என் ஆயுள் நீயே 27

என் ஆயுள் நீயே 27

“உங்களுக்கு எதும் வருத்தமா?” என அனைவரிடமும் பொதுவாக உதயன் வினவிட, எதுவுமில்லை என்று சொல்லியும், அவன் பல்வேறு விதமாகக் கேட்க,

உதயன் ஏன் இவ்வாறு கேட்கிறான் என்று யாருக்கும் விளங்கவில்லை.

“என்ன உதயா இது லவ்வெல்லாம்? நம்ம குடும்பத்துக்கு எப்படி ஒத்து வரும் அப்படின்னு சின்ன திட்டுக்கூட இல்லையா?” என்று அவன் கேட்ட பாவனையில், “உதயா” என்று பொங்கி வந்த சிரிப்பை மறைக்க முடியாது இளங்கோவன் சிரித்தவாறு மகனின் அருகில் வந்து அவனின் தோளில் தட்டினார்.

“சீரியஸ்லி ப்பா… சின்னதா அதட்டக்கூட இல்லை” என்ற உதயன், “சித்தப்பா இன்பாவை மட்டும் முறைக்க செய்தீங்க” என்றான்.

இன்பா தனுவை தானும் விரும்புவதாக சொன்னதும், கஜேந்திரன் மகனை முறைத்து சீரானார். அதனை கண்டிருந்த உதயன் தற்போது கூறினான்.

“நான் கவனிக்கலையே!” இன்பா கிசுகிசுக்க, “அப்போ நான் என்ன பண்ணாலும் அக்செப்ட் பண்ணிப்பீங்க அப்படித்தானே?” என்றான்.

உதயன் எங்கு வருகிறானென்று இன்பா கண்டு கொண்டான். இருப்பினும் எவ்விதத்தில் சாத்தியமென்று பார்த்தான்.

“நீங்க தப்பு எதுவும் பண்ணமாட்டிங்களே” என்ற கஜமுகன், “இப்போ என்ன உங்களை நாங்க திட்டணுமா?” எனக் கேட்டார்.

“பெத்தவங்கக்கிட்ட திட்டு வாங்கறதும் வரம்ல” என்ற உதயன், “இதுவரை என்னை அதட்டியாவது இருக்கீங்களா?” எனக் கேட்டான்.

“எங்களை வழி நடத்துறவங்க நீங்க. உங்களை ஒரு சொல் சொல்ல ஆவுமா தங்கம்” என்ற லட்சுமி, “நீங்க எது செய்தாலும், அதுல ஆயிரம் காரணமிருக்கும். சரியாவும் இருக்கும்” என்றார்.

“உங்க மனசுல என்னவோ இருக்கு அது என்னன்னு சொல்லுங்க” என்றார் இளங்கோவன்.

“நாளைக்கு தானே திருச்செந்தூர் போறீங்க? கன்ஃபார்மா?” எனக் கேட்டான்.

“எதிர்பார்த்த ஒன்னு. உங்க சம்மதத்துக்குதான் காத்திருந்தோம். நீங்களே சொன்னப்புறம் தள்ளி போடுவோமா?” என்ற கஜேந்திரன், “அம்மா நாளைக்கே நாள் நல்லாயிருக்கு சொன்னாங்க. அண்ணியும் உங்களுக்கு பிடிச்சிருக்கு சொன்னதும், பொண்ணை பார்க்க ஆவலா இருக்காங்க. அதனால் நாளைக்கு போறது உறுதி. அப்பா நீங்க கீழ வரதுக்கு முன்னதான் ராகவன் ஐயாவிடம் பேசினாங்க” என்றார்.

“உங்களுக்கு கல்யாணம் எப்படான்னு இருந்திருக்காங்க அண்ணா” என்று முணுமுணுத்த தம்பியை பார்த்து கண்ணடித்தான் உதயன்.

“நீங்க ரொம்ப அமைதின்னு நினைச்சிட்டு இருந்தேன். இன்னைக்கு ஒரு நாளில் எவ்வளவு சேட்டை செய்றீங்க” என்று ஆச்சரியம் கொண்டான் இன்பா.

உதயன் மௌனமாக புன்னகைத்துக் கொண்டான்.

“என்னடா சத்தமில்லாம முனகுற?” கஜேந்திரன் அதட்ட இன்பா கப்சிப்.

“நீங்க விஷயத்தை சொல்லுங்க.” இளங்கோவன் தான் தொடங்கினார்.

உதயன் சொல்ல,

“இது சரியா தம்பி?” எனக் கேட்டார் கஜமுகன்.

“பட்டு அவங்களைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டா தாத்தா. இனி அவளா வேணுன்னும் கேட்கமாட்டாள். இப்போ இந்த செக் நான் சொன்னா கேட்பாள். ஆனால் அதுக்கப்புறம் அவளோட வாழ்க்கை?” என்று நிறுத்திய உதயன், “யாருக்காகவும் யாரோட வாழ்க்கையும் அழகாகிடாது தாத்தா. அந்த வாழ்க்கையில் நமக்கு பிடித்தம் இருக்கணும். நாம் நினைச்ச மாதிரி அமைஞ்சாதான் உணவு கூட ருசிக்கும். இது நம்ம பொண்ணோட வாழ்க்கை. அவள் ஆசைப்பட்டதை நிறைவேத்த என்னவும் செய்யலாம்” என்றான்.

“அவங்க வீட்டுல எப்படி ஒத்துப்பாங்க உதயா?” கங்காவுக்கு தன் பிள்ளைகளின் திருமணம் சிக்கலில் அமைந்துவிடுமோ எனும் கவலை.

“அவங்களுக்கும் அவங்க பையன் வாழ்க்கை முக்கியம் தானே?” என்ற உதயன், “விமலா ஆன்டி ரொம்பவே பிராக்டிகல். அவங்ககிட்ட பேசணும். புரிஞ்சிப்பாங்க” என்றான்.

“எல்லாம் நல்லதா நடந்தா சந்தோஷம்” என்ற கஜமுகன், “முதலில் நான் பேசறேன்” என்றார்.

ராகவனுக்கு அழைத்த கஜமுகன், எதிர்ப்பக்கம் எடுப்பதற்காகக் காத்திருக்க,

“பேசிட்டியா அஷ்மிதா?” என்று அஷ்மிக்கு குறுந்தகவல் அனுப்பினான் உதயன்.

“அச்சோ உதய்…” என்று அதற்கு மேல் என்ன தட்டச்சு செய்வதென்று வார்த்தைக்கு தடுமாற அப்படியே அனுப்பி வைத்தாள்.

கஜமுகன் ராகவனிடம் பேசிக் கொண்டிருக்க, அனைவரின் பார்வையும் அவர் மீதே. கவனித்த உதயன், சற்று நகர்ந்து வந்து அவளுக்கு அழைத்துவிட்டான்.

நான்கு வருடத்தில் ஒருமுறை கூட அழைக்காதவன், ஒற்றை நாளில் மூன்று முறை அழைத்துவிட்டான். காதல் மனதுக்கு அவனாக காரணம் தேடிக்கொண்டு.

“அஷ்மிதா.”

“நீங்க எப்படி சொன்னீங்க? எனக்கு பேசவே வரமாட்டேங்குது” என்றாள்.

அவள் வெகுவாகத் தடுமாறிக் கொண்டிருக்கிறாள் என்பது அவளின் குரல் நடுக்கத்திலே தெரிந்தது. தயக்கம் கொள்கிறாள். பெற்றோரிடம் காதலை சொல்வது எளிதல்லவே! சகஜமாக்க எண்ணினான்.

“அஷ்மிதாவுக்கு பேச வரலையா? நான் நம்பணுமா?” என்ற உதயன், “பிரணவ்வை அந்த அதட்டு அதட்டுற. பேச வரலன்னா எப்படி நம்புறது?” எனக் கேட்டான்.

“நிஜமாவே லவ் பண்றேன் சொல்ல தயக்கமா இருக்கு உதய்.”

உதயன் எதுவும் பேசவில்லை. இதில் என்ன தயக்கம் என்று தான் நினைத்தான். அவள் பக்கம் தடுமாற்றம் இருக்குமென்று நினைத்தானே தவிர, இவ்வளவு அச்சப்படுவாள் என்று எண்ணவில்லை.

எதுவாக இருந்தாலும் அவளாகவே சொல்லட்டுமென்று மௌனம் காத்தான்.

“உதய்.”

‘சும்மா கூப்பிட்டு மனுஷனை கரைச்சிடுவா!’ உள்ளுக்குள் அவளின் அழைப்பிற்கே அவஸ்தையை உணர்ந்தான்.

“ம்ம்…”

“உங்களுக்கு என்னைத் தெரியுமா?”

ஏன் இந்தக் கேள்வியெனை தெரியாத போதும் பதில் வழங்கினான்.

“தெரியுமே! செவன் இயர்ஸ் முன்ன பர்ஸ்ட் டைம் பார்த்தேன். அதுக்கு அப்புறம் பட்டுவோட அப்பப்போ பார்த்திருக்கேன். நடுவுல வன் இயர் சுத்தமா உன்னை பார்க்கல. லாஸ்ட் டூ இயர்ஸா பத்து நாளுக்கு ஒருமுறை, இல்லைன்னா மாசத்துக்கு நாலு முறைன்னு பார்த்திட்டு இருக்கேன். அப்புறம் எப்படி தெரியாம இருக்கும்” என்றான்.

உதயன் சொல்லியதை வைத்து, அவனை தான் பார்க்கச் சென்ற எல்லா நாளும் அவன் தன்னை கவனித்திருக்கிறான் என்பதில் அதிர்ந்தாள்.

“என்ன சைலண்ட்?”, உதயன்.

“அப்போ நான் வர எல்லா நாளும் நீங்களும் என்னை பார்த்திருக்கீங்க.”

“ஆமா.”

“நான் மறைஞ்சிருந்து தானே பார்ப்பேன்.” சந்தேகமாக வினவினாள்.

“நம்ம பிளேசில் ஒவ்வொரு இடுக்கிலும் காமிரா இருக்கு.”

அஷ்மிதாவின் விழிகள் அகல விரிந்தன.

“காமிராவை நீ கவனிச்சது இல்லையா?”

“இல்லையே” என்ற அஷ்மிதா, “எனக்கு உங்களை கவனிச்சு பார்க்கவே வர நேரம் போதாது. இதுல அதெல்லாம் எங்க நோட் பண்றது” என்று மெல்லொலியில் முனகிட, உதயனுக்கு நன்கு கேட்டு அவனது இதழ்களை நீண்டு விரியச் செய்தது.

“ஆஹான்…!”

“என்ன ஆஹான்?” என்றவள், “டைவர்ட் பண்ணாதீங்க” என்றாள்.

“யாரு… நானா? சரியாப்போச்சு” என்ற உதயன், “நீ என்ன சொல்லணும் டைரக்டா சொல்லு” என்றான்.

சட்டென்று ஆழ்ந்த அமைதி அவளிடம். மூச்சினை இழுத்து அவள் வெளியேற்றுவது காற்றின் ஓசையாக அவனால் அவதானிக்க முடிந்தது.

“அம்மா, அப்பா என்னோட… ம்ப்ச், உதய்.” சொல்ல முடியாது திணறினாள். மூச்சடைக்க, கண்கள் சடுதியில் கலங்கிவிட்டிருந்தது.

“அஷ்மிதா.” அவளின் குரல் பேதம் வைத்தே கண்டுகொண்டவனாக, அழைப்பைத் துண்டித்து காணொளி அழைப்பு விடுத்தான்.

காதலை உணர்ந்த பின்னர் முதன் முதல் அவளின் முகம் காண்கிறான். அலுவலகம் செல்ல கிளம்பியிருந்தவள், உதயனின் அழைப்பிற்கு பின் செல்லாது, கிளம்பியத் தோற்றத்திலே நின்றிருந்தாள். நேர்த்தியாக இருந்தபோதும்… கண்கள் கலங்கி, முகம் கசங்கி, அதீத சோகத்தில் காட்சியளித்தாள்.

அத்தோற்றம் உதயனின் நெஞ்சம் பிசைந்தது.

“அஷ்மிதா.”

அவனது விளிப்பில் முகம் பார்த்து முயன்று புன்னகைக்கச் செய்தாள். இமைகள் நடுங்க விழிகள் இரண்டும் நீர் நிறைந்து சிவந்திருந்தது.

கீழ் இமை இழை நுனியில் பனித்துளியாய் பளபளத்த துளி நீர் கன்னம் வழியத் தயாராக இருக்க…

“தவிப்பாகுதுடி. என்னன்னு சொல்லு” எனக் கேட்டான். கருவிழிகள் அலைபாய்ந்திட. இதயம் ஓசையின்றி பந்தாட. கவலைகள் படிந்த அவளின் முகம் அவனை சில்லாக உடையச் செய்தது.
_________________________

பிரணவ் அழைத்திட, திரையையே வெறித்திருந்தாள் நனியிதழ்.

எடுக்க மனம் உந்தித் தள்ளியபோதும் அவனின் மீது கோபம், அவளின் மூக்கின் நுனி நின்றது.

அவனுக்கும் தன்மீது விருப்பமுள்ளதென்று கல்லூரி நாட்களில் அவள் உணர்ந்தது தான். அந்த திடத்தில் தான், இனி அவனை பார்ப்பதே அரிதாகிவிடும் என்ற நிலையில் அவனிடம் தன் மனதை சொல்லிட நினைத்து பக்கம் சென்றாள்.

ஆனால் அவன் சொல்லி அவள் கேட்க நேர்ந்தது… அவளது காதலை சொல்ல முடியாது தடுத்திட. இன்று வரை சொல்லாது இருக்கின்றாள்.

அன்றைய அவனின் வார்த்தைகள், அவனுக்கும் தன்மீது காதல் உள்ளதென்று அவளின் எண்ணத்தை தகர்த்திருந்தது. அவன்மீது காதல் கொண்ட கண்களுக்கு அவனும் தன்னை விரும்புகிறான் எனும் கற்பனையை மனம் சாதகமாக எண்ணிக்கொண்டது என நினைத்துக்கொண்டாள்.

ஆனால் இன்று ஆர்யன் சொல்லியதை வைத்து, தன்னுடைய மனமும் கண்களும் பொய் சொல்லவில்லை. அவனுக்கும் தன்மீது நேசமுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டவளுக்கு அவனாக கேட்ட பிடித்தமின்மையை மீறி மீண்டும் காதலை காட்டிட அவளின் மனசாட்சி இடமளிக்கவில்லை. சிறு ஈகோ என்றும் சொல்லலாம். இல்லையா, இத்தனை நாட்கள் வலியோடு சுமந்த அவன் மீதான காதலின் சுயமரியாதை என்றும் சொல்லலாம். கேட்டுப்பெற வேண்டிய ஒன்றில்லையே இந்த காதல்.

இரு உள்ளங்கள் இணைந்த பிறகு, அங்கு வார்த்தை மொழிகள் தேவையில்லை. பார்வை சங்கமம் போதுமே! நீ நானென உணர நிழல் தடம் போதும். அதையெல்லாம் இருவரும் சரியாகத்தான் புரிந்து உணர்ந்து சொல்லிக்கொள்ளா நேசத்தில் இன்பம் சுமந்து நாட்களை கடத்தியிருந்தனர். இறுதிநாள் பார்வையின் உண்மையான காட்சி புலப்படாது இன்று வரை அவர்களின் காதலுக்கு வலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அழைப்பு முழுதாக முடிய, பெரும் மூச்சொடு அருகில் கீழே கடல் மணலில் அலைபேசியை வைத்தாள்.

குறுந்தகவல் வந்ததற்கான அறிவிப்பு ஒலித்தது.

“வேணும் நினைக்கும் போதெல்லாம் வரல. இப்போ வேண்டாம் தோணுது. எதுக்கு வரணும்?”

வேண்டும் என்பது தூரமும், வேண்டாம் என்பதை கையில் வைத்தும் வதைக்க வைப்பது தானே காலத்தின் நியதி.

நனியிதழும் அதில் சிக்கி சுழல்கிறாள்.

அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்…

குரல் பதிவு அனுப்பியிருந்தான் பிரணவ்.

“நான் மீட் பண்ணனும் சொன்னேன்” என்று தடித்து விழுந்த குரலைத் தொடர்ந்து, “கால் பண்ணா அட்டென்ட் பண்ணனும் இதழ்” என்றிருந்தான்.

‘இன்னமும் இந்த அதட்டல் மோட் மட்டும் மாறல.’ காற்றினை இதழ் குவித்து ஊதினாள்.

நனியிதழ் அழைப்பை ஏற்கவில்லை என்றதும், பிரணவ்விடம் கோபம்.

அந்த கோபத்திற்கான காரணம்,

இருவரும் நேசம் கொண்டும், தவறான புரிதல் ஒன்றால் காதலாய் திளைக்க வேண்டிய அழகிய நாட்களை காய்ந்த சருகின் தடமாய் அல்லவா நகர்த்தியிருக்கின்றனர். அந்த கோபமே இப்போது அவனுள் அதீதமாய்.

பார்த்த முதல் பார்வையிலிருந்தே அவள் மீது கொள்ளை காதல் அவனுக்கு. காட்டுவதில் தவறிப்போனான்.

அன்றைய தவறுதலுக்கான காரணத்தை சில நிமிடங்களுக்கு முன் அறிந்திருந்தவனின் மனம்… வலியா? அது நீங்கிய நிம்மதியா? தெரியாத உணர்வில் தன்னவளிடம் மொத்தக் காதலையும் கொட்டி கவிழ்த்திட துடித்திட, அவனவளோ இத்தனை நாள் கொண்ட அன்பிற்கும் சேர்த்து அலட்சியம் காட்டினாள்.

error: Content is protected !!
Scroll to Top