New member
- Joined
- Oct 22, 2026
- Messages
- 1
- Thread Author
- #1

வேள்வித் தீயில் ஓர் இதயம்
அன்றைய காலை பொழுது குழந்தை நிவேதா அழுது கொண்டிருக்க, பேத்தியை தூக்கி தோளில் போட்டு தட்டிக்கொண்டே, வெளி வாசலை பார்த்து திட்டிக் கொண்டிருந்தார் நாகேஸ்வரி.
இரண்டு வயது குழந்தை தாயையும் தகப்பனையும் காணாமல் தேடி அழுதது.
“மகனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சா குடும்ப பொறுப்ப பார்த்துட்டு குழந்தையும் தூக்கி வச்சு கொண்டாடுவா, வயசான காலத்துல காலை நீட்டி அக்கடான்னு உட்காரலாம்னு பார்த்தா, இப்படி எல்லாத்தையும் என் தலையில தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாளே!
அவனுக்கும் கொஞ்சமாவது அக்கறை இருந்தா இப்படியெல்லாம் நடப்பானா? என்னமோ இவன் தான் ஊர் மேலயும் ஊர் மக்கள் மேலையும் உண்மையிலேயே அக்கறை உள்ளவன் போல எப்ப பார்த்தாலும் பொது சேவையில் ஈடுபட்டு திரிகிறான். நமக்கும் ஒரு குடும்பம் இருக்கு, பெத்த பிள்ளை அப்பாவை தேடும்னு கொஞ்சமாவது பாசம் இருந்தா தானே! எல்லாம் என் தலையெழுத்து. கடைசி காலத்துல இதெல்லாம் அனுபவிக்கணும்னு இருக்கு” என்று அங்கலாய்ந்தார் நாகேஸ்வரி.
அந்த நேரம் அருகில் நின்றிருந்த வேலைக்கார பெண்மணி ஏதாவது சொன்னால் நம்மையும் இல்லாமல் ஆக்கி விடுவார் என்பதால் அமைதியாக இருக்க, குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்தது. பாலை கொடுத்தும், இட்லியை பிய்த்து ஊட்டியும் விடாமல் அழுது கொண்டிருக்க, “இந்த வீட்டுல இத்தனை வேலைக்காரங்க இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு பச்சைக் குழந்தையை உங்களால் பார்க்க முடியுதா?” என்று ஆத்திரத்துடன் கத்தினார்.
அவர்களோ தயங்கியபடி நிற்க, “என்ன கருமமோ? நமக்கு வாய்த்தது எல்லாம் அப்படித்தான் இருக்கு” என்று திட்டிக்கொண்டே இருக்க, அந்த வீட்டில் ஒரே ஒருவரிடம் மட்டும் போகும் நிவேதா, அவருடன் சென்றதும் குழந்தையை சமாதானப்படுத்த வீட்டுப் பின் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு கொண்டு சென்றார் அந்தப் பெண்மணி.
அதே நேரத்தில் வீட்டு வாசலின் முன்பு ஒரு கார் வந்து நின்றது.
யார் வருகிறார்கள் என்று பார்க்க அவர் வாசல் பகுதியை நோக்கி நடக்க, மாலையும் கழுத்துமாக தன் மனைவி நந்தனாவுடன் இறங்கி நின்றான் பரிதிவர்மன்!
அந்தக் காட்சியைக் கண்டதும் திகைத்துப் போய், வாயைப் பிளந்தபடி நின்றார் நாகேஸ்வரி. உலகமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனது போலிருந்தது. கண் முன் நடந்த சம்பவத்தை அவர் நம்ப முடியாமல் இருக்க, அவனோ அம்மாவை ஒரு பொருட்டாக கருதாமல், மனைவியின் கைப்பற்றி அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்.
நேராகப் பூஜையறைக்கு அழைத்துச் சென்று சுவாமி வழிபாட்டை முடித்தவன், வேலைக்கார பெண்மணியின் கையில் இருக்கும் குழந்தை நிவேதாவை காண சென்றான்.
அவள் மாலையும் கழுத்துமாக இருக்கும் அப்பாவைக் கண்டதும் புன்னகையுடன் அவனை நோக்கி சாட, அவனும் முகம் மலர மகளைத் தன் இரு கைகளிலும் வாங்கிக் கொண்டான்.
நிவேதா “அப்பா, அப்பா!” என்று ஆசையுடன் அழைத்துக் கொண்டே அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள, மகளின் கன்னத்தில் முத்தமிட்டான் பரிதிவர்மன்.
அப்படியே அவள் சற்று நேரம் விளையாடி விட்டு, அருகில் நின்று தன்னையே பார்த்துப் புன்னகையுடன் இருக்கும் பெண்ணவளை கண்டாள்.
புதிய நபராக தெரியும் அவளை யார் என்று தெரியாமல் பார்த்திருக்க, “பிள்ளைக்கு அம்மா, பிள்ளை கூடவே இருந்து கடைசி வரை பத்திரமா பாத்துக்க போறவங்க. இனி நீ இவங்கள அம்மான்னு தான் கூப்பிடணும்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.
அவளோ மறுபடியும் நந்தனாவின் முகத்தைப் பார்த்து விட்டுப் பின்னர் “அம்மாவா?” என்று கேட்க, நந்தனாவும் ஆமாம் என்று தலையசைத்தாள்.
உடனே அவள் நந்தனாவை நோக்கி சாட, பூக்குவியலாக தன் மீது வந்து மோதிய குழந்தையை இரு கைகளிலும் வாரி அணைத்தவள், அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். குழந்தையும் அதுபோலவே செய்ய, “அம்மாவை உனக்குப் புடிச்சிருக்கா? இனிமேல் அம்மாவை விட்டு எங்கேயும் போகாம அழாம இருப்பியா?” என்ற பரிதியின் குரலில் உடனே தலையசைத்தாள்.
மகளையும் மனைவியையும் கண்டு அவன் புன்னகைத்திருக்க, மூவரையும் நெருப்பு விழிகளால் சுட்டெரித்துக் கொண்டிருந்த நாகேஸ்வரி, “யாருக்கு யார் அம்மா? எப்படி நீ இவளை என் மருமகள் இருக்கும் இடத்தில் கொண்டு வரலாம்? நாளைக்கு அவள் வந்து நின்னு கேட்டா நான் என்ன பதில் சொல்வது?” என்று சீறி கொண்டு வந்தார்.
அவனோ அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கவும், இன்னும் அவரது கோபம் அதிகரித்தது. அந்தக் கோபம் அருகில் புத்தம் புதிய தாலியுடன் நின்றிருக்கும் நந்தனாவின் மீதும் திரும்பியது.
அப்படியானால் குழந்தையின் அம்மா இன்னும் உயிருடன் தான் இருக்கிறாளா? அவளுக்கும் பரிதிக்கும் இடையில் நடந்தது என்ன? நந்தனாவின் வாழ்க்கை அந்த வீட்டில் நல்ல விதமாக அமையுமா? அல்லது நித்தமும் வேள்வித் தீயில் மூழ்கி எழுந்தது போல் ஆகுமா? என்பதை நவம்பர் மாதம் 9 - ஆம் தேதி வரக்கூடிய தொடரிலிருந்து வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.