மயிலாஞ்சி
அத்தியாயம்-10

இங்கு ரத்னாவின் வீட்டில் ஆர்த்தி, மாடியில் நின்று, குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, சாப்பிட அடம் பிடிக்கும் பவிஷாவை சாப்பிட வைக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.
“சாப்பிடுடி செல்லம்ல.. நிலா பாரு நிலா நிலா..!” என ஆர்த்தி குழந்தையை சாப்பிட வைக்க போராட. குழந்தை வேண்டாம் எனத் தலையை ஆட்டி,
“மம்மு வேணா.. மாமா கிட்ட சாக்லேட் வாங்கிட்டுவரலாம் வா” என்றது.
“இப்பவா.. மாமா தூங்கி இருப்பான் காலையில வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். இப்போ சமத்து புள்ளயை சாப்பிடுவீங்களாம்.” என்று கூறி ஒரு வாய் ஊட்டிவிட்டாள். குழந்தை ஆர்த்தி கழுத்தில் இருக்கும் செயினைப் பார்த்துவிட்டு, தேஜஸ்வினி நினைப்பு வர,
“அம்மா.. மாமி போட்டு இருக்குமே அந்த செயின் மாதிரி எனக்கு வாங்கி தரியா”
“அவ. என்ன செயின் போட்டு இருக்கா?”
“பிளாக் கலர்ல குட்டி டாலர் இருக்குமே அது” என்றதும் ஆர்த்திக்கு புரிந்தது.
“அது செயின் இல்லடா..”
“வேற என்னது அது” எனக் குழந்தை கேட்க, ஆர்த்தி அதை சொல்ல தவிர்த்தாள்.
“அது எதுக்கு.. நீ இந்த கிண்ணத்துல இருக்க சாப்பாடு முழுசும் சாப்பிட்டா.. மாமி செயின் மாதிரி உனக்கு வாங்கி தரேன் சரியா” என்று கூறி குழந்தையை சாப்பிட வைத்தாள்.
“என்ன ஆர்த்தி.. செயின் வாங்கி தரேன்னு சொல்லிட்டு இருக்க.. என்ன செயின் யாருக்கு” என்றபடி எழிலன் அங்க வந்து சுவரின் மீது அமர்ந்தான்.
“பவி குட்டி.. நீங்க கீழ போய் படிங்க போங்க” எனக் குழந்தையை அனுப்பிவிட்டு, கையை கழுவிக் கொண்டு எழிலன் கைலியில் கையைத் துடைக்க, அவன் அடிப்பது போல கை காட்ட, ஆர்த்தி நாக்கை குவித்து அழகு காட்டிவிட்டு அவன் அருகில் நின்றாள்.
“மாமா.. அவளுக்கு தேஜூவோட தாலிச் செயின் மாதிரி வேணுமாம்” என்று ஆர்த்தி சொல்ல,
“ஓஹோ.. அதுக்கென்ன வாங்கி கொடுத்துடலாம்”
“மாமா.. அது தாலி செயின்.. தேஜூ கிட்ட அதைத் தவிர வேற எதுவும் இல்ல.. பாப்பா அதைப் பார்த்து செயின்னு நினைச்சு கேக்குறா..! தேஜூவுக்கு ஏதாவது செய்யணும் மாமா” என ஆர்த்தி சொல்ல,
“செய்யலாம்டி.. காலையில் தேஜூக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்ன என்னாச்சு” என எழிலனும் அக்கறையாக விசாரித்தான்.
“அது பரவாயில்லை.. அவ சரி ஆகிட்டா.. பவிஷா செயின் கேட்டதும் தான் எனக்கே நினைவு வருது மாமா.. தேஜூ கல்யாணம் ஆகி இங்க வந்து மூனு மாசம் ஆக போகுது. தாலி பெருக்கி போடணும்ல… ஒரு வேளை தாத்தா அதுக்கு தான் வர சொல்லி இருப்பாரோ!” என ஆர்த்திக்கு சந்தேகம் எழுந்தது.
“தாத்தாவா என்ன சொன்னாரு?”
“வெள்ளிக்கிழமை.. ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னாரு”
“சரி பேசலாம்” என்றவளை இழுத்து தோளோடு அணைத்து.
“ரொம்ப நாள் ஆச்சு.. கண்ணாமூச்சி விளையாடலாமா?” என்றவன்.. அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
“உங்க பொண்ண வச்சிக்கிட்டா? போ மாமா” என ஆர்த்தி சினுங்கினாள்.
“அம்மா கிட்ட தூங்க வச்சிட்டு..ம்ம்.. ப்ளீஸ்டி” என அவன், அவள் உதட்டை இரு விரலில் இழுத்து கொஞ்சி, கெஞ்சி கேட்க,
“என்ன மாமா ரொம்ப கெஞ்சுற” என்றாள் வெட்கத்தோடு,
“என் பொண்டாட்டி கிட்ட தானே கெஞ்ச முடியும்.. கொஞ்ச முடியும்.” என்றவனை, சந்தேகமாய் பார்த்து,
“ஏன் மாமா ஆம்பளைங்க காதல் இதுல மட்டும் தான் இருக்குமா என்ன!” என்றாள்.
“இல்லையே..!”
“மாமா நீ என்னை காதலிக்கிறியா?” எனக் கேட்டாள். அத்தைப் பையன் என்ற முறையில்.. அவனை மணந்தவளுக்கு இப்போது இந்த சந்தேகம் வந்ததும் எழிலனுக்கு சிரிப்பை வர வைத்தது.
“ஏண்டி.. ஒரு புள்ளையே பெத்துட்டு என்னடி கேள்வி கேக்குற?” என்று அவள் நெற்றியில் செல்லமாகத் தட்டினான்.
“இல்ல மாமா.. தேஜூ இவ்ளோ நாளா அதியன் கூட தான் இருக்கா. ஒரே அறையில் பக்கத்துல தான் இருக்கா! அழகா ஒரு பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போது ஆசை இல்லாமையா இருப்பான். அதி கிட்ட பேசு மாமா.. தேஜூ அவன் மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கா. அவன விட்டு கொடுக்காம பேசுறா.. அவள இவன் ஒதுக்கி வச்சிருக்க மாதிரி தெரியுது.” என ஆர்த்தி தேஜூ மீதுள்ள பாசத்தில் பேசினாள்.
“இங்க பாருடி லட்டு, ரெண்டு பேருக்கும் சண்டைனா பேசலாம். நீ சொல்றது ரெண்டு மனசோட விருப்பம். அதியன் அவளை சின்ன பொண்ணு மாதிரி பார்க்குறான். அதோட அவன் ஃப்ரண்ட் கொன்ன குற்றவாளிங்கள பிடிக்க முடியாம போச்சு. அதுக்கு தேஜூவும் ஒரு காரணம் ஆகிட்டா.. அதான் அவன் மனசு இன்னும் அவள ஏத்துக்க மறுக்கும். போக போக சரியாகிடும்” என எழிலன் சொல்ல,
கீழே தொழுவத்தில் உலாவிக் கொண்டிருந்த.. ரத்னாவின் காதில் இருவரின் பேச்சும் தெளிவாக கேட்டது.
‘ஓஹோ அப்படியா கதை.. இனி எப்பவும் சேர விடாம பண்ற இருடி’ என மனதில் நினைத்துக்கொண்டு, வீட்டினுள் சென்றுவிட்டாள்.
ஆர்த்தியின் பேச்சு மேலும் தொடரந்தது.
“ஆனாலும்.. தேஜூவை நினைச்சா பாவமா இருக்கு மாமா!” என ஆர்த்தி கவலைப்பட்டாள்.
“சரி ஆகிடும்டி.. நீ எதுக்கு கவலைப்படுற?”
“பாவம் மாமா அவ காலையில் இருந்து.. படுக்கைக்கு போற வரைக்கும் வீட்டில் அவ்வளவு வேலை செய்யிறா.. வயலுக்கும் போறா அங்கேயும் ஏதாவது வேலை செய்யிறா. இந்த ஊருக்கு அவ நல்லா பழகிட்டா.. தமிழ் கூட பேச கத்துக்கிட்டா.. ஆனா ரத்னா இந்த ஊருல இருந்தாலும்.. வீட்டுல கூட ஒரு வேலை செய்ய மாட்டா. அதி ஏன் இவளை வேண்டாம்னு சொன்னனு இப்போ தான் புரியுது.” என ஆர்த்தி சொல்ல, தன் தங்கையை விட இன்னொருத்தியை உயர்வாக பேசும், மனைவியை எழிலன் முறைத்தான். ஆர்த்தி அவன் முகம் பார்த்துவிட்டு,
“என்ன மாமா முறைக்கிற..!” என்றாள்.
“ரத்னாவை விட.. உனக்கு தேஜூவை ரொம்ப பிடிக்கும் போல.!” என அவன் கேட்டதும், அவளுக்கே அது தவறோ என்று தோன்றியது.
“என்னமோ.. அவளைப் பார்க்கும் போது கூட பிறந்த தங்கச்சி மாதிரி இருக்கு.. அதுக்காக ரத்னாவை வெறுக்குறேன்னு இல்லை மாமா.. அவளும் நல்ல பொண்ணு தான். என்ன அவ கோபம் தான் பிடிக்கல.” என ஆர்த்தி சமாளித்தாள்.
“அதியன் மேல எனக்கும் கோபம் தான்… ஆனா தேஜூ நிலைமை தெரிஞ்ச பிறகு எதுவும் சொல்ல முடியல. ரத்னாவும் புரிஞ்சிப்பான்னு நம்புறேன்.” என்றான் எழிலன்.
“ஏய் ஆர்த்தி.. மேல இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க… குழந்தை கீழ வந்து எவ்வளவு நேரமாச்சு” என மங்களம் குரல் கொடுக்க,
“தோ வரேன் அத்தே!” என்றவள்,
“உங்கம்மாவுக்கு உடனே மூக்கு வேர்த்துடும். வாங்க கீழ போவோம்” என இருவரும் கீழே வந்தனர்.
******
இங்கு அதியன் வீட்டில் இரவு உணவு முடிந்ததும். எல்லோரும் முற்றத்தில் அமர்ந்து இருக்க, தேஜஸ்வினி அதியன் அருகில் நின்றுக் கொண்டிருந்தாள். ராஜன் தாலி பெருக்கி போடுவதைப் பற்றி பரமசிவம் தாத்தாவிடம் பேசினார்.
“நல்ல விஷயம் தான்.. நானே இதை மறந்துட்டேன் பாரு” என்றார் பரமசிவம்.
காலண்டரை எடுத்து பார்த்தவர்..
“வெள்ளிக்கிழமை காலையில கோவில்ல வச்சி பண்ணலாம்” என்றார்.
“சரிப்பா..! அப்போ நாளைக்கு நடவு முடிஞ்சதும் போய்.. தேஜூவுக்கு தாலி செயின் வாங்கிட்டு வந்துடலாம்” என்றார் ராஜன். தேஜூ அவர்கள் பேசுவது சிலது புரியவில்லை. அமைதியாக நின்று இருந்தாள்.
“தேஜூ நீயும் வரியாமா..?” என ராஜன் கேட்க,
“நானா..! நான் எதுக்கு.. நீங்களே போய் எடுத்துட்டு வாங்க மாமா” என்றாள்.
“இல்லமா உனக்கு பிடிச்சதா பார்த்து எடுத்துக்குவல்ல” என்க,
“எனக்கு இதைப்பத்தி அவ்வளவா தெரியாது மாமா!” தேஜஸ்வினி சொல்ல, லேசாகச் சிரித்த ராஜன்,
“ஆர்த்தி வருவா.. ரெண்டு பேரும் பார்த்து எடுங்க சரியா”
“சரி மாமா..!” என்றாள். அதியன் அவளை ஏறிட்டான். அவள் புன்னகையுடன் நின்று இருந்தாள். காலையில் ஆர்த்தி கூறியது அவனுக்கு நினைவு வரவும்.
“வேண்டாம் ப்பா… நானே நாளைக்கு தேஜூவ கூட்டிட்டு போய்.. நகை வாங்கிட்டு வரேன்” என்று கூறினான்.
“சரிப்பா உன் இஷ்டம்.. காலையில வேலை இருக்கு போய் படுங்க” என்று கூறிவிட்டு, அவரவர்கள் படுக்கைக்குச் சென்றனர்.
தேஜஸ்வினி கதவை அடைத்துவிட்டு, இடுப்பைப் பிடித்தபடி மெத்தையில் அமர்ந்தாள். அதியன் எதையோ கையில் எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தான்.
“குப்புற படு தேஜூ..” என்றான், அவள் புரியாமல்,
“எதுக்கு ஜி..?” எனக் கேட்டாள்.
“சொல்றதை செய்யேன்” என அவன் மிரட்டுவது போல் சொல்ல, அவளும் திரும்பி படுத்தாள்.
தேஜஸ்வினி தயக்கத்துடன் குப்புறப் படுக்க, அதியன் அவள் அருகில் அமர்ந்து கையில் இருந்த தைலத்தை எடுத்தான். நேற்றைய வலியை விட இன்று சற்றுக் குறைந்திருந்தாலும், நடக்கும்போதும் குனியும்போதும் அந்த இடுப்புப் பிடிப்பு அவளுக்குள் லேசாகக் கடித்துக் கொண்டுதான் இருந்தது. வலி இருந்தாலும் அவனின் இந்த நெருக்கம், அவளைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
“வலி இன்னும் இருக்கா?” என அதியன் சாதாரணமாகக் கேட்பது போலக் கேட்டாலும், அவன் குரலில் இருந்த கரிசனம் தேஜஸ்வினியின் நெஞ்சைத் தொட்டது.
“கொஞ்சம் வலி இருக்கு ஜி… பெருசா வலி இல்ல. நீங்க கஷ்டப்பட வேண்டாம்” என மெதுவாகச் சொன்னாள்.
“உன் கிட்ட வலி இருக்கான்னு தான் கேட்டேன். நான் கஷ்டப்படுறேன்னு உன் கிட்ட சொன்னேனா. பேசாம இரு தேஜூ” என அதியன் பேசிக் கொண்டே, அவள் சேலையை விலக்கி, விரல்களில் தைலத்தை எடுத்து அவள் இடுப்பில் மெதுவாகத் தேய்க்கத் தொடங்கினான்.
அவன் விரல்களின் சூடும், அந்த இதமான அழுத்தமும் தேஜஸ்வினிக்குள் ஒருவித சிலிர்ப்பையும், அதேநேரம் இனம் புரியாத உணர்வையும் கொடுத்தது.
அவள் மூச்சுக் காற்று சீராக இல்லாமல், இதயத்துடிப்பும் அதிகரிக்க, அவள் ஒரு அவஸ்தையுடன் தலையணையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
அதியன் அவளின் நிலையை புரியாதவனாய்.. தன் வேலையைத் தொடர்ந்தான். சிறிது நேரத்தில் தைலம் தேய்த்து முடித்து, கையைத் துடைத்துக் கொண்டவன்,
“நாளைக்கு நகை எடுக்கப் போகணும்ல… நல்லா தூங்கு தேஜூ…” என அதியன், கேள்வி கேட்டுவிட கூடாது என நினைத்து, சமாளிப்பது போல் சொன்னான்.
தேஜஸ்வினி மெதுவாக எழுந்து அமர்ந்து, அவனைப் பார்த்துச் சின்னதாகப் புன்னகைத்தாள். “நன்றி ஜி…”
“எதுக்கு தேஜூ இதுக்கெல்லாம் நன்றி?” எனக் கேட்டவன், ஒரு நொடி அவள் முகத்தையே பார்த்தான்.
அவனின் பார்வையில் தேஜஸ்வினி உறைந்து போக, “ஜி.. கொஞ்சம் நேரம் பேசலாமா..?” என தயக்கத்துடன் கேட்டாள்.
“என்ன பேசணும்?”
“அது… வந்து.. என்னை.. உங்களுக்கு..!” என்றவளின் வார்த்தை ஒவ்வொன்றாக வரவும்,
“பிடிக்கும்..!” என்று ஒன்றை வரியில் முடித்துவிட்டான். போதுமே அவளுக்கு இந்த வார்த்தை. அவள் வானத்தில் பறப்பது போல உணர்ந்து இமை தாழ்த்தி வெட்கப்பட்டாள். கண்களில் நீர் தேங்கி நின்றது.
“தூங்கலாமா..?” என்றதும், அவள் விளக்கை அணைக்க எழுந்தாள். அதியன் அவளை தோளைப் பிடித்து அமர வைத்தான்.
“நீ.. படுத்துக்கோ தேஜூ.. லைட் நான் ஆஃப் பண்றேன்” என்றான்.
அவள் அப்படியே படுத்துக்கொண்டாள். அதியனும் விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டான்.
அவன் தேய்த்துவிட்ட தைலத்தின் இதமே போதுமென.. தேஜஸ்வினி உறங்கிவிட்டாள். அதியன் உறக்கம் வராமல் புரண்டு படுத்தான். அவன் நினைப்பு எல்லாம்.. தான் ஒடிசாவில் பாதியில் விட்டு வந்த வேலையின் மீதே இருந்தது. இறந்தது யாரோவாக இருந்தால் சுலபமாக கடந்து இருப்பான்.
கல்லூரியில் உடன் படித்த நண்பன். காவல்துறை பணிக்காக பயிற்சியிலும் அவனோடு பயணித்தவன் சுதாமன்.
சுதாமன் மேல் படிப்பிற்கு தன் வீட்டையே எதிர்த்துக் கொண்டு, சென்னைக்கு ஓடிவந்தவன். விடுதியில் தங்கி பகுதி நேர வேலை பார்த்து படித்தான். எவ்வளவு மன காயம் இருந்தாலும் அவன் முகத்தில் ஒருநாளும் புன்னகை குறைந்தது இல்லை. அதியன் ஒரு சின்ன மோதலில் அவனுடன் நட்பாகினான்.
ஒரு நாள் பகுதி நேர வேலைக்காக சுதாமன் அவசரமாக புறப்பட்டவன், எதிரில் வந்த அதியன் மீது இடித்துவிட. வாலிப மிடுக்கில் அதியன் சுதாமனை அடிக்க போனான்.
“மன்னிச்சிடு.. மன்னிச்சிடு.. தெரியாம இடிச்சிட்டேன் நான் வேலைக்கு போகணும்” என்று ஒடிசா மொழியில் சொல்லிவிட்டு, ஓடினான். அதியன் புரியாமல் அப்படியே நின்றான்.
அதியன், சுதாமனை பிடித்து அவனைப் பற்றி தெரிந்துக் கொள்ள நினைத்தான். ஞாயிறு காலை அவனைத் தேடி அவன் தங்கி இருக்கும் அறைக்கு வந்தான். அந்த அறையில் சிலர் விடுமுறையைக் கொண்டாடச் சென்றுவிட, சுதாமன் மட்டும் படித்துக் கொண்டிருந்தான். அதியன் அந்த அறையின் கதவைத் தட்ட. புத்தகக் கையோடு வந்து கதவைத் திறந்தான் சுதாமன்.
“எந்த ஊர் நீ?” என அதியன் மிரட்டுவது போல கேட்க,
“என் பேரு சுதாமன்.. நான் ஒடிசாவுல ஒரு சின்ன கிராமத்துல இருந்து வரேன். எங்க ஊருல ஆணோ பொண்ணோ.. பன்னிரெண்டாம் வகுப்புக்கு மேல படிக்க வைக்க மாட்டாங்க.. எனக்கு மேல படிக்கணும்னு ஆசை.. அதான் வீட்ட விட்டு ஓடி வந்துட்டேன். இங்க ஒரு துணி கடையில வேலை பார்த்துட்டே படிக்கிறேன்.” என சுதாமன் சொல்ல, அதியன் அவன் மீது பரிதாபப்பட்டான். அவன் படிக்க வேண்டும் என்ற ஆசையின் ஆர்வம் அதியனுக்கு பிடித்திருந்தது. அவனைத் தோள்தட்டி,
“சரி நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல” என்றவன் குரலில் நட்பு தெரிந்தது. சுதாமன் லேசாக புன்னகைத்தான்.
நாளடைவில் அது உயிர் நட்பாக மாறியது. சுதாமன் தாய்மொழியை அதியனுக்கு சொல்லிக் கொடுத்தான். அதியனும் சுதாமனுக்கு தமிழ் மொழி சொல்லிக் கொடுத்தான். இருவரும் ஒரே கனவோடு பயணித்தனர்.
டெல்லியில் இருவரும் ஒன்றாகவே காவல்துறை பணியின் சிறப்பு பயிற்சி வெற்றிகரமாக முடித்தனர். இருவருக்குமே அவரவர் சொந்த ஊரில் வேலை கிடைத்தது. இருவருமே பணியில் நேர்மையான பொறுப்பான அதிகாரிகளாக வலம் வந்தனர்.
ஒடிசாவில் போதை மருந்து கடத்தல் கும்பலை பிடித்தான் சுதாமன். அவர்களை விடச் சொல்லி பல பணக்காரர்கள், அரசியல்வாதிகளிடம் அழுத்தம் வந்தவண்ணம் இருந்தது. சுதாமன் மறுத்ததால் அவனை வேறு ஊருக்கு மாற்றினர். எங்கு சென்றாலும் சுதாமன் பணியின் நேர்மை மாறவில்லை. அதனாலேயே கூலிப்படையை ஏவிவிட்டு சுதாமனை கொன்றனர்.
அதனைக் கேட்டறிந்து அதியன் போவதற்குள், சுதாமன் உறவினர்கள் கடைசி காரியத்தை முடித்துவிட்டனர். அதியனுக்கு மனம் தாங்கவில்லை, எப்படியாவது நண்பனைக் கொன்ற குற்றவாளியைப் பிடித்தே ஆக வேண்டும், என்ற முனைப்போடு, வெற்றிவேந்தன் டிஎஸ்பி மூலம், ஒடிசாவில் உள்ள தனிப்படை பிரிவில் சேர்ந்தான்.
அந்த நினைவுகளை மனதில் ஓட்டிக் கொண்டிருந்தவனின் கண்கள்.. வெறுப்பிலும் கோபத்திலும் சிவந்து போனது.
மயிலாஞ்சி தொடரும் ✍️
