1. மயிலாஞ்சி

மயிலாஞ்சி

 

அத்தியாயம்-1

 

நெற்களஞ்சியம் என்ற பெயர் போற்றும் தஞ்சை மண்ணில், வேப்பத்தூர் கிராமத்துக் காலைப்பொழுது, வயல்வெளிகள் தங்க நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தன. மேலே கம்பீரமாய் ஒளி வீசும் வான் தலைவனைப் பார்த்து, தான் சுமந்திருக்கும் தானியப் பாரத்தின் செருக்காலும், காதலின் வெட்கத்தாலும் தலையை மெல்ல குனிந்து நின்றன அந்த நெற்கதிர்கள். வயல்வெளியின் நடுவே தார் சாலையில் ஒரு ஜீப் வந்துக் கொண்டிருந்தது.

 

ஜீப் ஓட்டிக் கொண்டு வந்தவன் பெயர் அதியன் வயது முப்பது. அவன் முகத்தில் ஏதோ ஒரு கலக்கத்தின் ரேகை ஓடியது. அருகில் அவன் கையால் தாலி வாங்கிக் கொண்டவள். பெயர் தேஜஸ்வினி நெற்றி வகுட்டில் செந்நிற குங்குமம், புருவங்களுக்கு இடையில் சிறிய பொட்டு, மூக்கில் சிறிய தங்க வளயம், செவ்விதழுக்கு லேசான சாயம், அது போக இருக்கட்டுமேன்னு சின்னதாய் திருஷ்டி பொட்டு, கன்னத்தில் ஒரு ஓரமாக. இருபதே வயதானவள். கழுத்தில் கருப்பு சிவப்பு மணிகளும் அதற்கு நடுவே தங்க குமிழி வடிவிலான தாலி, தான் தமிழ்நாட்டு பெண் இல்லை என்று எடுத்து கூறியது.

 

அவள் கைகளில் திருமண வளையல்கள். கருஞ்சிவப்பு மருதாணி கையில் சிவந்து இருந்தது. பார்ப்பதற்கு சிறு பிள்ளை போல் தெரிந்தாலும், நடிகை பிரியங்கா மோகன் முக ஜாடை, தலையில் முந்தானையால் முக்காடு போட்டு இருந்தாள். வழிநெடுக வயல்வெளிகள். காற்றில் ஆடும் நெற்பயிர்களை ரசித்துக் கொண்டிருந்தாள். தமிழ் மண்ணின் வாசம் அவளை ஒரு புது உலகத்திற்குள் புகுத்திக்கொள்ள போகிறாய் என்று சொல்லியது. புதிய ஊர், புதிய இடம், புதிய உறவுகள், எல்லாவற்றுக்கும் மேலாக அவளுக்கு பரிச்சியமே இல்லாத இந்த தமிழ் மொழி? எப்படி அவளை இங்கு பழக்கப்படுத்திக் கொள்ளப் போகிறாள் என்ற தயக்கம் வேறு.

 

தேஜஸ்வினி காற்றில் ஆடிய முடி கற்றையை, ஒதுக்கி விட்டபடி அதியனைப் பார்த்தாள். அவன் கரங்கள் ஸ்டேரிங்கை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. அவன் அணிந்திருக்கும் சட்டைக்கு அடங்காத புஜங்கள். சிலுசிலு காற்று அவன் மார்பை தீண்டி போகட்டுமென… சட்டையியின் இரு பொத்தான்களை கழட்டிவிட்டிருந்தான். முறுக்கு மீசையும் போலீஸ்காரன் என்று பார்த்தவுடன் சொல்லும் அளவிற்கு கேசம், காற்றுக்கும் அசைவேனா என்று விரைப்பாக அவனைப் போலவே கம்பீரமாக இருந்தது.

 

“எங்கே போறோம்” அவள் மொழியில் அழகாக கேட்டாள். அவனிடம் பதில் இல்லை, ஆனால் அம்பு போன்ற கூர்மையான பார்வையை அவள் மீது வீசினான். அந்த பார்வையின் அர்த்தம் புரியாதவள் மெல்லியதாக சிரித்தாள். அவன் கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டான். தேஜஸ்வினி முகம் காற்று போன பலூன் போல் மாறியது. அவள் மீண்டும் வயல்வெளிகள் அழகைப் பார்த்தபடி அமைதியானாள்.

 

வயல்வெளிகள் கடந்து வீடுகள் வந்தது. இடம் வலம் என இரண்டு தெரு தாண்டி, ஓர் பழைய பாரம்பரிய மச்சு வீட்டின் வாசலில் ஜீப் நின்றது. வண்டியின் சத்தம் கேட்டதும் முதலில் அதியனின் தம்பி வெளியே வந்தான். வயது இருபத்தைந்து ட்ராக்ஸ் டி-ஷர்ட் அணிந்து கொண்டு இன்னும் பதினாறை கடக்காத பிள்ளை போல குறும்பும் பேச்சுமாய் வலம் வருபவன்.

 

“எம்மோய்…! அண்ணே வந்துருச்சி” என்று ஊரே கேட்கும் அளவுக்கு கத்திவிட்டு, திண்ணையில் அமர்ந்து கால் ஆட்டிக் கொண்டிருக்க, அதியன் அக்கா ஆர்த்தி, சொந்த தாய்மாமன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். ஊரோடு இருக்கிறாள் என்பதால், மணிக்கொரு முறை தாய் வீட்டிற்கு வந்து வந்து போவாள். ஆர்த்தி, ஆரத்தி தட்டோடு வாசலில் வந்து நின்றாள். அதியன் அம்மா செண்பகம் அடுப்படியில், முந்தானையில் மூக்கை சிந்திக் கொண்டு, வெங்காயம் உரித்துக் கொண்டே,

 

“யாரு இவன் வரலன்னு அழுதாங்க.. அவன அப்படியே போக சொல்லுடா, அவ இவனுக்கு மாலை போட்டாளாம் இவன் தாலி கட்டுனானாம், கதை சொல்லிட்டு யாரோ ஊர் பேர் தெரியாத பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வரான்.. அவன நான் வந்து அழைக்கனுமாக்கும்” என்று புலம்பிக் கொண்டே வாசலைப் எட்டிப் பார்த்தார்.

 

“இது தான் என் வீடு.. இறங்கு!” என்று கடுகடு முகத்தை வைத்துக் கொண்டு அவள் மொழியில் சொல்ல, முந்தானையால் முகத்தை மறைத்துக் கொண்டு இறங்கி வந்தாள் தேஜஸ்வினி. ஆர்த்தி அவர்களை நிறுத்தி ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட தேஜஸ்வினி அமைதியாக இருந்தால். அதியனோ ஆர்த்தி கையை தட்டிவிட்டான். அவன் கோபத்தில் இருப்பது அவளுக்கு புரிந்தது. இருந்தாலும் அவனை வம்புக்கு இழத்தால் தான் அவளுக்கு அன்றைய நாள் போகும்.

 

“டேய் காசு போடுடா!” என்றாள் ஆர்த்தி.

 

“இப்ப அது ஒண்ணு தான் கேடு போடி” என்று கூறி அதியன் உள்ளே நுழைய,

 

“அப்பாடா என் ரூட் கிளியர்..!” என நித்தியன் அதியனைப் பார்த்து சொல்ல, அதியன் அவனை முறைத்துவிட்டு, முன்னாடி உள்ளே போக தாலி கட்டியவளோ அப்படியே வாசலில் நின்றாள். நிலைப்படியை தாண்டும் போது தான் அவளைத் திரும்பி பார்த்தான்.

 

“தேஜூ..!” என்றதும் நாய் குட்டி போல் அவன் பின்னால் ஓடினாள். நித்தியனோ தேஜஸ்வினி முகத்தைப் பார்க்க முயற்சி செய்து தோற்று போக,

 

“டேய்.. எரும.. இங்க வா.. அவன் லக்கேஜ்லாம் எடுத்துட்டு வா போ” என ஆர்த்தி நித்தியனை துரத்தினாள்.

 

அதியன் அவன் அறைக்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டான். வயலுக்குச் செல்ல வெளியே வந்து பைக்கை உதைத்தான். அவன் கோபத்துக்கு அதுவும் நாலு உதை வாங்கிக் கொண்டு சத்தம் போட்டது. ஆர்த்தி பைக் சத்தம் கேட்டதும் ஓடி வந்து கத்தினாள்,

 

“அவள தனியா விட்டுட்டு எங்கடா போற?! நாங்க பேசுனா புரியுமாடா அவளுக்கு! நில்லுடா.. டேய்..டேய்..” ஆர்த்தி கத்த.. கத்த.. அவன் காதில் வாங்காமல் பத்தடி தூரம் தாண்டிச் சென்று இருந்தான்.

 

தேஜஸ்வினி என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக அதியன் மெத்தையில் அமர்ந்து இருந்தாள்‌.

 

இவ்வற்றை எல்லாம் அதியனின் தாத்தா பரமசிவம், சாய்வு நாற்காலியில் சாயந்து புத்தகம் படித்தபடி கவனித்துக்கொண்டிருந்தார்.

 

ஆர்த்தி தன் அம்மாவுக்கு சமையல் செய்ய உதவ போனாள்.

 

“ஏண்டி ஆர்த்தி பொண்ணு எப்படி இருக்கா? நம்ம அதிக்கு ஏத்த பொண்ணா லட்சணமா இருக்காளா?” என செண்பகம் ஆர்வமாக மெதுவாக கேட்டார்.

 

“என்னமோ ஆகாத மருமக மாதிரி அந்த பேச்சு பேசுன! அவ்வளவு ஆசையா இருந்தா நீயே போய் உன் மருமகள பாரு..” என்றாள் ஆர்த்தி.

 

“ம்க்கும்.. மண்ணாங்கட்டி ஆசை.. போடி..! அவனுக்காக நான் எவ்வளவு கனவு கண்டு இருப்பேன். எப்படியெல்லாம் கல்யாணம் பண்ண நினைச்சேன் தெரியுமா! அதிக்கு எவ்வளவு அழகாகன பொண்ணேல்லாம் வரன்ல வந்தது தெரியுமா. உங்க அத்தை மவள கூட வேண்டாம்னு தானே சொன்னான். எடுபட்ட பய.. ஊர் ஊரா சுத்துற எனக்கு எதுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு இப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கான்” என செண்பகம் ஆதங்கத்தை சொல்ல, நித்தியன், அவன் அம்மா அருகில் வந்து, ஒரு பித்தளை குடத்தை கவிழ்த்து போட்டு, அதன் மீது அமர்ந்து கொண்டு கேரட்டை மென்றுக் கொண்டே,

 

“எம்மா..! அண்ணனுக்கு பார்த்த பொண்ணுங்க லிஸ்ட்ட என் கிட்ட குடு. நல்லதா பார்த்து.. உனக்கு பிடிச்ச பொண்ணா கல்யாணம் பண்ணிக்கிறேன். உன் ஆசையும் நிறைவேறும்ல” என்றான்.

 

“ஒருத்தன் பண்ண அக்கபோரு பத்தல.. நீயுமா! எந்திரிச்சு போடா” என நித்தியனை முதுகில் மொத்தினார். அவனும் வாங்கிக் கொண்டு முதுகை தேய்த்தபடி கேரட்டை மென்றுக் கொண்டிருந்தான்.

 

“ஏய் ஆர்த்தி.. அந்த பொண்ணு சாப்டுச்சா இல்லையா கேளுடி. அவன் கூட்டிட்டு வந்து எனக்கென்னனு போயிட்டான்.” என செண்பகம் கேட்க,

 

“மருமக மேல ரொம்ப தான் அக்கறை” என்று ஆர்த்தி சலித்துக் கொண்டே, அதியன் அறைக்குச் சென்றாள். உள்ளே செல்லும் முன் கதவைத் தட்டினாள் ஆர்த்தி. தேஜஸ்வினி அதிர்ந்து எழுந்து நின்றாள்.

 

“பாஷை புரியாம இவ கிட்ட என்னத்தை பேச.. மூஞ்சிய வேற மறைச்சிக்கிறா!” என ஆர்த்தி முணுமுணுத்தபடி அவள் அருகே செல்ல, தேஜஸ்வினி பின்னால் நகர்ந்தாள்.

 

“பயப்படாதமா.. நான் அதியன் அக்கா.. ஆர்த்தி..!” என்று சுவற்றில் மாட்டி இருந்த புகைப்படத்தைக் காட்டினாள். அது அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கும் படம், அதியனின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, நித்தியன், ஆர்த்தி என்று ஒரு படம் மட்டும் பெரியதாய் மாட்டி வைத்திருந்தான் அதியன்.

 

“இங்க வா..!” என ஆர்த்தி கை நீட்ட, தேஜஸ்வினி மெல்ல ஆர்த்தியின் கரம் பற்றினாள்.

 

“பயப்படாத எதுவும் பண்ண மாட்டேன் உட்காரு.” என ஆர்த்தி அவள் முக்காடு விலகி, அவள் முகத்தைப் பார்த்தாள். ‘நல்லா லட்சணம் அழகா தான் இருக்கா!’ என ஆர்த்தி மனதில் நினைத்தாள்.

 

“சாப்பிட்டியா..!” என ஆர்த்தி சைகையில் கேட்டாள் ஆர்த்தி, அவள் “இல்லை” என தலையை அசைத்தாள்.

 

“எருமை மாடு.. சாப்பாடு கூட வாங்கி கொடுக்காம.. வெயில்ல கூட்டிட்டு வந்திருக்கான்!” என்று ஆர்த்தி அதியனைத் திட்டினாள், தேஜஸ்வினிக்கு தான் ஏதும் புரியவில்லை.

 

“இரு.. உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என சைகையில் சொன்னாள்.

 

அவள் “வேண்டாம்” என்று வேகமாய் தலையை ஆட்டிவிட்டு, “அவர் வரட்டும்” என்றாள் தாலியைக் காட்டி அவள் மொழியில் சொல்ல, ஆர்த்திக்கு புரிந்துபோக மெல்லச் சிரித்தாள்.

 

“அவன் இப்போ வர மாட்டான்.. நீ வா நம்ம சாப்பிடலாம்” என ஆர்த்தி கேட்டும், அவள் மாட்டேன் என்று தலையை ஆட்டினாள்.

 

​“சரி உன் இஷ்டம்… ஆனா பசியோடு இருக்காத, உனக்கு எப்போ பசிக்குதோ வந்து சாப்பிடு” என்று புன்னகையுடன் அவளது தோளைத் தட்டிவிட்டு வெளியேறினாள் ஆர்த்தி. மொழி புரியாவிட்டாலும் ஆர்த்தியின் அக்கறை புரிந்தது.

 

​அவள் சென்றதும் அறை மீண்டும் அமைதியானது. சுவரில் மாட்டியிருந்த குடும்பப் புகைப்படத்தையே தேஜஸ்வினி நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் கம்பீரமாக நிற்கும் அதியனின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, இப்போது நிஜத்தில் இல்லை என்று எண்ணி அவளது கண்கள் லேசாகக் கலங்கின. ஆனாலும், அவளது விரல்கள் தன் கழுத்திலிருக்கும் தங்கக் குமிழித் தாலியை மென்மையாகத் தடவிக்கொண்டன, அவன் எங்கு சென்றாலும் தன் வாழ்வு அவனுடன் தான் என்ற உறுதியோடு அவள் காத்திருக்கிறாள்.

 

அதியன் வயலுக்கு வந்தான். பரம்பரை சொத்தாக இந்த இருபது ஏக்கர் நிலம், காலம் காலமாக உழுது உழைத்து, இன்று வரை விவசாயத்தை உயிர்புடன் வைத்திருக்கிறார்.. அதியனின் அப்பா ராஜன். அதியன் வண்டியை நிறுத்திவிட்டு, சட்டையை கழட்டி மரத்தின் கிளையில் போட்டுவிட்டு, மாமரத்தின் நிழலில் கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டான். விளைச்சலுக்கு தண்ணீர் மடைமாற்றி கொண்டிருந்த அதியனின் அப்பா, அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட, வரப்பில் நடந்து போன ஒருவர் ராஜனைப் பார்த்து,

 

“என்ன மச்சான்.. புது மாப்பிள்ளைக்கு வீட்டுல புழுக்கமா காத்து வாங்க வந்துட்டாரோ!” என்று கிண்டலாக கேட்க,

 

“யோவ் சும்மா போறியா.. அடுத்தவன் வயித்தெரிச்சல கிளறிட்டு!” என்றார் ராஜன்.

 

“அதியன் முன்னாடியே பார்த்து வச்சிட்டுதான்.. முறை பொண்ண கூட வேண்டாம்னு சொன்னானோ.. சரியா பிடிச்சான்யா உன் புள்ள ஒரிசாவுல இருந்து..!” என்று சொன்னவர் மண்டையில் சிறிய கல் ஒன்று பொட்டுன்னு விழவும், “ஆத்தாடி… ஆளு முழிச்சிட்டு தான் இருக்கானா!” என்றபடி அவர் பின்னந்தலையை தேய்த்தபடி விறுவிறுவென வரப்பில் ஓடினார்.

 

“எப்படா வந்த!” என்றபடி வந்து பேரன் காலடியில் அமர்ந்து, பேரனின் காலைப் பிடித்தபடி கேட்டார் பூங்கோதை பாட்டி,

 

“இப்ப தான்” என்றவன் கண்கள் கூட திறக்கவில்லை,

 

“ஏதாச்சும் சாப்ட்டியா?”

 

“இல்ல கிழவி.. காலவிடு நான் என்ன நடந்தா வந்தேன். காலை பிடிச்சு விட்டுட்டு இருக்க” வெறுப்புடன் பேசினான்‌.

 

“இல்ல ராசா.. எம்புட்டு தூரம் பயணம் பண்ணி வந்திருக்க.. அசதியா இருக்கும்மில்ல,” என்றார் பாட்டி,

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல நீ போறியா” என அதியன் பாட்டியை துரத்துவதிலேயே இருந்தான். பாட்டியின் குணம் அறிந்தவன்.

 

“ஏன் ராசா.. அந்த பொண்ணு ஏதாச்சும் சொல்லுச்சா!” என கிழவியும் விடாமல் கேள்வியாய் கேட்க,

 

“அடி..கிழவி.. எந்திரிச்சு போறியா நிம்மதியா தூங்க கூட விட மாட்டுற” என்று அதியன் சொல்லவும். தேஜஸ்வினியை பிடிக்காமல் தாலி கட்டி அழைத்து வந்துவிட்டான் போல, என்று பாட்டி நினைத்துக் கொண்டே,

 

“கோவப்படாதடா.. வேண்டாம்னா சொல்லு உனக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன். அந்த கழுத எங்கனா ஓரமா இருந்துட்டு போவட்டும்.” என்க, அதியன் கண்கள் சிவக்க எழுந்தமர்ந்து கத்தினான்‌.

 

“இப்படியே பேசிட்டு இருந்தன்னு வைய்யி.. உன் தலையில கல்ல போட்டு கொன்னுட்டு.. தாத்தாவுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்.. எந்திரிச்சு போ” என விரட்டினான்.

 

“எப்பா.. எப்பா.. பாட்டன மாதிரியே கோவப்படுறது.. சரி நான் போறேன் சாப்பிட வீட்டுக்கு வந்து சேரு” என்றபடி பூங்கோதைப் பாட்டி மெல்ல நடந்து சென்றது.

 

அதியன் அப்பா வயல் வேலையை முடித்து கரையில் ஏறினார், பம்புசெட்டில் தண்ணீரில் முகம், கைகால் கழிவிக் கொண்டு, மகனின் அருகில் வந்தமர்ந்தார்.

“என்னபா அதியா போன வேலை என்னாச்சு?” என ராஜன் கேட்டார்.

 

கல்யாணம் ஆனது பற்றி அவன் முன்னாடியே கூறியதால் அதைப் பற்றி பேசாமல் தவிர்த்தார். பிள்ளையின் கோபம், அவன் செய்யும் வேலையின் மீது அவன் கொண்ட நேசம், இந்த ஊரில் அவனுக்கு இருக்கும் மதிப்பு, என்று மகனின் அசைவுகளை அறிந்தவர் எளிதில் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துக்கொள்வார்.

 

“முடியல ப்பா.. அதுக்குள்ள அங்க நடந்த பிரச்சினையில இதெல்லாம் நடந்துடுச்சி” என்றார்.

 

“சரி வாப்பா வீட்டுக்கு போவோம்”

 

“இல்லப்பா நீங்க போங்க எனக்கு மனசு சரியில்ல”

 

“சரி சீக்கிரம் வீட்டுக்கு வா” என்றவர் வீட்டுக்கு புறப்பட எழுந்தார். அந்த நேரம் ஒருவர் பைக்கில் வந்து டயர் தேயும் அளவிற்கு பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தி,

 

“எப்பா ராஜா! உம்ம தங்கச்சி மவ பயிருக்கு அடிக்க வச்ச பூச்சிக்கொல்லி மருந்த எடுத்து குடிச்சிட்டாலாம் வாயா.. மாமன் வந்தா தான் ஆஸ்பத்திரிக்கு போவேன்னு, பிடிவாதமா கதவை தாப்பா போட்டுட்டு உட்கார்ந்து இருக்கு.” என்றார் மூச்சு வாங்க கூறினார்,

 

“எவ்வளவு நேரமாச்சு” என்றபடி அதியன் வேகமாக எழுந்தான்.

 

“கால் மணி நேரம் ஆகுது வாய்யா”

 

“எப்பா.. நீ போய் இப்போதைக்கு உப்பு தண்ணீர் அவ வாயில ஊத்தி வந்தியெடுக்க வை. நான் போய் ஜீப் எடுத்துட்டு வரேன்” என்றவன் வேகமாக சட்டையை எடுத்து போட்டான், பொத்தன்கள் போட கூட நேரமில்லாமல் வண்டியை கிளப்பிக் கொண்டு போனான்.

 

“சரிப்பா வெரசா வா” என்று கத்திவிட்டு ராஜன், தகவல் சொல்லவந்தவரின் வண்டியில் புறப்பட்டார்.

 

 

“பாவிமகளே ஏண்டி இப்படி பிடிவாதம் பண்ற எந்திரிடி ஆஸ்பத்திரி போவோம் வாடி!” என்று கத்தியது, அத்தியனின் அத்தை மங்களம். ராஜனின் உடன்பிறந்தவர். மங்களத்தின் கணவர் கணபதி செண்பகத்தின் அண்ணன். தலையில் துண்டு போட்டுக் கொண்டு இடிவிழுந்தது போல் குத்தங்காலிட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தார்.

 

“மாட்டேன்.. நான் செத்தாலும் என் மாமன் மடியில என் உயிர் போகட்டும். என்னை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டு.. எவளையோ கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கு. என் மாமனுக்கு இல்லாத இந்த உடம்பு மண்ணுக்கு போகட்டும்” என்று கத்தியது ரத்னா. அதியனின் அத்தை மகள். அதியனை விட ஐந்து வயது தான் சிறியவள். அதற்கே வயசு வித்யாசம் என்று காரணம் சொல்லி ‘கல்யாணம் செய்துகொள்ள மட்டேன்’ என தவிர்த்தான்.

 

 

“மருமகளே..!” என்றபடி ராஜன் சன்னல் வழியாக கூப்பிட,

 

“மாமா..!” என்றாள் ரத்னா. கண்கள் கலங்கி சிவந்து இருந்தது. தலை கலைந்து பாவடை தாவணியில் பத்திரகாளி போல் இருந்தாள்.

 

“கதவ திறமா ரத்னா” என ராஜன் கெஞ்ச,

 

“மாட்டேன்.. மாட்டேன்.. அதி மாமா வந்தா தான் வருவேன்.” என்றவள் தலையை பிடித்துக்கொண்டு மயக்கத்தில் தள்ளாட, ராஜன் வேறு வழியின்றி கடப்பாரையை வைத்து கதவை உடைத்தார்.

 

“ரத்னா.. ரத்னா.. இங்க பாருமா..!” என ராஜன் அவள் கன்னம் தட்டி எழுப்பினார். வாயில் உப்பு கரைசல் தண்ணியை ஊற்றி பார்த்தார்கள். அவள் கண் திறக்கவில்லை.

 

வாசலில் புழுதி பறக்க ஜீப் வந்து நின்றது. அதியன் வந்த வேகத்திற்கு, ஒரே பாய்ச்சலில் கூட்டத்தை விலகிக்கொண்டு போய்.. மயங்கி கிடப்பவளை தோளில் தூக்கி வந்து ஜீப்பில் கிடத்தி, ஏற்றிக் கொண்டு போனான்.

 

ரத்னா பிழைப்பாளா?

 

தேஜஸ்வினி நிலை என்ன?

 

இந்த திடீர் கல்யாணத்துக்கு காரணம் என்ன?

 

தொடரும் மயிலாஞ்சி ✍️

 

மறக்காம கருத்துக்களைப் பதிவு பண்ணுங்க வாசக அன்பர்களே 🙏

error: Content is protected !!
Scroll to Top