என் ஆயுள் நீயே 26
“அவங்க தங்கச்சிக்காக அந்தப் பையனை கூட்டிட்டு வந்தாங்களா? இல்லை இவங்களுக்காக, தங்கச்சிக்கு பையன் பார்த்தாங்களா?”
குமரி தன் ஏமாற்றத்தை தீர்த்துக்கொள்ள, தன்னுடைய மனதை பதம் பார்க்கிறோம் என்பதை உணராது வேண்டுமென பேசிக் கொண்டிருக்கிறார் என புரிந்த போதும், உதயனால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை.
அப்போதும் பொங்கும் கோபத்தை வெளிக்காட்டிடாது தான் பேச முயன்றான்.
“எனக்காகன்னே வச்சுக்கோங்க. ஆமாம் நான் விரும்புற பொண்ணை கட்டிக்கத்தான், பட்டுவுக்கு அவளோட அண்ணாவை பேசி முடிக்க நினைச்சேன் போதுமா?” என்று வெடித்து சிதறிய உதயன், “கேட்க வேறெதுவும் இருக்கா?” எனக் கேட்டு, “எனக்கு வேறெந்த விருப்பமும் இல்லங்கிற நிலையில் தனு இன்பாவை விரும்புறது தெரிஞ்சிருந்தால் அப்பவும் இந்த மாதிரி பேசியிருப்பீங்களா நீங்க?” என்றான்.
“நான் சொல்லாத முன் தனு, இன்பா விருப்பம் தெரிந்து ஏத்துக்கிட்டு அமைதியாதானே இருந்தீங்க?”
குமரியால் இதற்கு வாய் திறக்க முடியவில்லை.
அந்நேரம் தான் அஷ்மிதா உதயனுக்கு அழைத்தாள். சத்தம் கேட்கவே எடுத்து பார்த்து அலைபேசியை பையில் போட்டுக்கொண்டவன்,
“இப்போ உங்களுக்கு என்ன கோபம் அத்தை?” என்ற உதயன், “எனக்கோ, தனுவுக்கோ தனிப்பட்ட விருப்பம் இல்லைங்கிற சூழ்நிலையில் கூட அவளை கட்டிக்க நான் சம்மதம் சொல்லியிருக்க மாட்டேன். நனி, எழில் கூடத்தானே அவளும் வளர்ந்தாள். என்னால் எப்படி முடியும்?” எனக் கேட்டு, அதிர்ந்து நின்ற குமரியை கண்டுகொள்ளாது விடுவிடுவென சென்றுவிட்டான்.
ஒற்றை வரியில் குமரியின் மனதை சுழன்றடித்து விட்டான். இனி இது குறித்து ஒரு வார்த்தை அவரால் பேசிட முடியுமா?
தன் வார்த்தைகள் யாவும் தன்னையே திருப்பித் தாக்குவதைப் போல் உணர்ந்தவர், முற்றத்து தூணில் சாய்ந்து அமர்ந்தார்.
“இவருக்கு வேணும் தான்.” காமாட்சி முணுமுணுக்க…
“பிள்ளைங்க மனசு தான் முக்கியம் குமரி. அவங்க ஆசைப்பட்டது நடந்தால் தானே சந்தோஷமா இருப்பாங்க. அதில் தானே நம்ம சந்தோஷமும் அடங்கியிருக்கு” என்று கங்கா குமரியின் அருகில் அமர்ந்து கரம் பற்றிக் கூறினார்.
“ஆதங்கத்தில் பேசினாலும் தெரிஞ்சு தான் பேசினேன். மன்னிச்சிக்கோங்க” என்ற குமரி, “நான் தூக்கி வளர்த்த முதல் குழந்தை உதயா. அதிகம் ஆசைப்பட்டுட்டேன். அதுக்காக இன்பாவை விட்டுக்கொடுத்தோ, கீழவோ வச்சு பார்க்கல. என் பொண்ணு கண்ணு முன்ன நம்ம வீட்டுல வாழ்ந்தால் எனக்கு அதுவே போதும்” என்று கஜேந்திரனை பார்த்துக்கொண்டே சொல்லியவர், எழுந்து சென்றுவிட்டார்.
அறைக்குள் வந்த உதயனுக்கு தன்னைப்போல் அதீத அழுத்தம் உண்டாகியிருந்தது. குமரி அதிகம் பேசுவாரென்று அவன் எதிர்பார்த்தது தான். ஆனால் இந்தளவிற்கு வார்த்தைகளை விடுவாரென்று எண்ணவில்லை. தன்னைப்பற்றி தெரிந்தும் அவர் பேசிய பேச்சுக்கள் அவனையும் கோபம் கொள்ள வைத்திருந்தது. அந்த தாக்கத்திலே அஷ்மிக்கு அழைத்து பேசியவன், அவள் இப்போதே சொல்ல வேண்டுமா எனக் கேட்க, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான்.
“உதய்…”
“இங்க எல்லாரும் என்னை பெரியவனா பார்த்து, மரியாதை கொடுக்கிறேன்னு எட்ட நிக்க வச்சிருக்க ஃபீல். உன்கிட்டதான் நான் நானா இருக்கணும். எனக்கு நீ வேணும். என் பக்கத்துல” என்ற உதயன், “உன் ஆசையும் புரியுது. சின்ன பிளே பண்ணுவோமா?” எனக் கேட்டான்.
“என்னது?”
“நாளைக்கு இங்கிருந்து வருவாங்க” என்று உதயன் சொல்ல,
“நீங்க வரமாட்டிங்களா?” என வேகமாகக் கேட்டிருந்தாள்.
மேல் பற்களால் கீழுதட்டை அழுந்த கடித்து மெல்ல விடுத்த உதயனின் கண்களில் அத்தனை வெட்கம். பேரழகின் உச்சம் தொட்டது அவனின் முகம்.
அவனின் அமைதியில்தான், தான் கேட்டதில் தனக்குள் அவனை பார்க்க வேண்டுமென்கிற ஆவலும் பொதிந்துள்ளது என்பது விளங்கி, அவனின் செயலை பிரதிபலித்து கண்கள் மூடி திறந்தாள்.
“உதய்…”
“வரணுமா?”
“பார்க்க வேணாமா?”
“பார்க்கலையா?”
“ரொம்ப நாளாச்சு!”
“ஆறு நாள் ரொம்ப நாளா?”
உதயன் கேட்டதில் அஷ்மிதாவின் உதடுகள் பிளந்து விழிகள் அகல விரிந்தன.
ஆறு நாட்களுக்கு முன்புதான் அவனை பார்ப்பதற்காக அத்தீஸ்வரம், அவனது இறால் பண்ணை வரை வந்து சென்றிருந்தாள். அதனைத்தான் உதயன் குறிப்பிட்டான்.
“என்ன பதிலை காணோம்?” அவளின் தற்போதைய தோற்றத்தை அவதானித்து இளநகை பூத்தான்.
“உங்களுக்கு எப்படி?” அதிர்ச்சியோடு வினவினாள்.
“ஒரு பொண்ணு நம்மளையே சுத்தி வரும்போது உணர முடியாதா என்ன?” என்ற உதயன், “உன்னோட விருப்பம் நீ சொல்லலனாலும், எனக்கு உன்னால் தான் தெரிஞ்சது” என்றான்.
“எப்படி?”
“இப்போ சொல்ல முடியாது” என்ற உதயன், “சொல்லாமலே கட்டி இழுத்துட்ட. கட்டிக்கவும் போற” என்றான்.
அஷ்மிதாவின் பாத விரல்கள் தரை கவிழ்ந்தது. அவளின் கையில் அலைபேசி இறுக்கம் கொண்டது. அணிந்திருந்த ஸ்கர்ட்டில் மற்றொரு கை அழுத்தம் கொடுத்து பிடித்தது.
“உதய்…” நெஞ்சம் முட்டிய மூச்சுக்காற்றின் தவிப்பாய் ஒலித்தது அவளின் குரல்.
அவளின் இவ்வழைப்பில் மட்டும் அவனது இதயத்தில் மத்தள இசையும், இடியின் ஓசையும் ஒருங்கே எழும்புகிறது. அவனை தவிப்புக்குள்ளாக்குகிறது. விரும்பி உணர்ந்தான்.
“அஷ்மிதா!” அத்தனை கரகரப்பாக வெளிவந்த அவனது அழைப்பில் திக்குமுக்காடிப் போனாள்.
“பிளீஸ்…”, அஷ்மி.
தொண்டையை செருமிட தன்னிலை மீட்டவன்,
“விஷயத்துக்கு வருவோமா?” என்றான்.
“ம்ம்… சொல்லுங்க.”
உதயன் சொல்ல அவள் சிறு அதிர்வோடு கேட்டுக்கொண்டாள்.
“இது அவங்களை கார்னர் பன்ற மாதிரி ஆகாதா?” எனக் கேட்டாள்.
“அப்படியே இருக்கட்டும். வேற வழியில்லை. சேர்த்து வைப்போம். அவங்க வாழ ஆரம்பிச்சிடுவாங்க. அவங்களுக்குள்ள இருக்க லவ் அடுத்த கட்டத்துக்கு அவங்களை நகர்த்திடும்?” என்றான்.
“புரியுது. கொஞ்சம் வெயிட் பண்ணலாமே?” என்றாள்.
“இனி பிரணவ்வே வந்து லவ் சொன்னாலும், பட்டு அவ்ளோ சீக்கிரம் அக்செப்ட் பண்ணமாட்டாள். ரெண்டு பேரும் தெளிவா பேசிக்காம எதுவும் சரியாகாது. அவங்கள பேச வைக்கவே, அவங்களை ஒண்ணு சேர்க்க வேண்டியது அவசியம்” என்று இருக்கும் சூழலை உதயன் விளக்கமாக எடுத்து சொல்ல, அஷ்மிதாவுக்கும் அதுவே சரியெனப்பட ஒப்புக்கொண்டாள்.
“பேசிட்டு மெசேஜ் பண்ணு” என்றான்.
“கால் பண்ணா பேச மாட்டிங்களா?”
“பேசமாட்டேன் சொல்லவே இல்லையே!” மின்னலென அவனது ஒற்றை புருவம் ஏறி இறங்கியது.
“ஹான்… பேசிட்டாலும்.” உதடு சுளித்தாள்.
“ஏன் பேசலையா?”
“நிறைய பேசினீங்களே” என்ற அஷ்மிதா, “இந்த நாலு வருஷத்தில் நீங்களா எனக்கு மெசேஜ் பண்ணது திரீ டைம்ஸ். அதுவும் எனி அப்டேட்? இதுதான்” என்றாள்.
“அப்போ வேறென்ன பேசியிருக்கணும்?” எனக் கேட்டான். அவளின் ஏக்கங்கள் புரிந்த போதும். கள்வனாக.
“நத்திங்” என்ற அஷ்மியால் கேட்காமலும் இருக்க முடியவில்லை. அவனுக்கு அவளின் மனம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, எல்லாம் தெரிந்தும், தன்னை கவனித்தும் அவன் ஒன்றும் அறியாதவன் போலிருந்தது என்னவோ போலிருந்தது.
“என்னை தெரிஞ்சும் சைலண்ட்டா இருந்திருக்கீங்க?” என்றாள்.
“நீ சொன்னியா அஷ்மிதா?” அதீத எதிர்பார்ப்பு அவனது மொழியில் தென்பட்டதோ? அவளுக்கு அப்படித்தான் தோன்றியது.
“அது…” வெகுவாகத் தடுமாறினாள்.
“இப்பவும் நீ சொல்லல” என்றான்.
“உதய்…”
“சுருட்டாதடி” என்ற உதயன், “என் பக்கம் வா. கவனிச்சிக்கிறேன்” என்று வைத்துவிட்டான்.
அவனது தவிப்புகள் அவளிடம் கூடிப்போனது.
தன்னவளிடம் பேசிய இதத்தை முழுதாய் உள்வாங்கியவனாக கண்கள் மூடி அமர்ந்திருந்தான் உதயன்.
அஷ்மியின் காதல் தெரிந்த போதும், ஒருநாளும் காதல் கொண்டு அவளை நினைத்தது இல்லை. ஆனால் அவள் தான் தனக்கென்று அவளின் காதல் கொண்டே முடிவெடுத்த போதும், ஒரு நாளில் எப்படி இத்தனை தவிப்புகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள். அவனுக்கே தன்னைக் குறித்து அத்தனை ஆச்சரியம்.
அவள் மீது தனக்கும் நேசம் மனதோடு அமிழப்பட்டு இருந்திருக்கிறது. நானாக நினைத்திட இயல்பாகக் காட்டிக்கொள்கிறது என்பதை புரிந்துகொண்டான்.
எதையும் நேர்கொண்டு வெளிப்படையாக செய்துதான் பழக்கம். அதுவே அவனை காதலிலும் வெளிப்படையாக இருக்கச் செய்கிறது. அவனவளிடம் மட்டும் மற்றவர்கள் பார்க்காத உதயனை பார்க்க, நடக்க வைக்கிறது.
உதயன் அவளிடம் அதிகம் பேசுவதும் அவனுள் ஆச்சரியமே!
‘எட்ட நின்னே பக்கம் வரவச்சிட்டாள்.’ மென்மையாக முணுமுணுத்துக் கொண்டான்.
“பட்டுக்கிட்ட சொல்லணும்” என்றவனாக நனியிதழுக்கு அழைக்க, இன்பா அறைக்குள் வந்தான்.
உதயன் அலைபேசியை காதில் வைத்தவாறு நின்றிருக்க, இன்பா மெத்தையில் சென்று உம்மென்று அமர்ந்தான்.
“வரேன் செல்வா!”
அழைப்பை ஏற்றதும் தகவல் சொல்லியவளாக வைத்திருந்தாள்.
‘இப்போ என்னாச்சு?’ உதயன் தங்கையின் குரல் மாற்றத்திலேயே எதோ சரியில்லையெனக் கண்டுகொண்டான்.
‘வரட்டும் கேட்போம்.’ மனதில் நினைத்தவன் தம்பியின் அருகில் சென்று அமர்ந்தான்.
“அதான் எல்லாம் ஓகே ஆச்சே… அப்புறமும் ஏன் உம்முன்னு இருக்க?” இன்பாவின் தோளில் கரம் பதித்தான்.
“சொல்லவே இல்லை.”
“இதுதான் கோபமா?” என்ற உதயன், “உன் ஃப்ரண்ட் கிட்டவே இன்னைக்குதான் சொன்னேன். எனக்கே இன்னைக்குதான் புரிஞ்சிதுன்னும் சொல்லலாம்” என்றான். சிறு முறுவலோடு.
“எப்படி?”
“தெரியலடா… ஆனால் அவள் இங்க வந்து ரொம்ப நாளாகுது போல” என்று கண்கள் மூடி விரல்கள் குவித்து இதயப்பகுதியை மெல்லக் குத்தினான் உதயன்.
“வாவ் அண்ணா… ஃபிளஷ் ஆகுறீங்க நீங்க” என்று தன் அண்ணனின் முகம் காட்டிய ஜாலத்தில் ஆர்ப்பரித்த இன்பா, அவனை தோளோடு அணைத்துக் கட்டிக்கொண்டவனாக சாய்ந்தாடினான்.
“அடேய்… விடுடா” என்று சிரித்த உதயன், “இன்னும் பட்டுகிட்ட சொல்லல. என்ன சொல்லுவாள் தெரியல” என்றான்.
“என்ன சொல்லுவாங்க மேடம்?” என்று இழுத்த இன்பா, “எங்களை மாதிரி ஷாக் தான் ஆவாங்க, பிளஸ் எங்களைவிட அதிக ஷாக் ஆகலாம். பொண்ணு அஷ்மின்னு தெரிஞ்சா” என்றான்.
“ம்ம்” என்ற உதயன், “அப்பா, தாத்தாகிட்ட கொஞ்சம் பேசணும் வா” என்று கீழே அழைத்துச் சென்றான்.
குமரி சென்றிருக்க, அனைவரும் கூடத்தில் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்திருந்தனர்.
“அத்தை இல்லையா?” கேட்ட உதயன், காமாட்சி “போயிட்டாங்க” என்று சொல்லியதும், “உங்களுக்கு எதும் வருத்தமா?” என அனைவரிடமும் பொதுவாக வினவினான்.
“வருத்தமெல்லாம் இல்லைப்பா. நீங்க எது பண்ணாலும் சரியாதான் இருக்கும்” என்றார் கஜமுகன்.
“அப்போ என்னை எதுவும் சொல்லமாட்டிங்க ரைட்?” என பார்த்தான் உதயன்.
“என்ன கேட்கணும்?” கஜேந்திரன் புரியாது கேட்க, மகனை கண்டு கொண்டவராக இளங்கோவன் உள்ளுக்குள் சிரித்தார்.
“என்ன கேட்கணுமா?” என்ற உதயன், “நான் ஒரு பொண்ணை விரும்புறேன் சொன்னேன்” என்றான்.
“ஆமா… இப்போ அதுக்கு என்ன? நாளைக்கு நேரில் போய் பேசலாம் இருக்கோம்” என்றார்.
“அவ்ளோதானா?”
“ஆமாங்க… அவ்ளோதான். உங்களுக்குப் பிடிச்சிருக்கு. வேறென்ன?” என்று இப்போதும் புரியாது கேட்டார் கஜேந்திரன்.
“அப்பா உங்களுக்கு? தாத்தா உங்களுக்கும் அவ்ளோதானா? அம்மா, சித்தி, பாட்டி உங்களுக்கு?” என்று அனைவரிடமும் கேட்டான்.
இன்பா பொங்கி வந்த சிரிப்பை தன் அண்ணனின் முதுகு பின் ஒளிந்து மறைத்தான்.