வேள்வி : 20

வனிதா அங்கிருக்கும் யாருடைய மனநிலையும் புரியாமல், மகளுக்கு அந்த வீட்டின் மீது துளியளவு உரிமையில்லை என்பதும் தெரியாமல் விதண்டாவாதம் செய்ய, அவள் என்ன தான் செய்து விடப் போகிறாள் எனும் விதமாக அனைவரும் பார்த்து இருந்தனர். ஆனால் மனைவியின் வரம்பு மீறிய பேச்சு கணவனான அவரைக் கொதித்து எழ வைத்தது.

“என்னடி பேச்செல்லாம் ஒரு தினுசா வருது? ஏன், உன் அக்காவை நான் பெண் பார்க்க வந்ததும், அவளைக் கட்டிக்க ஆசைப்பட்டு சம்மதம் சொன்னதும், எங்க நிச்சய ஏற்பாடு நடந்ததும் உனக்குத் தெரியாதா? அப்படி ஒரு அன்பான, அடக்கமான குணவதியை கல்யாணம் பண்ண விடாம செய்தது நீதானே! அவள் போட்டோ என் அறையில் இருப்பதைப் பார்த்த கோபத்தில் என்கிட்ட சண்டையிட்டு, அந்த அப்பாவிப் பெண்ணை பிறந்த வீட்டு வாசல் படியை மிதிக்க விடாம செய்திருந்தியே… உண்மையில் கலையை நான் கட்டியிருந்தா அவளும் நல்லா இருந்திருப்பா, நானும் உன்னை மாதிரி ஒரு சுயநலக்காரியைக் கட்டி சீரழிந்து இருக்க மாட்டேன்.

நந்தனாவின் அம்மா இறந்த பிறகும் அவளைக் கொச்சைப்படுத்திப் பேசுறியே, அவள் எனக்குத்தான் பிறந்தான்னு சொன்னா, உன்னால என்ன செய்ய முடியும்?” என்ற வேல்முருகனின் கேள்வியில் விதிர்விதிர்த்துப் போனாள் வனிதா.

“உன் பேராசை நிரம்பிய குணமும், சுயநலமான திட்டமிடலும்தான் இந்த வீட்டில் இன்னைக்கு ரக்ஷனாவை உரிமையுடன் நடக்க விடாம செய்திருக்கு. பேசாம கிளம்பல; விசாவை கேன்சல் பண்ணி உன்னை நிரந்தரமா எங்க வீட்டுல விட்டுட்டுப் போயிடுவேன்” என்றார். அந்த வார்த்தையில் வனிதா தடுமாறினாள்.

மகள் மேலிருந்து கீழே வந்தாள். வனிதாவின் உள்ளம் இடறியது. என்ன சொல்லி மகளை அவள் கணவனிடமும் குழந்தையுடனும் சேர்த்து வைப்பது என்று தெரியாமல் குழம்பியது. விவாகரத்து, ஜீவனாம்சம் என்று வரிசையாக மனதில் ஓட, “என் மகள்தான் இந்த வீட்டு மருமகள்! அவள் வாழ வேண்டிய இடத்தில் வேறு யாரையும் நான் வாழ விட மாட்டேன்!” என்றாள் வனிதா.

“நீ செய்த பாவம்தான் உன் மகள் வாழ்க்கையை விடாம வந்து துரத்துது! இனி எதுவும் செய்ய முடியாது. காலம் முழுக்க பார்த்துக் கண்ணீர் விடு” என்றார் வேல்முருகன்.

“இல்லை! நான் இதை சும்மா விடமாட்டேன். இப்பவே கோர்ட்டுக்குப் போவேன். கேஸ் போடுவேன், என் மகள் வாழ்க்கையை இல்லாம ஆக்கியவரை சும்மா விட மாட்டேன். என் பேத்தியையும் மகளையும் காரணமாக்கி அவள் வாழ்க்கையை அழித்தவனைத் தண்டிப்பேன்” என்றாள் வனிதா ஆவேசமாக.

“அவன் உன் தோழியின் மகன், அண்ணனின் வாரிசு என்பது கூடவா மறந்து போயிற்று?” என்றார் வேல்முருகன்.

“என் மகளை விட எனக்கு எதுவும் பெருசில்லை. என்னை எத்தனையோ நாள் அவமதித்து, கலையைத் தலைக்குமேல தூக்கி வச்சு நடத்தி, என் மகளை உதாசினப்படுத்தி, இதோ நிற்கிறாளே இவளுக்காக ரக்ஷனாவுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறித்து, பாரபட்சமா நடந்துகிட்ட எங்க அண்ணனை சும்மா விடக்கூடாதுன்னுதான் இந்தக் கல்யாணத்தை நடத்தினேன். நான் நினைச்ச மாதிரி எல்லாமே நடந்தது; ஆனால் உங்க மகள்தான் எனக்கு எதிராக மாறி என் திட்டத்தை உடைச்சுப் போட்டுட்டா!” என்றாள் வனிதா ஆக்ரோஷமாக.

அனைவரும் ரக்ஷனாவைப் பார்க்க, அவள் அழுத்தமான பார்வையுடன் தாயின் முன்பு வந்து நின்றாள்.

ரக்ஷனா முதல்முறை நந்தனாவைப் பற்றி அறிய வந்ததிலிருந்து, அவள் மீது பாசத்துடன் நடந்து கொண்டு, தன் பெரியம்மாவுக்கும் தனது தாய்க்கும் இடையில் நடந்தது குறித்து, அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

அப்போதே அக்காவின் மீது பாசமும், தனது அம்மாவின் மீது வெறுப்பும் வந்துவிட, அடிக்கடி அத்தையுடன் பேசுவதும், தப்பான ஆலோசனைகளை வழங்குவதும், அவரது அலட்டல் பேச்சும் திமிரான நடவடிக்கைகளும் சுத்தமாக பிடிக்கவில்லை. ஊரில் நடப்பது குறித்து அம்மா அடிக்கடி பேசுவதன் மூலம், அங்கு நடப்பவற்றையும் தெரிந்துகொண்டாள். அதிலும் பரிதிவர்மன் தன் அத்தை மகளிடம் காட்டிய பாசத்தை அவளும் அறிந்திருந்ததால், அவர்கள் வாழ்க்கையில் இடைபுக விரும்பவில்லை. மாறாக, தனது அப்பாவின் அலுவலகத்திற்கு பணி நிமித்தம் வந்திருக்கும் தமிழ்நாட்டை சார்ந்த ஹரி எனும் இளைஞனை, வீட்டிற்கு அழைத்து வந்து அனைவருக்கும் அறிமுகப்படுத்த, அன்று முதல் காணும்போது எல்லாம் பேசினாள். அவனது பேச்சும் சிரிப்பும், தமிழ்நாட்டில் உள்ளவற்றை பற்றி சுவராஸ்யமாக கூறுவதும், இவளது மனதிலும் சிறு சலனத்தை உருவாக்க, அவனுக்கும் இவளைப் பிடித்துப் போனதால், பிறர் அறியாமல் நெருங்கிப் பழகினார்கள். அவ்வப்போது வெளியே சென்று மகிழ்ந்தார்கள். அவளது அப்பா பிசினஸ் பார்ட்னரின் மகனுக்கு மணமுடிக்க ஆசைப்பட்டார். தாய் வனிதா பரிதிவர்மனுடன் சேர்த்து வைக்கத் திட்டமிட்டாள், இவளோ ஹரியை விரும்பி அவனையே திருமணம் செய்து வாழ வேண்டும் என்று வண்ண வண்ண கனவுகளை வளர விட்டாள்.

அந்த நேரம் மாமா தாணுலிங்கம் இறந்துவிட, இவளை நண்பரின் வீட்டில் ஒப்படைத்து சென்றிருந்தனர். அவளும் கல்லூரி மற்றும் அவனுடனான காதலில் திழைத்திருக்க, அவளது அப்பாவின் நண்பரின் மகன் அருணுக்கு தங்களுக்கு கீழே பணிபுரிய வந்திருக்கும் ஹரியிடம், ரக்ஷனா அதிகமாகப் பேசுவதும், புராஜெக்ட் வேலைகளை வேல்முருகனுக்கு சாதகமாக முடித்துக் கொடுப்பதும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் ஹரியை அங்கு வர விடாமல் செய்ய முடிவு செய்து, இவளிடம் அதிக உரிமையுடன் நடந்து கொண்டான். அப்படி ஒரு சமயம் வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால், அவள் கோபமாகப் பேசிவிட்டு அப்பாவும் அம்மாவும் ஊரிலிருந்து வரும் வரை தோழிகளுடன் சேர்ந்து விடுதியில் தங்கினாள்.

அப்பா வந்ததும் நடந்ததை சொல்ல, அதனால் இரு வீட்டு நபர்களுக்கு இடையிலும் பிரச்சனை முளை விட்டது. ‘பரிதிவர்மனுக்கு தான் அவளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும், இந்தப் பேச்சு கூடாது’ என்று வனிதா கண்டிப்புடன் சொல்லி விட, ரக்ஷனாவுக்கு எங்கே தனது காதல் கை கூடாமல் போய் விடுமோ, ஹரியை விட்டுப் பிரிய நேர்ந்துவிடுமோ என்ற பயம் முளைவிட்டது.

தன்னை வீட்டில் உள்ள அனைவரின் முன்பு அவமதித்த கோபத்தில் ரக்ஷனாவின் காதலனை வேலைக்கு வர விடாமல் செய்து, இனிமேல் என் கண்ணில் படக்கூடாது என்று மிரட்டி இருந்தான் அருண். அதுமட்டுமல்லாமல் பரிதிவர்மனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க போவதாக அவளது அம்மாவும் பேசுவதைக் கேட்டதால், தன்னால் அவளுக்குத் தொந்தரவு வர வேண்டாம் என்று விலகி நடந்தான் ஹரி. ஒரு நாள் வெளியே வந்திருக்கும்போது எதிர்பாராத விதமாக அவனைப் பார்த்து விட்டவள் ஓடிச் சென்று பேசினாள், அவனது விலகலையும் பொருட்படுத்தாமல் நலம் விசாரித்தாள், ஏன் தன்னைப் பார்க்க வரவில்லை என்று வினவினாள். அவன் ஒரு எம்பிஏ மாணவன் இறுதி வருட படிப்பின்போது கல்லூரியில் செய்ய வேண்டிய ஒருசில வேலைகளை செய்ய வந்ததாக சொன்னான். “பிறகும் ஏன் வரல?” என விசாரிக்க, “வந்த வேலை முடிஞ்சது. இப்ப எங்க காலேஜ் புரபஷருக்கு தெரிந்த இடத்தில் பார்ப்பதால் வர முடியல. நீ எதையும் மனசுல போட்டுக் குழப்பாம படி” என்றான். உண்மையான நிலவரத்தை சொல்லி அவளைப் பயமுறுத்த நினைக்கவில்லை.

இன்னும் சில நாளில் அவனது படிப்பு முடிந்து விட்டால், பிறகு இங்கு வரும் சூழல் உருவாகாது. அதற்கு முன் அவளது மனதில் தப்பான எண்ணங்களை வளர விட வேண்டாம் என்று தன் மனதின் ஆசைகளை அடக்கிக் கொண்டான். ஆனால் இவள் விடாமல் தொடர்பு கொள்ள, அவனால் மறுக்கவும் முடியவில்லை; ஏற்று மகிழவும் முடியவில்லை.

ஒரு நாள் மாலை நேரம் தோழி ஒருத்தியின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தவள், அங்கு எதிர்பாராமல் அவனைக் கண்டதும் வந்து விட, மனதில் இருப்பதை முகத்தில் காட்டாமல் இருந்தான் ஹரி. அதே நேரம் அவர்களை வெறித்தபடி பார்த்திருந்த இரு விழிகள், வீட்டிற்கு வரும்போது தொடர்ந்து வந்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை, அங்கிருந்த  நீர் நிரம்பிய குட்டையில் இடித்து தள்ளி விட்டுச் சென்றது.

ஹரி கஷ்டப்பட்டு அவளைக் காப்பாற்றி தனது அறைக்கு கொண்டு வந்தான். அவளது ஈர உடையை மாற்றி சூடு பறக்கும் அளவுக்குத் தேய்த்து விட்டான். குளிர் போய் இயல்புக்கு வருவதற்கு சிறிதளவு சூடான பானத்தை அருந்த வைத்தான். அப்படியும் அவள் சுய நினைவுக்கு வராமல் மயக்கத்தில் உளறினாள். அவனது கைகளை தன்னை விட்டு விலகாமல் பிடித்துக் கொண்டாள். அவன் கம்பளி போர்வையை எடுத்து மூடியும், எவ்வளவோ முயன்றும் அவளது பிதற்றல் அதிகமாக, உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றான். அந்த நேரம் அவனது உடல் சூடும் அவளை அணைத்திருந்த விதத்தில், அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் ரக்ஷனா.

அவன் சற்று தடுமாறினான். அவளை விட்டு விலகி விட முயன்றான். ஆனால் ரக்ஷனாவின் தொடுகையும், அணைப்பும் அவனையும் விலக விடாமல் செய்ய, தான் செய்வது தப்பு என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமல் அப்படி நடந்து விட்டான்.

காலையில் மேனியெங்கும் காய்ச்சல் அடிக்க, மெல்ல மெல்ல கண்களைத் திறந்து பார்த்தவளுக்கு உடலை அசைக்க முடியவில்லை. அது தண்ணீரில் விழுந்ததால் ஏற்பட்ட காயம் என்று நினைத்தாள் ரக்ஷனா. எங்கே இருக்கிறோம் என சுற்றிலும் பார்த்து விட்டு, மெதுவாக எழுந்து அமர்ந்தாள். பின்னர் ஹரிதான் தன்னை இங்கு அழைத்து வந்திருப்பதாக நினைத்துப் பெயர் சொல்லி அழைத்தாள். வயிற்றிற்குள் எதுவுமே இல்லாதது போலிருந்தது. நாவெங்கும் கசந்து வழிந்தது. கால்கள் இரண்டும் பலமாக வலித்தன. மாதவிடாய் அறிகுறி தெரிந்தது. இப்போது வரும் நாள் இல்லையே என்று நினைத்து, குளியலறைக்குச் சென்றவளுக்கு கால் பகுதி தீயாக எரிந்தது. என்ன நடந்தது என்று தெரியா விட்டாலும் ஹரியை தேடி அழைக்க, அவன் வரவே இல்லை. வேலைக்குச் சென்று விட்டானா? அல்லது கல்லூரிக்குப் போயிருப்பானா? என்று நினைத்தவள், தன் மீதிருந்த அவனது ஆடையை மாற்றி விட்டு, பழைய உடைக்கு வந்து வீட்டிற்குச் சென்றுவிட்டாள். பெற்றோர் கேட்டபோது சிறு விபத்து நடந்ததால் வர முடியவில்லை என்று மட்டுமே சொன்னாள். வேல்முருகன் பதறிப் போக எதையோ பறி கொடுத்தது போல உணர்ந்த ரக்ஷனா அதன் பிறகு அவனை எவ்வளவு தேடியும், கைப்பேசியில் அழைத்தும் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என்ன நடந்தது? என்ன ஆயிற்று? தனக்கு அடிபட்டது போல அவனுக்கும் எதுவும் நேர்ந்து விட்டதா? என்று தெரியாமல் குழம்பினாள். அவனது முகவரி முதல் எதுவுமே தெரியாமல் என்ன செய்வதென்று தடுமாறினாள். ஒரு வாரம் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தாள்.

அந்த நேரத்தில் அவளது திருமண பேச்சு நடந்தது. இவள் ஹரிக்கு என்ன ஆனது என்று தெரியாத பதற்றத்தில் இருந்ததால், படிப்பை காரணமாக்கி மறுத்தாள். அப்பாவிடமும் அதையேதான் சொன்னாள். ஆனால் அவள் அம்மா ஊரில் எல்லா ஏற்பாட்டையும் செய்ய சொல்லி விட்டு கடைசி நேரத்தில் கணவரிடம் சொன்னால் மறுக்க மாட்டார் என்பதால் நாகேஸ்வரியின் மூலம் பேச வைத்தார். வேல்முருகன் ஊருக்கு வந்து பேசுவதாக சொல்ல, அவரோ நாள் பார்த்துக் குறித்து விட்டதாகவும், இப்போது வைக்கா விட்டால் நீங்கள் வரும்போது நல்ல நேரம் இருக்காது என்றார். அவர் பரிதிவர்மனிடம் பேசி விட்டு விடுமுறைக்கு வந்தார்.

அங்கு பத்திரிகை முதல் அனைத்தும் தயாராக இருக்கவும், மனைவியைக் கடிந்தார். அவளோ நாகேஸ்வரியை கை காட்டி விலகி விட, மனைவியின் அவசரமான ஏற்பாடு பிடிக்கா விட்டாலும், என்ன செய்வதென தெரியாமல் தங்கையின் வீட்டிற்கு வந்தார்.

அங்கிருந்த பரபரப்பும் மகிழ்ச்சியும் அவரது நாவைக் கட்டிப் போட்டது. இவர் தங்கையிடம் சென்று பேசியதில், அண்ணனின் முழு சம்மதம் கிடைக்க பெற்றதும் நீங்கள் வரும் நேரம் திருமணத்தை நடத்த வேண்டும் என்று எல்லா ஏற்பாடுகளும் செய்து இருப்பதாகவும், எளிய முறையில் திருமணத்தை முடித்து விடலாம், பின்னர் மற்ற விசயங்களை மெதுவாக பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியதைக் கேட்டு அவரால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. ஆனாலும் பரிதிவர்மனிடம் நிறைய நேரம் பேசினார், நந்தனா மற்றும் அவள் அப்பா சதாசிவம் குறித்து விசாரித்தார். அவர்கள் அனைவருக்கும் சம்மதம் என்று தெரிந்ததும் தங்களது வீட்டுக்கு வந்தார்.

ரக்ஷனா அப்பாவிடம் சென்று பேசும்போது அவர் திருமணம் பற்றி நாகேஸ்வரி கூறியவற்றை சொல்லி மகளை சமாதானப்படுத்தினார். அவளது தோழிகள் பேசும்போது, ‘நடந்ததை மறந்து விட்டு அவரை மணந்து நன்றாக இரு!’ என்று அறிவுரை கூறினர்.

இவளுக்கு அன்று என்ன நடந்தது? என்று முழுவதுமாக தெரியாமலும், ஹரி தன்னை ஏமாற்றி சென்று விட்டானா? அல்லது உண்மையிலேயே விரும்பவில்லையா? எனவும் பலவாறாக குழம்பினாள். அப்பாவிடம் அவனைக் குறித்து ஏற்கனவே கேட்டபோது கூட, “தெரியாது! நம்ம ஆபிஸை விட்டுப் போன பிறகு இதுவரை பார்க்கல. எனக்கும் அவனுக்கும் பெரியதாய் பழக்கமில்லை, என்னம்மா என்ன விசயம்?” என்று திருப்பிக் கேட்டதும் பதில் கூற முடியாமல் திணறினாள். அலுவலகத்தில் அவனது முகவரி ஏதாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அருண் நீக்கி விட்டது தெரிந்தது. அவனிடம் சென்று பேசவும் கேட்கவும் இவளால் முடியவில்லை.

ஊருக்கு வந்த இடத்தில் இப்படி நடக்கும் என்றும் தெரியவில்லை. அம்மா அறிந்தால் அவ்வளவு தான் ஆடிவிடுவார். அப்பாவிடம் சொல்லும் விசயமும் இல்லை. அப்படியே சொன்னாலும் என்ன செய்வார்கள்? தோழிகள் சொன்னது போல தான், மறந்து விடு. பரிதிவர்மன் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதாக சொல்வார்கள். அதனால் அவள் அத்தானிடம் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை, எப்படியாவது நிருந்தி விடுமாறு சொல்ல நினைத்தாள். அவன் அழைப்பை ஏற்காமல் வேலையில் முழ்கி கிடந்தான். எந்தப் பக்கமும் எதுவும் செய்ய முடியவில்லை. நந்தனாவை அவன் விரும்பவில்லை, அவள் இங்கேயும் இல்லை என்ற தகவல் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவளால் அத்தானை ஏமாற்ற மனம் வரவில்லை.

வனிதா புத்தாடை எடுப்பது, நகை மற்றும் வீட்டு சாதனங்கள் வாங்குவது என்று அலைய, இவள் நிம்மதி இழந்து தவித்தாள். விருந்தினர்கள் யாராவது தினமும் வீட்டிற்கு வந்து சென்றனர், பத்திரிகை அச்சடித்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

அப்பாவிடம் சென்று “பயமா இருக்கு டேட்! எனக்கு இப்ப வேண்டாமே!” என்றபோது அவர் உள்ளமும் கலங்கவே செய்தது. ஆனாலும் எல்லா வேலையும் ஆரம்பித்து விட்ட பிறகு எப்படி திருமணத்தை நிறுத்துவது? என்று கவலையின் பிடியில் அகப்பட்டார். மனைவியிடம் கோபத்தைக் காட்டினார்; தங்கையை நினைத்து ஆத்திரமாக வந்தது. அதேநேரம் கலையரசியை போல தனது மகளின் நிலையும் ஆகிவிடக் கூடாது என்பதால், “பரிதி ரொம்ப நல்லவன்! உன்னைப் பத்திரமா பார்த்துக்குவான். நீ எதை நினைச்சும் கவலைப்படாதே. கல்யாணம் முடிஞ்சதும் நாம வெளிநாட்டுக்குப் போயிடலாம்” என்றார்.

மறுபடியும் போய் விடலாம் என்பது ஆறுதலாக இருந்தாலும், எப்படி திருமணம் செய்து அத்தானின் மனைவியாகப் போவது? ஹரி ஒருவேளை திரும்பி வந்தால் என்ன செய்வது? என்று ஒரு நிலைக்கு வர முடியாமல் தவித்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக செல்ல, “அவன் தான் உன்னைத் தொடர்ந்து படிக்க விடுவதாக சொல்லி இருக்கறானே பிறகென்ன? ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கே? பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?” என்று அதட்டினாள் வனிதா.

அவளோ அம்மாவிடம் பேச பிடிக்காமல் சென்று விட, மகளின் நிலை குறித்து சங்கடமாக உணர்ந்தார் வேல்முருகன். அவருக்கு இவளது காதல் விசயம் தெரியாது. ஹரி இங்கேயே இல்லாததால் அவனைக் குறித்து சிறு சந்தேகம் கூட எழவில்லை. அதனால் அருண் அவளிடம் தவறாக நடக்க முயன்ற பயத்தில் இப்படி சொல்வதாக நினைத்து, மகளிடம் ஆறுதலாகப் பேசி,  பரிதிவர்மனை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்குமாறு சொன்னார். தோழிகளும் அப்பாவும் இப்படியே சொல்வதுடன், அவளுக்கும் தனது எதிர்காலம் பற்றிய பயம் இருந்ததால், வேறு எதையும் வெளிப்படுத்த முடியாமல் இருந்தாள். அப்படியே திருமண நாளும் அவளைப் பயமுறுத்தியபடி வந்தது.

காலை முதல் பயமும் நடுக்கமும், ‘எல்லோரையும் ஏமாற்றுகிறோம்’ என்ற கலக்கமும், வீட்டை விட்டுச் சென்று பெற்றோரை அவமானப்படுத்த முடியாமலும், ‘உண்மையை யாரிடமும் சொல்ல முடியவில்லையே!’ என்ற தவிப்பும் சூழ்ந்து கொண்டு அலைக்கழிக்க, வனிதாவின் இழுப்பிற்கு சிலையென அசைந்தாள். அப்படியும் மணமேடைக்கு வந்து, அங்கு இருந்த அத்தானையும், ஓம குண்டலத்தில் இருந்து வெளிப்பட்ட புகையும், அங்குள்ள வாசனையும், அதிகப்படியான மன அழுத்தமும் ஒன்று சேர மயங்கி விழுந்து விட்டாள்.

அனைவரும் என்னவோ ஏதோ என்று பதற, அந்தப் புகையும் புதிய இடமும் மகளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லி சமாளித்து, மகளை எழ வைத்து திருமணத்தையும் முடித்து விட்டாள். அதன்பிறகு பரிதியிடம் உண்மையை சொல்லி விட வரும்போதுதான் அவனது விலகல் மற்றும் வாழ்க்கையில் நடந்தது தெரிய வந்தது. அவன் அவளை விட்டு விலகிச் செல்லவும், தன் மீது சிறு ஈர்ப்பு கூட வந்து விடக்கூடாது என்பதற்காகவும், நந்தனாவை மணந்து நன்றாக இருக்கட்டும் என்று தன்னை மோசமானவளாக காட்டிக் கொண்டாள். அதிலும் அவளது அம்மா செய்த காரியத்தை கண் கூடாக பார்த்த பிறகு, அதற்கு மேலும் அவனது அறையில், வீட்டில், வாழ்க்கையில் இருக்கவே கூடாது என்று விவாகரத்து செய்து விலகிச் சென்றாள்.

குழந்தை உருவான முதல் மன அழுத்தம் அதிகமாகியது. ஹரியால் தான் ஏமாற்றப்பட்டதையும், நடந்த திருமணத்தையும், தன் வாழ்க்கையில் நடந்தவற்றையும் தாங்க முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள்.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top