அத்தியாயம் 16 :
இரவு 8.45
மதுரை ஜன்க்ஷன்
பாண்டியன் SF எஸ்பிரஸ்.
ரயிலின் ஜன்னலோரத்தில் கண் மூடி அமர்ந்திருந்த நானியின் முகம் சொல்ல முடியாத வேதனையில் மூழ்கியிருந்தது. வாழ்வில் சந்தோஷம் என்பதை மட்டுமே அனுபவித்தவன், அவற்றிற்கு ஈடு செய்திடும் அளவுக்கான ஒட்டுமொத்த துக்கத்தையும் இன்று ஒரு நாளிலேயே அனுபவித்துவிட்டான்.
அழுது பார்த்திடாத அவனின் கண்கள் கண்ணீரின் சுவையறிந்து, துடைக்கும் கரமின்றி தவித்தது.
மாலை நடந்த சம்பவம் என்றும் ஆறிடாத ரணமாய் அவனுள் வீற்றிருக்கும்.
தனது வலது உள்ளங்கையினை முகத்திற்கு நேரே உயர்த்தி பார்த்தவனின் கண்முன்னே இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தன்னவளின் கழுத்தில் ஆசை ஆசையாய் தான் கட்டிய தாலியை பறித்த கொடுமையை நினைத்து, “நீ அவ்வளவு கல் மனம் கொண்டவனா?” என்று தன்னைத் தானே கேள்விக் கேட்டுக்கொண்டான்.
அவள் அளித்த முத்த சுவை இன்னும் நெஞ்சில் மிச்சமிருப்பதை உணர்ந்தவனின் மூடிய விழிகளுக்குள் மயங்கி சரிந்த சிவாவின் முகமே தோன்றியது.
“நீ என்னை காதலிக்கலையா மாமா?” இறுதியாக சிவா பார்த்த பார்வையின் பொருள் மீண்டும் மீண்டும் ஆழ்மனதில் எதிரொலித்தது.
தாலியை சிறு தயக்கமுமின்றி அறுத்திட்டவன்… விடுவிடுவென தனது அறைக்குள் நுழைந்து, கண்ணில் பட்ட தனது உடைமைகளையெல்லாம் வாரி சுருட்டி பெட்டியில் அடைத்து ஒரு வாரம் முன்னமே டேராடூன் செல்ல கிளம்பிவிட்டான்.
எதிலிருந்தோ தப்பித்து ஓடும் எண்ணம் அவனிற்குள்.
கண்ணீரோடு தன் உயிரானவள் வலம் வருவதை காண முடியாது ஓடுகிறான்.
தன்னுடைய பெற்றோரின் அறை, மூடிய கதவுக்கு முன் நின்றவன்… கண்களை அழுந்த மூடி திறந்து, “நான் போறேன் ம்மா, போறேன் ப்பா” எனக் கூறி தனது அத்தை அரசியிடம் வந்தவன்… என்ன பேசுவதென்று தெரியாது திணறி நிற்க, “பார்த்து ஜாக்கிரதையா போய் வா கண்ணு… சூதானமா நடந்துக்கோ கண்ணு” என்றவர் தன்னிடமிருந்த பதினேழாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து “உன் செலவுக்கு வச்சிக்கோ கண்ணு, இப்போதைக்கு என்னிடம் இவ்வளவு தானிருக்கு… இதுவே உன் அப்பாரு என் கை செலவுக்குன்னு அப்பப்போ கொடுத்துல மிச்சம் பிடிச்சது… அங்க போய் உனக்கு ஏதாவது தேவைன்னா போன் பண்ணி சொல்லு கண்ணு, நான் அனுப்பி வைக்கிறேன்” என்றவரிடம் “உனக்கு அழனும் தோணுச்சுன்னா அழுதிடு அத்தை” என்றான்.
“நானும் அழுதுகிட்டு நின்னா… இங்க இருக்கவங்கள யாரு கண்ணு தேத்துறது” எனக் கூறிய அரசி தன்னுடைய மொத்த சோகத்தையும் கண்களுக்குள் ஒளித்துக்கொண்டார்.
“உனக்கு எம்மேல் கோபமில்லையா அத்தை…”
“காரணம் தெரிஞ்ச எனக்கு நீ சாமியாத்தான்யா தெரியுற, நீ சிவா மேல எந்தளவுக்கு உயிரா இருந்திருந்தால் இப்படியொரு காரியம் செஞ்சிருப்ப… அவளை நான் பார்த்துகிறேன் கண்ணு நீ நிம்மதியா போயிட்டு வா, உன் கனவை நினைவாக்கிட்டு வந்து இங்கிருக்கும் நிலையை சரி பண்ணு” என்று ஆறுதலாய் பேசியவரை அணைத்து விடுவித்தவன் தன்னவளின் முகத்தைக் காண வீட்டை சுற்றி பார்வையால் வட்டமிட.. சிவாவின் உள்ளுணர்வு உன் உயிர் பிரிகிறதென்று உணர்த்தியதோ அறையிலிருந்து வெளிவந்து எட்டிப்பார்த்தாள்.
அழுததால் கண்கள் சிவந்து முகம் வீங்கி தலை கலைந்து காணப்பட்ட நலுங்கியத் தோற்றத்திலும் நானிக்கு அப்சரசாகவே காட்சியளித்தாள்.
கண்கள் வழியாக மனம் முழுக்க தன்னவளை நிரப்பிக்கொண்டவன், அரசியிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்று வாசல் தாண்டியவனை,
“சாரிண்ணா…” என்கிற நந்துவின் குரல் தடுத்து நிறுத்தியது.
“நானும் உன்னைத் தவறா நினைத்துவிட்டேன். நீயும் அத்தையும் பேசிக்கொண்டதை கேட்டேன், உன் மேல் அதிக கோபம் கொள்ள வேண்டிய அத்தையே உனக்கு ஆறுதல் வழங்குறார் என்றால்.. உன் செயலுக்கு பின்னால் வலுவான காரணம் உள்ளதென்று எனக்கு புரிகிறது. நீ தைரியமா போயிட்டு வாண்ணா… ரஞ்சியை நான் பார்த்துகிறேன்” எனக் கூறி வழியனுப்பினாள்.
தன் தங்கையின் புரிதல் உணர்வில் அகம் மகிழ்ந்தவன், சிறு நிம்மதியுடன் வீட்டை விட்டு வெளியேறினான்.
ஒரு மணி நேரத்தில் மதுரைக்கு வந்தவன்… ரயில் நிலையத்திற்கு சென்று, இரவு 8.45ற்கு சென்னை நோக்கி புறப்படத் தயாராக இருக்கும் ரயிலின் பயணச்சீட்டு பெற்று சன்னலோரமாக இருந்த தனது இருக்கையில் வந்தமர்ந்தான்.
சென்னையிலிருந்து டேராடூனிற்கு விமானம் மார்க்கமாக செல்ல திட்டமிட்டே இப்போது ரயில் பயணத்தை தேர்வு செய்திருந்தான்.
தடதடக்கும் ரயிலின் ஓசைக்கேற்ப அவனின் இதயமும் தடதடத்தது.
ரயில் புறப்பட்ட நொடியில் மூடியிருந்த நானியின் கண்களுக்குள் ஐந்து மணிநேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் காட்சிகளாயின.
தனியாக வீட்டில் என்ன செய்வதென்று யோசித்த நானி.. வயலுக்கு சென்று வருவதாகக் கூற,
“புது மாப்பிள்ளை இப்படி கல்யாணம் ஆன அன்றேவா ஊர் சுத்த கிளம்புவாங்க.. அதெல்லாம் எங்கும் போக வேண்டாம்” என்று பத்மா தடுத்தார்.
“சரி அப்போ நான் என் பொண்டாட்டிகிட்ட போய் பேசிட்டு இருக்கேன்” என்று மாடிப்பக்கம் நகர்ந்தவனை கைபிடித்து நிறுத்திய பத்மா “சாமி கும்பிடும் வரை நீ அவள் பக்கமே திரும்பக் கூடாது. நீ வயலுக்கே போயிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.
பட்டுவேட்டியை முட்டி வரை மடித்துக் கட்டி வரப்பு மீது நடந்துகொண்டிருந்தவன், தூரத்தில் தெரிந்த மலை முகட்டினையும், செந்நெல் சாயும் கதிரினையும், வயல்வெளிகளுக்கு அருகில் ஓடும் ஆற்றையும் ரசித்தபடி தங்களது தோப்பு வீட்டு பக்கம் வந்திருந்தான்.
அங்கிருந்த தென்னை மரத்தில் காய்த்து தொங்கிக்கொண்டிருந்த இளநீரை பார்த்தவனுக்கு தாகமெடுக்க, தானே மரம் ஏற முடிவு செய்து சரசரவென்று ஏறி உச்சியில் அமர்ந்துவிட்டான்.
கைகளினாலே இளநீரின் காம்பினை திருக்கியவனுக்கு கீழே பேச்சுக்குரல் கேட்க, யாரென்று குனிந்து பார்த்தவன்.. தனது அப்பத்தாவும் அவரின் சேவகன் மாயாண்டியென்றதும் தனது கவனத்தை மீண்டும் இளநீரில் பதித்தான்.
“ஏலே மாயாண்டி நான் சொன்னது நடந்திடுமாலே…”
“அதெல்லாம் கச்சிதமா முடிஞ்சிடுங்க… அந்த சிவா புள்ள சாவு என் கையாள தானுங்க… அந்த புள்ள அப்பனை கொன்ன மாதிரியே யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் வராமல் நான் முடிச்சிடுறேங்க.”
பாண்டியம்மாள் மற்றும் மாயாண்டியின் வார்த்தைகளில் நானி அப்படியே ஸ்தம்பித்து விட்டான்.
‘தன் மாமாவை கொலை செய்தது தனது அப்பத்தாவா…’ நானியால் அதனை நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை. அவன் கண் முன்னால் சிவாவின் தந்தை இறந்தன்று பாண்டியம்மாள் அழுத காட்சி நானியின் கண் முன் தோன்றி அவரா, மாமாவை கொன்றிருப்பார் என நம்ப மறுத்தான்.
அவர் வாயாலே கேட்டப் பிறகும் அவனின் மனம் ஏற்க மறுத்தது.
“இங்க பாரு மாயாண்டி, ராவு.. அந்த கழுதை எம் பேரன் ரூமுக்கு பால் செம்பு கொண்டு போறதுக்குள்ள அவ கதை முடிஞ்சிடனும். என் வீட்டு வாரிசு எனக்கு புடிச்சவ வயித்துல தான் வளரனும். எம் மவன் இந்தக் கல்யாணத்தை பற்றி பேசும்போது எம் பேரன் மட்டும் இந்த கல்யாணத்துக்கு விருப்பமில்லைன்னு சொல்லிருந்தான்னா… நான் இப்படி அவளை கொல்லுற அளவுக்கு வந்திருக்க மாட்டேன். அவள் ஆத்தாக்காரி பொறந்த மூணு மாசத்துல என் தாலியை அறுத்தாள்.”
(அரசி பிறந்த மூன்று மாதத்தில் வயலுக்கு சென்ற பாண்டியம்மாளின் கணவர், வரப்பு வழுக்கி அருகிலிருந்த கிணற்றில் விழுந்துவிட… விழுந்த வேகத்தில் கிணற்றிற்குள் வைக்கப்பட்டிருந்த என்ஜினில் தலை பலமாக இடித்து அங்கேயே உயிரிழந்தார்.)
“அது போதாதுன்னு… படிக்க போன இடத்துல எவனையோ அனாதை கழுதையை காதல்ன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடுனா. எனக்கு பிடிக்காத மகளாவே அவள் இருந்தாலும், எவனோ ஒரு அனாதை நாயோட வாரிசு என் குடும்ப வாரிசு வயித்துல வளர்ந்துட கூடாதுன்னு, அந்த ஓடுகாளியையும் அவளை கூட்டிட்டு ஓடுனவனையும் தேடாத இடமில்லை… பொறவு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் மதுரையில இருக்காங்கன்னு சேதி கிடைச்சு போய் பார்த்தால், குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சிட்டு ஓடி வந்தோமேன்னு கொஞ்சம் கூட குறுகுறுப்பு இல்லாமல் அவன் கூட இவள் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்காள். என் தாலியை அறுத்தவள் எப்படி கட்டுக்கழுத்தா வாழலாம்ங்கிற எண்ணம், அந்த அனாதையோட வாரிசு என் வயித்துல பொறந்தவளோட வயித்துல வந்துட கூடாதுங்கிற வெறி… அதேன் உன்னை வச்சு மாடு முட்டி இறந்த மாதிரி அந்த அனாதை நாயைக் கொன்னேன். அதோடு அந்த அரசியோட கதையும் முடிஞ்சிடும்ன்னு பார்த்தா தங்கை பாசத்துல எம் மவன் வீட்டோட கொண்டு வந்து வச்சிக்கிட்டான். இங்க அவள் வந்த பத்து நாளைக்கு அப்புறம் தான் தெரியுது அவள் வயித்துல ஏற்கனவே சனியன் வளர்ந்துட்டு இருக்குன்னு. கருவிலே அதை அழிக்க நான் நினைச்சா, ஒவ்வொருவாட்டியும் எம் மருமவளோ, மகனோ தெரியாமல் ஏதோ ஒரு விதத்தில் காப்பாத்தி விட்டுட்டாவுக.. கடைசி முயற்சியா என்ற கையாலே கரு கலைக்கின்ற மருந்தை அவள்கிட்ட கொடுத்தால்… அதை அவளா எப்படியோ கண்டுபிடிச்சுட்டாள். சரி சனியன் பொறந்து தொலைக்குதுன்னு விட்டால், இப்போ அது வளர்ந்து பத்தொன்பது வருஷத்துக்கு முன்னால் நான் எதை நினைச்சு இவ்வளவும் செஞ்சேனோ அதை இன்னைக்கு இவள் வந்து நிறைவேற்றிடுவாள் போலிருக்கு… என் குடும்ப வாரிசு அந்த ஓடுகாளி பெத்தது வயித்துல வளர கூடாது… அதுக்கு அவள் இன்னைக்கு செத்து போயிடனும். இந்த நானியும் அவள் மேல ஆசைப்பட்டிருப்பான் போல, அதான் நான் சொல்லியும் கேட்காமல் அந்த சனியன் கழுத்துல தாலியை கட்டிப்புட்டான். அந்த தாலி அவள் கழுத்துல இருக்கிற வரைக்கும் என் வெறி அடங்காது. அவள் உயிரோட இருக்கணும்ன்னா எம் பேரன் அவளை ஒதுகிட்டு வாழணும்.. இல்லை அவள் சாகனும். எம் பேரன் அவள் கிட்ட மயங்கி கிடக்கிற லட்சணத்துக்கு அவளை தள்ளிலாம் வைக்க மாட்டான். அதனால அந்த சிவா சனியன் செத்து தான் போகணும்.”
இவ்வளவு நாள் தன் மனதிலிருக்கும் நஞ்சையெல்லாம் பாண்டியம்மாள் என்கிற பாம்பு வெளியே கக்கிக்கொண்டிருக்க, மரத்தின் மேலிருந்த நானியும்.. நானியைத் தேடி வந்த அரசியும் அதனைக் கேட்டு தங்களது உலகமே தலைகீழாக சுற்றும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது துடி துடித்தனர்.
“சரிடே மாயாண்டி… காரியத்தை கட்சிதமா முடிச்சிட்டு நாளைக்கு இந்நேரம் இங்க வந்து என்னை பாரு” என்ற பாண்டியம்மாள்.. “யாரு கட்டுன தாலி யாரு கழுத்துல தொங்குறது” முணுமுணுத்தவராய் அங்கிருந்து சென்றார்.
மரத்தின் மீது உயரத்திலிருந்ததால் அரசி தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்ட நானி… நஞ்சு பாம்புகள் நகர்ந்ததும், அவர் என்ன நிலையிலிருக்கின்றாரோ என பதறி துடித்து… பதட்டத்தில் தட்டுத்தடுமாறி கீழிறங்கி வந்தான்.
தனது மகளை கொலை செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பவரே, தன்னுடைய கணவனின் சாவுக்கும் காரணமென்று தெரிந்த பின்னர் அரசி உயிரோடு மரித்துவிட்டார்.
அன்னை என்ற வார்த்தைக்கே தகுதியில்லா ஒருத்தரா தனக்கு அன்னையாகிப்போனாரென்று உதிரம் வடிய நின்றிருந்தவரின் தோள் தொட்ட நானி, அத்தையென அவரின் மடி சாய்ந்து கதறினான்.
தனக்கும் சாய்ந்தழ தோள் கிடைத்த நிம்மதியில்… மருமகனை மகனாய் நினைத்த பாசத்தால் நானியின் மீதே சாய்ந்து அழுதார் அரசி.
இருவரும் ஆற்றுவார் தேற்றுவாரின்றி அத்தோப்பிற்கு நடுவே தரையில் அமர்ந்து கண்ணீர் வற்றும்வரை கதறி தீர்த்தனர்.
பாண்டியம்மாளின் வாயாலே கேட்ட பிறகு… அவரின் சுயமறிந்து நானிக்கு அப்பத்தாயென்றும் பாராமல் கிழவியை கொன்று புதைக்கும் வெறி எழுந்தது.
தனது மடி சாய்ந்திருந்தவன் திடீரென ஆவேசமாக எழுந்ததும்.. அவனின் எண்ணமறிந்த அரசி நானியை தடுத்து நிறுத்தினார்.
“தன்னுடைய வஞ்சத்திற்காக பெற்ற பிள்ளை தாலி இழந்தாலும் பரவாயில்லையென நினைத்து, மகளையே மூலையில் நிற்க வைத்தவருக்கு பேரன் என்கிற நினைப்புக் கூட அவரை நீ எதிர்காத வரை மட்டுமே நானி. முதலில் செய்த பாவத்தின் பலனை அனுபவித்திடாது, செய்த குற்றத்திற்கு கடுகளவு கூட வருந்தாது.. திரும்பவும் பாவம் செய்ய முயற்சி செய்பவர் உன்னை மட்டும் விட்டு வைத்துவிடுவாரா நானி. அவரை கொன்று புதைத்துவிட்டு, உன் கனவு ஆசையெல்லாம் இழந்து ஜெயிலில் போய் அமர்ந்திருக்க போறாயா?”
தனது அத்தையின் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான உண்மை என்பது அவனுக்கும் தெரியும். ஆனால் உள்ளுக்குள் எரியும் நெருப்பினை எப்படி அணைத்திட வேண்டுமென்ற வழி தான் அவனுக்குத் தெரியவில்லை.
“இப்போ நான் என்ன செய்யட்டும் அத்தை.”
தரையில் மண்டியிட்டு அவர் முன்பு அமர்ந்தவன் கேட்ட கேள்விக்கு நொடியும் தாமதிக்காது “நீ என் மகளை விட்டு விலகிடு நானி” என்றார்.
இதுவரை துடுத்துடித்துக் கொண்டிருந்த அவனின் உயிர் தன் அத்தையின் வார்த்தையால் கூடு விட்டு பறந்தே சென்றது.
சிலையென நின்றவனின் கன்னம் தாங்கியவர்… “நீ சிவாவுடன் நூறு வருஷம் சந்தோஷமா நிம்மதியா வாழனும்ன்னா இப்போ இந்த முடிவை எடுத்து தான் ஆக வேண்டும் நானி. நீ உன் அப்பத்தாவின் மனதை முடிந்தால் மாற்று… இல்லை, அவர் செய்த தப்புகளுக்கு தண்டனை வழங்கிடு.. அன்று உரிமையோடு என் மகளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்” என்க, நானிக்கும் அதுவே சரியெனப் பட்டது.
“சரி அத்தை… எப்படியும் இன்னும் ஒரு வருடத்திற்கு என்னால் இங்கு இருக்க முடியாது… இன்று அவர்கள் செய்யும் முயற்சியை நான் தடை செய்தாலும், இந்த ஒருவருடம் சிவாவை அவர்களிடமிருந்து காப்பாற்றுவதென்பது கஷ்டம்.. அதனால் எனக்கும் நீங்க சொல்லுவதே சரியெனப்படுது.”
வெளியில் அவனின் வாய் தன்னவளை நினைத்து , நடக்கும் ஆபத்துகளிலிருந்து அவளை காக்க தைரியமாக பேசினாலும்.. உள்ளுக்குள் மரித்துப்போனவன் மீண்டும் மீண்டும் செத்துக்கொண்டிருந்தான்.
“நீயே அவள் கழுத்திலிருக்கும்தாலியை கழற்றிடு நானி…”
“அத்தை…”
அரசி கூறியதில்… இதுவரை அடைந்திடாத அதிர்ச்சியை அடைந்தான். தலைக்குள் இடியை இறக்கியதைப்போல் உணர்ந்தான்.
“இறுதியா என்ன சொல்லி முணுமுணுத்தாரென்று கேட்டதானே!”
அதற்கு ஆமென்று தலையாட்டியவன்.. “யாரு கட்டுன தாலி யாரு கழுத்துல தொங்குறது” என்றான்.
“அதுமட்டுமில்லை, அவள் கழுத்துல அந்த தாலி தொங்குற வரை என் வெறி அடங்காது… இதையும் கேட்டிருப்ப!” என்ற அரசி, “சிவா கழுத்தில் நீ கட்டின தாலியிருக்கும் வரை, என்றைக்கா இருந்தாலும் அவள் உனக்கு சொந்தமானவள் என்கிற நினைப்பு அவருக்கு இருந்து கொண்டேயிருக்கும், அதனால் சிவாவை கொன்று விட வேண்டுமென்றே நினைப்பார். சாதாரணமா எனக்கு சிவாவை பிடிக்கவில்லை, என்னால் அவளுடன் சேர்ந்து வாழ முடியாதெனக் கூறினால் அவர் நம்பமாட்டார். நீ மொத்தமா சிவாவை விட்டு விலகிவிட்டாயென்று பாண்டியம்மாள் நம்ப வேண்டும், அதற்கு நீ இதை செய்தே ஆக வேண்டும்” என அழுத்தமாகக் கூறினார்.
தானொரு ஆண்மகன் என்பதையும் மறந்து கண்களில் கண்ணீர் இறங்க, தன் அத்தையையே பார்த்திருந்தவன்… “எனக்கு என் ரனிம்மா உயிருடன் என் முன்னால் வலம் வந்தாலே போதும்.”
தானெடுத்த முடிவிற்காக ஒரு மூச்சு அழுது தீர்த்து தன் அத்தையையும் கூட்டிக்கொண்டு வீடு வந்தான்.
பாண்டியம்மாளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தானிருப்பதை நினைத்து அந்த கணம் தன்னையே வெறுத்தான்.
தன்னவளின் உயிருக்காக தன் காதலையே இழந்தான்.
காதலை துறந்து சென்னை வழியாக விமானம் பிடித்து டேராடூன் வந்தவன்.. தனது பயிற்சி காலத்தை தன்னவளின் நினைவில் நரகமாகக் கழித்தான். பயிற்சி முடிந்து போஸ்டிங்கை தனது மாவட்டத்திலேயே வாங்கியவன் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து தனது சொந்த ஊருக்கு வந்தான்.
வந்தவனை பார்த்து அழகேசனும் பத்மாவும் வாவென்று கூட சொல்லவில்லை. அவர்களுக்கு மாறாக, “என் பேரன் நம்ம ஜில்லாவுக்கே கலெக்டராகி வந்திருக்கான்” என்று அந்நாளையே திருவிழாவாக்கி கொண்டாடி தீர்த்தார் பாண்டியம்மாள். ஆனால், நானி அவரின் முகம் கூட காண விருப்பப்படாது நந்து மற்றும் அரசியிடம் மட்டும் நலம் விசாரித்து தனது அறைக்குள் புகுந்துக்கொண்டான்.
நானி வீட்டை விட்டு சென்ற பிறகு… இரண்டு நாட்கள் சிவாவை தனிமையில் விட்ட நந்து.. அவளை இப்படியே விட்டால் பைத்தியமாகிவிடுவாளென மூன்றாம் நாள் மிரட்டி உருட்டி கல்லூரிக்கு அழைத்து செல்ல ஆரம்பித்தாள்.
திருமணம் நடந்தது கல்லூரியில் யாருக்கும் தெரியாததால்… நடந்து முடிந்ததை யாரிடமும் சொல்லிவிடாதேயென நந்து வலியுறுத்தியதால் சிவாவும் தனது நெருங்கிய தோழிகளிடம் கூட சொல்லாது விட்டாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னவளை பார்த்திட அலையும் விழியையும், பேசிடத் துடிக்கும் நாவையும் அடக்குவது நானிக்கு பெரும்பாடாகிப் போனது. சிவாவின் மீதான தனது ஆர்வம் பாண்டியம்மாளின் கண்களுக்குள் மாட்டிக்கொண்டால், எங்கே மீண்டும் சிவாவின் உயிர்க்கு ஆபத்து வந்துவிடுமோவென அஞ்சியே இங்கு வந்த மூன்று மாத காலங்களுக்கு மேலாகவும் அவளிடம் கோபம் கொண்டு விலகியிருப்பதைப்போல் நடித்து, தானும் வருந்தி தன்னவளையும் வருத்திக் கொண்டிருக்கின்றான்.
அனைத்தையும் கபிலனிடம் கூறி முடித்த நானி கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு அவனை பார்க்க… நானி கூறிய கடந்த காலத்தின் கணம் தாங்காது நானியை தாவி அணைத்துக் கொண்டான் கபிலன்.
“இவ்வளவு காதல் சிவாவின் மீது வைத்துக்கொண்டு எப்படிடா உன்னால் அவளை விலகியிருக்க முடிகிறது.”
தனது கேள்விக்கு “எல்லாம் என் விதி” என்ற நானியை பார்த்து…
“விதியல்ல நானி பாண்டியம்மாள்” என்றான் கபிலன். அவனின் குரலில் பாண்டியம்மாளை நினைத்து அத்தனை கோபம் வெளிப்பட்டது.
“நீ சிவாவை பிரிந்ததற்கான காரணத்தை மாமாவிடம் சொல்லியிருக்கலாமே?”
“அப்பா அவர் அம்மா மீது அதிகம் பாசம் கொண்டவர், அவர் சொல்லை மீறி இன்றளவும் எதுவும் செய்ய மாட்டார்… அவரையும் வீணாக தன் தாயை நினைத்து மன வருத்தமடைய செய்ய வேண்டாமென்று தான் நாங்கள் இருவர் மட்டும் வேதனையை சுமந்துகொண்டிருக்கின்றோம்” என்றான் நானி.
“உன்னால் அவரை எதிர்க்க முடியாதா நானி?” (அடேய் கபிலா அவனே சோகத்துல இருக்கான்… நீவேற எத்தனை கேள்வி கேக்குற)
“இனி அவர் சிவாவை கொன்றுவிடுவாரோ என்கிற பயம் எனக்கில்லை கபிலா… என்னவளை எப்படி காக்க வேண்டுமென்று எனக்குத் தெரியும், இனியும் நான் அமைதி காத்தால் பாண்டியம்மாள் என் வாழ்க்கையை விளையாடி முடித்திடுவார். அதில் சிவாவின் வாழ்க்கையும் அடிபட்டுப்போகும்.
இன்றே அவர் எடுத்திருக்கும் முடிவான.. எனக்கும் மீனாவிற்குமான திருமணத்திற்கு நான் முடிவு கட்டுறேன்” என்றவன் தனக்குள்ளொரு முடிவெடுத்தவனாய் கபிலனை அழைத்துக்கொண்டு வீடு நோக்கி சென்றான்.