முள்ளிடை மலரிதுவே-6

மதுரா குயிலுக்குத் தெரியும் என்றவுடன், “அப்போ இன்னும் சுலபமாக்கிட்டீங்க. நாளைக்கு குயிலமுதியை இங்கே கூட்டிட்டு வாங்க. தமிழ், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் இவங்களோட புரிதல் அளவு எப்படி இருக்குனு நான் ஒரு சின்ன பரீட்சை செய்து பார்த்திடுறேன். அது பிறகு நாம் முடிவு செய்யலாம்” என்றார் வட்டார வள மைய மேற்பார்வையாளர்.
மறுநாள் வைத்த பேச்சு மற்றும் எழுத்துத் தேர்விற்குப் பிறகு, “மிஸ். மதுரா அற்புதம்மா. தமிழ் பிழையில்லாமல் எழுதப் படிக்கத் தெரிகிறது குயிலமுதிக்கு. நான்கு அடிப்படை கணிதச் செயல்பாடுகள், பின்னங்கள், தசமங்கள், சதவீதங்கள், எதிர்மறை எண்கள் மற்றும் பெருக்கல் அட்டவணைகள் வரை தெரிகிறது. ஆங்கிலத்தில் எழுத்துக்கள் மட்டும் கற்றுக்கொண்டிருக்கிறாங்க. வெரி வெல்டன்மா” எனச் சிலாகித்துப் பாராட்டினார்.
ரிஷி நந்தன், மலைக்கிராம மக்களுக்குச் செய்த உதவிகள் அளப்பரியவை. பூம்பொழில் மற்றும் இதர மலைக்கிராமங்களில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு தனது தேயிலைத் தோட்டத்திலும், தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலையிலும் வேலையில் அமர்த்தினான். அவர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினான்.
அக்கிராமங்களில் பால்ய விவாகம் மிகச் சாதாரணம். அப்படித் திருமணம் செய்துவைக்கப்படும் சிறுமியருக்குப் படிக்க உரிமை இல்லை, சொத்துரிமை இல்லை, வெளியில் சென்று வேலை செய்ய உரிமை இல்லை. மொத்தத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை வாழ்கிறார்கள்.
அச்சிறுமியர்களின் வாழ்க்கை அவலத்தைப் பார்த்த ரிஷி, திரும்பத் திரும்ப அம்மக்களிடம் போராடி, தன் தொழிற்சாலை வளாகத்தில் ஒரு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கிடங்கை உருவாக்கினான். அதில் சிறுமியர்கள் முதல் நடுத்தர வயது கொண்ட மலைக்கிராம பெண்கள் வரை கைவினைப் பொருட்கள், முக்கியமாக சுடுமண் சிற்பங்கள், பிரம்பு கொண்டு செய்யப்படும் அழகு சாதனப் பொருட்கள், பனையோலைப் பொருட்கள், மரச்சாமான்கள் எனப் பலதரப்பட்ட பொருட்கள் செய்ய வைத்து, அதை முறையாகச் சந்தைப்படுத்தி அந்த வருமானம் அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்தான்.
அப்படி அங்கு வேலை செய்துகொண்டிருக்கும்போதுதான் மதுராவிற்கு குயிலு அறிமுகமானாள். குயிலின் கல்வி ஆர்வத்தை ரிஷியின் மூலம் அறிந்த மதுரா, அவள் தினமும் தனது வேலையை முடித்த பிறகு கல்வியைப் பயிற்றுவிக்கத் தொடங்கினாள்.
ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் முதிர்ந்து தள்ளாடும் வயதில்கூடக் கற்க இயலும். குயிலு இயல்பிலேயே அதீத ஆர்வமும், புத்திக்கூர்மையும் உடையவள் என்பதால் மதுராவின் பயிற்று வகுப்புகள் அவளுக்கு எளிதாக இருந்தன.
கற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்தால் கற்றலின் கதவுகள் திறக்கும் என்பதற்கு குயிலு ஒரு சிறந்த உதாரணம்.
“மிஸ்டர் ரிஷி நந்தன், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அரசு பழங்குடியினருக்கான ஸ்பெஷல் டிரெய்னிங் சென்டரில் இவர்களை அடிப்படைச் சீரமைப்பு வகுப்புகளில் (foundational remedial classes) முதலில் சேர்த்துப் படிக்க வைக்கலாம். இவர்கள் கற்றுக்கொள்ளும் வேகத்தைப் பொறுத்து எட்டாம் வகுப்புத் தேர்வு எழுத வைத்து, பிறகு பத்தாம் வகுப்பும் எழுத வைக்கலாம். இப்படிச் செய்தால், பன்னிரண்டில் பிறரைப் போல வழக்கமான பள்ளிக்கு விரைவாகச் செல்ல முடியும். அதன் பிறகு டிகிரியோ அல்லது தொழிற்கல்வியோ அவர்கள் விருப்பம்போலப் படிக்கட்டும்” என அதிகாரி கூற, குயிலின் வாழ்வின் வரைபடம் விரிந்தது; அவள் கண்களில் கனவு ஒன்று விரிந்தது.
மூவரும் வீடு திரும்பிக்கொண்டிருக்க, குயிலு ஒரு யோசனையோடே வந்தாள்.
“என்ன, என் குயிலுக்குட்டி இப்பவே கனவு காண ஆரம்பிச்சுட்டாளா?” என்றாள் மதுரா.
“இல்ல மதுக்கா, நான் படிக்கப் போனா முழுநாள் போகணுமில்ல… அப்போ கிருஷ்ணாவை எப்படிப் பார்த்துக்கிறது” என்றாள் தயக்கமாக.
“ஓஓ… கிருஷ் குட்டி பற்றி உனக்கென்ன கவலை. அதெல்லாம் ஓர் ஆளைப் போட்டு நம்ம வீட்டிலேயே கவனிக்க வைத்துவிடலாம். நீ தினமும் கிளாஸ் போகும்போது நம்ம புவனாமாவிடம் (ரிஷி-மதுரா வீட்டில் வேலை செய்பவர், ஆனால் குடும்ப அங்கத்தில் ஒருவராக நடத்தப்படுபவர்) கொடுத்துட்டுப் போயிடு. கிருஷைப் பார்த்துக்கிற ஆள்கூட அவனைக் கனெக்ட் செய்துவிட்டால், அவன் சமத்து… இருந்துப்பான். திரும்பி வரும்போது கூப்பிட்டுக்கோ. என்ன நந்துமா, நான் சொல்வது?” என்றாள் கணவனைப் பார்த்து.
“மதுரம் சொன்னா மறுபேச்சு ஏது?” என்றான் நந்தன் புன்சிரிப்பாக.
“ரொம்பத்தான். ஹாங்… அடுத்து உனக்கு ஸ்கூட்டி ஓட்டப் பழக்கணும். நீ கிளாஸ் போக இன்னும் ஒரு வாரம் இருக்கு. ஜமாய்ச்சுடலாம். நந்துமா, அவளுக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கணும்” என்றதும்,
காரில் தன் “மதுரம் சொன்னா அப்பீல் ஏது?” என்றான், அதற்கும் புன்னகையுடன்.
இறந்து போன தன் அன்னையின் அழைப்பான ‘நந்துமா’ என்று மனைவி கூப்பிடும்போதெல்லாம் கரைந்து போவான் நந்தன். மதுரத்தின் நந்துமா இவனில் எப்போதும் நாதமிசைக்கும், நெகிழச் செய்யும், பெரும் நேசத்தை இவனில் வந்து போர்த்தும்.
——————–
ரிஷியும் மதுராவும், முதல் நாள் குயில் பழங்குடியினருக்கான ஸ்பெஷல் டிரெய்னிங் சென்டருக்கு வருவதால் கூட வந்திருந்தார்கள்.
வட்டார வள மைய மேற்பார்வையாளரின் அறிவுறுத்தலின் பேரில் இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் அந்த மையத்தின் பொறுப்பாளர்.
ஏற்கனவே குயிலின் சேர்க்கை சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாம் முடிவுற்றிருந்தபடியால், ரிஷி மற்றும் மதுராவிடம் சில தகவல்களைக் கேட்டுக் கொண்டவர், பிறகு குயிலை தான் வகுப்புக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்.
காலையிலிருந்தே குயிலு உணர்வுகளின் பிடிக்குள் ஆட்பட்டிருந்தாள். திருமணத்திற்குப் பிறகே வாழ்க்கையில் பிடிப்பற்று வாழ்ந்து கொண்டிருந்தவள், அந்தக் கணவனும் இறந்த பிறகு மகன் மட்டுமே அவள் வாழ்வதற்கான காரணமாக இருந்தான். கல்வியில் இவளுக்கு அதீத காதல் இருந்த போதிலும், எட்டாக்கனி என்றே அதை மனதில் புதைத்து வாழ்ந்து வந்தாள். இந்த நிமிடம் வரை நடப்பதெல்லாம் உண்மைதானா? தனக்கா.. இப்படியொரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது? என்று நினைத்து நினைத்து மாய்ந்து போனாள். ஒரு பக்கம் தன்னால் முடியுமா என்ற பயமும், பதற்றமும், கொஞ்சம் நம்பிக்கையின்மையும் கலந்து கிடந்தது. கண்கள் குளம் கட்டி இன்னும் ஒரு உணர்ச்சி உந்துதலில் கொட்டிவிடுவேன் என மிரட்டிக் கொண்டிருந்தது பெண்ணை. வெகு பிராயத்தனப்பட்டு தன்னை சீர் செய்யப் பார்த்தாள், இவளால் முயல மட்டுமே முடிந்தது. ம்கூம்… மனதில் பொங்கிக் கொண்டு கண்களின் வந்து கரை ஒதுங்க, இரு துளிகள் கன்னம் தொட்டு தரையில் சிதறியது.
குயிலை நன்கு அறிந்த மதுரா அவள் அருகில் வந்து அணைத்துக் கொண்டு, “குயிலுக்குட்டி… வாழ்க்கை உனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் வைத்திருக்கலாம், இந்த இடத்தில்… இந்த நொடியில் இருந்து உன் வாழ்க்கையே தலை கீழாக மாறலாம். உன் தேவை எத்தனை உயிர்களுக்குத் தேவையோ யாருக்குத் தெரியும். சோ அழாமல் சார் கூட போ” என குயிலைத் தேற்ற,
அருகில் வந்து குயிலின் தலையில் கை வைத்த ரிஷி, “நல்லாயிரும்மா” என்றான் குரல் கம்ம.
“ஹலோ என்ன இப்போ நீங்களா? வாங்க வாங்க நமக்கு ஆபிஸ் போகணும், மீட்டிங்கு நேரமாச்சு” என்ற மதுரா குயிலிடம் விடைபெற்று தன்னவனை இழுத்துக் கொண்டு போனாள்.
பொறுப்பாளர் குயிலை அந்த வகுப்பறைக்குள் அழைத்துச் செல்ல, பத்து முதல் பதினைந்து வயது வரை மொத்தம் ஐந்து மாணவர்கள் அமர்ந்திருக்க, நெடுநெடு உயரத்தில், அதற்குண்டான உடற்கட்டுடன், கண்களில் நிமிர்வு மிளிர வகுப்பறை கரும்பலகையின் அருகே நின்று கொண்டிருந்தான் ஒருவன்.
“ஆதிசார், இது குயிலமுதி, நேற்று இவங்களைப் பற்றித்தான் உங்களுக்குச் சொன்னேன். குயிலமுதி, இவர் இந்த மையத்தில் பாடம் எடுக்கும் ஆசிரியர் திரு. ஆதித்யன் சுந்தரபாண்டியன். இந்த கொடைக்கானல் மலைவாழ் மக்களுக்கு உதவ வேண்டும்னு வாலண்டியராக இங்க வேலை செய்கிறார்” என்று பொறுப்பாளர் அறிமுகம் செய்ய,
“வணக்கம்” என்றான் குயிலின் கண்களுக்குள் பார்த்து.
இவள் பதில் வணக்கம் சொல்ல, ஆதித்யனைப் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்திவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.
மிரள மிரள விழித்துக் கொண்டு தன் மதுக்கா வாங்கிக் கொடுத்த பையை மார்போடு அணைத்துக் கொண்டு அவள் நின்ற தோற்றம், முதல் நாள் வகுப்பிற்கு வந்து மிரளும் குழந்தைபோலவே இருக்க, ஒரு புன்முறுவல் இவனில்.
பாவாடை சட்டை அணிந்து, பழங்குடி இனமக்கள் போட்டுக் கொள்ளும் பளிங்கு வளையல்களும், பாசி மாலைகள் இரண்டும் அணிந்து புகைபடிந்த ஓவியம் போலிருந்தாள் பெண்.
“குயிலம்மாக்கு பயமோ ரொம்ப?” என்று புன்னகைத்தவன்,
“குயிலம்மாவுக்கு இரு கதை சொல்லட்டுமா? பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாவித்ரி புலே அப்படின்னு ஒரு பெண்மணி வாழ்ந்தாங்க. அவங்களுக்குத் திருமணம் ஆகும் போது ஒன்பது வயது, எழுதப்படிக்கத் தெரியாது. ஆனா பிற்காலத்தில் அவங்க கணவரின் உதவியோடு இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக உருவெடுத்ததுடன் மட்டுமில்லாமல், மகாராஷ்டிராவில் பெண்களின் உரிமைகள் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினாங்க. அவர் விட்டுச் சென்ற மரபு, இந்தியா முழுவதும் உள்ள சமூக சீர்திருத்த இயக்கங்களில் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹாங்… அவங்களுக்கு எப்படி இது சாத்தியமாச்சு? கல்வி மேல் அவங்க வைத்திருந்த ஆர்வமும், சாவித்ரி புலே தன்மேலேயே கொண்டிருந்த நம்பிக்கையும்தான். சாவித்ரி புலேயால் முடிந்த ஒரு விஷயம் ஏன் இந்த குயிலம்மாவால் முடியாது?” என்றான் முறுவல் முகத்தில் முகிழ.
சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் பெண், நம்பிக்கையின் நங்கூரம் ஒன்றை இவள் இதயத்தில் இருத்தியது.
அவனது குயிலம்மா என்னும் அழைப்பு இவளில் நேச விதைகளை மெல்லத் தூவியது.
“நன்றி… ரொம்ப நன்றி… நன்றி… சார்… நன்றி ஆதி சார்” என்றாள் உணர்வுகள் மேலெழுந்து ஆதிக்கம் செய்ய.
இராமாயணத்தில் வானரப்படை இலங்கை நோக்கிச் சென்றபொழுது, தங்கள் முன் விரிந்து கிடக்கும் கடலை எப்படித் தாண்டுவது என்று அனைவரும் கவலை கொண்டார்கள்.  அப்போது கடலை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த அனுமனுக்கு அவரின் பலம் அவருக்கே தெரியாது. அதை அறிந்த ஜாம்பவான், அனுமனிடம் அவரின் பிறப்பை, வலிமையை, பலத்தை நினைவூட்டினார்.  பிறகு அனுமன் கடலைக் கடந்து சீதையைச் சந்தித்ததாக புராணம் கூறுகிறது.  
ஒருவருக்குள்ளும் அளவற்ற திறமையும் ஆற்றலும் இருந்தாலும்  அதை நினைவூட்ட அல்லது உணரச் செய்ய ஒரு ஜாம்பவான் தேவைப்படுகிறார், அவர் பெற்றோராக இருக்கலாம் அல்லது ஒரு ஆசிரியராக இருக்கலாம் அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.  இந்தக் குயிலம்மாவுக்காக ஆதித்யன் ஜாம்பவான் அவதாரத்தைத் தரித்துக் கொண்டான்.
நம்மில் உறங்கிக் கொண்டிருக்கும் நம்பிக்கையை எழுப்பினால் அனுமன் போன்றதொரு பலம் நம்மில் விழிக்கலாம்!
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top