இருள் நிழலாய் நானே 3

இருள் நிழலாய் நானே 3

மேம்பாலத்தின் மீது நின்றிருந்த சமர் ஆயாசமாக பார்த்திருந்தான்.

நான்கு வாரத்தில் நான்கு கொலைகள்.

ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

நெற்றியை தேய்த்தவன் மெல்ல பாலத்திலிருந்து பக்கவாட்டு மண் சரிவில் இறங்கினான்.

“எனி இன்ஃபோ?”

அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த மருத்துவ குழுவுடன் ஆலோசித்தான்.

“சேம் பேட்டர்ன்… அப்படி சொல்ல ஒரு தடயமும் இல்லை சார். ஏஜ் கூட மாறுபடுது” என்ற மருத்துவர், “வேற வேற ஆளுங்க செய்திருக்கணும். இல்லையா? ஒரே ஆளு மாட்டிக்கக்கூடாதுன்னு பக்காவா வேற வேற முறையில் பண்ணனும்” என்றார் சுனில்.

“என்ன மோட்டிவ்?”

“ஷீ இஸ் ரேப்ட் அண்ட் மர்டர் சார்” என்றான் சுனில்.

“வாட்..?” சமரிடம் அப்படியொரு அதிர்வு.

இதற்கு முந்தைய கொலைகள் யாவும் கற்பழிப்பால் ஏற்படவில்லை. அதுவே தற்போதைய அதிர்விக்கான காரணம். ஏனெனில் முந்தைய மூன்று கொலைகளும் இளம் பெண்கள் அல்ல. அதில் ஒரு ஆணும் அடக்கம்.

“கில்லர் என்னதான் சொல்ல ட்ரை பண்றான்?” என்ற சமர், அப்போது தனது பத்திரிகை நண்பர்களுடன் மகி வருவதை கண்டு மேலேறினான்.

“ஆர் யூ ஓகே?” பார்வையால் மகி கேள்வி கேட்டிட, சமர் விழி மூடி திறந்து பதில் அளித்தான்.

இதுபோன்ற விடயங்களுக்கெல்லாம் சமர் பயம் கொள்ளமாட்டான். அவனுடைய பயமே முற்றிலும் வேறு. அனைத்து பயங்களிலிருந்தும் மாறுபட்டது. அது தெரிந்தும் அவனது நலன் மட்டுமே கருத்தில் கொண்டு மகி கேட்டிருந்தாள்.

நான்கு வாரங்கள்… முழுதாக ஒரு மாதம் முடிந்துவிட்டது. சின்ன அடி கூட இக்கொலைகளில் முன் வைத்திட முடியவில்லை. அது ஏனென்றும் சமருக்கு தெரியவில்லை. அனைத்து விதமான கோணங்களிலும் அலசி ஆராய்ந்துவிட்டான். இதற்கு முன்னரான மூன்று கொலைகளும் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் இதேபோன்று கோணியில் கட்டி, நகரத்தின் வேறு வேறு மேம்பாலங்களுக்கு கீழே போடப்பட்டிருந்தது.

இறந்த பெண்ணின் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சீனு மருத்துவர் சுனிலுடன் சேர்ந்து அந்த வேலையில் ஈடுபட்டிருந்தான்.

“என்னண்ணா ஒன்னும் உருப்படியா கிடைக்கலையா?” மகி சீனுவிடம் கேட்டாள்.

“உங்களுக்கு எதும் தகவல் கிடைச்சா சொல்லும்மா. சாருக்கு யூஸ் ஆகுதா பார்ப்போம்” என்ற சீனுவின் பார்வை பாலத்தின் மேல் யோசனையோடு நின்றிருந்த சமரை தொட்டு வந்தது.

“அதெல்லாம் கரெக்டா பாயிண்ட்டை பிடிச்சிடுவான் அண்ணா அவன்” என்ற மகி “இந்த கேஸ் கொஞ்சம் சிக்கல் தான் போல… எங்களுக்கும் ஒரு நியூசும் ஒழுங்கா கிடைக்கல” என்றாள்.

“அப்போ நான் கிளம்புறேன். ஈவ்வினிங் வந்து ரிப்போர்ட் வாங்கிக்கோங்க சீனு” என்று சுனில் விடைபெற,

“உங்க ஆளுங்க மைக்கை பிடிச்சுகிட்டு சாரை வளைச்சிட்டாங்க. உன் பங்குங்கு நீயும் போய் எதையாவது கேளு” என்றான் சீனு.

அவனை முறைத்த மகி,

“என் வேலை எல்லாம் களத்தில் இறங்கி நியூஸ் இன்வெஸ்டிகேட் பண்றது தான். மைக் பிடிச்சு கேள்வி கேட்கிறது இல்லை” என்றாள்.

“ம்ம்… கல்யாணம் கேள்விப்பட்டேன். எனக்கு அழைப்பு இல்லையா?”

“உங்களுக்குதான் முதல் அழைப்பு… நாளைக்கு அம்மன் கோவில் வந்திடுங்க. உங்க சாருக்கும் எனக்கும் கல்யாணம். இன்னும் உங்க சாருக்கே இந்த விஷயம் தெரியாது. மத்த டிடெயில்ஸ் மெசேஜ் பண்றேன்” என்ற மகி, தான் சொல்லியதில் சீனு அதிர்ந்து நிற்பதையும் பொருட்படுத்தாது, “எங்க ஆளுங்க கிளம்புறாங்க. நாளைக்கு பார்க்கலாம்” என்று சென்றிருந்தாள்.

“சீனு…”

பாலத்தின் மேலிருந்து சமர் நான்கு முறை கத்தி அழைத்து விட்டான். அதன் பின்னரே மகி சொல்லிச்சென்ற விஷயத்திலிருந்து சுயம் மீண்டு வேகமாக மேலேறி சமரின் அருகில் வந்தான் சீனு.

“என்னடா யோசனை?”

“மகி ஒன்னு சொல்லிட்டுப் போனாள். அது கொஞ்சம் ஜெர்க் ஆகிடுச்சு.”

“அப்படியென்ன சொன்னா அவ?” என்ற சமரின் பார்வை அவ்விடத்தை பார்வையால் சுற்றிக் கொண்டிருந்தது.

சீனு எப்படி சொல்வதென்று தயங்க…

“நாங்க லவ் பண்றோம் சொன்னாளா?” என சமரே கேட்டான்.

“எதே… லவ்வா?”

“நீ ஏன்டா ஷாக் ஆகுற?” என்ற சமர் சீனுவின் பதிலை எதிர்பார்க்கவில்லை.

மேம்பாலம் தொடங்கும் இடத்தில் உள்ள மின் கம்பத்தில் போக்குவரத்து கண்காணிப்பு காமிரா இருந்தது. அதனை காட்டிய சமர், “அந்த ஃபுட்டேஜ் கிடைக்குதா பாருடா” என்றான்.

“நைட் 3 மணியிலிருந்து வேணும். நான் கிளம்புறேன். நீ கண்ட்ரோல் ரூம் போய் ஃபுட்டேஜ் வாங்கிட்டு, சீக்கிரம் ஸ்டேஷன் வா” என்றான் சமர்.

“நீ தனியா போயிடுவியா டா?”

சீனு கேட்ட பின்பே சமருக்கு உண்மை உரைத்தது.

“ம்ப்ச்… நானும் உன்னோடவே வரேன் வா” என்று சீனுவையும் கூட்டிக்கொண்டு வண்டியை கிளப்பிய சமர், பாலத்தின் நடுவில் உள்ள டிவைடர் கற்கள் நகர்த்தி இருப்பதை கண்டு, “இதை நகர்த்தி வச்சிட்டு போற அளவுக்கு அப்படி என்ன அவசரம்… உயிரோட மதிப்பு தெரியுதா இவனுங்களுக்கு” என்று கடிந்து கொண்டதோடு அதனை சரிசெய்துவிட்டே சென்றான்.

போக்குவரத்து கண்காணிப்பு அலுவலகம் சென்று வேண்டிய தகவல்களை பெற்றுக்கொண்டு காவல் நிலையம் திரும்பினான்.

“கவுன்சிலிங் ஒழுங்கா போறியா நீ?”

வரும் வழியில் சீனு சமரிடம் கேட்டிருந்தான்.

“மகி விடமாட்டாளே! போயிட்டுதான் இருக்கேன். ஒரு இம்புரூவ்மெண்டும் இல்லை” என்ற சமர், “இனி இந்த கவுன்சிலிங்லாம் தேவைப்படாது நினைக்கிறேன் டா” என்றான்.

“அப்போ கல்யாணம் உண்மை தானா?”

“என்ன கல்யாணம்?”

“மகி சொன்னாளே” என்ற சீனு, “என்கிட்டவே மறைக்கிறல நீ” என்று குறைபட்டான் சீனு.

“சேட்டை உன்கிட்ட என்ன சொன்னான்னு தெரியல” என்ற சமர், “மேடம் இன்னைக்குதான் என் மேல லவ் ஃபீல் பண்ணியிருக்காங்க. பண்ணதும் வந்து என்கிட்ட சொல்லியாச்சு. இதுக்கு அப்புறம் தான் நிறைய சமாளிக்க வேண்டியது இருக்கு. அத்தை, மாமாகிட்ட பேசணும். ரூபேஷ் வீட்டில் எப்படி சொல்லி, ஏற்பாடிகியிருக்கும் கல்யாணத்தை நிருத்தன்னே தெரியல” என்றிருந்தான் ஆயாசமாக.

“கூடவே இருந்ததால் இதுதான் லவ்வுன்னு மகிக்கு புரியல போல. லேட்டாகிருச்சு. ஒருவேளை உங்களுக்குள்ள சின்னதா சண்டையோ பிரிவோ வந்து விலகி இருந்திருந்தா முன்னவே தெரிஞ்சிருக்கும்” என்ற சீனு, “எப்படித்தான் சின்ன சண்டை கூட போட்டுக்காம இருக்கீங்களோ?” என்றான். வியப்பாக.

சமரிடம் கர்வ புன்னகை. அதற்காகத்தான் மொத்தமாக உயிர் நீங்கி சென்றிருந்தாளோ பின் நாட்களில்.

காவல் நிலையம் வந்த அரை மணி நேரத்தில் இன்றைய கொலையை செய்தது யாரென்று சமர் கண்டுபிடித்துவிட்டான்.

சமர் கொலையாளியை நெருங்கிய கணம், மேலிடத்திலிருந்து அழைப்பு. எதற்காக இந்த அழைப்பு என தெரியாமலா இருப்பான்… இத்தனை வருட காவல்துறை பணி அனுபவத்தில்.

யாரின் அழைப்பையும் சமர் ஏற்கவில்லை. அவன் எடுக்கவில்லை என்றதும், சீனுவை தொடர்புகொள்ள முயல…

“அதை ஆஃப் பண்ணி வைடா” என்று கடிந்து கொண்டான் சமர்.

இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் நால்வர் பிடிபட்டனர்.

அவர்களை காவல் நிலையம் கொண்டு வராது, குற்றவாளிகளை தன்னுடைய பாணியில் விசாரிக்க என்றே யாருக்கும் தெரியாது வைத்திருக்கும் தனக்கான இடத்தில் நால்வரையும் அடைத்து வைத்தான்.

“நாம இவனுங்களை அரெஸ்ட் பண்ணிட்டோம் யாருக்கும் தெரியக்கூடாது. நைட் முழுக்க இங்கவே கத்திட்டு கிடக்கட்டும். ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம, அவசரத்துக்கு போக முடியாம கத்தியே சாகட்டும்” என உடன் வந்த சீனுவையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் வந்த பின்னரே, தனது உயர் அதிகாரியின் அழைப்பை ஏற்றான் சமர்.

“சொல்லுங்க சார்?” குரலில் அத்தனை பவ்யம்.

சீனு சிரிதத்படி நகர்ந்திட்டான்.

“லாடம் கட்டனும்ன்னா சொல்லுங்க சீனு சார்…” என்று சித்ரா சொல்ல…

“சார் என்ன பிளான் பண்ணியிருக்கார் தெரியல சித்ரா. அவரே சொல்வார். அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்” என்றான் சீனு.

“அட்டாப்சி ரிப்போர்ட் வாங்க போனேனே! இறந்துபோன பொண்ணோட உடம்பை பார்த்தேன். மனசாட்சியே இல்லாம பண்ணியிருக்கானுங்க” என்ற சித்ரா, “ரிப்போர்ட் பார்த்தீங்களா?” எனக் கேட்டு, “பொண்ணு உயிர் போன பிறகும் விட்டு வைக்கல அந்த நா*ங்க” என்றார். அதீத கோபத்தோடு.

“போலீசா இருந்தும்… ஒரு பொண்ணா எனக்கே பயம் வருது சீனு சார்” என்ற சித்ராவின் கண்கள் கலங்கியிருந்து.

“அரெஸ்ட்…”

கமிஷ்னர் வார்த்தையை முடிக்கும் முன்னர் சமர் பதில் கொடுத்திருந்தான்.

“நான் இன்னும் அரெஸ்ட் பண்ணல சார். இறந்து போன பொண்ணோட பாடியை எக்சாமின் பண்ண டாக்டர் கிட்ட தகவல் கேட்டுட்டு இருந்தேன். அதான் உங்க கால் எடுக்க முடியல” என தடையின்றி கூறினான்.

அவன் சொல்வது அப்பட்டமான பொய்யென்று கமிஷ்னருக்கும் தெரியும். ஆனால் வெளிப்படையாகக் கேட்டிட முடியாதே.

“அவங்க நாலு பேரையும் காணல… அதான் அரெஸ்ட் பண்ணிட்டிங்களா கேட்க கால் பண்ணேன்.” கமிஷ்னரிடம் தடுமாற்றம்.

“எந்த நாலு பேர் சார்?” சமர் தன் கோபத்தை குரலில் காட்டாது, கை விரல்களை உள்ளங்கை குவித்து கட்டுப்படுத்தினான்.

“தெரியாத மாதிரி கேட்காதீங்க சமர். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கு தெரியும்.”

“இல்லை சார்… தெரியல.” பட்டென்று சொல்லியிருந்தான்.

இதற்கு மேல் அவனிடம் வாதாட முடியாதென அவரே அழைப்பை முறித்திருந்தார்.

“எப்படி இப்படி மனசாட்சியே இல்லாம அவனுங்களுக்கு சப்போர்ட் பண்ண வரார் இவரு” என்று பொருமியவன் நேரத்தை பார்த்தவனாக மகிக்கு அழைத்தான்.

“என்னடி இன்னும் வரல? வேலையா இருக்கியா?”

“எஸ்… வன் இம்பார்டெண்ட் வொர்க். வெயிட் பண்ணு வரேன்” என்றவள் சமர் அடுத்து பேச வருவதையும் கேட்காது வைத்திருந்தாள்.

‘என்னைவிட அப்படியென்ன முக்கியம்?’ என யோசித்தவன், “இந்த கொலையை இன்வெஸ்டிகேட் பண்ணுவாளா இருக்கும்” என சொல்லிக்கொண்டவனாக, பிடித்து வைத்திருக்கும் நால்வரும் முந்தைய கொலைகளில் எப்படி சம்மந்தப்பட்டிருப்பர் என ஆராயத் துவங்கினான்.

நேரம் தான் கடந்தது மகி வரவில்லை.

“இன்னும் என்ன பன்றாள்?” எழுந்து வந்து காரிடாரில் நடக்கத் துவங்கினான்.

“என்ன சார், மேடம் வரலையா?” எனக் கேட்டு அவனருகில் வந்த மணி, “நான் டிராப் பண்ணட்டுமா சார்” எனக் கேட்டார்.

“இல்லை வேண்டாம் சார். கால் பண்ணேன். வந்திடுவாங்க” என்றவன் மீண்டும் தன்னிருக்கையில் சென்று அமர்ந்தான்.

“ஏன் சார் இவரு வீட்டுக்கு போக, வர போலீஸ் வண்டி யூஸ் பண்ண யோசிக்கிறார்?” தன்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை மணி சீனுவிடம் கேட்டார்.

அவர் இங்கு பணியில் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது.

சீனுவும், சித்ராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

‘போலீஸ் வண்டியில் போனா… வீட்டு வாசல் வரை தானே நீங்க அவன் கூட இருப்பீங்க!’ என நினைத்த சீனு, “பெர்சனலுக்கு ஆபீஸ் வண்டியை யூஸ் பண்ணமாட்டார்” என்றார்.

“ஹோ… குட்” என்று மணியும் சமரை மெச்சுதலாகப் பார்த்து நகர்ந்தார்.

சமர் மகியை எதிர்பார்த்து அடிக்கடி வாசலை பார்ப்பதுமாக இருக்க,

“நான் வரட்டுமாடா? மகி வரவரை கூட இருக்கேன்” என்றான் சீனு.

“இல்லைடா… வந்திடுவாள்” என்ற சமர், “கொஞ்சம் பக்கத்தில் உட்கார்” என தனக்கு நெருக்கமாக நாற்காலியை நகர்த்தி சீனுவை அமர்த்திகொண்டான்.

இரவு பணிக்கான காவலர்கள் நால்வரை தவிர யாருமில்லை. அவர்களும் தத்தம் வேலையை செய்து கொண்டிருக்க, சமரின் இருக்கை இருக்கும் பகுதியில் தற்போது அவனும் சீனுவும் மட்டுமே.

“சாரி… சாரிடா.”

“அடி வாங்குவ நீ” என்ற சீனு, “எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் சமர். அப்கோர்ஸ், எனக்கும் புரியுது… நீ நிறையவே முயற்சி எடுக்குற… முழுசா எப்போ வெளியில் வருவ? உன் மனசை முதலில் நம்ப வை” என்று சமரின் கைகளில் தட்டிக் கொடுத்தான்.

“மகியை தான் ரொம்பவே கஷ்டப்படுத்துறேன்” என்ற சமர், “அவளுக்காகவாவது சீக்கிரம் சரியாகனும் சீனு. எனக்காகன்னு அவளுக்கான நேரம் எல்லாத்தையும் வேக வேகமா செய்றாள். சாப்பிடுறது உட்பட” என்றவனின் முகம் அத்தனை கசங்கி இருந்தது.

“இதை அவ கேட்டா… உன்னை ஓடவிட்டு உதைப்பாள். அவ உன்னை வேறையா பார்க்கல மச்சான். ஃபிரியா விடு” என்று சீனு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அத்து” என்ற கூவலோடு உள்ளே ஓடி வந்தாள் மகி.

“ஹாய்… அண்ணா…” என்றவள், சமர் அருகில் சீனு அமர்ந்திருப்பதற்கான காரணம் தெரியும் என்பதால், “தேன்க்ஸ் அண்ணா” என்றும் சொல்லியிருந்தாள்.

“எங்களுக்கும் அவன் ஃபிரண்ட் தான்ம்மா. நாங்களும் பார்த்துப்போம்” என்றான். முறைத்துக்கொண்டே.

“ஓகே… ஓகே… சில். நாளைக்கு சண்டை போட்டுக்கலாம்” என்றவள், “காலையில் சொன்னல… மார்னிங் செவன் தர்ட்டி வந்துடுங்க” என்றதோடு, “நீ என்னடா கிளம்பாம பார்த்திட்டிருக்க” என சமரின் கையை பிடித்து இழுத்ததோடு, “சித்ரா அக்கா, சீனுண்ணா சொல்லுவாங்க. வந்திடுங்க” என்று வெளியில் வந்தாள்.

மகியிடம் அத்தனை வேகம்.

“காலையில் என்ன? எங்க கூப்பிடுற அவங்களை? எதுக்கு இவ்வளவு வேகம்?” என கேள்விகளை அடுக்கினாலும் அவளின் இழுப்பிற்கு வந்தான் சமர்.

“உட்காருடா… நிறைய வேலை இருக்கு” என்றவள், தன் பின்னால் சமர் அமர்ந்ததும் வண்டியை அதீ வேகத்தில் செலுத்தினாள்.

“ஹேய் லட்டு மெதுவா போடி… குறுக்க யாரும் வந்திடப் போறாங்க” என்ற சமர், “இன்னைக்கு நடந்த கொலை ரொம்ப பாதிச்சிடுச்சோ? நியூஸ் கலெக்ட் பன்றண்ணு என்னைக்கூட மறந்துட்ட போல” என்றான்.

“அந்தபொண்ணு… வருத்தமாதான் இருக்கு. கண்டிப்பா அக்யூஸ்ட்டை நீ பிடிச்சிடுவ… பட் இப்போ என்னோட முக்கியமான வேலையே வேற” என்றவள், புகழ்பெற்ற துணி கடையின் முன்பு வண்டியை நிறுத்தியிருந்தாள்.

“அவ்ளோ சீரியஸ் மேட்டரை விட, உனக்கு துணி எடுக்கிறது தான் அந்த முக்கியமான வேலையா?” கொஞ்சமே கொஞ்சம் அவனிடம் அவள் மீது கடுப்பு.

அவனது மகி இது இல்லையே! இந்நேரம் செய்தி சேகரிக்கிறேன் என பாதி வழக்கை தோண்டி துருவி குற்றவாளி வரை கண்டுபிடித்து காவல்துறைக்கே சவால் விடும் வகையில் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டிருப்பாள். இதுபோன்று அலட்சிய பதில் வந்திருக்காது.

“நான் எப்போ சீரியஸ் இல்லைன்னு சொன்னேன்” என்றவள், “தொழிலை விட சொந்த விஷயங்கள், நம்மளோட வாழ்க்கை முக்கியம் தானே? அதுக்காகவும் நேரம் ஒதுக்கணுமே” என்றதோடு, “ஈவ்வினிங்கே நீ அவனுங்களை அரெஸ்ட் பண்ணிட்ட தெரியும். அப்புறம் வீணா நான் எதுக்கு அலட்டிக்கணும். அதான் சொந்த வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டேன்” என்றாள்.

“அப்படியென்ன வேலை?”

“சொல்றேன்… முதலில் உள்ள வாடா” என்று கடைக்குள் அழைத்துச் சென்றவள், பட்டு பிரிவில் அவனை நிறுத்தி… “நல்ல புடவையா ஒன்னு செலக்ட் பண்ணு வந்திடுறேன். அப்படியே நீயே பே பண்ணிடு” என்று மற்றொரு பக்கம் சென்றாள்.

“மகி யாருக்கு? நான் ஏன் செலக்ட் பண்ணனும்?” என்று கேட்டு பதில் வராத போதும், அவள் சொல்லியதை செய்திருந்தான்.

அந்நேரம் அவளும் கையில் புது ஆடைக்கான பையுடன் அவனிடம் வந்து சேர்ந்தாள்.

“என்ன ட்ரெஸ் அது?” எனக் கேட்டவனுக்கு அவள் பதில் சொல்லவில்லை.

“என்ன நீ எதுவும் சொல்லமாட்டேங்கிற?”

“என்ன புதுசா கேள்வியெல்லாம் கேட்கிற? ஹான்… அதுக்குள்ள புருஷன் மோடுக்கு ஃபார்ம் ஆகுறீங்க” என்று எகிறியவள், “நானே சொல்லுவேன். கொஞ்சம் பொறுமையா இரு” என்றாள்.

அடுத்து அவனை நகை கடைக்கு அழைத்துச் சென்றவள், அவனை வெளியவே நிற்க வைத்துவிட்டு,

“உன்னை கூப்பிட வரும் முன்னவே வாங்கி பில் போட்டு வச்சிட்டேன். இப்போ பே பண்றது மட்டும் தான். நீ இங்கே நில்லு” என அவனது வங்கி அட்டையை மட்டும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவள், பத்து நிமிடத்தில் வெளியில் வந்தாள்.

“ஏதும் பிளான் பன்றியா?”, சமர்.

“என்ன பிளான்?”, மகி.

“அதான் சொல்லமாட்டேங்கிறியே!”

அப்போது மகியிடம் சின்ன சிரிப்பு மட்டுமே.

“போடி” என்றவன், “ரொம்ப பசிக்குது. சாப்பிட்டு போவோம்” என வண்டியின் முன் அமர்ந்து இயக்கினான்.

உணவகம் சென்று வீடு வந்து சேர்ந்தனர்.

வண்டியை கேட்டிற்குள் தள்ளி நிறுத்திய சமர், “இப்போ தூங்கியிருப்பாங்கல? மார்னிங் சொல்வோமா?” எனக் கேட்டான். மகியின் வீட்டை பார்த்து.

“சொல்லிக்கலாம் வாடா” என்று கதவினை திறந்தவள், “சீக்கிரம் குளிச்சிட்டு வா. தூங்கலாம்” என்று அறைக்குள் நுழைந்தாள்.

“நீ தூங்கு லட்டு. இங்க தானே இருக்க. நான் வந்து தூங்கிக்கிறேன்” என்றவன் குளியலறை புகுந்தான். அவள் காலையில் செய்த சில்மிஷங்களை மனதில் வைத்து.

வழக்கம் போல் சமர் குளியலறை கதவை திறந்து வைத்து குளித்திட, மகி எதையோ இழுத்து நகர்த்தி வைக்கும் சத்தம் அவனுக்கு கேட்டது.

சமர் வெளியில் வரும்போது இரண்டு கட்டிலையும் ஒன்றிணைத்து மகி படுத்திருந்தாள்.

“ஹேய் லட்டு என்ன இது?” அதிர்வாகக் கேட்டு நின்றான்.

“எதுக்கு இவ்ளோ ஷாக் எஃபெக்ட்” என்று எழுந்து சாய்ந்து அமர்ந்தவள், “ரொம்ப விவரமா நீ… அங்க வச்சே ட்ரெஸ் வியர் பண்ணிட்டு வந்திருக்க? என் மேல அவ்ளோ நம்பிக்கை உனக்கு?” என்று அவள் கேட்ட விதத்தில் சமர் தன்னையே நெற்றியில் தட்டிக்கொண்டான்.

“அப்படி இல்லை… என் மேல தான் எனக்கு நம்பிக்கை இல்லை. கல்யாணத்துக்கு முன்ன உன்னை சங்கடப்படுத்திடக் கூடாதே” என்றான் அவளை பாராது.

“ரொம்பதான்” என்றவள், படுத்து கண்களை மூடிட, அவளைத் தாண்டிச்சென்று உள்ளே படுப்பதா வேண்டாமா என சமர் தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

“உங்க கற்புக்கு நான் கியாரண்டி. வந்து படுங்க சார்” என்று அத்தனை நக்கலாக ஒலித்தது மகியின் குரல்.

error: Content is protected !!
Scroll to Top