வேள்வி : 6

அத்தியாயம் : 6

 

அந்தப் பெரிய வீடு அமைதியின் பிடியில் ஆழ்ந்து இருந்தது. குழந்தை நிவேதா அம்மாவைக் கட்டிக் கொண்டு பயத்திலேயே உறங்கி விட்டாள். பரிதிவர்மன் இன்னும் கூட நடந்த சம்பவத்திலிருந்து வெளியே வராமல் உச்சி மோட்டை வெறித்துக் கொண்டு இருந்தான். கணவனின் நிலை சஞ்சலப்படுத்த, அவனது கையைப் பற்றி அழுத்தினாள் நந்தனா.

அவனது கண்கள் மட்டுமே அசைந்து என்னவெனும் விதமாகப் பார்க்க, “நீங்க ஃபீல் பண்ணும் அளவுக்கு அப்படி எதுவும் நடந்துடல, ரிலாக்ஸா இருங்க” என்றாள்.

அவன் கசந்த முறுவலை உதிர்த்தான். அவள் புரிந்து கொண்டு உறங்கும் மகள் நிவேதாவை படுக்கையில் கிடத்தி விட்டு வந்து கணவனின் கை விரலைப் பற்றினாள். அவன் தன் மார்புக்குள் சிறை செய்ய, பரிதிவர்மனின் கன்னத்தைப் பற்றி தன்னைப் பார்க்க செய்தவள், “அத்தம்மா ஏதோ தெரியாம அவசரப்பட்டு அப்படி நடந்துக்கிட்டாங்க. அதுக்கு நீங்க இப்படி இருக்கணுமா? அவங்க நிலையும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கலாமே! அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே என்னைப் பிடிக்காது. எங்க வீட்டுல நடந்த எந்த ஒரு சம்பவத்துக்கும் அவங்க வந்தது இல்லை. எங்க அம்மாவின் அண்ணி என்றது தாண்டி அவர் உறவு முறையை வளர்த்துக்க விரும்பல.

அதுபோல எங்க அம்மாவின் உடன்பிறவா சகோதரி வனிதா சித்தியும், அத்தம்மாவும் எவ்வளவு நெருக்கமா பழகி, பள்ளிக் கூட நாளிலிருந்து இப்ப வரை நல்ல விதமா நடந்துக்கிறாங்கன்னு தெரியாதா? அதனால தான் தன்னோட தோழியும் அண்ணியுமான வனிதாவின் மகள் ரக்ஷனா உங்களுக்கு மனைவியா வந்து கடைசி வரை நீங்க எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அப்படி இருக்குறப்போ என்னை எப்படி அவரால் ஏத்துக்க முடியும்? யாராக இருந்தாலும் இப்படி ஒரு காரியத்தை செய்தா ஆரத்தி கரைத்தா வீட்டுக்குள் அழைத்து வருவாங்க?” என்று கேட்டாள்.

 அவன் மனைவியின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தான். “‘ரக்ஷனா எப்ப மனசு மாறி இந்த வீட்டுக்கு வந்துட மாட்டாளா, நீங்க குடும்ப சகிதம் வாழ மாட்டீர்களா, உங்க வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சுடாதா?’ன்னு அத்தம்மா எதிர்பார்த்து இருப்பாங்க, அந்த நேரம் நான் வந்தது அவங்க எண்ணங்களை மாற்றி அமைத்து என் மீது வெறுப்பை திணித்து இருக்கலாம். இதுக்கு ஏன் நீங்களும் இவ்வளவு கோபப்படணும்?” என்று வினவினாள்.

 அவன் சிரித்தான். அதில் உயிர்ப்பு தொலைந்து போயிருந்தது. அவள் புரிந்து கொண்டு அமைதிகாக்க, “நந்து! உன்னை நான் ரெண்டாவது கல்யாணம் செய்து கூப்பிட்டு வந்திருக்கேன். ஏற்கனவே ஒரு குழந்தையும் எனக்கு இருக்கு. உனக்கு இதுல வருத்தம் இல்லையா?” என்று அவளது மனதில் இருப்பதை அறிந்து கொள்ள முயன்றான்.

“தெய்வத்தின் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் அர்ச்சனை மலர்கள் எல்லாம் அவர் பாதத்தை அலங்கரிக்க ஆசைப்படும். அதுல முதல் கடைசின்னு பார்க்கறதில்லை. நானும் அப்படிதான் என் மனதில் உறைந்திருக்கும் தெய்வத்தில் காலடியில் வந்து சேர ஆசைப்பட்டது தவிர, வேறு எதுவும் நினைக்கல” என்ற மனைவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் பரிதிவர்மன்.

“நீ எனக்கு கிடைச்சது வரம்”

அவள் “அப்படி எதுவுமில்லை, நான்தான் நீங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்” என்றாள்.

அவன் மனைவியின் உச்சியில் முகத்தைப் புதைத்ததும், “நீங்க காலையில் வேலைக்குப் போனவங்க திடீர்னு திரும்பி வந்துட்டிங்க. பிரசாத் தேடுவார், போயிட்டு வாங்க” என்று அவன் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள்.

அவன் மறுத்து மனைவியின் மடிசாய, கணவனின் கேசத்தில் கைகளை நுழைத்து வருடியவளுக்கு, அவனை முதன் முதலாக பார்த்த ஞாபகம் வந்தது. அதே நினைவுடன் அவனைப் பார்க்க, அவளது வயிற்றைக் கட்டிக் கொண்டு முகத்தை அதில் புதைத்திருந்தவன் கண்கள் தன்னையும் மீறி நீரால் நிரம்பின.

நேரம் சென்று கொண்டே இருந்தது அவனது மனதை மெல்ல மெல்ல மாற்றி எழ வைக்கும் முன் போதும் போதும் என்றானது. அப்படியும் அவன் அசையாமல் அவளையும் சரித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான். இதுவரை அவன் இப்படி எல்லாம் நடந்து கொண்டவன் கிடையாது. பேசுவார்கள் சிரிப்பார்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் அடிப்பார்கள். துரத்திக் கொண்டு ஓடுவார்கள், கைவிரல்களை பற்றிக் கொண்டு நடந்து இருக்கிறார்கள். பைக்கில் ஏறி பயணம் செய்திருக்கிறார்கள், அதிகபட்சமாய் அவன் அவளது கன்னத்தை பற்றிக் கிள்ளி இருக்கிறான், கிண்டல் கேலியில் மூழ்கி இருக்கிறான், அப்படிப்பட்டவன் திருமணம் ஆகி வந்த பின்னர் ஒரே அறைக்குள் தனித் தனியாக இருந்தானே தவிர, தவறாக எதுவும் நடக்கவில்லை.

அன்று நாகேஸ்வரி காலில் சூடு வைத்து வீட்டிற்கு விலக்கு என்று சொன்ன பொய், அவளைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரே படுக்கையில் உறங்க வைத்தது. இன்றைக்கு அவர் நடந்து கொண்ட முறை அவளை அத்தனை பேருக்கும் முன்பு உரிமையாக அணைத்து முத்தமிட வைத்தது. இப்போது அவளை விட்டு விலகிச் சென்றாலே ஏதாவது நடந்து விடுமோ என்ற பயம், மனைவியை விட்டு விலகவிடாமல் செய்கிறது.

அவள் நெளிந்து கொண்டே, “இது பகல் நேரம்! சூரிய பகவான் உக்கிரத்தில் இருக்கறார்னு மறந்துட்டீங்களா? அவர் இருக்குறப்போ தான் வெளியே போய் ஓடிச் சாடி வேலை செய்ய முடியும்… அவர் தம்பி வந்தா?” என்றவள் கணவனின் பார்வையில் கூசிப் போக, “தம்பி வந்தா செய்றதுக்கு வேற வேலை நிறைய இருக்கு” என்று கண்சிமிட்டினான் பரிதிவர்மன்.

அவள் நாணத்தில் வதனத்தை மூடிக்கொண்டதும், அதைக் கண் கொட்டாமல் ரசித்தவன், “அது என்ன அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு மட்டும் வேலை கொடுக்கிறது. அண்ணன் பாவம் இல்லையா?” என்று குறும்பாக கேட்க, அவள் அவனைப் பிடித்து தள்ளி விட்டு எழுந்து ஓட பார்த்தாள். அவன் சிரித்துக் கொண்டு அவளை இழுத்து அணைத்துக் கொள்ள, இருவரின் மனதிலும் மறைந்து கிடந்த வேதனை கொஞ்சமாக அகன்றது. அதன் பிறகு மனைவியை மடியில் அமர வைத்து இதமாக வருடிக் கொடுத்தவன், “வா நண்டு ஆஸ்பிட்டலுக்குப் போயிட்டு வரலாம்” என்றான்.

அவள் முறைத்துக் கொண்டு அழகு காட்ட, “இது கடல் நண்டா? குளத்து நண்டா?” என்று முன்பு அவளைக் கிண்டல் செய்தது போல மறுபடியும் சொன்னதும், அந்த ஞாபகத்தில் மூழ்கி போனவள், அவன் தோளில் நிம்மதியாக சாய்ந்தாள். மனைவியின் நெற்றியில் முட்டியவன், “பண்ணை வீட்டுக்குப் போய் ஒரு வாரம் இருந்துட்டு வரலாமா?” என்று கேட்டான்.

அவள் இப்போது வேண்டாம் பின்னர் போகலாம் என்றதும், காலில் காயம் பட்டு இருக்கும் இடத்தைப் பார்த்தவனுக்கு மனதிற்குள் வலித்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவளைப் பரிசோதனை செய்ய முயன்றான். அவள் வர மறுத்து தனக்கு ஒன்றும் இல்லை என்றதும், “காயம் அதிகமானால் பழுப்பு வச்சுடும், பிறகு நடந்து போக கஷ்டமாகிடும், அதுக்கு முன்ன போய் பார்த்து ஒரு இன்ஜெக்ஷன் போட்டுட்டு வந்துடலாம்” என்றவன் தனக்கு எதுவும் இல்லை என்று சொன்னதையும் பொருட்படுத்தாமல், தூக்கிக் கொண்டு போக பார்த்தான். அப்போது ஹரி பிரசாத் அழைத்து நடந்த விபரத்தை சொல்ல, அவனுக்கும் உடனே போக வேண்டி இருந்தது. மனைவியிடம் தயக்கமாய் கூறியவன், இன்னும் பத்து நிமிடங்களில் வந்து விடுவதாக சொல்லி வேகமாக டாகுமென்ட்ஸ்ஸை எடுத்துக் கொண்டு அறைக்கதவை பூட்டி விட்டு வந்தான்.

அவனது அம்மா உலகமே இடிந்து தலையில் விழுந்தது போல அமர்ந்து இருந்தார். இவ்வளவு பெரிய தப்பான காரியத்தை செய்தது தானா? என்று இப்போது கூட அவரால் நம்ப முடியவில்லை. அவர்கள் மூவரும் ஒரே அறைக்குள் அடைந்து கொண்டு, மகன் மட்டும் வெளியேறி செல்வதைக் கண்டு, தனக்கென எதுவுமே இல்லாதது போல உணர்ந்தார். 

கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இருக்கலாம் என்று நினைத்தவருக்கு, இந்த விஷயத்தை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அதிலும் குழந்தை அம்மாவிற்காக தினமும் அழுது கொண்டிருக்க, மகனிடம் எத்தனையோ முறை சொல்லி மருமகளை அழைத்து வருமாறு கூறினார், அவளைக் கைப்பேசியில் அழைத்துப் பேசுமாறு வற்புறுத்தினார். அவள் படிப்பு, வேலையைக் காரணமாக்கி வெளியூரில் இருந்தாலும், அவனாவது குழந்தையுடன் அங்குச் சென்று வந்தால் அவர்களுக்குள் இணக்கம் ஏற்படும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவன் எந்த வகையிலும் தாயின் பேச்சை செவி சாய்க்காமல் இருந்த கோபமும், தனது மருமகள் இருக்க வேண்டிய இடத்தில் பிடிக்காத நாத்தனாரின் மகள் வந்து விட்டாளே என்ற ஆத்திரத்திலும், நாளைக்கு விஷயத்தை அறிந்தால் ரக்ஷனா நிரந்தரமாக இங்கு வராமல் போய்விடுவாளோ, நாத்தனார் வனிதாவின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் ஆகிவிடுமோ என்று இவ்வாறு நடந்து விட்டார். நந்தனாவிடம் அப்படி நடக்கும் போதெல்லாம் அவருக்கு அவளை இன்னும் இன்னும் கஷ்டப்படுத்த வேண்டும் என்று தோன்றியதே தவிர சிறிது கூட இரக்கம் வரவில்லை. ஆனால் இன்று மகன் வந்து பேசிய பிறகுதான், செய்த தவறின் வீரியம் அவருக்குப் புரிந்தது.

ஒற்றை மகனாகப் பிறந்து விட்ட பரிதிவர்மனின் மீது அவர் உயிர் பாசத்தை வைத்திருந்தார். அவனது வாழ்க்கை தனது விருப்பப்படி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார். எல்லாம் அவர் நினைத்தது போல் நல்லவிதமாக தான் சென்று கொண்டிருந்தது. நந்தனா மட்டும் இடையில் வந்து குறுக்கிடாமல் இருந்திருந்தால், அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்க வாய்ப்பில்லை. வனிதாவின் மீது அதிகப்படியாக வைத்திருந்த பாசம், அவளது அம்மா கலையரசியை பிடிக்க விடாமல் செய்தது. அப்போது இருந்த ஆரம்பித்த முட்டல் தான் இன்று அவர் மகள் மீதும் வந்து முடிந்திருக்கிறது. பழைய சம்பவங்கள் கண்களுக்குள் வந்து மோத, மனம் நிம்மதி என்பதை தொலைத்திருந்தது.

பரிதிவர்மன் ஒரு பக்கம் மனைவியை நினைத்தபடி சென்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நந்தனா தன் கணவனுடனான நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்க, தனது மகனின் வாழ்க்கையை நினைத்த கவலையில் தாயவள் மற்றொரு பக்கம் தவிக்க, இங்கு ஒரு பிரளயமே நடந்து முடிந்திருப்பது தெரியாமல், அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் கைகளைப் பிசைந்து கொண்டு இருந்தாள் வனிதா.

கணவரிடம் இந்தியாவிற்குப் போகலாம் என்று எத்தனையோ முறை சொல்லியும், அவர் சொந்த வேலை இருப்பதாலும், சும்மா சும்மா அங்கேயும் இங்கேயும் அலைந்தால் சம்பாதிப்பதை எல்லாம் பயணத்திற்கு தான் செலவு செய்ய வேண்டியது வரும் என்று எச்சரித்தார். படித்துக் கொண்டு இருந்த மகளுக்கு கல்யாணத்தை நடத்திவிட்ட கோபம் ஏற்கனவே அவருக்கு இருந்தது. சும்மா இருந்த பெண்ணை இப்படி ஆக்கிவிட்டாள் என்று கோபம் ஒருபுறமும், மகளின் வாழ்க்கை இரண்டும் கெட்டானாக இருப்பதைப் பார்த்துக் கவலை மறுபுறமும் அரித்ததால், அதன் பிறகான நாட்கள் மனைவியின் வார்த்தைகளை அவர் செவி சாய்ப்பதில்லை. 

“தாயை போல பிள்ளை; நூலை போல சேலை” என்ற பழமொழியை போல அப்படியே தாயின் மறு பிம்பமாக இருந்தவள் ரக்ஷனா. வேல்முருகன் எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை. மகளை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அவர் இருக்க, வனிதா செய்த வேலை அவளை அடியோடு மாற்றிவிட்டது.

மகளிடம் சென்று பரிதிவர்மனை பற்றி பேசினாலே, அருகில் இருப்பது பறந்து போகும். அன்று முழுவதும் அம்மாவும் மகளும் முட்டிக் கொள்வார்கள். பிறகு காரை எடுத்துக் கொண்டு எங்கேயாவது சென்று விடுபவள், மறுபடியும் வரும்போது சுயநினைவு இழந்து காணப்படுவாள். வேல்முருகன் மனைவியைக் கடிந்து கொள்ள, இவளும் வாயைத் திறக்காமல் நான்கு நாள் இருப்பாள், மறுபடியும் ஆரம்பித்து விடுவாள்.

இப்போது, விசயத்தை அறிந்த முதல் ‘இந்தியாவிற்குப் போகலாம், உங்க அப்பா வரா விட்டாலும் நீயாவது வா! பிறகு, உன் வாழ்க்கையே அழிஞ்சு போயிடும். எத்தனை நாள் அவனும் சம்சாரியா தனியா இருப்பான். நாளைக்கு நீயே ஆசைப்பட்டாலும் அது உனக்கு கிடைக்காம போயிடும்” என்று எச்சரித்தாள்.

அவளோ “அதுதான் நான் நினைச்சது கிடைக்கலயே! எச்சில் இலையில் என்னால சாப்பிட முடியாது” என்று விட்டேத்தியாக சொன்னாள்.

அவள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக, “அந்தக் குழந்தை பாவம்! அண்ணி தனி ஒருவராய் இருந்து கஷ்டப்படுறாங்க, நாளைக்கு தவறுதலா எதுவும் நடந்துடக்கூடாது. ஒருமுறை போய் பார்த்துட்டு, குழந்தையும் அவனையும் கூப்பிட்டு இங்கு வந்துடலாம்” என்று சொல்லி பார்த்தாள்.

அவள் பரிதிவர்மனை பார்க்கப் பிடிக்காதவள் போல வர மறுத்து விட்டாள். சொல்ல போனால் அவள் எல்லாவற்றிலும் நம்பர் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவள், அப்படிப்பட்டவளை நந்தனாவை விரும்பியவனை திருமணம் செய்து வைத்து விட்டார் அவளது தாய். அவள் கண் முன்னே நந்தனாவிடம் சென்று பேசுவதும் சிரிப்பதும், நெருக்கமாகப் பழகியதும் அவர்கள் மீது கோபத்தை அதிகப்படுத்தி விட்டது. அதோடு தன்னை வேண்டாம் என்று அலட்சியப்படுத்தவனை தானும் விடக்கூடாது என்று அவள் செய்த வேலை, இன்று அந்த ஊருக்குப் போகவிடாமல் செய்கிறது.

சரி மகளைத்தான் சமாளிக்க முடியவில்லை. கணவரையாவது பிடித்து இழுத்துக்கொண்டு போகலாம் என்று பார்த்தால், “இப்போ கம்பெனில முக்கியமான ஆடிட்டிங் ஒர்க் நடந்துட்டு இருக்கு. அக்கவுண்ட்ஸ் ஃபைல் எல்லாம் செக் பண்ணனும், கிளைன்ட்ஸ் கேட்டாலும் உடனே பதில் தர ரெடியா இருக்கணும். எப்போ கூப்பிட்டாலும் உடனே போகணும். காலையில ஒன்பது மணிக்கு கிளம்பினா திரும்பி எப்ப வருவேன் தெரியாது. இதுல நீ உன் விருப்பத்துக்கு கூப்பிட்டதும் வர முடியாது” என்று சொல்லிவிட்டார் வேல்முருகன்.

“அப்ப நானும் ரக்ஷனாவும் போயிட்டு வரோம். குழந்தையும் பாவம்! அம்மாவைத் தேடி சதா அழுதுகிட்டே இருக்கறதா அண்ணி சொன்னாங்க. உங்க தங்கை உங்ககிட்ட சொன்னது கூடவா உங்களுக்கு காதுல ஏறல…” என்று கேட்டதும், “நீங்க ரெண்டு பேரும் சேரும் இடமே அழிஞ்சு போகும். உங்களால் ரெண்டு பிள்ளைங்க வாழ்க்கை இல்லாம போனது போதும். அவள் உன்னை விட்டு விலகி இருக்கறது தான் அவளுக்கு நல்லது. பாவம் என் தங்கை! உன்னை ரொம்பவும் நல்லவள்னு நினைத்து ஏமாந்து போய் இருக்கா. இனிமேலும் அவளை ஏமாத்த நினைக்காதே” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார்.

நாகேஸ்வரியின் மூலமாக விஷயத்தை அறிந்த பின்னர் தான் கணவர் தன்னிடம் இவ்வாறு கோபமாக நடந்து கொள்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட வனிதா, ஆத்திரம் தீரும் வரை அவரை முறைத்தாள். ஆனால் அவரோ இதைப் பற்றிக் கவலைப்படாமல், “என் பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி உன்னை விட எனக்கு அதிக அக்கறை இருக்கு. அதோடு இப்ப ஒரு வாரமா அக்கவுண்ட்ஸ் செக்கிங்னு ஏகப்பட்ட வேலை, நானும் பிசினஸ் பார்ட்னரான என் நண்பனும் ஒரு வினாடி கூட ஓய்வில்லாம ராத்திரி பகலா கஷ்டப்படுறோம். இந்த நேரத்துல மொத்த பொறுப்பையும் அவன் தலையில தூக்கிப் போட்டுட்டுப் போக முடியாது. பிறகு ஏதாவது பிரச்சனை வந்தா, பிசினஸில் லாஸ் ஆகி எங்களுக்கு இடையிலும் தகராறு ஏற்படலாம். உனக்கே தெரியும், இதில் நாங்க ரெண்டு பேரும் பார்ட்னராக இருப்பது. அதனால நீ லக்கேஜ் எல்லாம் ரெடி பண்ணி வை, நான் சொன்னதும் கிளம்பலாம்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

 அதன்பிறகு அதைப் பற்றி பேச முடியவில்லை.

இதோ சொன்னது போல ஒரு வாரம் ஆக போகிறது. இதற்கு மேலும் தாமதிக்க கூடாது என்று கணவர் அருகில் சென்று மீண்டும் நச்சரிக்க, ஒரு வழியாக அவர்கள் பிசினஸ் எல்லாம் சரியாகி பயண சீட்டும் தயாராகி , வெள்ளிக்கிழமை மாலையில் வேலை முடிந்ததும் விமானத்தில் புறப்படலாம் என்று சொன்னார் வேல்முருகன். தனக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் அப்பாவிற்காக ஊருக்கு வர சம்மதம் தெரிவித்தாள் ரக்ஷனா.

இங்கு பரிதி சென்ற பிறகு அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த நந்தனாவுக்கு, சிறுவயது ஞாபகங்கள் அதிகமாக அலைமோதின. மகளை அணைத்துக் கண்களை மூடிக்கொண்டு அருகில் படுத்திருந்தவள், தன்னுடைய பதினைந்தாவது வயதில், பெரிய பெண்ணாக இருக்கும்போது அவனைப் பார்த்த ஞாபகத்தில் வெட்கினாள். கண்கள் மயக்கத்துடன் அதே நினைவுக்கு அவளை இழுத்துக் கொண்டு சென்றன.

தாணுலிங்கத்திற்கு ஒரு சகோதரி இருந்து, சிறு வயதிலேயே இறந்து போனதால், தனது சித்தப்பாவின் மகளான கலையரசியின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் அவர். அந்த வீட்டுக்கு போகும்போது எல்லாம் அவளிடம் மிகவும் நன்றாகப் பேசுபவர், அவளது தங்கை வனிதாவின் வாயாடித்தனமான பேச்சு, அக்கா என்று பார்க்காமல் கலையரசியிடம் நடந்து கொள்ளும் விதத்தை கண்டாலும், சிறு வயது என்பதால் பெரிது படுத்தாமல் இருந்தார்.

 வனிதாவும் நாகேஸ்வரியும் பள்ளி நாளிலிருந்து தோழிகளாக வலம் வந்தனர். வீட்டிலும் நடக்கும் விஷயங்களை பரிமாறிக் கொண்டனர், ஒருவர் மற்றொருவரின் வீட்டிற்கு சென்று வந்தனர். அப்படி போகும்போது, அவர்களின் நட்பு இன்னும் ஆழமானது. தோழியின் அழகு அடக்கம் அனைவரையும் ஈர்த்ததால் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தால் தங்களது நட்பு, இடையிலேயே இல்லாமல் போய்விடும் என்று தனது பெரியப்பாவின் மகனுக்குப் பெண் பார்க்கும்போது நாகேஸ்வரி பற்றி சொல்லி அவர்களின் திருமணத்தையும் நடத்த முயன்றாள் வனிதா. தங்கைக்காக என்று இல்லாவிட்டாலும் நாகேஸ்வரியின் அழகும் அடக்கமும் கவர்ந்ததால் அவரும் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், திருமணமாகிப் போன இடத்தில் நாகேஸ்வரியின் அண்ணனின் படிப்பு, பழக்கவழக்கம், வெளிநாட்டில் வேலை பார்த்தும் நல்ல விதமாக நடந்து கொள்ளும் விதம், பொறுமையான பேச்சு… என ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்தவர், தனது பெரிய தங்கையான கலையரசிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக எண்ணினார். அதனால் சித்தப்பாவின் வீட்டில் பேசி அவர்களின் திருமண நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால் வனிதா, ‘தன்னுடைய தோழியின் அண்ணனைத் தானே திருமணம் செய்து கொள்ள வேண்டும், அவர்கள் இருவரும் இதுபோல கடைசிவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும், இவர்களுக்கு இடையில் கலையரசி வரக்கூடாது’ என்பதற்காக, தாணுலிங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கலையரசியை அவரை விட்டு விலக்கி நிறுத்தும் நோக்கில், திருமணம் நிச்சய தேதி குறித்து ஊரெல்லாம் சொன்ன பிறகு, அவருக்குக் கீழே பணிபுரியும் சதாசிவத்திடம் ஓரிரு முறை நன்றாகப் பேசுவதைப் பார்த்துவிட்டு அக்கா அவரைத்தான் விரும்புவதாகச் சொல்லிவிட்டாள்.

ஏற்கனவே சொல்லி இருந்தால் இது குறித்து விசாரித்து, அவர்களின் மனதை அறிந்து அதுபோல நடந்திருப்பார் தாணுலிங்கம். இந்த நேரம் வந்து சொன்னதும் வனிதாவின் மீது கோபம் ஏற்பட்டது. இருந்தாலும் அந்த நேரத்தில் காட்ட முடியாமல் இருந்தவர், பெரிய தங்கையிடம் பேசினார். அவள் வாய் திறந்து பதில் சொல்லாமல் மௌனமாக அழ, சதாசிவத்திடம் சென்று விசாரித்து விட்டு, அவர்கள் இருவரின் மனதில் இருப்பதையும் தெரிந்து கொண்டார். 

நாகேஸ்வரி, வனிதாவுக்குத் தன் அண்ணனைப் பிடிக்கும் என்பதை முன்பே தெரிந்து வைத்திருந்ததால், பெற்றோரிடம் தெரிவித்து, அதே நாளில் அவர்களது திருமண நிச்சயத்தை நடத்தி வைத்தார். இதில் உள்ள சூதையும், வனிதாவின் வஞ்சகத்தையும் தெரிந்துகொண்ட தாணுலிங்கம், அவர்களால் எந்தக் காரணத்தைக் கொண்டும் பெரியவள் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதால், சித்தப்பாவின் வீட்டிற்குச் சென்று சதாசிவத்திற்குக் கலையரசியைத் திருமணம் செய்து கொடுக்கும் விஷயமாகப் பேசினார்.

​அவர்கள் சதாசிவம் வேறு ஜாதியைச் சார்ந்தவர் என்பதால், திருமணம் செய்து கொடுக்க மறுக்க, பலமுறை கேட்டும் சம்மதிக்க மறுத்ததால் தானே அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தார் தாணுலிங்கம்.

 

error: Content is protected !!
Scroll to Top