அத்தியாயம் 6 :
“ஹாய் அத்தான்…”
மொட்டை மாடியில் இரவு வானை வெறித்திருந்த நானி… தன் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்க்க,
முட்டிக்கு மேலிருந்த கையில்லா மெல்லிய ஆடை அணிந்தவாறு ஒமியா நின்றிருந்தாள்.
அவளின் தோற்றத்தை கண்டதும் முகத்தில் ஏற்பட்ட சுளிப்பை அவளுக்குத் தெரியாமல் மறைத்தவன், “நான் வர்றேன்” என்றவனாக அங்கிருந்து நகர…
“லவ் யூ அத்தான்” எனக் கூறியிருந்தாள்.
மெல்ல அவளருகே வந்தவன்… “லுக் மிஸ் மீனலோச்சனி,”
“அய்யோ அத்தான் ஒமியா…” செல்லமாக சிணுங்கினாள் அவள்.
அவளின் சிணுங்கள் அவனுக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது.
“மீனா… ஒமியா… வாட் எவர், டோன்ட் கால் மீ அத்தான்… யூ ஜஸ்ட் கால் மீ நானிலன்” என்றவன், “எனக்கு உன் மீது எந்த விதமான ஈர்ப்பும் கிடையாது” என்றான். கிடையாது என்ற வார்த்தையில் அழுத்தம் அதிகமாகவே இருந்தது.
“ஏன்?”
ஒற்றையாக வினவியவளை மேலும் கீழும் பார்த்தவன்… “எனக்கானவள் நீயில்லை” என்றான் நெத்தியடியாக,
“என்னுடன் பழகி பார்த்தால் தானே தெரியும்..” நான் உங்களுக்கு ஏற்றவளா இல்லையா?” எனக் கேட்டவள், “பழகி பார்ப்போமா?” என்றாள்.
“பழகி பார்த்து வருவது காதலில்லை. பழகியிராத நபரை பார்த்தால் கூட, பார்த்த நொடி காதல் வரும். அவனோ அவளோ உனக்கானவன்(ள்) இவள்(ன்) தானென்று பார்த்ததும் மனதில் தோன்றும்… வாழப்போகும் மிச்ச வாழ்க்கையும் இவளு(னு)டன் தானென்று இதயம் துடிக்கும் அதுதான் காதல்… நீ இங்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது , அந்த மாதிரி எதுவும் எனக்குத் தோன்றவில்லை… இன்னும் ஒரு வருடம் என் கண் பார்வையில் நீ வலம் வந்தாலும் எனக்கு எதுவும் தோன்ற போவதுமில்லை…” தெளிவாகக் கூறியவன்,
“நான் என் வாழ்விலே இவ்வளவு நேரம் விளக்கம் கொடுத்து பேசியது உன்னிடம் தான்… வேஸ்ட் ஆப் டைம்” என்றவாறு அவளின் பேச்சினையும் கேட்காதவனாய் சென்று விட்டான்.
“திரும்ப திரும்ப என்னை அவமதிக்கின்றாய் நானிலன்.. யூ வில் பே பார் இட்” என்றவளின் மனதில் நானியை தன் வலையில் சிக்க வைக்கும் திட்டம் உருவாகியது.
தீட்டும் திட்டம் அனைத்தும் வீண் என்பதை அவள் அறியவில்லை.
அன்று நந்து பேசி சென்ற பின் கபிலன் அவளின் முன்னால் கூட செல்வதை தவிர்த்திருந்தான். தன் காதல் அவளுக்கு தொல்லையாகிவிடக் கூடாதென்பதில் தெளிவாக இருந்தான். அதற்காக அவளை விட்டு சற்று ஒதுங்கியிருந்தானே தவிர, மறைந்து நின்று நன்றாக சைட் அடித்தான்.
“எப்படியும் தன் மீது கோபமாக இருப்பாள்… இப்போதெப்படி இங்கு நடப்பதற்கு என்ன காரணமென்று அவளிடம் கேட்பது.” சிந்தித்தவனின் மனதில் ‘சிவாவிடம் கேட்கலாமே, அவளுக்கும் எல்லாம் தெரிந்திருக்குமே…!’ மூளை கூறிய யோசனையை உடனே தவிர்த்தான்.
பிரச்சனைகளின் ஏதோவொரு புள்ளி சிவாவிடம் தொடங்கலாம் அல்லது முடியலாம் என்பது கபிலனின் எண்ணம். ஆதலால், இதை நேரடியாக சிவாவிடம் கேட்டால் அவள் வருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் வேண்டாமென நினைத்தான்.
“எப்படியும் நந்தினியிடம் தான் கேட்க வேண்டும், அந்த காளி என்ன ஆட்டம் ஆட போகிறாளோ…” வெளிப்படையாகவே முணுமுணுத்தவனை மெல்ல அழைத்தது ஒரு குரல்.
‘உண்மையா…! என் செவி நுழைந்த குரல்… அவளுடையது தானா… உண்மையிலேயே நந்து தான் என்னை அழைத்தாலா?’ அவனின் மனம் அவனிடமே பட்டிமன்றம் நடத்த மீண்டுமொரு முறை அந்த விளிப்பு அவனின் செவி நுழைந்தது.
“மிஸ்டர். கபிலன்.”
“திரும்பவும் கேட்குதே நிஜம் தான் போல், மாமா… அத்தான்… இப்படி சொல்லி கூப்பிட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும்… ஹ்ம்ம்…” ஏக்கமாய் பெரு மூச்சு விட்டவாறு தனது அறையிலிருந்து வெளியில் வந்தவன், அறை வாயிலில் நின்றிருந்த நந்தினியை பார்வையாலே கபளீகரம் செய்தான்.
“பார்ப்பதை பார் வாழைப்பழைத்தை பார்த்த குரங்கு மாதிரி…”
“கம் அகெயின்…”
“அதான் கேட்டுருச்சே அப்புறமென்ன திரும்ப சொல்லுன்னு கேட்டுட்டு, உங்களுக்கு கேட்கணும்னு தானே சத்தமா முணுமுணுத்தேன்.”
“நீ தீபாவளி அன்று பிறந்தியோ?”
அவசியமற்ற அவனின் கேள்வியில் இவளின் கண்கள் முறைப்பில் அகல விரிய,
“அய்யோ ஆத்தா காளி அவதாரம் எடுத்துடாதே, இப்படி பட்டாசு மாதிரி பேச்சிலே வெடிக்கிறாயே எனக் கேட்டேன்.”
பயந்தவன் போல் கேலி செய்தானோ! அவளுக்கு அப்படித்தான் தோன்றியது.
கபிலனை மேலும் கீழும் ஒரு மாதிரியாகநோட்டமிட்டவள், “நட்டு கழுண்ட கேசெல்லாம் எனக்கு உறவுன்னு வந்து வாச்சிருக்கு,”
“இதுவும் எனக்கு நல்லாவே கேட்டது.”
“கேட்டுச்சுன்னா வாய மூடிட்டு இரு டைம் ஆனா சாப்பிட வர தெரியாதா? உங்களை சாப்பிட வாங்கன்னு வந்து அழைச்சா தான் தொர வருவீங்களோ!”, காரசாரமாக பொறிந்தவள்,
“வந்து சேருங்க” என்றபடி கீழே ஓடிவிட்டாள்.
“டேய் கபிலா காலமுழுக்க உம்பாடு திண்டாட்டம் தான், ஒரு நிமிஷம் லேட் ஆனாலும் சாப்பாடு கிடைக்காது போலிருக்கே… இவகிட்ட எப்படிடா நீ தலைகுப்புற விழுந்த, எல்லாம் உன் விதி” என்றவனாக விட்டதை பார்த்து, “காப்பாத்து இறைவா!” கடவுளிடம் முறையிட்டவனாக உணவு மேசையை நோக்கிச் சென்றான்.
அனைவரும் உண்டு முடித்து எழ நானிலன் உணவு உண்ண அமர்ந்தான். நானி அமர்ந்ததும் உணவு பரிமாறிக்கொண்டிருந்த பத்மா விலகிக் கொண்டார்.
அரசி ஏதோ வேலையாக பின்பக்கமிருக்க, நானியே பிளேட்டை எடுத்து வைத்து உணவு பாத்திரத்தை இழுக்க, மெல்லிய பூங்கரம் தட்டில் உணவிட்டது.
கரத்தை வைத்தே யாரென்று அறிந்து கொண்டவன், தன் தலையை நிமிர்த்தாமல்… தட்டுக்குள்ளே மூழ்குபவன் போன்று உணவினை உட்கொள்ளத் துவங்கினான். அவன் இது வேண்டுமென்று கேட்பதற்கு முன்பே… தட்டில் வைத்த பதார்த்தம் காலியாக காலியாக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து பரிமாறினாள் சிவா.
தான் பரிமாறியதும் எதுவும் திட்டாமல் அவன் உணவு உண்பதே சிவாவிற்கு போதுமானதாக இருந்தது. நானி உண்டு முடித்ததும், மீண்டும் உணவு வைக்க கரம் நீட்டியவளை தட்டிற்கு முன் கரம் நீட்டி தடுத்தவன் அங்கு வந்து அமர்ந்திருந்த கபிலனை சிறிதும் கண்டு கொள்ளதாவனாய் இருக்கையிலிருந்து எழுந்து விட்டான்.
ஆச்சரியமாக நானி செல்வதையே பார்த்தபடி சிவா நின்றிருக்க,
“ரசமாவது மிச்சமிருக்காம்மா” எனக் கேட்டான் கபிலன்.
கபிலனின் குரலில் அவனை விநோதமாக சிவா ஏறிட… தான் கேட்டது அவளுக்கு கேட்கவில்லையென உணர்ந்தவன்,
“அந்த மிச்சமிருக்கும் ரசத்தையாவது ஊத்தும்மா.. என் வயிற்றை நிரப்பிக்கிறேன்.” அவன் கிண்டலாகக் கூறியதில் பதிறியவள், “அய்யோ அண்ணா நீங்க எப்போ வந்தீங்க” எனக் கேட்டு கபிலனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாள்.
“ஹோ, மேடமிற்கு நான் வந்ததே தெரியாதோ?” என இழுத்தவன்,
“பார்வையெல்லாம் இருக்க வேண்டியவங்க மேலிருந்தால் நாங்கெல்லாம் எப்படி கண்ணுக்குத் தெரிவோம்.” கேள்வி கேட்டவனே பதிலுமளிக்க சிவா அசடு வழிந்தாள்.
அதன் பின்னர் கபிலனுக்கு உணவு போட்டவள், தனக்கும் எடுத்துக்கொண்டு அமர.. “ஆமா இவ்வளவு நேரம் நீ ஏன் சாப்பிடாமலிருக்க” என கபிலன் கேட்டதற்கு..
“மாமா இப்போ தானே சாப்பிட்டு போனாங்க” என்றவள் தன் நாக்கை கடித்து பேந்த பேந்த விழித்தாள்.
கபிலன் சிவாவின் மீது பதித்த அர்த்தமான பார்வையை, தான் பதில் சொல்லாமல் அவன் மாற்றபோவதில்லை என்பதை நன்கு உணர்ந்தவள்… “எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து நான், மாமா, நந்து ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிடுவோம்… வீட்டில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளால் மாமா என்னை வெறுத்து ஒதுக்கிட்டார். அதன் பின் அவர் எங்களுடன் அமர்ந்து உண்பதேயில்லை, பட் எனக்கு அவங்க சாப்பிடாமல் சாப்பிட பிடிக்காது. சோ மாமா சாப்பிட்ட பிறகு தான் நான் சாப்பிடுவேன்.” சிவாவின் வெகுளியான காரணத்தில் நானியின் மீதான அவளின் ஆழமான அன்பு கபிலனுக்கு புரிந்தது.
‘ஒருவருக்கொருவர் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் போது இடையில் என்ன நடந்திருக்கும்…’ யோசித்தவனாக கபிலன் சாப்பிட்டு எழ, சிவா உண்டு முடித்து எப்போதோ சென்றிருந்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னவளின் கையினால் உண்டதால்… எப்போதும் சாப்பிடும் அளவை விட சற்று கூடுதலாகவே உண்டான் நானிலன். மனம் முழுக்க வியாபித்திருப்பவளின் கையினால் பரிமாறப்பட்ட உணவு தேவாமிர்தமாக உள்ளிறங்கியது.
சாப்பிட்டதும் வீட்டுக்கு பின்னால் ஏதோ வேலையாக இருந்த தனது அத்தை அரசியை காணச் சென்றவன், அவரிடம் பேசிவிட்டு திரும்பி வீட்டிற்குள் வரும்போது தான் கபிலன் கேட்டதற்கு சிவா பதில் கூறிக்கொண்டிருந்தாள்.
எப்போதும் வீட்டிலிருக்கும் நேரம் தான் சாப்பிட்ட பிறகே சிவா சாப்பிடுவதை நானி கவனித்து இருக்கின்றான். ஆனால், அது தனக்காக காத்திருந்து சாப்பிடுகிறாள் என்பது இன்று தான் நானிக்கு தெரிந்தது.
“இவ்வளவு தூரம் அவளை புறக்கணிக்கும் போதே தன் மீது இவ்வளவு காதலை வைத்திருப்பவள், அவளை என் உயிரினும் மேலாக என் நெஞ்சில் தாங்குகிறேனென்று தெரிந்தால் எவ்வளவு தூரம் என்னை நேசிப்பாள்…” நினைத்து பார்க்கவே தித்திப்பாக இருந்தது. அந்த தித்திப்பை அனுபவிக்க விடாது சரியாக அங்கு வந்து சேர்ந்தார் பாண்டியம்மாள்.
“என்ன கண்ணு யோசனையெல்லாம் பலமா இருக்கு… அதான் அரசாங்க கோட்டையையே உன் கைக்குள்ள கொண்டு வந்துட்டீரே… இன்னும் எந்த கோட்டையை பிடிக்க யோசனை செய்ரீரு…” பாண்டியம்மாள் தன் பேரனை வம்புக்கு இழுக்கின்றாரோ!
அவர் என்ன காரணமாக தன்னிடம் பேச வந்திருக்கின்றாரென்று ஏற்கனவே தெரிந்ததால்,
“நான் உறங்கச் செல்கிறேன். எதுவாயிருந்தாலும் நாளை பேசிக்கொள்ளலாம்” என்றவனிடம்,
“இது நல்லதுகில்லை ராசா” என்றார்.
அவர் எதை குறிப்பிட்டு பேசுகின்றாரென்று நன்கு தெரிந்திருந்தும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே என்ற பாவனையில் நின்றிருந்தான் நானிலன்.
நானி தனது பேரன் என்ற காரணத்திற்காக மட்டுமே பாண்டியம்மாள் பொறுமை காத்தார்.
தனது அறைக்கு செல்ல மாடியேறியவனை தடுத்து தனது அன்னை ஏதோ பேசவும், அழகு அவர்களிடம் வந்தார்.
இருவரும் பேசிக்கொள்ளும் விதமே சம்பவம் ரொம்ப பெரியதென்று கூறியது.
பாண்டியம்மாளிற்கு தனது கோபத்தை கட்டுப்படுத்தியெல்லாம் பழக்கமில்லை, அதனை நன்கு அறிந்த அழகு, அவரது முகத்தில் கொண்ட இறுக்கத்தை வைத்தே நானியிடம் கோபத்தை வெளிக்காட்டாமல் பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டார்.
நானியிடம் பேசமாட்டார் என்பதால்…
“தூங்கும் நேரத்தில் என்னம்மா உங்களுக்குள் தகராறு” என தனது அன்னையிடம் பதட்டத்தை மறைத்தவராய் கேட்டிருந்தார்.
“தகராறெல்லாம் ஒன்றுமில்லை… உன் பையனுக்கு யார்கிட்ட மோதுவதென்று தெரியவில்லை, எனக்கே நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.
இதுக்கா இவனை நான் கலெக்கிட்டருக்கு படிக்க வச்சேன்” என்றார்.
“இப்போ எதுக்கு இப்படி கத்துறீங்க…. என்னோட கடமையை நான் செய்தேன் அவ்வளவு தான்…” நானி முதல் முறையாக தனது அப்பத்தாவிடம் குரல் உயர்த்தினான்.
“யார்கிட்ட சத்தமா பேசுறோம்ங்கிறதை தெரிஞ்சு பேசணும்..” அழகு கூறியதோ சுவற்றை பார்த்துக்கொண்டு, ஆனால் அவ்வார்த்தைகள் நானிக்கு சொல்லப்பட்டது.
“எது ராசா உம்ம கடமை, அப்பத்தாவுக்கு எதிராவே நோட்டீஸ் அனுப்புவதா..?”
“இப்போ என்ன, நோட்டீஸில் இருப்பதை செய்வதாக இருந்தால் குளம் உங்க கையிலிருக்கும்… இல்லையென்றால் மீண்டும் ஒருமுறை குத்தகைக்கான ஏலம் நடைபெறும்” என்றவன் விடுவிடுவென படிகளில் ஏறினான்.
இடுப்பில் கை வைத்து, அவன் செல்வதையே சிரிப்புடன் பார்த்த பாண்டியம்மாள்…
“என்னை எதிர்ப்பதற்கும் ஒரு ஆள் வந்தாச்சு அழகு, எனக்குச்சரி இவன் தான்.”
தனது அன்னை கூறுவது புரியாமல் அழகு நின்றிருக்க, அவரின் கையில் மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்த நோட்டீஸ் பேப்பரினை அளித்தார் பாண்டியம்மாள்.
“நீங்கள் குத்தகைக்கு எடுத்திருக்கும் குளம் நன்னீர் நிறைந்தது. அக்குளத்திற்கு பொதுவாக இரண்டு கிராமங்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஒருவர் மட்டும் ஆள நினைப்பது தவறு. அதுமட்டுமில்லாமல் குடிநீர் குளத்தை சொந்த தொழிலுக்காக பயன்படுத்துவது, அரசாங்க உரிமையுள்ள இடத்தை பொது நலனுக்காக பயன்படுத்தாமல் சுயநலமாக உபயோகிக்க நினைப்பது மாபெரும் குற்றமாகும். இரண்டு கிராமங்களின் குடிநீர் ஆதாரம் அக்குளமே, அதனை கருத்தில் கொண்டு.. சுயதொழிலுக்கு பயன்படுத்த எடுத்திருக்கும் முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில்… தங்களது குத்தகை நீக்கப்பட்டு மீண்டும் ஏலம் நடத்தப்படும். அதில் நீங்கள் பங்கேற்க முடியாது.”
சாராம்சம் இது தான்.
கீழே மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் கையொப்பம் இடம் பெற்றிருந்தன.
படித்து முடித்த அழகேசன்… இது “நியாயமானது தானேம்மா” என்க,
“நியாயம், அநியாயமெல்லாம் நாம பார்க்கக்கூடாது அப்பு… நமக்கு சரின்னு என்ன தோணுதோ அதை செஞ்சிட்டு போயிட்டே இருக்கணும்… ஊர் பயலுவல பார்த்தால் நாமா நல்லா வாழ்ந்திர முடியுமா? போப்பு போ…! இதை எப்படி சரி பண்ணனும் எனக்குத் தெரியும்.. மகனுக்கு சப்போர்ட் பண்ணாமல், நமக்கு எது நல்லதுன்னு பாரு.”
சுயநலமாக பேசிச்சென்ற அன்னையை வெறுமையாக பார்த்து வைத்தார்.
அவர் பேச்சு அவ்வளவு தான். பாண்டியம்மாளின் பேச்சைத் தாண்டி மற்றவர் யார் பேச்சும் அவரிடம் செல்லுபடி ஆகாது.
ஏற்கனவே பாட்டியும் பேரனும் முறைத்துக்கொண்டிருக்கும் காரணம் தெரியாமல் குழம்பியிருப்பவர், இந்த பிரச்சனையில் மேலும் முட்டிக்கொள்ளக் கூடாதென்று நினைத்தார்.
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், நமக்கு மேலோருத்தான் இருப்பது எதற்கு?.
எல்லாம் அவன் செயல்.
காலையில் வயல் வரப்பில் நடப்பது நானிக்கு மிகவும் பிடித்த ஒன்று… காலை நேர நடை உடலுக்கு நல்லது என்பதால் விரும்பியே நடப்பான். நாள் தவறாது.
நடைப்பயிற்சி முடிந்து வீட்டிற்கு வந்தவன், தன் அறைக்குள் நுழைந்த போது, குளியலறை கதவு திறக்க அப்பக்கம் பார்த்தவன்… உடல் கூசியவனாக வெடுக்கென வேறு பக்கம் திரும்பி நின்று,
“நந்துஊஊ…” என வீடே அதிர தன் தங்கையை அழைத்திருந்தான்.
அண்ணனின் கர்ஜனையான விளிப்பில் மின்னலென பாய்ந்து வந்த நந்து மூச்சு விடவும் மறந்து நின்றாள்.
தோள் வரை வெட்டப்பட்ட கூந்தலில் தண்ணீர் சொட்ட, உடலில் வெறும் துண்டை மட்டும் சுற்றிக்கொண்டு ஒமியா நின்றிருந்தாள். நானியின் குளியலறையில் குளித்திருப்பாள் போலும்,
“இங்கு எதுக்கு வந்தீங்க..?” நந்து பதற்றத்துடன் ஒமியாவிடம் வினவ,
“அவளை முதலில் இங்கிருந்து போகச்சொல்லு” என நானி உறுமினான்.
“என்னுடைய அறையில் ஹீட்டர் வொர்க் ஆகவி…”
“எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை முதலில் நீ வெளியேறு” என்றவன் தனது அறை விட்டு வெளியில் வந்தான்.
“என்னை போக சொல்லிட்டு உங்கண்ணன் வெளிய போறாரு..” கேலி செய்த ஒமியாவை முறைத்த நந்தினி… “உங்க அறையில் ஹீட்டர் வேலை செய்யவில்லையென்றால், என்னறையிலோ, மற்ற பெண்கள் அறையிலோ குளிக்க வேண்டியது தானே, அண்ணா அறைக்கு எதற்கு வந்தீங்க?” எனக் கேட்ட நந்து அவளின் பதிலில் அதிர்ந்தாள்.
“உரிமையுள்ள இடத்தில் தானே உரிமை கொண்டாட முடியும்.”
மறைமுகமாக செய்தி கூறிய ஒமியா ஆடையை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்.
நானி கட்டுக்கடங்கா சீற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான்.
“என்ன அத்தான் நான் உங்களுக்கு சொந்தமானவள் தானே, உங்க குளியலறையை பயன்படுத்தியதில் என்ன தவறு?” கிள்ளை மொழியில் வினவியவளை பார்க்கவும் பிடிக்காது..
“ச்சை” என்றவன், “இனி உன் நிழல் கூட நான் இருக்கும் திசைப்பக்கம் விழக்கூடாது” அழுத்தமாகக் கூறினான்.
ஒமியா கூறிச்சென்ற வார்த்தைகளின் அர்த்தம் என்னவாக இருக்கும்… சிந்தித்துக்கொண்டே வந்த நந்துவை கைபிடித்து நிறுத்திய நானி, “பாக்கியத்தை அழைத்து எனது அறையை மொத்தமா நன்கு தண்ணீர் ஊற்றி அடித்து கழுவ சொல்லு” என்றவன், அன்றைய நாள் அணிவதற்கான ஆடையை எடுத்துக்கொண்டு எதிர்பக்கமிருந்த அறைக்குள் புகுந்தான்.
ஒமியா நானியின் வார்த்தையில் கண்கள் சிவக்க நின்றிருக்க,
“உரிமையுள்ள இடத்தில் தானே உரிமை கொண்டாட முடியும்.” அவள் கூறியதையே நந்துவும் கூறிச் சென்றாள்.
நானி நுழைந்த அறைக்கான பதில் அது.
கீழே வந்த நந்தினியிடம் மேலே என்ன சத்தம் எனக் கேட்ட வீட்டு பெரியவர்களிடம் ஒன்றுமில்லையெனக் கூறி சமாளித்தாள்.
நானியின் நந்து என்ற கத்தலில் தான் கண் விழித்த கபிலன்… அங்கு கேட்ட தெளிவான பேச்சு சத்தத்தில், தன் தங்கையின் செயலை அறிந்து கோபம் கொண்டாலும் அவனால் எழுந்து வெளிவர முடியவில்லை.
நிச்சயம் இச்செயலிற்காக தங்கைக்கு சப்போர்ட் செய்திட முடியாது என்பதே காரணம்.
எவ்வளவு நேரம் ஒமியா நானியின் அறைக்கு வெளியிலேயே நின்றிருந்தாளோ, சுத்தம் செய்ய பயன்படும் பொருட்களோடு பாக்கியம் கடந்து சென்றதில் தான் உணர்வு பெற்றாள்.
தன்னை நிமிர்ந்து கூட பார்க்காதவன் அப்படியொரு நிலையில் பார்த்து விட்டால், நிச்சயம் தன் இளமையில் தன்னிடம் அடிமையாகி விடுவானென நினைத்தே, ஹீட்டர் வேலை செய்யவில்லையென்ற காரணம் வைத்து நானியின் அறைக்கு குளிக்க வந்தாள். வந்ததற்கு நன்றாக அவனிடம் வாங்கிக்கட்டியதே மிச்சம்.
“உன்னை… இப்போ தான் அடைய வேண்டுமென்கிற வெறி அதிகமாகுது கருவாயா… உன்னை கணவன் என்கிற பெயரில் அடையும் வரை நான் பொறுமையாகத் தானிருக்க வேண்டும். திருமணம் நடந்த பிறகு உன்னை என் காலை பிடிக்க வைக்கிறேன்…” ஆங்காரமாக மனதில் சபதமேற்றாள்.
தான் போட்ட முதல் திட்டம் ஒன்றுமில்லாது போய்விட்டதென நினைத்தவள், அடுத்து என்னவென்று சிந்திக்கத் தொடங்கினாள்.
எவ்வளவு பட்டாலும் சில அறிவிலிகள் திருந்த போவதில்லை. அதற்கு முழு உதாரணம் ஒமியா @ மீனலோச்சனி.
“இந்தாங்க பாக்கியம் அக்கா…. முதலில் இந்த காபியை குடித்து விட்டு வேலை செய்வீங்களாம்.” நந்து கொடுத்து அனுப்பினாள்.
“சரி சிவா, அந்த டம்ளரை அங்கன டீபாயில் வைத்துவிடு நானெடுத்துக்கிறேன்.”
வியர்வை வழிய, குளியலறை தரையை துடையோ துடையென அழுந்த தேய்த்துக் கொண்டிருந்த பாக்கியத்தை விசித்திரமாக பார்த்த சிவா… “காலையில் தானே அக்கா ஒருமுறை சுத்தம் செய்தீங்க? இப்போ மீண்டுமெதற்கு இப்படி போட்டு தேச்சுட்டு இருக்கீங்க, தரையில் அழுக்கும் இருப்பதுபோல் தெரியவில்லையே!!” என தனது சந்தேகத்தைக் கேட்டாள்.
“என்னான்னு தெரியல சிவா, தம்பி தான் மொத்த அறையையும் நல்லா தேய்த்து கழுவுங்க, குறிப்பா குளியலறையை ஒன்றுக்கு மூன்று தடவை சுத்தம் செய்யுங்கன்னு சொன்னது.”
பாக்கியம் சொல்லியதை கேட்டதும் சிவாவுக்கு என்ன காரணமென்று தெரியவில்லை.. அப்போது அங்கு வந்த பத்மா, “இன்னுமாடி காலேஜ் போக கிளம்பாம நின்னுட்டு இருக்க, போ.. போய் கிளம்பு.. நந்து கிளம்பிட்டாள் பார்” என்று சிவாவைத் துறத்தினார்.
“பாக்கியம் இங்கனவே உட்கார்ந்திருக்காத, கீழ வேலையிருக்கு… சுருக்க வந்து சேரு” என்றவராய் பத்மா கீழிறங்கிவிட்டார். செல்லும்போது பாக்கியத்தை காபி அருந்த சொல்ல மறக்கவில்லை.
சிவா விரல் நகத்தினை கடித்தவாறு தனது அறை வாயிலில் நின்றிருக்க, கல்லூரி செல்லத் தயாராக வந்த நந்து.. “என்னடி இன்னும் கிளம்பலையா?” என்றாள்.
“யாரோ உள்ளே இருக்காங்க நந்து”
“யாரோவா… எங்கே?”
“என் ரூமில்..”
” ஹோ…” வெளியே ராகம் இழுத்தவள்,
“இன்னும் அண்ணா வெளியில் வரவில்லை போலிருக்கே” மனதோடு பேசினாள்.
“யாரா இருக்கும் நந்து?” என்ற சிவாவிடம் “எனக்கு எப்படித் தெரியும்?” என்றவள் கீழே காத்திருப்பதாக ஓடிவிட்டாள்.
கதவை தட்டலாமென்று கதவிற்கு அருகே சென்றவள், தட்ட கையை உயர்த்திய நேரம் கதவு திறந்து கொண்டது.
ஆஷ் நிற முழுக்கை சட்டையும், கருப்பு பேண்ட்டும் அணிந்து கம்பீரமாக தனக்கு முன் நின்றவனை இமைக்கவும் மறந்து ரசித்தாள்.
“ஸ்மார்ட்டா இருக்கறேனா?”
நானியின் திடீர் கேள்வியில் அதிர்ச்சியானவள்..
“எ..எ…ன்…ன்.என்ன கேட்டீங்க,” நாக்கு பேசுவதற்கு ஒத்துழைக்கவில்லை.
அவளின் தடுமாற்றத்தை ரசித்தவன்… தனது இடது புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவினான்.
தன் நாயகனின் சிறு செயலிலும் உலகம் மறந்தவள்… இமைகள் படபடக்க, “நீ…நீங்..நீங்க.. எப்படி என்னறையில்..” ஒரு வழியாக தொண்டையில் சிக்கியதை கேட்டுவிட்டாள்.
“இது உன் அறையா?” தெரியாதவனைப் போன்று வினவியவன், “இது என் மனைவியின் அறைன்னு நினைத்தேன்.” உதட்டில் தவழ்ந்த குறும்பு சிரிப்புடன் கூறியவன் அவளின் கன்னம் தட்டி தனது வேலையை கவனிக்க கிளம்பினான்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவளின் உயிருக்கானவன் அவளிடம் பேசி விட்டான். மனதில் சில்லென்ற மழை கொட்டியது. உடைந்து நொறுங்கியிருந்த இதயம் அவனின் மனைவி என்ற சொல்லால் உயிர் பெற்றது.
நானியின் புன்னகை தவழ்ந்த முகத்தினை மனதில் நினைவு கூர்ந்தபடி நின்றிருந்தவளை…
“பகல்லே கனவா, கனவில் யார்?” என்ற கபிலனின் தொடுகையில் நினைவுக்கு மீண்டவள் தனது அண்ணனின் முகம் பார்க்க வெட்கியவளாக அறைக்குள் ஓடி மறைந்தாள்.
நடந்ததை அறைக்குள்ளிருந்து பார்த்திருந்த கபிலனுக்கு, அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்பது கேட்கவில்லையென்றாலும்.. நானியின் குறும்பு முகமும், அதற்கு பதிலாக சிவாவின் வெட்க முகமும் நன்கு தெரிந்தது. சிவாவின் அறை கபிலனின் அறைக்கு ஏதிரே என்பதால் அவர்களை நன்கு பார்க்க முடிந்தது.
இருவரின் சிறு மாற்றமும் கபிலனுக்கு அனைத்தும் விரைவில் சரியாகிவிடுமென்று தோன்ற வைத்தாலும், இவர்கள் உறவுக்கிடையே ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறதென்றும் எண்ண வைத்தது. தன் தங்கையின் தவறான செயலிலும் ஏதோ சிறு நன்மை ஏற்பட்டிருக்கிறதென்று ஆறுதல் அடைந்தான்.
அலுவலகம் செல்ல காரிலேறி அமர்ந்த நானி… தன்னையே நன்கு திட்டிக்கொண்டான்.
“நீ செய்து விட்டு வந்திருக்கும் வேலை மட்டும் உன் அப்பத்தாவுக்கு தெரிந்தது… சிவாவின் நிலை அவ்வளவு தான்!”
அன்றொரு நாள் தன் செவிகளில் நுழைந்த வார்த்தைகள் இன்று இந்த நொடி கேட்டதைப்போன்று நானியின் உடலும், உள்ளமும் ஒருங்கே அதிர்ந்தது.
பாண்டியம்மாளின் மற்றொரு முகம் அறிந்தவனால் தன்னவளை அவரிடமிருந்து காக்க முடியுமா?
நானி பயப்படும் விஷயம் என்னவாக இருக்கும்?