அத்தியாயம் 3 :
அமுதாம்பிகாவின் ஆடம்பர தம்பட்டம் பிடிக்காமல் வீட்டிலிருந்து வெளியேறிய நானி நேராக சென்ற இடம் வயல்வெளி.
அவன் மனம் அலைப்புறும் பொழுதெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கும் பச்சை பசேலென்ற வயல்களை சுற்றி நடக்கத் தொடங்கிவிடுவான். பொங்கும் மனதிற்கு ஆறுதலாக உணர்வான்.
“இவ்வளவு வருடம் கழித்து இவர்கள் வந்ததற்கான காரணம் என்ன?”, எவ்வளவு சிந்தித்தும் விடையில்லை.
மூன்று வருடங்களாக தன் வாழ்வில் நிகழும் பலவற்றுக்கே விடை அறிந்திட முடியவில்லை எனும் போது, இவர்களைப்பற்றி அறிந்து என்ன ஆகப்போகிறது.
விட்டேற்றியாக நினைத்தவன், நீர் பாய்ந்து கொண்டிருந்த வயலில் இறங்கி நின்றான்.
முட்டி கால் புதையும் வரை சேற்றில் அழுந்தி காலை ஊன்றி நின்றவனது மனதின் வெம்மை கொஞ்சம் கொஞ்சமாக குளுமையாவதைப் போல் உணர்ந்தான்.
“சின்னய்யா கிணத்துல இன்னைக்கு ஊத்து ஊறி புது தண்ணீங்க, உடம்புக்கு சேராம காய்ச்சல் வந்திட போகுதுங்க.” தனக்கு அருகில் கேட்ட குரலில், வயலிலிருந்து வெளியேறினான்.
“என்ன முனியாண்டி நான் எப்போ வயலுக்கு வந்தாலும் என் பின்னாலே வந்துடுறீங்க? நான் இங்கன எந்த வேலையும் செய்யாமலிருக்க… உங்க ஐயா உன்னை அனுப்பி வைக்கிறாரா?”
“அப்படியெல்லாம் இல்லைங்கலே, அரசியம்மா தானுங்க நீங்க வந்து ரொம்ப நேரமாகுதுன்னு, சாப்பிட உங்களை கூட்டியார சொல்லி என்னை அனுப்பனாங்க.”
தனது கேள்விக்கு அவசரமாக பதிலளித்த முனியாண்டியை பார்த்து, வரிசை மூறல்கள் தெரிய சிரித்தவன்… வாய்க்காலில் இறங்கி காலை கழுவ குனிந்த நொடி,
“அய்யோ அம்மா” என்ற அலறல் கேட்டு காலில் படிந்திருக்கும் சேற்றினை முழுவதும் சுத்தம் செய்யாமல் சத்தம் வந்த பக்கம் யாருக்கு என்னவானதோ என்று ஓடினான்.
நானி அங்கு வந்து பார்க்க… மண் சாலையில் சிவாவுடன் நந்துவும் சேர்ந்து கீழே விழுந்திருக்க, அவர்கள் இருவரும் வந்த வண்டி தலை குப்புற கவிழ்ந்திருந்தது.
தங்கையை மெல்ல தூக்கி விட்டவன்… அப்போது தான் கவனித்தான், அவர்களுக்கு முன்பு கார் ஒன்று நின்றிருக்க… நவ நாகரிகம் என்ற பெயரில் அரை குறையாக ஆடை அணிந்திருந்த யுவதி ஒருத்தி காட்டு கத்தலாகக் கத்திக் கொண்டிருந்தாள்.
“யூ… யூ… இடியட்ஸ்.. டர்ட்டி வில்லேஜ் பிப்பூள்…”
“நீங்க ரேஷ் ட்ரைவிங் பண்றதுக்கு என் கார் தான் கிடைத்ததா?”
அவளின் கத்தலில் நானி தங்கையை முறைக்க… “அய்யோ அண்ணா, நாங்க வண்டியில் முப்பதை தாண்டல… அவங்க தான் வந்து எங்க மேல மோதிட்டாங்க” என்று புகார் வாசித்தாள்.
“ஹேய்… பொய் சொல்லாதே, நானா வந்து உங்க மேல் இடித்தேன்… ஓட்டத் தெரியாம ஓட்டி… யூ.. புல்ஷிட்…” தனது காலை காரின் சக்கரத்தில் உதைத்தாள்.
“சரி, தவறு யார் பக்கமாக இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…”
தன்மையாக பேசிய நானியை கூர்ந்து பார்த்தவள் ஒரு நொடி அவனின் வசீகரிக்கும் தோற்றத்தில் ஈர்த்து நின்றாள். அவனது முறுக்கு மீசையை இழுத்து விடும் ஆவல் தோன்றியது.
அவள் நானியை ரசிப்பது, சிவாவிற்கு அவளின் கண்ணில் கொள்ளிக்கட்டையை சொருகினால் என்னவென்று இருந்தது.
நானி என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று கருதியவள் மெல்ல அவனை நெருங்கி உரசியவாறு நின்று கொண்டாள்.
‘புள்ளைக்கு தைரியம் வந்திருச்சு போல.’
சிவாவின் செயல் என்னவென்று நானிக்கு புரியவில்லையென்றாலும், நந்துவிற்கு நன்றாக விளங்கியது.
சிவா, நானி அருகில் நின்றதும் தனது பார்வையை மாற்றிய யுவதி, “என்னோட நியூ கார்… ஸ்கிராட்ச் பண்ணதை சரி செய்து கொடுத்துட்டு கிளம்புங்க. இந்த காரோட காஸ்ட் எவ்வளவுன்னு தெரியுமா? பட்டிக்காட்டுல இருக்குற உங்களுக்கு எப்படித் தெரியும், முன்ன பின்ன காரை பார்த்தாவது இருக்கீங்களா?” திமிராகக் கேட்டிருந்தாள்.
அந்த யுவதியுடன் நின்றிருந்த இளைஞன்… ஏதோ பேச வாயெடுத்த நானியிடம் பார்வையாலே பிரச்சனை எதுவும் வேண்டாமென்று இரைஞ்சினான்.
அவனின் முகத்திற்காக நானி அமைதியாக வாய் மூடி நிற்க, “இந்த அண்ணாவுக்கு என்னவானது… அந்த பொண்ணு என்ன பேச்சு பேசுறா, பார்த்துட்டு சும்மா நிக்கிறாரே..!” நந்தினி புலம்பினாள்.
அவர்கள் அமைதியாக இருக்கவும்… அந்த நவநாகரீக யுவதி மேலும் பேச முயல்கையில் அவளின் கைபிடித்து இழுத்துச் சென்றான் அந்த இளைஞன்.
பார்வையாலே நானியிடம் மன்னிப்பை யாசி… காரினை கிளப்பிச் சென்றான்.
நானிக்கு அவ்விளைஞனின் அமைதியான பண்பு மற்றும் அவனை பார்த்த ஒரு சில நிமிடங்களிலேய பிடித்து விட்டது.
கீழே விழுந்து கிடந்த வண்டியை நானி தூக்கி நிறுத்தியபடி, “என்னம்மா மேடத்துக்கு பயம் போயிருச்சு போல.. இந்த உரிமை கொண்டாடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்ன்னு சொல்லி வை..” விரல் நீட்டி எச்சரித்தவனாய் கூறினான்.
நந்துவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, கண்ணில் நீருடன் நின்றிருக்கும் சிவாவை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள்.
“இப்படி சும்மா எதற்கெடுத்தாலும் அழுதுகிட்டேயிருந்தா விளங்கிடும்” எனச் சொன்னவனாக, “எதற்கு வந்தீங்க?” என்றான் கோபமாக,
“அம்மா வாழை இலை அறுத்துட்டு வர சொன்னாங்க” என்ற தங்கையிடம்,
“எனக்கு ஒரு போன் பண்ண வேண்டியது தானே!” என்றவன், ‘நீ வயலுக்கு தான் வந்திருக்கேன்னு அவங்களுக்கு எப்படிப்பா தெரியும்’ என்ற மனதை அடக்கி தானே சென்று வாழை இலைகள் அறுத்து வந்து கொடுத்தான்.
“இங்க இருக்க வயலுக்கு வரதுக்கு உங்களுக்கு வண்டி தேவையா?, நடந்து வர முடியாதா?” இந்த கோபம் எதற்கென்று தெரியாமலே கடுகடுத்தான். தொட்டி நீரில் கை கழுவ குனிந்த நேரம்,
“சிவாவை திட்டிட்டன்னு உனக்கு உம்மேல கோபமிருந்தா, தனியா உன் ரூம்க்கு போய் கத்து… அதைவிடுத்து சும்மா என்கிட்ட கத்திட்டு இருக்காதே..” என்ற தங்கையின் குரலில், “அவளுக்கு கேட்டுடப்போகுது நந்து” என்றபடி மெல்ல நிமிர்ந்தவன் அங்கு சிவாவை காணாது வயலைச்சுற்றி தன் பார்வையை சுழல விட்டான்.
“சிவா அப்போவே போயாச்சு… அவள் மேல உனக்கும் அன்பு இருக்குன்னு தெரியும், அப்புறம் எதுக்குண்ணா இந்த வெறுப்பு கோபமெல்லாம்..?”
தங்கையின் கேள்விக்கு பதிலளிக்க நினைத்தாலும் அவனால் முடியாதே!
வலி சுமந்த பார்வையை தங்கையின் மீது வீசியவன்…
“எதுவும் பேசாம வா போகலாம்” என்றபடி நந்துவையும் அழைத்துக்கொண்டு வீடு வந்தான்.
அண்ணனும் தங்கையும் வீடு வந்து சேர, அவர்களுக்கு முன்னால் வந்த சிவா கை விரல்களை பிசைந்துக்கொண்டு வீட்டின் உள்ளே பார்த்தவாறு வாயிலிலே நின்று கொண்டிருந்தாள்.
“ஏட்டி..! இங்கனவே நிக்குறவ”, என்றபடி உள்ளே எட்டிப்பார்த்த நந்து.. போச்சு என்றபடி தலையில் கைவைத்து வாயிற்படியில் அமர்ந்துவிட்டாள்.
“இவங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ரியாக்ட் பண்றாங்க..” நானிக்கு ஒன்றும் புரியவில்லை.
அவன் உள்ளே பார்த்தபோது..
பாண்டியம்மாள் ஒரு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தார்.
அக்காட்சி உலக அதிசயமாகத் தோன்றியது நானிலனுக்கு, பாண்டியம்மாள் நானியைத் தவிர வேறு யாரையும் தொட்டு கூட பேசியதில்லை. அப்படிப்பட்டவர் இங்கு ஒரு பெண்ணை அணைத்திருப்பது ஆச்சரியமாகப்பட்டது.
நானியைக் கண்டதும்.. மகிழ்ச்சி கொப்பளிக்க, “கண்ணு வந்துட்டீயா? இந்நேரத்துல எங்க போயிட்டு வர,” அவன் கை பிடித்து இழுத்து வந்தவர் சற்று நேரத்திற்கு முன் தான் அணைத்திருந்த பெண்ணை அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.
“நானி இவள் தான் உன் அத்தை பொண்ணு மீனலோச்சனி”,
அவர் கூறி முடிக்கவும் வாசலில் அமர்ந்திருந்த நந்து மற்றும் சிவாவுக்கு பக்கென்று இருந்தது என்றால், புதியவளோ… “நோ” என வீடே அதிர கத்தினாள்.
“இவளுக்கு எப்பவும் கத்திக்கிட்டே இருக்கணும் போல, இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரோடுன்னு கூட பார்க்காம சண்டை போட்டுட்டு வந்தாள், இங்கு இப்போ பேய் மாதிரி கத்துறாள்” என்று உள்ளுக்குள் நானி சலித்துக்கொண்டான்.
“போச்சு எல்லாம் போச்சு, இந்த ஆட்டக்காரி அமுதா அத்தை மகளா! இது தெரியாம அவ வண்டியில இடிச்சிட்டோமே, அப்பத்தாகிட்ட மட்டும் போட்டுக்கொடுத்தாள் நம்ம கதை அவ்வளவுதான்… ஆண்டவா என்னை காப்பாத்துங்க, ச்ச… சாரி, சாரி… என் பக்கத்துல உட்காந்திருக்க சிவாவையும் என்னோட சேர்த்து காப்பாத்துங்க” என்று ஊரிலிருக்கும் அனைத்து கடவுள்களுக்கும் மனு அனுப்பினாள் நந்தினி.
புலம்பியவளின் விலாவினிலே தன் கை முட்டியால் இடித்த சிவா, “புலம்பாம உள்ளே வா… அழகு மாமா இருக்கும் போதே உள்ளே போனா தப்பிக்கலாம்” என்று ஐடியா வழங்கிய சிவா, நந்துவை முன்விட்டு பின் நுழைந்தாள்.
தன் ஆசை பேத்தி திடீரென கத்தவும்… என்னவோ, ஏதோவென்று பயந்த பாண்டியம்மாள், “என்னடா மீனா என்னாச்சு?” என்று வினவ… மீண்டும் கத்தியவள்,
“என்னோடு நேம் மீனா இல்லை.. ஒமியா… டோன்ட் கால் மீ மீனலோச்சனி… இட்ஸ் இரிடேட்டிங்” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்ட நானி, நந்து, சிவா மூவரும் வாய்க்குள்ளே சிரிக்க… ஒமியா’வுடன் வந்த இளைஞன் வாய்விட்டு சத்தமாகவே சிரித்தான்.
அவன் சிரித்ததும் பற்களை நரநரவென கடித்த ஒமியா..
“என்னை மாதிரி மாடர்ன் ஆன பெண்ணுக்கு யார் உங்களை ஆதிகால பேர் வைக்க சொன்னது, இங்க பாருங்க இவனெல்லாம் என்னை கிண்டல் செய்து சிரிக்கிறான்” என்று பாண்டியம்மாளை வறுத்தெடுத்தாள்.
“அது எங்க ஆத்தா பேரு கண்ணு… நம்ம வீட்டு முதல் பெண் வாரிசுன்னு உனக்கு எம்புட்டு ஆசையா வச்சேன்.. இப்போ என்னடான்னா ஏதோ மியாவ்ன்னுட்டு இருக்க” என்று நொடித்தார்.
பாட்டியும் பேத்தியும் வாதாடிக்கொண்டிருக்க, நானியின் அருகில் வந்த இளைஞன்…
ஹாய்… “அம் கபிலன், உங்க அத்தை பையன், அங்கு குடிச்சிட்டு நிக்கிறவளுக்கு அண்ணன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
கபிலன் நானியிடம் தனது அறிமுகப் படலத்தை அரங்கேற்றினாலும் அவனின் முழுப்பார்வையும், அங்கிருந்த நந்துவின் மீதே பதிந்திருந்தது.
கபிலன் நந்துவை பார்த்த நொடியே தலை குப்புற அவள் காலில் காதலெனும் பெயரில் விழுந்துவிட்டான்.
தமிழ்நாட்டிற்கு வந்து தரையிறங்கியதும் தனக்கு சொந்தமாக ஒரு கார் வேண்டுமென்று ஒமியா பிடித்த அடத்தில், அவளுக்காக அப்பவே ஷோரூமிற்கு அழைத்து சென்று அவள் விரும்பிய காரை வாங்கிக்கொடுத்து வரும் போது தான் கபிலன் நந்துவை சந்தித்தான்.
நந்து ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வர, பின்னால் அமர்ந்திருந்த சிவா பயத்தில் கண்களை மூடி அவளை இறுகப்பற்றியிருந்தாள். தீடீரென பைக்கின் முன் சக்கரத்தை மேலே உயர்த்தி, நந்து வீலிங் செய்த நேரம் சரியாக கார் ஒன்று வந்தது.
நந்து சுதாரிப்பதற்குள் ஸ்கூட்டி காரில் இடிக்கவும் மீனா டக்கென பிரேக் போடவும் சரியாக இருந்தது.
இருப்பினும் ஸ்கூட்டி நிலைத்தடுமாறி நந்துவும், சிவாவும் கீழே விழுந்திருந்தனர்.
காரின் முன் பக்கம் அமர்ந்திருந்த கபிலனுக்கு நந்துவின் சேட்டை பிடித்துப்போக, அவள் கீழே விழுந்த சமயம் முகத்தில் பிரதிபலித்த முகச்சுளிப்பில் மொத்தமாக அவனை அடித்து வீழ்த்தியிருந்தாள்.
அதனை நினைத்து பார்த்தவனின் கண்கள் அழகாக சிரித்தது.
“காரில் இடித்ததிலிருந்தே இவன் என்னை பார்த்து இப்படி தான் பல்லை காட்டிட்டு இருக்கான். இவன் வாயிலே மிளகாய் பட்டாசை கொளுத்தி போடணும்” என்றபடி நந்து அங்கிருந்து நகர்ந்தாள்.
அரசி கண் காட்ட, நானி… “இவர்கள் இப்படி தான் பேசிக்கொண்டே இருப்பாங்க. வாங்க நாம் போய் வயிற்றை கவனிப்போம்” என்று உணவு மேசைக்கு கபிலனை அழைத்துச் சென்றான்.
அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளைக் கண்டதும்… ஆவலாக அமர்ந்த கபிலனுக்கு அரசியும் பத்மாவும் பார்த்து பார்த்து பரிமாறினர்.
உணவின் சுவை அபாரமாக இருக்க, ரசித்து உண்டவன், “நம்ம ஊரு சாப்பாட்டை அடிச்சிக்கவே முடியாது” என்று பாராட்டவும் தவறவில்லை.
“எல்லாவற்றையும் ஒரே ஆளாக சமைத்தது அரசி அத்தை தான்” என்று நானி கூறும் போது மொத்த குடும்பமும் பாண்டியம்மாளுடன் வந்து அமர, அவ்விடம் விட்டு அரசி நகர… நானியும் பாதி உணவில் எழுந்து கொண்டான்.
கபிலனுக்கு ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.
உணவினை முடித்துக்கொண்டு அரசியை தேடிச்சென்றான். அவர் தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டிருக்க, “சாப்பாடு செம டேஸ்ட் சித்தி.. இனி அமுதா சாப்பாட்டிலிருந்து தப்பித்துவிடலாம்” என்று புன்னகை முகமாகக் கூறினான்.
கபிலன் சித்தி என்றழைத்ததில் மகிழ்ந்தவர்.. “நிறைய சாப்பிட்டியா கண்ணு, இல்லை பாதியிலே எழுந்துட்டியா?” என்று அக்கறையாக விசாரித்தார்.
அவரின் கண்ணு என்ற பாசமான விளிப்பு கபிலனின் நெஞ்சத்தை நிறைத்தது.
“நான் நல்லா வயிறு புல் ஆகும் வரை சாப்பிட்டேன். பட் நானி தான் பாதி சாப்பாட்டிலே எழுந்து போய்ட்டாங்க” என்றான்.
“அச்சோ, புள்ளைய கூட கவனிக்காம நான் அங்கிருந்து வந்துட்டனே!” என பதறிய அரசியை அமைதிப்படுத்திய கபிலன், “உங்களுக்குள் ஏதாவது பிரச்சினையா சித்தி?” என்று கேட்டிருந்தான்.
“பிரச்சினை ஒண்ணுமில்லை கண்ணு, ஒரு மூணு வருஷமா நானி அவன் அப்பத்தாகிட்ட பேசுறது இல்லை, அவரை பார்த்தாலே ஒதுங்கி போய்டுவான்.
அண்ணனும் அண்ணியும் கூட நானி கிட்ட பேச மாட்டாங்க..” அதுக்கான காரணம்… அரசி என்ன கூறுவதென்று தெரியாமல் இழுக்க,
“காரணம் எனக்கு தெரிய வேண்டுமென்றில்லை சித்தி… எப்போ எனக்கு தெரியனும் நினைக்கிறீங்களோ அப்போ சொல்லுங்க” என்று ஆசுவாசப்படுத்தியவன்.. “ஐ லைக் யுவர் கண்ணு வோர்ட் சித்தி” என்றவனாக உள்ளே சென்றான்.
தாய் தந்தையுடன் வளர்ந்திருந்தாலும் அவர்களது அன்பின்றி தனிமையில் வாழ்ந்த கபிலனுக்கு… நானியின் நட்பு பேச்சும், பத்மாவின் அன்பு கலந்த உபசரிப்பும்… அரசியின் அக்கறையுடனான பாசம் கொண்ட கவனிப்பும் மிகவும் பிடித்தது.
அவர்கள் பால் அவன் மனதை ஈர்க்கச் செய்தது. காரணமற்ற அன்பு என்பதை அவன் இங்கு தான் உணர்கிறான்.
கபிலன் வரவேற்பறையில் அமர்ந்திருக்க அவனிடம் வந்த சிவா… “பாட்டி உங்களுக்கு ரூம் காட்ட சொன்னாங்க போலாமா?” என மென் குரலில் கேட்டாள்.
சிவாவின் பயந்த சுபாவமும், தனிவான பேச்சும்… தங்கையென்ற உறவும் அவள் மீது பாசத்தை விளைத்தது.
சிவா முன்னே சென்று கொண்டே ஒவ்வொரு அறையாக காண்பித்து.. “உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அங்கு தங்கிக்கோங்க” என்க, பட்டென்று அவன் “பிடிக்கவில்லை” என்றான்.
“பிடிக்கலைனாலும் எந்த ரூம் வேணும் சொல்லுங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி மாற்றித்தர்றேன்… இல்லைன்னா பாட்டி என்னை ஒரு வழி செய்துடுவாங்க.” பயத்தில் அவளின் விரல்கள் நடுங்கின.
“ஹேய் கூல் பேபி… எதுக்கு இப்போ என்னை பார்த்து இப்படி பயப்படுற நீ? என்னை அண்ணான்னு கூப்பிடாம யாரோ மாதிரி பேசுறதுதான் பிடிக்கவில்லை” என்றான்.
“நான் அப்போ அண்ணா சொன்னா உங்களுக்கு பிடிக்குமா?, நீங்க திட்டுவீங்கன்னு தான் அண்ணா சொல்லலை,” அப்பாவியாக சொல்லியவளின் தலையை பிடித்து ஆட்டியவன்… “இப்படியொரு தங்கச்சி பிரீயா கிடைக்குதுன்னா யார் வேண்டான்னு சொல்லுவாங்க,” என்றான்.
அவனது அன்பான பேச்சில் உடனடியாக அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.
இவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த நானிக்கு தன்னவளிடம் தான் காட்ட முடியாத அரவணைப்பினை ஒரு அண்ணனாக அவன் காட்டுகிறானென்று ஆறுதல் அடைந்தான்.
அதன் பின்னர் இருவரும் ஒன்றாக பல கதைகள் பேசி வீட்டினை முழுக்க சுற்றிப்பார்த்து… இறுதியாக ஒரு அறையை தேர்வு செய்தனர்.
“எனக்கு இங்க இவ்ளோ க்யூட்டா ஒரு தங்கச்சி கிடைப்பான்னு தெரிஞ்சிருந்தா எப்பவோ ஓடி வந்திருப்பேன்.”
“நந்துக்கு அப்புறம் என்கிட்ட இப்படி சிரிச்சு பேசுற ஆளு நீங்க தான்… சோ உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”
வெள்ளந்தியான அவளின் பேச்சில் கபிலன் அகம் மகிழ்ந்தான்.
‘உனக்கு எப்போதும் ஒரு அண்ணனாக நான் துணையிருப்பேன்’ என்று மனதில் கூறிக்கொண்டான்.
கபிலன் தனது அறைக்கு அருகிலிருக்கும் அறையை சுட்டிக்காட்டி… “இதை ஏன் எனக்கு காண்பிக்கவில்லை, வெளிய கர்ட்டன் கலரே நல்லாயிருக்கே!” எனக் கேட்டுக்கொண்டே அவ்வறையினை திறக்க போகயில்,
“அய்யோ..! அண்ணா அந்த ரூம் வேண்டாம், அது கலெக்டர் சார் ரூம்” என்று விரைந்து மொழிந்தாள்.
“கலெக்டரா!? ரெண்ட்க்கு ரூம் கொடுத்திருக்கிறீங்களா?” ஆச்சரியமாக வினவினான்.
சிவா அவனின் கேள்வி புரியாது குழம்பி நிற்க,
“அந்த கலெக்டர் சார் நான் தான்” எனக் கூறிக்கொண்டே அங்கு வந்தான் நானிலன்.
(சும்மா இவன் கலெக்டர் சொல்லி வெறுபேத்தாதுன்னு நீங்க சொல்றது கேட்கிறது…. கபிலனுக்கு அவன் கலெக்டர்ன்னு தெரியணுமில்லையா, அதுக்கு தான் இப்போ சொன்னது.)
“வாவ்…. ரியலி…. சூப்பர் மச்சான்” என்று மனதார வாழ்த்தினான்.
சிறு புன்னகையுடன் ஏற்ற நானி, “உங்களுக்கு இந்த ரூம் வேணும்னா எடுத்துக்கோங்க” என்க, சிவாவிற்கு மயக்கமே வந்தது.
ஒருநாள் அவள் அறையை கூட்டி பெருக்குவதற்காக உள் நுழைந்ததற்கே அந்த கத்து கத்தி வெளியேற்றியவன் இன்று தனது அறையை மற்றொருவரை எடுத்துக்கொள்ள கூறினால் மயக்கம் வரத்தானே செய்யும்.
“அதெல்லாம் வேண்டாம் கலெக்டர் சார்… இப்போ எனக்கு கொடுத்திருக்கும் அறையே ஃபிட்டா இருக்கு…” என்றவன், “கலெக்டர் சாரிடம் சின்ன மனு…” என்றான்.
“ம்ம்.. சொல்லுங்க கபிலன் அவர்களே,”
“இந்த வாங்க போங்க இதெல்லாம் வேண்டாமே, எனக்கு ஏதோ தாத்தா பீல் ஆகுது..”
“ஹாஹாஹாஹா…” அழகாய் சிரித்த நானி, “தங்களது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது மச்சி” எனக் கூறி கபிலனை அணைத்துக்கொண்டான்.
நடப்பதெல்லாம் சிவாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களது பேச்சுக்கு நடுவில் இனி நாம் எதற்கு என எண்ணியவள் வேலையிருப்பதாகக் கூறி சென்றுவிட்டாள்.
செல்லும் அவளை… “நல்லா தானே இருந்தாள், இப்போ ஏன் ஏதோ மந்திரிச்சு விட்ட மாதிரி போறாள்?” என்ற கபிலனின் கேள்விக்கு,
“நான் சிரித்தது மேடம்க்கு அதிசயமா தெரிஞ்சிருக்கும்” என்று நானி பதிலளித்தான்.
“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கமாட்டீங்களா? அவ உன்னை சார் சொல்றாள்… நீ மேடம் சொல்ற.. என்ன தான் நடக்குது இங்கு,”
“சிவாவுக்கு என்னை பார்த்தால் பயம்” என்றதோடு அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் நானி.
நானி பேச்சை மாற்றியதை அறிந்த கபிலனும், தனது படிப்பு மற்றும் தொழில் பற்றி பேச ஆரம்பித்தான்.
இருவருக்குள்ளும் அழகிய நட்பு மலர்ந்தது. உறவையும் தாண்டிய அன்பு துளிர்த்தது.
“அய்யா… நானி… ராசா” என்ற விளிப்புடன் பாண்டியம்மாள் அவர்களின் பேச்சிற்கு இடையூறாக வரவும், நானியின் முகம் சட்டென்று இறுகியது.
இவ்வளவு நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்தவன், பாண்டியம்மாளின் சத்தத்தில் கடுமையானதை கவனித்த கபிலனுக்கு இங்கு நிலவும் பிரச்சினை மிகவும் பெரியது எனத் தோன்றியது.
அங்கு வந்த பாண்டியம்மாளின் கையில் காக்கி உரை ஒன்றிருந்தது.
நானியின் அருகில் அமர்ந்தவர், “இந்த அப்பத்தா மேல இம்புட்டு பாசமா ராசா… இந்த வருஷம் குளம் குத்தகை நமக்கு கிடைக்கலைன்னு வெசனத்துல உட்காந்திருந்தேன், ஆனால்… இந்த அப்பத்தா மனசறிஞ்சு எனக்கே குத்தகைக்கு ஆர்டர் கொடுத்துட்டீயே ராசா… ரொம்ப சந்தோஷம் ராசா” என வார்த்தைக்கு வார்த்தை ராசா, ராசா என்று அழைத்ததில் கடுப்பின் உச்சிக்கே சென்ற நானி…
“இந்த ஆர்டர் எப்படி உங்க கைக்கு வர வச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். உறவு என்பதெல்லாம் நான் கலெக்டர் ஆபிசில் நுழையும் வரை தான், ஏலம் எடுத்தவர் உயிரோடில்லை… சோ அடுத்த கையான உங்களுக்கு தானா டெண்டர் கிடைச்சிருக்கு. இதுக்கும் எனக்கும்… முக்கியமா என் பதவிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.” மிக அழுத்தமாகக் கூறினான்.
இத்தனை வருடம் நானி எதையும் வெளிப்படையாக பேசியிராததால், அவன் ஏன் தன்னை வெறுக்கின்றான் என்ற காரணம் தெரியாமல் குழம்பிய பாண்டியம்மாளுக்கு இன்று அவனது பேச்சிலிருந்து, ‘பய ஏதோ கண்டுபிடிச்சிருக்கு…’ சரியாகக் கணித்தார்.
‘ஆனால், எதுவரை அவனுக்கு தெரியுமென்று தெரியவில்லையே…’ சிந்தித்தவர், என்னை மீறி என்ன நடந்துவிட போகிறதென்ற மிதப்பில் இருந்தார்.
நாம் நினைப்பெதெல்லாம் நமக்கேற்றவாறு நடந்துவிட்டால் கடவுள் என்ற ஒருவர் எதற்கு?
எல்லோரும் ஏதோவொரு நிலையில் அசட்டையாக இருந்து விடுபவர்கள் தான், நடந்து முடிந்த பிறகு தான் அதன் வீரியம் புரியும்.. எப்பேற்பட்டவராக இருந்தாலும் பண்ணடியம்மாளும் அதற்கு விதிவிலக்கில்லையே… அவரும் புயலில் சிக்கித்தானே ஆக வேண்டும். என்னவொன்று, தான் என்கின்ற நிலையில் கர்வமாக இருந்துவிடக் கூடாதென்று இவ்வளவு வயது மற்றும் அனுபவம் பெற்ற பிறகும் அவருக்கு புரியவில்லையே.
பாண்டியம்மாளை பார்த்தாலே நானிக்கு கொன்று புதைத்துவிடும் வேகம் தான்… ஆனால், அவன் கட்டுப்பட்டு இருப்பதெல்லாம் தன் அத்தையின் வார்தைக்காக மட்டுமே, அவனது கட்டுப்பாடுகளை உடைத்து அவை வெளிவரும் நாட்களும் வெகுதூரமில்லை.
பாண்டியம்மாள் மற்றும் நானியின் மறைமுகப் பேச்சிலிருந்தே, பிரச்சினையின் ஆரம்பம் இந்த அம்மம்மா தானென்று கபிலனுக்கு புரிந்தது.
பாண்டியம்மாள் சென்றதும் நானி தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
அவனின் ஓய்ந்த தோற்றம், கபிலனுக்கு பாண்டியம்மாளிடம் மிடுக்குடன் பேசிய நானிலன் இவனா என்று எண்ண வைத்தது.
என்னவென்று தெரியாமல் எப்படி அவனுக்கு ஆறுதல் அளிப்பதென்று புரியாமல் தவித்த கபிலன்,
“எல்லாம் சரியாகிவிடும் நானி” என்றான்.
“எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கும் தெரியும் கபிலா, ஆனால் எப்போ? சரியாவதற்குள் நான் நிலைகுலைந்து விடுவேன் போலிருக்கே.”
இவ்வளவு நாள் யாரிடம் சொல்லி வருத்தப்படுவதென்று கூட தெரியாமல் தனக்குள்ளே மருகியவன்… கபிலனின் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீர் சிந்தினான்.
ஒரு மாவட்டத்தையே தன் கைகளுக்குள் கட்டி ஆள்பவன் சிறு பிள்ளையென கண்ணீர் வடிப்பது கபிலனுக்கு ஆச்சரியத்தோடு வருத்தத்தையும் அளித்தது.
‘எதுவும் தெரியாமல் என்ன செய்வது, ஆனால்… ஏதாவது செய்து அனைத்தும் சரி செய்ய வேண்டும்’ என்று எண்ணினான்.
சில நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக்கொண்ட நானி…
“சாரி டா, உன்னையும் வருத்தம் கொள்ள செய்துட்டேன்” எனக் கூறி, கபிலனின் பதிலை கேட்காமல் அறைக்குள் நுழைந்து கதவடைத்தான்.
ஏற்கனவே பல சிக்கல்கள் சூழ்ந்திருக்கும் போது, நானியை தாக்க வந்த பெரும் சூறாவளி அமைதியாக இருக்க, அவனின் அமைதியை அழிப்பதற்காக வேறொரு சிக்கல் காசியின் மூலம் வந்தது.