பிசினஸ் தொடங்கி இந்த மூன்று வருடத்தில் ஆதவனின் ‘ஏஏ சீஃபுட்ஸ்’ நிறுவனம் ஆலமரம் போலப் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தது. புதிய ஏற்றுமதி மையங்கள், அதிநவீன குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், பெருகிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என ஆதவன்-அருண் இருவரும் எப்போதும் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் பிஸியாகவே இயங்கிக்கொண்டிருந்தனர்.
மகன் நாளெல்லாம் பிசினஸிலேயே மூழ்கியிருப்பதைப் பார்த்து சீதாவுக்கு கவலையாக இருக்க, மகனின் தொழிலைப் பற்றிய பைல்களைப் பார்த்துக்கொண்டிருந்த தன் கணவர் பரமுவிடம் சென்று மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஏங்க…பையனுக்கு வயசு போய்க்கிட்டே இருக்குங்க. 29 வயசு ஆகுது அவனுக்கு! இன்னமும் தொழிலு தொழிலுன்னு ஓடிக்கிட்டே இருந்தா எப்படி? நல்ல பொண்ணா பார்த்து அவனுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சு வைப்போம்!” என்றாள்.
அதைக் கேட்டதும் பரமு தன் மனைவியைச் செல்லமாக முறைத்துப் பார்த்தவர், “ஆமா டி! நான்தான் வேண்டாம்னு குறுக்க நிக்கிறேன் பாரு? அவனைப் பத்தி எனக்குத் தெரியாதா சீதா?, பிசினஸ்ல ஒரு நிலைமைக்கு வரட்டும்னு தான் இவ்வளவு நாள் சும்மா இருந்தேன். இப்போ தொழிலிலும் நல்ல நிலைமைக்கு வந்துட்டான். இனி அவனுக்குக் கல்யாண வேலையைப் பார்க்க வேண்டியதுதான்!” என்று தனது மீசையை முறுக்கியபடிப் புன்னகையோடு சொன்னார்.
பெற்றோர்கள் மகனுக்கு வரன் பார்க்க தொடங்க, ஆதவனோ தன் கனவுத் தேவதையின் நினைவுகளோடு, “முத்தழகு நீ எங்கே இருக்கிற?” என்று மனதிற்குள் ஏங்கத் தொடங்கினான்.
“நல்லவேளைடி! உன் அண்ணன் ரெண்டும் பையன்களாவே பெத்து வச்சான்! ஒருவேளை பொண்ணா பெத்திருந்தான்னு வச்சுக்கோ… ஏற்கனவே நீயும் உன் அத்தையும் எங்க குடும்பத்துல வந்து வைக்கப்பட்டு ராஜாங்கம் பண்ணுற மாதிரி, இன்னொரு ஆளும் வந்து தலைமேல உக்காந்திருக்கும்!” என்று பரமு கிண்டலாகச் சொன்னார்.
அதைக் கேட்டதும் சீதாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது!
இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பல்லை கடித்த படி கணவனை முறைத்துப் பார்த்தவள், “என்ன சொன்னீங்க… இன்னொரு தடவை சொல்லுங்க பார்ப்போம்? நாங்களா வலிய வந்து உங்க குடும்பத்தில் வாக்கப்பட்டுட்டோம்?”
“என் அத்தை இந்த வீட்டுக்கு மருமவளா வரலன்னா இந்நேரம் இந்த குடும்பம் இப்படி உருப்பட்டுருக்குமா?”, உங்கப்பா அதான் என் மாமனாரூ படுற பாட்டைப் பார்க்க முடியாம தான் நண்பன்னு தன் தங்கச்சிய கட்டி வச்சாரு எங்க அப்பா.
“என் அத்தையும் சேர்ந்து கிட்டு இரவும் பகலும் உழைச்சு இந்த வீட்டை நிமிர்த்தியது! கட்டுனா உன் மவளை தான் கட்டுவேன் மாமானு எங்கபப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடுன சங்கதியெல்லாம் மறந்துட்டு இப்போ என்னையே கிண்டல் பண்றீங்களா?” என்று சீறினாள்.
அந்த நேரம் அங்கு அருண், “சீதா! விடு…உன் தலையெழுத்து இந்த மனுசனை கட்டி மாறடிக்கணும்னு, நான் மட்டும் அப்போ இருந்திருந்தேன் நல்ல படிச்ச மாப்பிள்ளைக்கு உன்ன கட்டி வைக்க சொல்லிருப்பேன். உன் புருஸ்கு ரொம்பத்தான் தைரியம் வந்துருச்சு. இன்னைக்கு அவருக்கு ராத்திரி சாப்பாடு போடாத!” என்று எரியிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போலக் கொளுத்திப் போட்டான்.
இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்த ஆதவனும் தன் பங்குக்கு, “ஆமாம்மா… பிசினஸ்ல ஜெயிச்ச மிதப்புல அப்பா ரொம்பப் பேசுறாரு, இன்னைக்கு சாப்பாட்டை கட் பண்ணிடுவோம்!” என்று சிரிக்க, பரமுவுக்கு நிலைமை கைமீறிப் போவது புரிந்தது.
சடாரெனத் தன் குரலை மாற்றிய பரமு, “அட இருங்கடா… என் பொண்டாட்டியை சும்மா செல்லமா கிண்டல் பண்ணா, நீங்க எல்லாரும் சேர்ந்து என்னைச் சண்டையில மாட்டி விடுறீங்களா? சீதா… என் தங்கமே, நீயும் எங்க அம்மாவும் வரலன்னா என் குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்குமாடி? சும்மா உன்னை வம்பு இழுக்கத்தான் சொன்னேன்,” என்று மனைவியைக் கை கூப்பிச் சரணடைவது போலப் பேசினார்.
கணவனின் அந்த அசட்டுச் சிரிப்பையும் செல்லக் கெஞ்சலையும் பார்த்ததும் சீதாவின் கோபம் பனிபோல விலக,”எப்பப் பார்த்தாலும் பொண்டாட்டியை வம்பு இழுக்குறதே உனக்கு வேலையாப் போச்சு!” என்று வெட்கப் புன்னகையோடு சீதா சமையலறைக்குள் நுழைய, வீடே சிரிப்பொலியால் நிறைந்தது.
இரவு உணவை முடித்துவிட்டு, ஆதவனும் அருணும் தங்களின் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தனர்.
அந்த இரவிலும் தொழிற்சாலை முழுவதும் விளக்குகள் வெளிச்சத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தன. சிங்கப்பூர் மற்றும் துபாய் ஏற்றுமதிக்கான அடுத்த கட்ட லோடு அனுப்பப்பட வேண்டியிருந்ததால், அங்கே வேலைகள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன.
நவீனக் குளிரூட்டும் கருவிகளின் உராய்வு ஒலியும், பனிக்கட்டிகளை நொறுக்கும் சத்தமும், தொழிலாளர்களின் சுறுசுறுப்பான இயங்குதலுமாக தொழிற்சாலையே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
சுதாகர் போன்ற நம்பகமான மீனவர்களிடமிருந்து வாங்கப்பட்ட வஞ்சிர மீன்கள், வாவல் மீன்கள் மற்றும் இறால்கள் அனைத்தும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பரிசோதிக்கப்பட்டு, பனிக்கட்டிப் பெட்டிகளில் பக்குவமாகப் பேக் செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன.
இவர்கள் இருவரும் தொழிற்சாலைக்குள் நுழைந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் மரியாதையுடன் தலை அசைக்க, புன்னகையோடு பதிலளித்தபடி வேலையை மேற்பார்வையிடத் தொடங்கினானுங்கள்.
கையில் ‘செக் லிஸ்ட்’ படிவத்தோடு வந்த அருண், “மச்சி! இன்னைக்கு நைட் லோடு கரெக்ட் டைம்க்கு ஏர்போர்ட் அண்ட் போர்ட்டுக்குப் போயிரும்டா. எல்லாமே பக்காவா பேக் பண்ணியாச்சு,” என்று விபரங்களைச் சரிபார்த்துக் கூறினான்.
ஆதவன் ஒவ்வொரு பெட்டியின் பேக்கிங் தரம் மற்றும் வெப்பநிலையைத் தன் கைகளாலேயே தொட்டுச் சரிபார்த்தான். தொழிலில் அவனுக்கிருந்த அந்த அர்ப்பணிப்பும் கவனமும்தான் குறுகிய காலத்தில் அவனை இந்த உயரத்திற்குக் கொண்டு வந்திருந்தது.
வேலைகளுக்கு நடுவே, இரவின் அமைதியில் தொழிற்சாலையின் வாசலில் வந்து நின்ற ஆதவனுக்கு மீண்டும் அந்த நினைவு வந்தது…
திருச்சி வீதியில் தான் கண்ட அந்த நெஞ்சம் மறக்காத பின்புறத் தோற்றம்!
‘யார் அவள்? எங்கே இருப்பாள்?’ என்ற கேள்விகள் மனதைக் குடைய, வானத்தில் பிரகாசித்த நிலவை வெறித்துப் பார்த்தபடி நின்றான்.
அப்போது அவனருகே வந்து தோளில் கைவைத்த அருண், “மச்சி… பிசினஸ்ல நாம நினைச்சதை விடவும் பெரிய ஆளா வளர்ந்துட்டோம்டா! ஆனா உன் கண்ணுல ஒரு ஏக்கம் இன்னமும் இருந்துகிட்டே இருக்கேடா…” என்றான் மெல்லிய குரலில்.
ஆதவனோ பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டுத் தன் பார்வையை வானத்தை நோக்கித் திருப்பியவன்
“மச்சி… ‘கனவுதானே’ன்னு இதை என்னால சாதாரணமா கடந்து போக முடியலடா,” என்றவனின் குரல் அந்த இரவின் அமைதியில் ஆழமாக ஒலித்தது.
அருண் தனது நண்பனை அமைதியாகப் பார்க்க, ஆதவன் தொடர்ந்தான், “ஆனா இன்னொரு பக்கம் யோசிச்சு பார்த்தா… ஏதோ ஒரு காலேஜ் பொண்ணு, கல்சுரல்ஸ் காம்படிஷனுக்காக அந்த மீனவப் பெண் வேஷத்தைப் போட்டுட்டு வந்திருக்கலாம்னு தோணுதுடா. நிஜத்துல அவ யாரோ, எந்த ஊரோ… ஆனா என் மனசு மட்டும் ஏனோ அவளைத் தேடிக்கிட்டே இருக்குடா,” என்று தன் நெஞ்சைத் தொட்டுக் கலங்கிய கண்களோடு சொன்னான்.
அவனின் தவிப்பையும், காதலின் ஆழத்தையும் புரிந்துகொண்ட அருண், ஆதவனை இறுக்கி அணைத்துக்கொண்டவன், “விடுடா மச்சி… உனக்குன்னு ஒருத்தி இந்த உலகத்துல நிச்சயமா இருப்பா. உன்னோட இந்த உண்மையான அன்புக்கும் உழைப்புக்கும் ஏத்த மாதிரி எல்லாமே நல்லபடியா நடக்கும். காலம் உனக்கான பதிலைக் கண்டிப்பா கொண்டு வரும்… விடு, எல்லாம் சரியாகும்!” என்று தேற்றினான் அருண்.
அருணின் அந்த வார்த்தைகள் ஆதவனின் தவித்த மனதிற்குச் சற்று மருந்தாக அமைய, இருவருமாக மீண்டும் தொழிற்சாலை வேலைகளில் கவனத்தைத் திருப்பினர்.
நாட்கள் மெல்ல நகரத் தொடங்கின.
படிப்பை முடித்துவிட்டு வந்த கமலி வீட்டில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்தாள்.
அதே நேரத்தில், பரமுவும் சீதாவும் மகனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். தங்களுக்குத் தெரிந்த உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் “ஆதவனுக்கு நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்கப்பா” என்று சொல்லி வைத்திருந்தனர்.
அப்போது பரமுவின் தந்தை வழிச் சொந்தத்தில் ஒரு திருமணம் வர, பரமுவும் சீதாவும் அந்த விசேஷத்திற்குச் சென்றிருந்தனர்.
மண்டபத்தில் திருமண விழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்க, கூட்டத்திற்கு நடுவே சுதாகரையும் கலையையும் பரமுவின் கண்கள் கண்டன!
“அட, சுதாகரு!” என்று பரமு அன்போடு கூப்பிட, சுதாகர் குடும்பத்தினரும் புன்னகையோடு அவர்கள் அருகில் வந்தனர்.
பரஸ்பரம் நலம் விசாரிக்கும் போதுதான், கலைக்கு அருகில் பட்டுப்புடவையில் தேவதையாக நின்று கொண்டிருந்த கமலியைப் பரமுவும் சீதாவும் பார்த்தனர்!
பட்டுப்புடவையில் லட்சணமும் நிறைந்து, முகத்தில் மெல்லிய புன்னகையோடு நின்றிருந்த கமலியைப் பார்த்ததும் சீதாவின் கண்கள் அப்படியே நிலைத்து விட்டன.
இது தான் டா நம்ப பாப்பானு சுதாகர் சொல்ல, அவளது அமைதியான தோற்றமும், மரியாதையான நடத்தையையும் கண்ட சீதாவிற்கு மனதிற்குள் ஏதோ ஒரு இனம்புரியாத நிறைவு ஏற்பட்டது.
பரமுவும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவரின் மனதிலும் ஒரே நேரத்தில் அந்த எண்ணம் உதித்தது—’நம் ஆதவனுக்கு ஏற்ற ஜோடி இதோ இந்த கமலிதான்!’
சுதாகரின் குணமும், குடும்பத்தின் கண்ணியமும் ஏற்கெனவே பரமுவுக்கு நன்றாகத் தெரியும். இப்போது கமலியின் லட்சணத்தைப் பார்த்ததும், மகனோடு அவளை இணைத்துப் பார்த்துத் தங்கள் மனதில் கல்யாணமே செய்து முடித்துவிட்டனர்!
வீட்டிற்கு வந்ததும் பரமு சுதாகருக்கு கால் பண்ணினார். என்ன பரமு போன் பண்ணுறான் என்றவாறு அட்டன் பண்ணியவர் சொல்லு டா என்க, “சுதா… நாம இத்தனை வருஷமா தொழிலிலும் சரி, பழக்கத்திலும் சரி நல்ல நண்பர்களா இருக்கோம். உன்கிட்ட ஒரு மனசு விட்டு ஒரு விஷயம் பேசணும்,” என்று பரமு பீடிகையுடன் ஆரம்பித்தார்.
“என்ன பரமு… இப்படித் தயங்கிப் பேசுற? எதுவா இருந்தாலும் உரிமையா சொல்லுயா,” என்றார் சுதாகர்.
ம்ம் என்ற பரமு, “நம்ம ஆதவனுக்கு பொண்ணா தேடிக்கிட்டு இருக்கோம்ங்கிறது உனக்குத் தெரியும். இன்னைக்கு உன் பொண்ணு கமலியைப் பார்த்ததும், என் மனசுக்கும் சீதா மனசுக்கும் அம்புட்டு நிறைவா இருக்குப்பா. உனக்குச் சம்மதம்னா… உன் பொண்ணு கமலியை என் மகனுக்குப் பொண்ணு கேட்டுப் பேசலாம்னு இருக்கேன். உனக்கு என்ன தோணுது சுதா?” என்று நேராக விஷயத்திற்கு வந்தார்.
எதிர்பாராத இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுதாகருக்கு பேரதிர்ச்சி! அதே சமயம் அளவில்லாத மகிழ்ச்சி!
ஆதவனையும், அவன் தொழிலில் அடைந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சியும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட ஒரு தங்கமான பையனுக்கு தங்கள் மகளைத் தேடி வந்து பெண் கேட்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே சுதாகரின் கண்கள் ஆனந்தத்தில் பனித்தன!
“மறுபக்கம் பதில் இல்லாமல் போக, யோவ்… என்னையா எதாவது சொல்லு என்று பரமு கத்தினார்”.
அதில் நிகழ்விற்கு வந்தவர் “அட என்ன பரமு… இப்படி கேட்டுக்கிட்டு? தாராளமா வாடா! என் நண்பன் வீட்டுக்கு என் பொண்ணை மருமவளா அனுப்ப கசக்கவா போகுது!” என்றார் மகிழ்ச்சியுடன்.
இது போதும் மச்சி என்று போனை வைத்தவர் மனைவியிடம் விஷயத்தை சொல்ல, சரிங்க…ஆது வரட்டும் என்று மகனுக்கா காத்திருந்தனர்.
ஆதவனும் வழக்கம் போல இரவு பத்து மணிக்கு மேல வீட்டிற்கு வந்தவன், குளித்து டிரஸ் மாற்றிக்கொண்டு கீழே வந்தவன், அம்மா என்க, இதோ ஆது என்றவாறு சூடாக போட்ட தோசையை எடுத்து வந்து மகனின் தட்டில் வைத்து சட்னி சாம்பார் ஊற்றிய சீதா, “ஆது! உனக்கு பொண்ணுப் பார்த்துட்டோம்டா. நம்ம சுதாகர் அண்ணனோட பொண்ணு கமலிதான்! அடுத்த வாரம் நாம பொண்ணு பார்க்கப் போறோம்,” என்றாள்.
அதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனவன், “என்னம்மா சொல்றீங்க… பொண்ணு பார்க்கப் போறோமா? என்ன திடீர்னு இவ்வளோ அவசரம்?” என்று அதிர்ச்சியோடு கேட்டான்.
“எதேஏஏஏ அவசரமா? உனக்கு வயசு 29 ஆகுது. தொழிலையும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துட்ட. இனியும் என்னடா? நல்ல குடும்பம், பொண்ணும் தங்கமான குணத்தோட அம்புட்டு லட்சணமா இருக்கா!” என்றாள் சீதா.
தேடல் தொடரும்…
