என் ஆயுள் நீயே 28

என் ஆயுள் நீயே 28

உதயன் , “அஷ்மிதாவை பிடித்திருக்கிறது. பேசுங்க” என்று சொல்லிச் சென்றதுமே கஜமுகன் ராகவனுக்கு அழைத்து பேசி விஷயத்தை மேலோட்டமாக சொல்லியிருந்தார்.

உதயனின் விருப்பமென்று சொல்லாது, “நம்ம குடும்பம் பந்தத்தில் சேரனும் பிராப்த்தம் இருக்கும் போல. உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குல” என்ற கஜமுகன், “எங்க பையனுக்கு பொண்ணு பார்க்கிறோம். உங்களுக்கு விருப்பமிருந்தா மேற்கொண்டு பேசுவோம். முந்தைய நிகழ்வை இதில் சேர்க்க வேண்டாம். நீங்க உங்க வீட்டில் கலந்துப்பேசி கூப்பிடுங்க. எங்களுக்கு நாளைக்கே பொண்ணை நேரில் வந்து பார்த்திட்டால் தேவலாம் தோணுது” என்றிருந்தார்.

ராகவனுக்கும் நல்ல குடும்பத்துடன் உறவாக முடியவில்லையென்று வருத்தம் இருந்தது. அது இப்படி மீண்டும் ஒரு வழியில் வர பிடித்துக்கொள்ளவே நினைத்தார்.

“கண்டிப்பா நல்ல விஷயமா சொல்றேன் கஜா” என்று வைத்த ராகவன் துள்ளலோடு தன் மகன் மற்றும் மருமகளை தேடிச் செல்ல விஜயன் அலுவலகம் சென்றிருந்தார். விமலா மட்டும் வீட்டில் சமையல் வேலைக்கு உதவியாக இருக்கும் மரிக்கொழுந்துவிடம் மதிய உணவிற்கு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்.

பணியாள் முன்பு பேச முடியாது, “வேலை முடிந்ததும் சொல்லும்மா. கொஞ்சம் பேசணும்” என்றார்.

யோசனையாக அவரைப் பார்த்த விமலா, வேலைகளை முடித்துவிட்டு வர, மீண்டும் கஜமுகனிடமிருந்து ராகவனுக்கு அழைப்பு வந்தது.

“சொல்லுங்க கஜா” என்ற ராகவன், “இன்னும் வீட்டில் பேசல. இப்போதான் மருமக்கிட்ட பேசலான்னு உட்கார்ந்தேன்” என்றார்.

“சரிங்க ராகவன்” என்ற கஜா, “நானே பேசுறனே” என்றார்.

“தாராளமா” என்ற ராகவன், “பிரணவ்வுக்கு பொண்ணு பார்க்க போயிருந்தோமே… அந்த வீட்டுப்பெரியவர் பேசணுங்கிறார்” என்று விமலாவிடம் அலைபேசியை நீட்டினார்.

“எதுக்கு மாமா?” என்று சத்தமின்றி சைகையால் வினவிய விமலா, “நல்ல விஷயம் தான்” என்று ராகவன் உதடைசைக்க, விமலாவுக்கு ‘நனியிதழ், பிரணவ் காதல் தெரிந்திருக்குமோ? அதுகுறித்து பேச இருக்குமோ?’ என சட்டென்று முகத்தில் தோன்றிவிட்ட அதீத மகிழ்வுடன், அலைபேசியை காதில் வைத்து, “வணக்கம். நல்லாயிருக்கீங்களா?” என்று முதல்கட்ட விசாரிப்புகள் முடித்து, “சொல்லுங்க” என்றிருந்தார்.
___________________________

பிரணவ்வின் குரலில் அவளிடம் மட்டும் அவன் காட்டும் வழமையான அதட்டல்.

‘எப்பவும் அதட்டல்.’ மனதோடு முணகியவள், “நீங்க பேசினா நாங்க பேசணுமா?” என வாய்விட்டு, அவனது முகப்பு படம் பார்த்து வினவ, மீண்டுமொரு குரல் பதிவு வந்து குதித்தது.

“அகெய்ன் கால் பண்ணுவேன். அட்டென்ட் பண்ணனும்” என்றிருந்தது.

“மிரட்டுறாங்க.” உதடு சுளித்தாள்.

மீண்டும் தகவல் வந்து விழுந்தது.

“அட்டென்ட் பண்ணக்கூடாது நினைக்காத… அடுத்த டூ ஹவர்சில் உன் வீட்டுக்கு வந்து நிப்பேன்.”

‘ம்க்கும் வந்துட்டாலும்.’ அலட்சியமாக நினைத்த போது, இம்முறை அலைபேசி தாங்கி வந்த பிரணவ்வின் அழைப்பை இறுதி ஒலியில் செவி மடுத்தாள்.

“மேடம் ரொம்ப பண்றீங்க?” எடுத்ததும் அவனது பேச்சில் அவளுக்கு சுர்ரென்று பொங்கியது.

ஆனாலும் அவன் தன்னிடம் எப்போதும் அதட்டல் தானே என்று புறம் ஒதுக்கினாள்.

அன்று பெண் பார்க்க வந்தன்று மட்டுமே அவளிடம் அவன் அமைதியாக பேசிச்சென்றது. அதுவும் இனி அவளிடம் பேசிட வாழ்வில் வாய்ப்பேயில்லை என்பதால் அந்த மென்மையைக் காட்டியிருந்தான்.

நடனத்திற்காக முதல் முறை நனியிதழ் பிரணவ்விடம் பேசிட, அதிலெல்லாம் அவளிடம் சிறு தயக்கமும் பதற்றமும் அப்பட்டமாக வெளிப்படும். அந்த பதற்றமும், தயக்கமும் தன்னிடம் மட்டுமே என சில சந்திப்புகளில் கண்டு கொண்டவனுக்கு சுவாரஸ்யமாக இருந்திட, அவளிடம் அதட்டல் பேச்சினையே வழமையாக்கியிருந்தான். அதில் அதீத உரிமையையும் காட்டினான்.

இன்றும் அவனின் அதட்டலில் அன்றைய உரிமை கொட்டிக் கிடந்தது.

“என்ன பேசணும் நீங்க? பேச வேண்டியதை பேசுங்க.” சத்தமில்லை, ஆனால் அவனிடம் தடையின்றி பேசினாள்.

“பாருடா” என்று வியப்பைக் காட்டிய பிரணவ், “நல்லா பேச வருதே” என்றான்.

“ஏன்… எனக்கென்ன பேச பயமா?” என்றவளின் பொய்யான திடம், அவளின் குரல் பிசிறில் அவனால் கண்டுகொள்ள முடிந்தது.

பெண் பார்க்க வந்த அன்றும் அவனிடம் இயல்பு மாறாது, பதற்றத்தோடு புடவை தலைப்பை இழுத்துப் பிடித்து, விரல்கள் குவித்து அவள் நின்றிருந்த தோற்றம் நினைவு வந்து அவனை மென்மையாக்கியது. இதழில் புன்னகைக் கூட வந்தமர்ந்தது.

“என்கிட்ட நீ நீயா இரு இதழ்” என்றான்.

“நான் ஏன் இருக்கணும்? நமக்குள்ள என்னயிருக்கு? எதுவுமில்லை. பிடிக்கல சொல்ல சொன்னீங்கதானே? சொல்லிட்டேன். அவ்ளோதான்” என்றவள், “வைக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

“பிடிக்கலனன்னு சொல்லலையே நீ?” என்றான்.

“ஹான்…”

“நான் சொன்னதை நீ சொல்லல தானே?”

“இப்போ அதுக்கு என்ன? எப்பவும் செட்டாகாது சொன்னேன் தானே?”

“அப்படியா?”

“ஆமா!”

“சரி… மீட் பண்ணனுமே.”

“வேண்டாம்.”

“எனக்கு வேணும்.”

“எனக்கு வேண்டாம்.”

“நான் வேணாமா?” பிரணவ் ஆழ்ந்த குரலில் கேட்க, நொடி நேரத் தடுமாற்றம் அவளுள். சட்டென்று கண்ணீர் கன்னம் இறங்கியது.

“சொல்லுடி… நான் வேணாமா?” மீண்டும் கேட்டான்.

“வேண்டாம். உங்க மேல லவ் வந்ததிலிருந்தே பெயின் மட்டும் தான். இனியும் இந்த பெயின் எனக்கு வேண்டாம்” என்றாள்.

அவள் வார்த்தையின் வலி அவனுள் அழுத்தமாக இறங்கியது. கண்களை மூடித் திறந்தான்.

“அப்போ நீயும் என்னை லவ் பண்றன்னு ஒத்துக்கிற ரைட்?” என்றான்.

“இல்லை… பண்றேன் இல்லை. பண்ணேன். பாஸ்ட்… பாஸ்ட்…” என்று பற்களைக் கடித்தபடிக் கூறினாள்.

“நேர்ல பேசலாம் இதழ்!”

“ஃபோன்ல பேசவே எனக்கு மூச்சு முட்டுது. நேர்ல கண்டிப்பா முடியாது. இதோட நான் டாட் வைக்கிறேன். எல்லாத்துக்கும். இத்தனை வருஷம் நான் வேணான்னு இருந்தீங்கதானே? இனி எனக்கு நீங்க வேணாம்” என்றாள். வேண்டாம் என்பதை அத்தனை உறுதியாக மொழிந்திருந்தாள்.

“ஹேய்… என்னடி இப்போ உனக்கு? ஓவரா பன்ற? நான் உன்னை லவ் பண்றேன். இப்போ இல்லை, காலேஜில் உன்னை பர்ஸ்ட் டே பார்த்ததிலிருந்தே லவ் பண்றேன். எனக்கு நீ வேணும். கல்யாணம் பண்ணனும். அடுத்து நமக்குள்ள நடக்க வேண்டியது நடக்கணும். உன்கிட்ட தான் தெரிஞ்சிக்கணும் அதெல்லாம். நம்ம குழந்தை உனக்குள்ள தான் வளரணும். போதுமா? அவ்ளோதான்” என்று படபடவென பேசிய போதும், அதிலும் சிறு அதட்டலே வெளிப்பட்டது.

வழக்கமான அவனின் அதட்டல் தான். ஆனால் நனியின் முகம் சுண்டிவிட்டது.

“என்ன நீங்க மிரட்டுறீங்க?”

“ஆமாண்டி… அப்படித்தான் மிரட்டுவேன். என்ன பண்ணுவ? ஹான்…” எனக் கேட்டவன், “என்ன உன் அண்ணன்களிடம் சொல்லுவியா? சொல்லு. நானும் சொல்றேன். உங்க தங்கச்சி என்னை லவ் பண்ணி ஏமாத்திட்டான்னு சொல்றேன். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு ஏமாத்திட்டான்னு சொல்றேன்” என்றான். அவள் வேண்டாம் என்கிற கோபம். என்ன பேசுகிறோமென்று தெரியாது, பல வருடம் அழுத்தி வைத்ததையெல்லாம் கொட்டினான்.

“ஹான்… அப்படியே சொல்லுங்களேன்… குழந்தை இருக்கு. மறைச்சி ஏமாத்திட்டான்னு” என்றவள் கோபத்தில் புசுபுசுவென மூச்சினை வெளியிட்டாள்.

அவள் சொல்லியதில் அவனது விழிகள் விரிய, அவனிடம் கள்ளப்புன்னகை. குறும்பாய் அவளிடம் வெளிப்பட்டது.

“ஆமா சொல்லுவேன். ஒன்னு இல்லை… ரெண்டு, மூணு…” என இழுத்து, “நாலு இருக்கு சொல்லுவேன்” என்றான்.

“ஏன் அவ்ளோ கம்மியா சொல்றீங்க? பத்து இருக்குன்னு சொல்லுங்களேன்” என்று அவளும் கடுப்பின் உச்சத்தில் பொருள் புரியாது அவனுடன் வார்த்தையால் மல்லுக் கட்டினாள்.

இருவருமே தங்களை அறியாது, இத்தனை காலம் மனதோடு பொத்தி வைத்த நேசத்தை, கனவில் வாழும் வாழ்வை வடிவம் கொண்டு பேசினர்.

ஆரம்பத்தில் அவள் தன்னை வேண்டாமென்று பிடிவாதமாக சொல்லிய கோபத்தில் பேசிய பிரணவ், அவள் அவனுக்கு ஈடாய் பேசவும் நிதானத்திற்கு வந்திருந்தான்.

அவளின் வார்த்தைகளை அகம் நுழைத்து ரசித்தான்.

இதமாய் பதமாய் நெஞ்சம் விரவும் காதலை அவளின் கோபத்திலும் உள்வாங்கினான்.

“சொல்ல ஆசை தான். ஆனால் ஒன்னுக்கே வழியில்லையே. எங்கிருந்து சொல்ல” என்ற பிரணவ், “அதுக்கு முதலில் என்கிட்ட வரணும் நீ” என்றான்.

“வர மாட்டேன். முடியாது” என்ற நனியிதழ், உதயன் அழைக்கவே, “வன் செக்” என்று அவனை நிலுவையில் வைத்திட்டு, உதயனின் அழைப்பை ஏற்று அவன் பேசும் முன்பே… “வரேன் செல்வா” எனக்கூறி வைத்து, பிரணவ்வின் இணைப்பில் வந்தாள்.

“நான் வைக்கிறேன். வீட்டுக்குப் போகணும்” என்றாள்.

“சரி போ” என்றான். பட்டென்று.

அவளுக்குத்தான் வைக்க முடியாத இம்சை.

வாய்விட்டு கூறியிருந்தாள்.

“இம்சை.”

“நிறையவே பண்ணனும் ஆசை” என்ற பிரணவ்வின் குரலில் ஏகத்திற்கும் தவிப்புகள் நிறைந்திருந்தன.

“வேண்டாம். எதுவும் வேண்டாம்” என்றவள் உடைந்திருந்தாள்.

“கிவ் மீ வன் சான்ஸ் இதழ்” என்று பிரணவ், மொத்தமாக இறங்கி வந்திருந்தான்.

“ரீசன்ஸ் அப்படியே தான் இருக்கு” என்றாள். இம்முறை அவளின் பழைய திடம் மீண்டிருந்தது.

“அதுக்கு பேசணும். மீட் பண்ணனும்” என்றான்.

“நீங்க எனக்கு வேணாம் முடிவு செய்து திரீ டேஸ் ஆகுது. என்னை விட்டுடுங்க” என்றாள்.

“அப்புறம் எதுக்குடி நாலு வருஷம் வேணும்னு வெயிட் பண்ண?” என்று கத்திய பிரணவ், “வீம்புக்கு பண்ணாத இதழ்” என்றான்.

“பிடிக்கல சொல்ல சொன்னீங்க சொல்லிட்டேன். முடிஞ்சுது. என்ன என் மேல் திடீர் லவ்? முடிஞ்சுது முடிஞ்சதாவே இருக்கட்டும்” என்றவள், பட்டென்று வைத்திருந்தாள்.

“ராட்சசி… வேணும்னு பன்றா” என்று பற்களைக் கடித்த பிரணவ், “செல்வா காலில் விழுந்திட வேண்டியது தான்” என்று மீசை துடிக்க சன்னமாக சிரித்தான்.

இங்கு இணைப்பைத் துண்டித்திருந்த நனியிதழ், “போ… போ… நீ எனக்கு வேணாம்” என்று அருகில் இல்லாதவனிடம் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்காக அவள் பார்த்து பார்த்து காத்திருக்க, அவனோ பிடிக்கல என்று சொல்ல சொல்லிய கோபம். காதல் இருந்தும் அவ்வாறு சொல்ல சொல்லிய வருத்தம். இப்போ பேசுவதை அப்போ பேசியிருக்கலாமே எனும் ஆதங்கம். அவளால் உடனடியாக நிமிடத்தில் மனதை சரியென்று ஆட்டுவிக்க முடியவில்லை.

இதையும் தன் இதயம் இயல்பாய் ஏற்கட்டும் என்று அதன் கட்டுபாட்டில் தன்னை முழுதாய் ஒப்படைத்துவிட்டாள். காதலை மனம் ஏற்றுக் கொண்டதைப் போல. சொல்ல முடியா தவிப்பை தனக்குள் நிறைத்துக் கொண்டத்தைப் போல. காத்திருப்பில் கட்டுண்டு இருந்ததைப்போல.

கண்ணில் நீர் திரண்டு உருள, ஒற்றை துளி கடல் அன்னையின் மடி சொட்டியது. பெரும் அலை ஒன்று அவள் உட்கார்ந்திருந்த இடம் வரை நனைத்து அவளின் உப்பு நீரை தனக்குள் கரைத்து விட்டதை அறியாது…

“லவ் யூ பிரணவ்” என்று இதழ் பிரித்து மொழிந்தாள். என்றும் அவ்வரியில் கனம் ஏறும் அவளின் நெஞ்சம் இன்று இதம் சுகித்தது.

error: Content is protected !!
Scroll to Top