வெள்ளைப்பூவே நீ எந்தன் காதலடி 9

அத்தியாயம் 9 :

‘தன் வாழ்வின் கசப்பான பக்கங்களை சொல்வதற்கு தகுந்த இடம் இதுவல்ல’ எனக் கருதிய நானிலன் கபிலனை  தேனியில் செழித்து ஓடும் முல்லை ஆற்றுக்கு அழைத்து வந்திருந்தான்.

தன் சொந்த வேலையாக செல்வதால், அலுவலக காரினை பயன்படுத்தாது… ஓட்டுனரை “நாளை வீட்டுக்கு வந்துடுங்க,” என்றவாறு அனுப்பிவிட்டு கபிலனின் இருசக்கர வாகனத்தில் ஆற்றிற்க்கு வந்தனர்.

சலங்கை ஒலியாய் சலசலத்து ஓடும் நீரின் அழகை ரசித்தவாறு நானி அங்கிருக்கும் கல்லின் மீது அமர்ந்துவிட்டான்.

கபிலனுக்கு அங்கு காணப்பட்ட இயற்கை அழகு கண்களை கவர… சில நிமிடங்கள் அதில் லயித்து விட்டான். தான் எதற்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டான்.

பேச்சரவமற்ற அப்பகுதியில் இயற்கையின் சங்கீதம் நீரின் சலசலப்பாய், காற்றின் ஓசையை… குயில்களின் கானமாய் இன்னும் பலதரப்பட்ட பறவைகளின் சத்தமாய் ஒலித்துக்கொண்டிருக்க… தன் மனதை திடப்படுத்திக்கொண்ட நானி தொண்டையை செருமி கூறலானான்.

நானியின் செருமளில் கபிலனும் தன் செவிகளை கூர்மையாக்கினான்.

அது நானியின் கல்லூரி பயணத்தின் இறுதி வருடம்.

சிறு வயதிலிருந்தே மாவட்ட ஆட்சியர் ஆகவேண்டுமென்பது நானியின் கனவாக இருந்ததால் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும், மருத்துவம் படிக்க இலவச சீட்டு கிடைத்தும், இளங்கலை வரலாற்றினை தனது முதன்மை பாடப்பிரிவாக தேர்ந்தெடுத்தான்.

அவனின் லட்சியத்தை அறிந்திருந்த அழகேசன் மற்றும் பத்மாவும் அதற்கு துணையாக நின்றனர்.

பாண்டியம்மாள், “டாக்டருக்கு படிச்சா எம் பேரனும் டாக்டருக்கு படிக்கிறான்னு பெருமை பேசிப்பேன்” என அங்கலாய்ப்பாக கூற,

“உங்க பெருமைக்கு படிப்பதைவிட என் விருப்பத்திற்கு படிப்பது தான் எனக்கு மகிழ்ச்சி” என்றான்.

சிறு வயதிலே நானியின் தெளிவான மற்றும் நெத்தியடி பதிலில் பாண்டியம்மாள் வாயடைத்துப் போனார்.

தாய் தந்தையை விடுத்து தனித்திருக்க முடியாதென்பதால் தேனியிலேயே அரசு கல்லூரியில் சேர்ந்தான்.

படிப்பில் படு சுட்டியான நானியின் கவனம் எந்நேரமும் படிப்பு படிப்பு தான். படிப்பைத்தாண்டி வேறெதையும் சிந்திக்க மாட்டான்.

முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றிட வேண்டுமென்பதால் கல்லூரியின் தொடக்கத்திலேயே யூபிஎஸ்சி தேர்விற்கு தன்னை தயார்ப்படுத்தத் தொடங்கினான். இதனால் வார நாட்களில் கல்லூரி படிப்பு, விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்பென அவனின் உலகம் படிப்பிலேயே மூழ்கிவிட்டது.

தனது மகன் படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பது அழகேசனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

படிப்பில் கவனமாக இருந்தவன் அதிக ஒட்டுதலோடு இருந்தது அரசியிடம் தான்.. நானி இரவு நேரம் படிக்கிறானென்றால், அவனுக்கு துணையாக அரசி அவனுடன் விழித்திருப்பார்.

நானி விளையாட நினைத்தால், தன் தங்கை நந்தினியுடனும், சிவாவுடனுமே விளையாடுவான்.

மற்ற பிள்ளைகளோடு தெருவில் சுற்றி திரிந்தெல்லாம் விளையாடியதில்லை.

அவன் எந்நேரமும் புத்தகத்துடன் இருப்பது, அவனை ஏதோ வேற்றுகிரக வாசியைப் போல் சிவாவிடம் உருவகப்படுத்தியது.

அவனிடமிருந்து சற்று தள்ளியே இருப்பாள். ஆனால், வளர வளர நானியின் படிப்பின் மீதான ஆர்வம் புரிய அவனின் மீது மதிப்பு கூடியது.

நானி, நந்தினி, சிவா மூவரும் ஒன்றாக அமர்ந்துதான் உணவு அருந்துவர். அந்நேரம் வீடே அவ்வளவு உற்சாகமாக இருக்கும்.

சாப்பிடும் நேரம் மட்டும் தான் நானியிடம் புத்தகம் இருப்பதில்லை, ஆதலால் மூவரும் பேசி, சிரித்து, விளையாடியபடி உணவு உண்பர்.

வீட்டிலுள்ள அனைவருக்கும் அவர்களின் ஒற்றுமை சந்தோஷத்தை கொடுக்க பாண்டியம்மாளுக்கு மட்டும் எரிச்சலை கொடுத்தது.

நந்தினியுடன் பழகுவது அவருக்கும் சந்தோசம் தான், ஆனால்.. சிவாவுடனே நந்தினியின் மீதான அதே அக்கறை பாசம் காட்டுவது பாண்டியம்மாளுக்கு தீயாய் தகித்தது.

அவர்கள் சிறியவர்கள் என்பதையும் மறந்து கீழ்த்தரமாக சிந்தித்தார்.

சிவாவை தனியே அழைத்து..

“எதுக்குடி எம்பேரன்ங்கிட்ட ஒட்டி உறவாடுற… அவனை இப்பவே மடக்கிடலான்னு நினைக்கிறியா?? அதுலாம் என்கிட்ட நடக்காது, இனி நீ அவன் கிட்ட பேசவே கூடாது” என மிரட்டி வைத்தார்.

வயதிற்கே வராத அந்நிலையில், பாண்டியம்மாள் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் புரியாவிட்டாலும், ‘நானியிடம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது நன்கு புரிந்தது.’

ஆதலால், அவனிடமிருந்து சிவா சற்று ஒதுங்கியிருக்க தொடங்கினாள். அச்சமயம், முதுகலையில் முதல் தேர்வு என்பதால் கவனமாக இருந்த நானிக்கு அவளின் ஒதுக்கம் தெரியவில்லை. உணவு உண்ணும் போதும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருப்பவளை ஆச்சரியமாகப் பார்த்தவன் நாளை கல்லூரி தேர்வு முடிந்து பேசிக்கொள்ளலாமென்று விட்டுவிட்டான்.

மறுநாள் தேர்வு முடித்து நானி வீடு வந்த சமயம்… வீட்டில் உறவினர்கள் கூடியிருக்க என்ன விசேஷமென்று கேட்டபடி உள் சென்றான்.

“வாடா நானி, சரியா குச்சி கட்டுற நேரம் வந்துட்டியே” என்று உறவுக்கார பெண்மணி ஒருத்தி கலாய்க்க, ஏற்கனவே தங்கைக்கு இது போல் நடந்த நிகழ்வினை அறிந்திருந்தவனுக்கு என்ன நடக்கிறதென்று விளங்கியது.

“நானி.. வா.. வா, நீ வேற பரீட்சை முடிந்து எங்க தாமதமா வந்துடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்.”

பத்மா அவனை கையோடு இழுத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கமிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். பத்மாவின் முகத்தில் தெரிந்த பூரிப்பு நானிக்கு ஆச்சரியமாக இருந்தது. நந்தினி வயதிற்கு வந்தபோது கூட பத்மா இவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை, தன் மருமகள் வயதிற்கு வந்ததை கொண்டாடி தீர்த்தார்.

“அய்யோ அண்ணி வந்த பிள்ளையை முகம் கூட கழுவ விடாம இப்படியா இழுத்துட்டு போவீங்க”, அரசியின் வார்தைகளையெல்லாம் பத்மா காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

“நல்ல நேரம் முடியருதுக்குள்ள மட்டை கட்ட வேண்டாமா? அவன் பொறவு மூஞ்சி கழுவிப்பான்” என்ற பத்மா நானியின் கையை விடுவதாக இல்லை.

அரசிக்கு சிரிப்பு தான் வந்தது.

தட்டு நிறைய வடையை வைத்துக்கொண்டு, வாய் நிறைய வடையை அடைத்துக்கொண்டும் பத்மாவிடம் வந்த நந்து.. “எனக்கு கூட நீ இந்தளவுக்கு சந்தோஷப்படலையேம்மா” என்று வினவினாள். ஆனால் அவளின் கேள்வியில் துளியளவு கூட பொறாமையில்லை.

“இதென்னடி கூறுகெட்டத் தனமா கேள்வி கேக்குற, என் புள்ளைக்கு பொண்டாட்டி ஆக போறவள் சமஞ்சது எனக்கு சந்தோசமாத்தானேடி இருக்கும்.”
பத்மாவின் பதிலில், வந்திருப்போருக்கு காபி கொடுத்துக்கொண்டிருந்த அரசி அதிர்ந்து தேங்கி நிற்க, “எனக்கும் அது தான் ஆசைம்மா, உம்பொண்ணை எம்மகனுக்கு தரமாட்டியாம்மா?” அழகேசனின் ஏக்கம் நிறைந்த கேள்விக்கு, “அம்மாவை நினைத்தால் தான் பயாமிருக்கண்ணே” என்றார் அரசி.

“இன்னும் வருஷமிருக்குமா, நடக்கும்போது பார்க்கலாம். நானிக்கு தான் சிவா” என்ற அழகேசன், தனது அன்னையை தேடிச் சென்றார்.

சிவா வயதிற்கு வந்துவிட்டாளென்ற செய்தியறிந்ததும் தோட்டத்திற்கு சென்று விட்டார். அவரை அழைத்து வருவதற்கே அழகேசன் பாண்டியாம்மாளை தேடிச் செல்கின்றார்.

பத்மா கூறிய, “என் புள்ளைக்கு பொண்டாட்டி ஆகப்போகிறவள்” என்கிற வார்த்தை நானியின் மனதை என்னவோ செய்தது. அந்நேரம் உடனடியாக சிவாவை பார்க்க வேண்டுமென்று அவனின் இதயம் அலைப்பாய்ந்தது.

நானியின் கண்கள் சிவாவை தேட,

“ஏலே முனியா… மட்டை பின்னியாச்சா” என்ற பத்மாவின் சத்தத்தில் அவனின் கவனம் தன் அன்னையிடம் திரும்பியது.

“ஆச்சுங்கம்மா… தம்பி வந்து கை வச்சா முடி போட்டுறலாங்கம்மா.” முனியனின் பதிலில் சரியென்ற பத்மா,

“வா நானி… முனியன் பின்னி வச்சிருக்க மூணு மட்டையிலும் கீழே ஒரு ரெண்டு பின்னல் நீ போட்டுடு” என்றார்.

எதற்கென்று தெரியாவிட்டாலும் தன் அன்னை சொல்லியதை, முனியன் சொல்லி கொடுக்க அப்படியே செய்தான்.

“உன்ற அப்பாரு அதுக்குள்ள எங்கன போனாரு தெரியலையே… எம்புட்டு நேரம் புள்ளைய எல்லார் கண் பார்வையிலும் வைக்கிறது.” பத்மா புலம்பியபடி அழகேசனை தேட, வேதனை சுமந்த முகத்துடன் அங்கு வந்து சேர்ந்தார்.

தனது மாமியார் வர முடியாதென்று சொல்லியிருப்பாரென்று யூகித்த பத்மா, நடக்க வேண்டியதை கவனியுங்களென்று தனது கணவனை அதட்டி அவரின் கவனத்தை மாற்றினார்.

என்ன தான் வந்திருப்போரிடம் சிரித்து பேசினாலும், அழகேசனின் மனதில் தன்னுடைய அன்னையின் வார்த்தைகள் ஓடிக்கொண்டிருந்தன.

“என்னம்மா இது… இப்படி, அடுத்த வீட்டு விஷேஷம்ங்கிற மாதிரி இங்கன வந்து உட்கார்ந்திருக்க… அவளும் உம்பேத்தி தானே.”
அவ்வளவுதான்.. அழகேசன் வார்த்தைகளை முடிக்க கூடவில்லை,

“யாருடா… எம்பேத்தி, எவனோ… அனாதை கழுதைக்கு பொறந்தது எனக்கு பேத்தியாகிடுமா?”

“அம்மா…”

“சும்மா நிறுத்துடா, நீயும் உம் பொண்டாட்டியும் எதுக்கு இந்த ஆட்டம் ஆடுறீங்கன்னு தெரியும்டா… நான் உசுரோட இருக்க வரைக்கும் அது நடக்காது.” ஆங்காரமாய் மொழிந்தார்.

அழகேசன் எவ்வளவோ முயன்றும் வர மறுத்துவிட்டார்.

அதனை நினைத்ததும் அழகேசனின் முகம் வாடியது. தன் அண்ணனின் வாட்டத்தை கவனித்த அரசி “அம்மா என்ன பேசியிருந்தாலும் மறந்துடுண்ணா, இன்னைக்கா புதுசா பேசுறாங்க, நான் பொறந்ததுலேர்ந்து அப்படித்தானே” என்ற அரசி, சடங்கு நடக்குமிடத்திற்கு அழகேசனை அழைத்துச் சென்றார்.

“என்ன நானி… பொண்ணு ரெடியாகியாச்சு, எப்போ கல்யாணம்.” மற்றவர்களின் புதுவிதமான பேச்சு நானிக்கு உள்ளுக்குள் பிடித்து தானிருந்தது.

இதுவரை வேறெந்தவிதமான கண்ணோட்டத்திலும் சிவாவை பார்த்திடாதவனிடம், அனைவரும் வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டியென சொல்வது அவனிடத்தில் புதுவிதமான உணர்வினை ஏற்படுத்தியது.

“பொண்ணு முகத்தை பார்க்காமல் மட்டை கட்டு ராசா…” வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் கூற,

அழகேசனின் உதவியுடன் நானி தன்னவளுக்கு மட்டை கட்டி முடித்தான்.

அப்பெண்மணி சொல்லாமல் இருந்திருந்தாலும் அமைதியாக வந்திருப்பானோ என்னாவே, அவர் சிவாவை பார்க்காதே என்றது எப்படியும் அவளை பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது.

சுற்றியிருப்போர் அனைவரும் சிவாவிற்கு மஞ்சள், குங்குமம் வைத்துக்கொண்டிருக்க, அவர்களின் கவனம் தன் பக்கம் திரும்பாது.. மிக ஜாக்கிரதையாக,
தென்னை ஓலையின் பின்னல்களுக்கு நடுவே, தன் விரல் கொண்டு மட்டையை நீக்கியவன்.. ஒரு கண் கொண்டு பார்க்க, சிவாவின் சிறு ஜிமிக்கி அசைந்தாடிய ஒற்றை காதும், தங்க நிறத்தில் ஜொலித்த ஒரு பக்க கன்னமும் மட்டுமே தெரிந்தது.

ஜிமிக்கியின் ஆட்டத்தில் அவனின் இதயம் தாளம் தப்பியது.

சற்று மேலிருக்கும் மட்டையை அசைத்து பார்க்க, கன்னம் தொடும் இமைகள் சூழ்ந்த கரு விழி கண்கள் தெரிய… மொத்தமாக ஆண்மகன் பெண்ணவளிடத்தில் வீழ்ந்தான்.
தோட்டத்து மல்லிகை பந்தலின் கீழ் ஓடிவந்தவன், “அய்யோ சாமி! என்னா கண்ணுடா,” என்றவாறு தலையை இரு கைகளாலும் தாங்கியபடி அங்கிருந்த கல்லில் அமர்ந்தான்.

“குட்டச்சி கண்ணு இவ்வளவு அழகா கத்தி மாதிரி ஷார்ப்பா இருக்குன்னு இப்போதான் தெரியுது.
மனசுல போட்டு பிசையுது. அந்த கண்ணு ரெண்டும் இங்க என்னவோ பண்ணது..” இதய பகுதியை சுட்டிக்காட்டி பேசியவன் மெல்ல நீவி விட்டுக்கொண்டான்.

“அடியேய்!! குட்டச்சி… போட்டு தாக்குறடி.. உன் கண்ணே இந்த பாடு படுத்துதுன்னா, உன் முகத்தை முழுசா பார்த்தால் கிறுக்கு பிடிச்சு சுத்துவேன் போலிருக்கே..!”

கண்களை மூடியவன் தோட்டத்தில் பரவியிருக்கும் மல்லிகையின் நறுமணத்தை ஆழ்ந்து உள்ளிழுக்க… இமைகள் படபடத்த இரு விழிகள் மனக்கண்ணில் தோன்றி மீண்டும் இம்சித்தது.

அவளின் கண்கள் அவனை விடுவதாக இல்லை.

“அய்யோ… இந்த குட்டச்சி கண்ணு எனக்கு ஏதோ சூன்னியம் வச்சிடுச்சு போலவே,” புலம்பியவனை யாரோ அழைக்கும் குரல் கலைத்தது.

“நானி…….”

“சொல்லுங்கப்பா,”

“இங்கன உட்கார்ந்து என்னப்பா பண்ற? அங்கன உள்ள போப்பா… உங்க அம்மா உன்னைத் தேடுறா,”
தந்தைசொல் தட்டாது சரியென தலையை உருட்டியவன்… இதயத்தில் புதிதாக முளைத்த படபடப்புடன் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தான்.

“என்ன கண்ணு சாப்புடமாலே போயிட்டியே வா… இப்படி உட்காரு…” அரசி இலை போட்டு அவனுக்கு பரிமாறினார்.

உணவு உண்ணாமல் இலையில் விரலால் கோலம் போட்டவனை அரசி சாப்பிடாமல் என்ன யோசனையென்க,
தனக்கு அருகில் யாரேனும் இருக்கின்றனரா… சுற்றி பார்த்தவன், மெல்ல தன் அத்தையிடம்…

“அத்தை”

“சொல்லு கண்ணு… பால் பாயசம் கொண்டு வர சொல்லட்டுமா…”

அவனுக்கு பிடிக்குமேயென்று அவர் கேட்க.. நானி தன் தலையில் தட்டிக்கொண்டான்.

“என்ன கண்ணு… வேண்டாமா,?” அவர் பாவம் போல் வினவ….

“அய்யோ அத்தை என்னை பேசவிடு”, என்றவன் பேச முயல்கையில் வேறொருவரின் பேச்சு அவர்களுக்கிடையே இடையிட்டது.

“என்ன அரசி… மருமகனை இப்போவே கைக்குள்ள போட்டுக்க விழுந்து விழுந்து கவனிக்கிறியா?”
அவரின் கேள்விக்கு அரசி பதிலளிப்பதற்குள்… அப்போது தான் வீட்டிற்கு வந்த பாண்டியம்மாள் காரசாரமாக பொறிந்தார்.

“எவடி அவ…! என் பேரனுக்கு பொண்ணு பாக்குறது… கழுதைக்கும் கற்பூரத்துக்கும் வித்தியாசம் தெரியாது.
எவ பொண்ணுடி எம் பேரனுக்கு பொண்டாட்டி ஆகுறது. பொறந்ததும் அப்பன முழுங்குனவயெல்லாம் இந்த வீட்டுக்கு மருமாகளாகிட முடியாது.”

“அரசியும் உங்க மகள் தானுங்க பெரியம்மா.”

“நான் அப்படி உன்கிட்ட எப்போவாது சொல்லியிருக்கேனா? வீட்டுக்கு வந்தால், சோத்த தின்னமா போனமான்னு இருக்கணும்.
அதை விட்டுபோட்டு என்ற பேரனுக்கு மருமவள தேடுற வேலையெல்லாம் நீ வச்சிக்காத..” மிளகாயாய் வெடித்தவர், கண்ணீருடன் நின்றிருந்த தனது மகளை கண்டு கொஞ்சமும் வருந்தாமல் சென்று விட்டார்.

நானிக்கு விவரம் தெரிந்ததிலிருந்து பார்த்துக்கொண்டு தானிருக்கின்றான்.

“அத்தை கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலும் இந்த அப்பத்தாவுக்கு பிடிப்பதில்லையே..” சிந்தித்தவனுக்கு விடை தான் கிடைக்கவில்லை. அவன் விடையறியும் நேரமும் வந்துவிட்டதென்று அவனுக்கு தெரியவில்லை.

பத்மா தனது மருமகளுடனே ஐக்கியமாகி விட்டதால் உள்ளே நடந்த நிகழ்வு தெரியாமல் போனது.

அழகேசன் இருந்திருந்தால் தன் அன்னை வாய் திறக்கும் முன்னே மூடியிருப்பார். அவருக்கு தங்கையென்றால் உயிரல்லவா.!

அனைவரின் முன்பும் அழுவது பிடிக்காமல் தனது அறைக்குள் புகுந்துகொண்டார் அரசி.

தான் சாப்பிடாமல் எழுந்தால் அத்தைக்கு பிடிக்காதென்று, இலையில் வைத்ததை பெயருக்கு உண்ட நானி வேகமாக சென்றது அரசியின் அறைக்கு தான்.

கதவு திறந்ததில் யாரென பார்த்த அரசி… நானியை கண்டு தன் அழுத விழிகளை அழுந்த துடைத்து, ஒன்றும் நடவாததைப்போல்.. “வா கண்ணு, வந்து உட்காரு”, தன்னருகில் கை காண்பித்தார்.

இப்போது தான் என்ன கேட்டாலும் தனது அத்தைக்கு வருத்தமே மேலோங்குமென எண்ணியவன் எதுவும் பேசாமல் அரசியின் மடியில் தலை வைத்து வெறும் தரையில் படுத்தான்.

தான் வருந்தும் நேரங்களில் ஏதேனும் ஒருவகையில் தனக்கு ஆறுதல் அளிக்கும் நானியின் மீது என்றும்போல் இன்றும் பாசம் பெருகியது.

நானியின் சிகைக்குள் தன் கைவிட்டு வருடியவரின் மனம் லேசானது. தனது அன்னையை விட தன் மீது அதிக அன்பு வைத்திருக்கும் நானியின் அருகில் அனைத்து கவலைகளையும் மறந்தார். தான் சோகமாக இருக்கும்வரை நானியும் இப்படித்தானிருப்பானென்று தெரிந்து வைத்தவர் நொடியில் சகஜ நிலைக்கு திரும்பினார்.

இச்சூழலிலிருந்து நானியையும் மாற்றும் பொருட்டு பேச்சுக் கொடுத்தார்.

“ஏன் கண்ணு சாப்பிட்டியா??”

“ம்ம்ம்..”

“என்கிட்ட ஏதோ கேட்க வந்தீயே!, என்னது கண்ணு..”

நொடியில் முகத்தில் பரவிய பிரகாசத்துடன்… எழுந்தமர்ந்தவன்,

“அத்தை நான் ஒன்னு கேட்பேன் நீ அது என்னென்னு சொல்லணும்.”
நானி சொல்வதிலேயே, ஏதோ இருக்கென கண்டுகொண்டவர்…

“கேளுப்பா” என்றார்.

“அத்தை… இன்னும் எத்தனை நாளைக்கு சிவா அங்கேயே இருக்கணும்?”

“இன்னைக்குத்தானே தண்ணி ஊத்தி மட்டை கட்டுச்சி… ஏழாம் நாளோ இல்லை பதினோரு நாள் கழிச்சோ மாவு சுத்தி வீட்டுக்குள்ள கூட்டியாரனும்.”

“அவ்வளோ நாளா!” அதிர்ந்தவனை விநோதமாக அரசி பார்த்து வைக்க,

“அது வந்து அத்தை நான் சிவாவை பார்க்கணும்” கேட்டுவிட்டான்.

“வீட்டுக்கு அழைக்கிற வர முறைக்காருங்க யாரும் பார்க்க கூடாது கண்ணு.” வளர்ந்த குழந்தைக்கு பொறுமையாக எடுத்துகூறினார்.

“அப்போ அதுவரை சிவாவை பார்க்காம என்னால முடியாது.”

“அவ, கண்ணை மட்டும் பார்த்துட்டு உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுது அத்தை, அந்த கண்ணு இருக்கிற முகத்தை என் கையில ஏந்தி பார்த்துக்கிட்டே இருக்கணும்போல இருக்கு அத்தை. நெஞ்சுக்குள்ள ஏதோ அடைக்கிற மாதிரி தோணுது. இதெல்லாம் புதுசா இருக்கு அத்தை. வாழ்நாள் முழுக்க அந்த கண்ணுக்கு சொந்தகாரி எனக்கு சொந்தக்காரியாகனும் மனசு சொல்லுது.”

அரசியிடம் சொல்ல சொல்ல அவனுக்கே ஒரு தெளிவு கிடைத்தது. இது தான் காதலென்று புரிந்தது.
நானியின் பேச்சு அரசியின் முகத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

“வேண்டாம் கண்ணு உனக்கு இந்த மாதிரி எண்ணமெல்லாம் சிவா மேல வர கூடாது.”

“ஏன் வர கூடாது?”
குரல் வந்த திசையில் அழகேசன் நின்றிருந்தார். தன் தாயார் பேசியதை கேட்டறிந்து தங்கையை ஆறுதல் படுத்த வந்தவர், தன் மகனின் வார்த்தைகள் அனைத்தையும் கேட்டுவிட்டார்.

அவருக்கு இதில் பேரானந்தம்.

“அம்மா, யாரோ விளையாட்டுக்கு பேசினதுக்கு இப்படி பேசிறவங்க… நாளைக்கு என்னென்ன பேசுவாங்களோ.!!”

அரசியின் குரலில் தன் தாயை நினைத்து அப்பட்டமான பயம் தெரிந்தது.

“அம்மாவை நான் பார்த்துக்கிறேன்… இன்னும் வருடங்கள் இருக்கின்றன, நானியும் கலெக்டர் ஆக வேண்டும்.. சிவா படிப்பினை தொடர வேண்டும்.. அதற்குள் அம்மாவின் மனமும் மாறலாமில்லையா.”

அரசி பேசாமல் தயங்கி நிற்க…

“உன் பெண்ணை நான் காதலித்தால் எனக்கு கட்டிக்கொடுக்க மாட்டியா அத்தை.
உன் பெண்ணை கட்டிக்கும் உரிமை எனக்கில்லையா?”

சிவா மீது தனக்கு வந்துள்ள உணர்விற்கு பெயர் தான் காதலென்று அறிந்ததும் பட்டென்று கேட்டிருந்தான் நானி.

“அய்யோ கண்ணு…” பதறியவர், நானியின் கன்னம் வழித்து… “சிவா உனக்குதான்ய்யா” என்று தன் சம்மதம் வழங்கினார்.

தன் தங்கையின் சம்மதம் அழகேசனுக்கு இன்பத்தை அளித்தது.

தனது தாயை நினைத்து பயந்தாலும், தன்னுடைய செல்ல பிள்ளையே தனக்கு மருமகனாக வருவது அரசிக்கும் சந்தோஷம் தான்.

“உங்க ரெண்டு பேருடைய சந்தோஷத்தையும் உள்ளுக்குள்ளவே வச்சீக்கோங்க,
இப்போ தான் என் பொண்டாட்டி ப்ளஸ் ஒன்னே படிக்கிறாள்…  கல்லூரி படிப்பெல்லாம் முடியும் வரை கொஞ்சம் அமைதியாவே இருங்க. இப்போ அவள் கவனம் முழுவதும் படிப்பில் தானிருக்க வேண்டும், எப்போ என் காதலை சொல்லி அவளுக்கும் என் மேல் காதல் வருதோ அப்போ தான் கல்யாணம்.. சரியா,” என்க…
அவனின் பொண்டாட்டி என்கிற உரிமை பேச்சிலேயே இருவரும் வாய் பிளந்து அதிசயித்து நின்றிருந்தனர்.

அவர்களின் நிலையை பார்த்து சிரித்தவன், தனது அத்தையின் கன்னத்தை கிள்ளியும், தந்தையின் முறுக்கு மீசையை பிடித்திழுத்தும் உல்லாசமாக விசிலடித்தவாறு ஓடி விட்டான்.

அழகேசனும், அரசியும் தங்களது பேச்சு முடிந்து அறையை விட்டு வெளியேவர, உறவினர்கள் அனைவரும் சென்றிருந்தனர்.

வீட்டு பின் பகுதியில் ஒதுக்காக இருந்த அறையில் சிவாவிற்கு குடிசை கட்டியிருக்க… அவளுக்கு துணையாக மட்டைக்கு வெளிப்புறமாகவே நந்தினி அமர்ந்திருந்தாள்.

இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க, பின்பக்கம் வந்த நானிலனுக்கு… தன்னவளின் சத்தம் மட்டும் கீதமாய் செவி வழி நுழைந்தது.

இப்போதான் யாருமில்லையே தன்னவளை பார்த்துவிட்டு வந்துவிடலாமென நினைத்தவன், தன் தங்கையிடம் பேச்சுக்கொடுத்தவாறு அவ்வறைக்கு வாயிலில் சென்று நின்றான்.

“என்ன நந்து நீயும் இங்கு உட்கார்ந்திருக்க.?”

கேள்வி என்னவோ தன் தங்கையிடம் தான் கேட்டான். ஆனால், அவனின் பார்வை அறைக்குள்ளிருக்கும் மட்டையை தாண்டி மேய்ந்தது. பாவம் அவனுக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை.

தன் முகம் கூட பாராது கேள்வி கேட்பவனை ஏற இறங்க பார்த்தவள்,

“உன்னைத்தான் அம்மா இந்த பக்கமெல்லாம் வர கூடாது சொல்லியிருக்காங்களே அப்புறம் எதற்கு வந்த?” விரட்டாத குறையாக அங்கிருந்து தன் அண்ணனை அனுப்பி வைத்தாள்.

“குட்டிச்சாத்தான்…”

நந்துவை திட்டியபடி நகர்ந்தவன்,
“அய்யோ இப்படி போட்டு படுத்துறாளே! இதுல 11 நாளுக்கு பார்க்க கூடாதாம், இதெல்லாம் எவன் கண்டுபிடிச்சது. ச்சேய்,” தனக்குள்ளே சலித்துக்கொண்டான்.

“இவள் வீட்டுக்குள்ள வர வரைக்கும் இனி இந்தப்பக்கமே வர கூடாது.” முடிவு செய்தவனாக உள்ளே சென்று விட்டான்.

நானி வருவதற்கு முன் இயல்பாக நந்தினியிடம் பேசிக்கொண்டிருந்த சிவாவால்… அவனின் குரல் கேட்ட பிறகு அப்படியிருக்க முடியவில்லை.

நானியை போலவே, மட்டையின் பின்னல்களுக்கு நடுவே அவனை பார்த்தவள்… முதன் முறையாக நானியின் கம்பீரமான தோற்றத்தில் தன்னை தொலைத்தாள்.

பூப்பெய்திய பிறகு பார்க்கும் முதல் ஆடவன் என்பதால் பதட்டம் கொண்டாளோ!

ஆனால், அவளுக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. நானி தன்னை தேடுவதை உணர்ந்தவள் மனம் உவகைக் கொண்டது. ஆனால், அதற்கான காரணம் தான் சிறு பெண்ணான அவளால் கண்டறிய முடியவில்லை.

நினைவிலிருந்து தன்னை மீட்டவள் முயன்று தன் கவனத்தை நந்துவின் பேச்சில் செலுத்தினாள்.

எப்போதும் புத்தகத்தில் மூழ்கியிருக்கும் நானி… இன்றைய இரவு தன்னவளின் நினைவுகளில் சுகமாய் மூழ்கியிருந்தான்.

எப்போதும் அவளழைக்கும் மாமாவென்ற அழைப்பினை இந்த நொடி கேட்க விரும்பினான். என்றோ சிறு பருவத்தில் அவள் கடித்து கொடுத்த பாதி மிட்டாய் இன்று தித்திப்பாய் தொண்டைக்குள் இறங்கியது. எப்போதோ அவளுக்கு அடிப்பட்டது இப்போது வலியை ஏற்படுத்தியது.

இறுதியில் தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டான்.

“இப்படியே குட்டச்சி நினைவா சுற்றிக்கொண்டிருந்தால் மாவட்ட ஆட்சியர் ஆக முடியாதுடா நானி, மாவாட்டுற ஆளா தான் ஆக முடியும்”, தனக்குத் தானே கூறிக்கொண்டவன், தன் காதலுக்கு தற்காலிகமாக விடுமுறை அளித்தான்.

சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதும் வரை காதலில் மூழ்கிவிடக் கூடாதென்று தனக்குத் தானே மனக்கட்டுப்பாடு போட்டான். எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டுமென்று மந்திரம் போல் சொல்லிக்கொண்டிருந்தவன், அப்படியே உறங்கியும் போனான்.

நாளை என்ன வைத்து காத்திருக்கின்றதோ!

error: Content is protected !!
Scroll to Top