அத்தியாயம் : 4
நேற்றைக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழாமல் இருந்ததால், மறுநாளும் அவன் வழக்கம் போல தன்னுடைய பணியை நோக்க சென்று விட்டான். கணவன் போகும் வரை சாலையை பார்த்துக் கொண்டிருந்த நந்தனா, அவன் கண்ணை விட்டு மறைந்ததும் உள்ளே வர, அதற்காகவே காத்திருந்தது போல வேகவேகமாக வந்த நாகேஸ்வரி, நேற்றைக்கு நடந்த சம்பவங்கள் மகனின் செவிக்குப் போகவில்லை என்ற தைரியத்தில், குழந்தையை அவளிடம் இருந்து பறித்தார்.
நிவேதா பாட்டியை கண்டதும் பயந்து வர மறுத்து, நந்தனாவின் தோள்களை இறுக கட்டிக் கொண்டாள். அப்படியும் அவர் விடாமல் குழந்தையைப் பற்றி இழுத்து, வேலைக்கார பெண்மணியிடம் கொடுத்துவிட்டு அவளைத் தரதரவென இழுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றார்.
அவள் “வேண்டாம் அத்தம்மா! என்னை எதுவும் பண்ணிடாதீங்க” என கதறலாக மொழிந்ததும், “யாருக்கு யாருடி அத்தம்மா? எனக்கு அவள் மட்டும் தான் மருமக நீ இல்ல” என்று முகத்தில் அடித்தது போல கூறினார்.
“அத்தம்மா நான் எந்த தப்பும் செய்யல, உங்க மகனும் பாவம் இல்லையா! எங்களால உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது”
அவளது பேச்சை எங்கே இவர் கேட்டாராம்? “முதல்ல நீ எனக்கு அறிவுரை சொல்றதை நிறுத்துடி? உங்க அம்மா வேற ஜாதிக்காரனை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டு, எப்ப வீட்டை விட்டுப் போனாளோ, அப்பவே உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு முறை எல்லாம் முடிஞ்சு போச்சு. என் மகன் ஏதோ அத்தை மேல் உள்ள பாசத்தில் உன் மீது அனுதாபப்பட்டு நடந்தா, அப்பனும் பிள்ளையுமா சேர்ந்து அவன் வாழ்க்கையை முடிச்சு விட பார்க்கறீங்களா? இதுக்கு மேலும் உன்னை வீட்டுல வச்சிருந்தா, என் குடும்பமே இல்லாம போயிடும்” என்று கர்ஜித்தார்.
அவர் சமையலறைக்குள் தன்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்வதைக் கண்டு, “வேண்டாம் அத்தம்மா! என்னை எதுவும் செய்துடாதீங்க. பயமா இருக்கு!” என்று அவள் கதறியதும், “இனிமேல் என்னை அத்தம்மான்னு சொன்னா உன் வாயில தான் முதல் சூடு போடுவேன் …” என்றவர், விறகு அடுப்பில் கொழுந்து எரிந்து கொண்டிருந்த நீளமான கட்டையை எடுத்து, அவளது காலில் வைத்து இழுத்து விட்டார்.
“அம்மா!! ஐயோ அம்மா… எரியுதே… ஆ!!” என்று அவள் அலறியது வீடு முழுவதும் எதிரொலிக்க, பார்த்து நின்ற பெண்களுக்கு, நந்தனாவின் நிலை பரிதாபத்தை தோற்றுவித்தது.
‘என்ன பெண்மணி இவர்? இத்தனை வருடங்களாக நல்லவராக இருந்தவருக்குள் இப்படி ஒரு மூர்க்கத்தனம் எப்போது குடியேறியது? இவளும் இந்த வீட்டிற்கு மருமகளாக வரும் தகுதி உடையவள் தானே! ஏதோ வேற்று ஜாதி பெண்ணைத் திருமணம் செய்து வந்துவிட்டது போல் இப்படி கொடுமைப்படுத்துகிறாரே!’ என்று பார்த்து நின்ற பெண்கள் தங்களுக்குள் முணுமுணுக்க, “உன்னைய பார்த்தாலே எனக்குப் பிடிக்கல, ஒழுங்கா இப்பவே இந்த வீட்டை விட்டு எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிடு! இல்லை நான் எங்கேயும் போக மாட்டேன் இங்கு தான் இருப்பேன்னு சொன்னா, உன்னை நான் உயிரோடு விட்டு வைக்க மாட்டேன்” என்றார் கர்ண கொடூரமான குரலில் நாகேஸ்வரி.
நந்தனா வலது காலை பிடித்துக் கொண்டு வேதனை தாளாமல் துடித்துக் கொண்டிருந்தாள். அவர் அங்கிருந்து வெளியேறி சென்றுவிட, ஓடிச் சென்று மருந்தை எடுத்து வந்த பெண்கள், நாகேஸ்வரிக்கு தெரியாமல் அவள் காலில் போட்டு விட, அவளது கண்ணீர் அவர்களையும் பாதித்தது.
அதற்கு அருகில் இருந்த பழைய சாதனங்களைப் போட்டு வைப்பதற்காக உள்ள ஸ்டோர் ரூமை சுத்தப்படுத்தி அவளை அங்கு சென்று ஓய்வு எடுக்க கூறினர். மதிய உணவு நேரம் அவளுக்காக உணவை எடுத்து வந்து கொடுக்கும்போது, பின்னாலே வந்து அதைப் பிடுங்கி நாய்க்கு கொண்டு போட்டு விட்டார் நாகேஸ்வரி.
அப்படியே உணவை எடுத்து வந்து கொடுத்தவர்களை திட்டோ திட்டு என திட்டி விட்டு, “சூடு சொரணை இல்லாம வெக்கம் கெட்டுப்போய் அவள் இருந்தா, நீங்க எதுக்குடி அவளுக்கு என் புருஷன் சம்பாத்தியத்தில் செய்த சாப்பாட்டை கொண்டு வந்து கொடுக்கிறீங்க? ஒழுங்கா இருக்கல உங்களையும் இந்த வீட்டை விட்டு துரத்தி அடிச்சிடுவேன். நேரத்துக்கு நல்லா தின்னு கொழுத்து போய் இருக்கலாம்னு வந்தால்ல! இனி அனுபவிக்கட்டும் …” என்றவர் தனது முட்டை கண்களை விரித்து, அவர்களைத் தீயாக எரித்துவிட்டு சென்றார்.
அன்று அலுவலகத்தில் அதிக வேலையாக இருந்ததால் பரிதிவர்மன் மதிய நேரம் வீட்டிற்கு வராமல் மாலை நேரத்தில் வந்தான். அதற்குள் அவள் எங்கேயாவது சென்று விட வேண்டும் என்று எவ்வளவோ திட்டியும், பட்டினி போட்டுக் கதறடிக்க முயன்றும் அவள் கால் வலியால் எழுந்து வெளியேறாமல் அங்கேயே விழுந்து கிடந்தாள். அவளை வாய்க்கு வந்த மட்டும் நன்றாக திட்டிவிட்டு, மகன் வரும் நேரம் எதுவுமே தெரியாதது போல இருக்க, பேத்தியை தான் அடக்குவது பெரும் பாடாக போனது.
அவள் ‘அம்மா, அம்மா!’ என்றது தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. ஆனால் நாகேஸ்வரி, “உன்னை நான் தானே இத்தனை நாளும் வளர்த்து பாசத்தைக் கொட்டி பார்த்திருந்தேன். பிறகு எதுக்கு அவளைத் தேடுற?” என சத்தமிட்டார்.
அப்படியும் அவள் கேட்காமல் அழுததால், அந்த வேலைக்கார பெண்மணி தான் பார்த்துக் கொள்வதாக தூக்கிச் சென்று வீட்டின் முன்புறம் அங்கே இங்கே காட்டுவதாக பாவனையில் ஈடுபட்டு, பின்னர் நந்தனாவிடம் கொண்டு வந்து கொடுத்தார். அவளைக் கண்டதும் குழந்தையின் அழுகை நின்றதோடு, அங்கேயே சாப்பிட்டு அவள் மடியில் படுத்து உறங்கிவிட, பரிதிவர்மன் வீட்டிற்கு வரும்போது வீடு அமைதியாக இருந்தது.
பைக்கை நிறுத்தியவன் வீட்டிற்குள் வந்ததும் குழந்தையின் சத்தத்தையும் மனைவியையும் காணாததும் மாடிக்கு வந்து பார்த்தான். இருவரின் பெயரை சொல்லி அழைத்தும், அவர்கள் பதில் தராமல் இருந்ததுடன், எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்தபடி, மடிக்கணினி இருக்கும் பையை மேஜையின் மீது வைத்து விட்டு, உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தான்.
மகளின் பெயரை சொல்லி அழைத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவன், குழப்பத்துடன் வீட்டுப் பணியாளை அழைத்து விசாரித்தான். அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் நாகேஸ்வரியைப் பார்க்க, “நந்தனா எங்க போயிருக்கா? பாப்பாவையும் வீட்டுல காணுமே! ரெண்டு பேரும் வெளியே எங்கேயும் போயிருக்காங்களா?” என்று வினவினான்.
“எனக்கு என்ன தெரியும்? என்கிட்ட ஏன் கேக்குற? வர்றவளையும் போறவளையும் பார்க்கறது தான் என் வேலையா?” என்று அவர் உதாசினத்துடன் சொன்னதும், “அப்ப நிவேதா எங்க? ரெண்டு பேரையும் வீட்டுல காணும்?” என்று முகம் இறுக கேட்டான்.
அவர் குழந்தை உறங்கி விட்டதாக சொன்னதும், “அப்போ நந்தனா எங்க? ஏன் அவளைப் பற்றி கேட்டா எதுவும் சொல்ல மாட்டேன்றீங்க? நான் இல்லாத நேரத்தில் அவளை என்ன செய்தீங்க?” என்று குரலை உயர்த்தினான்.
அவர் எழுந்து நின்று மகனை முறைத்தார். அவன் அசராமல் தாயைப் பார்த்தபடி இருக்க, “வீட்டுக்கு விலக்கு வந்திருப்பதால் பின்னாடி இருப்பாளா இருக்கும். உனக்கு வேணுமா அங்கே போய் பாரு…” என்று அவளை விட்டு மகனை விலக்கி நிறுத்துவதற்கு, இல்லாத ஒரு காரணத்தை அடுக்கினார் நாகேஸ்வரி.
“பின்னாடியா?” என்றவன் அதன் பிறகே அவர் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டு, “ஏன் உங்க ஆசை மருமக மட்டும் அந்த நேரம் இந்த வீடு பூரா சுத்தி அலையலையா? இவளை மட்டும் அங்க தங்க சொல்லி இருக்கீங்க?” என்று கோபமாகக் கேட்டான் பரிதிவர்மன்.
அவரோ அலட்சியமாக திரும்பிக்கொண்டு, “என் மருமகள் வெளிநாட்டில் படிச்சவ, அங்க இதெல்லாம் பாக்க மாட்டாங்க. அவள் அப்படி பிறந்து வளர்ந்தவள், கட்டுப்பாடாக போய் அங்க இங்க எல்லாம் இருக்க சொல்ல முடியாது… அவளை இவளோடு ஒப்பிட்டுப் பேசாதே” என்றவுடனே “ஒஹோ… வெளிநாட்டுல போய் படிச்சு ஊர் சுத்திட்டு வந்தா தான் நல்லவள், சொந்த ஊர்ல அடக்க ஒடுக்கமா இருந்தா மோசமா? அப்படி சுதந்திரமா ஊர் சுத்திட்டு திரிஞ்சதால தான் இன்னைக்கு ஒரு ஊருக்குள் அடங்கி இருக்காம போயிருக்கான்னு மறந்துட வேண்டாம்” என்று கடுமையாக கூறியவன்
“ஒவ்வொரு வீட்டுலயும் பெத்த பிள்ளைக்கு ஆதரவா பேசும் பெற்றோரை தான் பார்த்திருக்கேன். இப்படி ஒரு அம்மாவை எங்கேயும் பார்த்ததில்லை” என்றவாறு உறங்கிக் கொண்டிருக்கும் மகளை சென்று பார்த்த பின்னர் மனைவியைக் காண வந்தான்.
அவரோ மகனது வார்த்தையில் மூண்ட புகைச்சலுடன் காணப்பட்டார்.
கணவனின் குரல் கேட்ட நேரத்தில் இருந்து அவசரமாக எழுந்து முகத்தை கழுவி சுத்தம் செய்து, எதுவுமே நடக்காதது போல தன்னைக் காட்டிக் கொள்ள உடையை சரி செய்து கொண்ட நந்தனா, அவனைப் பார்த்ததும் முறுவலித்தாள்.
அவள் அருகில் சென்றவன், “ஏன்டா உனக்கு மாதவிலக்கு வந்திருக்குன்னு என்கிட்ட ஒரு வார்த்தை ஃபோன் பண்ணி சொல்லிருந்தா, நான் வர்றப்போ உனக்குத் தேவையானதை வாங்கிட்டு அப்பவே வந்திருப்பேனே! ரொம்ப கஷ்டமா இருக்கா?” என்று கேட்டான்.
அவளது கண்கள் இரண்டும் கரித்துக் கொண்டு வந்தன. இல்லை என்று தலை ஆட்டினாள். அவளது முகத்தை தன் இரு கைகளில் ஏந்தியவன், கண்களில் துளிர்விடும் கண்ணீரைத் துடைத்து விட்டான். அடுத்த கணமே அவளைத் தன்னுடன் வெளியே அழைக்க, அவளால் வேகமாக நடக்க முடியாமல் கால் வலித்தது.
“ஸ்… ஆ!” என்ற அவளது முனகலில், வயிறு வலிப்பதால் அப்படி நடந்து கொள்வதாக அவன் நினைத்து, இரு கைகளில் தூக்கிக் கொண்டு கீழே உள்ள படுக்கையறையில் கொண்டு வந்து கிடத்தினான்.
“நந்து! இந்த நேரம் மேலேயும் கீழேயும் இறங்கி வருவதற்கு உனக்கு சிரமமா இருக்கும். வீட்டுக்குள்ளேயும் அங்கேயும் இங்கேயும் போக தயக்கமா இருந்தா, பக்கத்துல பாத்ரூம் இருக்கு அதை யூஸ் பண்ணிட்டு இங்கேயே இரு! உனக்குத் தேவையானதை வேலைக்காரங்க செய்து தருவாங்க” என்றான் பரிதிவர்மன்.
மாதவிடாய் சமயம் என்று சொல்லியும் கூட, மகன் தயங்காமல் மனைவியைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்து விட்டானே என்று அவனது தாய் வாயைப் பிளந்து கொண்டு அதிர்ச்சியுடன் நின்றிருக்க, கணவனின் தூய அன்பில் நெஞ்சுருகிப் போனாள் நந்தனா. அவளது கூந்தலை கோதிக் கொடுத்தவன், “சும்மா சும்மா கண் கலங்காதே நந்து! நீ இதுல படுத்து ரெஸ்ட் எடு நான் இப்ப வந்துடறேன்” என்றவன் அடுத்த நிமிடம் கதவை சாற்றிவிட்டு வெளியேறி சென்று, பத்து நிமிடத்திற்குள் மீண்டும் வந்தான்.
கையில் கொண்டு வந்திருந்த கவரை அவளது அருகில் வைத்துவிட்டு, பின்னும் மாடிக்குச் சென்று அவளது உடைகளை எடுத்து வந்து அதே அறையில் வைத்தான்.
“உனக்குத் தேவையானதெல்லாம் அந்தக் கவரில் இருக்கு. அஞ்சு நாளைக்கு தாராளமா போதும்! அதில் இருக்கும் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ்ஸை டெய்லி ரெண்டு நேரம் கலக்கி குடி. நிவேதாவை அதுவரை அம்மாவும் வேலைக்காரங்களும் பார்த்துக்கட்டும்” என்றவனை பார்த்தவளின் கண்களில் ஏக்கம் மேலிட்டது.
இப்படி ஒருவனின் அன்பும், அரவணைப்பும் கிடைக்க எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேனோ! என்று அவள் விம்மினாள்.
“என்னம்மா ஏதாவது என்கிட்ட சொல்லணுமா?”
“இல்லை” என்பதாக அவள் தலையாட்ட, அவளது நெற்றியில் முட்டியவன், “எப்பவும் ஊமையாகவே இருப்பது நல்லதல்ல நந்து. அப்பப்ப வாய் திறந்து பேசவும் கத்துக்கோ!” என்றதும் வலியுடன் கூடிய ஒரு புன்னகையை உதிர்த்தாள் நந்தனா.
அவனுக்கு அதுவே போதுமானதாக இருக்க வெளியே வந்து, சமையல்கார பெண்மணியை அழைத்து அவனுக்கும் அவளுக்கும் சேர்த்து உணவை எடுத்துக்கொண்டு வரச் சொல்லி, அதே அறைக்குள் மறுபடியும் வந்தான். அவள் அருகில் அமர்ந்து இருவருமாக உணவை முடித்ததும், “காலையிலிருந்து ஒரே வேலை நந்து. கொஞ்ச நேரம் கூட ஓய்வெடுக்க முடியல உடம்பெல்லாம் வலிக்குது. நான் கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கிறேன்… நீயும் தூங்கி ஓய்வு எடுடா!” என்றதும், அவள் மாடியறையில் சென்று தூங்க சொன்னாள்.
“அதென்ன உன்னையும் மகளையும் இங்கே விட்டுட்டு நான் மட்டும் அங்கே போய் தனியா படுப்பது? அதெல்லாம் முடியாது. நீ என் மனைவி! உனக்கு உடம்புக்கு முடியாத நேரம் பார்த்துக்கும் கடமை எனக்கு இருக்கு. நீயும் பேசாம தூங்கி ரெஸ்டு எடு. நிவியும் அப்பவே தூங்கிட்டா” என்று கூறி பேசாமல் கட்டிலில் படுத்து விட்டான்.
அவளால் மனதில் எழும் உணர்வுகளை வாய் திறந்து சொல்ல முடியவில்லை. தொண்டை அடைத்துப் பேச்சு வர மறுத்தது.
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நந்தனா, மெல்ல எழுந்து சென்று அவனது கால்கள் இரண்டையும் பற்றி மென்மையாக அழுத்தி விட்டாள். அவன் வேண்டாம் என்று மறுத்தும் கேட்காமல் கை, கால், முதுகு என அவள் இதமாக அழுத்தி விட்டதில், சுகமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் பரிதிவர்மன்!
காலையில் எழுந்ததும் மகள் ஓடி வந்து அவன் மீது சாட, மகளைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தவன் வாசல் கதவைத் தாழிட்டான். அம்மாவும் மகளும் ஆசை தீர பேசினார்கள். இப்படி ஒரே ஒரு அறைக்குள் அடைந்து கிடந்தால் அவர்களுக்கு மூச்சு முட்டும், சுதந்திரமாக நடமாட முடியாது. வெளியே செல்லும்போது அம்மா வேறு எதையாவது சொல்லி அவளைக் கஷ்டப்படுத்துவார் என்பதால், அதற்குப் பக்கத்தில் உள்ள அறையையும் அதோடு இணைத்து, வெளிப்பக்கமாக பயன்படுத்தும் வகையில் ஒரு வாசல் கதவையும் எடுக்க திட்டமிட்டான்.
மாடியில் வசிப்பதை விட தான் இல்லாத நேரத்தில் இந்த அறை அவளுக்குப் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கும், குழந்தையும் ஓடிச்சாடி விளையாட, பணியாட்கள் வந்து போக, வெளியே சென்று வர… என்று மனதிற்குள் நினைத்தவன், வெளிப்புறமாக சென்று வாசல் எடுப்பதற்காக பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்னர் தனக்குத் தெரிந்த ஆசாரியிடம் விசயத்தை தெரியப்படுத்தி, வீட்டுப் பணியாள் ஒருவரை அழைத்து செய்ய வேண்டியவற்றை தெளிவாக சொல்லி விட்டு, ஆசாரி வந்ததும் சரியாக அடையாளம் காட்ட சொன்னான்.
மகன் இப்படியெல்லாம் திட்டமிடுவதைக் கண்ட தாயவள் திடுக்கிட்டு விழித்தாள். நாம் ஒன்று நினைத்து நடக்க, இங்கு நடப்பது வேறாக இருக்கிறதே என்று பயந்தார். நாத்தனார் அங்கிருந்து வரும்போது விசயம் விவகாரம் ஆகி விடக்கூடாதே என்று பதற்றம் அடைந்தார்.
அவன் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் அவளை விட்டுப் போவது போல தெரியவில்லை, கூடவே குடித்தனம் நடத்துவதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவது போலிருக்கிறது. இதில் மருமகள் வந்த பிறகு என்னென்ன நடக்க போகிறதோ என்று கலக்கமுற்றார் நாகேஸ்வரி.
ஆனால், இத்தனை தூரம் நாத்தனார் மற்றும் மருமகளைப் பற்றி யோசிப்பவர், கொஞ்சமாவது மகனைப் பற்றியும் அவனது வாழ்க்கையைப் பற்றியும், மருமகள் செய்த தவறுகளைப் பற்றியும், பச்சை குழந்தையை விட்டுப் போகும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? என்றும் எண்ணி பார்த்திருக்கலாம். அப்படி அவர் செய்யாமல் போனது, பின்னாளில் அத்தகைய அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் என்று நினைத்திருக்க மாட்டார் நாகேஸ்வரி.
பரிதிவர்மன் வேலைக்குச் சென்ற சற்று நேரத்தில், அங்கு வந்த ஆசாரி அவன் சொன்னது போல அளவெடுத்து விட்டுச் சென்றார். அது நாகேஸ்வரியின் ஆத்திரத்தை தூண்டி விட, அவளை அத்தனை கொச்சையாக பேசி அவமதித்தார்.
மகனைத் தன்னிடம் இருந்து பிரித்துச் செல்ல திட்டமிடுவதாக சபித்தார். ஒன்றாக இருந்த குடும்பம் இன்று இல்லாமல் போக அவள் தான் காரணம் என்று தூற்றினார். மகன் மதிய நேரம் வந்து உணவருந்தி போன பிறகு தகாத வார்த்தைகளால் தாக்கினார்.
மறுநாள் நிலை பகுதியைக் கொண்டு வந்து, ஜன்னல் கதவை நீக்கி விட்டுப் புதுசாக அமைத்தார்கள். இரண்டு அறைகளுக்கு இடையிலும் வழிப்பாதை உருவாக்கி அதிலும் ஒரு நிலைக்கதவு பதித்தார்கள். இதை எல்லாம் நாகேஸ்வரியால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சும்மா வாயை வைத்துக் கொண்டு இருந்திருந்தால் இன்று இப்படி ஒரு நிலை உருவாகி இருக்காது. இப்போது அவர் சொன்ன பொய் விபரீதமாக மாறி விட்டது என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இரண்டு அறை அதோடு வெளிப்பகுதியில் உலாவி வர வசதி, வாசலுக்கு நேர் பகுதியில் சீட்டை பொருத்தி அதில் கம்பியும் பதித்து, ஒரு தனி வீடு போல மாற்றி விட்டார்களே என ஆத்திரம் தாங்காமல் இருந்தார்.
மகனுக்குத் திருமணமாகி ஒரு வாரம் ஆகப் போகிறது. ஏன் இன்னும் நாத்தனார் வனிதா தனது மகளை அழைத்து வரவில்லை? இரண்டு நாட்களில் வருவதாக சொல்லி இதோ ஒரு வாரம் ஆகப் போகிறதே என்று பதறியவர், இங்கு நடப்பதை மறக்காமல் அவரிடம் தெரியப்படுத்த, வனிதா ‘இதோ வந்து விட்டோம், அதோ வருகிறோம், நீங்கள் மட்டும் கவனமாக இருந்து பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று இவரைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்.
அதனால், தான் செய்வது தப்பு! மகன் அறிந்தால் விட மாட்டான், அவளும் தனது நாத்தனாரின் மகள்தான் என்பதை மறந்து, பரிதிவர்மன் வீட்டில் இல்லாத நேரங்களில் அவளைக் காண விடாமல் ஆக்கினார் நாகேஸ்வரி.
பேசக்கூடாத வார்த்தையைப் பேசினார், நடக்க கூடாத மாதிரி நடந்து கொண்டார், தன்னுடைய சொந்த நாத்தனார் மகள் என்ற எண்ணமே இல்லாமல் துன்புறுத்தினார். குழந்தையைப் பகல் நேரத்தில் அவள் அருகில் போக விடாமல் செய்தார். மருமகள் வருமுன் இவளுடன் ஒட்டுதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
அவர் தன் மகனுக்குத் தெரியாமல் எவ்வளவோ கொடுமை செய்தும், அது பரிதிவர்மனின் செவிக்கு செல்லவில்லை. ஆனால் கடைசியாக செய்ததுதான் மகனை மொத்தமாக மாற்றி அவருக்கு எதிராக நடக்க வைத்து விட்டது.