வேள்வி : 10

அத்தியாயம் : 10

‘சிறு பிள்ளையின் மனதில் நஞ்சை விதைத்து, அதன் மூலம் தனது மகனையும் சொத்துக்களையும் தன் வசப்படுத்தப் பார்க்கிறாள்; அதற்கு மனைவி நாகேஸ்வரியும் மறித்துப் பேசாமல் துணை போகிறாள்’ என்று நினைத்தபடி உள்ளே வந்தார் தாணுலிங்கம்.

சாப்பாட்டு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த அத்தனை நகைகளையும் பார்த்தவர், ‘இப்போதே ஒரு நாடகமாடி இதையும் கையகப்படுத்திக் கொண்டு சென்றுவிடுவாள்’ என்று எண்ணி, “என்ன வனிதா, உன் மகளின் விசேஷத்தில் இதெல்லாம் பரிசாகக் கிடைத்ததா? இவ்வளவு கிடைக்கும் அளவுக்குப் பெரிய பங்ஷன் தான் நடத்தி இருக்கே போலிருக்கு?” என வியப்பது போல பாவனை செய்தார்.

அடுத்த நிமிடம் நாகேஸ்வரி படபடவெனத் தனது நகைகளை எடுத்து டப்பாவுக்குள் அடுக்கினார். அதைக் கண்ட வனிதாவின் முகம் புஸ் என்று சுருங்கிப்போனது.

“ஆமாம்! உன் வீட்டு நிகழ்ச்சிக்கு யார் யார் வந்திருந்தார்கள்? உன் மாமியார் மாமனார், நாத்தனார்கள், கணவரின் சொந்தக்காரங்க எல்லாம் ஒரே வாரிசான ரக்ஷனாவுக்கு என்னென்ன பரிசுகள் தந்தார்கள்?” என்று கேட்டபடியே வந்து அமர்ந்தார்.

அவள் பதில் கூற திணறியதும், மனைவியின் கையில் இருந்த நகைப் பெட்டியை பார்த்தவர், “ஓ! இது உன்னோடதா? நானும் வனிதா தோழி மீதான பாசத்தில் மகளுக்கு பிரிந்த பரிசுகளை காட்டுவதாக நினைச்சேனே!” என்று கிண்டலாக சொன்னார். அந்த வார்த்தை இருவரையும் சென்று தாக்கியது. 

‘உன் வீட்டில் உள்ளவற்றை மட்டும், பிறரிடம் காட்டும் பழக்கமில்லை. மற்றவர்களிடம் உள்ளது மட்டும் உனக்கு காட்சிப் பொருளாக மாறி, திறந்த வெளியில் அலங்கரிக்க வேண்டுமா?’ என்பதாய் அவர் கேள்வி இருந்தது.

ரக்ஷனா புரியாமல் பார்த்தபடி இருக்க,

“ஆமாம்! புதுசா வீடு எல்லாம் கட்டியிருப்பது போலிருக்கு. ஒரு கோடியா, ரெண்டா?” என்று அவளை வாய் திறக்க முடியாத அளவிற்கு கேள்விகளை அடுக்கினார்.

“ஏதோ தோழி, அண்ணின்னு உறவுமுறை எல்லாம் சொல்லி, என் பொண்டாட்டி கிட்ட தினமும் பேசி, இந்த ஊர்ல நடப்பது எல்லாம் அறிஞ்சுட்டு இருக்கறியாம் … நீ மட்டும் எதுவும் சொல்வது போல் இல்லையே!” என்று பலமாக தாக்கினார்.

அவள் முகமே விழுந்து போனது.

“அது… வந்து வெறும் நாற்பது தான் ஆச்சு! கோடிக்கு செய்ய நான் எங்க போக? இருந்த பழைய ஓட்டு வீடு, மழை நேரம் ஒழுகியது, எந்த நேரம் உடைந்து விழும்னு தெரியாததால் மாமனார் மாமியார் சொன்னாங்கன்னு, ரக்ஷனா அப்பா தான் ஏற்பாடு பண்ணினார். நானும் வெளியே இருப்பதால் இங்க என்னதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கூட தெரியல” என்று அப்பட்டமாக பொய்யுரைத்தாள்.

அவர் சிரித்துக் கொண்டே மனைவியைப் பார்க்க, எதுவும் சொல்ல முடியாமல் நின்றாள் நாகேஸ்வரி. 

“ஆனாலும் பாரேன்! உன் கணவரைக் கண்டிப்பா பாராட்டியே ஆகணும், கட்டுன பொண்டாட்டி உனக்கு கூட தெரியாம இனிய அதிர்ச்சி தருவதற்காக இவ்வளவு பெரிய வீடு கட்டி இருக்கார். அட நான்தான் ஓட்ட வாய் மாதிரி ,உன் அண்ணிகிட்ட தினம் தினம் நடப்பதை எல்லாம் சொல்லிட்டு இருக்கேன்” என்க, ‘எனக்குத் தெரியாமல் என் கணவர் எதையும் செய்ய மாட்டார்’ என்ற அவளது முந்தைய பேச்சு இப்போது அடி வாங்கியது. 

“அப்புறம், எப்போ கிளம்புறீங்க?”

“என்ன அண்ணா, நாங்க இன்னைக்குத்தான் வந்திருக்கோம். அதுக்குள்ளே எப்போ கிளம்புறீங்கன்னு கேக்குறீங்க? நாங்க இங்கு வந்திருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா? நீங்கதான் எங்க வீட்டுல தங்காம வந்துட்டீங்க; எத்தனையோ முறை கூப்பிட்டும் அமெரிக்காவுக்கும் வரல. சரி, நாமளாவது அண்ணன் வீட்டுல தங்கிட்டுப் போகலாம்னு வந்தா, எங்களையும் துரத்தி விடப் பார்க்கறீங்களே!” என்று நைச்சியமாகப் பேசினாள்.

“நான் கேட்டது அமெரிக்காவுக்கு எப்போ கிளம்புறீங்க?”

அவர் தெளிவாகச் சொன்னதும், “பதினைந்து நாள் விடுமுறையில்தான் வந்திருந்தோம். இனி அவளுக்கும் பள்ளிக்கூடம் போகணும்; அவங்க நண்பர்தான் பிசினஸைப் பார்த்துட்டு இருப்பதால், ரக்ஷனா அப்பாவும் வீட்டிலிருந்தே செஞ்சுட்டு இருக்காங்க. ரொம்ப நாள் இங்கு தங்க முடியாது” என்றாள்.

“உன் கணவரின் நண்பர் வீட்டுல எல்லோரும் நலம்தானா? அந்தப் பசங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? இப்போ வளர்ந்து பெரியவர்களாகி இருப்பார்களே!”

“ஆமாம் அண்ணா” என்றவள், அதற்கு மேலும் எதையாவது பேசி மாட்டிக்கொள்ள விரும்பாமல் பேச்சை மாற்ற முயன்றாள்.

அவரோ விடாமல், “சென்ற முறை வந்தப்போ ஏதோ பங்சனுக்கு போறதா சொல்லி உன் அண்ணியின் புதிய நகையான ஏழு சவரன் சங்கிலியை வாங்கிப் போட்டு பிறகு அவசரமா வெளிநாட்டுக்குப் போனியே, இந்த முறை வரும் போதாவது மறக்காம கொண்டு வந்து கொடுத்துட்டியா? உன் அண்ணி ஒரு வாய் இல்லா பூச்சி! அதிர்ந்து கூட பேச தெரியாது. அதான் உன்கிட்ட கேட்க முடியாம இருந்திருப்பா …” என்றவர், மனைவியின் கையில் இருந்த நகைப் பெட்டியை வாங்கி விட்டு, “நம்ம பையன் இந்த ஊரே வியந்து பார்க்கும் அளவுக்கு வாழணும். தன்னால் இயன்ற உதவியை அத்தனை பேருக்கும் செய்யணும். இப்படி ஒருவனை மகனாக பெற்றதை நினைச்சு நான் பெருமை படணும். அதுக்கு என் மகன் யாருக்கும் அடங்காத தனிக்கட்டு ராஜாவா கம்பீரமா இருக்கணும். அவனுக்காக நான்  சிட்டியில் நம்பர் ஒன் இடமா பார்த்துப் புதுசா ஆபிஸ் கட்டும்  வேலையை ஆரம்பிச்சு இருக்கேன். எப்படியும் கோடியை தாண்டலாம். அதுவரை இது பத்திரமா வங்கியில் இருக்கட்டும்” என்று கூறி, வனிதாவின் தலையில் ஒரு பெரிய இடியை இறக்கி விட்டுச் சென்றார். 

அவள் தான் போட்ட திட்டம் உடைந்து போனதில் ஆத்திரம் தாளாமல் இருந்தாள். 

மதிய நேரம் பிரியாணி சிக்கன் வாசனை வீட்டைத் துளைத்தது. பரிதிவர்மன் வெளியே சென்றுவிட்டு சரியாக உணவு நேரம் வந்ததும், ரக்ஷனா ஓடிச் சென்று அவனது கையைப் பற்றிக்கொண்டு பேசினாள். அதைக் கண்ட தாணுலிங்கத்தின் பார்வை மகனின் முகத்தில் அழுத்தமாகப் பதிந்தது. அவனும் அதைப் புரிந்து கொண்டு அவளிடமிருந்து கையை விலக்கிக்கொள்ள, ரக்ஷனா அவனது கையைத் தன் கைக்குள் கொண்டு வந்து சோஃபாவில் சென்று அருகில் அமர்ந்தாள்.

மகனைக் கண்டனத்துடன் பார்த்தவர், “உன் ஆபீஸ் வேலை என்ன ஆச்சு? எப்ப இங்கிருந்து கிளம்புற?” என்று கேட்டார்.

அடுத்த கணம் ரக்ஷனாவிடமிருந்து விலகி அப்பாவின் அருகில் வந்து நின்றான் பரிதிவர்மன். அவளும் வேண்டுமென்றே வந்து அவனை இடித்துக்கொண்டு நிற்க, “இது வெளிநாடு இல்ல, கிராமம்! இங்கு எப்படிப் பழகணும்னு உங்க அம்மாக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ” என்றவர், “மேல வா! உன்கிட்ட பேசணும்” என்று சொல்லி மகனை மட்டும் அழைத்துச் சென்றார்.

மாடியில் வைத்து மகனை அவ்வளவு திட்டியவர், மதிய உணவை முடித்ததும் பண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். பரிதிவர்மன் எப்போதுமே ரக்ஷனாவைத் தப்பாக நினைத்ததில்லை; வனிதாதான் மோசம் என்று நன்கு அறிவான். வெகுநாட்களுக்குப் பிறகு வந்து பாசமாகப் பேசிய பெண்ணிடம் முகத்தைத் திருப்ப விரும்பவில்லை. அத்தை மகள் என்பதையும் தாண்டி, அவள் தனது தாய்மாமனின் மகள் என்ற உறவு முறையும் உள்ளதால், அவள் அழைக்கும்போது பேசினான்; கேட்டதற்குப் பதிலளித்தான். வெளியே போக கேட்டபோது கூப்பிட்டுப் போனான். ஆனால் இப்போது, அதற்குள் இருக்கும் உள்நோக்கத்தை அப்பா விளக்கிய பிறகே முழுமையாகப் புரிந்துகொண்டான்.

அடுத்த நிமிடம் அப்பாவின் பேச்சைத் தட்டாமல், அவர் ஒரு பாத்திரத்தில் எடுத்துத் தந்த சாப்பாட்டை வாங்கிக்கொண்டு பண்ணை வீட்டிற்கு வந்துவிட்டான்.

அங்கு சதாசிவம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் கொண்டு சென்று உணவைக் கொடுத்தவன், “சாப்பிட்டு வேலை பாருங்க மாமா” என்றான்.

“எனக்கு நந்து கொஞ்ச நேரத்தில் கொண்டு வந்துருவா. நீ எதுக்குப்பா இதெல்லாம் எடுத்துட்டு வரே?” என்று வினவியதும், “அப்பாதான் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க மாமா” என்றான். 

அப்படியே, “நந்து மட்டும்தான் வீட்டுல இருக்கறாளா?” என்று கேட்டு, அவள் வருவாள், கொஞ்ச நேரம் பேசலாம் என்று அங்கேயே இருந்தான்.

பிறகு அவன் இரவு வரை போகாமல் வேலையில் மூழ்கினான். தன்னிடம் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவன் திடீரென விலகிப் போகவும் ரக்ஷனாவின் முகம் வாடியது. இதை வனிதாவும் கவனிக்கவே செய்தாள். மாலை நேரம் அப்பாவையும் அழைத்துக்கொண்டு பண்ணை வீட்டைப் பார்க்கலாம் என்று அவர்கள் வர, பரிதி அங்கு நந்தனாவின் கையைப் பற்றிக்கொண்டு நடப்பதும், பேசுவதும், சிரிப்பதும், அவளை வம்பிழுப்பதும், அவளது கையைப் பிடித்து விளையாடுவதையும் கண்டு ஏக்கம் கலந்த பெருமூச்சை விட்டாள் ரக்ஷனா.

மகளின் மனதைப் புரிந்துகொண்ட வேல்முருகனுக்கும், வனிதாவின் பொறாமை மிகுந்த குணம்தான் இதற்கெல்லாம் காரணம் என்பது நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் எந்தத் தப்பும் செய்யாத மகள் ஒதுங்கி நிற்பதைக் காணும்போது கவலையாகவும் இருந்தது. அவர்களுக்கு நேர் எதிரில் தாணுலிங்கம் வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் வேல்முருகன் புன்னகைக்க, பேசிக்கொண்டே இருவரும் பண்ணை வீட்டிற்கு வந்தனர்.

ரக்ஷனா தான் வீட்டிற்குச் சென்று விடுவதாகச் சொல்லி திரும்பி நடக்க, வேல்முருகனும் தாணுலிங்கமும் சோஃபாவில் சென்று அமர்ந்தனர். அப்பாவைக் கண்டதும் நல்ல பிள்ளை போல பரிதிவர்மன் வந்து அமர்ந்துகொண்டான். நந்தனா மாமாவைப் பார்த்துப் புன்னகைத்து, வேல்முருகனைக் கண்டதும் கைகூப்பி வணங்கினாள்.

“அப்படியே, இந்தப் பெரிய மனுஷனின் காலையும் தொட்டுக் கும்பிடு” என்று வம்புக்கு இழுத்தான் பரிதிவர்மன்.

இவள் முறைக்க, அவனும் அதே போலச் செய்தான். தாணுலிங்கம் சிரிப்பதைக் கண்டதும், “மாமா, எப்பவும் இவர் என்னை வம்பு செய்வதை வேலையா வச்சிருக்கார். அந்த மூலையில் இருக்கும் கம்பை எடுத்து ரெண்டு கொடுங்க மாமா” என்றாள் நந்தனா.

அவர் சத்தமாகச் சிரித்ததும், “இல்லப்பா, அவள் பொய் சொல்றா. மாமாவுக்குச் சாப்பாடு செய்து கொண்டு வந்திருந்தா, அதை வாங்கி நான் சாப்பிட்டேன்; உப்பு குறைவா இருந்தது. கொஞ்சம் போட்டுக் குடுன்னு சொன்னா, வாரிப் போட்டுட்டா… அதான் துரத்தினேன்” என்றதும் வாய்விட்டுச் சிரித்தார் தாணுலிங்கம்.

“பொய்… பொய்… பொய் பேசுது இந்த அத்தான்” என்றவள் முறைக்க, அவன் எழுந்து சென்று “நான் பொய் சொல்றேனா? மாமா வரட்டும்!” என மிரட்ட, வேல்முருகன் அவர்களின் பேச்சை ரசித்தபடி இருந்தார்.

பின்னர், நந்தனாவை அழைத்து வேல்முருகனை அறிமுகப்படுத்திக் கொடுக்க, அவளது அழகும் அடக்கமும் அவரைக் கவர்ந்தது.

“என்னை யாருன்னு தெரியுமா நந்தனா?” 

“தெரியும்! எங்க சித்தப்பா” என்றதும் எழுந்து வந்து அவளது உச்சியை வருடினார். ஏனோ இனம்புரியாத வேதனை மனதை அடைத்தது. 

“என்னம்மா படிக்கிற? வீட்டுல அப்பா எப்படி இருக்காங்க? பிளஸ் டூ முடிச்சுட்டு என்ன படிக்க போறே?” என்று கேட்க, “அவள் ஒரு சோத்து  மூட்டை மாமா. அதெல்லாம் யோசிக்க தெரியாது. எப்பவும் சமையல் வீட்டு  வேலையை விட்டா, வேறு எதையும் பார்க்க மாட்டா” என்றான் பரிதிவர்மன். 

அவள் அழகு காட்ட, அவன் விரல் நீட்டி எச்சரிக்க, இவள் தொலைத்து விடுவேன் என்று மிரட்ட, பரிதிவர்மன் எழுந்து துரத்தியதும் இவள் வெளியே ஓடினாள்.

சின்னஞ் சிறுசுகளின் சேட்டையை பார்த்து இருவரும் சிரிக்க, கண்களில் வடிந்த நீரைத் துடைத்தார் தாணுலிங்கம்.

 மனம் கலையரசியின் ஞாபகத்தில் தவித்தது. தொண்டை அடைத்துக் கொள்ள, “பார்த்தியா முருகா! எப்படி இருக்க வேண்டிய பொண்ணு எந்த மாதிரி இருக்குன்னு? என்னால ஒரு நாள் கூட நிம்மதியா இருக்க முடியல. அன்னைக்கு மட்டும் அப்படி ஒரு சம்பவம் நடக்காம இருந்தா, இன்னைக்கு இந்தக் குழந்தை அம்மா இல்லாம இருந்திருக்காது. ஆனா அவளை இந்த நிலைக்குத் தள்ளிட்டு, இப்ப கூட எதிரியா நினைத்துப் பேசுவதையும் மகளிடம் தப்பா சொல்லிக் கொடுப்பதையும் என்னால தாங்க முடியல…” என்றார் மன வேதனையுடன் தாணுலிங்கம்.

“ஆமாம் அத்தான்! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்க்கறேன்; அவள் கேட்க மறுக்கிறா…”

“உன் தங்கை ஏதுமறியாதவள்; அவ கிட்டயும் அதையும் இதையும் சொல்லி, மனதைக் கெடுக்க பார்க்கறா… என் தங்கை மகளிடம் பேச விடாமலும், அவளைப் பார்க்கவோ பேசவோ போக கூடாதுன்னும் சொல்லி வச்சிருக்கா. ஆரம்பத்துல வந்துட்டு இருந்த நாகேஸ்வரி இப்ப ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தள்ளிப்போடுவதும், குறை சொல்வதுமா இருக்கறா… இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருப்பது எப்பவும் நல்லதில்லை” என்றவர், “எனக்கு மனசுல ஒரு ஆசை! அது கடவுள் அருள் வச்சா நடக்கும்” என்றார்.

“சொல்லுங்க அத்தான்!”

“நம்ம எல்லாரும் கைநிறையச் சம்பாதித்து குடும்பமா சந்தோஷமா இருக்கறப்போ, இதே குடும்ப வாரிசு மட்டும் கண்ணீர் விட்டுப் புலம்புவதை என்னால பாத்துட்டு இருக்க முடியல. அதான் நந்தனாவை என் மகன் பரிதிக்கு முடிச்சுடலாம்னு ஆசைப்படுறேன்” என்றார்.

வேல்முருகன் புன்னகைத்தபடி, “ரொம்ப நல்ல விஷயம் பண்றீங்க! கண்டிப்பா உங்க ஆசை நிறைவேறும். அவள் எனக்குப் பிறக்காவிட்டாலும் என் மகள்தான்!” என்றார்.

தாணுலிங்கம் மனம் நிறைய அவரைப் பார்க்க, “என்கிட்ட நீங்க அப்பவே எல்லாம் சொல்லிட்டீங்க. கலை மேல எந்தத் தப்பும் கிடையாது. வனிதாதான் காரணம்னு புரிஞ்சதும் ஆத்திரமா வந்தாலும், உங்க முகத்துக்காக மட்டும்தான் அமைதியா இருந்தேன். இல்லைன்னா, அவங்க ரெண்டு பேரையும் சும்மா விட்டிருக்க மாட்டேன். ஆனாலும் பாருங்களேன்! செய்வதையும் செய்துட்டு எவ்வளவு திமிரா நடந்துக்கிறான்னு…” என்றார் வேல்முருகன்.

அவர் தலையசைத்ததும், “எனக்குப் பிசினஸ் ரீதியா வெளிநாட்டில் உதவி செய்யும் நண்பரின் மூத்த மகனுக்கு ரக்ஷனாவை கட்டிக் கொடுக்க ஆசை. அவனும் படிப்புல கில்லாடி, அப்பாவை விட அனுபவம் மிகுந்தவன். ரக்ஷனாவை அவனுக்கே கட்டி வச்சா தொழிலும் பாதிப்பு வராது. திடீர்னு விட்டுட்டு வந்தாலும் அவர்கள் பார்த்துப்பாங்க. ஆனா, உங்க தங்கை நான் சொல்றதைக் கேட்காம எப்பவும் பரிதியுடன் இணைத்துப் பேசுறா” என்றார்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டபடி சதாசிவம் உள்ளே வர, அவரிடம் தன் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தினார் தாணுலிங்கம். அவர் நெஞ்சம் கலங்க கைக்குவித்து வணங்கினார். பின்னர் நந்தனா விஷயமாகப் பேசிவிட்டு, புதியதாக பரிதிவர்மனுக்கு ஆரம்பித்து இருக்கும் தொழில் குறித்துப் பேசியபடி இருந்தனர்.

அவ்வளவுதான்! அது முடிந்து இரண்டாவது நாள் அவர்கள் கிளம்பியும் ஆயிற்று. அதற்குள் ஓத வேண்டிய மந்திரங்களை நாகேஸ்வரியின் செவியில் ஓதி விட்டு திருப்தியாக விடை பெற்றாள் வனிதா.  அப்போது முதல் நாகேஸ்வரியின் மனதிலும் மாற்றம் வர தொடங்கியது. அதன் பிறகு வழக்கமான வேலைகள் நடக்க, இதோ பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் தினமும் கோழிப்பண்ணைக்கு வந்து தானும் வேலை செய்கிறாள் நந்தனா.

அதை ஒரு நாள் பார்த்துவிட்டு பரிதிவர்மன் கண்டிக்க, “எங்க அப்பா இங்க வேலை செய்யுறப்போ நான் செய்யக் கூடாதா?” என்று கேட்டாள் நந்தனா.

அவனோ மறுத்து, “நீ வேலைக்காரி இல்லை! இதன் உடமைக்காரி. உன்னை இங்கு வரச் சொன்னது வேலை பார்க்க இல்லை” என்று ஆதங்கப்பட்டான்.

அவள் புன்னகைத்து, “நான் ஒண்ணும் உங்களை மாதிரி முதலாளி வர்க்கமில்லை; உழைச்சாதான் எங்களுக்குச் சாப்பாடு” என்றதும் அவனுக்கு மனதிற்குள் ஏதோ பிசைந்தது.

“நீ இப்படி எல்லாம் பேசக் கூடாது! உனக்கு வேலை தந்து சாப்பிடும் அளவுக்கு நானோ எங்க அப்பாவோ விட்டுட மாட்டோம். இப்ப என்ன, தினமும் இங்கு வரணும், ஏதாவது செய்யணும் அவ்வளவுதானே! இங்குள்ள மொத்தக் கணக்கு வழக்குகளையும் சரி பார்த்துச் சொல்லு!” என்றான் பரிதிவர்மன்.

அவளும் சம்மதிக்க, அன்று முதல் விடுமுறை முடியும் வரை கணக்கு வழக்குகளைப் பார்த்து விபரம் தெரிவித்தாள். அங்குள்ள அறையில் உணவு தயாரித்து அப்பாவுக்கும் அவனுக்கும் பரிமாறினாள். தினமும் இரண்டு நேரமும் அவர்கள் ஒன்றாக இணைந்து உண்டனர். அவர்களுக்கு இடையில் உள்ள பாசம் இன்னும் அதிகமானது.

நீலாம்பரி தனது அம்மாவின் வீட்டிற்குச் சென்றபோது நந்தனாவைச் பற்றிய புலம்பலில் இருக்க, சந்திரகுமார் அவளைத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்டான். அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் அவளுக்குரிய படிப்புக்குச் செலவாகும் பணத்தைத் தரச் சம்மதித்தான். இனிமேல் பரிதிவர்மனிடம் பேசாமல், அவனிடம் எதுவும் வாங்காமல் இருக்குமாறு கூறினான்.

அப்படியே சதாசிவம் உதாசினமாகப் பேசி மகளுக்குக் குடை பிடிப்பதை அறிந்தவன், தான் பேசி சரிசெய்வதாக சொன்னான். நந்தனா ஒரு அழகான தேவதையாக அவன் கண்ணுக்குத் தெரிய வர, ஒவ்வொரு முறையும் தங்களது குடும்பத்தை அவமதிக்கும் பரிதிவர்மனை எப்படியாவது பழிவாங்கி, நந்தனாவைத் திருமணம் செய்து அந்த வீட்டிற்கு வரவிடாமல் துரத்தி அடிக்க திட்டமிட்டான். 

அத்தையும் பிள்ளைகளும் விடுமுறை முடியும் முன் சென்றதும், சந்திரகுமாரும் அடிக்கடி போகத் தொடங்கினான். அவளிடம் பேசினான், சிரித்தான், உரிமையாகப் பழக ஆரம்பித்தான்; அவளது மேற்படிப்பு குறித்து விசாரித்தான். நந்தனா அமைதியாக இருந்தாலும் அவன் விட மறுத்தான்.

அவள் அப்பாவிடம் சொல்லிக் குமுறியதும் சதாசிவம் அவனைத் திட்டித் தீர்த்துவிட, வீட்டில் பிரச்சனை பெரியதானது. நீலாம்பரி அவனுக்குத்தான் நந்தனாவைத் திருமணம் செய்து வைக்கப் போவதாகவும், இனி அவள் அவன் பொறுப்பு என்றும் கூற, மனைவியை அடித்துவிட்டார் சதாசிவம். இவள் கலங்கியபடி இருக்க, பெரிய கல்லூரிகளில் இருந்து வாங்கி வந்திருந்த அப்ளிகேஷனை நிரப்பி நந்தனாவுக்குப் பிடித்த பாடப் பிரிவிற்கு ஏற்கனவே அனுப்பி இருந்த பரிதிவர்மன், “ஹாஸ்டலுக்குப் போய் படிக்க வேண்டாம்! தினமும் என் கண்முன் சென்று வருவது போல இரு, உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாது” என்றான்.

அந்த வார்த்தை அவளுக்குள் ஆழமாகப் பதிய, அவனது பழக்கமும் பேச்சும் நெருக்கமும் மனதிற்குள் நேச விதையைத் தூவியது. அதன் பிறகு அவனது ஒவ்வொரு செயலையும் ரசித்தாள்; அவனுக்குத் தேவையானதைச் செய்தாள். கல்லூரி நேர்காணலுக்கு மாமாவுடன் அவளை அழைத்துச் சென்றான் பரிதிவர்மன். அவள் வேலை குறித்துப் பேசியபோது, அப்பா அவனுக்காகப் புதியதாக உருவாக்கிய அலுவலகத்தில் வந்து பணிபுரிமாறு சொன்னான்.

கல்லூரிக்குச் செல்லும் முன்பு புத்தாடைகள், விலை உயர்ந்த கைப்பேசி என அவளுக்குத் தேவையான அத்தனையும் வாங்கிக் குவித்தான். இறுதியாக ஒரு ஸ்கூட்டி வாங்கித் தந்தபோது அவள் அவ்வளவு மறுப்புத் தெரிவித்தாள். அவன் எதையும் கேட்காமல், அவளது கூந்தல் முதல் உடை வரை மாற்றம் கொண்டு வந்து முதல் நாள் அப்பாவுடன் வந்து ஆசீர்வதித்து அனுப்பி வைத்தான். கண்களில் நீர் பெருக இருவரையும் பார்த்துக்கொண்டே சென்றவளுக்கு, அவர்கள் காட்டும் அன்பிற்கு எப்படிப் பிரதிபலன் செலுத்தப் போகிறோம் என்று தெரியவில்லை.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top