அத்தியாயம் 17 :
“என்னை மறந்தேன்… என்னை மறந்தேன்… அடி சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்…. நீதான்….. நீதான்…. நீதாண்டி எனக்குள்ள…”
கபிலன் சீரான வேகத்தில் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க, நானி தன்னவளை நினைத்து எப்போதும் முணுமுணுக்கும் பாடல் வரிகளை அசைபோட்டான்.
“என்ன மச்சான் சிவா நினைப்பா… பாட்டெல்லாம் பலமா இருக்கு.”
கபிலனின் கேலியில் அசடு வழிந்த நானி… “உன் கிட்ட எல்லாத்தையும் சொன்னதாலோ என்னவோ.. மனசுல இருந்த பாரமெல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்குடா” எனக்கூறி அவனின் தோளில் இருபுறமும் கரம் பதித்தவன் “என்னை கிண்டல் செய்யாம, வண்டியை வேகமாக செலுத்து” என்றான்.
“கலெக்டர் சாருக்கு மனைவியை சீக்கிரம் பார்க்கணுமோ…” கபிலன் மீண்டும் கேலி செய்தான்.
“நானெடுத்திருக்கும் முடிவு எந்தளவிற்கு சரி வரும் தெரியல கபிலா… கொஞ்சம் பொறுமையாதான் காய் நகர்த்த வேண்டும். ஆனால், என் மறுமணத்தை பற்றிய அப்பத்தாவின் எண்ணத்தை முதலில் முறியடிக்க வேண்டும் என்றான்” நானிலன்.
இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்ததும் கபிலனின் கண்கள் நந்துவை தேட… அவனின் எண்ணத்து நாயகியே அவன் முன் தோன்றினாள்.
என்றுமில்லா அதிசயமாக தன்னிடம் பேச வந்திருப்பவளை ஆச்சரியமாக கபிலன் பார்த்திருக்க… “உங்களுக்கு உங்க வீட்டு ஆளுங்களுக்கு வேண்டுமானால் அந்த மியாவ் முக்கியமா இருக்கலாம்.. ஆனால், எங்களுக்கு அவள் எங்க வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி அவ்வளவுதான்.. என்னா பேச்சு பேசுறாள்.. இன்னொரு பொண்ணோட புருஷன் தெரிஞ்ச பிறகும் எப்படி அவனை கல்யாணம் பண்ணிக்கணும் தோணுது அவளுக்கு? இன்னொருவாட்டி ரஞ்சிகிட்ட அவள் வேலையை காட்டணும் நினைச்சா அவ்வளவுதான்.. உன் தொங்கச்சிகிட்ட சொல்லி வை. எப்பவும் அவள் எங்க வீட்டு விருந்தாளி மட்டும் தான். விருந்தாளிங்கிற ஞாபகம் உனக்கும் நினைவில் இருக்கட்டும்.”
படபடவென பட்டாசாய் வெடித்தவள் இறுதியில் கபிலனுக்கும் ஒரு கொட்டு வைத்தாள்.
“நான் கூடிய விரைவில் விருந்தாளி என்பதை மாற்றி உனக்கு கணவனாகுறேன். அப்போ வந்து சொல்லுடி என் செல்லமே” என்ற கபிலனின் வார்த்தைகளைக் கேட்க நந்து அங்கில்லை.
***********
இரவு எட்டு மணி ஆகியும் எந்தவொரு தகவலுமில்லை…. காசி வெறிப்பிடித்தவன் போல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான். காசியின் முன்பு அவனின் அடியாட்களில் ஒருவன் பவ்யமாக நின்று…
“ஐயா, அந்த கலெக்டர் கார்ல போகலையாம், ட்ரைவரையும் நாளைக்கு காலையில் வீட்டுக்கு வந்துடுங்கன்னு அனுப்பி வச்சிட்டானாம்” என்று தகவலளித்தான்.
சிறிது நேரம் மௌனமாக யோசித்த காசி… “எதெப்படியோ, அவனுக்கு என் மேல பயம் வரணும்… அவன் செத்துட்டா நல்லதுன்னு நினைச்சேன்… சரிவிடு இன்னொரு வாய்ப்பில் பார்த்துக்கொள்ளலாம். எப்படியும் நாளை காலை ட்ரைவர் கார் ஸ்டார்ட் செய்ததும் பதினைந்து நிமிடத்தில் வெடிக்க போகிறது. அது தன்னுயிர்க்கு வைத்த குறியென்று அவன் கண்டு கொள்ளுவான். அந்த கலெக்டர் ரொம்ப புத்திசாலி. அதன் பிறகாவது, என்னிடம் வாலாட்டாம இருக்கின்றானா பார்க்கலாம்” என்றவர்.. “எப்போ இருந்தாலும் உன் சாவு என் கையில் தான்” என்று சூளுரைத்தார்.
**************
தூரத்து இருள் வானில் தொலைந்து போன தன் காதலை தேடிக்கொண்டிருந்தாள் சிவா… அவள் கண் முன்னே, மாலை கல்லூரி முடிந்து வந்ததும் ஒமியா பேசிய அத்தனை பேச்சுக்களும் வலம் வந்தன.
தனது அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்த சிவா, யாரோ கதவு தட்டும் ஓசையில் வேகமாக ஆடை அணிவித்துக்கொண்டு விரைந்து வந்து கதவினை திறக்க, அங்கே கண்கள் ரெண்டும் கோவைப்பழம் போல் சிவந்திருக்க, காளியின் தோற்றத்தில் நின்றிருந்தாள் ஒமியா.
சிவாவைத் தள்ளிக்கொண்டு உள் நுழைந்தவள், சட்டமாக சிவாவின் படுக்கையில் அமர்ந்தாள்.
“ஆமா உன்கிட்ட என்ன இருக்குன்னு அத்தான் உன் கழுத்துல தாலி கட்டுச்சு… சரி விடு, அதான் தாலி கட்டியதுமே உன்னிடம் ஒன்றுமில்லைன்னு தெரிஞ்சு உன்னை தள்ளி வச்சிட்டாரே.. சோ, எனக்கு அந்த கதையெல்லாம் வேண்டாம். இப்போ நான் எதுக்கு வந்தேன்னா… இன்னமும் அத்தானை நீ நினைச்சிட்டிருந்தால் அந்த நினைப்பைத் தூக்கி போட்டுடு.. அவரை நினைக்கிறதுக்கு இப்போ நான் வந்துட்டேன். அவர் முன்னாடி போய் காதல் பார்வை பார்த்துட்டு நிக்குற வேலையெல்லாம் வச்சிக்காதே, அவரை பொறுத்தவரை நீ முடிஞ்சுப் போன பக்கம். இன்னமும் அத்தானை நினைத்து பகல் கனவு காணப்போறியோன்னு தான் சொல்லிட்டு போலாம்ன்னு வந்தேன்.. வரட்டா.”
நாக்கில் விஷம் தேய்த்து பேசிவிட்டுச் சென்றாள் ஒமியா.
“நீ எனக்கு இல்லையா மாமா…”, சிவாவின் ஆழ்மனம் தன்னருகில் இல்லாதவனிடம் கேள்விகேட்க.. அவளின் கண்களில் கரகரவென கண்ணீர் வடிந்தது.
நந்து நடந்த அனைத்தையும் தன் அண்ணனிடம் ஒன்றுவிடாமல் சொல்லிவிட, நானிக்கு ஒமியாவின் மீது கோபம் பெருகியது.
வீட்டின் கூடத்தில், மையத்தில் நின்றவன் “மீனா” என ஓங்கி அழைத்தான்.
நானியின் சத்தத்தில் வீட்டிலுள்ள அனைவரும் அங்கு வந்துவிட்டனர், சிவாவைத் தவிர… அவள் நிலவிடம் தனது சோகங்களை பேசிக்கொண்டிருந்த தருணம், அவளவன் அவளுக்காக கீழே சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
“என்ன அத்தான் கூப்பிட்டிங்களா?”
லோ நெக் மற்றும் கையில்லா மேற்ச்சட்டை, குட்டை பாவாடையென வந்தவள்… உதட்டுச்சாயம் பூசப்பட்ட தனது இதழை காதுவரை இளித்து கொஞ்சும் குரலில் கேட்டிருந்தாள்.
அவளின் தோற்றமே உள்ளுக்குள் எரியும் எரிமலையைத் தூண்டிவிட, தன்னவளுக்காக பதிலடி கொடுக்க ஆரம்பித்தான்.
“உன்கிட்ட என்ன இருக்குன்னு என் மனைவியை பார்த்து கேட்டியாமே?”
நானியின் என் மனைவி என்கிற வார்த்தை பாண்டியம்மாளுக்கு ஆத்திரத்தை கிளப்ப… நானியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
‘தனது மருமகன் ஏதோ முடிவெடுத்துவிட்டான், இனி அவன் பார்த்துப்பான்’ என்று அரசி நீண்ட நாட்களுக்குப் பிறகு அகம் மகிழ்ந்தார்.
“இப்படி உன் உடல் அங்கங்கள் தெரியுமளவிற்கு ஆடை போட்டு காட்டியும் உன்னிடம் இல்லாதது என் சிவாவிடம் உள்ளது.”
“அத்தான்…” அவனின் பதிலில் ஒமியா கொதித்தாள்.
“ஷ்ஷ்ஷ்…” வாய்மேல் விரல் வைத்துக் காண்பித்தவன், “நான் பேசும்வரை நீ வாய் திறக்கக்கூடாது” என்று மிரட்டினான்.
“என் சிவாவிடம் இருப்பது என்னவென்று தெரியுமா?” அவனின் கேள்வியில் ஒமியா அவனை முறைத்துக்கொண்டு நிற்க,
“அது அவளின் தூய்மையான மனம்…. அந்த மனதில் கொண்டுள்ள என் மீதான ஆழமான காதல்” எனக் கூறியவன், “இதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது” என்று அவளின் மூக்குடைத்தான்.
“அப்புறம் இன்னுமொன்று… ஒரு பொண்ணுகிட்ட அவளுடைய புருஷனை நான் தான் கட்டிப்பேன்னு சொல்றவளுக்கு இந்த ஊர் வைத்திருக்கும் பேரே வேறு… இனியொருமுறை என் சிவாவின் பக்கம் உன் நிழல் விழுகிறதென்றாலும் உன்னை நான் சும்மா விடமாட்டேன்” என்றவன்,
பாண்டியம்மாளிடம் திரும்பி, “உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன்” என எச்சரித்து அங்கிருந்து நகர்ந்தான்.
கபிலன் புழுவை பார்ப்பதைப்போன்று தன் தங்கையை பார்த்து செல்ல, ஒமியா கூனிக்குறுகிப்போனாள்.
நல்லவர்கள் அனைவரும் தங்களது அறைக்கு சென்றுவிட, வஞ்சகர்கள் மட்டும் ஒன்று கூடினர். நிச்சயம் அது சிவாவின் உயிர் பறிப்பிற்காகவே இருக்கும். அவர்களிடமிருந்து தன்னவளை மீட்பானா நானிலன்.
“நான் கூட நானியை தப்பா நினைச்சிட்டேன் பத்மா… அவனுக்குள்ள என்னவோ இருக்கு, எல்லாத்துக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்”. தன் மனைவியிடம் புலம்பிய அழகேசன் அடுத்த நாள் நடக்கவிருக்கும் ஆச்சரியம் தெரியாமல் உறங்கிப்போனார்.
காலை அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த நானியின் செல் போன் சத்தமிட்டது. அழைத்தது நானியின் உதவியாளர் ராஜேஷ்.
“சார் இன்று சுதந்திர தின விழா.”
“அதான் தெரியுமே ராஜேஷ்.”
“அதுவந்து சார்… நேற்று நீங்க அலுவலகத்திலிருந்து சென்ற பிறகு **** கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தலைவர் அனைவரும் வந்திருந்தனர். இன்று அவர்கள் கல்லூரியில் நடைபெற இருக்கும் விழாவிற்கு நீங்க தலைமை வகிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர். எப்படியும் இதுமாதிரி கல்லூரி நிகழ்விற்கு நீங்க சம்மதம் வழங்குவீங்க என்பதால் நானே உங்கள் அனுமதியின்றி ஒப்புக்கொண்டேன்.”
ராஜேஷ் தயங்கி தயங்கி சொல்ல வருவதை சொல்ல… அவன் கூறிய கல்லூரியின் பெயரிலேயே அமைதியாகிவிட்ட நானி.. தன்னவள் பயிலும் கல்லூரி என்பதற்காக சரி போகலாமெனக் கூறினான்.
“தேங்க் யூ சார்… தேங்க் யூ சோ மச்.”
“தென் ராஜேஷ்… டிரைவரை வர வேண்டான்னு சொல்லிடுங்க, லீவ் டே’வில் அவர் வீட்டில் இருக்கட்டுமே” என்றவன் தன்னவளை கல்லூரியில் சைட் அடிப்பதற்காக மிக ஆர்வமாகக் கிளம்பத் தொடங்கினான்.
“சாருக்கு இன்னைக்கு லீவுன்னு தெரியாது போலிருக்கே, இருந்தாலும் கலெக்டர் அவருக்கு ஆயிரம் வேலையிருக்கும் எதுக்கும் அவர் முன்னாடி போய் நிப்போம்.” தனக்குள் புலம்பியபடி நானியின் வாகன ஓட்டி, அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினுள் அமர்ந்து ஸ்டார்ட் செய்யும் நேரம் சரியாக அவனை ராஜேஷ் அழைத்திருந்தான்.
நானி சொல்லியதாக ராஜேஷ் சொல்லவும், அவனும் வண்டியை லாக் செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான். வெடிகுண்டினை சுமந்து கொண்டிருந்த கார் யாருமற்று தனித்து நின்றது.
கல்லூரிக்கு தனது பைக்கில் புறப்பட்ட நானி… பாதிவழியில் ராஜேஷையும் ஏற்றிக்கொண்டான்.
“எனக்கெல்லாம் லீவ் இல்லையா சார்.” ராஜேஷ் அப்பாவியாகக் கேட்க… “நீ என் உதவியாளனாக போய்விட்டாயே ராஜேஷ், சோ நான் எங்கு சென்றாலும் நீயும் என்னுடன் வந்துதானாக வேண்டும்” என்றான் நானி.
சில நொடி மௌனத்திற்கு பிறகு,
“இப்போ நம்மள பார்த்தால் கலெக்டர், மற்றும் அவருடைய காரியதரிசின்னு யாரும் சொல்ல மாட்டாங்க சார்.”
ராஜேஷ் கூறியதற்கு ஏனென்று வினா எழுப்பினான் நானிலன்.
“சைரன் வைத்த காரில் போனால் தான் சார் ஒரு கெத்தா இருக்கும்.. பார்க்குறவங்களுக்கும் நீங்க கலெக்டர் அப்படின்னு தெரியும்” என்றான் ராஜேஷ்.
மிரர் வியூ கண்ணாடியின் வழியாக தனக்கு பின்னால் அமர்ந்திருக்கும் ராஜேஷை கூர்ந்து பார்த்த நானி,
“சிவப்பு விளக்கு ஒளிர, சைரன் சத்தம் காதை பிளக்க.. காரில் சென்று தான் நான் கலெக்டர் என்று மக்கள் அறிந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை ராஜேஷ். நான் செய்கின்ற செயல் மக்களிடத்தில் என்னை மாவட்ட ஆட்சியராக அறிமுகப்படுத்தினால் போதும்” என சரியான பதிலளித்தான்.
நானியின் பதிலில் ராஜேஷ் வாயடைத்துப் போனான்.
“எனக்கு அலுவலக காரில் பந்தாவாக ஊர் சுற்றி வர கொஞ்சமும் விருப்பம் கிடையாது ராஜேஷ்… நம்ம ட்ரைவர் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கிறோமென்று நினைத்துவிடக் கூடாதல்லவா.. அதற்காகத்தான் விருப்பமேயில்லாமல் அலுவலக காரில் சென்று வந்து கொண்டிருக்கின்றேன்.”
நானி சொல்லியதைக் கேட்டதும் ராஜேஷிற்கு அவன் மீது மதிப்பு உயர்ந்தது.
கல்லூரியில் சுதந்திர தின விழா மாணவர்களுக்கிடையே கலைகட்டியது.
மாணவிகள் கல்லூரி வாயில் மற்றும் முதல்வர் அறைக்கு முன்னால் இருக்கும் சிறு மைதானத்தின் நடுவில் வீற்றிருக்கும் கொடி கம்பத்தை சுற்றியும் வண்ணக்கோலங்கள் இட்டுக்கொண்டிருக்க… மாணவர்கள் வண்ணக்காகிதங்களால் அவ்விடத்திலிருக்கும் மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.
கல்லூரி மிகுந்த பரபரப்புடன் காட்சியளித்தது. எங்கும் இளசுகளின் துள்ளாட்டம்.
ஒருபக்கம் கலைநிகழ்ச்சிக்காக மாணவ மாணவிகள் தயாராகிக் கொண்டிருக்க, மறுபக்கம் அவர்களின் அரட்டை கச்சேரியும் நிகழ்ந்தது.
அப்போது அங்கு ஓட்டமும் நடையுமாக மாணவத் தலைவன் அரக்கப்பறக்க ஓடி வந்தான். ஓடி வந்தவன் மூச்சினை ஆழ்ந்து சுவாசித்து தன்னை நிலைப் படுத்திய பின்னர்… “கலெக்டர் கிளம்பிட்டாராம், இன்னும் இருபது நிமிடங்களில் இங்கு வந்துவிடுவாரென அவரது உதவியாளர் தெரிவித்தார்” எனக் கூறி அனைவரும் விரைந்து தயாராகுங்களென துரித்தப்படுத்தினான்.
“கலெக்டர் இன்னும் 20 நிமிடங்களில் வந்துடுவார்” என அவன் கூறிய செய்தியில், மாணவி ஒருத்திக்கு முகப் பூச்சினை பூசிக்கொண்டிருந்த சிவரஞ்சனியின் கைகள் அந்தரத்தில் அப்படியே தொங்கின.
உலகமே நின்றதை போல் அசையாது நின்றிருந்தாள்.
“டி… ரஞ்சி என்னடி, அப்படியே நிக்கிற?” என்ற தோழியின் குரலில் கலைந்தவள்… “நீயே மீதியை போட்டுக்கோ சுபா” எனக் கூறி ஓடிவிட்டாள்.
நேராக நந்துவைத் தேடி வந்தவள்…
“நந்து மாமா தான் சீஃப் கெஸ்ட்டா” என்க அதற்கு நந்து ஆமென்று தலையசைத்தாள்.
இருவரும் வெளிவாயிலுக்கு அருகேயிருக்கும் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். சிவா கைகளை பிசைந்துகொண்டிருக்க,
“ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சுற்றியிருக்கும் போது அண்ணா கண்ணுக்கு நீ தெரிய மாட்டாய், சோ.. பதட்டம் கொள்ளாதே.” நந்து சிவாவை சமாதானம் செய்ய சற்று தைரியம் பெற்றவளை மயக்கம் போட வைத்தது அவளின் வகுப்பு பேராசிரியர் சொல்லிய செய்தி.
எப்போதும் கல்லூரியில் நடைபெறும் எல்லாவித கலைநிகழ்வும், சிவாவின் பரத நாட்டியத்தை தொடக்கமாகக் கொண்டே ஆரம்பம் ஆகும்.
ஆனால், இம்முறை கடந்த சில தினங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அதில் பங்குபெற முடியாதெனக் கூறியவளை எவ்வளவு வற்புறுத்தியும் பலனின்றி போனதால், வேறொரு மாணவியை தேர்வு செய்திருந்தனர்.
அம்மாணவிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாது போனதால், நிச்சயம் சிவா பங்கேற்றே ஆக வேண்டுமென பேராசிரியர் அவளைத் தேடி வந்து சொல்லியது மட்டுமில்லாமல், உடனடியாக தயாராகுமாறும் துரிதப்படுத்தினார்.
அதற்குமேல் மறுப்புத் தெரிவிக்காது, நந்தினி அலங்காரம் செய்ய, மனதில் எழுந்த நடுக்கத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
கல்லூரியின் முதல்வர் கொண்டு அனைவரும் நானிக்காக வாயிலில் காத்திருக்க, நிச்சயம் யாரும் அவன் சாதாரணமாக பைக்கில் வருவானென்று எதிர் பார்க்கவில்லை.
மாணவர்கள் தலைவன் பூங்கொத்தளிக்க, மரியாதையுடன் வரவேற்கப்பட்ட நானி, நேராக மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
தேசிய கொடியை அவன் கைகளினால் ஏற்ற சொல்ல… பெரியவர் என்கிற முறையில் கல்லூரி முதல்வரையே ஏற்றி வைக்கக் கூறினான். முதலில் மறுத்தாலும் நானியின் வற்புறுத்தலால் அவரே கொடியை கம்பத்தில் ஏற்றி பறக்கவிட, கலைநிகழ்ச்சி ஆரம்பமாகியது.
“முதலில் நாம் பார்க்க இருப்பது, இறுதியாண்டு மாணவி சிவரஞ்சனியின் நம் பாரம்பரிய நடனமான பரதம்.” மைக்கில் ஒலிபரப்பாகிய செய்தி நானியின் செவி நுழைந்ததும், அவன் பார்வை மேடையேறும் படிகளிலேயே நிலைத்தது.
நாட்டியத்திற்கு ஏற்றவாறு உடை அணிந்து பதுமையென மேடையேறியவளின் ஓரப் பார்வை, முதல் வரிசையில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த தன்னவனின் மீது பதிந்தது.
அவளின் விழி வீச்சை கண்டு கொண்டவனின் மனம் குதியாட்டம் போட்டது.
பாடல் ஒலிக்க ஆரம்பிக்க அதற்கேற்றவாறு அழகாய் அபிநயம் பிடித்தாள் பாவையவள்.
தன்னையும் மறந்து தன்னவளின் ஆடலில் லயித்திருந்தவன்… பாடலின் இறுதி வரியில் அவள் தன்னை நோக்கி வீசிய பார்வை அம்பில் மொத்தமாய் வீழ்ந்து போனான்.
அவள் நடனம் முடிந்து மேடையிறங்க, “போகாதடி குட்டச்சி என்னை பாருடி, பாருடி, குட்டச்சி” அவன் மனம் கூக்குரலிட்டது.
இறுதி படியில் கால் வைத்தவள், தனது காதோர குழலை ஒதுக்குவதைப் போன்று தன்னவனை பார்க்க அவனின் காதல் மனம் நிறைந்து போனது.
மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் சமயம், நானிலனின் உதவியாளர் அவனிடம் மொபைலினைக் காட்டி ஏதோ சொல்ல, அதனை வாங்கியவன்.. தனக்கு அருகிலமர்ந்திருக்கும் கல்லூரி முதல்வரிடம் “ஒன் இம்பார்டன்ட் கால், பேசிட்டு வருகிறேன்” எனக் கூறி யாரின் கவனமும் சிதறாது அங்கிருந்து எழுந்தான்.
நானியுடன் சேர்ந்து அவனின் உதவியாளர் ராஜேஷும் எழ, “நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்றவன்… நிகழ்ச்சி நடைபெறும் ஆடிட்டோரியத்திற்கு பின்பக்கம் உள்ள பெரியளவிலான மைதானத்திற்கு சென்றான்.
பேசி முடித்துவிட்டு நானி திரும்புகையில், அங்கிருக்கும் குழாயில் சிவா கை கழுவிக்கொண்டிருந்தாள். அப்போது தான் அவள் பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்ற தன் தோழியின் அலங்காரத்தை முடித்துவிட்டு கை கழுவதற்காக அங்கு வந்திருந்தாள்.
அவளைப் பார்த்ததும் நானியின் கால்கள் நகர மறுத்தன. அதே இடத்தில் அசையாது தேங்கின. கண்களில் காதல் கரை புரண்டது.
தனிமையில் அவளிடம் பேச அவனின் பதவி தடுத்தது. பேச நினைத்தாலும் அவனால் பேச முடியாது என்பதை அந்நேரம் மறந்து போனான். ஏக்கத்துடன் தன்னவளின் மீது பார்வையை வீசியவன் ஆடிட்டோரியத்தை நோக்கி நகர்கையில் அந்த வித்தியாசம் அவன் கண்ணில் பட்டது.
ஒரு மாணவன் தயங்கி தயங்கி சிவாவின் அருகில் சென்று நிற்பது தெரிந்தது. ஏதோ சரியில்லை என யூகித்த நானிலன், தனது கட்டுப்பாடுகளையும் மீறி அவர்களை நோக்கிச் சென்றான்.
கை கழுவிட்டு திரும்பிய சிவா தனது வகுப்புத் தோழன் தன் முன் நிற்பதை கண்டதும், எந்த விகல்பமுமின்றி…
“என்ன திலீப் , டான்ஸ் ஷோ பார்க்காம இங்கு என்ன செய்ற” என்றாள்.
முதலில் ஒன்றுமில்லை எனத் தயங்கியவன், “அது… வந்து ரஞ்சி.. நா….நாஆஆ…நான் உன் கிட்ட ஒன்னு சொல்லணும்.”
அவனின் தடுமாற்றம் சிவாவிற்கு ஆச்சரியமாக இருக்க… “திலீப், யூ ஆர் மை பிரண்ட்.. சோ பயப்படாம சொல்லு” என ஊக்குவித்தாள்.
“இனி.. நீ எனக்கு பிரண்டா இல்லாம, லவ்வரா இருப்பியா?” சரியாக அந்நேரம் தான் நானி அவர்களை நெருங்கியிருந்தான். திலீப் கூறியது தெளிவாக அவனின் காதலிலும் விழுந்தது. சிவாவின் பின்புறம் நானி நிற்க, அவன் வந்ததை சிறிதும் உணராது திலீப் அவளின் முகத்தையே பார்த்திருந்தான்.
அவளின் பிரண்ட் என்ற வார்த்தையிலிருந்தே தனது ப்ரொபோசலை வெளியிட்டிருந்தான். அதில் அதிர்ச்சியானவளின் கண்ணிலிருந்து சுற்றுப்புறம் மறைந்து சிலையென நிற்க, திலீப் மேலும் பேசத் தொடங்கினான்.
“ரஞ்சு உன்னை பார்த்த முதல் நாளிலிருந்தே உன்னை நான் விரும்புறேன். இதுதான் காரணமென்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. பட் எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது… இன்று எப்படியும் உன்னிடம் சொல்லி விட வேண்டுமென நினைத்தேன். சோ, நீ தனியா வருவதைப் பார்த்து உன் பின்னோடு வந்தேன்” எனக் கூறியவன் ஐ என ஆரம்பித்து சிறு இடைவெளிவிட்டான்,
அவனின் ஒவ்வொரு வார்த்தையும் நானிக்கு அமிலத்தை ஊற்றியது போலிருந்தது. சிவா என்ன சொல்லப்போகிறாளென சிறு அச்சத்துடன் நின்றிருந்த நானிக்கு, அவளின் அமைதி அவளை கொன்றுவிடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ஏதேதோ உளறிக்கொண்டிருந்தவன் திடீரென அமைதியாகவும் அடுத்து அவன் கூற வருவதை யூகித்த சிவா, திலீப்பை தீர்க்கமாகப் பார்த்து,
“எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு” என்றாள் அழுத்தத்துடன்,
அவளின் பதில் திலீப்பிற்கு இடியாக இருந்ததென்றால், நானிக்கு மழைச்சாரலாக இதயத்தை குளிர்வித்தது.
“நீ பொய் தானே சொல்ற?” திலீப் தடுமாற்றத்துடன் வினவினான்.
இல்லையென தலையை இடவலமாக அவள் அசைக்க,
“அப்போ உன் கழுத்தில் தாலி, சரி விடு… உன் ஹஸ்பண்ட் போட்டோ காட்டு… இல்லை அவர் யாரென சொல்” எனக் கேட்க,
“நான் தான்!”
கம்பீரமாக ஒலித்த குரலில் இருவரும் திரும்ப… வசீகரிக்கும் புன்னகையுடன் நானி நின்றிருந்தான்.
சிவாவிற்கு பக்கென்றானது.