இருள் நிழலாய் நானே 6

இருள் நிழலாய் நானே 6

“ஏட்டி இருட்டப்போவுது இன்னும் அந்த பாறை மேல குத்த வச்சி உட்கார்ந்திருக்க… எந்திருச்சு வா… வந்து தின்னுட்டு உறங்குற வழியை பாரு” என்று பருத்தி தன் மகளை கடிந்தவராகக் குடிசைக்குள் சென்றார்.

எப்போதும் சில்லென்று வீசும் காற்று இன்று தகிப்பைக் காட்டுவது போலிருந்தது.

பாறை மீது அமர்ந்து கை நீட்டினால் தொட்டுவிடும் மலையை வெறித்து பார்த்திருந்தாள் தும்பை.

தூரத்தில் மூன்று பனைமரம் தனித்து நின்றிருந்தது. அதனை கடந்து சென்றுவிட்டாள் இவ்வூரிலிருந்து தப்பித்துவிடலாம். என்ன மாயமோ, அத்தனை எளிதில் உடமைகளை எடுத்துக்கொண்டு அந்த மூணு பனை மரத்தை தாண்டி சென்றிட முடியாது. செல்லலாம், சென்றால் மாலைக்குள் வீடு திரும்பிட வேண்டும்.

என்ன சாபமோ… சுற்றுப்புறத்தில் இருந்த கிராமங்கள் எல்லாம் மாயமாகி வெறும் வறண்ட பூமியாக மாறியுள்ளது. எப்படி அம்மனிதர்கள் சட்டென்று காணாமல் போயினர் என்பது இன்றளவிலும் கேள்விக்குறியே!

இங்கிருந்து நகர பகுதிக்கு செல்லும் வழி முழுக்க ஆள் அரவமற்ற பொட்டல் நிலம் தான் காண முடியும்.

அங்கிருந்து இந்த மலை கிராமத்திற்கு வர பல மயில்கள் பொட்டல் நிலம் கடந்து, புதர் காட்டினைத் தாண்டி… மூன்று பனை மரத்தை கடக்க வேண்டும்.

பனை மரத்திற்கு முன்னதாகவே பருத்த அடர்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அதுதான் இந்த கிராமத்திற்கு தலை வாசல். இரவில் இன்றும் யாரோ ஒரு பெண் அம்மரத்தில் தூக்கில் தொங்குவது போல் தெரியுமாம். இப்போதும் பலர் பார்ப்பதாகக் கூறுகிறார்கள். யாரும் பார்த்ததும் பிணம் தீப்பிடித்து எரியுமாம். சடுதியில் முகத்திற்கு முன் வந்து கோரப்பற்கள் காட்டி சிரிக்குமாம்.

மரத்தில் பிணம் தோன்றும் நேரம் குதிரையின் கணைப்பின் ஒலியும், காக்கைகள் இரையும் சத்தமும் அதிகமாகக் கேட்குமாம்.

இவை யாவும் நிகழும் நேரத்தில் உயிர்பலி ஒன்று நிச்சயம் ஏற்படுமாம்.

இது போன்று பல கட்டுக்கதைகள் அக்கிராமத்தில் முன் காலங்களில் இருந்தே சொல்லப்பட்டு வருகிறது.

அக்கிராமத்தில் இப்படி தும்பை அறிந்தே மூன்று பேர், மலை அடிவாரத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

தும்பை எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். அதுவே வெகு சிரமங்களுக்கு நடுவில் அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம் ஒன்றிற்கு சென்று படித்தாள்.

முன்னோர்கள் அறிந்தவை பருத்தியின் சிறு வயதில் கதைகளாக மட்டுமே உலா வந்தன. திடீரென கதைகளாக மட்டுமே கேட்கப்பட்டவை கண் முன்னே நடக்க ஆரம்பித்தது.

அப்போது தான் அடுத்தடுத்து பல உயிரிழப்புகள் ஏற்பட… அக்கிராமம் கொண்ட சாபம் என்று சுற்று கிராம மக்கள் வெளியிடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

பருத்தியின் அக்கா கோமளா அப்படித்தான், பக்கத்து கிராமத்து நபர் ஒருவரை விரும்பி, தனது கிராம கட்டுப்பாட்டை மீறி அவருடனே சென்றுவிட்டார்.

கோமளா செல்வதற்கு முன்… “இன்னும் இந்த கதையெல்லாம் நீயும் நம்பிட்டு வாழ்க்கையை தொலைச்சிடாத பருத்தி… பக்கத்து ஊருல பள்ளிக்கூடம் இருக்கே. எப்படியாவது படி. இதெல்லாம் வெறும் கதைன்னு உனக்கு புரியும்” என்று எடுத்துக் கூறினாள்.

“உன் ஆளு வாத்தி சொன்னதை எனக்கு சொல்லாதக்கா. கண்ணு முன்ன செத்துப்போறாங்க… எப்படி நம்பாம இருக்க சொல்ற” என்று கேட்டு, “என்னால உன்னை மாதிரி ஆயி, அப்பனை விட்டு வர முடியாது. செத்தாலும் இங்கவே மட்கி போயிக்கிறேன்” தன் தமக்கையை உதறியிருந்தாள்.

வருடங்கள் செல்ல… எல்லாம் மெல்ல அடங்கியது. பருத்திக்கு தும்பை பிறக்க, மறைந்த விடயங்கள் யாவும் மீண்டும் நடைபெற்றது. சிறிய வயதில் புரியாதவை எல்லாம் பருத்திக்கு ஓரளவு முதிர்ச்சி ஏற்பட்ட வயதில் புரியத் துவங்கியது.

காண்பது, கேட்பது யாவற்றையும் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

இதிலிருந்து தன் பிள்ளையாவது மீள வேண்டுமென தும்பையை பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்படித்தான் தும்பை எட்டாம் வகுப்பு வரை படித்தது.

அதீத கல்வி இல்லை என்றாலும், நன்மை, தீமை, உண்மை, பொய்மை எதென பகுத்தறியும் ஆற்றலை அக்கல்வி தும்பைக்கு கொடுத்திருக்க… மீண்டும் சில ஆண்டுகளாக தன் தாத்தா, பாட்டி காலத்தில் துவங்கி, தன் பெற்றோர் காலத்தில் அடங்கி, மீண்டும் தற்போது தன் காலத்தில் தொடர்கிறது என கண்டுகொண்டாள்.

ஆரம்பத்தில் தும்பை எதையும் நம்பவில்லை.

“கிராம கட்டுபாட்டிற்காக அப்பப்போ நீங்களே எதும் கதை கட்டிவிடாதீங்க. உங்களுக்கு ராவில் கேட்கும் சத்தம் எனக்கு மட்டும் எப்படி கேட்கமாட்டேங்குது” என்று நகர்ந்துவிடுவாள்.

அவளும் நம்பும் நாள் ஒன்று வந்தது.

ஒரு நாள் இரவில், கொல்லைப்புறம் செல்ல வந்த தும்பை, தூரத்தில் மரம் பற்றி எரிவதைக் கண்டாள்.

திடுக்கிட்டுப் போனாள்.

முயன்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லும் போது தான் கவனித்தாள், அந்த இருட்டில் மூன்று பனை மரம் அருகில் வந்திருப்பதை.

சட்டென்று கேட்ட குதிரையின் கணை ஒலியில் நெஞ்சில் நீர் வற்ற மெல்ல திரும்பிப் பார்த்தாள்.

மலைப் பாதையில் குதிரை செல்லும் டொக் டொக் என்ற சத்தம் கேட்டது.

வேறு திசையில் செல்வதை எண்ணி ஆசுவாசம் கொண்டவளாக மீண்டும் எரிவதை திரும்பிப் பார்க்க, மரம் எரியவில்லை… மரத்தில் ஒரு உருவம் தொங்கியபடி எரிந்து கொண்டிருந்தது.

சட்டென்று தலைக்கு மேல் நூறு காக்கைகள் பறப்பதை கண்டவள் அவற்றின் ஆக்ரோஷ ஒலியில் என்ன நடக்கிறது என புரியாது மயங்கி விழுந்திருந்தாள்.

காலை எழும்போது வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தாள்.

ஒரு நொடி இதயம் நின்று துடித்தது அவளுக்கு. நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கியபடி எழுந்து அமர்ந்தாள்.

“எத்தனை தரம் சொல்றது தும்பை. இப்படி பாதி ராவுல வெளிய வந்து படுக்காதன்னு” என்று கடிந்தபடி வெளியில் எங்கோ அந்நேரத்திற்கே சென்று வந்த பருத்தி வீட்டு வாயில் வேலிக்கு முன் நின்றே மகளை கடிந்து கொண்டார்.

“இன்னும் எத்தனை உசுரு போவுமோ? இனி சுள்ளி பொருக்கக்கூட மலை பக்கம் அடி வைக்க முடியாது போலிருக்கே பருத்தி” என்று தன் அன்னையிடம் அங்கலாய்த்தவாறு செல்லும் பக்கத்து வீட்டு பெண்மணியை பார்த்த தும்பை…

“இன்னைக்கும் உயிர் போயிருக்காம்மா?” எனக் கேட்டாள்.

“ஆமா தும்பை… இந்த தடவை மலைப்பாதை ஒத்தயடி இருக்கே அங்க… மத்தையா செத்து கிடந்தான்” என்ற பருத்தி வீட்டிற்குள் செல்ல… தும்பை அரண்டு போனாள்.

இரவு அவள் பனை மரம் நோக்கி செல்லும் போது மத்தையா அவர் வீட்டு மாடுகளுக்கு கொட்டைகையில் தீவினம் இட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவளது கருத்தில் படாதவர், இப்போது கண்ணில் காட்சியாய் தெரிந்தார்.

நம்புவதா, வேண்டாமா என்ற பெரும் குழப்பத்திற்கு பின் மலையின் ஒத்தயடி பாதையில் இரவில் தானே செல்ல முடிவெடுத்தாள்.

இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்தவள், மூன்றாம் நாள் இரவு பருத்தி உறங்கியதும் பிணம் எரிவதை கண்ட நேரத்திற்கு எழுந்து மலைப்பாதை நோக்கிச் சென்றாள்.

“தும்பை.”

யாரோ அழைக்கும் சத்தம்…

பட்டென்று நின்று திரும்பினாள்.

குதிரை ஒன்று ராஜ அலங்காரத்தில் கணைத்தபடி ஓடி மறைந்தது.

கண்கள் கொள்ளா அச்சம் இதயத்தை கவ்வி பிடிக்க… தூரத்தில் தெரிந்த மூன்று பனை மரம் தாண்டி ஆலமரத்தை உற்று நோக்கினாள்.

நிர்மலாமாய் காற்றில் அசைந்து கொண்டிருந்த விழுதுகள் ஒன்றில் சடுதியில் ஒரு உருவம் தொங்கியது.

“வா தும்பை” எனும் குரல் செவிகள் நிறைப்பதை உணர்ந்தவள், மூச்சு விடவும் பயந்தவளாக ஓடி வந்து வீட்டிற்குள் நுழைந்து பருத்தியை பிடித்துக்கொண்டு படுத்துவிட்டாள்.

ஒரு வாரம் காய்ச்சல் வைத்து வீட்டை விட்டே வெளியில் வராது முடங்கி கிடந்தாள். இன்று தான் வெளியில் வந்து வீட்டுக்கு முன்னிருக்கும் பாறை மீது அமர்ந்திருக்கிறாள்.
__________________________

வர்ஷா மற்றும் ராகுல் மலை கிராமத்திற்கு செல்ல, புதர் காட்டிற்குள் சென்று இன்றோடு பதினான்கு நாட்கள் ஆகிறது.

அவர்களிடமிருந்து எந்தவொரு தகவலும் இல்லை.

எப்படியாவது அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென மகி பல வழிகளில் முயன்றும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, ஒரு தகவலும் இன்றி மகியால் இங்கு நிம்மதியாக உட்கார்ந்திருக்க முடியவில்லை.

நாட்கள் தான் அதி விரைவில் சென்றன… மகியால் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

சமர் தன்னுடைய அடுத்தடுத்த வழக்குகளில் தீவிரமாகினான். பல சிக்கலான வழக்குகளையும் தீர்வு கண்டான். இருப்பினும் அந்த மூன்று தொடர் கொலைகள் பற்றி சின்ன அடி கூட இன்று வரை முன் வைத்திட முடியாது இருக்கிறான்.

அடுத்து ஒன்று நடந்தால் எதும் கிடைக்கலாம் என்ற அவனின் எண்ணத்திற்கு மாறாக, அது போன்று வேறு கொலை இன்றளவில் நடைபெறவில்லை.

அதுவே அவ்வழக்கில் சமர் தேங்கி நின்றிட காரணம்.

தன்னவள் மூலமாகத்தான் அந்த வழக்கை அவனால் முடித்திட முடியுமோ?

“என்ன லட்டு எப்பவும் யோசனையாவே இருக்க?” மனைவியை ஒட்டிக்கொண்டு அமர்ந்தான் சமர்.

“நத்திங் அத்து” என்று தனது சிந்தனையிலிருந்து மீண்ட மகி, கணவனை அணைத்து தன் வருத்தத்தை ஒதுக்கி வைக்க முயன்றாள்.

“வேலையில் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத லட்டு…” என்ற சமர் அவளின் உச்சியில் இதழ் ஒற்றினான்.

“கொஞ்சநாள் நான் இல்லைன்னா உன்னால் மேனேஜ் பண்ணிக்க முடியுமா அத்து?”

மகி அவ்வாறு கேட்டதும் தன்னிலிருந்து மனைவியை பிரித்து அமர வைத்த சமர்,

“முக்கியமான வேலையாடா?” எனக் கேட்டான்.

“உயிர் சம்மந்தப்பட்டது அத்து…” மெல்ல முனகினாள்.

“என்ன லட்டு கேட்கல…”

ஆனால் அவனுக்கு கேட்டிருந்தது.

“யார் உயிர்…”

“ம்ப்ச்…” என்ற மகி, “இதுவரை ஃபீல்டு வொர்க் போனதில்லை. ஆனால் இதுக்கு போகணும் அத்து. நான் போய் ஆகணும்” என்றாள்.

“சரிடா… அதுக்கு எதுக்கு உன்னை பிரஷர் பண்ணிக்கிற?” என்ற சமர், “தனியாவா? எத்தனை நாளாகும்?” என அடுத்தக்கட்ட கேள்விகளுக்கு சென்றான்.

“அல்ரெடி அங்க வர்ஷா, ராகுல் போயிருக்காங்க… இப்போ நான் போகனும்” என்றாள். பாதி உண்மையாக. அங்கு போனவர்களைப் பற்றி ஒரு தகவலும் இல்லாதிருக்க… அதை கூறினால் தன்னை போக விடமாட்டானென மகி சொல்லவில்லை.

“ம்ம்…”

“அப்பா உன்னோட இருப்பாங்க அத்து.”

மகி அவனது வாழ்வின் வரம்.

அவளுக்கென்று இதுவரை அவள் எதுவும் செய்துகொண்டது இல்லை. எல்லாம் சமர் கொண்டுதான் அவளின் தேவைகள் இருக்கும். படிப்பு கூட சமர் கிரிமினாலஜி படிக்க விருப்பபடுகிறான் என்று, அவனை தனித்து விட முடியாது அவளும் படித்தாள். அவள் விருப்பப்பட்ட படிப்பினை தொலைதூர கல்வி வாயிலாகத்தான் பயின்றாள்.

அப்படிப்பட்டவள் அவளது வேலை விடயமாக முதல்முறை கேட்கும் போது சமரால் மறுக்க முடியவில்லை.

மறுத்திருக்க வேண்டுமோ?

“என்னால் இருக்க முடியாது” என சமர் ஒருமுறை சொல்லியிருந்தாலும், மகி இன்று உயிரோடு இருந்திருப்பாள்.

முதல்முறை தன் சிந்தனையிலிருந்து அவளுக்கு விடுதலை கொடுக்கிறேன் என நினைத்து மொத்தமாக அவளை இழந்து நிற்கிறான்.

“எப்போ போகணும் மகி?”

“அதுக்கு முன்ன உனக்கு தேவையானதை செட்டில் பண்ணனும் அத்து. பார்ப்போம். எப்போன்னு சொல்றேன்” என்றாள்.

“நான் பாத்துக்கிறேன் மகி… சீனுவை வந்து தங்க சொன்னா தங்கிப்பான். அப்புறம் அத்தை, மாமா இருக்காங்களே” என்ற சமரை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.

இருவரிடமும் அமைதி மட்டுமே!

சமரின் ஏழு வயதில் துவங்கியது மகி அவனுடன் இருப்பது. முதல் பிரிவைப்பற்றி தற்போது தான் பேசுகின்றனர்.

இந்த பிரிவே மொத்த பிரிவாகவும் மாற இருந்தது.

_____________________

அன்று அலுவலகம் வந்த மகிக்கு யாரோ தன்னை பின் தொடர்வதை உணர்ந்தாள்.

சில நாட்களாக இப்படித்தான். சமர் உடனிருக்கும் போது இது போன்று தோன்றவில்லை. அவன் இல்லாத நேரங்களில் வீட்டிலேயே கூட அவளுடன் யாரோ இருப்பது போல உள்ளுக்குள் உணர்த்திகொண்டே இருக்கிறது.

அவளது குழுவில் தற்போது அவளும் தினேஷும் தான் அங்கிருந்தனர்.

மகி தீவிரமாக வழக்கு ஒன்றிற்கு கட்டுரை எழுதி கொண்டிருந்தாள். யாரோ தன்னை பார்வையால் துளைப்பதை உணர்ந்தாள். தன் தோளில் அழுத்தம். கன்னத்தில் யாரின் மூச்சுக் காற்று உரசிய மாயம்.

வேகமாக திரும்பி பார்த்தால், தினேஷ் இவளுக்கு முதுகுக்காட்டி எதோ எழுதிக் கொண்டிருந்தான்.

“இப்போ என்னை டச் பண்ணியா தினேஷ்?”

மகியின் கேள்வியில் தினேஷ் நிமிர்ந்து பார்த்து…

“இல்லையே” என்க, அவளுக்கு அவன் பொய் சொல்வது போலவும் தெரியவில்லை.

“என்னாச்சு மகி? ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க மாதிரி தெரியுது” என்றான்.

“நத்திங்” என்ற மகி, மீண்டும் வேலையில் கண் பதிக்க…

வர்ஷாவின் தாய் அலுவலகம் வந்தார்.

error: Content is protected !!
Scroll to Top