்ளைய பெத்து போட்டுடுத்தா” என்க… சிவா தன் முகத்தை நானியின் முதுகுக்கு பின்னால் மறைத்துக்கொண்டாள்.
“இப்போவே புருஷன் முதுகு பின்னாடி புதையுறாளே… கண்டிப்பா உனக்கு பேரன் சீக்கிரமே வந்திடுவான் அரசி” என்று வந்திருந்த பாட்டி சொல்ல, “உம் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் ஆத்தா” என்று பத்மா அவரின் வாயில் இனிப்பை வைத்தார்.
அவர் சென்றதும் மற்றவர்கள் தாம்தம் வேலைகளைக் காண சென்றுவிட, நானியும் சிவாவும் தனித்து அமர்ந்திருந்தனர்.
“இன்னைக்கு நைட்டே, அந்த பாட்டி சொன்னதுக்கு ஏற்பாடு பண்ணிடுவோமா” என்ற நானியின் கேள்விக்கு சிறிதும் நாணமின்றி… “எனக்கு அப்படியே உன்னை மாதிரி ஒரு குட்டி நானி வேணும் மாமா” என்றுக் கூறியிருந்தாள்.
கண்களை அகல விரித்து விரல்களை அசைத்து தன்னவள் சொல்லிய விதத்தில் மெய் மறந்தவன், “அப்போ உத்தரகாண்ட் போகாமா இங்கவே இருந்திடவா” என்க,
“அச்சச்சோ… மாமா அது உன் கனவு… கண்டிப்பா நீ போய் தான் ஆகணும், நீ அங்கிருந்து வரதுக்குள்ள நான் இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணு ஆகிடுவேன்.. சோ, நீ வந்த உடனே குட்டி நானி கொடுத்திடு” என்றுக் கூறியவள் தன் முகத்தை கை கொண்டு மறைக்க, அவளின் கையை விலக்கியவனை காண வெட்கம் தடுக்க அங்கிருந்து எழுந்து ஓடிவிட்டாள்.
அவனின் சந்தோஷ சிரிப்பு அவளை பின் தொடர்ந்தது.
“மாலை வீட்டு சாமிக்கு கல்யாண கோலத்திலே பூஜை பண்ணனும், நீ துணி மாத்திடாத கண்ணு…” என்ற பத்மாவிற்கு சரியென்ற சிவா சிறிது நேரத்திற்கு முன் நானியுடன் பேசிய வார்த்தைகளை நினைத்துப்பார்த்து ரசிக்கத் தொடங்கினாள்.
பூஜை முடியும்வரை சிவாவை நீ பார்க்கக்கூடாதென்று நானியிடம் பத்மா தெரிவித்துவிட, வீட்டில் தனியாக எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பதென்று நினைத்தவன் வயல் பக்கம் சென்று வரலாமென்று புறப்பட்டான்.
மாலை நான்கு மணிக்குமேல்…
“சாமி கும்பிட அம்மா கூப்பிடறாங்க” என்ற நந்துவின் அழைப்பில் சிவா உட்பட வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் பூஜையறையில் கூடினர். நானி மற்றும் அரசி தவிர.
பாண்டியம்மாள் கூட வேண்டா வெறுப்பாக வந்து நின்றிருந்தார்.
“இன்னும் இந்த நானியை காணமே… ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு வயலுக்கு போறேன்னு போனான்.. இன்னும் வரலையே” என பத்மா புலம்ப.. புலம்பலுக்கு காரணமானவனே வருகை தந்தான்.
“எங்க கண்ணு போயிட்ட.. வா வா வந்து இப்படி சிவா பக்கத்துல நில்லு, அழகேசன் சொல்ல…” நானி சிலையென நின்றிருந்தான்.
“என்னடா அப்பா சொல்லிட்டே இருக்காரு, நீ அப்படியே நின்னுட்டு இருக்க, சிவா கூட சேர்ந்து இந்த விளக்கையேற்று” என்ற பத்மாவை உருத்து விழித்தவன்…
“நான் உங்க அனைவரிடமும் ஒன்று சொல்ல வேண்டும்” என்றான், அரசியை பார்த்தவாறு.
நானியின் சிவந்த கண்களும், ஓய்ந்த தோற்றமும் அழகேசனுக்கு ஏதோ விபரீதமாக நடக்கப்போகிறதென்பதை எடுத்துக்கூற.. “இந்நேரத்தில் என்னப்பா சொல்லணும்” எனக் கேட்டிருந்தார்.
வார்த்தைகளை அடைக்கும் தொண்டையை சரி செய்த நானி… சிவாவை தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டே,
“எனக்கு நடந்து முடிந்த இந்த திருமணத்தில் விருப்பமில்லை.”
அரசியை தவிர அனைவரும் அதிர்ந்தனர்.
நந்து தன் அண்ணன் சிவாவிடம் விளையாடுவதாக எண்ணி, “அண்ணா எதில் விளையாடுவது என்று வரையரையில்லை” என்றாள்.
“நான் விளையாடவில்லை.” நானியின் வார்த்தைகளிலிருந்த அழுத்தம் அழகேசனை பதற வைத்தது.
நொடியில் தன்னை மீட்ட அழகேசன் “கல்யாணம் முடிந்த பிறகு விருப்பமில்லை என்றால் எப்படிப்பா” என்க,
“எனக்கு இவளோடு வாழ விருப்பமில்லை.. பிடிக்காத ஒருத்தியோடு என்னால் வாழ முடியாது. நீங்க உங்க விருப்பத்திற்கு செய்தால் அதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா” என்றான் நானி.
“என் விருப்பத்திற்க்கா…” அழகேசன் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.
“நீ சிவாவை காதலித்ததால் தானே…”
“யார் யாரை காதலித்தது. நான் யாரையும் காதலிக்கவில்லை.”
பத்மா தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் நானி பதிலளித்திருந்தான்.
தன்னை உயிர் உருக காதலித்தவன் வாயாலே, காதலிக்கவில்லையென்ற வார்த்தை உயிர் வலியை கொடுக்க.. அப்படியே தரையில் புதைந்துவிட மாட்டோமா என்று எண்ணி நானியை சிவா பார்த்தாள்.
“என்னை நீ காதலிக்கவில்லையா மாமா” என்ற சிவாவின் பார்வையின் பொருணர்ந்த நானி வேறுபக்கம் தன் முகத்தை திருப்பிக்கொண்டான்.
சில நொடி அமைதி நிலவ,
“நான் கட்டிய தாலியை அவளை கழட்டித் தர சொல்லுங்க”… நானியின் இவ்வார்த்தைகளில், சிவா மொத்தமாக மரித்துப் போனாள். நந்துவிற்கே தன் அண்ணனின் பேச்சு ஆத்திரம் மூட்டியது.
நடப்பவற்றை பார்த்திருக்கும் பாண்டியம்மாளின் மனம் குதியாட்டம் போட்டது. தன் திட்டம் தேவையில்லை போலுமென்று மகிழ்ந்தார்.
கோபத்தின் உச்சிக்கு சென்று தன்னை கட்டுப்படுத்திய அழகேசன்…
“என்னடா சொல்ற” என்க,
“சொன்னதையே எத்தனை முறை தான் சொல்வது…” நானி தனது எரிச்சலை அப்பட்டமாக முகத்தில் காண்பித்தான்.
பத்மா தனது மகனின் கைகளை பிடித்துக்கொண்டு கெஞ்சினார்.
“உனக்கு என்னப்பா ஆச்சு, ஏன் இப்படியெல்லாம் பேசுற, எதுவாயிருந்தாலும் சொல்லுப்பா…” அவரின் குரல் அழுகையில் தழுதழுத்தது.
“உன் காலில் வேண்டுமானாலும்…”
“பத்மா…”
தனது மனைவி செய்யப்போகும் செயலை யூகித்தவராய் வீடே அதிர தன் மனைவியை அழைத்து தடுத்தார் அழகேசன்.
“இது தான் உன் பதிலா?”
“இறுதி முடிவு.”
தன்னுடைய தந்தையின் கேள்விக்கு, எவ்வித தடையுமின்றி அழுத்தமாக விடையளித்தான்.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்த தனது மகனை உருத்து விழித்த அழகேசன்… “எனக்கு மகன் என்று ஒருவன் பிறக்கவேயில்லையென நினைத்துக் கொள்கிறேன்… இனி என் மருமகளையும் சேர்த்து எனக்கு இரண்டு மகள்கள் மட்டுமே” எனக் கூறி.. அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை தன் தலையில் கவிழ்த்து… “இன்றோடு என் மகன் செத்துப்போயிட்டான்” எனக் கூறி ஈரம் சொட்ட சொட்ட தன்னுடைய அறைக்குள் நுழைந்து படாரென்ற சத்தத்துடன் கதவினை அறைந்து சாற்றினார்.
சேலை தலைப்பை வாயில் வைத்து அழுகையை அடக்கியவராய் தரையில் மடங்கி அமர்ந்தார் பத்மா.
அவரின் மனம் குமுறிக்கொண்டிருந்தது. சற்று நேரம் வரை எப்படியிருந்த வீடென… ஒருமுறை தனது பார்வையை சுழற்றியவரின் மனம் கணத்துப்போனது.
வீடெங்கும் தொங்கிய வண்ண மலர்களின் தோரணம்… வாசலில் கட்டியிருந்த குலை வாழை மரங்கள்… அவ்வீட்டில் மிகச் சிறப்பாக, அனைவரும் வியந்து பார்த்த ஒரு திருமணம் நடைபெற்றது என்பதை பறைசாற்றியது. சுழன்ற அவரின் பார்வை ஓரிடத்தில் நிலை குத்தி நின்றது.
அங்கு பட்டுச்சேலை சரசரக்க… தலையில் சூடிய மலரின் நறுமணம் கூட மாறாது.. கழுத்தில் புத்தம் புதிய தாலி மின்ன… கெண்டை விழிகள் கண்ணீரில் மிதக்க தலை கவிழ்ந்து நின்றிருந்தாள் சிவரஞ்சனி.
அவளுக்கு அருகே தனது அண்ணனை கோப முகத்துடன் பார்த்தபடி சிவாவின் கைகளை இறுக்கி பிடித்திருந்தாள் நந்தினி.
நானி மற்றும் சிவா இருக்கும் கோலம் பார்க்கும் யாவருக்கும் இன்று தான் அவர்களுக்கு திருமணம் நடந்திருக்கும் என்பதை சொல்லாமலே உணர்த்தும்.
அழகேசன் உள் சென்றதும், நானி அமைதியாக நின்றிருந்த சில வினாடிகள், சில மணி நேரத்திற்கு முன்பு தன் மனைவியாக ஏற்றுக்கொண்டவளின் அருகில் சென்று, தனது வலிய கரத்தினை மெல்ல உயர்த்தி.. அவளின் கழுத்தருகே கொண்டு சென்றவன்.. யாரும் எதிர்பாராத வண்ணம், அவள் கழுத்தினை அலங்கரித்திருந்த புத்தம் புது பொன் தாலியை அறுத்திருந்தான்.
அதிர்ச்சியில் நந்தினியின் கண்களே அகல விரிந்தன என்றால், சில மணி நேரங்களே ஆயினும், அத்தாலியை உயிராய் மதித்த சிவாவோ மயங்கி சரிந்தாள்.
கட்டிய கணவனின் கைகளால் மாங்கல்யம் பறிபோகும் அவலம் அங்கு நிகழ்ந்தது.
மகளின் நிலையை எண்ணி சிறிதும் கலக்கமடையாமல் கல்லென இறுகி நின்றார் அமுதரசி.
பாண்டியம்மாளுக்கு இந்நிகழ்வே போதுமாயிருக்க, “இனி இவள் தன் பேரன் வாழ்வில் நுழையவே முடியாதென்று மகிழ்ந்து… தான் தீட்டிய திட்டம் நடப்பதற்கு முன்பே தன் எண்ணம் பலித்துவிட்டதே, இவளுக்கு ஆயசு கெட்டி தான்” என்று சிவாவை பார்த்து தனக்குத்தானே சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
தனது மகனின் செயலில் ஈரக்குலை நடுங்க வெடித்து அழுதார் பத்மா.
மயங்கி சரிந்தவளை தட்டி எழுப்ப முயற்சி செய்துகொண்டிருந்த தனது தங்கை நந்தினியிடம்… “அவள் எழுந்தா சொல்லிடு, அவளுக்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லை…” என்று நெஞ்சில் ஈரமின்றி வார்த்தைகளை உதிர்த்தவன் அங்கிருந்து அகன்றான்.
செல்லும் அவனின் காதுகளில்…
“எனக்கு உன்னைப்போல் ஒரு குட்டி நானி வேண்டும் மாமா”… அவள் சொல்லிய வார்த்தைகள், அவளின் குரலிலேயே எதிரொலித்தது. தன் கண்களில் துளிர்த்த நீரை யாருக்கும் தெரியாது உள்ளிழுத்துக்கொண்டான்.