ஏற்கனவே மகளின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்த, அருண் எதுவும் செய்து விட்டானா அல்லது தங்களுக்குத் தெரியாமல் வேறு எதுவும் நடந்து விட்டதா என்று மகளிடம் விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டு அதிர்ந்து போனார் வேல்முருகன். எவ்வளவு பெரிய தவறு நடந்து விட்டது, மகள் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கு பின்பு இப்படி ஒரு காரணம் இருக்கும் என அவர் நினைக்கவே இல்லை. இப்போது என்ன செய்வது? என்று அறியாமல் துடித்தார். அவனது கல்லூரி எது; வீடு எது ஒன்றுமே தெரியாமல், அலுவலகத்தில் சென்று தேடியபோது அங்கு எதுவுமே கிடைக்கவில்லை. மகளுக்காக விம்மியவர் யாரோ ஒருவனால் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல் துவண்டார். இதை வெளியே சொன்னால் எத்தனைப் பெரிய அவமானம்! என்று கண்ணீர் விட்டார். பெற்ற பிள்ளையை சரியாகப் பார்க்காத மனைவியின் மீது கோபப்பட்டார்.
மகள் பிரச்சனையில் உழன்று வருவது தெரியாமல் திருமணத்தை செய்து வைத்து, மேலும் இன்னல்கள் வரும் விதமாக வழிவகுத்தாகி விட்டது என்று தலையில் இடி விழுந்தது போல துடித்துப் போனார். தங்களால் ஒரு தவறும் செய்யாத மருமகனும் பாதிக்கப்பட்டதை அறிந்து நிம்மதி இழந்து தவித்தார். பின்னர், ஒரு வழியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர், மருமகனிடம் சொல்லி விட்டார். அப்போதும் அவன் அதைப் பெரிது படுத்தாமல், அந்தக் குழந்தைக்கு தானே அப்பாவாக இருந்து பார்ப்பதாக தான் சொன்னான். அவருக்கு மருமகனின் வார்த்தையில் பெருமிதமாக இருந்தாலும், மகள் முடியவே முடியாது என்று மறுத்து விட்டதால் அவனும் அவளைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அப்படியே அவள் காதலித்த நபரைக் குறித்துக் கேட்டான். அவர் விசாரித்து சொல்வதாக சொன்னார்.
‘இதை முதலிலே சொல்லி இருக்கலாம், இத்தனை பெரிய பிரச்சனையை எதற்காக இழுத்து விட வேண்டும்?’ என்று பரிதிவர்மன் கோபப்பட்டாலும், வேறு எதுவும் செய்ய முடியாமல் இருந்தான்.
‘அம்மா தன்னிடம் காட்டிய கடுமை, தனது வாழ்க்கை கேள்விக்குறியாகிய விதம், ஹரியின் காதல் நிஜமா பொய்யா? தான் ஏமாற்றப்பட்டு விட்டோமா? ஆரம்பத்தில் நன்றாகப் பேசினாலும் பிறகு வந்த நாளில் நாம் தானே அவனைத் தேடி சென்றோம். அதனால் இப்படி ஆகிட்டதா?’ என்று பலவாறு குழப்பிக் கஷ்டப்படுத்தி கொண்டவள், குழந்தையின் எதிர்காலம், அம்மாவின் பேராசை என்று பலதையும் நினைத்து ஏழாவது மாத இறுதியில் ஊருக்கு வர சம்மதித்தாள். அவன் இத்தனை நாளாகியும் தன்னைத் தேடி வராமல் இருந்ததால், தான் ஏமாற்றப்பட்ட உணர்வு தலை தூக்கியது.
அப்பாவுடன் ஊருக்கு வந்த ரக்ஷனாவுக்கு அதிகப்படியான அலைச்சல் மற்றும் வயிறு வலியில் குழந்தையும் பிறந்து விட்டது. குழந்தை அப்படியே அதன் அப்பா ஹரியை உரித்து வைத்திருக்க, அவளால் தன் மன உணர்வுகளை அடக்க முடியவில்லை. பைத்தியம் பிடித்தது போல நடந்து கொண்டாள்.
தன்னிடம் இருந்தால் அதன் எதிர்கால வாழ்க்கை பாழாகிவிடும், தானும் பைத்தியமாகி அதையும் ஏதாவது செய்து விடுவோம்… தாய் வனிதாவும் அதை நல்ல முறையில் வளர விட மாட்டாள், தனக்கு ஏதாவது ஆனாலும் அவர்களாவது குழந்தையைப் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள். அவளது அம்மா மருமகன், பிள்ளை என்று பேசும்போது, அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல பேசினாள்; கத்தினாள்; சண்டையிட்டாள்; தன்னுடைய வாழ்க்கை நிலையை மாற்றிக் கொண்டாள். ‘பரிதிவர்மன் நந்தனாவை திருமணம் செய்ய முதலிலே சம்மதம் தெரிவித்து இருந்தால், இப்படி ஒரு நிலை தனக்கும் வராது’ என்று கோபப்பட்டாள். ‘தான் ஒரு பெண் வாய் திறந்து சொல்ல முடியாமல் கோழையாக இருக்கலாம். அவன் எதனால் அப்படி இருந்தான்?’ என்று சினந்தாள். ‘எப்போதும் முதலாக வர வேண்டும்’ என்ற ஆசையில் படித்து பெரியவளாக வளர்ந்து வந்தவளுக்கு, இப்போது எல்லாமே தோல்வியைத் தழுவ, எதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாள்.
அவனது பெயரையும் பேச்சையும் எடுத்தாலே அன்று முழுவதும் சத்தமிட்டாள். அப்படி இத்தனை நாளும் ஒவ்வொரு விதமாக வாழ்ந்து வந்தவள், இப்போது நந்தனாவை அவன் திருமணம் செய்து வந்திருப்பதை அறிந்ததால், உண்மை நிலையை எடுத்துரைத்து, அவர்கள் அனைவரின் மனதிலும் இருப்பதை தெரிந்து கொள்ள வந்திருந்தாள். அது தெரியாமல் வனிதா பேசிக்கொண்டு இருக்கிறாள்.
முழு விசயங்களையும் அறிந்து அனைவரும் அதிர்ந்து போக, “என்ன மிஸஸ் வனிதா! நீங்க போட்ட திட்டம் எல்லாம் மண் கோட்டை ஆகிடுச்சேன்னு வருத்தமாக இருக்கா?” என்று கேட்டாள் ரக்ஷனா.
அவள் இடிந்து போயிருக்க, “இப்போ என்னை இந்த வீட்டு மருமகளா ஏத்துக்காம இருந்தா, எங்க அத்தானை போலீஸில் பிடிச்சுக் கொடுத்துடுவீங்களா?” என்றாள்.
வனிதா மகள் சொன்னதை இன்னும் கூட நம்ப முடியாமல் இருக்க, “எப்படி, எப்படி! நிவி இந்த வீட்டு வாரிசு. பரிதிவர்மனின் சொத்துக்கு உரிமைக்காரியா?” என்று கேட்டு பலமாகச் சிரித்தாள். அடுத்த நிமிடம் சிரித்த சிரிப்பு காணாமல் சென்றுவிட, கையில் இருந்த காகிதத்தை அவளை நோக்கி நீட்டினாள்.
“எஸ்! இந்தக் கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை. நான் எங்க அத்தானை சட்டப்படி விவாகரத்து செய்த நகல்”
வனிதா, தனது கையிலிருந்த காகிதம் காற்றில் பறந்துபோனது கூடத் தெரியாமல் இருக்க, “இதையும் பாருங்க” என்று இன்னும் ஒன்றைக் காண்பித்தாள். அதில் அப்பாவிடம் சொல்லி மருத்துவமனையில் வாங்கியிருந்த பரிசோதனை அறிக்கைகள், குழந்தை பிறந்த தேதி அனைத்தும் இருந்தது.
“இன்னும்…” என்றவள் இதழ்களைப் பிதுக்கிக்கொண்டு நிவேதாவைப் பார்க்க, அவள் மார்பை அழுத்திப் பற்றிக்கொண்டாள்.
“இப்ப புரிஞ்சிருக்குமே?” என்று கேட்டாள் ரக்ஷனா. வனிதா சட்டென நாற்காலியில் சரிந்து விழுந்துவிட்டாள். அதை ரசித்து, அந்த வீடே அதிரும் வகையில் சிரித்தாள் ரக்ஷனா.
“எந்தச் சொத்து உங்களுக்கு வரணும்னு எங்க மூணு பேரின் தலையெழுத்தை மாற்றி எழுதப் போனீர்களோ, அது எங்க மாமாவின் ஆசீர்வாதத்தால் தட்டிப்போயிற்று. இனிமேல் உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்றாள்.
நாகேஸ்வரி புரியாமல் அருகில் வர, “ஏன் அத்தை, அத்தான் மனசுல நந்தனா இருப்பது தெரிஞ்சும் உங்களால் எப்படி இப்படி நடந்துக்க முடிஞ்சது? அவர் பாவம் இல்லையா?” என்று கேட்டாள்.
அவர் தனது தவறை உணர்ந்து மௌனமாக அழுதார். “என் வாழ்க்கையில் நடந்ததை மறைத்து அத்தானை கட்டியது தப்புத்தான். ஆனால் அவரது வாழ்க்கையும் இன்னைக்கு அதனால தான் எங்க அம்மாவிடம் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கு” வேல்முருகன் எதுவும் சொல்ல முடியாமல் இருக்க, “ஆரம்பத்தில் ஹரிதான் என்னை ஏமாற்றி விட்டதா நினைச்சிருந்தேன். பிறகு தான் அதுக்கு அருண் காரணம், அவனால் தான் என் காதல் இன்னைக்கு இல்லாம போயிடுச்சுன்னு தெரிஞ்சது. என் குழந்தையை அத்தனை நாளும் விலக்கி, வாழ்க்கையில் வெறுப்புற்று போயிருந்த நான், உண்மை தெரிஞ்சதும் வந்து என் மகளைத் தூக்கிச் செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் எங்க அம்மாவால் மறுபடியும் யாரும் பாதிப்படைய கூடாதுன்னு இத்தனை நாளும் அடங்கி இருந்தேன். இனி அவசியமில்லை” என்றாள்.
அவளது வாழ்க்கையில் நடந்த அத்தனையும் அறிந்த அனைவரும் அசையாமல் இருக்க, “நான் இப்ப வந்தது, அத்தை நந்தனாவைக் கொடுமைப்படுத்துவதும், அத்தானுக்குக் கல்யாணமாகியும் கூட அவரை நிம்மதியாக வாழ விடாம செய்யும் எங்க அம்மாவுக்கும் அத்தைக்கும் முடிவுரை வாசிக்கத்தான்! இனி நிவியாலும் என்னாலும் உங்களுக்குப் பாதிப்பு வராது” என்று பெருமூச்சுடன் சொன்னாள்.
வனிதா நடந்த எதையும் உணரும் திறன் இல்லாமல் இருக்க, நாகேஸ்வரியும் கூட இப்படி எல்லாம் நடந்திருக்கும் என்று தெரியாமல் அதிர்ச்சியில்தான் இருந்தார்.
வேல்முருகன் மகளையே பார்த்தபடி இருக்க, அவரது அருகில் சென்று புன்னகைத்தவள், “நான் எதுவும் தப்பா செய்துட்டேனா டேட்?” என்று கேட்க, கண்கள் கசிய உதடுகள் துடிக்க மகளை அணைத்துக்கொண்டார் வேல்முருகன்!
“நாம இன்னைக்கு ஒரு நாளும் அத்தான் வீட்டுல நின்னுட்டுத் கிளம்பலாம் டேட்! மறுபடியும் எப்போது வருவோம்னு தெரியாது இல்லையா?” என்றாள். அவர் பதில் கூற நா வராமல், தொண்டை அடைக்க நின்றார்.
நந்தனா அவள் அருகில் வந்து தோளில் கைவைக்க, அத்தனை நாளாக அடக்கி வைத்திருந்த குமுறல்கள் வெளியேற, அக்காவைக் கட்டிக்கொண்டு ஓவென வெடித்து அழுதாள் ரக்ஷனா! அங்கிருந்த அனைவரும் கண்ணீரை அடக்க முடியாமல் சிரமப்பட, “உன்னை விட்டு எதுவும் போகாது. நீ இப்படி வருந்தும் அளவுக்கு நடக்கவும் போவதில்லை” என்றாள் நந்தனா.
அவள் நிமிர்ந்து பார்த்ததும், தங்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள், “நீ இந்த வீட்டு மூத்த மருமகள். உன் கணவர் குழந்தை நிவேதா, மூன்று பேரும் இதே வீட்டில் சந்தோஷமா இருங்க. நான் விலகிப் போயிடுறேன்” என்றாள் நந்தனா.
“என்ன சொன்னே? அத்தானை விட்டு நீ போறியா?”
“ஆமாம் ரக்ஷனா! உன் வாழ்க்கையில் இத்தனை நடந்திருப்பது எனக்குத் தெரியாது. உன்னைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா சொல்ல, என் தங்கை அப்படிப்பட்டவள் கிடையாதுன்னுதான் மனசாட்சி சொன்னது. அது ரொம்பவும் சரி! ரக்ஷனா, நான் மட்டும் இதெல்லாம் முன்னமே தெரிஞ்சிருந்தா நிச்சயம் அவரைக் கல்யாணம் செய்திருக்க மாட்டேன்! இப்பவும் எதுவும் கெட்டுப் போயிடல; நடந்ததை மறந்துட்டு அவரோடு சந்தோஷமா இரு! எனக்கு இத்தனை நாளும் உங்களோடு இருந்தது போதும்” என்றாள் நந்தனா.
பரிதிவர்மன் எழுந்து வந்து மனைவியைப் பார்த்தான். அவனது கண்ணில் வேதனையின் சாயல் தெரிந்தது.
“ரக்ஷனா என் கூடப் பிறக்காவிட்டாலும் அவள் என் தங்கைதான்! அவள் நல்லா இருந்தால்தான் நம்மாலும் இருக்க முடியும். நீங்க அவளைக் கல்யாணம் செய்துக்கிட்டு அவள் வாழ்க்கை அழிஞ்சிடாம காப்பாற்றுங்க” என்று இறைஞ்சினாள் நந்தனா.
அவன் மனைவியை ஏக்கமாகப் பார்க்க, நந்தனாவின் நல்ல மனதைக் கண்ட நாகேஸ்வரி இரண்டு மருமகள்களையும் அணைத்துக்கொண்டார். நந்தனா பூஜையறையிலிருந்து, இவள் வேண்டாம் என்று கழற்றி வைத்து சென்றிருந்த திருமாங்கல்யத்தை எடுத்து வந்து கொடுக்க, மனைவியை அசையாமல் பார்த்தவன் சிரித்தபடி பெற்றுக்கொண்டான். ரக்ஷனா வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும், மறுத்தும் கேட்காமல் அடுத்த சில நிமிடத்தில் அவளது கழுத்தில் திருமாங்கல்யம் ஏறியிருந்தது. அவள் முகத்தை மூடிக் கொண்டு வெடித்து அழ, அவளது உச்சியில் படிந்த குங்குமம் எதிரில் நிற்பவரை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
அக்காவையும் அத்தானையும் மாறிமாறிப் பார்த்தவள், அவர்களுக்கு மறுபக்கம் நின்றிருந்த ஹரிபிரசாத்தைக் கண்டாள். அவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த நேசம் கரை புரண்டு ஓட, யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள் ரக்ஷனா! வேல்முருகனால் அந்தச் சந்தோசமான நிகழ்வைப் பார்க்க முடியாமல் உணர்ச்சிப்பெருக்குடன் கண்ணீர் வடிந்தது.
இருவரும் அவளது அப்பாவிடம் ஆசி பெற்று, அத்தான் அக்காவிடமும் ஆசி வாங்கினர்.
“உனக்கு ரொம்பவும் தாராள மனசு நண்டு! ஆனால் உன் கணவன் அப்படி இல்லை. அவனுக்கு நந்துதான் எல்லாம்” என்றான் பரிதிவர்மன். அவள் மன்னிப்பை யாசிக்கும் விழிகளுடன் நோக்க, மனைவியை ஆதூரமாக அணைத்துக்கொண்டான்.
“அப்படா, இப்பத்தான் எனக்கு நிம்மதி” என்ற நாகேஸ்வரி, கணவரின் புகைப்படத்தின் முன்பு சென்று புன்னகைக்க, அவரும் தன் மனைவியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.
இரண்டு நாட்கள் வீடே களைகட்டியது. ஹரிபிரசாத்தை விட்டு விலகாமல் இருந்தாள் ரக்ஷனா. குழந்தை நிவேதாவை அவர்களே அழைத்துச் செல்ல பரிதிவர்மன் மனதார அனுமதி அளித்தான். ஆனால் அவள், “இல்லை அத்தான்! நான் இழந்துபோனதா நினைச்ச வாழ்க்கையை நீங்க மீட்டுக் கொடுத்தது போதும். நிவேதா பெரியவளாகி இதெல்லாம் எப்போது உணர்ந்து ஏற்கிறாளோ, அதுவரை உங்க அன்பான கவனிப்பிலும், அக்காவின் பாசத்திலும் வளரட்டும். நான் இப்ப அவளைத் தூக்கிட்டுப் போனாலும் சண்டைக்கு வந்து ‘நண்டு, நண்டு’ன்னு அழுவா… நான் ஒண்ணும் எங்க அம்மா மாதிரி இல்லை. என் மகளுக்குப் பிடிச்சதைத்தான் செய்வேன்” என்று பொட்டில் அறைந்தாற்போலச் சொன்னாள்.
வனிதா உயிருடன் இருந்தும் மரணித்தது போலாகி நிமிடங்கள் பல கடந்திருந்தன. அவளுக்கு முன்பு சென்ற பரிதிவர்மன், “பெத்த மகள் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம, அவளை இன்னைக்கு இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிங்க. பணம், வசதி, சொத்து இது தவிர வேறு எதுவும் தெரியாதா?” என்று கேட்டான். அவளால் எங்கே அவன் சொல்வதை உணர முடிந்தது. “பெத்த பிள்ளைகள் மீது பாசம் இல்லாம, தான் நினைப்பது மட்டுமே நடக்கணும்னு இருந்தா, கடைசியில் அந்தப் பிள்ளைகளின் பாசம் இல்லாம வெறும் பிணமாத்தான் வாழணும். பிறகு என்னதான் பின்னே பின்னே வந்தாலும் போனது போனதுதான்” என்றான்.
வேல்முருகன் வந்து “அதை எல்லாம் மனிதரிடம் சொல்லணும். பணவெறி பிடிச்சு அலையும் மிருகத்திடம் எதிர்பார்க்க முடியாது” என்றார். அவருக்கு மனைவி மீது அவ்வளவு கோபம்!
“மாமா, ரக்ஷனா விஷயத்தைப் பற்றி சொல்லி இருந்தாலும், நாங்க ஒண்ணும் அப்படியே விட்டுடல; அது யார்? எந்த ஊர்னு விசாரித்துத் தேடிக் கண்டுபிடித்து ரக்ஷனாவுடன் சேர்த்து வைக்க முடிவு பண்ணினோம். ஆனால் ஹரியை எப்படித் தேடியும் கண்டுபிடிக்க முடியல… எங்க போனான்? அவனுக்கு என்ன ஆனது எதுவும் தெரியல. அவனது வேலை முதல் அலுவலகத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் நீக்கியது அருண் என்பதால், அவன்தான் எதுவும் செய்திருப்பானோன்னு சந்தேகப்பட்டு விசாரித்தபோது, அவன் ஒரேடியாக மறுத்துட்டான். பிறகு நண்பரும் விஷயமறிந்து கோபப்பட்டதால், தொழிலில் மட்டுமல்ல அவர்கள் மூவரின் உயிருக்கும் ஆபத்து நேர்ந்துட கூடாதுன்னு நிதானித்தார். அவருக்குத் தெரிஞ்ச அதிகாரியிடம் சொல்லி, ஹரியைப் பற்றிய விபரங்களை சேகரித்து அனுப்பினார். ஹரி அந்த நாட்டில் இல்லைன்னு தெரிய வந்ததால், கல்லூரியில் கிடைத்த அவனது தமிழ்நாட்டு முகவரிக்கு தேடிப் போனேன். அங்கேயும் பலனளிக்கல. இப்ப கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் ஊருக்கு வந்திருந்தான்.
சில நாளாய் உடம்புக்கு முடியாம இருந்தவன், பிறகு தான் நம்ம ஆபிஸ் இன்டர்வியூ பார்த்து உனக்காக என்னைத் தேடி வந்திருக்கான். இருந்தும் வாய் திறந்து சொல்ல பயம்; எனக்கும் முதலில் அவனை அடையாளம் தெரியல. அப்புறமா அவன் கிட்ட முழு விபரமும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். பாவம் அவனைக் கடத்தி வேறு இடத்தில் மறைத்து வச்சு பாஸ்போர்ட், விசாவைப் பறித்துச் சித்திரவதை செய்திருக்கான் அந்த அருண்! சில மாதம் அங்கேயே இருந்து கஷ்டப்பட்டவனிடம், உனக்கும் எனக்கும் கல்யாணமாகி நீ கர்ப்பமா இருப்பதைச் சொல்லித் துரத்தி விட்டுருக்கான். கையில ஒரு பைசா இல்லாம யாரையும் தொடர்பு கொள்ள முடியாம ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கான். மாமாவால் நடந்ததை அறிந்ததும் தாங்க முடியல; உடனே தான் விசாரிக்க சொன்ன நபரை பார்த்துப் பேச, அருண் மிரட்டி அதிகமான பணத்தைக் கொடுத்து ஹரி பற்றிய விஷயங்கள் வெளியே வரக்கூடாதுன்னு சொன்னது தெரிஞ்சது. மாமா கோபத்தில் போலீஸில் புகார் தொடுக்க, உங்க அப்பாவின் நண்பர் கெஞ்சிக் கேட்டுக்கிட்டதால் விட்டதோடு, அங்குள்ள தொழிலை இனிமேலும் பார்ப்பது சரியா வராது, மகளும் ஹரியும் அமெரிக்காவுக்கு வருவது நல்லதில்லன்னு சொல்லி, இங்கேயே நிரந்தரமாகத் தங்கவும், அந்த அலுவலகக் கணக்கு வழக்குகளை மொத்தமா சரி பார்த்து வரவும் இத்தனை நாளாகிடுச்சு… இது எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது” என்றான்.
ஹரிபிரசாத் இத்தனை கஷ்டப்பட்டு இருப்பான் என்று தெரியாமல் மனம் வெம்பியவள், அத்தானை மரியாதை இல்லாமல் பல நேரம் அவமதித்து பேசியதற்காகவும், அப்படி நடந்து கொண்ட விதத்திற்காகவும் மன்னிப்புக் கேட்டாள். அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுமாறு சொல்லி, குழந்தை நிவேதாவை தூக்கி வந்தான். மகளிடம் அவர்கள் இருவரையும் ‘அப்பா, அம்மா!’ என்று அழைக்குமாறு சொல்லி ரக்ஷனாவிடம் கொடுத்தான். அவள் மறுத்ததும் கன்னத்தில் முத்தமிட்டு இனிமேல் அப்படி தான் சொல்ல வேண்டும் என்றான். அவளும் தலையாட்ட, மகளின் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பாராத வேல்முருகன் எழுந்து வந்து, தன் மருமகன் பரிதிவர்மனை அணைத்துக் கொண்டார்.
“உங்க அப்பா ரொம்பப் புண்ணியம் செய்திருக்கார். இல்லைன்னா, இப்படி ஒரு மகன் அவருக்குக் கிடைச்சிருந்திருக்க மாட்டான். உங்க அம்மாவும் ரொம்ப நல்லவள்! ஏதோ தப்பு பண்ணிட்டா, மன்னிச்சு ஏத்துக்கோ” என்றதும், அவன் அம்மாவைப் பார்க்க, அவர் மகனை அணைத்துக்கொண்டு அழுதார்.
அதன் பிறகு அவர் மட்டும் மனைவியுடன் அமெரிக்காவுக்குச் செல்லப் புறப்பட, மீதமுள்ள அனைவரும் புன்முறுவலுடன் அனுப்பி வைத்தனர்.
“கூடிய சீக்கிரம் நானும் உங்களோடு வந்துடறேன். நீ உன் கணவரோடு சந்தோஷமா இரு?” என்க, “லவ்யூ டேட்” என்று அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் ரக்ஷனா.
பரிதிவர்மன் தனது கன்னத்தைக் காட்ட, நந்தனா முகத்தை நாணத்துடன் மூடிக்கொண்டாள்.
“ஏம்மா ரக்ஷனா! அப்படியே கொஞ்சம் உங்க அக்காவுக்கும் சொல்லிக் கொடுத்துட்டுப் போ. ஒவ்வொரு நேரமும் கஷ்டப்பட வேண்டியதா இருக்கு” என்று பரிதிவர்மன் சொல்ல, அதில் அவர்கள் சிரித்துவிட்டனர்.
விமான நிலையத்தில் அவர்களை அனுப்பிவிட்டு வந்து, தன் மனைவி, மகள் மற்றும் அம்மாவுடன் சேர்ந்து ஒரு வாழ்க்கையைச் சந்தோஷமாக அவன் வாழ்ந்து வர, ஹரிபிரசாத்தின் வீட்டிலும் அத்தையின் வீட்டிலுமாக இருந்து வந்தாள் ரக்ஷனா. குழந்தை நிவேதா இரு வீட்டு செல்லப் பிள்ளையாகவும் வளர்ந்து வருகிறாள்.
அருணால் அத்தனை பெரிய பாதகம் நடந்த பிறகு, நண்பனுடன் தொழிலைத் தொடர்வது சரியாக வராது என்பதால், வேல்முருகன் தனது பங்கிற்குரிய பணத்தை பெற்றுக் கொண்டு, அங்குள்ள சாதனங்களில் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார்.
சரியாக ஒரு வருடம் கடந்தது. பரிதிவர்மனுக்கு மகனும், ரக்ஷனாவுக்கு ஒரு மகளும் பிறந்துவிட, நாகேஸ்வரி இரண்டு மருமகள்களையும் பேரக்குழந்தைகளையும் விழுந்து விழுந்து கவனித்தார். நிவேதா இரண்டு குழந்தைகளையும் தொட்டுப் பார்த்து, அவர்களின் அருகிலேயே அமர்ந்துகொள்ள, ஹரிபிரசாத்தும் பரிதிவர்மனும் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி, ஊழியர்களை ஐநூறாக மாற்றி ஆயிரத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.
இப்போது புதியதாக உருவாகிய அலுவலகம் இரண்டு மாடிக் கட்டிடத்தில் கம்பீரமாக ஜொலிக்க, அதன் ஜி.எம்.ஆகப் பரிதிவர்மனும், மேனேஜராக ஹரிபிரசாத்தும், நிறுவனராக வேல்முருகனும் பார்த்துக் கொண்டனர். அகிலன் அடிக்கடி வந்து அக்காவைப் பார்த்துச் சென்றான். முன்பு அவனிடம் கடுமையாக நடந்துகொண்ட நாகேஸ்வரி, இப்போது அன்பொழுகப் பேசினார்.
நீலாம்பரியால் நடந்த பாதகத்தை அறிந்திருந்த பரிதிவர்மன், அவளை ஒரேடியாகத் தலை முழுகி விட்டான். சில நாள் கொதித்துக் கொண்டிருந்த சந்திரன், தேவையில்லாமல் வாயை விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதால், மகன் வீம்புச் சண்டைக்குப் போகாமல் இருக்க, அவனது பெற்றோர் வேறு பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள்.
இரண்டு ஜோடி இணைகளும் இத்தனை வருட கஷ்டங்கள் யாவும் தீர்ந்து, இப்போது இல்லறம் எனும் நல்லறத்தில் திழைத்து மகிழ்ந்தனர். அக்காவும் தங்கையும் முன்பை விடப் பாசமாக இருக்க, பிறந்த முதல் தாயை இழந்து, சித்தியின் கொடுமையில் பாதிக்கப்பட்டு, காதல் தோல்வியில் துயருற்று, அப்பாவின் இறப்பால் தனிமையின் பிடியில் அகப்பட்டு, அத்தையின் வெறுப்பால் கவலைப்பட்டு, நித்தம் நித்தம் வேள்வித் தீயில் மூழ்கிய நந்தனா, இன்று தான் பட்ட அத்தனைத் துயரங்களுக்கும் இரண்டு மடங்கு அதிகமாய் அன்பைப் பெற்று, தன் கணவன் பரிதிவர்மன், அன்பு மகன், மகள் மற்றும் தங்கையின் பாசம், அரவணைக்கும் குடும்பத்தினருடன் குறையாத நிம்மதியோடும் நிறைந்ததொரு இல்லற வாழ்வோடும் ஆனந்தமாய் வாழ்ந்து வருகிறாள்!
ஆனால் வனிதா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேசுவது குழறலாக மாறிவிட, வீல் சேரிலும் படுக்கையிலும் கொஞ்ச நாள் இருந்தவள், இப்போது எங்கேயும் வராமலும் யாரிடமும் பேசாமலும், தன்னைக் காண வருபவரிடம் பேச முடியாமலும், கையில் கம்பை ஊன்றி ஊன்றி மெல்ல மெல்ல நடக்கிறாள். மகள் அவளைப் பார்க்கப் பிடிக்காமல் போவதைத் தவிர்த்து, அப்பாவின் ஆசைக்கு மட்டுமே வந்து செல்கிறாள். மற்ற எல்லோரும் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். இருக்கும் வரை ஓயாத பேச்சும், சுயநலமான நடவடிக்கையும், தான் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்ற வெறியும், இன்று அவளை இப்படி மாற்றி விட்டது. இதைத்தான்
யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்கிறார் திருவள்ளுவர்.
**சுபம்**
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
