இருள் நிழலாய் நானே 7
“மகி…” காதுக்குள் யாரோ அழைக்கும் சத்தம் காற்றாய்.
சுற்றி முற்றும் பார்வையால் அலசினாள்.
தினேஷ் வாய் பொத்தி உடல் குலுங்க சிரித்துக் கொண்டிருந்தான்.
“யூ இடியட்” என்று தினேஷின் தோளில் எட்டி அடித்த மகி, “பயந்தேபோயிட்டேன் டா… எதுக்குடா இப்படி பன்ற?” என கோபமாகக் கேட்டாள்.
“ஹேய்… நான் ஒன்னும் பண்ணல.” தினேஷ் என்னவென்று புரியாது விழித்தான்.
“என்னை பேய் மாதிரி ஹஸ்கி வாய்ஸ்ல நீ இப்போ கூப்பிடல?”
“இல்லையே!”
“அப்புறம் எதுக்கு சிரிச்ச?”
“ஹேய் லூசு… மதன் இன்னைக்கு பேப்பரில் போட இருக்கும் கார்ட்டூன் அனுப்பினான். அதை பார்த்து சிரிச்சேன்” என்ற தினேஷ், “உனக்கு என்னவோ ஆச்சு” என்று சொல்ல…
மகியின் பார்வை தனக்கு நேரெதிர் அணைத்து வைக்கப்பட்டிருந்த கணினி திரையில் படிந்தது.
முழு கருநிற திரையில் அவளின் உருவம் தெரிய, அருகில் வெண் புகை படிந்து தனக்கு பின்னால் மேசையில் யாரோ அமர்ந்து இருப்பதைப்போல தெரிந்தது.
ஒரு நொடி மூச்சு நின்றிட, வேகமாக தன் பின்னால் திரும்பிப் பார்த்தாள் மகி.
எவ்வித அரவமும் இல்லை அங்கு.
மீண்டும் திரும்பித் திரை பார்க்க, தற்போது அவளது பிம்பம் மட்டுமே தெரிந்தது.
அவளால் ஆசுவாசம் அடைய முடியவில்லை.
எதன் சுழலோ தன்னை இழுக்கும் உணர்வு.
“என்ன மகி…”
“இங்க நம்ம ரெண்டு பேரை தவிர்த்து வேற யாரோ இருக்காங்க தினேஷ்” என்ற மகியின் குரலில் சிறு நடுக்கம்.
“என்ன பயம்காட்ட டிரை பன்றியா மகி?” என்ற தினேஷ்…
“வர்ஷா அம்மா. இருபது நாளுக்கு மேல ஆச்சே… இன்னும் வரலயே நினைச்சேன்” என்றான்.
கண்ணாடி கதவை திறந்து கொண்டு வினைதீர்த்தானை பார்க்க அறையினுள் சென்றவரை பார்த்து கூறினான்.
அடுத்து மகியின் கவனமும் அவரிடம் திரும்பியது.
இரண்டு நிமிடங்களில் பணியாள் வந்து இருவரையும் எடிட்டர் அழைப்பதாகத் தெரிவிக்க இருவரும் எழுந்து சென்றனர்.
கணினி திரையில் புகையாய் தெரிந்த உருவம் மெல்ல தன் முகம் காட்டியது. சத்தமிட்டு சிரித்தது.
“வருவ… கண்டிப்பா நீ வருவ… என்னைத்தேடி வருவ…” எனக்கூறி ஓலமிட்டு சிரித்தது.
கதவினை திறக்க கை வைத்த மகி சட்டென்று நின்று திரும்பிப் பார்க்க, அவர்கள் கேபின் இருக்கும் இடம் மட்டும் கரும்புகை சூழ்ந்தது போல் காட்சி கொண்டிருந்தது.
“ஹேய் மகி… வா!”
உள் சென்ற தினேஷ், கதவினை பிடித்தபடி வெளியே பார்த்து நின்ற தோழியை உலுக்கி அழைத்தான்.
“யாரோ சிரிக்கிறாங்க…”
“வாட்?”
“உனக்கு கேட்கலையா?”
“மகி… திஸ் இஸ் டூ மச். இப்போ என்ன நான் பயப்படனுமா? பயந்துட்டேன். ஆர் யூ ஹேப்பி. எடிட்டர் பார்க்கிறார். உள்ள வா” என்று கையை பிடித்து இழுத்து வந்து அமர வைத்தான்.
கண்ணீரோடு, கவலை படிந்த முகத்தோடு வர்ஷாவின் அன்னை அமர்ந்திருந்தார்.
“ஹாய் ஆண்ட்டி!” தினேஷ் தான் வர்ஷாவின் தாயாரிடம் பேசினான்.
மகியின் பார்வை கண்ணாடி சுவரைத் தாண்டி தங்கள் பகுதியில் தான் பதிந்திருந்தது.
“மகி…”
வினைதீர்த்தான் மூன்று முறை அழைத்ததற்கு பின்னர் சிறு திடுக்கிடலோடு அவர் புறம் திரும்பினாள்.
“வர்ஷாவை கேட்டு வந்திருக்காங்க.”
அவர் வர்ஷாவின் அன்னையை கை காண்பித்தார்.
“நான்… நா… நான் இந்த வாரம் அங்க போறேன் ஆண்ட்டி… போயிட்டு வர்ஷாவை உங்களோட பேச வைக்கிறேன். இல்லைன்னா அவளை கண்டிப்பா திருப்பி அனுப்பிடுறேன் ஆண்ட்டி” என்றாள்.
“ஒரே பொண்ணும்மா… எனக்குன்னு இருக்கிறது அவ மட்டும் தான். அனுப்பி வச்சிடும்மா” என்று தழுதழுத்த குரலில் கை கூப்பி சொல்லியவர் சென்றுவிட்டார்.
“நீ எதுக்கு போறேன்னு இப்போ அவங்ககிட்ட சொன்ன?” தினேஷ் கேட்க, பதில் சொல்லாது வினைதீர்த்தானிடம் தலையசைத்து வெளியேறிவிட்டாள் மகி.
“மகி உன்னைத்தான் கேட்கிறேன்.” அவளின் பின்னாலே ஓடினான் தினேஷ்.
மகி தங்கள் பகுதிக்குள் வர, எதனுள்ளோ புகுந்து உள் நுழைந்த உணர்வு அவளுக்கு.
இரு கைகளையும் காற்றில் வைத்து தள்ளிப் பார்த்தாள். ஒன்றும் இல்லை. அவள் தான் பிடிமானமின்றி தடுமாறினாள்.
“மகி என்ன தான் பிரச்சினை? ரெண்டு நாளா வித்தியாசமா நடந்துக்கிற” என்ற தினேஷ், “உன் முடிவை மாத்திக்கோ” என்றான்.
“முடியாது தினேஷ்” என்ற மகி, “என்ன நடக்குதுன்னே தெரியில. போனவங்க ரெண்டு பேரும் என்ன ஆனாங்க தெரியல… எப்படிடா நிம்மதியா இங்க உட்கார்ந்திருக்க சொல்ற நீ?” என்றாள்.
“அதுக்குத்தான் நானும் சொல்றேன்” என்ற தினேஷ்… “போனவங்களுக்கே என்ன ஆச்சுன்னு தெரியாம… உன்னையும் எப்படி அங்க அனுப்புறது மகி” என்றான்.
“அவங்க நம்ம பிரண்ட்ஸ் டா!”
“இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணுவோம். அவங்ககிட்ட இருந்து எதும் தகவல் வருதா பார்ப்போம்” என்றான்.
அக்கணம்,
மகியின் கணினி திரையில் மின்னஞ்சல் ஒன்று வந்திருப்பதாக தகவல் எம்பி குதித்தது.
ராகுலின் மின்னஞ்சலிலிருந்து வந்திருக்க…
“தினேஷ்” என்று காண்பித்து வேகமாக திறந்தாள்.
“எங்களைத் தேடி வரமாட்டிங்களா மகி?” என வந்திருந்தது.
உடனே தினேஷ் ராகுலின் எண்ணிற்கு அழைக்க… அழைப்பு செல்லவே இல்லை. பல முயற்சிக்கு பின்னர் அணைத்து வைக்கப் பட்டிருப்பதாகத்தன் ஒலி வந்தது.
“போகனும் தினேஷ்… கண்டிப்பா போகனும். அவங்களுக்கு எதும் நடந்திருந்தால் கூட… அதையாவது தெரிஞ்சுக்கணுமே” என்றாள்.
“ஆபத்துன்னு தெரிஞ்சும் என் பேச்சை கேட்காம போனாங்க… இப்போ? என்ன சொல்றது தெரியலை மகி. யோசிச்சு முடிவெடு. அதுக்கு முன்ன இதை கொஞ்சம் பாரு” என கூகுளில் அந்த கிராமத்தின் பெயரை குறிப்பிட்டு அதன் கீழ் வந்த தகவல்களை படிக்கக் கூறினான்.
மகி படிக்க படிக்க அவளுள் அதிர்ச்சி. இந்த காலத்திலும் இன்னும் இதை நம்புகிறார்களா என்றிருந்தது.
“அந்த ஊருக்கு போற வழியில் எதோ ரெண்டு மரம் இருக்காம். அதைத்தாண்டி புது ஆளுங்க உள்ள போறது அவ்வளவு ஈஸி இல்லைன்னு சொல்றாங்க” என்றான்.
“அப்போ ராகுல், வர்ஷா?”
“அவங்க அந்த புதர் காட்டோட நின்னிருக்கணும். இல்லை, ஊருக்குள் போய் ஏதும் நடந்…”
“பிளீஸ் தினேஷ் எதுவும் சொல்லாத. எனக்கு இப்போவே ஏதேதோ தெளிவில்லாத குழப்பம்” என்று தலையை பிடித்துக்கொண்ட மகி, “நமக்கு இந்த மர்மம் எதுவும் வேண்டாம். போனவங்களுக்கு என்னாச்சு தெரிஞ்சு, ரெண்டு பேரையும் உயிரோட கூட்டிட்டு வந்தால் போதும்” என்றாள்.
“அது அவ்ளோ ஈஸி இல்லை மகி.”
“தெரியுது” என்ற மகியினுள் அங்கு போக வேண்டுமென்கிற திடம் மட்டும் அதிகரித்தது.
“உண்மையாவே இது ராகுல் அனுப்பிய மெயில் தானா?”
தினேஷ் திரையைப் பார்க்க… ஒவ்வொரு எழுத்துக்களாக காற்றில் மிதந்து மறைந்தது. மின்னஞ்சல் காணாமல் போயிருந்தது.
“மகி…” தினேஷ் அரண்டவனாக பின் நகர்ந்து இருக்கை இடித்து தொப்பென்று அமர்ந்தான்.
“என்னடா?”
“அந்த மெயில்…” தினேஷ் கை நீட்டி காட்டிட…
“அதுக்கென்ன…” என்று பார்த்த மகி, “நம்மளை வர சொல்றான். அவ்ளோ தான். வேற இல்லையே” என்றாள்.
இப்போது தினேஷ் உற்று பார்க்க மின்னஞ்சல் இருந்தது.
அவனுக்கு சர்வமும் உறைந்தது.
“மகி… மகி… அங்க போக வேண்டாம்.” அவனது கண்ணில் அப்பட்டமான பயம்.
“நீ வரலனா ஓகே. நான் போறது போறது தான்” என்ற மகி “எனக்கு முடிக்க வேண்டிய வொர்க் கொஞ்சம் இருக்கு. நீ கிளம்பு” என்றாள் நேரத்தை பார்த்தவளாக.
“இல்லை நான் இருக்கேன்.”
ஏனோ தினேஷிற்கு மகியை அங்கு தனித்து விட்டுச்செல்ல மனமில்லை.
“நீ ரியாவை செக்கப் கூட்டி போகணுமே… நினைவு இல்லையா?” என மகி கேட்ட பின்னரே, அவனுக்கு ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும் நினைவே வந்தது.
“மறந்துட்டேன் மகி… ஆனால், உன்னை தனியா?” தினேஷ் பார்வையை அத்தளம் முழுக்க சுழற்றினான்.
தங்களது புலனாய்வு பிரிவிற்கு எவ்வித தொல்லையும் இருக்கக்கூடாது என தனி தளம் கேட்டது தவறு என வருத்தப்பட்டான்.
“உன்னை பத்தி ரியா நல்லா தெரிஞ்சு வச்சிருக்கா… அவங்க மறந்திடுவாங்க, கொஞ்சம் ரிமைண்ட் பண்ணுங்கன்னு காலையிலே மெசேஜ் பண்ணியிருந்தாள்.”
“ஹோ… நீ வீட்டுக்கு போகலையா? சமர் வெயிட் பண்ணுவான் தானே?”
“கால் பண்ணி சொன்னா… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவான். அங்க போகனும். அதுக்குள்ள ரெண்டு நாளில் முடிக்க வேண்டியதை முடிக்கணும்” என்ற மகி, “நாளைக்கு நேர்காணல்… நம்ம டீமுக்கு புது ஆள் எடுக்க. சோ, நான் இல்லைன்னாலும் உனக்கு மேனேஜ் பண்ண ஆள் வந்திடுவாங்க” என்றாள்.
“மகி… அங்க…”
“நீ முதலில் கிளம்புடா. ஏழு மணிக்கு அப்பாயின்ட்மெண்ட்” என்ற மகி விரட்டாத குறையாக தினேஷை அனுப்பி வைத்தாள்.
“எதுவா இருந்தாலும் கால் பண்ணு மகி. வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணு” என்று ஆயிரம் பத்திரங்கள் வாசித்துச் சென்றான்.
தினேஷ் தனது பாதுகாப்பு குறித்து கொஞ்சம் சுயநலம் தான். இருப்பினும் எவ்விடத்திலும் நண்பர்களை விட்டுக் கொடுத்திட மாட்டான். அன்று அவன் தன்னால் அங்கு போக முடியாது சொன்னதற்கான காரணம் கூட, வந்திருக்கும் தகவல் உண்மை என்று தெரியாது, கடிதத்தையும், இணைய செய்திகளையும் மட்டும் வைத்து மனைவியை விட்டு எப்படி செல்வது என்ற குழப்பத்தில் தான். அதனை புரிந்துகொண்டதால் தான் மேற்கொண்டு அவனிடம் நண்பர்கள் வாதம் செய்திடவில்லை.
இன்று கண்ணுக்கு முன் ஒரு மாயாஜாலம் போல் வித்தை நடந்திருக்க, அதை சொன்னால் மகி நம்புவாளா என்று சொல்லாதுவிட்டாலும், அவளை தனித்து விட்டுச் செல்ல மனமில்லை.
மருத்துவமனை சென்றும் இரண்டு முறை மகிக்கு அழைத்து எல்லாம் ஓகே தானே எனக் கேட்டிருந்தான்.
தினேஷ் இரண்டாவதாக கால் செய்தபோது நேரம் எட்டு முப்பதை தாண்டியிருந்தது.
அதுவரை அனைத்தும் நன்றாகத்தான் சென்றது.
“எனக்கு மார்னிங் பப்லிஷ் ஆக வேண்டிய பேப்பர் புரூஃப் பார்க்க வேண்டியது இருக்கு மகி. நீங்க வொர்க் முடிச்சிட்டா கிளம்பிடுங்க” என்று சொல்லி வினைதீர்த்தான் மற்றொரு தளம் சென்றிட… ஆழ்ந்த நிசப்தம். அத்தளத்தில் மகி மட்டுமே இருந்தாள். தளம் என்றால் பெரும் பரப்பு அல்ல… நடுவில் கருப்பு கண்ணாடி தடுப்பால் பிரிக்கப்பட்ட மற்றொரு குழுவுக்கான பகுதியும் அங்கேயே இருந்தது.
ஆனால் இரண்டு பகுதிக்கும் எந்தவித தொடர்புமில்லை. பார்த்துக்கொள்ளக் கூட முடியாது. கருப்பு கண்ணாடி என்பதால் அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்பது தெரியாது. தடுப்பின் கதவினை திறந்து கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் பார்த்துக்கொள்ள முடியும்.
மகி அமர்ந்திருந்த இடத்தில் மட்டும் அவளது தலைக்கு மேல் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் மற்ற இடங்கள் யாவும் இருள் மூழ்கியிருந்தது.
மகி வேகமாக கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தாள்.
தனிமையில் ஒருவித அச்சம் சூழ… விரல்களில் தன்னைப்போல் நடுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
முழுக்க குளிரூட்டப்பட்ட பகுதி. மெல்ல மெல்ல அனல் கூடியது.
ஏசி தன்மை குறைந்து விட்டதோ என்று எழுந்து சென்று சரிபார்த்து வந்து அமர்ந்தாள். சுற்றி ஒரு பார்வை அலசினாள். விட்ட வேலையை தொடர நெஞ்சில் ஒருவித பதற்றம்.
குளிர் இதமாக பரவிய இடம் மீண்டும் வெப்பம் பூண்டது.
மகியின் நெற்றியில் வியர்வை பூக்க… இருந்த இடமிருந்தே குளிரூட்டியின் பொத்தானை சரி பார்த்தாள்.
மகி கண்கள் பார்க்க பொத்தான் மெல்ல மேலேறியது. வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அவ்விடம் சூழ்ந்தது.
நெற்றி ஓரம் வியர்வை வழிய, புறம் கை கொண்டு துடைத்தவள், அலைபேசியை எடுத்து சமரின் எண்ணை அழுத்த, அலைபேசி தவறி கீழே விழுந்தது.
குனிந்து எடுக்க முயன்றவளின் கரம் தரை தொட முனைய, பல கோப்புகளுக்கு நடுவில் வைக்கப்பட்டிருந்த கடிதம் அவளின் விரல் அருகே பறந்து வந்து அமர்ந்தது. தலை கவிழ்ந்து.
என்ன பேப்பரென்று நடுக்கத்தோடு எடுத்து திருப்பிட… அது தும்பை முதல்முறை எழுதிய கடிதம்.
சட்டென்று இருக்கையோடு பின் சரிந்து நகர்ந்தவளின் கரம் கடிதத்தோடு சேர்ந்து நெஞ்சில் அழுந்தியிருந்தது.
மகியின் கண்களில் அப்பட்டமான பயம். மூச்சு வாங்கியதில் நெஞ்சம் ஏறி இறங்கியது. அவளால் இருக்கையை விட்டு எழ முடியவில்லை.
சுற்றி மெல்லிய சிரிப்பு சத்தம் அலையாய் பரவியது. உடன் அப்பகுதியின் வெப்பமும் அதிகரித்தது.
அடுப்பிற்குள் இருக்கும் உணர்வு.
வெப்பம் தாங்க முடியாது தவித்தாள்.
சிரிப்பு சத்தம் அதிகரிப்பதை உணர்ந்தாள்.
பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கியவளின் கரு விழிகள் இரண்டும் பக்கவாட்டில் ஒரு திசையில் நிலைக்க…
திடம் வரவழைத்து…
“யாரு?” எனக் கேட்டாள். ஓசை எழும்பாது காற்றாய் ஒலித்தது.
சிரிப்பின் ஒலி இடியென காதில் நுழைந்தது.
மகி கண்களை இறுக மூடி திறக்க, அவளுக்கு முன்…
ஒவ்வொருவருக்குமாக பிரிக்கப்படும் தடுப்பின் மீது ஒய்யாரமாக அமர்ந்திருந்தது அரூபம்.
மகி விழிகள் விரிய கை நீட்டி, “யார்… யாரு… நீ” என திக்கித்திணறிக் கேட்க,
வெண் புகையாய் காட்சியளித்த உருவம் மெல்ல கரும் புகையாக மாற்றம் கொண்டது.
மகியின் நாசியை பிணம் எரியும் வாடை நிறைத்தது.
சலங்கை ஒலியோடு சேர்த்து குதிரை கணைப்பின் சத்தமும் சேர்ந்து கேட்டது.
மகிக்கு இருக்கும் இடம் விட்டு எழ முடியவில்லை. மரத்த நிலை. உடலை அசைத்திட முடியவில்லை.
நெஞ்சுக்கூடு காலியானது.
காக்கை இரையும் சத்தம் கேட்க… காதில் வலி கூடியது.
கரும்புகை உருவம் விகாரமாக மகியை பார்த்து சிரித்திட… புகையில் இரு கண்கள் மட்டும் அடர் சிவப்பாய் காட்சியளித்து, மகியின் மொத்த பயத்தையும் வெளி கொண்டு வந்தது.
பயத்தில் எழுந்து ஓட முடியாது, மகியின் கண்கள் நீரை வழியவிட,
அரூபம் பட்டென்று தீப்பிடித்து எரிந்தது.
மகிக்கு தன் உடலே எரிவது போல் எரிச்சல். தோல் முழுக்க சிவந்து ஆங்காங்கே திட்டு திட்டாக உரிந்தது.
“நான் கூப்பிட்டேன்ல உன்னை… ஏன் வரல?” அத்தனை இறுக்கமாக கடுமையாகக் கேட்டிருந்தது அரூபம்.
மகியால் வாய் திறந்திட முடியவில்லை.
அரூபத்தின் கை நீண்டு மகியின் தொண்டையை இறுக்கி பிடித்தது.
மகியின் கண்கள் சொருக…
“லட்டு” என்று கதவினை திறந்து கொண்டு சமர் வர சடுதியில் அனைத்தும் மாற்றம் கொண்டது.
மகி இருக்கையில் மயங்கி தொய்ந்து சரிந்திருந்தாள்.