அத்தியாயம் 02

அத்தியாயம் 02 

அன்று அந்த ‘யானா ஹெவன் ரிசார்ட்(YAANAA HEAVEN RESORT)’  பயணிகளால் நிரம்பித்தான் போயிருந்தது.

இயற்கையின் அழகையும் நவீனத்துவத்தின் கம்பீரத்தையும் ஒருசேரத் தன்னுள் அடக்கியிருந்தது அந்த விடுதி.

கடற்கரையை ஒட்டிய பரந்த நிலப்பரப்பில் அமைந்திருந்த அந்த விடுதியின் நுழைவாயிலே அதன் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றியது. இருபுறமும் அணிவகுத்திருந்த உயரமான தென்னை மரங்களின் நடுவே நீண்டு சென்ற பாதையின் முடிவில் கம்பீரமாக எழுந்து நின்றது அதன் பிரதான கட்டிடம்.

சுற்றிலும் பசுமையான புல்வெளிகள், வண்ண மலர்ச் செடிகள், அழகிய நீரூற்றுகள் என ஒவ்வொன்றும் ரசனையுடன் அமைக்கப்பட்டிருந்தன.

கடலின் நீல நிறத்தோடு போட்டியிடும் வகையில் அமைந்திருந்த நீச்சல் குளமும், கடற்காற்றை ரசித்தபடி அமர்ந்திருக்க அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி இருக்கைகளும் அந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்த்தன.

விருந்தினர்களின் தனிமைக்கும் வசதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருந்த சொகுசு குடில்கள், பிரத்தியேக உணவகங்கள், கொண்டாட்டங்களுக்கான திறந்தவெளி அரங்குகள் என அந்த ரிசார்ட்டின் ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான அழகைக் கொண்டிருந்தது.

அங்கே காலடி எடுத்து வைப்பவர்களுக்கு நேரம் செல்வதே தெரியாத அளவிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் பரிசளிக்கும் ஓர் அழகிய உலகம் அது.

யானா ஹெவன் — பெயருக்கு ஏற்ற சொர்க்கம்!

பாலமுருகன் அவனுக்குக் கீழே வேலை செய்யும் கண்ணனை அழைத்தவன் “அண்ணா, அரவிந்த் இன்னைக்கு வர்றதா சொன்னான். கூட அவன் பிரண்ட்ஸும் வர்றாங்க போல, விஐபி ரூம்ஸ்ல ஃபர்ஸ்ட் மூனையும் அவங்களுக்கே கொடுத்துடுங்கண்ணா” என்க,

“தம்பி இதையே தான் ஒரு வாரமா சொல்லுறீங்க! எனக்கே மனப்பாடம் ஆகிடிச்சு” என்று அவர் புன்னகையுடன் சொல்ல,

நெற்றியை வருடிக் கொண்டவனோ “கண்டுக்காதீங்கண்ணா, என் அக்கா பையன் அவன். வீட்டுல யாருமே பேசாம இருக்குறப்போ அவன் மட்டும் என்ன தேடி வர்றான். அதுவே என்ன தூங்க விட மாட்டேங்கிது” என்றவன் கண்கள் தன்னால் கலங்க,

கண்ணனோ “என்ன தம்பி இதெல்லாம். ஆதான், உங்களைத் தேடி வர்றாருன்னு சொன்னீங்களே, அதுவே சந்தோஷமான விஷயம் தானே! சந்தோசமா இருங்க தம்பி” என்றார்.

அவரைப் பார்த்துப் புன்னகைத்த பாலமுருகனோ, “அதுலயும் ஒரு சின்ன வருத்தம் இருக்குண்ணா. அவன் என்னைப் பார்க்க வர்றானா, இல்ல இந்த ரிசார்ட்டைப் பார்க்க வர்றானான்னு தான் தெரியல. எப்படியோ, அவன் வர்றேன்னு சொன்னதுல இருந்து மனசுக்குள்ள ஒரு சந்தோஷம்” என்று தன் சந்தேகத்தையும் சேர்த்தே சொல்ல,

“அட, இதுக்குப் போய் ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க தம்பி? சின்ன வயசுல பார்த்த பையன். இப்போ வளர்ந்து பெரியவனாகி உங்களைத் தேடி வர்றான். நல்லபடியா அவனை வரவேற்க வேண்டியதுதான” என்க

“அவனுக்குத் தேவையான எல்லாத்தையும் கூட இருந்து பார்த்துக்கோங்கண்ணா. அவனுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது” என்றான் சிறிது தேறிவிட்ட முகத்துடன்…

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் தம்பி. நீங்க கவலைப்படாம இருங்க” என்றவரிடம் தலையசைத்த பாலமுருகன், மீண்டும் ஒருமுறை விடுதியின் வரவேற்புப் பகுதியைச் சுற்றிப் பார்வையிட்டான்.

அந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் அவனுடைய உழைப்பும், கனவுகளும் மட்டுமல்ல… சில மறக்க முடியாத நினைவுகளும் புதைந்திருந்தன.

யானா ஹெவன்…

அது வெறும் சுற்றுலா விடுதி மட்டுமல்ல. அவனுடைய வாழ்க்கையில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியமானவர்களாக இருந்த இருவரின் பெயர்களைச் சுருக்கி உருவாக்கிய ஓர் அடையாளம்.

அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமான அவனுடைய முன்னாள் மனைவி நயனாவும், அவர்களுக்குப் பிறந்த மகள் நவ்யாவும்!

இன்று மனைவி அவனுடன் இல்லாவிட்டாலும், அவள் பெயர் மட்டும் அவனைவிட்டு ஒருபோதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெயரைச் சூட்டியிருந்தான்.

அந்தப் பெயரைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவனுக்குள் ஏதோவொன்று வலிக்கும். அதேநேரம், அந்த வலிக்குள்ளேயே ஒரு சிறிய நிம்மதியும் கிடைக்கும்.

அப்படியே பழைய யோசனையில் இருந்தவனிடம் வந்து சேர்ந்தது அவனுடைய மனைவி யுவராணியின் அழைப்பு…

அவன் மனம் சற்று சுனங்கியது கூட அவளுக்குப் புரிந்து விட்டது போலும், அவனுக்கு அப்படித்தான் இருந்தது அவளது அழைப்பு…

“என்ன யுவி, இந்த டைம் கூப்பிடிருக்க?” என்று இவன் அழைப்பை உயிற்பித்ததும் கேட்க,

“ஒண்ணுமில்ல பாலா சும்மா தான்” என்றாள் அவள்,

அவனோ “மேடம் எப்படியெல்லாம் சும்மா எடுக்க மாட்டீங்களே என்ன விஷயம்” என்று அவனும் விடாமல் கேட்க

“உங்க அக்கா பையன் வந்துட்டாரா என்னனு கேட்ப்போம்னு தான் பாலா. மிஸ்டர் பாலமுருகன் வானத்துல எங்கேயும் பறக்குறாரோன்னு ஒரு டவுட் அது தான்” என்றவளின் குரலில் இருந்த கேலி பாலமுருகனை புன்னகைக்க வைத்திருந்தது.

பின்னே இந்த ஒரு வாரமாய் அவளையும் தானே படுத்துகிறோம் என்று தோன்ற, வந்த புன்னகையை அடக்கியவனோ “அதெல்லாம் பூமில தான் இருக்கோம் மகாராணி ஒன்னும் கவலை பட வேண்டாம்” என்றதும் புன்னகையுடனே அவளும் மேலும் சில நொடிகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

______________________________

அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அனலி குளித்து உடைமாற்றி வெளியே வந்தவள் சமையலறை செல்ல, அங்கே சமைத்ததற்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை…

“என்னாச்சு? என்ன சாப்பிட்டு இருப்பாங்க?” என்று எண்ணியவள் வெளியே வந்து, அங்கே தொலைக்காட்சிப் பெட்டியில் மூழ்கி இருந்த தன் சிறிய தாயிடம்,

“சித்தி நைடுக்கு எதுவும் செய்யலையா? ரொம்ப லேட்டாகிடிச்சே! என்ன சாப்டீங்க?” என்று கேட்க,

“நாங்க கடைல வாங்கி சாப்பிட்டோம்” என்று பதில் சொன்னவர் மீண்டும் நாடகத்தில் மூழ்கிப் போனார்.

அப்போது அங்கே வீட்டின்னுள் நுழைந்த வருண்…

தமக்கை அப்படியே நிற்பதைக் கண்டு “எப்ப வந்தக்கா, உன் ஆபீஸ்ல பர்த்டே பார்ட்டில பீட்ஸா எல்லாம் கொடுப்பாங்களா? நானும் தேனும் நல்லா சாப்பிட்டோம். நீ மட்டும் சாப்பிடாம எங்களுக்கும் கொடுத்து விட்டதுக்கு தேங்க்ஸ் கா” என்றவன் பதினாலு வயதுக்கே உரிய சந்தோசத்துடன்  உள்ளே செல்ல, நடந்திருப்பது ஓரளவுக்குப் புரிந்தது பேதைக்கு…

அவன் அனைத்தையும் இப்படி ஒப்பிப்பான் என்று எண்ணாத தேவகியோ, எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து சென்றிருந்தார்.

அவருக்கே அது பிழை என்று தெரியும் தான். ஆனால் தன் பெண் கேட்கும்போது இல்லை என்று சொல்ல மனம் வரவில்லை…

தன் கணவரின் வேலை தானே இவளுக்குக் கிடைத்திருக்கிறது. தன் மகன் மட்டும் பெரியவனாக இருந்திருந்தால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய வேலை தானே! ஒரு நாள் செய்தால் ஒன்றும் குறைந்து போய் விடமாட்டாள் என்ற எண்ணமே அவரை அப்படி செய்ய வைத்திருந்தது.

ஆனால் கணவன் விட்டுச் சென்ற கடனையும் அவள் தான் அடைக்கிறாள் என்பதை வசதியாய் மறந்து போனார்.

அவளுக்கும் சேர்ந்து தான் வாங்கி இருந்தார். ஆனால் முதல் முறை என்பதால் தேனிசை ஆசையாய் உண்ணும்போது தடுக்க முடியவில்லை…

நேற்று தான் அனலியின் முதல் சம்பள நாள். இதோ தந்தை இறந்து ஆறு மாதங்கள் சென்றிருந்தது.

இந்த இடைப்பட்ட நாளில் பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காது.

தந்தை அவசரத்துக்கென வாங்கி இருந்த கடன், அவர் இல்லை என்றதும் பூதாகரமாய் தெரிந்தது.

அவர் இருந்திருந்தால் நிச்சயம் சில வருடங்களில் அடைக்கக்கூடிய அளவு தான். ஆனால் அவர் இல்லை என்றதும் ஆளாளுக்கு வந்து பிரச்சனை செய்யத் தொடங்கி இருந்தனர்.

எங்கே தங்கள் பணம் வாராமல் போய் விடுமோ என்ற பயம், கூடவே இப்போதே வாங்கினால் தான் உண்டு என்ற ஐயமும் அவர்களை அவர்களது வீட்டை நோக்கிப் படையெடுக்க வைத்திருந்தது.

அதில் அவளது படிப்புக்காக வாங்கிய கடனும் இருந்ததால், எல்லாவற்றுக்கும் பேச்சு வாங்குவது அவள் என்றாகிப் போனாள்.

தேவகி எடுத்ததுக்கு எல்லாம் அவள்மீது பழி போடத் தொடங்கினார்.

கல்லூரி போக விடாமல் நிறுத்தினார். வருவோர் போவோரிடம் எல்லாம் புலம்பியே தள்ளி இருந்தார்.

தந்தை பெயரில் இருக்கும் அந்த ஒரு ஏக்கர் காணியை விற்று எல்லாவற்றையும் சரி செய்யலாம் என்ற யோசனை சொன்ன அனலியை, தேவகி அனலில் மட்டும் தான் இடவில்லை

தந்தையுடன் காவல்துறையில் பணியாற்றியவர்களின் உதவியுடன், அவரது மறைவுக்குப் பிறகு கருணை அடிப்படையில் அனலிக்கு அந்தக் கான்ஸ்டபிள் வேலை கிடைத்திருந்தது.

குடும்பப் பொறுப்பு இருபதே வயதான அவளிடம் வந்திருந்தது.

தந்தை உயிரோடு இருந்திருந்தால் அங்கே என்ன செய்திருப்பாரோ, இப்போது அவர் விட்டுச் சென்ற இடத்தில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

அந்த வேலையைப் பெறுவதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொண்டு, குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, தந்தை விட்டுச் சென்ற கடனையும் அடைக்க வேண்டிய பொறுப்பு அவளுடையதாகிப் போனது.

ஆனால், அவளுடைய உழைப்பையும் பொறுப்பையும் புரிந்து கொள்ள வேண்டியவர்களே, அவளது சம்பளத்தைத் தங்களுக்கான உரிமையாக நினைக்கத் தொடங்கியிருந்தனர்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு அவள் இழந்தது அவரை மட்டுமல்ல… தன் விருப்பப்படி வாழும் உரிமையையும் தான்.

தந்தை இருக்கும் வரை யார் அவளை ஒதுக்கினாலும் அவர் தான் அங்கே அவளை நெருகிப் பிடித்தவர், அவள் விருப்பத்துக்கு என்றும் மறுப்பு சொல்லியதே இல்லை…

அவளது படிப்பும் அதில் ஒன்று தானே! அவள் மனம் திறந்து அவளாக இருப்பதும் அங்கே தானே!

அவளோ வீட்டில் இருக்கும் ஒதுக்கத்துக்கு உடைந்து போகாமல் தன்னை தானே சந்தோசமாக வைத்துக்கொள்ளப் போராடும் இளம் வயதுப் பெண் அவள்…

அவளது விளையாட்டு குணம் வெளிப்படுவது என்னவோ அவளது தோழிகளிடமும் அவளது தந்தையிடமும் தான்.

ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவளோ தனது அறைக்குள் அடைந்து கொண்டாள்.

“விடு அனலி ஆசைக்கு சாப்பிட்டிருக்காங்க, பார்த்துக்கலாம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவளோ அதன் பிறகு தனக்கென மட்டும் சமைக்க விருப்பம் இல்லாமல் தண்ணீரைக் குடித்து விட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

மனதிலோ அந்த மாதக் கணக்கே ஓடிக் கொண்டிருந்தது. கடனுக்கென்று பெரிய பங்கு போயிருக்க, மீதம் இருந்ததை தம்பி தங்கை படிப்புக்கும், வீட்டு மளிகை தேவைக்கும் ஒதுக்கியவள், அவளுக்கென சிறிய தொகை ஒன்றை புதிதாய் உடை வாங்க வேண்டும் என எடுத்து வைத்திருந்தாள்.

இந்த ஒருமாதமாக வேலைக்குச் செல்லும் போது சீருடையுடன் சென்றாலும், சில நேரங்களில் வேறு இடத்துக்கு ரகசியமாக மாலாவுடன் செல்லும் நேரம் அவளது உடையிலேயே செல்வதால் புதிதாய் ஒன்று வேண்டும் என்று எண்ணியே பணத்தை ஒதுக்கி இருந்தாள்.

ஆனால் இதோ வீட்டு மளிகைக்கெனக் கொடுத்த பணத்தில் தான் தேவகி செலவு செய்திருக்கிறார் என்பது புரிந்தது.

அதனை எப்படியும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்று மனதில் ஓட, தனக்கென ஒதுக்கிய பணமே முதலில் யோசனைக்கு வந்தது.

அதனைக் கொடுத்து நாளை அவற்றை வாங்க சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் உறங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலையில் வழக்கம் போலவே சீக்கிரம் எழுந்தவள், குளித்து முடித்து சமையலறைக்குச் சென்றாள்.

தேவகி அப்போது தேநீர் போட்டுக் கொண்டிருக்க, அவருக்கு அருகில் சென்றவள்,

“சித்தி…” என்று அழைத்தாள்.

அவரோ “என்ன?” என்றார் பார்க்காமலே.

“நேத்து மளிகை சாமான் வாங்கப் பணம் கொடுத்தேனே வாங்கியாச்சா?” என்று கேட்டாள். ஒருவேளை அவர் சிரிதேனும் வாங்கி இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன்…

“என்ன நான் பணத்தை வீணா செலவு பண்ணிட்டேன்னு சொல்லிக் காட்டுறியா? அதான் அதுக்கு என்ன ஆச்சுன்னு இரவே தெரியுமே… ஓஹோ உங்க பணம்ன்னு சொல்லிக் காட்டுறீங்க அப்படி தானே!” என்க, அவளுக்கோ ஐயோ என்றாகிப் போனது.

விடிந்ததும் ஆரம்பித்து விட்டாரா என்ற எண்ணமே அவளிடம்…

‘ஐயோ, அனலி எஸ்கேப் ஆகிடுடி’ என்று மனம் எடுத்துக் கொடுக்க,

“அப்படி இல்ல சித்தி, வாங்கலனா பணம் தரலாம்னு தான் கேட்டேன்” என்றவள் தனது கைப்பையிலிருந்து ஒரு தொகையை எடுத்து நீட்டி,

“இத வச்சுக்கோங்க. இந்த மாசத்துக்கு தேவைப்படுற மளிகை வாங்கிக்கோங்க சித்தி” என்று கொடுத்தாள்.

அவள் நீட்டிய பணத்தை வாங்கியவர்,

“அதான பார்த்தேன், உனக்குன்னு வேற எடுத்து வெச்சிட்டு தான் கொடுத்தியா? நல்லா இருக்கே குடும்பமா ஒன்னா இருக்கும்போது என்ன பழக்கமோ? அது சரி குடும்பம்னு எண்ணம் இருந்தா தானே! எல்லாம் விதி என் புருஷன் இருக்கும் போதும் உனக்குத் தான் இரைச்சாரு, இப்போ இல்லாம போயும் உனக்குத் தான் எல்லாம் நடக்குது. எல்லாம் போகட்டும் கடனேன்னு சகிச்சிக்கிறோம், என் புள்ளைங்க படிப்புல கைய வெச்சிடாதமா?” என்றார், சிறிதும் அவளைப் பற்றி யோசிக்காமல்…

அந்தக் கேள்வியில் இருந்த நியாயமற்ற தன்மையை உணர்ந்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

“எடுத்து வைக்கிற அளவு எனக்கு என்ன சித்தி செலவு, ? இருக்கிறதை வச்சு சமாளிச்சுக்குவேன். தேனும் வருனும் என் பொறுப்பு. அவங்களைப் பத்தி நீங்க கவலைப்படத் தேவையே இல்ல” என்றவள் அதற்கு மேல் அங்கே நிற்காமல் தனது அறைக்குச் சென்றாள்.

அவள் வைத்திருந்த சிறிய தேவைகளில் ஒன்று மீண்டும் தள்ளிப் போயிருந்தது.

ஆனால் அதற்காக அவள் வருத்தப்படவில்லை. ஆனால், தனக்கென ஒரு சின்ன விஷயம் கூட வாங்க முடியாமல் போகும்போது மனதுக்குள் ஏதோ ஒரு வலி இருக்கத்தான் செய்தது. அது தனக்காக யோசிக்க ஒருத்தர் இல்லையே என்ற ஆதங்கம்…

அதை யாரிடமும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை அவள்…

அப்போது சரியாக அவளது கைப்பேசி சிணுங்கியது.

திரையில் மாலாவின் பெயரைப் பார்த்ததும் இதுவரை இருந்த சோர்வு கொஞ்சம் விலகி, அனலி மீண்டிருந்தாள்.

“ஹலோ மேடம்… காலையிலேயே எதுக்கு இந்த அறிவாளிக்கு போன்? ஏதாச்சும் கேஸ்ல டவுட்டா?” என்றவளின் குரலில் சட்டென்று குறும்பு வந்து ஒட்டிக்கொண்டது.

அவரிடம் அவளுக்கு எப்போதும் ஒரு நெருக்கம் தோன்றும். அவள்மீது இப்போதைக்கு அக்கறை காட்டும் ஜீவனல்லவா அவர்???

“ஏய் அனலி! உனக்கு இருக்க கொழுப்புக்கு அளவு இல்லாம போயிட்டு இருக்கு, பரத் சார் கிட்ட சொல்லி அந்த கொழுப்ப எப்படி குறைக்கிறேன் பாரு” என்க,

அதனைத் தூசு போல் தட்டியவளோ “அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல விஷயத்தை சொல்லுங்க மேடம்” என்றாள்.

அவரோ மீண்டும் அவளிடம் வாயைக் கொடுத்துச் சிக்கிக் கொள்ள விரும்பாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

“இன்னைக்கு நம்மளுக்கு ஒரு வேலை இருக்கு. ஸ்டேஷனுக்கு வந்ததும் ஒரு இடத்துக்குப் போகணும், ரெடியா வா” என்று சொல்ல, தயாராகி வரச் சொன்னதில் சாதாரண ஆடை ஒன்று வேண்டும் என்பது இந்த ஒரு மாத பழக்கத்தில் அவளுக்குப் புரிந்தது.

“ஓஹோ… அப்போ இன்னைக்கும் உங்க கூட சுத்தணுமா? சரி சரி… வர்றேன்” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்து அலமாரியில் இருந்த சாதாரண உடை ஒன்றை எடுத்தாள்.

சீருடையில் இருக்கும் அனலிக்கும், மாலாவுடன் வெளியே செல்லும் போது இருக்கும் அனலிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

அதைப் பார்த்து ரசிக்கவே அவளுக்கென்று ஒரு தோழி இருக்கிறாள். அது வேறு யாருமல்ல, மாலாவின் மகள் வர்ஷினி தான். அதில் ஏக பெருமை அவளுக்கு…

மாலா கூட ‘நீ ஒரு ஆளுன்னு உனக்கு எல்லாம் ஃபேன் ஃபொல்லொவர் வேற, என் பொண்ணு இப்படி மக்கா இருக்காளே!” என்று அடிக்கடி அனலியை வெறுப்பேற்றுவதும் உண்டு…

அவள் இந்த வேலையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, மாலாவின் உதவி மிகப்பெரியது.

அவர் செல்லும் இடங்களுக்கு, அதுவும் பாதுகாப்பான இடங்களுக்கு மட்டும் அவளை அழைத்துச் சென்று இந்த வேலையில் அவளுக்கு ஆர்வம் வரக் காரணமே அவர் தான்.

வாழ்க்கை அவளுக்கு எத்தனை பொறுப்புகளைக் கொடுத்திருந்தாலும், அந்த இருபது வயதுப் பெண்ணின் குறும்புகளை மட்டும் இன்னும் முழுமையாகப் பறித்துவிடவில்லை.

அதை யாருக்காகவும் இழக்க அவள் தயாராகவும் இல்லை!…

அதனைப் பறித்துக் கொள்ள, இடம் மாறி வந்துகொண்டிருக்கும் அவனால் முடியுமா என்ன???

அப்படி முடிந்தால், அதனை மீட்டுக் கொடுக்க, அவன் தன்னையே கொடுக்க நேரிடும் என அவனுக்கு யார் சொல்வார்????

__________________________

“நீங்க தான் சொல்லணும், எனக்கு நல்லாவே கேட்கத்தான் செய்யிது. உங்களுக்குத் தான் காது போயிடிச்சு போல” என்று எதிரில் அழைப்பில் இருந்தவரிடம் அலைபேசியில் பேசியபடியே காரை லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் ஆதவ் மதிமாறன்.

முப்பத்தி இரண்டு வயது நிரம்பிய காவல் அதிகாரி, காவல்துறையில் தனது திறமையாலும் துணிச்சலாலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவன். பதவியைவிடப் பொறுப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பவன்.

குற்றவாளிகளிடம் அவனது அணுகுமுறை எப்போதும் ஒன்றுதான். தவறு செய்தவன் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது!

அதே நேரத்தில், எதிராளியைப் பேச்சிலேயே கலங்க வைப்பதில் அவனுக்கு நிகர் அவனே!

அப்படிதான் இன்று அவனிடம் தானாகவே  வந்து மாட்டிக் கொண்டார் சண்முகநாதன்.

“ஆதி… நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன பேசிட்டு இருக்க?” என்று  கோபமாய் கேட்க,

இவனோ “அதான், நீங்க என்ன சொல்றீங்கன்னு நல்லாவே கேட்குதுனு சொல்றேனே மிஸ்டர் சண்முகநாதன்!” என்றான் அவர் கோபத்தை சற்றும் சட்டை செய்யாமல்…

அதில் பொறுமை இழந்தவரோ “டேய்! கொஞ்சமாவது நான் சொல்றதைப் புரிஞ்சிக்கோடா. எத்தனை நாளைக்கு இப்படியே தனியா இருக்கப் போற? ஒரு தடவையாவது வீட்டுக்கு வந்து எங்களைப் பார்த்துட்டுப் போயேன் உன் பாட்டி சொல்லுற போல நீ என்ன மாதிரியே இருக்கியான்னு நான் பார்க்க வேணாமா?”  என்று கேட்க,

“உங்களுக்கு அந்த நினைப்பு வேறயா? நான் எல்லாம் ஹேண்ட்ஸம் போலீஸ் ஆஃபீஸர் உங்கள மாதிரி கிழம் இல்ல” என்றவன் அவன் உருவத்தைக் கார் கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டான்.

அவனுக்கே அவன் தோற்றத்தில் சற்று திருப்தி தான். எப்போதும் காக்கி உடையில் இருப்பவனோ இன்று கருப்பு நிற ஷர்ட்டின் கைகளை முழங்கைக்கு மேலே மடித்துவிட்டிருந்தான்.

இடது கையில் இருந்த விலையுயர்ந்த கடிகாரம் அவனது நேர்த்தியான தோற்றத்துக்கு மேலும் மெருகூட்டியது. அடர்த்தியான கேசம், கூர்மையான விழிகள், அளவான மீசை, தாடியென ஆறடி உயரத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தவனின் முகத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் அந்த அலட்சியப் புன்னகை  கூடத் தனி அழகு.

பார்ப்பவர்களுக்கு அவன் ஒரு திமிர் பிடித்தவனாகத் தோன்றலாம். ஆனால் அவனை நன்கு அறிந்தவர்களுக்குத் தான் தெரியும், அந்தத் திமிருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் குறும்புத்தனமும், யாரிடமும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காத அவனது பிடிவாதமும்…

தொழிலில் நேர்த்தி, கடமையில் கண்டிப்பு, பேச்சில் நக்கல் என மூன்றையும் சரிவிகிதத்தில் கொண்டவன்.

அன்று நல்ல மனநிலையில் இருந்தான் போலும், பேச்சும் சரளமாய் தான் வந்தது.

அதுவும் அவர் அடுத்து கேட்ட அந்தக் கேள்வியில் காணாமல் போய் இருந்தது.

“அது உன் வீடு ஆதி. உன்னைப் பெத்தவங்க, உன் கூடப் பிறந்தவ இருக்கிற இடம். எவ்வளவு நாள்தான் அவங்களையெல்லாம் இப்படித் தவிக்க விடுவ?” என்க,

“ஓஹோ! அப்போ நான் தான் எல்லாரையும் தவிக்க விட்டுட்டு இருக்கேனா? என்ன நம்பி இருந்தவள அழவெச்சு அனுப்பும் போது அவ தவிச்ச தவிப்பு எல்லாம் எதுவுமே இல்ல அப்படித்தான?” என்றவனது குரலில் சட்டென்று மாற்றம் தெரிய, மறுமுனையில் சில நொடிகள் அமைதி நிலவியது.

“நான் அப்படிச் சொல்ல வரலடா…” என்று அவர் இழுக்க,

“வேற எப்படி சொல்ல வரீங்க தாத்தா?  அவங்க செஞ்ச எல்லாத்தையும் மறந்துட்டு உங்க கூடவே வந்துடனும் அவ்வளவு தான்ல உங்களுக்கு… அவளை வேணான்னு சொன்ன  யாரும் எனக்கும் வேணா” என்றான். அவன் குரலில்  நடந்தவை அத்தனையும் இன்று நடந்ததைப் போல் அத்தனை காரம்….

அவன் கோபம் உணர்ந்தவர் “இவ்வளவு நாள் எங்கயோ போய் தள்ளி இருந்த, நாங்களும் உன் விருப்பதுக்கு விட்டோம். ஆனா இப்போ இங்க வர்றல்ல அப்பயாச்சும் வரலாம்ல. கோட்ல கூட கொலையே செஞ்சாலும் எழு வருஷம் தான் தண்டனை, நீ எங்கள பத்து வருசத்துக்கும் மேல தண்டிச்சிட்டு இருக்க ஆதி. நீ இங்க வர வேணாம் நானே வந்து உன்ன பார்க்குறேனே! நான் மட்டும்” என்று கிட்டத்தட்ட அவனிடம் மன்றாடவே செய்தார்.

அவனுக்கு அந்த வார்த்தைகளில் இருந்த ஏக்கம் புரிந்தாலும், புரியாதவன் போல சாலையில் கவனத்தைப் பதித்தான்.

அவனோ “தாத்தா, மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. நான் ஏற்கனவே சொல்லிட்டேன். என்னால அங்க வர முடியாது, அன்ட் யாரையும் பார்க்கவும் முடியாது” என்றான் அந்த யாரையும் என்பதை அழுத்தி, தீர்க்கமான குரலில்…

அவரும் அன்று அவனை விடுவதாய் இல்லை போலும், “ஏன் முடியாது?  நான் உன்னப் பெத்தவன பெத்தவன்டா” என்க,

“அதுல உங்களுக்கு பெருமை வேறையா? அவரை பெத்ததுக்கு பெருமை எல்லாம் படலாமா என்ன?” என்று நக்கலாய் வந்து விழுந்தது அவன் வார்த்தைகள்…

அதில் இருக்கும் காரணம் அவர் அறிந்தது தானே!

“ஆதி…” என்று அவர் இழுக்க, இவனுக்கு சற்று பாவமாய் போனதோ என்னவோ?

“சரி, விடுங்க. எதுக்கு வீணா பழைய கதையெல்லாம் பேசிட்டு? உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க. மருந்து மாத்திரையை ஒழுங்கா எடுத்துக்கோங்க. அதுதான் என்னால சொல்ல முடியும்” என்றான்.

நடந்தவற்றில்  நேரடியாய் இவர் பங்கு இல்லை என்பதாலேயே இவர் மீது சற்று கோபம் குறைவு அவனுக்கு…

இவரோடு மட்டும் பேசுவதற்கான காரணமும் அது தான். பெரும்பாலும் அவை வருடத்துக்கு இரண்டு மூன்று தடவை என்றே இருக்கும். அதுவும் அவன் விரும்பும் நேரம் மட்டுமே!

மீண்டும் அவர் “ஆதி” என்று இழுக்க,

“ஆதி தான், சொல்லுங்க” என்றான்.

“ஒரு தடவை மட்டும் அனுமதி கொடுடா உன்னைப் பார்க்கணும் போல இருக்கு” என்றார் மெல்லிய குரலில்…

இம்முறை அவனால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

சாலையில் பார்வையைப் பதித்திருந்தவனது விரல்கள் ஸ்டியரிங்கை இறுகப் பற்றின.

ஒரு காலத்தில் அந்த வீட்டின் சுவர்களுக்குள் அவனது சிரிப்பும், குறும்புகளும் நிறைந்திருந்தன. தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு அவன் அடித்த லூட்டிகளுக்கு அளவே கிடையாது. அவனை அடக்குவதற்கென்றே ராணுவக் கண்டிப்புடன் நின்ற சண்முகநாதனிடம் வேண்டுமென்றே வம்பிழுத்து, கடைசியில் தாயின் பின்னால் ஒளிந்து கொள்வான்.

அன்று அந்த வீட்டில் அவனுக்குப் பிடிக்காத ஒரே மனிதர் சண்முகநாதன் மட்டும்தான்.

ஆனால் இன்று???

அந்த வீட்டில் அவனுக்குப் பிடித்திருந்த அத்தனை உறவுகளையும் விட்டு விலகி நிற்க வேண்டிய நிலை. எல்லாம் அந்த ஒருத்திக்காய்…

“தாத்தா, என்னை மறுபடியும் அந்த வீட்டுக்கு வரச் சொல்லி வற்புறுத்தாதீங்க. சில இடங்களுக்குத் திரும்பிப் போக முடியாது. அதுவும் சில நினைவுகள் உயிரோட இருக்கிற வரைக்கும், யாரையும் என்னால பார்க்க முடியாது” என்றவன் மேலும் ஏதோ சொல்ல வர,

“நடந்தது நடந்துபோச்சுடா. அதுக்காக…” என்ற சண்முகநாதனின் குரல் இடையிட்டது…

அவ்வளவு தான் “போதும் தாத்தா!” என்று கோபமாய் சொன்னவனது குரலோ சட்டென்று உயர்ந்திருந்தது.

“நடந்தது நடந்துபோச்சுனு சொல்லிட்டா எல்லாமே சரியாகிடுமா? நான் இழந்தது திரும்பக் கிடைச்சிடுமா? இல்ல, என்னை விட்டுப் போனவ திரும்பி வந்துடுவாளா?” என்று கேட்க, மறுமுனையில் பதில் இல்லை.

அதற்கு  மேல் பேசப் பிடிக்காமல் “எனக்கு வேற வேலை இருக்கு தாத்தா. அப்புறம் பேசுறேன்”  என்று அழைப்பைத் துண்டித்தவனோ, காரின் வேகத்தைக் கொஞ்சம் அதிகரித்து சாலையில் கவனத்தைப் பதித்தான்.

சில நொடிகள் அவனது முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

பிறகு காரின் கண்ணாடி வழியே வெளியே தெரிந்த வானத்தை பார்த்தவனது உதடுகள் மெல்ல, “ஏன் தான் அன்னைக்கு உன்னை விட்டுட்டு போனேனோ?” என்பதாய் அசைந்தன.

அந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல இன்றுவரை யாருமில்லை.

குற்றம் தொடரும்… 

error: Content is protected !!
Scroll to Top