அத்தியாயம் 2 :
பாண்டியம்மாள் தன் வயதையும் மீறி உற்சாகமாக வீட்டை சுற்றி வந்தார்.
நொடிக்கு ஒருமுறை வாசலை பார்த்துக்கொண்டே இருந்தார்.
வீட்டிலுள்ள அனைவருக்கும், அதை செய் இதை செய்யென்று ஏதாவதொரு வேலை அளித்துக்கொண்டே இருந்தார்.
அடுக்கலைக்குள் நுழைந்தவர்,
அங்கு சமைத்துக் கொண்டிருக்கும் அரசியிடம், “இந்தாடி… வரவங்க சாதாரணவங்க இல்லை.. ரொம்ப முக்கியமானவங்க, அதனால நீ என்ன பண்றன்னா… இட்லியை அவிச்சு, நாட்டு கோழி தொக்காட்டம் வறுத்துடு, மீனை எண்ணெயில் பொறிச்சு குழம்பு வச்சிடு, நண்டு பூண்டு மசாலா செஞ்சு ஆப்பம் ஊத்திடு, நல்லா நெய்யில் வறுத்த முந்திரி போட்டு மிளகு பொங்கல் செஞ்சு அதுக்கு தோதா கத்தரிக்கா கொத்துசு பண்ணிடு, கோதுமை மாவு பாலில் கரைத்து நெய் சொட்ட சொட்ட அசோகா, வெல்லம் தேங்காய் பூ போட்ட பாசிப்பயிறு பாயாசம், காராமணி பயிருல வடை சுட்டுடு, இதெல்லாம் முடிச்சிட்டு சட்டிய நெருப்புல வச்சு அப்பளத்தை சுட்டு வை… மேசை முழுக்க சாப்பாடு நிறைஞ்சிருக்கணும்” என்று கட்டளையிட்டார்.
“எல்லாம் நீ மட்டும் தான் செய்யணும்” என்றுக் கூறியவர்… மீண்டும் வாசலுக்கு சென்று நின்று கொண்டார்.
“ஒத்த ஆளா எப்படி செய்வீங்க” என்ற பத்மாவையும்,
“அம்மா பார்த்தால், உங்களை வைவாக அண்ணி நானே எல்லாம் செய்றேன்” என்ற அரசி களத்தில் இறங்கி விட்டார்.
அன்று ஞாயிறு என்பதால் நானிலன் அலுவலகம் செல்லவில்லை.
வயலைச்சுற்றி பார்த்தவாறு காலை நேர நடைப்பயிற்சியை முடித்தவன், கூடத்தில் வந்து அமர்ந்தான்.
பாண்டியம்மாள் செய்ய சொல்லிய உணவுகளை செய்வதற்கே அரசிக்கு பத்து கைகள் வேண்டுமென்று நினைத்த பத்மா, மூன்று வருடங்களுக்கு பிறகு தனது மகனிற்காக தேநீர் தயாரித்தார்.
தேநீர் கோப்பையை கையில் எடுத்தவர் தாமே சென்று அவனிடம் கொடுக்கலாமா? வேண்டாமா?’ என்று மனதிற்குள் பட்டிமன்றமே நடத்தினார்.
‘தன்னால் அவன் முன்பு செல்ல முடியாது’ என்று நினைத்தார்.
அரசியிடமே கொடுத்து அனுப்பலாம் எனத் திரும்பியவர், வியர்வையில் குளித்து அரக்க பறக்க சமையலை செய்து கொண்டிருப்பவரை தொந்தரவு செய்ய வேண்டுமா எனக் கவலை கொண்டார்.
சரியாக அந்நேரம் சிவா அங்கு வர அவளை கொண்டு போய் கொடுக்குமாறு கூறினார்.
“நானா,” பதறியவளை…
“நீ தான், நீயேதான்” என்று அழுத்தமாகக் கூறியவர்… கோப்பையை அவளின் கைகளில் திணித்துவிட்டு சென்றார்.
நானிலனையும் கோப்பையையும் மாறி மாறி பார்த்தவளின், தொண்டைக்குள் பயப்பந்து உருண்டது.. நெஞ்சுக்குழி பயத்தில் நடுங்கியது. ‘அவரென்ன சிங்கமா’ எனக் கேட்ட மனசாட்சியிடம், ‘சிங்கமா இருந்தால் கூட தைரியமா போய்டுவனே’ எனக் கூறினாள். (அப்போ, மேடம் சிங்கத்துக்கு பயப்பட மாட்டீங்க அப்படித்தானே!.)
“காபி கசப்பேறதுக்குள்ள போய்ட்டு கொடுன்னா, அங்கன என்னடி நின்னுகிட்டே இருக்கவ…”
பத்மாவின் குரலில், “அய்யோ! இந்த அத்தை விடமாட்டாங்க போலிருக்கே” என்று சலித்தவளாய் மெல்ல அடி எடுத்து வைத்தாள்.
“பார்த்துடி தரைக்கு வலிக்கும்”, பின்னால் ஒலித்த பத்மாவின் சத்தத்தில் வேகமாக நடந்தாள்.
நானிலன் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் செல்ல செல்ல நடையின் வேகம் குறைந்தது. கால்கள் பின்னிக்கொண்டன, அடுத்த அடி எடுத்து வைக்க மாட்டேனென்று ஒத்துழையாமை இயக்கம் நடத்தின.
செய்தித்தாளில் மூழ்கியிருந்தவனின் இதயம் தாறுமாறாக துடித்தது.
இத்துடிப்பிற்கான காரணம் அறிந்தவன், உண்மையிலே அவள் தனக்கு அருகில் வருகிறாளா என்ற சந்தேகம் தனக்குள் எழுந்த நொடி செய்தித்தாளை மெல்ல விலக்கி ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவனுள் ஆச்சரியம்…
‘தானாக தன்னிடம் வர்றாளா!’
‘அவளா, வரமாட்டேங்கிறா ராசா, நீ தானே! அவளை கிட்ட சேர்க்காம இருக்க’ என நேரங்காலம் பார்க்காமல் அவனுக்கு கொட்டு வைத்தது அவனது மனசாட்சி.
தன் மனதிற்கு இனியவளை தள்ளி வைப்பது அவனுக்கு மட்டும் சந்தோஷமா என்ன, விதியல்லவா அவர்கள் இருவரிடமும் வேறொருவரின் மூலம் விளையாடுகிறது. (நிச்சயம் அந்த வேறொருவர் நான் இல்லப்பா)
கையில் கோப்பையுடன் மருண்ட விழிகளை அகல விரித்து, சிறு நடுக்கத்துடன் தனக்கெதிரே நின்றிருந்தவளின் தோற்றம் அவனின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது.
தான் எதிரே வந்தாலே பயந்து தலை குனிந்து கொள்பவள், இன்று காபி கொண்டு வந்திருக்கிறாள் என்றால் இது நிச்சயம் அம்மாவின் வேலையாகத் தான் இருக்கும் என்று சரியாக யூகித்தான்.
“சரி, எப்படி என்கிட்ட காபியை கொடுக்கிறா பார்ப்போம்” என அவள் வந்ததே அறிந்திடாதவன் போல் கால் மேல் காலிட்டு அமர்ந்து தீவிரமாக செய்தித்தாளில் வரும் புதிர் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருந்தான்.
“இன்னும் கொஞ்ச நேரம் இங்கு நின்றிருந்தாலும், பயத்தில் குளிர் ஜுரமே வந்தாலும் வந்துவிடும்” என்று எண்ணியவள் தன் காலினை தரையில் தட்டி கொலுசின் ஓசையின் மூலம் தான் வந்திருப்பதை உணர்த்தினாள்.
‘அடியே… குட்டச்சி, வாய் திறந்து கூப்பிட மாட்டீங்களோ! இன்னைக்கு இருக்குடி உனக்கு.
நீயா என்னை கூப்பிட்டு காபின்னு சொல்ற வரை, உன்னை இங்கிருந்து அனுப்பப்போவதில்லை’ என்று மனதில் சபதம் செய்தான். (
‘இதெல்லாம் ஒரு சபதமா… டேய், என்னாலே முடியல டா என்றது அவனின் மனம்.’
நானிலன் எந்தவொரு அசைவும் இல்லாமல் அமர்ந்திருக்கவும்,
“அச்சோ இவருக்கு வேற காபி ஆறி போனா பிடிக்காதே” எனத் தனக்குள் கூறிக்கொண்டவள்… மெல்ல தன் இதழ்களை பிரித்து, நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு அந்த அழைப்பினை விளித்தாள்.
“மாமா…”
செவிகளை நிறைத்த அவளின் அழைப்பு அமுத கானமாய் அவன் இதயத்தில் மெல்ல இறங்கியது. அவளின் அழைப்பு தந்த சுகத்தை அவன் முழுதாய் அனுபவிக்கும் முன்… பூஜை நேர கரடியாய் அங்கு வந்து சேர்ந்தார் பாண்டியம்மாள்.
தனது அப்பத்தாவைக் கண்டதும்…
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? என்னை மாமான்னு உறவுமுறை சொல்லி உறவு கொண்டாடாத, திஸ் இஸ் தி பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்… முதல்ல என் முன்னால் வரதை நிறுத்திக்க. லீவ் திஸ் பிளேஸ் அண்ட் கெட் அவுட் ஆப் மை சைட்.”
எதற்கோ பயந்து, தன்னவளிடம் வெடித்து சிதறினான்.
பாண்டியம்மாள் தங்களுக்கு அருகில் வருவதை உணர்ந்தவன், அவர் சிவாவை திட்டுவதை தன்னால் கேட்க முடியாதென்று.. தன்னவள் தன் கோபத்தில் அழுது கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
சிவாவின் அருகில் வந்த பாண்டியம்மாள், “என் பேரன் தான் உன் மூஞ்சியை கூட பார்க்க பிடிக்கலைன்னு ஒதுங்கிப் போறானே, அப்புறம் என்னத்துக்குடி அவன் மேல வந்து விழுகுறவ” என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்.
சிவா கண்ணீரில் கரைய…
பாண்டியம்மாள் மேலும் என்ன வார்த்தைகள் பேசியிருப்பாரோ, அதற்குள் சிவாவை காப்பாற்ற வந்த தேவ தூதனாக அங்கு வந்து சேர்ந்தார் அழகேசன்.
சிவாவின் கண்ணீரும், பாண்டியம்மாளின் கோப முகமும் அவருக்கு சொல்லாமல் சொல்லியது அங்கு என்ன நடந்திருக்குமென்று.
வழக்கம்போல ஏதோ ஒன்றிற்காக சின்ன பிள்ளையை வார்த்தைகளால் வதைத்திருப்பாரென்று அறிந்து கொண்டவர்… “ஆத்தா சிவா கொஞ்சம் தண்ணீ கொண்டாம்மா” என்று அவளை உள்ளே அனுப்பினார்.
சிவா அங்கிருந்து சென்றதும்,
“இங்க பாரும்மா உன் கோப முகம்.. நாட்டாமைத் தனமெல்லாம் ஊரோடு வச்சிக்கோ, என் மருமவகிட்ட காட்டுனீங்க நான் பொல்லாதவனாகிடுவேன்”, தன் தாயை எச்சரித்தார்.
“யாருக்கு யாருடா மவ… அவளைத் தூக்கிவச்சிக்கிட்டு கொஞ்சுறதுக்கு நீ நல்லா பட போறடா” என்றவர் வாசல் பக்கம் சென்று, வருவோருக்காக காத்திருக்கத் தொடங்கிவிட்டார்.
அதற்கு மேல் அவர் பேசினாலும் அழகேசனிடம் அவரது பேச்சு எடுபடாது. ஆனால், அழகேசனும் தாய் சொல் தட்டாத மகன் தான்.
சிவா விஷயத்தில் மட்டுமே அவர் பாண்டியம்மாள் பேச்சினை ஏற்றுக்கொள்வதில்லை.
“நல்ல நேரத்திற்கு தன் தந்தை வந்தார்” என்று நானிலன் நிம்மதியடைந்தாலும், ‘பல நாட்களுக்குப் பிறகு தன்னவள் அழைத்த உரிமையான அழைப்பினை அனுபவிக்க கூட விடாமல் பாவம் தன்னை துரத்துகிறதே…’ மனதில் குமுர மட்டுமே முடிந்தது.
பெரியோர் செய்யும் பாவம் இளையவர்களையே சேரும் என்பது நானிலனின் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது.
இது தான் பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்பதோ?
வீட்டின் பின் வாசலில் வேதனை தாங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த நானிலனின் தோளில் ஆறுதலாய் ஒரு கரம் படிந்தது. அது வேறு யாருமில்லை, அவனின் அத்தை அமுதரசி.
நானிலனின் அருகில் அமர்ந்து அவனின் தலையை வாஞ்சையுடன் வருடி… “சிவாவை திட்டிட்டியேன்னு வருத்தப்படுறீயாப்பா?, நீ இப்படி நடந்து கொள்வதற்கு காரணமே அவள் உயிரோடு இருக்கத்தானே நானி.. அப்புறம் ஏன் இந்த கவலை..” என்றார்.
ஒரு ஆண்மகன் என்பதை மறந்து தன்னுடைய அத்தையின் மடியில் படுத்து, “அவள் வருத்தத்திற்கு நானே காரணமாகிறேனே..” நானியின் குரலில் தான் எவ்வளவு வேதனை, அப்பட்டமாக வலி நிறைந்திருந்தது.
“சிவா சந்தோஷமாக இருப்பதை விட உயிருடன் இருக்க வேண்டும்.”
தன் அத்தையின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை புரிய, கசங்கிய அவனது முகம் தீவிரம் அடைந்தது.
‘தன்னவளை என்றும் காப்பேன்’ மனதுக்குள் உறுதியளித்துக் கொண்டான்.
“நீ பேசினது அடுக்களை வரை நல்லா கேட்டது… எப்படியும் அவளை வதைத்துட்டு நீ வருந்துவ தெரியும் அதான் உன்னை பார்க்க வந்தேன்.”
அப்போது தான் ஞாபகம் வந்தவராய், “உன் அப்பத்தா பெரிய லிஸ்டே கொடுத்திருக்காங்க… அதெல்லாம் செய்து முடிக்கணும். நீ முகத்தை கழுவிட்டு உன் வேலையைப்பார்” என்று உரைத்தவராய்.. தனது ஆஸ்தான இடத்திற்கு சென்றார். (அதாங்க… சமையலறை..)
அவரின் பின்னோடு சென்றவன்… அரசி சொல்ல சொல்ல கேளாதவனாக, சமையலில் அவருக்கு உதவி புரியத் தொடங்கினான்.
அப்போது அங்கு வந்த பத்மா…
‘நல்ல அத்தை, நல்ல மருமகன்’ என்று மனதில் மகிழ்ந்தவர்…
“வெளியே, அத்தை மட்டும் வேணும் அத்தை பொண்ணு வேணாமோ?” என்று நக்கலாக யாரையோ கேட்பதைப் போல் சுவற்றிடம் பேசினார்.
நானிலனுக்கு அன்னையின் பேச்சு யாருக்கென்று புரிந்தாலும், அதனை காதில் ஏற்காதவனாக… கோழியினை தீவிரமாக சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
“உங்களுக்கு ஏன் அண்ணி பொறாமை” என்ற அரசி… தனது மருமகனின் கன்னம் வழித்து நெட்டி முறிக்க, அவன் அன்போடு அவரின் நெற்றி முட்டி விலகினான்.
பத்மா தனது முகவாயினை தோளில் நொடித்தவராய் அங்கிருந்து சென்றார். ஆனால், இருவரது அன்பும் அவர் மனதிற்கு சந்தோஷத்தை அளித்தது.
“அய்யோ…! அய்யோ…!”
திடீரென முதுகுக்கு பின்னால் கேட்ட பாண்டியம்மாளின் சத்தத்தில் இருவரும் ஒரு சேரத் திரும்பினர்.
இப்போது என்ன வில்லங்கம் வந்ததோவென அரசி பயத்துடன் தன் அன்னையை ஏறிட,
நானிலனோ வந்த காரணத்தை சொல் என்பதை போன்று திமிராக பார்த்தான்.
அவனது திமிர் பார்வை என்றும் போல் இன்றும் பாண்டியம்மாளுக்கு மகிழ்வினை கொடுத்தது. ஊரே என்னைக் கண்டால் நடுங்கும் போது, தனது பேரன் தன் மீது சிறு அச்சமுமின்றி இருப்பது அவருக்கு பெருமை தான்.
‘தன் ரத்தத்தால் மட்டுமே தன்னை எதிர்த்து துணிந்து நிற்க முடியும்’ என்று மனதில் கர்வம் கொண்டார்.
கோப மூச்சுகளை வெளியேற்றியவராய்… “ஏன்டி..! உனக்கு ஒரு வேலை வச்சா அதை செய்ய என் பேரனை வேலை வாங்குவியோ… அப்படி என்னடி சொகுசு கேக்குது” என கத்தியவர் அரசியின் கன்னத்தில் ஒரு இடி இடித்தார்.
“நம்ம வீட்டிலிருக்கும் மாட்டிற்கு கூட ஓய்வு நேரம் இருக்கு… ஆனால், அத்தைக்கு? இந்த வேலையெல்லாம் செய்யத்தான் அஞ்சலையும், வசந்தியும் இருக்காங்களே அப்புறம் எதுக்கு அத்தைக்கு இவ்வளவு வேலை?” அடக்கப்பட்ட கோபம் அவனின் முகத்தில் பிரதிபலித்தது.
மூன்று வருடங்களுக்கு பிறகு இன்று தான் நானிலன் தனது அப்பத்தாவை பார்த்து நேருக்கு நேராக பேசியிருக்கிறான். இல்லையில்லை திட்டியிருக்கிறான்.
அதுவே பாண்டியம்மாளுக்கு போதுமானதாக இருந்தது.
கண்களில் வராத கண்ணீரை துடைத்துக்கொண்டே, “ஏன் கண்ணு இந்த அப்பத்தாகிட்ட மூஞ்சு பார்த்து பேச உனக்கு இம்புட்டு வருசமாச்சா?” என்று வினவினார்.
அவரின் போலி வார்த்தைகள் நானிலனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
பாண்டியம்மாள் பேரன் மீது உயிரே வைத்துள்ளார் தான்… அவருக்கு மேல் இவன் தன் அப்பத்தாவின் மீது பாசம் வைத்திருந்தான்..
எல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு அவனின் செவிகளைத் தீண்டிய செய்தி அவர் மீது வெறுப்பினை ஏற்படுத்தியது.
அதிலிருந்து எப்படி கரை சேருவதென்று தெரியாமல் இன்று வரை உள்ளுக்குள் மருகிக் கொண்டிருக்கிறான்.
“நான் விருப்பப்பட்டு தான் சமைக்கிறேன். நீங்க உங்க வேலையை போய் பாருங்க.” கோபமாக உரைத்து அங்கிருந்து அவரை நகரச் செய்திருந்தான்.
“பெரிய படிப்பு படிச்சு என்ன பிரயோசனம். இன்னும் வீட்டு ஆளுங்க முந்திய பிடிச்சுக்கிட்டு திரியறானே!” வெளிப்படையாக முணுமுணுத்தார்.
“நான் எப்பவும் என் அத்தைக்கு அதே நானி தான்.”
பதிலடி கொடுத்தவனை வெட்டும் பார்வை பார்த்தபடி சென்றார்.
“ஏன் கண்ணு அம்மா கிட்ட இப்படி பேசுற,”
“நீங்க குனிஞ்சுகிட்டே இருங்க, அவங்க இன்னும் உங்களை கொட்டட்டும்..”
முதல் முறையாக தனக்கே அறிவுரை கூறும் தன் மருமகனை ஆதுரமாய் பார்த்தார் அமுதரசி. அவரின் பார்வையிலிருக்கும் அவன் மீதான அன்பு இந்த நொடி வரை கொஞ்சமும் குறையவில்லை. அவருக்கு அவன் எப்போதும் ஒரு வயது நானி தான்.
எப்போதும் போல் அவரது கனிவான பார்வையில் தனது கோபத்தை விடுத்தவன், இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு சிறு பிள்ளையென முகம் சுருக்கி மன்னிப்பு வேண்டினான்.
“பின்னால் திரும்பி பார்த்தால் முன்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது நானி.
பின்னால் கடந்த நிகழ்வுகளை மறக்க முயற்சி செய். காலம் அதற்கான தீர்வை கொடுக்கும்..”
அமைதியாக அவனுக்கு வாழ்க்கையின் நிதர்சனத்தை எடுத்துக் கூறியவர் தயாராகிய அனைத்து உணவு பதார்த்தங்களையும் மேசையில் அடுக்க ஆரம்பித்தார்.
அவரின் தெளிவான பேச்சில் மனம் இளகியவன், சற்று நேரத்திற்கு முன் ஏற்பட்ட ரணம் மறந்தான்.
அந்நேரம் வாசலின் முன்பு நீண்ட கார் ஒன்று வந்து நிற்க, பாண்டியம்மாள் தன் வயதையும் மீறி துள்ளிக் குதித்தபடி வாசல் பக்கம் விரைந்தார்.
“அடியேய்… பத்மா ஆரத்தி எடுத்துட்டு வாடி”…. அவரது குரலில் தான் எத்தனை மகிழ்வு, துள்ளல்.
பாண்டியம்மாளின் அலப்பறைகள் நானிக்கே வந்திருப்பவர்கள் யாராக இருக்குமென்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மெல்ல குடும்பத்தாருடன் அவனும் இணைந்து வாயில் பக்கம் சென்றான்.
காரிலிருந்து இறங்கிய நடுத்தர வயது தம்பதியினை யாரென்று சுத்தமாக நானிக்கு தெரியவில்லை.
அவன் யார் இவர்களென்று யோசித்து நின்ற நொடி, பாண்டியம்மாள் வந்தவர்களை அணைத்து வரவேற்றார்.
தனது முந்தானையால் கண்களை ஒற்றி எடுத்தவர்… “இந்தம்மாவை பார்க்க உனக்கு இப்போ தான் வழி தெரிஞ்சுதா?” என்றார் வந்திருந்த புது பெண்மணியிடம்.
“அம்மா அதான் வந்துட்டனே!!” என்ற அமுதாம்பிகா.. அங்கு நின்றிருந்த அனைவரையும் கண்டு கொள்ளாது உள்ளே சென்று இருக்கையில் கால் மேல் காலிட்டு சட்டமாக அமர்ந்தார்.
அவர் பாண்டியம்மாளின் இரண்டாவது வாரிசு.
அமுதாம்பிகாவின் கணவர் நாராயணன் அவரின் கண் அசைவை ஏற்று பவ்வியமாக அமுதாவின் அருகில் அமர்ந்தார்.
‘மனைவிக்கு கட்டுப்பட்டவர் போல,’ நானி உள்ளுக்குள் சிரித்தான்.
‘நம்ம பொண்ணு கெட்டிக்காரி தான் புருஷனை கண்ணசைவில் கட்டி போட்டிருக்காளே’ என்று பெருமையாக நினைத்தார் பாண்டியம்மாள்.
“என்ன நானி அப்படி பார்த்துட்டு இருக்க, இவள் தான் உன் மூத்த அத்தை அமுதாம்பிகா, அவர் உன் மாமா நாராயணன்… கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருஷத்துல அமெரிக்காவுக்கு போனவகளுக்கு இப்போ தான் இங்கன வர நேரம் கிடைச்சிருக்கு” என்று அறிமுகப்படுத்தினார்.
தன்னை அறிமுகப்படுத்திய பாண்டியம்மாளை இடைவெட்டியவர்… “அத்தை இப்போ என் பேரு நாராயணன் இல்லை, நரேன்” என்றார்.
“ஏலே! உம் பேரு நாராயணன் தாலே… அதென்னல நாரை, கொக்குன்னு சொல்லுறவன்.”
“அமெரிக்காவில் என் பேரு ஸ்டைலா இல்லைன்னு உங்க பொண்ணு தான் வைத்தாள்”, என்று பதிலளித்த நாராயணனுக்கு, “எனக்குத் தெரிஞ்ச பேரு தான் என்னால சொல்லி கூப்பிட முடியும்” என்று அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாண்டியம்மாள்.
நானி இருவருக்கும் ஒரு சேர கரம் குவித்து வணக்கம் தெரிவித்த அதே நொடி, அமுதா ஹாய் என்றபடி கை நீட்டியிருந்தார்.
நாகரிகம் என்ற பெயரில் முகத்தில் அவர் பூசியிருந்த முகப்பூச்சுக்களும், உதட்டுச் சாயமும், நகச்சாயமும்… அடிக்கின்ற கலர் உடையும், பேச்சும் நானிக்கு சிரிப்பைத் தான் வரவழைத்தது.
“பையன் படிக்கலையோ, மேல்நாட்டு கலாச்சாரம் தெரியதவனா இருக்கானே”, நக்கலாகக் கூறி நானியை மட்டம் தட்ட நினைத்து பேசினார் அமுதா.
அப்போது அங்கு ஒன்றாக வந்த நந்து மற்றும் சிவாவை சில நொடி உற்று பார்த்த அமுதா, இயற்கையிலே… வெறும் மஞ்சள் மட்டும் முகத்திற்கு பூசி அழகுற இருந்தவர்கள் மீது பொறாமை கொண்டு, “இதென்ன இந்த காலத்துல போய் இப்படி இருக்கீங்க, பட்டிக்காடு மாதிரி தாவணிலாம் சுத்திக்கிட்டு” என ஒரு மாதிரியாக முகம் சுளித்தார்.
“எங்களுக்கு மேல் நாட்டு கலாச்சாரம் தெரியாமலிருக்கலாம் அத்தை… ஆனால், நம் நாட்டு கலாச்சாரத்தை இழிவுபடுத்தக் கூடாதுன்னு நல்லாத் தெரியும். உடையும், பேச்சும் தான் மனிதனின் நாகரிகத்தை தீர்மானிக்கும்ன்னா, நாட்டின் பண்பாட்டினை சீர்குலைக்கும் அப்படிப்பட்ட நாகரிகம் எங்களுக்குத் தேவையில்லை.”
தன்னை நக்கல் செய்தபோது அமைதியாக சிரித்தவன், தங்கையுடன் சேர்த்து தன்னவளையும் கேலி செய்ததும்… பதிலடி கொடுத்து அமுதாவின் மூக்கினை உடைத்தான்.
அமுதா கோபத்தில் பற்களை கடிக்க,
‘அய்யோ இதுங்க ரெண்டும் வாக்குவாதம் செய்து என் திட்டத்தை தவிடுபொடி ஆக்கிடுங்க போலிருக்கே…’ மனதில் எண்ணிய பாண்டியம்மாள்.. “என்னப்பா, நானி அத்தைகிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?” என்று தன் மகளுக்கு சப்போர்ட் செய்து வினவினார்.
வந்ததிலிருந்து தன் தங்கையின் பேச்சினையும், நடவடிக்கையும் கவனித்த அழகேசனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால், அமைதியாக நடப்பதை பார்த்திருந்தார்.
தன் தங்கைக்கு தன்னுடைய மகன் பதிலளித்ததும், பாண்டியம்மாள் நானியை குறை கூறுவது பிடிக்காமல்.. “இப்போ அவன் என்ன பேசிட்டான்.” அன்று நடந்திட்ட நிகழ்விற்கு பின், நானி பேசியது சரிதானென்று தன் மகனுக்கு இன்று தான் நேரடியாகத் துணை நின்றார்.
நானிக்கும், அரசிக்கும் ஆச்சரியம் தான்… பின் நானியிருக்கும் பக்கம் கூட செல்ல நினைக்காதவர் இன்று அவனுக்கு ஆதரவாக பேசினால் ஆச்சரியமாகத் தானே இருக்கும்.
அழகேசன் பேசிய பிறகு தான், அவர் இங்கிருப்பதையே அறிந்து கொண்டதைப்போல… “அண்ணா நீங்க இங்க தான் இருக்கீங்களா? , நான் உங்களை கவனிக்கவில்லை,” என்ற அமுதாவிற்கு…
“அமெரிக்காவுல இருந்து வந்திருக்க உனக்கெல்லாம் இந்த கிராமத்தான் கண்ணுக்குத் தெரியமாட்டான்…” அழகேசனின் குரலில் நக்கல் வழிந்ததோ!
“அங்கு போனதிலிருந்து எங்க உறவே வேண்டான்னு இருந்தவங்க இப்போ எதுக்கு வந்தீங்க?” என்று நேரடியாகவேக் கேட்டிருந்தார்.
“டேய், இதென்னடா வீட்டுக்கு வந்த பிள்ளைக்கிட்ட இப்படியொரு கேள்வி கேட்குற” என்ற தனது அன்னையை அடக்கிய அழகேசன்,
“நாமெல்லாம் வேண்டான்னுதானே அங்கு போனாங்க, போனதிலிருந்து ஒரு தகவலுமில்லை.. இப்போ திடீரென வந்திறங்கினா ஏன்னு கேக்கத்தானே செய்வாங்க” என்றார்.
“நான் வந்தது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க திரும்பி போய்டுறேன்.”
தங்கையின் போலிக் கண்ணீரில் பதறிய அழகேசன்…
”அப்படிலாம் இல்லைம்மா, இத்தனை வருஷம் இந்த அண்ணகிட்ட பேசலையேன்னு வருத்தம்.” அவ்வளவு தான் என்பதைப்போல் அத்தோடு பேச்சினை நிறுத்திக்கொண்டார்.
‘அப்பத்தாவுக்கு மேல் இந்த அத்தை இருப்பாங்க போல’ என்று நினைத்த நானி ஏதோ வேலையிருப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினான்.
பாண்டியம்மாள் தான் ஏதோ நினைவு வந்தவராக… “எங்கே அமுதா என் பேத்தி” எனக் கேட்டார்.
“அதென்னம்மா பேத்தியை மட்டும் விசாரிக்கிறீங்க, அமுதாவுக்கு ஒரு பையனும் இருக்கான்ல” என்ற அழகேசனிடம்,
“அவள் இந்த வீட்டுக்கு மருமாகளாகவும், என் பேரனுக்கு மனைவியாகவும் வர போறவள் டா… அதேன், அவளை விசாரித்தேன்” என்றார். தனது எண்ணத்தை வெளிப்படுத்த இது தான் தருணமென்று கூறிவிட்டார்.
அங்கிருந்த அனைவரும்… அமுதா மற்றும் நரேன் தவிர்த்து.. பாண்டியம்மாள் கூறியதில் அப்பட்டமாக அதிர்ந்தனர்.
சிவாவின் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது.
நானிக்கு அமுதாவின் மகளை மணம் முடிப்பதால் இவர்களுக்கு ஏன் அதிர்ச்சி?