ருத்ரனின் பனித்தீ 💖 அத்தியாயம் 9

அத்தியாயம் 9

ருத்ரனின் வீட்டிற்கு சென்று அவனை பார்க்க போவதாக பனிவிழி கூறியதை கேட்டு அதிர்ந்து போனாள் சுமித்ரா. 

 “ஏய் என்னடி உளர்ற…!! சாரோட வீட்டுக்கா…!! அங்க எதுக்கு போற..?” 

“இல்லடி.. அவர் முகமே சரியில்ல… இரண்டாவது என்கிட்டையும் அவரோட பிஹேவியர் நார்மலா இல்ல, அதனால தான் அவருக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு போய் பாத்துட்டு….” 

“போயி… பாத்துட்டு…. என்ன பண்ண போற…?” சுமித்ராவின் கேள்வியை பனியிடம் சிறு அமைதி. 

 “பதில் இல்லைல, அங்க போயி நீ கழட்ட வேண்டிய ஆணி எதுவும் இல்லைல… மூடிக்கிட்டு… டிவில நல்ல படம் போட்டுருக்கான் பாத்துக்கிட்டு உட்காரு…. நாளைக்கு காலையில ரெக்கார்ட் நோட் சப்மிட் பண்ணனும்ல அதை எழுதுற வேலைய மட்டும் பாரு…!” 

 “ரெக்கார்ட் நோட் தானே…! பொறுமையா சப்மிட் பண்ணிக்கலாம்…!” 

 ‘இவ திருந்த மாட்டா…’ என்று மனதிற்குள் நினைத்தவள் 

“சரிடி நான் போனை வச்சுட்றேன்…”

 “ஏய் இருடி…. சரி நீ சொன்ன மாதிரியே நான் சாரோட வீட்டுக்கு போகல, ஆனா எனக்கு அவரு இப்ப எப்படி இருக்காருன்னு தெரிஞ்சுக்கணும்…!” என்றவளின் நினைவில் திடீரென்று ஏதோ ஒரு யோசனை வந்து செல்லவே,

 “ஏய் சுமி.. பெஸ்ட் ஐடியா கிடைச்சிருக்குடி…!” 

“இப்போ என்னடி…” எரிச்சல் மண்டிய குரலில் கேட்டாள் சுமித்ரா.

 “இல்லடி… அவர் எங்க இருக்காரு எப்படி இருக்காருன்னு நான் நேர்ல போய் பார்க்க வேணாம்… ஆனா அவரு இப்போ ஆக்டிவா இருக்காரான்னு தெரிஞ்சுக்கறதுக்கு நம்மளுக்கு இருக்கவே இருக்கு சோஷியல் மீடியா… அது போதுமே…! உனக்கு சிடு மூஞ்சி வாத்தியோட சோஷியல் மீடியா பேஜ் தெரியுமா…?”

“எனக்கு அவருடைய ப்ரஃபைல் எதுவுமே தெரியாது, ஆனா அந்த காலேஜ் லெக்ஜர்ஸ்லையே ரித்விக் சாரோட ப்ரொஃபைல் தெரியும் அவரை நான் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன்..!! 

 “ஏய் ரித்விக் சாருக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறதா கேள்விப்பட்டேனே…! அவரை ஏன்டி நீ ஃபாலோ பன்ற..?”

 “ஏய் பைத்தியம் வந்தேன்னு வையேன்…. அவரோட ப்ரொஃபைல் எனக்கு சஜ்ஜசன் லிஸ்ட்ல வந்துச்சு… சோ நான் ஃபாலோ குடுத்தேன்… அவரும் என் ஃபாலோவ அக்செப்ட் பண்ணிக்கிட்டாரு…” 

 ரித்விக் என்கின்ற பெயரை கேட்டதும், நேற்றைய மாலை பொழுதில் நண்பர்கள் இருவரும் ருத்ரனின் கேபினில் சகஜமாக உரையாடியது நினைவில் வந்து செல்லவே,

‘ரித்விக் சாரும் சிடுமூஞ்சியும் ஃப்ரண்ட்ஸ்ன்னா அப்போ கண்டிப்பா அவங்களுக்குள்ள சோஷியல் மீடியா கம்யூனிகேசன் இருக்கும்… ஃபர்ஸ்ட் ரித்விக் சாரோட ப்ரொஃபைல் போயிட்டு அப்பறம் சிடு மூஞ்சியோட ப்ரொஃபைலை கண்டுபிடிச்சுடலாம்…’ என்று திட்டம் வகுத்துக் கொண்டவளாக, 

“சரிடி அப்போ ரித்விக் சாரோட ப்ரொஃபைல் பேஜ் எனக்கு ஷேர் பண்ணு…”

“நீதானடி இப்ப சொன்ன ரித்விக் சாருக்கு கல்யாணம் ஆகிருச்சு, குழந்தை இருக்குன்னு அப்படிப்பட்டவரை நீ ஃபாலோ பண்ணி என்ன பண்ண போற…?” 

 “ஏன்…? ரொம்ப அவசியமா சொல்லனுமோ..?”

“வேணாம்…வேணாம்… நீ எதையாவது சொல்லிட்டா அப்பறம் என் மனசு தாங்காது… நான் உனக்கு ப்ரொஃபைல் அனுப்பி வைக்கிறேன்… ஆனா அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும்…!”

“ப்ராமிஸ்ஸா..?”

“ஆமா.. ஏதாவது வில்லங்கமா பண்ணி என்னை இதுல இழுத்துவிட்ற மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு.. அப்பதான் அனுப்புவேன்…”

 “சரிடி… ரொம்ப பிகு பண்ணாம வேகமா அனுப்பிவிடு…” 

 எரிச்சலுடன் கூறிய பனி அழைப்பை துண்டித்திருக்க, அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே ரித்விக்கின் சமூக வலைத்தள பக்கத்தின் லிங்க் சுமித்ராவிடமிருந்து பனிக்கு ஷேர் செய்யப்பட்டது.

 அந்த லிங்க்கின் உள்ளே சென்று அந்த ப்ரொஃபைல் முழுவதிலும் கண்களை அழைப்புறச் செய்து எங்கேனும் ஓரிடத்தில் ருத்ரனின் புகைப்படம் இருக்கிறதா…? என்று பார்த்தாள்.

ஆனால் அதில் ரித்விக் மற்றும் அவனின் மனைவி மகள் அவர்களின் இனிமையான தருணங்கள் மட்டுமே நிறைந்திருக்க, அதனை முழுவதும் ஆராய்ந்தவள் ‘என்ன சிடு மூஞ்சிய காணோம்…!’ என்று அவனின் ஃப்ரண்ட் லிஸ்டில் சென்று தேடினாள். 

 அங்கே ருத்ரவர்மன் எம்எஸ்சி எம்ஃபில் என்று பெயருடன் இருந்த ப்ரொஃபைலை பார்த்தவள் கண்களில் நட்சத்திரம் மின்ன, அதனுள்ளே சென்று பார்த்தவளுக்கு பெரும் ஏமாற்றம்.

 ஏனென்றால் அந்த பக்கத்தில் ருத்ரவர்மனின் ஒரே ஒரு கடுகடுத்த புகைப்படம் மட்டுமே ப்ரோஃபைல் பிக்சரில் இருந்தது. மற்றபடி அங்கு அவனின் தனிப்பட்ட புகைப்படமோ அல்லது வேறு சுய விபரமோ என எதுவும் பதிவு செய்யாமல் இருந்தது. அதனை பார்த்தவளுக்கு ஏமாற்றமாகி போனது. 

 ‘என்ன இந்த சிடு மூஞ்சி சோஷியல் மீடியா பக்கத்துல ஒரு போட்டோ கூட அப்லோடு பண்ணாம இருக்கு, இதுல இருக்குற அந்த ஒரு போட்டோவும் கூட எப்பவும் சிரிக்கிறதை ரொம்ப அதிகமா விட சிரிச்ச மாதிரி வச்சிருக்கு… என்ன தான் மனுஷனோ இவரு… சரி ஃபியூச்சர்ல ஏதாவது பிக்க்ஷர் அப்லோட் பண்ணா பாத்துக்கலாம்… அதுக்காக ஒரு ஃபாலோவ குடுத்து வைப்போம்…’ என்றெண்ணி அந்த பொத்தானை தொட சென்ற வேலையில் அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 

 அது என்னவென்றால், அவளுடைய சமூக வலைதள பக்கத்தில் ப்ரொஃபைல் பிக்சராக இவளுடைய குறும்பு சிரிப்புடன் கூடிய அழகிய முகம் தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

எங்கே தன்னுடைய புகைப்படம் உள்ள ஐடியை பார்த்தால், நிச்சயம் ஃபாலோ செய்யாமல் தவிர்ப்பதை தாண்டி தன்னை ப்ளாக் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது…! என்பதை நினைத்தவள், என்ன செய்யலாம்…? என்று சிலகனம் யோசித்து புதியதொரு சமூக வலைதள பக்கத்தை உருவாக்கினாள். 

 ‘புது ஐடில புது அக்கௌன்ட் ஓபன் பண்ணியாச்சு… இதுக்கு என்ன பிக்க்ஷரும் பேரும் வைக்கிறது..?’ என்று எண்ணியவாரே தன்னுடைய போன் கேலரியில் தேடியவள் இதற்கு முன்பு தான் செல்ஃபி எடுத்திருந்த தன்னுடைய அழகிய இரு விழிகளை ப்ரொஃபைல் பிக்க்ஷராக வைத்து, பின் பெயரை குறித்து யோசிக்கையில், ‘இந்த கண்ணே நல்லா இருக்கே பேசாம விழின்னு வச்சுருவோம்…!’ என்று முடிவு செய்து, ஒரு புதிய சமூக வலைத்தள பக்கத்தை உருவாக்கினாள்.

பின் புதிய அக்கெளண்டில் இருந்து ஃபாலோ ரெக்வெஸ்ட்டை குடுத்து எதிர்ப்புறம் அது ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்கின்ற ஆர்வத்தில் அந்த ப்ரொஃபைல் பேஜையே கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பனி.

 எதிர் முனையில், மாலை நேரம் என்பதால் மூவரும் கைகளில் காபி கோப்பையுடன் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவனின் முகத்தையே கூர்ந்து கவனித்த ரித்து “ருத்ரா லாஸ்ட் டூ டேஸ் ஏன்டா ரொம்ப டல்லா இருந்த…? அப்படி என்ன ஆச்சு…?” என்று கேட்டான்.

 “அதுவா அன்னைக்கு தான் விழிக்கு திதி வந்துச்சு… அதான் அவளோட நெனைப்புலயே கொஞ்சம் அப்செட்டா இருந்தேன். 

“ஓ அப்படியா… என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல…” ரித்து ருத்ரனுடன் பேசிக்கொண்டிருக்கையில் உறக்கம் களைந்து எழுந்து கூடத்திற்கு வந்தாள் வர்ஷினி.

 வர்ஷினியை கண்டதும் சூரியனை கண்ட தாமரையாய் முகம் மலர்ந்த ருத்ரன் தன் கையில் இருந்த காபி கோப்பையை கீழே வைத்துவிட்டு சென்று அவளை தூக்கிக் கொண்டான்.

 “ஹாய் வர்ஷி செல்லம்… நல்லா தூங்குனீங்களா…?” என்று அந்த மழலையிடம் பேசும் பொழுது மட்டும் தனது குணத்தை கொஞ்சமே கொஞ்சமாக மென்மையாக மாற்றி மெல்லிய இதழ் விரித்து புன்னகையோடு கேட்டான் ருத்ரன்.

வர்ஷினியுடன் இருக்கும் இந்த நேரத்தில்தான் அவன் மனம் நன்றாகவே இலகுவாக இருக்கும் என்பதை உணர்ந்துதான் சுஜாவும் ரித்துவும் அவனை அடிக்கடி வீட்டிற்கு அழைப்பது எல்லாம்.

 ஆனால் எங்கே தன்னுடைய வருகை இவர்களுக்கு இடைஞ்சலும் இடையூறும் உண்டாக்கி விடுமோ…! என்று எண்ணியே பல நேரங்களில் இங்கு வருவதை தவிர்த்திருக்கிறான் ருத்ரன். 

 தன் மகளிடம் பேசும் பொழுது மெலிதாக இதழ் விரித்திருந்த அவனின் அழகிய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ரித்விக்.

 அந்த நேரம் ரித்துவின் அழைபேசிக்கு குறுஞ்செய்தி வருவதற்கான அழைப்பு மணி ஒலித்தது.

 அந்த சத்தத்தில் கையில் இருந்த காலி கோப்பையை எதிரில் இருந்த டீபாயில் வைத்து விட்டு குறுஞ்செய்தியை திறந்து பார்த்தான்.

 அதில் ஒரு புதிய ஐடியிலிருந்து தனக்கு ஃபாலோ ரெக்வெஸ்ட் வந்ததை கவனித்து, ‘இவனுக்கு மட்டும் எப்படித்தான் இத்தனை ஃபாலோ லிஸ்ட் குவியிதோ தெரியல… நம்மளை ஒருத்தரும் கண்டுக்க மாட்றாங்க…!’ என்று நொந்து கொண்டவனாக விழியின் ப்ரொஃபைலை செக் செய்தான்.

அதில் இருந்த அந்த பெயரை பார்த்தவன் ‘பேர் ரொம்ப நல்லா இருக்கே…!’ என்று அந்த ப்ரொஃபைலில் இருந்த இரு விழியையும் பெயரையும் வைத்து அது ஒரு பெண்ணுடையது என்றும், அந்த விழியை நன்றாக ஜூம் செய்து பார்த்தவனின் நினைவில், 

‘இந்த பொண்ணு பேரு விழி… ஏன் இந்த பொண்ணை நம்ம சிடு மூஞ்சி கூட பேச விடக்கூடாது…. ஏன்னா இவனோட செத்துப்போன அத்தை பொண்ணோட பேரும் விழி தான். அவனும் விழி விழின்னு தான் சொல்லிட்டு இருக்கான்…

இப்போ ரெண்டு பேரையும் பேச விட்டா அவனுக்கும் மனசுக்குள்ள இருக்குற இறுக்கம் குறைய ஒரு வாய்ப்பா இருக்குமே…!’ என்று நினைத்துக் கொண்டான்.

 ருத்ரனின் கடந்த கால வலிகளை அவனின் மனதில் இருந்த இறுக்கத்தை எப்பொழுது அறிந்து கொண்டானோ.. அப்பொழுதே அவனுக்குள் இருக்கும் இறுக்கத்திலிருந்து விடுபட இந்த சமூக வலைதள பக்கம் அதிக உதவிகரமாக இருக்கும்….! என்றெண்ணி அவனை அதில் ஒரு தனிப்பட்ட ப்ரொஃபைல் உருவாக்குவதற்கு எத்தனையோ முறை கேட்டதற்கு,

“வேண்டாம்… எனக்கு அதில் விருப்பமும் இல்லை… சிறிதும் ஆர்வமும் இல்லை…!” என்று கூறி அந்த விஷயத்தை தவிர்த்துக் கொண்டே இருந்தான் ருத்ரன்.

இவனை இப்படியே விட்டான் இவன் சரிப்பட்டு வர மாட்டான்…! என்று எண்ணிக் கொண்ட ரித்து, தானே ருத்ரனின் அலைபேசியிலிருந்து ஒரு புது அகெளண்ட்டை உருவாக்கி, அவனுடைய புகைப்படத்தை அதில் வைத்து அவனிடம் குடுத்த பொழுது ருத்ரன் ரித்துவை பார்த்தானே ஒரு பார்வை…! 

 “அப்பிடி பாக்காதடா… நீயே என்னை இப்பிடி சைட் அடிச்சன்னு வையேன் அப்பறம் என் பொண்டாட்டி பாவம் இல்லையா…?” என்று கூறி அதற்கும் சேர்த்து ருத்ரனின் முறைப்பை பெற்றுக் கொண்டான்.

கையில் வாங்கிய ஃபோனை பார்த்து “முடிஞ்சிருச்சில்ல… நீ ரொம்ப நாளா கேட்ட சோஷியல் மீடியால என் பேர்ல ஒரு அக்கௌன்ட் ஓப்பன் பண்ணி குடுத்துட்டல்ல…. இப்ப சொல்றேன் இந்த மெயில் ஐடி, மீடியா பேஜ் எதையுமே நான் ஒரு நாளும் ஓபன் பண்ணி பார்க்க மாட்டேன்… எனக்கு இப்படிப்பட்ட ஒரு விஷயம் தேவையே இல்லை… ஆனா உனக்காக மட்டும் இந்த பேஜ் என் ஃபோன்ல இருக்கும்… வெறுமனே இருக்கும் அவ்ளோ தான்…!” என்று கூறி அந்த விஷயத்தை முற்றிலும் மறந்து விட்டான் ருத்ரன்.

 ஆனால் அந்த அக்கவுண்ட்டை உருவாக்கியது ரித்து தான் என்பதால் அதில் போட்டிருந்த ஜிமெயில் பாஸ்வேர்ட் என அனைத்தையும் தன்னுடைய ஃபோனிலும் போட்டு அந்த அக்கௌன்ட் ஆக்டிவாக இருகும்படி பார்த்துக் கொள்வான். 

 அப்படி இருந்த தருவாயில் தான் பனியின் ஃபாலோ ரெக்வெஸ்ட் ரித்துவின் மனதிற்குள் இது போன்ற ஒரு விஷயத்தை யோசிக்க வைத்தது.

 அதன் பால் குழந்தையுடன் இதழ் விரித்த புன்னகையோடு விளையாடிக் கொண்டிருந்த ருத்ரனை அவனறியா வண்ணம் சில பல கேண்டிட் புகைப்படங்களாக எடுத்து அதனை உடனடியாக அந்த பக்கத்திலும் பதிவு செய்தான்.

அதன் பின் பனியின் ஃபாலோ ரெக்வெஸ்ட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பனித்தீ தொடரும் 💝💝💝)

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top