அத்தியாயம் 8 :
முதல் முறையாக நானியின் நடவடிக்கைகளின் மீது அழகேசனுக்கு சந்தேகம் வந்தது.
“தன் மகனைப்பற்றிய தனது கணிப்பு தவறோ” என்று எண்ண வைத்தது.
எந்தக் காரணத்திற்காக தன் மகனிடம் பேசாமல் இருக்கிறாரோ, அந்தக் காரணத்திற்கு பின்னால் அவன் மட்டும் அறிந்த ஒன்று உள்ளதென அவர் மனம் அடித்துக் கூறியது.
இரவு நேரம் உறக்கம் வராமல் தோட்டத்தில் காலாற நடந்துக் கொண்டிருந்தவரின் மனம்… சில வருடங்களுக்குப்பிறகு தன் மகனுக்கு சாதகமாக யோசித்தது.
அதற்கான காரணம், அரசியிடம்… எங்கே தன்னுடைய மகள் போன்ற மருமகளின் வாழ்வு கேள்விக்குறி ஆகிவிடுமோ என பயந்து கத்திக்கொண்டிருந்தவர் தன் முதுகுக்கு பின்னால் கேட்ட ஒலியில் திரும்பி பார்க்க அங்கு நானி நின்றிருந்தான்.
நானியை பார்த்ததும்… “தன் வீட்டிலேயே தனக்குத் தெரியாமல் பல விஷயங்கள் நடக்கிறது” என்று உள்ளுக்குள் கட்டுப்படுத்தி வைத்த கோபம் கட்டவிழ்ந்தது.
“நீ என்ன தான்டா முடிவு பண்ணிருக்க?”
“என்ன விஷயமுன்னு சொல்லாம… முடிவு கேட்டால் நானென்ன சொல்வது?”
அழகேசனின் கோபமான கேள்விக்கு… தோளை குலுக்கியபடி அலட்சியாமாக பதிலுரைத்தான்.
சினம் மேலோங்க… “அவளை உயிரோடு புதைத்துவிட முடிவு செய்துட்டியா?”
“அப்பாஆஆஆ…”
வீடே நானியின் கத்தலில் ஆட்டம் கண்டது.
நானியை புரியாது அழகேசன் பார்த்திருக்க…
“அவளை, புதைப்பதற்கா நான் வலி சுமக்கிறேன்.”
தன்னையும் மீறி தன் மனதை வெளிப்படுத்தியவன், இனியும் இங்கு நின்றால் அனைத்தையும் சொல்லிவிடுவோமென பயந்து அவ்விடமிருந்து நகர்ந்தான்.
இதனை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்த அழகேசனுக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது…
“தன் மகனின் காதல் சத்தியமான உண்மை.”
“பின்னர் ஏன் சிவாவை பார்த்தாலே எரிந்து விழுறான். ஏதோ இருக்கு…”
அழகேசன் சிந்தித்துக் கொண்டிருக்கும் அதையே மற்றொரு ஜீவனும் சிந்தித்துக் கொண்டிருந்ததது.
****************
காலை தன்மையாக சிவாவிடம் பேசிய பிறகு… மீண்டும் அவளை ஏமாற்றக் கூடாதென்ற முடிவில்… இனி அவளிடம் பேசவில்லையென்றாலும் முறைப்பதையும், ஒதுக்கி வைப்பதையும் தவிர்க்க வேண்டுமென்று முடிவு செய்தான் நானிலன்.
அதுமட்டுமல்லாமல்…. மீண்டும் அவள் வருந்தத்தானே காரணமாக இருக்கக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தான்.
இங்கோ படுக்கையில் விழுந்திருந்த சிவாவிற்கு இன்னும் காலையில் நடந்ததை நம்பவே முடியவில்லை…. ஒரு வித சந்தேகத்துடனே அவளின் மனம் பயணித்தது.
காயம் கண்ட நெஞ்சமல்லவா…! எளிதில் நம்ப மறுத்தது.
அவள் பட்ட காயம் வடுவாய் அவளின் இதயத்தை துளைத்துக் கொண்டிருக்கிறதே! பாவம் என்ன செய்வாள் அவள்.
ஆனால் எங்கோ ஓர் மூலையில் கீற்று போல் சிறு நம்பிக்கைத் தோன்றியது. அந்நம்பிக்கை, அன்று பாண்டியம்மாள் மற்றும் ஒமியா பேசியதைக் கூட மறக்கச் செய்தது.
பல்வேறு சிந்தனைகளில் உழன்றவள்… உச்சி இரவில் கண்ணயர்ந்தாள்.
மறுநாள் காலை உணவு வேளையின் போது நானி உணவு உட்கொண்டிருக்க அவனுக்கு அருகிலிருக்கும் நாற்காலியை இழுத்துப்போட்டு தன் பேரனை ஒட்டியவாறு நெருங்கி அமர்ந்தார் பாண்டியம்மாள்.
அவரின் செயலை சிறிதும் கண்டுகொள்ளாதவன் போல் தன் உணவிலேயே கண்ணாய் இருந்தான் நானிலன்.
பாண்டியம்மாள் அமர்ந்ததும்.. அவரின் சகாக்கள் ஒவ்வொருவராக அங்கு வந்தனர். அதில் ஒமியா நானிக்கு மறுபுறம் அமர்ந்தாள்.
“பலே திட்டமா இருக்கும் போலவே…” மனதில் கூறிக்கொண்ட நானி அவர்களை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்தவனிடம்… “இன்னொரு தோசை சாப்பிடுப்பா” என அமுதா கூற, இல்லை போதுமென்று மறுத்தவனை… “தட்டிலே கழுவுப்பா” என அமரவைத்தார் பாண்டியம்மாள்.
அவர்களின் செயல்களையெல்லாம் கூடத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த அழகேசனுக்கு எரிச்சலாக வந்தது.
“என்ன மாமா… இவங்கெல்லாம் நானியை சுற்றி வலைப்பதை பார்த்தாள் ரொம்ப பெரிய மேட்டர் போல் தெரியுதே!” என்ற கபிலனை கூர்ப்பார்வை பார்த்தவர்,
“என்ன மாப்பிள்ளை… எதுவுமே தெரியாததைப்போல் கேட்கிறீங்க?” எனக் கேட்டார்.
“நீங்க கேட்பதைப்பார்த்தால் உங்களுக்கு முன்னமே தெரியும் போலிருக்கே எனக்கும் சொல்லுங்க” என்றவனின் கண்களில் சிறிதும் பொய்யில்லை என்பதை உணர்ந்தவர்,
“செத்த பொறுங்க மாப்பிள்ளை, இதோ இன்னும் சில நொடிகளில் பூனை குட்டி குதித்தோடப் போகுது” என பதிலளித்தார்.
கபிலனின் முகபாவனையே தான் சொன்னது சுத்தமாக அவனுக்கு புரியவில்லையெனக் காட்டிக்கொடுத்தது.
“ரொம்ப யோசிக்காம அங்கே என்ன நடக்குதென பார்” என்றவர் தனது கவனத்தையும் அவர்களின் பேச்சில் பதித்தார்.
“ஏம்ப்பா… ஆபீஸ் கிளம்பிட்டியா??”
பாண்டியம்மாளின் கேள்வியில் தன்னை குனிந்து ஒரு முறை பார்த்தவன்.. ஆமாமென்றான்.
“அது வந்து ராசா…” பாண்டியம்மாள் எப்படி ஆரம்பிப்பதென தடுமாற,
“ஊரையே ஆட்டி வைக்கும் பாண்டியம்மாளுக்கே பேச வார்த்தை வரலையா?” எனக் கேட்ட நானியின் இதழோரம் வலைந்திருந்தது.
“அய்யோ அம்மா நேரா விஷயத்திற்கு வாம்மா” என்ற அமுதாவை கை நீட்டி தடுத்தவர்,
“ராசா உனக்கும் ஒமியாவிற்கும் கல்யாணம் பண்ணலான்னு முடிவு பண்ணியிருக்கோம். நீ உன் விருப்பம் என்னான்னு சொன்னா, அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்க கவனிப்போம்” என்றார்.
உணவு உண்ண அங்கு வந்திருந்த சிவா.. பாண்டியம்மாளைக் கண்டதும் சிறிது தயங்கினாலும் கல்லூரிக்கு செல்ல நேரமாவதை அறிந்து, தட்டில் உணவுகளை எடுத்து வைக்கும் சமயம் தான் நானியிடம் தன் எண்ணத்தைக் கூறியிருந்தார்.
பாண்டியம்மாளின் செய்தி காதில் நுழைந்ததும் அதிர்ந்து தட்டினை தவற விட்டாள் சிவா. அவளின் வாழ்க்கையைப்போலவே உணவு பொருட்களும் சிதறின.
நல்ல விஷயம் பேசும் போது இப்படி அபசகுணமாக செய்துவிட்டாலேயேன பாண்டியம்மாள் சிவாவை அடிக்க போக, நானி அவரின் கரத்தை பிடித்து தடுத்திருந்தான்.
பாண்டியம்மாள் அடிக்க கை ஓங்கியதும் கண்களை இறுக மூடி கன்னங்களை கைகள் கொண்டு மறைத்தவளாக சிவா நின்றிருக்க…
“இன்னும் ஏன்டி நின்னுட்டு இருக்க, போடி இங்கிருந்து” ஒமியா கத்தினாள்.
ஏற்கனவே அதிர்ந்திருந்த சிவா… ஒமியாவின் கத்தலில் உடல் தூக்கிப்போட பயத்தில் நடுங்கியவளாய்… கண்கள் கண்ணீரில் குளம் கட்டியிருக்க நானியின் விழியோடு தனது விழியை கலக்கவிட்டவாறு அவ்விடமிருந்து நகர முயன்றவளை, நானியின் குரல் தடுத்தது.
“ரனி… சாப்பிட்டுட்டு கிளம்பு.”
தட்டு விழுந்த சத்தத்தில் மற்ற உறுப்பினர்களும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.
நானி பாண்டியம்மாளை தடுத்ததும், சிவாவை சாப்பிட்டுவிட்டு செல் என்றதையும் அழகேசனும், பத்மாவும் விழிவிரிய ஆச்சரியமாக பார்த்திருக்க…
“தன் மருமகன் அவனின் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான்” என மகிழ்வுடன் அரசி அங்கிருந்து நகர்ந்து அடுக்கலைக்குள் புகுந்துகொண்டார்.
கபிலனுக்கு வழக்கம்போல் புரியாத மொமெண்ட் தான்.
‘இப்போதாவது அண்ணன் தன் மௌனச் சிறையிலிருந்து வெளி வந்தாரே அதுவே எனக்கு மகிழ்ச்சி’ என்ற எண்ண ஓட்டத்தில் நந்தினி நின்றிருந்தாள்.
அழுகையில் கரைந்த சிவா… நானியின் சொல்லைத் தட்டாது உணவு உண்ணத் தொடங்கினாள்.
ஒமியா சிவாவின் மீதான நானியின் பார்வையைக் கண்டு எரிச்சலடைந்தாள். அந்த எரிச்சலே சிவாவிற்கு எமனாகப் போகிறதென்று யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை.
மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ,பாண்டியம்மாள் நானியின் பிரத்யேக அழைப்பான ரனியை கண்டுகொண்டார்.
‘நமக்குத் தெரியாமலேயே இங்கு என்னவோ நடக்கிறது’ என்று எண்ணியவர், “என்ன நானி சொல்ற” எனக் கேட்டார்.
ம்ம்ம்ம்ம்… ஒற்றை விரலை நெற்றியில் தட்டி யோசிப்பதைப்போன்று பாவனை செய்தவன்…. “ஓ கல்யாணத்தைப் பற்றி கேட்டீங்கல!” எனக் கேட்டு.. பாண்டியம்மாள் மற்றும் அமுதாவின் எதிர்பார்ப்பு கலந்த தோற்றத்தை மனதில் குறித்துக் கொண்டான்.
“அனைவருக்கும் சம்மதமா?”
நானி அவ்வாறு கேட்டதும் பாண்டியம்மாள் வாயெல்லாம் பல்லாக ஆமாம் போட,
“அப்போ, எனக்கும் சம்மதம்” என்றான்.
நானியின் பதிலில் உணவு உட்கொண்டிருந்த சிவா விலுக்கென நிமிர, உணவு தொண்டைக்குழியில் இறங்க மறுத்தது.
ஒமியா கையை மேலே தூக்கி உற்சாகமாக ஆட, அடுத்து நானி கூறியதில் சிவாவின் மீது காரணமேயில்லாமல் வன்மம் வளர்ந்தது.
“அப்போ, எனக்கு சம்மதம்…” என்றவன், “ரனியிடமும் அவளின் சம்மதத்தைக் கேட்டுக்கோங்க.” அழுத்தமாகக் கூறியவனின் பார்வை தன்னவளின் மீதே நிலைத்திருந்தது.
தொண்டையில் அடைத்த உணவு வழுக்கிக்கொண்டு வயிற்றுக்குள் விழ, சிவாவின் வயிற்றில் குளிர்ந்தது.
பாண்டியம்மாள் என்ன பேசுவதென்று தெரியாது விழித்தார்.
எல்லோருக்கும் நானி ஏன் சிவாவிடம் கேட்க செல்கிறானென்று புரிய, கபிலனுக்கு அக்காரணம் தெரியாததால் தலை வெடித்துவிடும் போலிருந்தது. இருப்பினும் அமைதியாக நின்றான்.
“நீங்க என்னைக் கட்டிக்கொள்ள இவளிடம் ஏன் சம்மதம் கேட்க வேண்டும்.” ஒமியா ஆத்திரத்தில் சிவந்த விழிகளைக் கொண்டு சிவாவை பார்வையால் எரித்தாள்.
ஒமியாவை அழுத்தமாக பார்த்த நானி…. “செக்கென்ட் மேரேஜ் பணணும்னா, முதல் மனைவி சம்மதம் ரொம்ப முக்கியமாச்சே!” என்றவன் தன் பணியைக் காணச் சென்றான்.
அவனின் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றது இருவர். அதில் ஒருவனான கபிலன் சிலையாகியிருக்க, ஒமியா கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வீடு முழுக்க விசிறியடித்தாள்.
பொருட்கள், அங்கொன்று இங்கொன்றுமாக தரை மற்றும் சுவர்களில் பல்வேறு பாகங்களாக நொறுங்கின.
ஒமியா கோபம் கொள்ளும் நேரம் யாராலும் அவளை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்த கபிலன், நரேன், அமுதா அமைதியாக விலகிக்கொள்ள பாண்டியம்மாள் அவளிடம் நன்கு சிக்கிக்கொண்டார்.
இந்நேரத்தில் சிவா இங்கிருந்து அவர்களிடம் மாட்டிக்கொண்டால் கீமா உருண்டை ஆக்கிவிடுவார்கள் என நினைத்த நந்து சிவாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினாள்.
“ஏன் கிழவி… ஏன்… இதை முன்னமே என்கிட்ட சொல்லலை, எப்படி… எப்படி இது நடந்துச்சு.
போயும் போயும், என் கால் தூசுக்கு கூட சமமில்லா ஒருத்தியை கட்டியவனுக்கு நான் இரண்டாம் மனைவியாக வேண்டுமா?”
ஆக்ரோஷமாக வெடித்தவள்…
“ஏய்…. கிழவி, நீதான் சும்மா இருந்த என்னை ஏற்றிவிட்டு அவன் மேல் காதலை வளர்த்த, அவன் மட்டும் எனக்கு கிடைக்கல அவனோடு சேர்த்து உன்னையும் கொன்றுடுவேன்” என்றவள் கண்கள் சிவக்க ஒரு ருத்ர தாண்டவமே ஆடிவிட்டாள்.
சிவாவை மணந்தவன் தனக்கு வேண்டாமென்று கொதித்தவள் தான், அவன் வேண்டுமென்றும் பாண்டியம்மாளிடம் கத்தினாள்.
அவளின் மனம் அந்நேரத்தில் சிவாவிடம் போட்டி போட்டது. தனக்கு எதிராக வந்திருப்பவள் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.
ஆனால், அவளுக்கு ஏனோ தான் தான் சிவாவிற்கு போட்டியாக, எதிராக வந்திருக்கின்றோமென புரியவில்லை. புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவளில்லை.
அவளின் ஆட்டத்தில் ஆளானப்பட்ட பாண்டியம்மாளே விழி பிதுங்கி நின்றார்.
‘உன்னுடைய இந்தக் கோபமும் ஆத்திரமும் தான் நான் நினைத்ததை செய்ய வைக்கப்போகிறது’ என்று மனதில் கூறிக்கொண்ட பாண்டியம்மாள்..
“உன்னை இதே நிலையில் வைத்திருப்பது தான் எனக்கு நல்லது” என எண்ணினார்.
பாவம் பாண்டியம்மாள்.. அவரும் அறியாத ஒன்று… ஒமியா பத்து பாண்டியம்மாளுக்கு சமமென்று, விட்டால் அவரையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவாள்.
கல்லூரிக்கு வந்த நந்து வகுப்பிற்கு கூட செல்லாமல்.. “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ரஞ்சு, அண்ணன் மனம் மாறுமென்கிற நம்பிக்கையே எனக்கு இல்லாமல் இருந்தது. அந்த நம்பிக்கை இன்று எனக்கு வந்துவிட்டது.
நிச்சயம் அண்ணன் மனதில் நீ மட்டுமே இருக்க.”
நந்தினி சொல்லியதை ஏற்க முடியாது தவித்த சிவாவின் மனம்.. “எப்படி சொல்ற?” அவளிடம் கேள்வி கேட்டது.
“அடி மண்டு!,” செல்லமாக சிவாவின் தலையில் கொட்டியவள்,
“அண்ணாவின் மனதில் நீயில்லைன்னா, அவர் அந்த பூனையை கட்டிக்க சம்மதம் தானே சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து உன்னை ஏன் மனைவியென அவர்களிடம் கூற வேண்டும்” என்று விளக்கிய நந்து மனமெல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷத்தில் மூழ்கியிருந்தது.
“இன்னொரு ஏமாற்றத்தை தாங்குமளவிற்கு என் மனதில் தெம்பு இல்லை”.
கண்ணீரோடு சொல்லிய சிவா வகுப்பிற்கு எழுந்து ஓடிவிட்டாள்.
“மரத்துப்போன உன் இதயத்தை எப்படி இளக வைக்க வேண்டுமென்று அண்ணனுக்கு தெரியும்” எனக் கூறிக்கொண்ட நந்தினியின் மனம் வேறொருவனின் முகத்தை நினைவு கூர்ந்தது.
அம்முகம் மனதில் தோன்றிய அடுத்த நொடி தலையை உலுக்கி தன்னை சமன் செய்துகொண்டவள்,
“போதும்… இதுவே போதும்…என் குடும்பம் பட்ட கஷ்டத்திற்கு இவர்களின் காதல் ஒன்றே போதும்” உரக்கக் கூறி தன் மனதில் முளைவிடும் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
அலுவலகத்தில் ஒரு வேலையும் நானியால் சரியாக செய்ய முடியவில்லை.. முகத்திற்கு நேராக சிவாவின் குளம் கட்டிய விழிகளேத் தோன்றி அவனை இம்சித்தது.
இவ்வளவு நாள் விலகியிருந்த போது அடக்க பழகிக்கொண்ட உணர்வுகளெல்லாம்… ஒற்றைத்துளி உப்பு நீரால் அடித்து செல்லப்பட்டது. எவ்வளவு முயன்றும் அவனால் மனதை அவளிடமிருந்து பிரித்தெடுக்க முடியவில்லை.
“என்னடி இப்படி போட்டு படுத்துற,
எப்போ கோவிலில் உயிர் உருக்கும் உன் காதல் வார்த்தைகளை கேட்டேனோ அன்றே இனியும் உன்னை விட்டு விலகியிருக்க கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன்.
ஆனால் மற்றதையெல்லாம் கடந்து உன்னை எப்படி பாதுகாப்பதென்று தெரியாமல் தவித்திருக்கிறேன்.
நான் என் செய்வது?
எனக்கு உன் காதலில் திளைப்பதை விட, உன் உயிர் முக்கியமடி, எதிர்க்கிறது வெளியாளா இருந்தா கொன்னு புதைச்சிடுவேன். இப்போ தள்ளி நிக்கிறது மட்டும் தான வழி” அரற்றியவனுக்கு மார்க்கம் தான் தெரியவில்லை.
சிவாவோடு போராடிய மனதில், தேவையில்லாது காசியின் முகம் மின்னி மறைந்தது.
காலையில் நானி அலுவலகம் வந்து சேர்ந்த போது.. காசியின் அடியாட்களில் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் சுற்றிக் கொண்டிருந்தனர்.
நானியின் மனம் முழுக்க வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் பதிந்திருக்க, இவை கருத்தில் பதியாமல் பார்வையோடு நின்றுவிட்டன.
இப்போது காசியின் முகம் மனதில் உதிக்கவும்… காலையில் பார்த்த அடியாட்களின் முகம் நினைவு வந்தது. இரண்டு மூன்றுமுறை அத்தடியர்களை காசியுடன் வைத்து நானி பார்த்திருக்கிறான். ஆதலால் அவர்கள் காசியின் ஆட்கள் தானென்று தெளிவாக தெரிந்தது.
வேலுவை அழைத்த நானி… காலையில் வந்தவர்களைப் பற்றி விசாரித்தான். தனக்கொன்றும் தெரியாதென்றவன் வாட்ச் மேன் கண்ணய்யாவிற்கு தெரிந்திருக்கலாமென்க, அவரை அழைத்து வர பணித்தான்.
உள்ளே வந்தவரை பார்த்ததும் அவரின் வயதை கருத்தில் கொண்டு… ”வாங்கய்யா” என்றவன் தனக்கு முன்னிருந்த நாற்காலியில் அமர செய்தான்.
கலெக்டரின் சொல்லைத் தட்டக் கூடாதென்பதற்காக சிறு கூச்சத்துடன் நாற்காலியின் முனையில் அமர்ந்தார் கண்ணய்யா.
“அமைச்சரின் கையாட்கள் என்ன விஷயமாக இங்கு வந்திருந்தனரென்று தெரியுமா?” என கேட்க, “ஏதோ பத்திர பதிவிற்கு வந்ததாக பேசிக்கொண்டனர்” என பதிலளித்தார் கண்ணய்யா.
“சரி நீங்க போங்கய்யா.”
அவரை அனுப்பி வைத்த நானியின் மனதில் சிறு நெருடல் ஏற்பட்டது. அது என்னவென்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் இங்கு வந்ததை சாதரணமாகவும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
‘அன்று டெண்டர் கை மாறியதில்… காசி கோபப்பட்டதற்கு மாறாக இவ்வளவு நாள் அமைதியாக இருக்கின்றான் என்றால் ஏதேனும் திட்டமாக இருக்குமோ’ சிந்தித்தவனின் மொபைல் சிணுங்கியது.
அழைத்தது கபிலன்,
என்னடா எனக் கேட்டவாறு செவிமடுத்தவனிடம்.. “உன்னை நான் இப்போதே பார்க்க வேண்டும்” வேண்டுகோள் வைத்தான்.
“மாலை வீட்டிற்குத் தானே வரப்போகின்றேன் பேசிக்கொள்ளலாம்” என்றவனை இடைவெட்டிய கபிலன்.. “ப்ளீஸ் டா மச்சான், என் தலை வெடித்துவிடாமலிருப்பது உன் கையில் தான் இருக்கிறது” என்றான்.
கபிலனின் கேலியான பேச்சில் சிரித்த நானி, “சரிடா நீ இங்கு வந்துவிடு எனக்கும் வேலையில் கவனமில்லை” எனக் கூற அடுத்த அரை மணி நேரத்தில் கபிலன் நானியின் அலுவலக அறையிலிருந்தான்.
**********
காசி தனது மாளிகை போன்ற வீட்டின் வரவேற்பறையை குறுக்கும் நெடுக்குமாக நடந்து அளந்து கொண்டிருந்தான்.
“போனவனுங்களை இன்னும் ஆளே காணுமே! போன் போட்டாலும் போகல, அங்க என்னாச்சு தெரியலையே!”
புலம்பிக்கொண்டிருந்தவரின் முன், சூடாக ஆவி பறக்கும் காபி தம்ளர் நீட்டப்பட்டது.
நீட்டிய கரத்தின் முகத்தை வெறியுடன் முறைத்தவர், “இப்போ நான் காபி வேண்டுமெனக் கேட்டேனா?” அம்மாளிகையே அதிரும் வகையில் கத்தினார்.
மாளிகையே அதிரும் போது அவர் தாலி கட்டிய தர்ம பத்தினி அதிராமலா இருந்திருப்பார்.
காசியின் கத்தலில் அவரின் மனைவி நடுங்க, கரத்திலிருந்த தம்ளரை நழுவ விட்டார். அது சரியாக காசியின் கால் விரல்களை பதம் பார்த்தது.
காபியின் சூடு தாங்காமல் பதறி துடித்தவர், இருக்கையில் அமர.. அவரின் காலுக்கு கிழே அமர்ந்த செல்வி “என்னை மன்னிச்சிடுங்க மாமா, தவறுதலா கொட்டிட்டேனுங்க” என்று அவரின் காலை பற்றி மன்னிப்பு வேண்டினார்.
“அய்யோ விடுடி, காபி கொட்டிய இடத்தை இப்படி கையால் அழுத்துறியே, ஏற்கனவே சூட்டால் வெந்துபோன தோல் உன் கையோடு வந்துவிடப் போகிறது காலை விடுடி” என்றவர் அவரின் கையிலிருந்து தன் காலை உருவிக்கொண்டார்.
“மன்னிச்சிடுங்க மாமா” என்ற செல்வி எழுந்து போக, “எங்கே போற” என்ற காசியின் குரலில் நின்று “உங்களுக்கு வேறு காபி கொண்டு வாறேனுங்க” என பதிலளித்தார்.
“அதாவது குடிக்கிற சூட்டிலிருக்குமா அல்லது ஆளை கொல்லுற சூடா” என்றவர், “எதுக்கு அதையும் எடுத்து வந்து என் இன்னொரு காலையும் பதம் பார்க்கவா?” என்றார்.
காசியின் வார்த்தையில் பதரியவராய்.. “அய்யோ, என் சாமி என்ன வார்த்தை சொல்லிட்டீரு..” தன் வாயில் கை வைத்து கூறிய செல்வியின் கண்களில் நீர் இறங்கியது.
“ம்ப்ச், இப்போ எதுக்குடி டேம் திறந்து விடற, இங்கன வந்து எம் பக்கத்துல உட்காருடி” என்ற காசி, செல்வியின் கரம் பிடித்திழுத்து தனக்கருகில் அமர்த்திக்கொண்டார்.
“மனசு படப்படப்பா இருக்கட்டி, உன் மடியில படுத்துக்கிறேன்.” அனுமதி வேண்டியவர், கிடைக்கும் முன்னமே செல்வியின் மடியில் தலை வைத்து படுத்திருந்தார்.
காசி எவ்வளவு பெரிய ரவுடியாக இருந்தாலும் அவர் மனைவியிடத்தில் சிறு குழந்தை தான். யாருக்கும் கட்டுப்படாதவர் செல்வியின் வார்த்தைக்கு அடங்கிப் போவார். ஆனால் செல்வி இதுவரை அவரை எதிலும் அடக்கியதில்லை.
“என்ற மாமன் எது செய்தாலும் அது நல்லத்துக்குத்தேன்” என இன்று வரை நம்பிக்கொண்டிருக்கின்றார்.
அந்த நம்பிக்கை, காசி செல்வியின் மீது வைத்திருக்கும் காதலால் வந்தது. இளமை வயதில் ரவுடியாக திரிந்த காசி, செல்வியை பார்த்ததும் காதல் கொண்டு.. தன் காதலை செல்வி மறுக்க மறுக்க, அவளுக்கு உணர்த்தி அதில் வெற்றியடைந்து திருமணமும் செய்து கொண்டார்.
இனி இந்த அடிதடியெல்லாம் வேண்டாமென்ற ஆசை மனைவியிடம் சரியெனத் தலையாட்டினாலும், அவளுக்குத் தெரியாமல் இன்று வரை அதை செய்தும் வருகின்றார்.
செல்விக்காக, அவள் சொல்லிய “வேலைக்கு போங்க” என்ற வார்தைக்காக கட்சியின் தொண்டனாக சேர்ந்து தன்னுடைய ரவுடி தனத்தால் குறுகிய காலத்திலேயே அமைச்சராக இருக்கின்றார்.
செல்வி இதுவரை காசியைத் தாண்டி எதுவும் சிந்தித்தத்தில்லை.
அவர் அந்த வீட்டைத் தாண்டி செல்லும் இடமென்றால் கோவில் தான். அவரை பொறுத்தவரை தன் கணவன் ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் நல்ல அமைச்சர். அந்த எண்ணத்தை காப்பாற்றுவதில் காசி வல்லவர்.
“ஏன் மாமா சோந்து போயி இருக்கீங்க?”
செல்வியின் கேள்வியில் அவரது மடியிலிருந்து எழுந்தவர், “ஒரு பய ரொம்ப குடைச்சல் கொடுக்கிறான்” என்ற காசி செல்வியின் பயந்த சுபாவத்தை மனதில் கொண்டு, “அவனிடம் பேசி பிரச்சினையை ஒரேயடியா முடித்து வைத்துவிட்டு வாங்கடான்னு அனுப்பி வச்சேன். இன்னும் அவனுங்களை காணோம் அதான் கொஞ்சம் பதட்டமாக இருக்கு.”
“பேச்சு வார்த்தைத்தானே மாமா…”
செல்வியின் சந்தேகக் கேள்வியில்,
“ஏன் டி!! உனக்குத்தான் தெரியும்ல, உன்ற மாமன் அடிதடியெல்லாம் வுட்டு ரொம்ப வருஷமாச்சின்னு..” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவரின் ஆட்கள் வந்து சேர்ந்தனர்.
“சரிடி.. நீ உள்ள போ” என்றவர் எழுந்து தோட்டத்துபக்கம் செல்ல, அங்கு அவரின் சகாக்கள் நின்றிருந்தனர்.
“என்னடா…? என்னாச்சு…?”
காசியின் கேள்விக்கு கட்டை விரலை உயர்த்தி வெற்றிக்குறி காண்பித்த தடியர்கள்… “காரை கிளப்பிய அடுத்த பதினைந்து நிமிடங்களில் கார் வெடித்துவிடும் ஐயா!” என்க… தன் இடுப்பு வேட்டியில் சொருகி வைத்திருந்த கத்தை தாள்களை அவர்களின் முன் தூக்கிப்போட்டார்.
“நானிலன்… பத்திரமா போய் வா”, வாழ்த்தியவர் கண் முன்னே இறந்து போன நானியின் சடலம் தோன்றி அவரின் மனதை குளிர்வித்தது.
**********
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்த பின்னரும், நானியுடன் அமர்ந்திருந்த கபிலன் அமைதியாகவே தனது மச்சானின் முகம் பார்த்திருந்தான்.
இதற்குமேல் காத்திருக்க முடியாதென நினைத்த நானி,
“என்ன மாப்ள… என்னாச்சு, ஏன் இப்படி என்னை வைத்த கண்ணெடுக்காமல் சைட் அடிச்சிட்டு இருக்க.”
“ஒன்னுமில்லை மச்சான், உன் முகத்தை இப்படி பார்த்துக்கிட்டே இருந்தாலாவது கடந்த காலத்துல நடந்தது தெரிகிறதாவென பார்க்கிறேன்.”
நானியின் கிண்டலான கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தான் வந்த காரணத்தை உணர்த்தியிருந்தான் கபிலன்.
நானி அமைதியாக இருந்தது சில நொடிகளே,
இனியும் கபிலனிடம் மறைக்க ஒன்றுமில்லையென முடிவு செய்தவன்…
“உன்னை நண்பனாக நினைத்த அந்த கணமே, என் வாழ்வில் நடந்த அனைத்தையும் உன்னிடம் மறக்காமல் சொல்லியிருக்க வேண்டும். என்னை மன்னித்துவிடு கபிலா.”
தன் மீது நானி கொண்ட நட்பின் ஆழத்தை அவன் வேண்டிய மன்னிப்பில் கபிலன் உணர்ந்து அனுபவிக்கும் தருணம், நானி கடந்த காலத்தில் நடந்து முடிந்த கசப்பான நிகழ்வினை சொல்லத் தொடங்கினான்.