அத்தியாயம் 5 :
காலை நேரம் ஒன்பது.
கோவில் மண்டபம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
அங்கு கூடியிருந்தோர் அனைவரின் முகத்திலும் என்ன நடக்குமென்ற கலவரம் குடிக்கொண்டிருந்தது.
அவர்கள் பார்வை அனைத்தும் ஒருவரின் வருகைக்காக காத்திருந்தது.
சுமார் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் கோவிலின் வாயிலில், மிகுந்த சத்தத்துடன் ஹாரன் ஒலியை எழுப்பியவாறு ஜீப் வந்து நிற்க அதிலிருந்து கம்பீரமாக பெண் சிங்கத் தோரணையில் ஆளுமையுடன் இறங்கி நடந்து வந்தார் பாண்டியம்மாள்.
இதுவரை கிராமங்களில் நடைபெறும் ஊர் பஞ்சாயத்துக் கூட்டத்தினைக் கண்டிராத கபிலன் பாண்டியம்மாளுடன் வந்திருக்க, அவரின் இந்த நடை, தோரணை எல்லாம் ஆச்சரியமாக இருந்தது.
“இவரைப்பார்த்து யாராவது எழுபதை தொடும் வயதென சொல்ல முடியுமா!” என வியந்தான். இங்கு நடக்கும் எல்லாமே அவனுக்கு வியப்புத்தான்.
அனைவருக்கும் பொதுவாக… நடுநாயகமாக போடப்பட்டிருந்த மர நாற்காலியில் ஒரு ஆணின் தோரணையுடன் அமர்ந்த பாண்டியம்மாள், வெற்றிலையை மடித்து வலது கையால் இடது பக்க பற்களில் வைத்து மென்றபடியே பேச ஆரம்பித்தார்.
“குளம் குத்தகை நாம தாலே எடுத்திருக்கோம். இன்னும் நாலு வருஷத்துக்கு நமக்கு தண்ணீ பிரச்சனை எதுவும் இருக்காது.” பாண்டியம்மாள் மிதப்பகாத் தெரிவித்தார்.
கூடியிருந்தோர் அனைவரும் அமைதியாக இருக்க… பெரியவர் ஒருவர் பேசினார்.
“நம்ம ஊரு குளத்துல மீன் வளர்ப்பு செய்ய போறதா தகவல்…” அவர் சற்று சந்தேகமாக இழுத்தார்.
“ஆமா… அதுக்கு எதுக்குவே இம்புட்டு இழுவை, குளத்துல மீன் வளர்த்தா கொள்ள லாபம் பாக்கலாம். அதுல பெரும்பகுதி நம்ம ஊருக்கு தாம்லே,” பாண்டியம்மாள் புன்னகை முகமாகக் கூறினார்.
“குடிக்கிற தண்ணியில மீன் வளர்த்தா… அந்த தண்ணிய எப்டிங்கம்மா பொழங்குறது…” கூட்டத்தில் வேறொருவர் கேட்டார்.
“அதேன்… குடி தண்ணீக்கு அத்தான்பெரிய டேங்க் கட்டி குடுத்திருக்கோம்ல… அப்புறம் என்னாலே,”
“அந்த டேங்குக்கே குளத்துல இருந்து தானுங்க தண்ணீ வருது…”
“அது எனக்கு தெரியாதுல…. ஆனா இந்த குளம் குத்தகைக்கு எடுத்ததுல பெரும் தொகை என் கை காசுவே, அதனால நான் என்ன பண்ணனும் நினைக்கிறனோ.. அதேன் செய்வேன்” என்ற பாண்டியம்மாள் சேலை தலைப்பை உதறி தோளில் போட்டபடி எழுந்து சென்றார்.
அவரின் எதிர்மறையான கருத்துக்குக்கூட ஊர் கட்டுப்படுவதைக் கண்டு…’லேடி டான் ஆக இருப்பாங்க போலையே,’ மனதில் கூறிக்கொண்ட கபிலன் பாண்டியம்மாளின் அழைப்பில் ஓடிச்சென்று வண்டியில் ஏறினான்.
பாண்டியம்மாளை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என நன்கு அறிந்த ஊர் மக்கள், அவரது வார்த்தைகளை ஏற்றவர்களாய் தங்களுக்குள் புலம்பியபடி கலைந்தனர்.
“ஏன் அம்மம்மா.. குடிக்க பயன்படுத்தும் குளத்தை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்துவது தவறா உங்களுக்கு தெரியலையா?”
கபிலன் கேட்ட கேள்வியில்… தனது தொடையை தட்டியவாறு அட்டகாசமாய் சிரித்தார் பாண்டியம்மாள்.
அவரது சிரிப்பு… ‘நாம் ஏதும் காமெடி செய்துவிட்டோமா!’ என்று கபிலனை எண்ண வைக்குமளவிற்கு இருந்தது.
“இங்க பாருங்க அப்பு…. நாம செய்றது ஊர் நன்மைக்கு மாதிரி தெரியணும். ஆனால், நமக்கு லாபம் தரக்கூடியதா இருக்கணும்.
இந்த ஊர் தலைவரே பேருக்குத்தான். எல்லாம் இங்கன நம்ம ராஜ்ஜியம்தேன். அந்த தலைவர அடக்கி, குளத்தை நம்ம பணத்துல குத்தகைக்கு எடுத்தது எதுக்குங்கிற… எல்லாம் நம்ம கையில இருக்கணுங்கிறதுக்குதேன். அவவன் பாண்டியம்மாள் அப்படின்னா, கக்கத்துல துண்டை மடிச்சி சொருகி… பயபக்தியா கும்படணும்… என்னா புரிஞ்சுதா?. இதுக்கு பொறவு, இந்த கேள்வி கேட்கிற வேலையெல்லாம் வச்சிக்காத” என்றவர் சில நிமிடம் அமைதிக்கு பிறகு,
“ஊர்ல எல்லா பயலுவலும்… போர் இறக்கிவச்சிறுக்கானுவ, அவனுவல நினைச்சு வெசனப்படாதீரு” என்றார்.
வீடு வந்து சேர்ந்ததும் கபிலன் நானியை தேட அவன் அலுவலகம் சென்றிருந்தான்.
“நேராக அங்கு சென்றே பார்க்கலாமா?” அவன் யோசித்துக்கொண்டிருக்க, பத்மா கபிலனை அழைத்திருந்தார்.
“நந்து வண்டி என்னாச்சுன்னு தெரியல கண்ணு… ஸ்டார்ட் ஆகலையாம். கொஞ்சம் இவளுங்க ரெண்டு பேரையும் நம்ம காருல கொண்டு போய் காலேசுல விட்டு வரீயாய்யா.. உன் மாமா வயலுக்கு போனவரு இன்னும் வரல.”
தேன் வாயிலேயே சொட்டும்போது… உதட்டை அழுந்தவா மூடிக்கொள்ளப்போகிறான்.
பதினைந்து நிமிடம், தன்னவளை அருகில் பார்த்து ரசிக்கலாமென்று எண்ணியவன் பத்மாவிடம் சரியென தலையாட்டினான்.
கபிலன் நந்துவை பார்த்து காது வரை சிரித்து வைக்க, அதில் கடுப்பானவள்… “இவன் நம்மள பார்க்குற பார்வையே சரியில்லையே, என்னவாயிருக்கும்” என்று சிந்தித்தவளை கபிலனின் குரல் கலைத்தது.
தான் தேர்ந்தெடுத்த உடையில் செதுக்கி வைத்த சிற்பம் போலிருந்தவளை, தன்னை மறந்து ரசித்தவன்… தன்னையும் அறியாமல் “ரொம்ப அழகா இருக்க”, எனக் கூறினான்.
வெட்டும் பார்வையை அவன் மீது இவள் வீச.. “நான் உங்க டிரெஸ்ஸை சொன்னேன்” என்று சமாளித்து வைத்தான்.
அப்போதுதான் ஞாபகம் வந்தவளாய்.. “அம்மா இந்த ட்ரெஸ் யார் என் அறையில் வைத்தது” என்று வினவினாள்.
பத்மா “எனக்கு தெரியாது” என்க,
கபிலன் திருட்டு முழி முழித்தான்.
கபிலனின் கள்ளப்பார்வையை கண்டுகொண்ட சிவா, “மாமா தான் இரவு உன் அறையிலிருந்து வெளியேறுவதை பார்த்தேன். அவுங்க தான் வைத்திருப்பாங்க” எனக்கூற தனது அண்ணன் வாங்கிக்கொடுத்ததென அறிந்ததும் அத்தோடு ஆடைப் பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தாள்.
கண்களாலே தனது தங்கைக்கு பெரியகும்புடாக போட்டான் கபிலன்.
கபிலன் மற்றும் சிவாவின் ஜாடை பேச்சினை கண்ட பத்மா.. “கூட்டு களவாணிங்க ஏதோ திருட்டுத்தனம் பண்ணுதுங்க” என கண்டு கொண்டார்.
“எப்படியும் தெரிந்து தானே ஆகும்” என்று தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்.
கபிலன் காரினை சீரான வேகத்தில் செலுத்த, அவனுக்கு அருகிலிருக்கும் முன்னிருக்கையில் சிவா அமர்ந்திருக்க.. பின்னிருக்கையில் நந்து அமர்ந்திருந்தாள்.
சிவாவும், கபிலனும் பல கதைகள் பேசிக்கொண்டிருக்க, யாருக்கோ வந்த விருந்தென்று நந்து சாலையோர காட்சிகளை ரசித்தபடி வந்தாள்.
தங்கையின் பேச்சில் கவனம் பதித்திருந்தாலும், கண்ணாடி வழியாக கபிலனின் பார்வை பதிந்திருந்ததென்னவோ தன்னவளின் மீது,
தன் மேனியைத் தீண்டும் குறுகுறு பார்வையில் தனக்கு முன்பாக முன்னிருக்கைகளின் நடுவில் மேலேயிருக்கும் ரிவர்வியூ கண்ணாடியை பார்த்தவள்… கபிலனின் கள்ளப்பார்வையை கண்டு கொண்டவளாக, வெட்டும் பார்வையை பதிலாக கொடுத்தாள்.
அவளின் முறைப்பை கபிலன் கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை. சிறு நகையுடன் சாலையில் கண் பதித்தான். ஆனால் அவர்களை கவனித்த சிவாவிற்கு நந்துவை நினைத்து பயம் கவ்வியது.
கல்லூரி வாயிலில் கார் நின்றதும் கீழிறிங்கிய நந்து… “நீ போ ரஞ்சி, நான் வருகிறேன்” என்க.. சிவாவிற்கு கபிலனின் நிலையை எண்ணி மனதில் கலக்கம் சூழ்ந்தது.
சிவா தயங்கி நிற்க, “போ ரஞ்சி” என்ற நந்துவின் குரல் ஓங்கி ஒலித்தது.
நந்துவிற்கு அவ்வளவு விரைவில் கோபம் என்பது வராது. மிகவும் அமைதியானவள், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப்போல், அவளின் கோபத்தின் விளைவுகள் சொல்ல முடியாதளவிற்கு இருக்கும். அதனை அறிந்த நந்து கபிலனை நோக்கி பாவ முகம் காட்ட, நான் பார்த்துக்கொள்வதாக கண்களை மூடி திறந்து பதிலளித்தான் கபிலன்.
சிவாவும் சரியென தலையசைத்து கல்லூரியின் உள் சென்றாள்.
எதுவும் நடவாததைப்போல் ஸ்டியரிங்கில் தாளம் தட்டியவாறு அமர்ந்திருந்தவனை கண்டு நந்தினிக்கு எரிச்சல் அதிகமாகியது. ஆனால், துளி அளவு எரிச்சல் கூட முகத்தில் காட்டாது அவன் முகத்திற்கருகே குனிந்தவள்…
“ஆர் யூ இன் லவ்…” அவன் அதிர்ந்து அவளை பார்க்க… “வித் மீ”, என்று தனது வாக்கியத்தை நந்து முழுவதுமாக முடித்தாள்.
நந்து வித் மீ என்றதில்.. தன் காதலை கண்டு கொண்டாளேயென, கபிலனின் இதயம் ஒரு நொடி இடம் பெயர்ந்து நேரானது.
அப்பட்டமான அதிர்வு அவன் முகத்தில் தெரிய… “அப்போ நான் கேட்டது சரி தான் இல்லையா?” என்றவள் மார்பிற்கு குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு ஒருவித திமிர் பார்வையை அவன் மீது வீசினாள்.
அவள் கேட்டதற்கு காரிலிருந்து வெளி வந்து நின்ற கபிலனின் தலை ஆமென ஆடியது.
“ஓகே ஃபைன்” என்றவளாய் கல்லூரியை நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கினாள். அவள் இரண்டடி எடுத்து வைத்ததும்…
“உன் பதிலென்ன” என கபிலன் கேட்க,
தன் நடையை நிறுத்தியவள், நிதானமான நடையுடன் அவனை நெருங்கி நின்று.. நேருக்கு நேராக கபிலனின் கண்களை சந்தித்து… “லவ் பண்ணிக்கோ” என்றாள்.
ஒரு கணம் அவளின் வார்த்தைகளில் மகிழ்ந்தவன் அடுத்த கணம் அவளேதோ மறைமுகமாக பேசுவதை உணர்ந்துகொண்டவனாய் “எனக்கு புரியவில்லை” என்றான்.
தனக்கு நேரெதிரே, தான் என்ன சொல்ல போகிறேனென்று தவிப்புடன் நின்றிருப்பவனை திமிருடன் பார்த்து… “நீ யாரை லவ் பண்ணனும் பண்ணக்கூடாதென்பது உன்னுடைய உரிமை.. சோ, நான் அதில் தலையிட முடியாது. பட், அதே உரிமை எனக்கும் உண்டல்லவா! வர்றேன்!” என்றவள் திரும்பியும் பாராது சென்றுவிட்டாள்.
“நீ என்னை காதலிப்பதால் எனக்கும் உன் மீது காதல் வர வேண்டுமென்றில்லை, நீ வேண்டுமானால் என்னை காதலித்துக்கொள்.. என்னால் உன்னை காதலிக்க முடியாது,” அவளின் மறைமுகப் பேச்சில் அவன் தான் மலைத்து நின்றான்.
அவள் செல்வதையே பார்த்திருந்தவன் எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ!. கல்லூரி காவலாளி, “இங்கெல்லாம் ரொம்ப நேரம் நிற்கக்கூடாது.” என்று செல்லுமாறு கூறிய பின்னரே அங்கிருந்து புறப்பட்டான்.
***************
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு பள்ளிக்கட்டிடங்கள் சீரமைக்கும் பணித் திட்டங்கள் அடங்கிய கோப்பினை நானிலன் பார்த்துக்கொண்டிருந்த நேரம்… பியூன் உள்ளே வர அனுமதி வேண்டினான்.
வேலுவை சிறு தலையசைப்பில் உள்ளே வர பணித்த நானி, என்னவென்பதை போன்று புருவம் உயர்த்தினான்.
“சார்.. வீரபாண்டி ஊரினைச் சேர்ந்த முக்கிய ஆட்கள் ஏதோ மனு கொடுக்க வேண்டுமென வந்துள்ளனர். மனு கொடுக்கும் நேரம் முடிவடைந்துவிட்டதென சொல்லிய பிறகும் உங்களை பார்த்துவிட்டு தான் செல்வோமென வம்பு செய்றாங்க” என்றான்.
மனு அளிக்கும் நேரம் முடிவடைந்து வந்திருப்பவர்களை அனுமதித்தால் எங்கே நானி தன்னை திட்டிவிடுவானோ என பயந்தே… விளக்கமாக படபடவென மொழிந்தான். ஆனால், தன்னுடைய பயம் வீண் என்பதை போன்று.. “வர சொல்லுங்க” என்றவன் கோப்பினை மூடி வைத்தான்.
இதற்கு முன்னால் இந்த இருக்கையில் அமர்ந்தவர்களைக் காட்டிலும் நானிலன் வித்தியாசமாகத் தெரிந்தான்…
வேலை நேரத்திலேயே வேலை செய்யாமல்.. அரசியல்வாதிகளின் கைகூலிகளாக செயல்பட்ட பல அதிகாரிகளுக்கு மத்தியில் நானிலன் அப்பதவிக்கேற்ற மிடுக்குடன் காணப்பட்டான்.
அவனை ஆச்சச்சரியமாகப் பார்த்தபடியே வெளியேறிய வேலு வந்திருந்தோரை உள்ளே அனுமதித்தான்.
ஊர் மக்களை அமர செய்த நானிலன்.. அவர்கள் அளித்த புகார் கடிதத்தினை வாசித்தான்.
கடிதத்தின் சாராம்சம் இது தான்…
வீரபாண்டி மற்றும் உப்பார்ப்பட்டி கிராமங்களுகிடையே அமைந்திருக்கும் பொது குளத்தினை, குத்தகைக்கு எடுத்திருக்கும் நபர்.. குளத்தினை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்த போவதாகவும், மீனின் கரு முட்டைகள் உற்பத்தியாகி வளர்ச்சியடையும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு.. குளத்தில் நீர் வெளியேறுவது மற்றும் உட்புகுவது தடை செய்யப்படுவதால்… குடிநீருக்காக மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படும்.
“இதைப்பற்றி நீங்க அவரிடமே பேசியிருக்கலாமே?”
மனுவை படித்ததும் நானியின் கேள்வி இதுவாகத் தானிருந்தது.
“ஐயா… அது வந்துங்க,”
வந்திருப்போரில் ஒருவர் என்ன சொல்வதென்று இழுக்க… வேறொருவர் பதிலளித்தார்.
“அந்தம்மா ஒரு முடிவெடுத்துட்டா, யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்கங்க, அந்த ஊர் மக்களே பேசி பார்த்தும் அவங்க அதான் குடிநீருக்கு தெருவுக்கு தெரு குழாய் போட்டிருக்கே சொல்லிட்டாங்களாம். ஆனால், ஐயா அந்த குழாய்களுக்கே தண்ணீ குளத்துல இருந்து தானுங்க வருது.”
சிறிது யோசித்த நானிலன் தான் பார்த்துக்கொள்வதாகாக் கூறி வந்திருந்தோரை அனுப்பி வைத்தான்.
தனது பணி நிமித்தமாக இருந்தாலும்… தனது சொந்த அப்பத்தாவாவே இருந்தாலும்… பாண்டியம்மாளிடம் சென்று கேட்க வேண்டுமா, இதற்காக அவரிடம் பேச வேண்டுமாவென நானிக்கு எரிச்சலாக வந்தது.
தன் தலையை இருக்கையின் பின் சாய்த்தவன், யோசிக்கலானான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அவனின் சிந்தனையை கலைத்தது தொடர் தொலைபேசி அழைப்பு.
அழைத்திருந்தது காசி…
“என்ன தம்பி” என்று அவர் பேசத் துவங்கியதுமே,
“ஒரு முறை சொன்னா புரிந்து கொள்ள மாட்டீங்களா? சரியான தொகையை பதிவு செய்ங்க, நீங்க கேட்காமலே ஆர்டர் கிடைக்கும்.” மிக மிக அமைதியாக, அழுத்தமாகக் கூறினான்.
“என்ன தம்பி என்னைய பேச விடாமல் பேசுறீங்களே! உன் கிட்ட டெண்டர் விஷயமா நான் பேச வரல, அதை எப்படி என் கைக்கு கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும். நீ வேணுன்னா நீதி, நியாயம், தர்மம்ன்னு இருக்கலாம். ஆனால், பணத்துக்கு மயங்காத ஆளு எவனாவது இருக்கானா என்ன?” எனக் கூறி வெடிச்சிரிப்பு சிரித்தார் காசி.
“அப்புறம் நான் அழைத்ததுக்கு காரணம் வேறு… இப்போ அதை சொல்லும் நிலையில்லை, பொறவு பேசுறேன். வச்சிடட்டுமா தம்பி.”
தம்பி என்ற வார்த்தை காசியின் பற்களுக்கிடையே நன்கு சிக்கியது.
இணைப்பைத் துண்டித்ததும், தேனி தாலுகா தாசில்தாரர்க்கு அழைத்தவன்… “பள்ளிக் கட்டிட டெண்டர் எனது பார்வையில் கையாளா விரும்புறேன், பதிவாகும் கோட்டேஷன் அனைத்தையும் எனக்கு அனுப்பி வையுங்கள்” என உத்தரவிட்டான்.
பள்ளிக் கட்டிடம் என்பது சாதாரணமில்லை, அங்கு படிக்கும் இளந்தளிர்களின் உயிர் சம்மந்தப்பட்டது. டெண்டர் எடுப்பவர் நேர்மையானவராய், குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு கட்டிடத்தின் தரத்தில் கவனமுள்ளவராய் இருக்க வேண்டுமென்று நானி எதிர்பார்த்தான். காசி பேசிய பிறகு இது எப்படி நேர்மையாக நடைபெறுமென்ற சந்தேகம் எழுந்ததாலே இதில் தானே இறங்கிவிட்டான்.
அன்றைய பணிகளை முடித்துவிட்டு இல்லம் திரும்பினான். உப்பார்ப்பட்டி ஊர் எல்லையில் கபிலனின் காரினை கண்டதும், அரசாங்க வாகனத்திலிருந்து இறங்கியவன் டிரைவரிடம் “நீங்க போங்க” என அனுப்பி வைத்து காரை நோக்கி சென்றான்.
சாலையோரத்திலிருக்கும் புளியமரத்தினை இடித்தவாறு வாகனம் நின்றிருந்தது. காரின் முன் கதவுகள் இரண்டும் திறந்திருக்க, ஓட்டுநர் இருக்கையில் நன்கு உடலை சாய்த்து கண்களை வலது கை கொண்டு மூடியவாறு படுத்திருந்தான் கபிலன்.
அவனது கலைந்த தோற்றத்தைக் கண்ட நானிலன்… பதட்டத்தை வெளியில் காட்டாது.. அவனைத் தொட்டு “கபிலா” என விளித்தான்.
நானியின் தொடுதலிலே கண் விழித்தவன், அவனின் விளிப்பில் காரை விட்டு இறங்கியிருந்தான்.
“என்னாச்சு கபிலா?”
நானியின் கேள்விக்கு “ஒன்றுமில்லை” என்று பதிலளித்தவன் அமைதியாக தலையை தொங்கப் போட்டுக்கொண்டு நிற்க, “நந்து என்ன சொன்னாள்” நானி கேட்டிருந்தான்.
இங்கு வந்த இரண்டு நாட்களில் அவனுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டிருக்க போகுது.. நேற்று தான் கூறியதால் இன்றே நந்துவிடம் காதலை சொல்லியிருப்பானோ! என யூகித்ததாலே அவ்வாறு கேட்டான்.
மிகக்குறுகிய கால நட்பில், தான் சொல்லாமலே தனது பிரச்சனை இதுதானென்று கணிக்கும் நானியின் புரிந்துணர்வில் கபிலன் ஆச்சரியம் கொண்டான்.
ஆச்சரியத்தை வெளிக்காட்டதவனாக,
“நீ ஆபிஸ் போகவில்லையா? இங்கு எப்படி?.” தான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது எதிர் கேள்வி கேட்டவனை உருத்து விழித்த நானி, “என்னவானதென்று சொல்ல போறயா இல்லையா கபிலா” என சினந்தான்.
நானியின் சினத்திற்கும் காரணம் உள்ளது.
இங்கு வந்த இரண்டு நாட்களில் ஒரு நொடி கூட கபிலனின் முகத்தில் தவழ்ந்த புன்னகை மறையவில்லை. எப்போதும் புன்னகை ஒளி வீசிய அவனின் முகம் இப்போது இந்த நொடி கலையிழந்து, ஒரு நாளிற்குள் தனது தேஜஸை இழந்து காணப்பட்டது. இன்று முழுக்க அவன் நீர் கூட அருந்தவில்லையென அவனது ஓய்ந்தத் தோற்றமே காட்டிக்கொடுத்தது. இந்நிலையில் தான் கேட்பதற்கு பதிலளிக்காததாலே நானி கோபம் கொண்டான்.
நானியின் உரிமையான கோபம் மகிழ்வினைத் தோற்றுவிக்க, காலை நடந்தவற்றையும்… நந்துவின் எதிர்வினையையும் கூறியவன், “நான் உன்னை காதலிக்கிறேன் அல்லது காதலிக்கவில்லையென சொல்லாம இதென்ன பதில் நானி.. நீ வேண்டுமானால் காதலித்துக்கொள் என்பது”.. என்றான்.
நானிக்கு கபிலனின் சிறுப்பிள்ளைத்தனமான கோப முகம் சிரிப்பினை வரவழைத்தது. முயன்று சிரிப்பினை அடக்கினான்.
தான் நடந்ததை கூறிய பின்னரும் நானி பேசாமலிருப்பதை உணர்ந்த கபிலன், நானியின் முகம் பார்க்க அவனின் இதழோரம் அடக்கபட்ட சிரிப்பினைக் கண்டு “எந்நிலை உனக்கு சிரிப்பா இருக்கா” என்றுக் கேட்டிருந்தான்.
கபிலன் அவ்வாறு கேட்டதற்கு பின்னர் வெளிப்படையாக சிரித்த நானிலன்,
“பின்ன என்னடா… இதுவொரு மேட்டர்ன்னு தேவதாச விட அதிகமா பீல் பண்ணிட்டிருக்க… பக்கத்துல நாய் மட்டும் தான் மிஸ்ஸிங்… உன் முகத்துக்கு தாடியெல்லாம் செட் ஆகாது. சோ, ட்ரை பண்ணிடாத” எனக் கூறியவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு விட்ட சிரிப்பைத் தொடர்ந்தான்.
நானியின் கட்டுகடங்கா சிரிப்பு நாம் கொஞ்சம் ஓவரா தான் பீல் பண்ணிட்டோமோ! என்று கபிலனை யோசிக்க வைத்தது.
நானியின் சிரிப்பில் கோபம் கொள்ள முடியாமல்.. இடுப்பில் கை வைத்து முறைத்து நின்ற கபிலனை ஏறிட்டு மீண்டும் சத்தமாக சிரித்த நானி.. “இதுக்கு போயிட்டு ஒரு நாள் முழுக்க தண்ணீர் சாப்பாடில்லாமல்…ஹ ஹா ஹா ஹா.. என்னால் முடியல கபிலா” என்றவன், சிரிப்பதை நிறுத்திவிட்டு… “உன் காதல் நந்துவை உன்னோடு சேர்த்து வைக்குமென்று நம்பிக்கை வை கபிலா. இந்த மாதிரி தேவதாஸ் லுக்கெல்லாம் செட் ஆகல மச்சி உனக்கு” எனக் கூறி கபிலனை தோளோடு அணைத்து விடுவித்தான்.
நானியின் வார்த்தைகளிலுள்ள உண்மை புரிந்ததும்… “தன் காதலால் தன்னவளின் மனதில் காதலுக்கு உயிர் கொடுக்க முடியும்” என நம்பிக்கை கொண்டான்.
“தேங்க்ஸ்டா மாப்ள” என்ற கபிலன்,
“முதலில் வீட்டுக்கு போனதும் ஒரு புல் கட்டு கட்டணும் டா, என்னா பசி!” என்றவனாக காரினை உயிர்பித்தான்.
இருவரும் வீடு வந்து சேர்ந்த சமயம்.. பாண்டியம்மாள் சிவாவை தன் நாவினால் சுழற்றியடித்துக் கொண்டிருந்தார்.
“அய்யோ அய்யோ.. எத்தனை தடவை சொல்றது நான் வெளியில் போகும்போது இப்படி அபசகுனமா என் முன்னாடி வராதேன்னு.. இப்போ பாரு வெளியில அடியெடுத்து வைக்கல அதுக்குள்ள புது புடவை ஆணியில மாட்டி கிழிஞ்சிருச்சு.”
பாண்டியம்மாள் பேச்சிலிருந்தே என்ன காரணமென்று இருவரும் அறிந்தனர்.
சிவா வழக்கம்போல் பாண்டியாம்மாளின் பேச்சிற்கு கண்களில் நீர் வழிய நின்றிருக்க, மற்ற வீட்டு உறுப்பினர்கள் யாரும் அங்கில்லை. ஒமியா மட்டும் கூடத்தில் உள்ள இருக்கையில் கால் மேல் காலிட்டவாறு அமர்ந்து பாண்டியம்மாள் சிவாவை திட்டுவதை சுவாரஸ்யம் மேலிட பார்த்திருந்தாள்.
தங்கையின் செயல் சிறுதும் கபிலனுக்கு பிடிக்கவில்லை.
பாண்டியம்மாளை தடுக்காவிட்டாலும், சிவா அழுவதை ரசிக்காமலிருக்கலாமே என உள்ளுக்குள் புலம்பினான்.
நானி உடல் விறைக்க நின்றிருந்தான். அவன் ஒரு வார்த்தை சிவாவிற்கு ஆதரவாக பேசிவிட்டால், பாண்டியம்மாளின் கைகளில் சிவாவின் நிலை மேலும் மோசமாகி விடுமல்லவா. ஆதலால் அமைதி காத்தான்.
நானியின் காதலின் ஆழத்தை நன்கு தெரிந்திருந்த கபிலனுக்கு அவனது அமைதிக்கான காரணம் மட்டும் தெரியவில்லை.
“ஏன்டி.. மூ*வி, காலையிலும் நான் தூங்கி எழுந்ததும் முன்னாடி வந்து நின்ன… என்னைக்கும் நான் சொல்றத வாய் மூடிட்டு கேக்குற ஊர் பயலுவ எதிர்த்து பேசனானுவ, இப்போ போற காரியம் என் புடவை கிழிஞ்சி தடை பட்டுப்போச்சு. எதுக்குடி இப்போ நீலி கண்ணீர் வடிக்கிற, உன் ஆத்தாலாட்டம்…”
“பாட்டி…”
“என்னடி உன் அம்மாள சொன்னா உனக்கு கோவம் வருது… ஒண்டி வாழற நாய்க்கு ரோஷம்லாம் இருக்கக் கூடாதுடி.”
கண்களில் நீர் ஆறாய் பெருகியது…
தான் அழக்கூடாதென்று எவ்வளவோ முயன்றும் பாண்டியம்மாளின் சொல் அம்புகளால் முடியாது போனது.
அந்நேரம் தந்தையின் நினைவு வந்து சிவாவை பெரிதும் தாக்கியது.
“தந்தையிருந்திருந்தால் இங்கு இவர்களை அண்டி வாழ வேண்டிய நிலை வந்திருக்காதே…” மனம் விம்ம அங்கிருந்து நகர இருந்தவளை, “என் கிழிஞ்ச புடவைக்கு ஈடா பணத்தை எடுத்து வச்சிட்டு போடி” என்ற பாண்டியம்மாளின் குரல் அப்படியே நிற்கவைத்தது.
“உங்க பேத்திக்கிட்டவே இப்படி அந்நியமா பணம் கேட்குறீங்களே உங்களுக்கு இது சரியா படுதா?”
சிவா கேட்டு முடிக்கவில்லை…
“யாருக்கு யாருடி பேத்தி” எனக் கத்தியவாறு பாண்டியம்மாள் தனது கரத்தை சிவாவின் கன்னத்தில் பதிக்க முயல,
“அப்பத்தா…” முதல் முறையாக தன்னையும் மீறி நானி உரக்க கத்தியிருக்க, கபிலன் பாண்டியம்மாளின் கரத்தினை பிடித்திருந்தான்.
தன்னை தடுத்தது யாரென உக்கிரமாக முறைத்த பாண்டியம்மாள்… கபிலனென்றதும் தனது முக பாவத்தை மாற்றியவராய்.. “இவளுங்களலாம் அப்பப்போ தட்டி வைக்கணும் கண்ணு இல்லைன்னா நம்மள ஏய்த்துடுவாளுங்க” என்றார்.
“என் தங்கச்சி மீது கை வைப்பதும் என் மீது கை வைப்பதும் ஒன்று தான்” எனக் கூறிய கபிலன், அவரின் ஆச்சரியப் பார்வையை சிறிதும் கண்டு கொள்ளாது சிவாவை கரம் பற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
பாண்டியம்மாளின் அருகில் வந்த நானிலன்…
“என் அமைதியும், பொறுமையும் ஒரு எல்லைக்கு மேல் என்னால் கூட கட்டுப்படுத்த முடியாது” என அழுத்தமாகக் கூறியவன்.. “இதை என்னோட எச்சரிக்கையாகவும் நீங்க எடுத்துக்கொள்ளலாம்” என்றவனாக நகர்ந்தவன், அங்கு நின்றிருந்த ஒமியாவை உணர்ச்சியற்ற பார்வை பார்த்து.. “அவள் உன் தங்கை முறை தானே, அவள் மீது வைத்த குற்றசாற்றில் ஏதேனும் நியாயம் இருக்கா?, நீ ர… சிவாவிற்கு ஆதரவா பேசவில்லையென்றாலும், புடவை கிழிந்தது உங்களின் கவனைக்குறைவாலென்று அவருக்கு புரிய வைத்திருக்க முடியாது?” என்றபடி திரும்பியவன்…
“புரிந்தும் புரியாமலிருப்பவர்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும்” என்றான்.
அவனது பேச்சில் அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
நானி செல்வதையே பார்த்திருந்த பாண்டியம்மாள்… “பய அவ பக்கம் சாஞ்சிடுவானோ!” என்று ஒரு நொடி பயந்தார்.
அடுத்த நொடியே, “இவளை போட்டு தள்ளுவதொன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை” எனத் தனக்குள் கூறியவாறு புடவை முந்தானையை உதறி தோளில் போட்டு இருக்கையில் தோரணையாக அமர்ந்தார்.
சிவாவின் மீதான பாண்டியம்மாளின் வன்மம் எதனால்?