வெள்ளைப்பூவே நீ எந்தன் காதலடி 7

அத்தியாயம் 7 :

“அவளுக்கு என் கையால் தான்டா சாவு.” அக்குரலிலிருந்த வெறி கேட்போர் யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்.

“ஏற்கனவே ஒரு உயிரை, சொந்தமென்றும் பாராமல் கொலை செய்த எனக்கு இவளெல்லாம் எம்மாத்திரம் சுண்டைக்காய்.”

மீண்டும் மீண்டும் நானியின் செவிகளில் ஊர்வலம் போயின.
தன் மடத்தனத்தை எண்ணி எண்ணி நூறாவது முறையாக தன் தலையில் தட்டிக்கொண்டான்.

“என்னடா பண்ணிட்டு வந்திருக்க நீ? அவ்ளோ திட்டும் போதே உன்னை நெருங்கி வர துடிப்பவள், இப்போ இப்படி பேசிட்டு வந்த பிறகு எவ்வளவு ஆசையை தன் மனதில் வளர்த்துக்கொள்ளப் போகிறாளோ!” என பயந்தான்.

“ஒரு நொடி தன் மனம் கட்டுப்பாட்டை இழந்ததால் என்னவெல்லாம் பேசிவிட்டோம். ஒவ்வொரு முறையும் உன் வார்த்தைகளால் அவளுள் நம்பிக்கையை விதைத்து, அவளை மரிக்கச் செய்வதே உன் வேலையா போய்ட்டு. நீ நெருங்கினா, அவள் உயிருக்கு ஆபத்தென தெரிந்தும் எப்படி உன்னால் முடிந்தது. மீண்டும் அவளை உயிருடன் கொல்லப்போறா அப்படித்தானே!” தன்னை நினைத்தே வெட்கினான். தன்னைத் தானே அடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

“அவள் வீசும் ஏக்கப் பார்வையையே கடக்க முடியாத தன்னால், தன் சிறு நெருக்கத்தால் அவள் வீசப்போகும் காதல் பார்வையை எப்படி கடந்து வரப் போகிறேன்.”

நேற்று இரவு… நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு தன்னவளின் கைகளால் உணவு உண்டவன் வயிறு மட்டுமில்லாமல் நெஞ்சமும் நிறைந்திருக்க, அவனுள் முழுதும் வியாபித்திருந்தது அவனவள் மட்டுமே, நூலிழை இடைவெளியில் அவன் உண்டு முடிக்கும்வரை அவளருகே சிவா நின்றிருந்தாள்.

அவளிடமிருந்து வீசும் பிரத்யேக நறுமணம் நானியின் நுரையீரல் முழுவதும் நிரம்பியது.

பாண்டியம்மாளின் கேள்விக்கு பதிலளித்துவிட்டு வந்து மெத்தையில் விழுந்தவன்… நடந்து முடிந்திருந்த கசந்த நினைவுகள் அனைத்தும் மறந்து தன்னவள் மீது தான் கொண்ட காதலுடன் உறங்கிப்போனான்.

காலையில் அதே மனநிலையிலிருந்தவன், சற்றும் எதிர்பாராத ஒமியாவின் நிகழ்வு அருவெறுப்பை கொடுக்க… அவளுக்கு எப்படியும் மறைமுகமாகத் தன் மனத்திலிருப்பதை உணர்த்துவதற்கே சிவாவின் அறைக்குள் நுழைந்தான்.

நானியின் உரிமையான செயல் மட்டும், தான் கூறிய வார்த்தைகளை தனக்கே திருப்பிக் கூறிய நந்துவின் பேச்சிலும்… ஏதோ இருப்பதாக ஒமியாவின் மனம் அடித்துக் கூறியது. “எதுவாகயிருந்தாலும் யூ ஆர் மைன் மிஸ்டர். கருவாயன்” என்றவள் பாக்கியத்தின் அரவத்தில் தன்னை மீட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்.

தன்னவளின் அறைக்குள் அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு இன்று தான் அடி வைத்திருக்கிறான்.

அவளிருக்கும் அறைக்குள் நுழைந்ததே நானிக்கு மனநிறைவை கொடுத்தது. அவள் உலவும் இடம்… காற்றில் மிதப்பதை போன்றிருந்தது. எங்கும் அவள் பிம்பம். சில நொடிகளுக்கு முன் அவன் முகம் கோபத்தில் தகித்ததற்கு எதிர்மறையாய் இதத்தில் சிவந்திருந்தது.

சிவாவின் அறையை சுற்றி மெல்ல தனது பார்வையை ஓடவிட்டவனின் பார்வை ஒரு பக்க சுவற்றில் நிலைக்குத்தி நின்றது.

“ஹேய், எதுக்குடி சுவர் முழுக்க உன் பெயரை கிறுக்கி வச்சிருக்க,”

“நம்ம பெயரை நாமதானே மாமா கல்வெட்டா பதிக்கணும்..”

“அதுக்கு நீ, நம்ம ஊர் எல்லையில் ஒரு மலை இருக்குல்ல அதுல போய் கடப்பாரை சுத்தியலோடு உட்கார்ந்து உன் பெயரை செதுக்கு, சுவற்றை எதுக்கு அசிங்க படுத்துற?”

“என் பெயர் எழுதுனா அசிங்கமா..? அப்போ உங்க பெயர் எழுதுறேன்.”
இந்த உரையாடல் மீண்டும் மீண்டும் நானியின் காதில் எதிரொலித்தது.

அந்த உரையாடலின் இறுதி வரிகளுக்கு ஏற்ப, நானியின் பார்வை பதிந்த சுவர் முழுக்க நானிலன் என்று பல்வேறு வடிவங்களில் எழுதியிருந்தது. அது யார் எழுதியிருப்பார்களென்று யாரும் சொல்லாமலே நானிக்கு தெரியும்.

தன்னவளின் கரங்களால் எழுதப்பட்ட தன் பெயரை மெல்ல வருடியவன்… குளியலறைக்கு செல்ல திரும்புகையில்.. கட்டிலில் சரியும் நிலையிலுருந்த தலையணையை ஒழுங்காக எடுத்து வைத்தான்.

அதிலிருந்து ஒன்று கீழே விழ, அதை பார்த்தவன் மொத்தமாக உலகம் மறந்தான்.

மனமெங்கும் காதல் பூக்கள் பூத்துக்குலுங்கியது. அந்த மனநிலையிலேயே குளித்து முடித்து தயாராகி வந்தவன், அறைக்கு வெளியில் கைகளை பிசைந்துக் கொண்டு நின்றிருந்த தன்னவளின் பதட்டத் தோற்றத்தில் மெய் மறந்து இயல்பாக பேசிவிட்டு வந்திருந்தான்.

காரிலேறி பயணிக்கும் போது சுயவுணர்வு பெற்றவன், தன் தவறை முழுதும் உணர்ந்தான். தன் செயலால் சிவா மீண்டும் தன் மீது நம்பிக்கையை வைத்துவிட கூடாதென்று இறைவனிடம் வேண்டினான்.

நானிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது தான்… ஆனால் சிவா என்று வந்துவிட்டால் மட்டும் விதிவிலக்கு உண்டு.

“நானியோ மீண்டும் தன்னவளை தானே வருந்தச் செய்கிறேனே” உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்க… சிவாவோ, காட்டு கத்தலாக கத்தும் நந்துவின் குரல் காதிலே விழாதவாறு சிலையாக நின்றாள்.

“அடியேய்… நான் கத்துறது உனக்கு கேட்குதா இல்லையாடி…? கீழேயிருந்து எவ்வளவு தடவை உன்னை கூப்பிடுறது.” எனக் கேட்டுக்கொண்டே மேலேறி வந்த நந்து சிவாவின் சிவந்த முகத்தில் யோசனையானாள்,

“ரஞ்சி… என்னாச்சு, ஏன் இப்படி நிக்குற.”

நந்துவின் தொடுகையில் தன்னுணர்வு பெற்ற சிவா, அவள் கேட்ட கேள்விக்கு வெட்கத்தையே பதிலாகக் கொடுத்தாள்.

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு அவளின் மனம் கவர்ந்தவன் தீண்டிய கன்னத்தை மெல்ல வருடியவள், நந்துவின் குறுகுறு பார்வையில் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

நானி அவளின் அறையில் குளித்தது நினைவு வர, “என்னமோ நடந்திருக்கு…” சரியாக கணித்த நந்து, “அண்ணனின் இந்த சிறு மாற்றம் இவர்களின் வாழ்வை மலரச் செய்ய வேண்டும்” என்று நினைத்தாள்.

இப்போதைக்கு அதிலிருந்து சிவா வெளியேற போவதில்லை என்பதை அறிந்த நந்து.. அவளின் கல்லூரிக்குத் தேவையான அனைத்தும் தானே எடுத்து வைத்து, சிவாவையும் இழுத்துக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டாள்.

கல்லூரி வளாகத்தில் பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்திய நந்து, சிவாவிடம் புத்தக பையினை கொடுத்து… ”கனவு காணாமல் கிளாஸிற்கு போடி, ஒரு நாளைக்கே இப்படி ஆகிட்ட” என்றவளாய் தன் வகுப்பிற்குச் சென்றாள்.

புத்தக பையினை ஒரு கையால் மார்போடு அணைத்தவாறு, மற்றொரு கையில் பெருவிரல் நகத்தினை கடித்தபடி… தரையில் பார்வை பதித்து நடந்துச் சென்றவளை அழைத்தது ஒரு ஆணின் குரல்.

அவனின் நான்கு ஐந்து முறை அழைப்பிற்கு பின்னால் மெல்ல திரும்பி பார்த்தவள், அங்கு அவனின் வகுப்புத் தோழன் நிற்கவும்.. “என்ன திலீப் கிளாஸ் போகாமா, இங்கு நிக்கிற?” எனக் கேட்டாள்.

அவளை மேலும் கீழும் ஆராய்ச்சியாய் பார்த்தவன்… “ஆர் யூ ஓகே?” என்றான்.

அவனின் கேள்விக்கு தடுமாறினாலும், “எனக்கென்ன, நான் நன்றாகத் தானிருக்கின்றேன்” எனக் கூறினாள்.

அவளை நம்பாது ஒரு பார்வை பார்த்தவன், “ஒன்றுமில்லை, நம் வகுப்பு கட்டிடம் இந்தப் பக்கமிருக்கு.. ஆனால் நீயோ மதில் சுவரில் முட்டிக்கொள்ள நடக்கிற” எனக் கூறிச் சிரித்தான்.

அவள் நிமிர்ந்து பார்க்க, கல்லூரிக்கு பின்பக்கமிருக்கும் மதில் சுவர் அவளைப் பார்த்து கேலி செய்தது.

“அச்சச்சோ இந்த மாமாவை நினைச்சிகிட்டே, இங்க வந்துட்டனே…” மனதில் திட்டிக்கொண்டவள்  திலீப்பிடம் அசடு வழிந்தாள்.

“அசடு வழிந்தது போதும், வா வகுப்பிற்கு செல்லலாம்” என்றவனோடு இணைந்து நடந்தாள்.

************

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்களில் அனல் பறக்க நானியின் முன் அமர்ந்திருந்தார் காசி.

அவரின் கோபம் தன்னை ஒன்றும் செய்து விடாதென்று, கால் மேல் காலிட்டவாறு கம்பீரமாக அமர்ந்திருந்தான் நானிலன்.

“நான் அவ்வளவு சொல்லியும் அந்த காண்ட்ராக்ட் வேற எவனுக்கோ தூக்கி கொடுத்திருக்க.”

“நான் தூக்கிக் கொடுக்கிறதுக்கு அது ஒன்றும் என் அப்பன் வீட்டு சொத்தில்லை.”

தான் கேள்வியை கேட்டு முடிப்பதற்குள்.. அமைதியாக நிமிர்வுடன் எதிர்வாதம் செய்பவனை, விட்டால் கண்களாலே எரித்துவிடுவார் போல். உள்ளுக்குள்ளும் வெளியிலும் காசிக்கு சொல்ல முடியாத கோபம் கனன்றது.

“ஒன்றா ரெண்டா… 500 கோடி ப்ரொஜெக்ட் கைவிட்டு போச்சே, அது மட்டும் கிடைத்திருந்தால்… எவ்வளவு லாபம் பார்த்திருக்கலாம்.” கைவிட்டு போன பணத்தை நினைத்தால் காசிக்கு கோபம் வராதா… ஆனால், அந்த கோபத்தை நானியின் மீது எப்படி காட்டுவதென்று தான் அவருக்குத் தெரியவில்லை.

“பேப்பர்ஸ் சரியா இருந்தால் உங்களுக்கு கிடைத்திருக்க போகிறது. அதை சரியாக செய்யாமலிருந்தது உங்க தவறு தானே!”

இதுவரை, யாரும் காசியிடம் அவர் செய்வதை சரி தவறென்று வாதிட்டதில்லை… அவருடைய ராஜ்ஜியத்தில் அவர் வைத்ததே சட்டம்.. அவர் செய்யும் யாவும் சரியே. அப்படிப்பட்டவரிடம் அவரின் தவறை தவறென்று கூறுபவனிடம் கோபத்தை அடக்க முடியாமல், தனக்குமுன் மேஜையிலிருந்த கண்ணாடி பேப்பர் வெயிட்டினை எடுத்து சுவற்றில் அடிக்க அதன் துகள்கள் அறையெங்கும் சிதறின. அதிலிருந்து உடைந்து தெறித்த சில்லொன்று காசியின் நெற்றியையே பதம் பார்த்தது.

“தன் வினை தன்னையேச் சுடும்.” மெல்ல கூறிய நானி, நாற்காலியிலிருந்து எழுந்து போய்வருமாறு வெளியே கை காட்டினான்.

“வேண்டாம் நானிலன்… என்னை பகைத்துக்கொண்ட யாரையும் நான் சும்மா விட்டு வைத்ததில்லை… இனி என்னிடம் நீ நன்றாக அனுபவிப்பாய்” என ஓலமிட்ட காசி, துண்டை உதறி தோளில் போட்டவாறு அவ்விடத்தை காலி செய்தார்.

மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றிய நானி தனக்கு முன் அடிக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளில் தனது கவனத்தை பதிக்க,

“உங்க அப்பத்தா வந்திருக்காங்க” என்ற தகவலோடு வேலு வந்திருந்தான்.

அதற்கு நானி கூறிய பதிலில் அவன் சற்றுத் தயங்க., நான் சொல்லியதை சொல்லியபடி செய்ய வேண்டுமென்றான்.

பாண்டியம்மாளை பார்க்கும்போதே வேலுவிற்கு காளியை பார்ப்பதைப்போன்று பயமாக இருந்தது.

“இதில் கலெக்டர் சொன்னதை சொன்னா இந்தம்மா என்ன பண்ணுமோ!” என்ற புலம்பாலோடு, வெளியே காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்த பாண்டியம்மாளிடம் வந்தவன்,
“அப்பத்தா என்ற உறவெல்லாம் வீட்டோடு, பேரன் என்கிற உரிமையில் இங்கு வந்திருந்தால் வீட்டில் பேசிக்கொள்கிறேன். அப்படியே திரும்பி போகச் சொல்.”

“என்னடா சொன்ன?” புடவையை தொடையில் தூக்கி பிடித்தவராய் குதித்து எழுந்தவரை கண்டதும், வேலுவின் நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

பயத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க,

“கலெக்டர் சார் தாங்க அப்படி சொல்ல சொன்னார்” கூறியவன் விட்டால் போதுமென்று அங்கிருந்து ஓடி மறைந்தான்.

சில நிமிடங்கள் நாற்காலியில் அமர்ந்து தன்னை நிதானித்தவர், தன் ஆட்களை விட்டு வேலுவை வரவழைத்து, “நான் இங்கு குளம் குத்தகை விஷயமா.. ஊர் பொதுவான ஆளாவே பேச வந்திருக்கேன். அவரின் அப்பத்தாவாக வரவில்லை” என்றார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் பாண்டியம்மாள் நானியின் முன் அமர்ந்திருந்தார்.

“நீங்க, நோட்டீஸ் ல சொன்னதையெல்லாம் யோசித்து பார்த்தேனுங்க.. குடிக்கிற தண்ணியில மீன் வளர்த்துப்பூட்டா… சனங்க குடி தண்ணீக்கு எங்கன போவாங்க.. அதேன் இந்த மீன் வளர்ப்புத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டாம்ன்னு கை விட்டுட்டேனுங்க.”

பாண்டியம்மாள் கூறுவதை நானி சிறிதும் நம்பவில்லை என்பதை அவனின் முகமே காட்டிக்கொடுத்தது.

தன் பேரனின் குறிப்பை அறிந்தவர் போல், “என் பேரன் மேல சத்தியமா நான் குளத்தை ஊர் மக்களுக்கே கொடுக்கிறேனுங்க,” என்றவர் “இதற்கு பதிலா எனக்கு என்ன வேணும்ன்னு வீட்டுல என் பேரன்கிட்ட கேட்டுக்கிறேன் சார்..” சாரென்ற வார்த்தையை இழுத்து உச்சரித்தவர் விஷம புன்னகையுடன் வெளியேறினார்.

நானிக்கு அவர் விட்டுக்கொடுக்கிறேன் என்றதுமே சந்தேகம் முளைத்தது… எந்தவொரு ஆதாயமும் இல்லாமல் பாண்டியம்மாள் எதுவும் செய்ய மாட்டார் என்பது அவரை பார்த்து வளர்ந்த அவனுக்கா தெரியாது.
அது என்னவாக இருந்தாலும் தான் ஏற்க கூடாதென்று நினைத்தவன்… தன் அப்பத்தாவை அனைத்திலும் எதிர்க்க முடிவு செய்தான்.

கபிலன் தன் தங்கை காலையில் நடந்து கொண்டதை நினைத்து மிகவும் குழம்பினான். அவனின் தங்கை இவ்வளவு இறங்கி செய்வாளென்று அவனுக்கே இன்று தான் தெரியும் இதைப்பற்றி அவளிடம் எப்படி கேட்பதென்று புரியாமல் தன் அறையின் நீள அகலத்தை அளந்துக் கொண்டிருந்தான்.

அப்போது முக்கியமான விஷயம் ஒன்றை பேச வேண்டுமென்ற கோரிக்கையுடன் உள்நுழைந்தாள் ஒமியா.

“என்ன விஷயம்?”
கபிலனின் குரலில் சிறு கோபம் இருந்ததோ.

“அண்ணா, நீ எதுக்கு கோபப்படுற எனக்குத் தெரியும். உரிமையுள்ள இடமென்று தான் அவ்வாறு செய்தேன். எனக்கு அது தவறாக தெரியவில்லை” என்றவளை புரியாது பார்த்தான்.

கபிலன் வாய் திறந்து கேட்கவில்லை, ஆனால் அவளே கூறினாள். அவளுக்கு அவள் காரியம் ஆக வேண்டும். அதற்கு தனது அண்ணனையே பலி கொடுக்க நினைத்தாள். சிறிது காலத்திலே ஏற்பட்ட நட்பென்றாலும் நானி மற்றும் கபிலனுக்கிடையே இருக்கும் நெருக்கத்தை அறிந்த ஒமியா தன் அண்ணன் மூலம் நானியை வளைக்க திட்டம் போட்டாள்.

நானி வளையும் நாணல் அல்ல, புயலிலும் அசைந்து கொடுக்காத ஆலமரமென்று பாவம் அவளுக்குத் தெரியவில்லை.

“என்ன அண்ணா அப்படி பார்க்கிற… நான் நானி அத்தானை விரும்புறேன்.” ஒமியாவின் அவ்வார்த்தைகளில், சிவாவின் வெட்க முகமே கபிலனுக்கு நினைவில் வந்து போனது.

“பார்த்ததும் எனக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது. அவருடையது அனைத்தும் எனதாகிய உணர்வு… அந்த உரிமை உணர்வில் தான் காலையில் அப்படி நடந்து கொண்டேன்” என்றவள், “என் காதலை நீ தான் அண்ணா நிறைவேற்ற வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தாள்.

சிவா மற்றும் நானிக்கிடையே எந்தளவிற்கு பிரச்சனை இருக்கிறதோ அதைவிட பல மடங்கு காதலிருக்கிறதென்று நன்கு தெரிந்த கபிலன் எவ்வாறு தன் உடன் பிறந்த தங்கைக்கு அவளின் ஆசையை நிறை வேற்றுவதென தவித்தான்.

சிவா மற்றும் ஒமியா… இருவரில் யாருக்கு உதவுவதென்று குழம்பினான்.

தான் என்ன கூற போகிறேனென தவிப்பாய் பார்த்திருக்கும் ஒமியாவை ஏறிட்டவன்… “உன் காதலில் நானிக்கும் விருப்பமிருக்கும் பட்சத்தில் நான் உனக்குத் துணை நிற்கிறேன்” என வாக்களித்தான்.

தன் அண்ணனின் சாதுர்யமான பதிலில் அவனை உள்ளுக்குள் மெட்சினாள்.

“உன் நண்பனின் ஓகே என்ற பதிலோடு வர்றேன்” கூறிச் சென்றவள் ”எப்படி அந்த கருவாயனை என் வலையில் விழ வைக்க போறேன் தெரியலயே” என புலம்பினாள்.

ஒமியா யோசனையில் ஆழ்ந்திருக்க,

“ஆத்தா மியாவ்” என்றழைப்போடு பாண்டியம்மாள் வந்தார்.
அவள் நானியின் சிந்தனையில் இருந்ததால், அவரின் அழைப்பை கவனிக்கவில்லை, இல்லையென்றால் தன்னுடைய பெயரை கொலை செய்ததற்கு சலங்கையில்லாமலே ஆடியிருப்பாள்.

“என்ன கண்ணு யோசனை, உன்ற மாமன எப்படி கைக்குள்ள போடறதுன்னா.. அதுக்கு நான் வேற ஏற்பாடு பண்ணிட்டேன்.. எப்படியும் நானி தான் உன்ற புருஷன், கவலைப்படாம இருத்தா.”
பாண்டியம்மாளின் பேச்சில் எப்படியென்று ஒன்றும் புரியவில்லையென்றாலும், “கருவாயன் எனக்குத் தான்” என்ற நம்பிக்கை அவளுள் ஆழ பதிந்தது.

முகமெல்லாம் பூரிப்போடு தனது பாட்டியை கட்டிக்கொண்டவள், அவரது கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்தாள்.

இவர்கள் பேசுவதை எதேர்ச்சையாக கேட்டுவிட்ட அழகேசன், சில நொடிகள் அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

இனியும் தான் அமைதியாகயிருந்தால் தனது பெண்ணாக வளர்த்து வருபவளின் வாழ்வே கேள்விக் குறியாகிவிடுமென்று எண்ணியவர், தனது மூத்த தங்கை அமுதாவை தேடிச்சென்றார்.

“என்ன மனுஷன்யா நீ? எப்போ பாரு அவ(அரசி) செஞ்சு கொடுக்குற எல்லாத்தையும் வயிறு முட்ட தின்னுட்டு இருக்க, இங்க எதுக்குய்யா நாம வந்தோம்.. அம்மா சொன்ன மாதிரி நம்ம பொண்ண இந்த வீட்டுக்கு மருமாகளாக்கிட்டு நாம கிளம்ப வேண்டாமா?”

“நாம நினைக்கிறது இருக்கட்டும்.. உன் அண்ணனும், அண்ணன் பையனும் என்ன நினைச்சிருக்காங்க தெரியலையே! நம்ம பொண்ணு தான் அவன் பின்னாடி சுத்திட்டு இருக்காள், அந்த நானி பய இவளை கண்டுக்கிற மாதிரியே தெரியல.
உங்க அம்மாவும் நம்மள வர சொல்லிட்டு அமைதியா இருக்காங்க, பேசாமல் நாம் இருவருமே உன் அண்ணனிடம் பேசிவிடலாம்.”

அமுதாவின் அறை வாயிலில் நின்று உள்ளே செல்ல கதவை தட்ட கை உயர்த்திய வேளையில்… கணவன் மனைவி இருவரும் பேசிக்கொண்டதை கேட்ட அழகேசனின் கோபம் தன் அன்னை மீது அதிகரித்தது.

எல்லாம் தெரிந்த அவர் தனது பேத்திக்கு புத்தி சொல்லாமல் ஏத்தி விடுவதை போல் பேசியதில் சிறு கோபம் கொண்டவர், அவர்கள் திடீரென்று இங்கு வந்திருப்பதற்கு காரணமே தனது அன்னை தானென்று தெரிந்த பின் அவர் மீது உருவாகியிருக்கும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

“உள்ளே வரலாமா?”

இடி முழக்கமென திடீரென்றுக் கேட்ட குரலில்… அமுதாவும், நரேனும் யாரென்று கதவை திறந்து பார்க்க.. கோப முகத்துடன் நின்றுருந்தார் அழகேசன்.

அவரின் முகமே அனைத்தையும் அவர் கேட்டுவிட்டாரென்று அவர்களுக்கு உணர்த்தியது.

“உள்ளே வந்து பேசலாமா?”
அழகேசன் காரியமே கண்ணாக செயல்பட்டார்.

அறைக்குள் நுழைந்து அவ்விருவரும் அமரும் வரை பொறுமை காத்தவர்,

“நீங்க வந்த நோக்கம் நடைபெற ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை.” பட்டென்று கூறினார்.

“ஏனென்று தெரிந்துகொள்ளலாமா?” அழகேசன் சொல்லியதை போன்று தோரணையாகவே அரசி வினவினார்.

இவ்வளவு தூரம் வந்த பிறகு இனியும் சொல்லாமலிருப்பது பெரும் விளைவுகளை ஏற்படுத்துமென்று சிந்தித்தவர், இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை ஒன்றுவிடாமல் கூறினார்.

அழகேசன் சொல்லியதை கேட்டதும், அமுதா, நரேன் இருவரிடமும் சிறு அதிர்வு கூட இல்லை. அவர்களின் சாதாரண முக பாவமே… அவர்களுக்கு முன்னமே அனைத்தும் தெரிந்திருக்கிறதென்று தெளிவுபடுத்தியது.

“அப்போ உங்களுக்கு இந்த வீட்டில் நடந்த நிகழ்வு ஏற்கனவே தெரிந்திருக்கு, அப்படித்தானே?”
அழகேசனின் கேள்விக்கு அவர்களிடத்தில் மௌனமே பதில்.

“இதற்கு மேல் உங்களிடம் பேசி பிரயோஜனமில்லை” என்றவர் வெளியே செல்ல நகர்கையில்,

“அதான் இல்லையென்று ஆகிவிட்டதே… திரும்ப எதுக்கு ஒன்னு சேர்க்க நினைக்கிறீங்க, அவனுக்கே விருப்பமில்லையென்று ஆன பிறகு அவன் வழியில போவது தானே அவனுக்கு நல்லது.”

அமுதா பேசிய வார்த்தைகளில் நின்று திரும்பியவர்,

“அப்போ உன் பையன் கொலை செய்யப் போறான்னா.. அவனுக்கு அதுல தான் விருப்பம்ன்னு, போய் கொலை செஞ்சுட்டு வா ராசான்னு வழியனுப்பி வைப்பீயோ!” அழகேசனின் குரலில் நக்கல் வழிந்தது.

“உனக்கு விருப்பமில்லையென்றால் தலையிடாம ஒதுங்கிக்க” என்ற அமுதா… “நாங்க நினைப்பது நடந்தே தீரும்” என்று சவாலாகக் கூறினார்.

நேரே தனது இரண்டாவது தங்கையை தேடிச்சென்றவர்… அவர் அடுக்கலையில் அனைவருக்கும் சிற்றுண்டி தயார் செய்வதை பார்த்து,

“இந்த அடுப்படியே உலகம்னு இருந்துடாதே அரசி” என்றார்.

தன் முதுகுக்கு பின்னால் கேட்ட தனது அண்ணனின் குரலில் திரும்பிய அரசி, அவரிடம் நீர் அடங்கிய குவளையை நீட்டி..

“முதலில் இதை குடிண்ணே, கோபத்துல எது பேசினாலும் தவறாகத்தான் முடியும்” என்க…
தங்கையின் பேச்சை மீற இயலாது, குவளையை வாங்கி முழுவதுமாக நீரினை காலி செய்தவர்.. அரசியை பரிவுடன் பார்த்து, “உன்னால் மட்டும் எந்த நிலையிலும் எப்படிம்மா அமைதியாக இருக்க முடிகிறது” என்று வினவினார்.

“சூடு, சுரனை, மானம், ரோஷம் அனைத்தும் இழந்த பிறகு அமைதி தானாகவே வந்து விடும்.” விரக்தியில் பேசிய அரசியின் வார்த்தை அண்ணனாக அவருக்கு வலித்தது.

அரசியின் கணவர் இறந்த பிறகு… அவள் சொல்வதை கேட்காது மறுமணம் முடித்திருக்க வேண்டுமோ… என்று லட்சமாவது முறையாக வருத்தப்பட்டார்.

“சரிண்ணே… என் உலகம் இந்த அடுப்படி தான், இது எனக்கு சந்தோஷமாத்தானிருக்கு.. நீங்க வந்ததை சொல்லுங்க.”
அரசி கேட்ட பிறகுதான் எதற்கு வந்தோம் என்பது புரிய,

“உன் மருமகன் என்ன தாம்மா சொல்றான்…”

“எதுண்ணே…?”

“புரியாத மாதிரி கேட்கிறீயே அரசி…”

“அவன் எடுக்குற முடிவில்… நம்ம சிவாவின் வாழ்க்கையும் அடங்கியிருக்குங்கிறது உனக்கு ஞாபகம் இருக்கட்டும்.”

“அப்டியென்னம்மா உனக்கு உன் பெண்ணை விட நானி முக்கியமாகப் போய்விட்டான்.”

“ஆமா, அவங்களுக்கு அவங்க பெண்ணை விட மருமகன் தான் முக்கியம்… இப்போ அதுகென்ன?”
இருவரும் சமையலறை வாயிலை நோக்க… அங்கு கம்பீரமாக நின்றிருந்தான் நானிலன்.

error: Content is protected !!
Scroll to Top