அத்தியாயம் 1 :
தேனி மாவட்டம்…
மாவட்ட ஆட்சியர் அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.
அலுவலகத்திற்கு உள்ளே, வெளியே என்று மனு கொடுப்பவர்களின் கூட்டம் நிறைந்து வழிந்தது.
சிவப்பு வர்ண சைரன் ஒலியெழுப்பிய கார், கட்டிடத்தின் போர்டிகோவில் நிற்க.. அவ்விடமே அமைதியாகியது. அதிலிருந்து இறங்கிய இருப்பதியேழு வயதுடைய இளைஞனை யாரும் நிச்சயமாக மாவட்ட ஆட்சியராக எதிர்பார்க்கவில்லை என்பது அங்கிருந்தோரின் ஆச்சரிய பார்வையிலேயே தெரிந்தது.
இருபத்தி நான்கு வயதிலேயே யூபிஎஸ்சி தேர்வில் இந்தியாவிலே முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று, ஒரு வருட பயிற்சி முடிந்து, வட மாநிலத்தின் ஒரு பகுதியில் சப் கலெக்டராக பணியாற்றியவன்.. இப்போது தான் தேனி மாவட்டத்தின் (சொந்த ஊரிலே) °கலெக்டராக° பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளான்.
மாநிறம், கலையான வசீகரிக்கும் முகம், மேலும் அழகு சேர்க்கும்படி அமைந்திருக்கும் கூரிய விழிகளும் அடர் மீசையும்… எதிரிலிருப்போர் அண்ணாந்து பார்க்கும் உயரம்.
பாலின் நிறத்தில் முழுக்கை மேல்சட்டையும், சாம்பல் வர்ண பேண்ட்டும் அணிந்து.. முன் நெற்றியில் விழும் அலை அலையான கேசம் அசைந்தாட, பணியாளர்களின் வணக்கத்தை சிறு தலையசைப்பில் ஏற்று கம்பீர நடையுடன் தனது அறை நோக்கி நடந்தவனை அலுவலகமே ஆவென்று பார்த்தது.
எந்தவித நடுக்கமுமின்றி மிடுக்குடன் தனது இருக்கையில் அமர்ந்தவன்… “ஒவ்வொருவரா உள்ளே அனுப்புங்க” என்று பியூனிடம் கூறினான்.
அவன் தலையை சொறிந்து கொண்டே “சார்ர்ர்ர்…” என இழுக்க,
என்ன என்பதை போல் தன் இடப்புற புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அவனின் தீர்க்கமானப் பார்வை பியூனை நடுங்கச் செய்தது.
“டோன்ட் வேஸ்ட் மை டைம் மிஸ்டர்ர்ர்ர்ர்…” பியூனின் பெயர் பட்டியைப் பார்த்து “வேலு” என்றான்.
வார்த்தைகளிலிருந்த அழுத்தமே, சீக்கிரம் சொல்லவில்லையென்றால் உன்னை வெளியே துரத்தி விடுவேனென்று சொல்லாமல் சொல்லியது.
அதில் நாக்கு திக்க மெதுவாக… “சார், மினிஸ்டர் வந்துட்டிருக்கார்.” என்றான்.
“சோ வாட்?”
கர்ஜனையாக ஒலித்த அவனின் குரலில் வேலு ஆடிப்போனான். வெளிப்படையாகவே வேலுவின் உடலில் அதிர்வு தெரிந்தது.
“யாராக இருந்தாலும் அவர்களுக்கு முன் வந்தவர்கள் முடியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்” எனக் கூறியவன், “இனி இங்கு நான் பணி புரியும் வரை மக்களுக்காக மட்டும் உங்க வேலையை செய்ங்க” என்றான்.
வேலுவின் தலை அவனறியாமலே தானாக சரியென ஆடியது.
மாவட்ட ஆட்சியருக்காகக் காத்திருந்த ஏழை எளிய மக்களை சந்தித்து நன்முறையில் உரையாடியவன், அவர்கள் அனைவரது கோரிக்கையையும் விரைவில் நிறைவேற்றுவதாக வாக்களித்தான்.
சரியாக நண்பகல் இரண்டு மணியளவில் மினிஸ்டர் காசி, கலெக்டரை காண உள்ளே அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் தன்னை காக்க வைத்த மாவட்ட ஆட்சியர் மீது காசிக்கு கடுமையான ஆத்திரம் வந்தது.
ஆத்திரத்தை காட்டும் நேரம் இதில்லை என்பதை அறிந்தவர் அமைதியாக உள்ளே நுழைந்தார்.
அரசியல்வாதிகளுக்கு காரியம் நடக்க வேண்டுமென்றால், யார் காலையும் பிடிக்க தயங்கமாட்டார்கள். தேர்தலின் போது தெரு தெருவாக சென்று மக்களின் காலை பிடிக்கும் போதே நன்கு அறிந்த ஒன்று.
“அடடே… புது கலெக்டர் வரார்ன்னு சொன்னதும் நாற்பது வயசுல ஏதோவொரு சொட்டை வந்திருக்கும்ன்னு நினைச்சேன். ஆனால், தம்பி வாட்டசாட்டமா சிறு வயசாவுல இருக்கு.”
கலெக்டருக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்த காசி.. மிகப் பெரிய காமெடி நடந்துவிட்டதை போல் கூறிச் சிரித்தார். அவருடன் வந்திருந்த மூன்று அல்லக்கைகளும் அவருக்கு ஒத்து ஊதி.. இதுவரை கேட்டிராத நகைச்சுவையை கேட்டது போன்று வாய்விட்டு பலமாக சிரித்தனர்.
தான் இவ்வளவு பேசியும் அவனிடமிருந்து எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லாமல் போக… சுவிட்ச் போட்டதை போன்று தனது சிரிப்பை நிறுத்திக்கொண்டார்.
காசியின் சகாக்களும் அவரின் சிரிப்பொலி நின்றதும் தங்களது சத்தத்தையும் நிறுத்தினர்.
தனக்கு முன் எந்தவித சலனமுமின்றி, ஒரு வேங்கையின் தோரணையில் அமர்ந்திருப்பவனின் மிடுக்கு, காசிக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
“அப்புறம் தம்பி, நல்லாயிருக்கீங்களா? வூட்டுல எல்லாரும் சவுக்கியமா?” என்று பேச்சை ஆரம்பித்தவரிடம்,
“இன்னும் நீங்க வந்த காரணத்தை சொல்லவில்லை” என்றான்.
“வந்த வேலையை மட்டும் பாருங்க”, என சொல்லாமல் சொல்லிய அவனிடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வெளிவரத் துடித்தது.
இருப்பினும் அதனை சமாளித்து கொண்ட காசி… “தம்பிஈஈ…” என்று கூற வருகையில்,
தனக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த நேம் போர்டை சுட்டிக்காட்டியவன்… “டோன்ட் கால் மீ தம்பி அண்ட் அன்வாண்டட் வோர்ட்ஸ்” என்றான்.
“சரிங்க த…” தம்பி எனக் கூற வந்தவர், தனக்கு எதிரே மேசையில் ஒய்யாரமாக வீற்றிருந்த நேம் போர்டில்..
°திரு.அ.நானிலன். (IAS). மாவட்ட ஆட்சியர்.°
வெள்ளை எழுத்துக்களால் எழுதியிருந்த பெயரினை படித்துவிட்டு, “நானிலன்” என்று உச்சரித்தார்.
“நானிலன்…” சொல்வதற்கே கம்பீரமாக இருப்பதைப் போன்று உணர்ந்தார் காசி.
“பேரு ரொம்ப நல்லாயிருக்கு… அம்மா வச்ச பேரோ…” என்று காசி கேட்ட கேள்விக்கு பதிலளிக்க நானிலன் அங்கில்லை.
வந்தவர் தனது வேலையை வீணடிப்பதாக கருதியவன், பியூனை வெட்டும் பார்வைப் பார்த்து.. தனது கட்டுப்பாட்டில் உள்ள கிராமம் ஒன்றிற்கு ரவுண்ட்ஸ் செல்ல கிளம்பிவிட்டான்.
பாவம் வேலுவின் நிலைதான் காசியிடம் பரிதாபமாகியது.
“ஐயா… அவரு நேர்மையானவர் மாதிரி தெரியுதுங்க… நான் உங்களைப்பற்றி கொஞ்சம் எடுத்து சொல்றேனுங்க” என்ற வேலுவை..
“கொஞ்சமில்லை நிறைய சொல்லிவை” என எச்சரித்து சென்றார்.
காசிக்கு வந்த வேலை முடியவில்லையென வருத்தம் எழுந்தாலும்… நானிலனின் அலட்சியப் பார்வை, உதாசீனம் எல்லாம் சேர்ந்து அவன் மீது கோபமாக உருவெடுத்தது.
இருப்பினும் காரியம் முடியும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விட்டு அமைதியாக வெளியேறினார்.
**************
தப்பிக்கும் வழி தெரியாது கண்களில் அச்சம் அப்பட்டமாக வழிய, தன்னை கடத்தியது யாரென்று கூட அறியாது அந்த இருட்டு அறையில் நாற்காலியில் கட்டப்பட்ட நிலையில் குழம்பித் தவித்தான் ஒருவன்.
வண்டியில் சென்று கொண்டிருந்த தான் திடீரென நான்கு தடியர்களால் எதற்காக கடத்தப்பட்டோம் என்று யோசிக்க கூட முடியாத அளவிற்கு அவனை அடி வெளுத்திருந்தனர்.
தன் முதலாளி கொடுக்கும் பணத்திற்கு விசுவாசத்தை அடியில் காண்பித்திருந்தனர், அந்த தடியர்கள்.
உடல் வலியிலும், சோர்விலும்.. நா வறட்சியில் துவண்டு போனவன் “தண்ணீ தண்ணீ” என்று முனகினான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின் அவனது முகத்திற்கு அருகே தண்ணீர் நிறைந்த குவளை நீட்டப்பட்டது.
கண்களில் ஒளி வீச, குவளையை பெற கை நீட்டியவனிடம் நீரினை அளிக்காது… அவனது கண் முன்னே குவளையை உயர்த்தி பிடித்து தரையில் தண்ணீரை ஊற்றியது ஒரு கரம்.
கொட்டும் தண்ணீருக்கு நேராக தன் வாயினை திறந்து கொண்டு, நாற்காலியுடன் கட்டப்பட்ட நிலையில் அவன் நகர… குவளையை பிடித்திருந்த கரமும் பின்னுக்கு நகர்ந்தது. அவன் தன் நாவினை வெளியே நீட்டி, ‘ஒரு சொட்டு தண்ணீர் தன் நாவில் காற்றில் தெறித்தாவது பட்டுவிடாதா’ என்று சுழற்றி அலை மோதினான்.
அந்தோ பரிதாபம்… நீர் மொத்தமும் தரையில் வீணடிக்கப்பட்டு குவளை காலியானது.
“ம்ப்ச்ச்… ம்ப்ச்ச்…” உச்சு கொட்டும் சத்தம் கேட்ட திசையில் அவன் தன் பார்வையை பதித்தான்.
அவனுக்கு முன்பு மர நாற்காலியில் அறுபத்திரண்டு வயதில், பாதி நரைத்த முடியை கொண்டையிட்டு, நெற்றியில் பக்தி பழமாக சந்தன பட்டையுடன் பருத்தி புடவையில்.. கால் மேல் காலிட்டவாறு அமர்ந்திருந்த பாண்டியம்மாளை கண்டு குலை நடுங்கியது.
கைகள் கட்டப்பட்டிருந்ததால்…
“அய்யோ, அம்மா என்னை மன்னிச்சிடுங்கம்மா.. தெரியாம பண்ணிட்டேன்ம்மா.. இனி நீங்க இருக்கும் திசை பக்கமே வர மாட்டேம்மா..” என்று வார்த்தைகளால் கெஞ்சினான்.
தான் உட்கார்ந்திருந்த நிலையிலே, தன் காலினை நீட்டி… அவன் நெஞ்சில் பதித்து நாற்காலியோடு கீழே தள்ளிவிட்ட பாண்டியம்மாள், இரு கைகளாலும் புடவையை முழங்கால் வரை ஏற்றி பிடித்து… நாவினை மடக்கி, கால்களை அகட்டி நின்றபடி அவனை பார்த்து முறைத்தாள்.
காளியே தன் முன் வந்து நிற்பதாகக் கண்டு அஞ்சி நடுங்கினான்.
நடுக்கத்துடன், “அம்மா விட்டுடுங்கம்மா.” மீண்டும் கெஞ்சத் துவங்கியவனின் கழுத்தில் கால் வைத்து மிதித்தவர்… “நான் உனக்கு அம்மாவாடா, இல்லை நான் உன் அம்மா கூட பிறந்தவளா, இல்லாட்டி உன் அப்பனுக்கு… சும்மா அம்மா அம்மான்னுட்டு.. எவ்வளவு தைரியம் இருந்தா நான் ஏலம் எடுக்க வரேன்னு தெரிஞ்சும் நீ எடுத்திருப்ப, நீ எடுத்த குளத்தோட நான்கு வருஷ குத்தகை என் கைக்கு வரனும்.” ஆங்காரமாக கொப்பளித்தார் பாண்டியம்மாள்.
“நான் உங்களுக்கே குடுத்திடுறேன்.. என்னை விட்டுடுங்க.” தொண்டைக்குழி நசுங்க திக்கித் திணறிக் கூறினான்.
“ஓ… நீ எனக்கு விட்டு குடுக்கிறீயாடா… எவன்கிட்டயும் பிச்சையெடுக்கணும் அவசியம் இந்த பாண்டியம்மாளுக்கு கிடையாதுடா… நீ விட்டுக்கொடுத்து அந்த குளம் என் கைக்கு வர கூடாது, நீ செத்துட்டேன்கிறதால… உனக்கு அடுத்து ஏலத் தொகையிலிருக்கும் எனக்கு, அரசாங்கமே கூப்பிட்டு என் கையில தரணும். எதையும் நானா எடுத்து தான் எனக்கு பழக்கம்” என்றவர், அவன் கழுத்தில் அழுத்தம் கூட்டி மூச்சை நிறுத்தினார்.
“குடிபோதையில் தானா கிணற்றில் தவறி விழுந்து செத்துட்டாங்கிற செய்தியை அவன் ஊர் முழுக்க பரவ விட்டுடுங்கடா,”
தன் தடியர்களுக்கு உத்தரவிட்ட பாண்டியம்மாள் ஒன்றும் நடவாததைப் போல் அவ்வறையை விட்டு வெளியேறினார்.
*********
கிராமத்தைச்சுற்றி ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள நேரடியாக சென்று பார்த்த நானிலன் 5.30 மணியளவில் மீண்டும் அலுவலகம் வந்தான்.
நானிலன் தனது இருக்கையில் அமர்ந்ததும், அவனது மேசையில் அமைதியாக தங்கியிருக்கும் தொலைபேசி மணியெழுப்பியது.
அதனை ஏற்றவன்… “நானிலன் ஸ்பீக்கிங்” என்றான்..
எதிர்முனையிலிருந்த நபர் அவனது ஆளுமையான குரலில் கவரப்பட்டு…
“சார், அம் தேனி தாலுக்கா தாசில்தார் நல்லப்பன்” எனக் கூறியவர், தான் அழைத்ததற்கான காரணத்திற்கு நேரடியாக வந்திருந்தார்.
“சார்.. வீரபாண்டி மற்றும் உப்பார்ப்பட்டி என்ற இரண்டு கிராமங்களுக்கும் நடுவே இருக்கும் குளத்தின் ஏலம் கடந்த வாரம் இறுதியில் நடைபெற்றது. அதனை வீரபாண்டியை சேர்ந்த பெரியசாமி குத்தகைக்கு எடுத்தார். ஏலத் தொகையை செலுத்துவதற்கு முன்பே திடீரென இறந்துவிட்டார். இப்போது அவருக்கு அடுத்து, வரிசையில் இருப்பவருக்கு குத்தகை அளித்து விடலாமா” என வினவினார்.
“அவருக்கு அடுத்து இருக்கும் நபர் யார்? என்று வினவிய நானிலனுக்கு,
“உப்பார்பட்டி பாண்டியம்மாள்” என்று பதில் வழங்கியவர், “ரொம்ப பெரிய ஆளு சார். ஊரே அந்த அம்மா பேச்சுக்கு கட்டுப்படும், இவங்களும் அந்த ஊர் மக்களுக்கு ஒண்ணுன்னா என்ன வேணாலும் செய்வாங்க” என கூடுதல் தகவலும் வழங்கினார்.
“அவர்களுடைய புராணத்தை எல்லாம் நான் கேட்கவில்லை” என்று சீறிய நானிலன் சிறு யோசனைக்குப் பின் “அவங்களுக்கே கொடுத்துடுங்க” என்றான்.
காலையில் அலுவலகம் வந்த அதே சுறுசுறுப்புடன்.. மாலையிலும், தனது முதல் நாள் பணியை சிறப்பாக முடித்த நானிலன் இல்லம் புறப்பட்டான்.
இரவு உணவு முடித்து தனது அறைக்கு வந்தவன் ஜன்னலோரம் சென்று நின்று.. நிலவொளியில் தெரிந்த இயற்கையை ரசித்தான்.
கண்கள் ரசித்த அழகு அவன் மனதை சிறிதும் பாதிக்கவில்லை.
மலையை உரசிய சில்லென்ற வாடைக்காற்று அவனது மேனியை தீண்டிச்செல்ல பட்டென்று சன்னல் கதவினை அறைந்து சாற்றியவன் மெத்தையில் விழுந்தான்.
மனதிற்கு இதம் தரும் எதுவும் அவனுக்கு எதிரியே. இதம் தன்னை இலகச்செய்யுமென்று அறிந்தே, இயற்கை தென்றலைக்கூட தன்னை தீண்ட அனுமதிக்க மாட்டான்.
நள்ளிரவில்,
“மாமா… நான் உங்களை காதலிக்கிறேன்,”
பேதையவளின் குரல் காதில் ஒலித்த அடுத்த கணம் தூக்கத்திலிருந்து விழித்தான் நானிலன்.
உடல் முழுக்க வியர்வையில் குளித்திருக்க, மீண்டும் மீண்டும் அக்குரல் அவனின் செவிகளில் எதிரொலித்தது. தினமும் இரவில் இம்சை செய்யும் குரல், கைக்கு எட்டும் நிலையில் அவனவள் இருந்தும்.. இன்றளவிலும் அவனுக்கு அவள் எட்டாகனியே!
உறக்கம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால், ஆழ்ந்த உறக்கத்தில் காதுகளை நிறைக்கும் அக்குரலைக் கேட்க பயந்தே, பல நாள் உறங்காமல் தவித்திருக்கிறான்.
கடிகாரக்குயில் கூவும் சத்தத்தில் தலையை உயர்த்தி சுவற்றில் மாட்டியிருக்கும் கடிகாரத்தை பார்த்தான். அது அதிகாலை நான்கு எனக் காட்டியது.
‘இனிமே எங்கே உறங்குறது’ என்று நினைத்தவன் எதற்கோ பயந்து ஓடி ஒளிபவன் போல் தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.
தனது அறையிலிருந்து வெளிவந்தவனின் முன் ஆவி பறக்கும் தேநீர் கோப்பையை நீட்டினார், நானிலனின் அத்தை அமுதரசி.
அதிகாலையிலேயே புன்னகையுடன் காட்சியளிக்கும் அவரின் கனிந்த முகம், புயலடித்து ஓய்ந்துப்போன அவனின் மனதிற்கு அமைதியை அளித்தது. அவரையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண் முன்னே காட்சிப்படமாக ஓடிய நிகழ்வைக் கண்டு பதறியவன், தேநீர் கோப்பையை தவறவிட்டான்.
கோப்பை தரையில் விழுவதற்கு முன் அமுதரசியின் கன்னத்தில் இடியென பதிந்தது ஒரு கரம். கரத்திற்கு சொந்தக்காரி பாண்டியம்மாள்.
நம் நாயகனின் அப்பத்தா, அமுதரசியின் அம்மா… அம்மா என்ற உறவு பெயரளவில் மட்டுமே!
வலியில் உதடுகள் துடிக்க, கண்களில் விழிநீரை தாங்கி நின்றிருந்த அவரது கோலம் நானிலனுக்கு உள்ளம் கனக்க செய்தது. தன் தாயை விட அதிகம் நேசம் கொண்ட அவருக்காக எதுவும் செய்யத்தயாராக இருப்பவன், தன் உணர்வுகளை பிரதிபலிக்காது அமைதி காத்தான். அவனது இந்த அமைதியும் அவருக்காகவே.
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? வீட்டு ஆளுங்க இப்படி வெளியே செல்லும் போது உன் மூதேவி முகத்தை முன்னாடி காட்டாதேன்னு எத்தனை தடவை சொல்றது… ச**னே, உள்ள போடி முதல்ல.”
பாண்டியம்மாளின் குரலில் அதிகாரம் தூள் பறந்தது.
அரசி அடுக்களைக்குள் நுழைய திரும்புகையில், “இதை யாரு எடுப்பா? செத்துப்போன உன் புருஷன் வந்து சுத்தம் செய்வானா?” எனக் கேட்டவரை அடித்து துவம்சம் செய்யும் கோபம் அவனுள் கனன்றது.
கோபத்தில் கை முஷ்டி இறுக நின்றிருந்தவன், பாண்டியம்மாளை பார்த்து ஏதோ பேச வாயெடுக்கையில் கண்களாலே வேண்டாமென்று தடுத்து நிறுத்தினார் அரசி.
அவர் கீழே குனிந்து கோப்பையை எடுப்பதற்கு முன் நானிலன் எடுத்திருந்தான்.
“அஞ்சலையை(வீட்டில் வேலை செய்யும் பெண்) அழைத்து சுத்தம் செய்ய சொல்லுங்கத்தை, நான் வயல் வரை போயிட்டு வர்றேன்” என்றவன் வேட்டியை மடக்கி கட்டியபடி வீட்டை விட்டு வெளியேறினான்.
வாயெல்லாம் பல்லாக, “பார்த்து போய்ட்டு வா ராசா” என்ற பாண்டியம்மாளின் வார்த்தைகளை அவன் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
வீட்டு நிலைப்படியைத் தாண்டி வந்தவன்… எப்போதும் வாசலை அழகாக நிறைத்திருக்கும் அரிசி மாவினால் இடப்பட்ட கோலத்தை சில விநாடிகள் ரசித்துப் பார்த்தான்.
கோலமிட்டவளின் முகம் அதில் தெரிந்ததோ! விநாடிகள் நிமிடங்களாகக் கடக்க, தெருவில் செல்லும் மாட்டு வண்டியின் சத்தத்தில் கலைந்தவன் கோலத்தை திரும்பி திரும்பிப் பார்த்தவாறே சென்றான்.
எப்போதும் கோழி கூவ எழுந்து வரும் தன் மருமகளை விடிந்தும் காணாது சிவரஞ்சனி அறைத் தேடிச்சென்றார் பத்மா.
பத்மா நானிலனின் அம்மா. அவருக்கு தன் மகனை விட சிவா மீது தான் கொள்ளைப் பிரியம்.
எதிரில் பட்ட அமுதரசியிடம் “சிவா எழுந்து விட்டாளா” எனக் கேட்டவர், அரசி பதிலளிக்கும் முன்பே நம் நாயகியின் அறைக்குள் நுழைந்திருந்தார்.
“ஆத்தா, சிவா…”
தனது பாசமிகு பத்துவின் அழைப்பில் அறைக் கதவை வேகமாகத் திறந்தாள் சிவரஞ்சனி.
குளித்து முடித்து… மஞ்சள் பூசிய முகத்துடன், பாவாடை தாவிணியில் அன்றிலமர்ந்த புத்தம் புது மலர் போல் தன் முன் நின்றிருந்தவளின் கன்னம் வழித்து “என் கண்ணே பட்டுடும் டா தங்கம்”, என்றவர் முத்தத்தை பரிசாக அளித்தார்.
“காலையிலே பச்சை தண்ணில தான் பத்து குளிச்சிருக்கேன், இதுல நீங்க வேற ஐஸ் வச்சு ஜலதோஷம் பிடிக்க வச்சிடாதீங்க” எனக் கூறியவள் அவரின் கன்னத்தை தன் பற்கள் பதிய அழுந்த கடித்து விட்டு ஓடினாள்.
“போடி வாலு” எனக் கத்தியவர்…
“கோலம் போட்டுடுடா” என்றார்.
“அதெல்லாம் எப்பவோ போட்டாச்சு” என பத்மாவை திரும்பிப் பார்த்து கூறியவள் ஓடிக்கொண்டேயிருக்க, எதிரில் வந்த பாண்டியம்மாளின் மீது பலமாக மோதினாள்.
ரஞ்சனி மோதியதில்.. “அடி ஆத்தே” என்ற கத்தலுடன் கீழே விழுந்தார்.
அவரின் சத்தம் கேட்டு, “அய்யோ அத்தை என்னாச்சு?” என்றபடி விரைந்து வந்தார் பத்மா. அவர் வருவதற்குள் பண்ணடியம்மாளை தூக்கச்சென்ற சிவரஞ்சனியை கத்தியில்லாமல் தன் நா கொண்டு குத்தினார்.
“ஆத்தாலுக்கும் மகளுக்கும் வேலையே இல்லையா… உன் அம்மாகாரி என் பேரனை கைக்குள்ள போட்டுக்கிட்டான்னா, நீ என் மருமகளை போட்டுக்கிட்ட.. எத்தனை நாளா வஞ்சம் வச்சு என்னை இப்படி கொல்றதுக்கு தள்ளிவிட்ட” என்றவரின் பேச்சை தடுத்து…
“அய்யோ பாட்டி அப்படியெல்லாமில்லை, ஏதோ தெரியாம…” சிவா பதிலளிப்பதற்கு முன்,
“நிறுத்துடி” என்றவர், அவளை முழுதாக ஒருமுறை சுற்றி வந்தார்.
“ஆமாம், எவனை மயக்குறதுக்குடி… வெள்ளன, இப்படி சீமை சித்ராங்கியாட்டம் மினுக்கிக்கிட்டு நிக்குறவ” என வார்த்தைகளால் சிவாவை கூறுப்போட்டார்.
“அத்தை சின்ன புள்ளை கிட்ட இப்படியா கேட்பது” என்ற பத்மாவை தன் பார்வையால் தள்ளி நிறுத்தியவர்,
“இப்போ விட்டா பத்து புள்ள பெத்து போடுவாள். இவளா, சின்ன புள்ள… நீயும் உன் புருஷனும் இவளை தலைமேல் தூக்கி வச்சி ஆடுறதுக்கு நல்லா பட போறீங்க” என கை நீட்டி எச்சரித்து, தன் புடவை தலைப்பை உதறி இடுப்பில் சொருகியவர், சிவரஞ்சனியை உருத்து விழித்தபடி நகர்ந்தார்.
தனது பாட்டியின் பேச்சு மனதை வலிக்க செய்தாலும், தன்னை மகள் போல் நேசிக்கும் அத்தையின் முன் அழுது அவரையும் கஷ்டப்படுத்த கூடாதென்று இமை தட்டி விழிநீரை கண்களுக்குள்ளே புதைத்தாள்.
சிறியவளின் மனம் அறிந்த பெரியவள்… ஆதுரமாக அவளின் தலை வருடினார்.
பத்மாவின் கண்கள் உப்பு நீரை சொறிந்தது.
“அய்யோ அத்தை” என்று பதறியவள், “எனக்காக நீங்க வருத்தப்படுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனால், இது தினமும் நடப்பதுதானே.. இதற்கு எதற்கு அழ வேண்டும். எல்லாம் எனக்கு பழகிவிட்டது” என்ற சிவா தன் கண்ணீரை மறைத்தவாறு அங்கிருந்து ஓடினாள்.
“அடுத்தவர் வருந்த கூடாதென்று நினைக்கும் சின்னவளின் குணம் கூட இந்த அத்தைக்கு இல்லாமல் போய்விட்டதே”, புலம்பியபடி… தன் நாத்தனாருக்கு உதவி செய்ய அடுக்களை பக்கம் நகர்ந்தார்.
வயல்களில் விளைந்துள்ள பயிர் வகைகளை பார்வையிட்டபடி வரப்பில் நடந்து கொண்டிருந்த நானி, முற்றிய நெற்கதிர் வயலில் நீர்ப்பாய்வதை கண்டு.. தானே வாய்க்காலில் இறங்கி மண்வெட்டியால் வரப்பினை அடைத்தான்.
அவனின் செயலை பார்த்தவாறு அங்கு வந்த அழகேசன் (நம் நாயகனின் தந்தை),
“முனியாண்டி” என்று உரக்கக் கத்தினார்.
சேறு படிந்த வேட்டியுடன், தலையில் கட்டியிருந்த சிவப்பு நிறத் துண்டினை அவிழ்த்து கக்கத்தில் சொருகியபடி விரைந்து ஓடி வந்தான் முனியாண்டி என்ற பெயருக்கு சொந்தக்காரன்.
“ஐயா,” வந்தவன் விளிப்பினை ஏற்றவர்..
“உமக்கு ஏன்யா இந்த வேலை… சேத்துல கால் வைக்கவா அம்புட்டு கஷ்டப்பட்டு படிச்சீக” என்றார். சொல்லியது தன் மகனிடம் என்றாலும், அவர் பார்வை நானிலனின் மீதில்லை.
“முனியாண்டி முதலில் அவுக கையிலிருக்கும் மம்(ண்)முட்டியை வாங்குடா,”
“சின்னய்யா.. என்ன செய்யணும் சொல்லுங்கய்யா நான் செய்யுதேன், நீங்க எம்புட்டு பெரிய கலெக்(டர்)கிட்டரு” எனக் கூறிக் கொண்டே மண்வெட்டியை வாங்க கை நீட்டினான்.
“இங்க பாருங்க ஐயா,”
அழகேசன் தன் மகனை பார்த்து பேசவில்லையென்றாலும், நானிலன் தன் தந்தையை தீர்க்கமாகப் பார்த்தவாறு பேசினான்.
“நீங்க சேத்துல கால வைத்ததாலதானுங்க நான் இன்னைக்கு ஒரு கலெக்டர்… தாத்தா சொத்தும், அப்பத்தா கட்டி காக்கும் சொத்தும் பல தலைமுறைக்கு நமக்கு இருந்தாலும், என்னை படிக்க வைத்தது முழுக்க நீங்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்ன்னு எனக்கு தெரியும் ஐயா… படிச்சா.. சேத்துல கால் வைக்க கூடாதா? சில பேர் இன்னமும் கௌரவம் பார்க்காமல் சேத்துல உழைக்கிறதாலதான் நிம்மதியா பல பேர் சாப்பிட முடியுது”, என்றவன் முற்றிலும் வரப்பினை அடைத்த பிறகே அங்கிருந்து சென்றான்.
மகனின் பேச்சும் பண்பும் அழகேசனுக்கு மன நிறைவை தந்தது. ஒரு தந்தையாய் அவனை பாராட்டத் துடித்த நாவினை கஷ்டப்பட்டு அடக்கியவர், செல்லும் அவனையே ஏக்கத்துடன் பார்த்தார்.
மகனை அணைத்து பெருமைப்பட முடியவில்லையே என்று எந்தளவிற்கு வருந்துகிறாரோ… அதைவிட அதிகமாக அவன் மீது அவருக்கு கோபம் இருக்கிறது.
மகனிடம் நேரடியாக பேச தடையாக இருப்பதே அவன் மீது அவர் கொண்ட கோபம் தான், உண்மை தெரியாமல் கோபம் கொண்டுள்ள அவர் மனம் என்று சமாதானம் அடையுமோ!
தந்தையின் கை பிடியிலேயே வளர்ந்தவனுக்கு, அவரின் கோபமும்.. சட்டென்று தன்னிடம் பேசுவதை நிறுத்தியதும் வருத்தம் தான். ஆனால், தந்தை தன் மீது கொண்டுள்ள கோபம்.. தன்னவள் மீது அவர் வைத்துள்ள அன்பினால் அல்லவா! ஆதலால், அவரின் கோபத்தையும் விரும்பியே ஏற்றுக்கொண்டான்.
வயலிலிருந்து நேராக வீட்டிற்கு வந்தவன், வாசலில் நின்று கொண்டு வீட்டிற்குள் கடுப்புடன் பார்த்திருக்கும் தன் தங்கை நந்தினியிடம்.. “என்னம்மா, இன்னும் காலேஜ் கிளம்பலையா?” என்றான்.
“அதை ஏன் அண்ணா கேட்கிறீங்க, மேடம் இப்போதான் சாப்பிடவே உட்காந்திருக்காங்க, காலையில் அப்பத்தா வழக்கம்போல திட்டிட்டாங்க, தனியா ரூமில் ஒரே அழ… அவளை சமாதானம் செய்றதுக்கொள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.” சலிப்புடன் கூறியவள், “இந்த அப்பத்தாவுக்கு ஏதாவது வழி பண்ணனும் அண்ணா.. எப்போ பாரு அவளை கடிச்சி குதறிக்கிட்டே இருக்காங்க.” சிவாவின் மீதான அக்கறையுடன் முடித்தாள்.
நந்தினி கூறி முடிக்கவும் சிவா பேக்கினை மாட்டிக்கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
சிவா வந்ததும், தன் தங்கையிடம் கவனமாக போய் வருமாறு கூறியவன், முகத்தை சிவாவின் புறம் திருப்பாமல் கூட நகர்ந்துவிட்டான்.
அவளோ, அவன் அங்கிருந்து நகரும் வரை குனிந்த தலையை நிமிர்த்தவில்லை.
இது என்றும் நடப்பது தான்.
இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க நேரிடும்போது நாயகி தலை கவிழ்ந்து கொள்வதும், நாயகன் முகத்தை வேறு திசையில் திருப்பிக்கொள்வதும்.
இதனை நன்கு அறிந்திருந்த நந்து… இன்னும் வராமல் தரையில் புதைந்து கொண்டிருப்பவளை, “ரஞ்சு வாடி போகலாம்… லேட் ஆகிருச்சு, எனக்கு இன்னைக்கு பிராக்டிகல் டி” என்று கத்தினாள்.
அவளின் கத்தலில் தலை நிமிர்ந்தவளின் கண்களில் அருவி போல் இறங்கி கொண்டிருந்த கண்ணீரை கண்டு பதறிய நந்து,
“எல்லாம் சரியாகிடும் ரஞ்சு, பீல் பண்ணாதே” எனத் தேற்றினாள்.
அதுவரை கல்லூரிக்கு நேரமாகிறதென்று கத்திக் கொண்டிருந்தவள்… தன் அத்தை மகளின் கண்ணீரை போக்க பொறுமையாக அவளை ஆறுதல் படுத்தினாள். அவளுக்கு ஆறுதல் அளித்தாலும் நந்துவிற்கு இந்த வீட்டிலிருக்கும் பிரச்சனை எல்லாம் எப்போது சரியாகுமென்று வருத்தமாக இருந்தது.
சிவா ஒருவாறு சரியாகியதும் இருவரும் ஸ்கூட்டியில் கல்லூரிக்கு கிளம்பினர்.
சிவா நந்துவை விட இரண்டு வயது சிறியவள். நந்து முதுகலை பொறியியல் இரண்டாம் ஆண்டும், சிவா இளங்கலை பொறியியல் இறுதி ஆண்டும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர்.
தன் முகத்தை கூட சிவாவிற்கு காட்டாது சென்றவன்…
மாடியிலிருந்து அவள் அழுது கொண்டே செல்வதை ரசித்து பார்த்தான். அவளின் அழுகை அவனுக்கு வலியை ஏற்படுத்த கூடியது. இருப்பினும் அவன் ரசிப்பிற்கு காரணம்… அவளின் அழுகை அவனுக்காக அல்லவா!
வீட்டில் அவனிடம் பேசுவது இரண்டே நபர் தான்.. ஒன்று அவனின் பாசமிகு அத்தை, மற்றொரு நபர் நானிலனின் அன்பு தங்கை.
பாண்டியம்மாள் வலிய சென்று பேசினாலும் இவன் முகம் கொடுப்பதில்லை.
அவன் மனம் பேசிட துடிக்கும் ஒரு நபரிடம், நினைத்தாலும் அவனால் பேசிட முடியாது.
தெரிந்தே தன்னவளை விலகி நிற்கிறான். அதன் காரணம், அவன் மட்டுமே அறிந்தது. அவனின் தாய் தந்தை அவனை விட்டு விலகி நிற்பதற்கு காரணமும் அவன் அறிந்த ஒன்று, அவர்கள் அறியாதது தான்.
மனம் கனக்க நின்றிருந்தவனின், மனம் முழுக்க அன்றைய நாளின் தாக்கம் பரவியிருந்தது. அதிலிருந்து மீள முயன்றும் அவனால் முடியாது, வெறிபிடித்தவன் போல் தனது கை முஷ்டியை சுவற்றில் ஓங்கி குத்தினான்.
மீண்டும் மீண்டும் கண்ணில் தெரியும் காட்சியை அழிக்க முடியாது தவித்தான்.
அக்காட்சி அனைவருக்கும் தெரிய வந்தால்?
அதற்கு முன்பு சிக்கலாகிப்போன தன் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்க வான்வழியாக ஒருத்தி வந்து கொண்டிருக்கிறாள் என்பதை நானிலன் கூட அறிந்திருக்கவில்லை.