வேள்வி : 7

அத்தியாயம் : 8

பரிதிவர்மனுக்குக் கல்லூரிப் படிப்பு நிறைவடைய இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருந்தன. அதனால் அவன் தனது அப்பாவிடம் சொல்லி, சொந்தமாக கோழிப்பண்ணை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அதற்காக அவன் தேர்வு செய்திருந்த இடம், வீட்டிலிருந்து பத்து பதினைந்து நிமிடத் தொலைவில் இருந்த ஒரு மேடான நிலப்பரப்பு. கிட்டத்தட்ட முப்பத்தைந்து சென்ட் நிலத்தை அதற்காகவே அப்பாவிடம் பேசி ஏற்பாடு செய்தான்.

பண்ணையைத் தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டிய நடைமுறைகளைப் பற்றித் தெளிவாக யோசித்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி வாங்குவது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளுக்குட்பட்டு நடப்பது என எல்லாவற்றையும் முறையாகச் செய்யத் திட்டமிட்டனர். குறிப்பாக, பண்ணைக்கான மின் இணைப்பை முன்கூட்டியே விண்ணப்பிப்பதும், அரசாங்கம் வழங்கும் மானியங்கள் மற்றும் கடன் உதவிகளைப் பயன்படுத்திக் கொள்வதும் அவசியமாக இருந்தது. அதேபோல, திடீர் நோய்த்தொற்றோ அல்லது மழையோ காற்றோ வந்து கைவசமுள்ள தொழிலைக் கெடுத்துவிடக் கூடாது என்பதால், கோழிகளுக்கும் பண்ணைக் கட்டிடங்களுக்கும் காப்பீடு (Insurance) செய்துவிடுவதிலும் உறுதியாக இருந்தனர்.

பண்ணையின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் பரிதி மிகவும் கவனமாக இருந்தான். கோழிகளுக்குத் தடையற்ற காற்றோட்டமும் மிதமான வெப்பநிலையும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கொட்டகையின் பக்கவாட்டில் கம்பளி வலைகளை அமைக்கும் முறையைத் தேர்ந்தெடுத்தான்.

அதேபோல், வெளி விலங்குகளின் ஊடுருவலைத் தடுக்கச் சுற்றிலும் பலமான முள்வேலியும், மதில் சுவரும் எழுப்பப்பட்டது. நோய் தாக்காமல் பாதுகாக்க, கொட்டகை நுழைவாயிலில் கிருமிநாசினி கலந்த ‘கால் கழுவும் தொட்டி’ உடல்நிலை சரியில்லாத கோழிகளைத் தனியாகப் பிரித்துவைக்க ஒரு குட்டி அறை, எதிர்பாராமல் இறந்துபோகும் கோழிகளைச் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த ஆழமான குழி, கோழிகள் தீவனம் உண்பதற்கான மின் விளக்குகள், எடையைக் கண்காணிக்கத் தராசு, தட்பவெப்பநிலையை அறியும் கருவி என ஒவ்வொன்றையும் ஆலோசித்து வாங்கி வர முடிவு செய்தனர்.

சுற்றிலும் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் எதுவும் வராதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த இடத்தை விடிய விடியக் காவல் காக்கவும், கோழிகளுக்குத் தீவனம் வைக்கவும், எச்சங்களைச் சுத்தம் செய்து பண்ணையைப் சுத்தமாகப் பராமரிக்கவும், முட்டைகளைச் சேகரிக்கவும் தனித்தனியாக ஆட்களை நியமித்தனர். பரிதியோ கல்லூரிப் படிப்பும் அதன் தொடர்ச்சியான வேலைகளும் என வெளி இடங்களில் அலைய வேண்டியிருந்ததால், பண்ணையின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் மிகவும் நம்பிக்கையான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சதாசிவத்திடம் கொடுக்க முடிவு செய்தார். அப்படி அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி முடிந்து அடுத்த வாரம் பள்ளி விடுமுறை நிறைவு பெற்று விட, பள்ளிக்கூடத்திற்குப் போவதற்காக வேகமாக வந்து கொண்டிருக்கும்போது நந்தனாவின் செருப்பு அறுந்து விழுந்தது.

அதோடு வேகமாக நடக்க முடியாமல் அவள் தடுமாறினாள். அருகில் கடைகள் எதுவும் இல்லாததால், “ஒரு கவருக்குள் வைத்துவிட்டுப் பின்னர் வரும்போது எடுத்துக்கொள்ளலாம்” என்று சாலையோரம் இருந்த மரத்தடியின் பின்னே மறைத்து வைத்துவிட்டுப் போனாள். 

செருப்பு இல்லாமல் நடந்து சென்றதில் முள்ளும் கற்களும் காலில் குத்தின. திரும்பச் சென்று வீட்டில் கேட்டால் சித்தி சத்தமிடுவாள் என்பதால், பாதி வழி வந்து விட்ட நிலையில் திரும்பி செல்ல மனமின்றி, நடந்தே நேராகப் பள்ளிக்கூடத்திற்கு போய்விட்டாள்.

அங்கு அவளது வகுப்பில் பயிலும் மாணவிகள் இவளது வீட்டில் நடந்த நிகழ்ச்சி குறித்து விசாரிக்க, அவள் சொல்ல தொடங்கும் முன் அதே ஊரைச் சார்ந்தவர்களும், உறவினரின் வாரிசுகளும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒன்று விடாமல் ஒப்புவித்தனர். அதிலும் பரிதிவர்மன் மேடையில் நடந்துகொண்ட விதம் குறித்தும், அங்கு நடந்த கலாட்டா பேச்சுக்களை பற்றியும் மாணவிகள் சிலர் கிண்டலடித்தனர். 

அவனது தோற்றம், பேச்சு, படிப்பு என்று பலவற்றையும் சொல்லி விட்டு, “நீ கொடுத்து வச்சவ, அதான் இப்படி ஒரு ஹீரோ மாதிரி அத்தான் கிடைச்சிருக்கு. எங்களுக்கும் இருக்கறார்களே, வத்தலும் தொத்தலுமாக…” என்றனர்.

நந்தனா எதுவும் கூறாமல் புன்னகைத்ததும், “பேசாம நீ அவரையே கட்டிக்கிட்டுப் போயிடு, கடைசி வரை சந்தோஷமா இருக்கலாம். உங்க சித்தியை விட அத்தை பரவாயில்லை” என்றாள் உறவுக்காரப் பெண் ஒருத்தி.

“அச்சோ! இது என்னடி இப்படி எல்லாம் பேசுறீங்க? நானே பரிதி அத்தானிடம் இதுவரை பேசினதில்லை. அவரைப் போய் கல்யாணம் எல்லாம் என்னால பண்ண முடியாது. அவர் என்னை விட வயசு கூடுதல், எவ்வளோ பெரிய ஆளா இருக்கறார்! இதுவே எங்க அப்பா மேல உள்ள மரியாதையில் வந்து செய்துட்டு போறாங்க. அதுக்காக இப்படி எல்லாம் நினைப்பது அதிகப்படி …” என்று இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள் நந்தனா.

ஆனால் அவளோ விடாமல், “இது என்னடி இப்படி சொல்லிட்ட? அவர் உங்க அப்பாவுக்காக மட்டும் வருவதாக இருந்தால், ஏண்டி உனக்காக அப்படி ஸ்பெஷலா செய்யப் போறார்? நீதான் எங்க பார்த்தாலும் பேசாம அந்த இடத்தை விட்டுப் பயந்து ஓடுறியே! அதான் உனக்கு அவரோட பாசம் தெரியல. உன்னைப் பற்றி எவ்வளவு பெருமையா அவரும் அவங்க அப்பாவும் பேசுவாங்க தெரியுமா?” என்று கூறினாள்.

அவனைப் பற்றி இதுவரை தனக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவர, நந்தனா ஆச்சரியமாக நோக்கினாள். அவர்கள் பரிதிவர்மனின் வீடு, அவனது அம்மா, அப்பா மற்றும் புதிதாக ஆரம்பிக்கப் போகும் கோழிப்பண்ணை என்று அனைத்தையும் சொன்னார்கள். இதுவரை யாரிடமும் பரிதிவர்மனின் வீட்டைப்பற்றி அறிந்திராத நந்தனாவுக்கு, மாமாவும் அவனும் தன்னிடம் அன்பாகப் பேசினாலும், அவளது அத்தையை இதுவரை பார்த்துப் பேசிய அனுபவமில்லை. 

அதற்கான காரணம் முழுவதும் அவளுக்குத் தெரியாது. இப்போது இவர்களெல்லாம் சொல்வதைக் கேட்கும்போது, நாமும் அந்த வீட்டிற்குப் போய் அவர்களுடன் பேச வேண்டும் என்ற ஆசை அவளுக்குள்ளும் துளிர்த்தது.

மாலை நேரம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது, காலையில் செருப்பு வைத்துவிட்டுச் சென்ற இடத்திற்குப் போய் தேடினாள். அதை அங்கு காணவில்லை; அதனால் பதற்றத்துடன் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீட்டிற்குச் சென்று சித்தியிடம் இதை எப்படிச் சொல்வது என்று பயந்தபடியே இருந்தாள். அப்போது, “என்ன புள்ளை, அங்கு என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டவாறு பரிதிவர்மன் வந்தான்.

அவனை அங்கு கண்டதும் முதலில் திகைத்தவள், பின்னர் நடந்ததை எப்படிச் சொல்வது என்று தயங்கினாள்.

அவன் அருகில் வந்தபோது, அவனது சட்டை முதுகுப் பகுதியில் தையல் விடுபட்டிருந்தது. முன்பை விட இப்போது கொஞ்சம் உடல் பிடித்து இருந்ததால், அந்த இடம் லேசாகக் கிழிந்திருக்கலாம். அல்லது குனிந்து குனிந்து தேடும்போது தையல் பிரிந்திருக்கலாம். அவன் அதைப் பார்த்தபடியே வந்து நின்று, “கேட்கிறேன் சொல்லு என்ன விஷயம்?” என்றதும், ஒரு வழியாக நடந்ததைக் கூறினாள்.

“என்ன? என்ன சொல்ற? அப்படின்னா காலையில இருந்து இவ்வளவு நேரம் செருப்புப் போடாமலா நடந்து வந்த?” என்று அதிர்ந்துபோய் கேட்டான்.

அவள் ‘ஆமாம்’ என்பது போலத் தலையாட்டினாள்.

“அதான் அறுந்து போச்சுன்னு தெரியுமில்ல? வீட்டிலிருந்து வர்றப்போ தூக்கி வீசிட்டு வேற செருப்புப் போட்டுட்டு வந்திருக்கக் கூடாது?” என்று வினவினான்.

“இல்ல… பங்கஷனுக்கு வந்திருந்தவங்க யாரோ என் செருப்பைப் போட்டுக் கொஞ்சம் பெருசாக்கிட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு வரும் அவசரத்தில் அதைப் பார்க்காம வந்துட்டேன். பஸ் வந்ததைக் கண்டு வேகமா விலகிப் போகுறப்போ, கல் தட்டி சறுக்கியதில் செருப்பு பிஞ்சிருச்சு…”

அவனுக்கு ஒருமாதிரியாக இருந்தது. எவ்வளவு பெரிய வசதியான வீட்டில் வாழ வேண்டியவள், சாதாரண செருப்பு அறுந்துபோனதற்காகக் கவலைப்பட்டுத் தேடிக்கொண்டிருக்கிறாளே! காலில் எதுவும் காயம் பட்டிருக்குமா? அதோடு பள்ளிக்குப் போகிறவளுக்கு மிதிவண்டி எதுவும் இல்லையா? இன்னமும் மற்ற பெண்களுடன் சேர்ந்து நடந்து தான் போகிறாளா? பதினைந்து நிமிட தொலைவு இருக்கிறதே! என்று மனதிற்குள் நினைத்தான்.

“அது நாய் எதாவது தூக்கிட்டுப் போய் எங்கேயாவது வீசியிருக்கும். நீ வா, நான் உனக்குப் புதுசா வாங்கித் தரேன்” என்க, அவள் வர மறுத்துத் தலையாட்டினாள்.

“நான் உன்னை எதுவும் செய்துட மாட்டேன். வா!” என்று அவளது கையைப் பற்றி இழுத்து பைக்கில் அமர வைத்தான். அவளோ சித்தி நீலாம்பரியை நினைத்துப் பயந்தாள்.

அவனோ, “உன்னை யாரும் எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கறேன். நீ தைரியமா வந்து உட்கார்!” என்றான். “ஆமாம்! உனக்கு சைக்கிள் இல்லயா? சில நாளாய் அதில் போய் பார்த்தேனே!” என்று விசாரித்தான்.

அவள் சித்தி தனது தம்பியிடம் பறித்துக் கொடுத்து விட்டதாக சொன்னதும், சரியான திமிர் பிடித்தவளாக இருக்கிறாளே என்று மனதிற்குள் கடிந்தான்.

அவளோ வீட்டிலிருந்து வெளியே வரும்போது, “யாரையும் நிமிர்ந்து பார்த்தேன், தேவையில்லாம பேசினேன், கூப்பிட்டாங்க அவங்க வீட்டுக்குப் போனேன், அவங்க ஆசைப்பட்டதால் கூப்பிட்டு வந்தேன்னு காதுல விழுந்தது தொலைச்சுடுவேன். பரிதிவர்மனைக் கண்டாலே அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது, அவன் வீடு இருக்கும் பக்கமே காலெடுத்து வைக்க கூடாது”… என்று ஆயிரம் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டவள். 

சித்தியின் கடுமையான பேச்சினால் பாதிக்கப்பட்டு, அவள் பரிதிவர்மனைப் பார்த்தாலும் பார்த்தது போல சென்று விடுவாள், அவன் அழைத்தாலும் செவி கேளாதது போல கடந்து செல்ல பழகினாள்.  இப்போது அவன் வீட்டிற்கு வந்து பேசிச் சென்றிருந்தாலும், அவன் போன பிறகு அங்கு நடந்த கலவரத்தை அவள் அறிவாள். அப்போதைய சூழ்நிலைக்காகவும், அப்பா சொன்ன வார்த்தைகளுக்காகவும் தான் அவள் பேசினாளே தவிர, அவனைக் கண்ட அடுத்த நொடி அங்கிருந்து காணாமல் மறைந்து விடுவாள். இதில் எப்படி அவனுடன் கடைக்குப் போய் வர முடியும்?

அவளது மனநிலையைப் புரிந்து கொண்டாலும், இப்படியே அவளை வீட்டிற்கு அனுப்புவது சரியாக இருக்காது என்று நினைத்தான். நாளைக்கும் இதே நிலைதான் நீடிக்கும் என்று அறிந்திருந்ததால், அவளது தயக்கத்தைப் புறந்தள்ளி பைக்கில் அமர்த்தி அழைத்துச் சென்றான்.

இரண்டு புத்தம் புதிய, விலை உயர்ந்த செப்பல்களையும், தினமும் பள்ளிக்குச் சென்று வரத் தேவையான அளவிலான ஒன்றும் வாங்கிக் கொடுத்தான். அப்படியே அவளது சுடிதாரின் பின்பகுதி பிரிந்திருப்பதைக் கவனித்து, அதற்கும் மாற்றாக இரண்டு புதிய உடைகளையும் எடுத்துக் கொண்டு, வழியில் ஹோட்டலில் உணவு வாங்கித் தந்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.

அவளுக்கோ உள்ளுக்குள் நடுக்கம்! ‘சித்தி தன்னைத் தீர்த்துக்கட்டி விடுவாரோ!’ என அஞ்சி அஞ்சி வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் நினைத்தது போலவே அங்கே எல்லாமே நடந்தது. பரிதிவர்மன் வாங்கித் தந்தவற்றை தூக்கி எறிந்து ஒரு கலவரம் நிகழ்த்தி விட்டார் நீலாம்பரி. அவர் உதிர்த்த வார்த்தைகள் அவளைக் கண்ணீரில் மூழ்கி தத்தளிக்க வைத்தது.

கீழே கிடந்த சாதனங்களை எடுத்து வந்து தனது அறையில் பத்திரப்படுத்தியவள், அதன் பிறகு வெளியே வராமல் அழுதுகொண்டே இருந்தாள். இரவு நேரம் சதாசிவம் பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். அவரிடம் இதைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று நீலாம்பரி தடுத்துவைத்திருந்தாலும், மகளுக்கு பரிதிவர்மன் வாங்கி தந்த புதிய சைக்கிளுடன் வந்தவர், மகளிடம் அதைக் காட்டி விட்டு, மற்ற விசயங்களைக் குறித்துக் கேட்க, இவள் வாய் திறந்து சொல்லாமல் மௌனமாய் அமுதாள்.

அவர் உடனே என்ன நடந்திருக்கும் என்று யூகம் செய்து விட்டு மகளிடம் விசாரிக்க,  அவள் அழுதுகொண்டே நடந்த விபரங்களைத் தெரியப்படுத்தினாள். “அவர் வாங்கித் தந்தது எதுவுமே எனக்கு வேண்டாம், அவரிடமே கொண்டுபோய் கொடுத்துடுங்க அப்பா” என்றாள்.

அவ்வளவுதான்! அடுத்த நிமிடம் ஆவேசமாகக் கொதித்து எழுந்தார்போல் சதாசிவம் பேசத் தொடங்கினார். “அவன் வாங்கிக் கொடுத்ததைத் தொடக்கூடாதுன்னு சொல்ல நீ யார்? நீதான் முழு நேரமும் அவளைப் பார்த்துக்கறியா? எங்க அம்மா உயிரோடு இருக்கும் வரை அவங்கதான் என் மகளைப் பார்த்துகிட்டாங்க. நீ செய்த அராஜகத்தை தட்டிக்கேட்டதால், வயசுல பெரியவங்கன்னு மரியாதை இல்லாம எதிர்த்துப் பேசி, சரியா சாப்பாடு கொடுக்காம கொடுமைப்படுத்தி அவங்களை நிரந்தரமா போக வச்சுட்டே! என் பிள்ளையையும் வீட்டு வேலைக்காரியை மாதிரி நடத்த பார்க்கறே… அது நான் உயிரோடு இருப்பது வரை நடக்காது. உன் பிள்ளைகள் ரெண்டு பேருக்கும் உன் விருப்பம் போலச் செய்; என் மகள் அவங்க மாமா, அத்தான் விருப்பப்படிதான் இருப்பா…” என்று கடுமையாக சொல்லிவிட்டார்.

பின்னர் புதிய மிதிவண்டியில் மகளை அமர வைத்து ஓட்டிக் காண்பிக்க சொன்னவர், அவர் சிறு பிசிறு கூட இல்லாமல் ஓட்டி வருவதைப் பார்த்த பிறகே வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

அகிலன் ஆசையாகப் பார்த்தபடி அம்மாவின் அருகில் சென்று, “இதை எனக்கு தந்துட்டு பழையதை அக்காவிடமே கொடுத்துடுங்கம்மா…” என்றதும், “போடா போக்கத்தவனே! உனக்கு சூடு சொரணை இல்லையா?” என்று கத்தி விட்டு, மகனின் முகம் வாடுவதைக் கண்டு பிறகு வாங்கி தருவதாக சொல்லி சமாதானப்படுத்தினாள்.

மகள் நந்தனாவை அழைத்துச் சென்று, கை கால் சுத்தம் செய்ய சொல்லி, இரவு உணவை எடுத்து வந்து  ஊட்டிவிட்ட சதாசிவம், “அந்தக் கழுதை பேச்சையெல்லாம் நீ கண்டுக்காதே! உன் விருப்பம் போல நடந்து சந்தோஷமா இரு. உங்க மாமாவின் காதுக்கு இந்த விஷயம் போனால் ரொம்ப வருத்தப்படுவார்; தம்பியை எங்கேயாவது பார்த்தாலும் சொல்லிடாதே…” என்று எச்சரித்தார் சதாசிவம்.

தன் மீதான அப்பாவின் பாசத்தை நினைத்து நெகிழ்ந்துபோனவள், ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு, மறுநாள் புதிய உடை மற்றும் மிதிவண்டியில் பள்ளிக்கூடத்திற்கு கிளம்பினாள்.

அவன் காலை நேரம் பேருந்து நிலையத்திற்கு வந்து நின்று, நேற்று வீட்டிற்குப் போன பிறகு நடந்தது குறித்து விசாரித்தான். அவள் எதுவுமே சொல்லாமல் மறைத்தாலும், மெல்லிய புன்னகையுடன் அவள் கூடவே சேர்ந்து தானும் பைக்கில் வந்தபடி பேசியவாறு இருந்தான்.

அதன் பிறகு, இதுபோல எப்போதாவது அவன் வந்து பார்ப்பதும், அவள் பதில் கூறுவதும், எங்கேயாவது அழைத்துச் சென்று அவளுக்குப் பிடித்தமானதை வாங்கித் தருவதுமாக நாட்கள் அழகாக நகர்ந்தது. நீலாம்பரி சத்தமிட்டாலும், அப்பாவின் ஆதரவு அவளுக்கு அரணாக இருந்ததால், வேறு எதையும் நினைக்காமல் படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தினாள் நந்தனா. அப்படியே பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வுகளும் வந்தன.

ஒவ்வொரு தேர்வையும் சிரத்தையாக எழுதி முடித்தவள், தனது கடைசிப் பரிட்சையை எழுதிவிட்டு மதிய வேளையில் வீட்டிற்கு வந்தாள். ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்தது. வழக்கமாகச் சாவி வைக்கும் பகுதியில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள்; காணவில்லை. சித்தி எங்கு சென்றிருக்கிறார் என்று தெரியாமல் திகைத்தவள், கடைசியாகக் கோழிப்பண்ணையில் இருக்கும் அப்பாவைக் காணச் சென்றாள். 

அங்கும் யாரையும் காணாததால், “அப்பா… அப்பா!” என உரக்க அழைத்தாள்.

அப்போது கோழிப்பண்ணை வேலைகள் முழுவதுமாக முடிந்து, முட்டை வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருந்ததால், கல்லூரி நேரம் போக மீதி நேரங்களில் அங்கேயே இருக்கும் பரிதிவர்மன் தனது அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தான். அவள் அவனைக் கண்டதும் அருகில் இருந்த பெரிய புளியமரத்திற்குப் பின்புறம் போய் மறைந்துகொள்ள, “என்னடா இது, சத்தம் மட்டும் கேட்குது, ஆளைக் காணோமே!” என்றான்.

“எங்க அப்பாவைப் பார்க்க வந்தேன்…” சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் தேடியவன், அவள் மரத்திற்கு பின்னே மறைந்து இருப்பதைப் பார்த்து விட்டுக் கிண்டலாக பதில் அளித்தான்.

“எப்பொழுது இருந்துடா இந்த மரம் எல்லாம் பேச ஆரம்பிச்சது? ஒருவேளை பேய் பிசாசு எதுவும் புதுசா குடி வந்திருக்குமோ?”

அவள் வாயைப் பொத்தித் தன் சிரிப்பை அடக்கியபடியே, “நான் ஒண்ணும் பேயில்ல… நந்தனா! எங்க அப்பாவைப் பார்க்க வந்தேன்” என்று சொன்னவள், சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

“ஓஹோ… பேயில்லை, நண்டா? ஆமாம், என்ன இந்த நேரம் நண்டு கடல்லயும் குளத்திலும் மூழ்கி விளையாடாம இங்க வந்துருக்கு?” எனக் குறும்பாகக் கேட்டபடி அவளை நோக்கி நடந்தான்.

அவன் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு  சிரித்தாலும், “என் கொடுக்கினால் உங்களைக் கவ்வி இழுத்துட்டுப் போக போறேன்” என்றாள் நந்தனா.

“ஓ… பேஷ் பேஷ் தாராளமா கவ்வலாம், கடிக்கலாம், துரத்தலாம், என்ன வேணா செய்யலாம்…” என்றபடி மரத்தின் பின்பகுதியில் நின்றவளின் முதுகில், விரல் தொட்டுக் கூச செய்தான்.

அவள் யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயப்பட, அவன் உதட்டோரம் ஊறிய புன்னகையுடன், “என்ன நண்டு, ஏன் இப்படிப் பயந்து போய் இருக்க? உன்னைத் தூக்கிட்டுப் போய் சமைத்துச் சாப்பிட்டுடுவேன்னா?” என்றதும் அவனை முறைத்தாள்.

அவன் சிரித்த முகத்துடன் அவளது கையைப் பற்றி இழுத்துத் தன் அருகில் கொண்டு வந்தான். அவள் தனது படபடப்பை மறைத்தபடியே நிற்க, “எத்தனை நாளா உன்னை நான் பார்த்துருக்கேன், பேசியிருக்கேன், வெளியே கூட்டிட்டுப் போயிருக்கேன்? பிறகும் என்னடா பயம்? இந்த அத்தானை பற்றி உனக்குத் தெரியாதா?” என்று மென்மையாக வினவியதும், அவளது பயம் விலகி முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“அது வந்து…” என்று அவள் தயங்க, நந்தனாவின் கன்னத்தில் லேசாகத் தட்டியவன், தன்னுடனே பண்ணை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். அவள் சுற்றிலும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே வர, “இங்கே உட்கார்!” என்றான்.

அவன் அப்போதுதான் மதியம் உண்பதற்காகத் தட்டை எடுத்து வைத்திருப்பது தெரியவந்ததும், “அச்சச்சோ! நான் உங்களைச் சாப்பிட விடாம தொந்தரவு பண்ணிட்டேனா? நீங்க சாப்பிடுங்க, நான் கிளம்புறேன்” என்றாள் நந்தனா.

“இருக்கட்டும்…” என்று அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவன், “ஆமா, நீ என்ன இந்த நேரம் இங்க வந்து இருக்க? ஒரு நாளும் வரமாட்டியே!” என்று விசாரித்தான்.

“வந்து… வந்து… வீட்டுல யாரையும் காணும். அதான் அப்பா இங்கேதானே இருப்பாங்க, பார்த்துச் சாவியை வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன். கொஞ்சம் சாவியைக் கேட்டு வாங்கித் தருவிங்களா?” என்று உரைக்க, “உங்க அப்பா இங்கே இல்லையே!” என்றான் பரிதிவர்மன்.

அவள் திகைத்துப் போய், “அப்ப நீங்க மட்டும்தான் இங்கே இருக்கீங்களா? அப்பாவை வெளியே எங்கேயாவது அனுப்பி வச்சிருக்கீங்களா?” என்று சிறு அச்சத்துடன் வினவினாள்.

“உங்க சித்தியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாம இருப்பதா தகவல் வந்தது. என்ன ஏதுன்னு பார்த்துட்டு வர அவங்க எல்லாரும் போயிருக்காங்க. சாயந்திரம் வந்துவிடுவதாகச் சொல்லிட்டுத்தான் போனாங்க. நீ ஸ்கூலுக்குப் போன பிறகு நடந்ததால் உனக்குத் தெரிஞ்சிருக்காது. சாவியை எங்கும வச்சுட்டுப் போகலையா?”

அவள் இல்லை என்பது போலத் தலையை ஆட்டினாள்.

“அப்ப நீ இன்னும் சாப்பிடலையா?”

அவள் ‘இல்லை’ என்றதும், தனக்காக வாங்கி வைத்திருந்த உணவில் சரிபாதியாகப் பிரித்து அவளுக்குத் தட்டில் வைத்தான்.

அவள் வேண்டாம் என்று தயங்க, “சாப்பிட்டுட்டு, கொஞ்ச நேரம் கோழிப்பண்ணையைச் சுற்றிப் பார்! உங்க அப்பா அதற்குள் வந்துடுவார்” என்றான்.

“அதில்லை… உங்களுக்குச் சாப்பாடு காணாது…” என்று அவள் தயங்க, “அதெல்லாம் இல்லை! இன்னைக்கு நிறையத்தான் வாங்கிட்டு வந்தேன். தாராளமாகச் சாப்பிடு. ஒருவேளை உனக்குக் காணாதா? கடைசியிலிருந்து வேற வாங்கி வரவா?” என்றதும் அவள் மறுத்தாள்.

பின்னர் இருவரும் பேசிக்கொண்டே உணவை முடித்தனர். காலையில் இருந்து அவள் ஓய்வில்லாமல் இருப்பதால் கொஞ்சம் நேரம், அங்குள்ள படுக்கையில் ஓய்வெடுக்கச் சொன்னவன், பிறகு கோழிப்பண்ணையைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றான்.

அப்பா அடிக்கடி சொல்லும்போது மட்டுமே கேட்டிருந்தவள், இன்று பண்ணையை நேரில் பார்த்ததும், அவ்வளவு பெரிய பரப்பளவையும் அதன் நவீன வசதிகளையும் கண்டு வியந்து போய் நின்றாள்.

 

அவன் புன்னகையுடன் அவளது கைப்பற்றி அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக காண்பித்தான். அவளும் அவன் மீதான அச்சம் அகன்றவளாக, ஒவ்வொன்றையும் பார்த்து வியந்தாள். தனக்குரிய சந்தேகங்களை கேட்டுத் தெளிவு செய்தாள்.

கோழிக் குஞ்சுகள் தனியாகப் பராமரிக்கப்படும் இடத்தில் கொஞ்சம் நேரம் வராமல் இருந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பின்னர் முட்டை பகுதியில் வந்தும் வாயைப் பிளந்து கொண்டு நின்றாள். 

மொத்த இடங்களையும் சுற்றி பார்த்து வர நிறைய நேரம் ஆகியது. அத்தனையும் ஒரே நாளில் பார்த்து தெரிந்து கொண்டவளுக்கு, அங்கிருந்து போகவே பிடிக்கவில்லை. நேரம் சென்று கொண்டிருக்க, மாலை நேரம் கடந்தும் சதாசிவம் வராமல் இருக்க, பரிதிவர்மன் தனது வீட்டிற்கு நந்தனாவை அழைக்க, அவளோ பயத்தில் வியர்த்துக் கொட்டினாள். சித்திக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் வர மறுத்து பண்ணை வீட்டில் அப்பா வரும் வரை இருப்பதாக சொன்னாள். அவனோ அதுவும் நம்ம வீடுதான் வா  என்று சொல்லியும் கேட்க மறுத்ததால், அவனும் அவளுக்காக அங்கேயே இருந்தான். இருட்டும் நேரம் அதே இடத்திற்கு விரைந்து வந்த சதாசிவம் மகளிடம் மன்னிப்பை யாசித்து, மருமகனுக்கு நன்றி தெரிவித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது நந்தனா, “நானும் நாளையிலிருந்து வரட்டுமா?” என்று கேட்க, “உனக்கு எப்ப தோணினாலும் வா” என முழுமையாக சம்மதம் தெரிவித்தான் பரிதிவர்மன்.

error: Content is protected !!
Scroll to Top