தீர்த்தக்கரை தனிலே-4
மாலை நேர சூரியன் தன் வெப்பத்தை குறைத்தவாறு மேற்கில் செல்ல ஹேமமாலினி தன் வீட்டை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அடையாரில் இருந்த பதினைந்து மாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டில் குடியிருந்தாள் ஹேமமாலினி.
பூட்டியிருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் தன் ஹேன்ட்பேக்கை ஷோபாவில் எறிந்தாள்.
உடலெல்லாம் அடித்துப் போட்டது போல் வலித்தது. சாய்வாய் ஷோபாவில் சரிந்து கொண்டவள் தன் இருகரத்தாலும் கழுத்தை பிடித்துக் கொண்டாள்.
சில நொடி நேர ஆசுவாசம் பின்னே குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவள் சமையலறை சென்று சூடாய் காஃபி கலந்து எடுத்துக் கொண்டாள்.
பால்கனி அருகே இருந்த ஷேரில் வந்து அமர்ந்தவள் தூரத்து வானத்தையே வெறிக்க அவள் மனவோட்டம் தன் வாழ்க்கையை சுற்றி வட்டமிட்டது.
‘வெளித்தோற்றதுக்கு சந்தோஷமா தெரிஞ்சாலும் எனக்குள்ள இழையோடி இருக்கிற சோகம் நான் மட்டுமே அறிஞ்சது’, இமையிலிருந்து தழுவிய கண்ணீர் துளிகள் கரத்தில் விழுந்து தரையை நோக்கி வழிந்தோடியது.
ஹேமமாலினியின் தாய் சத்யவதி பிழைப்பைத் தேடி சொந்த கிராமமான பூம்பாறையை விட்டு சென்னை வந்தவர். அடுத்தவரின் கையை ஏந்தி நிற்காமல் பூ கட்டி பிழைப்பை நடத்தி தன் அன்றாட வாழ்கையை நடத்தி வந்தார். அவரின் வாழ்வையும், சிரிப்பையும் குழிதோண்டி புதைக்கவே வந்து சேர்ந்தார் தனசீலன்.
ஏற்கனவே மணமாகி குடும்பம், குழந்தை என்று இருந்தவரின் பார்வைக்குள் வந்து விழுந்த சத்யவதியை தன் உலகமே நீதான் அது, இதென்று சாமர்த்தியமாக பேசி வலையில் விழ வைத்தார்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற கணக்கின் கீழ் சத்யவதியின் வாழ்வை சீரழித்துவிட்டு அவர் சென்றுவிட, கலங்கி நின்ற சத்யவதிக்கு அப்போதைய ஆறுதலாய் நின்றாள் மூன்று மாதக் குழந்தையாய் வயிற்றில் இருந்த ஹேமமாலினி.
கையை பிசைந்து அழுது கொண்டிருந்தவர் தற்கொலைக்கு முயன்று அதன்பின் சாரதா ஆசிரமம் வந்து சேர்ந்தார். ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் விதி தன் கோரமுகம் கொண்டு விளையாடி இருப்பதை அங்குதான் புரிந்து கொள்ள ஆரம்பித்தார் சத்யவதி. பெற்ற மகளிடம் கயமைத்தனம் செய்த தந்தை, மனைவியை சந்தேகம் கொண்டு தீயிட்டு கொளுத்திய கணவன், தன்னிடம் உள்ள குறையை மறைக்க தன் மனைவி மீது வீண்பழி சுமத்தி வெளியே துரத்திய கணவன் என ஏராளமான பிரச்சினைகள். ஆகமொத்தம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு பிரச்சனை. தன் பிரச்சனையையும் கடந்து வந்து நிம்மதியாக வாழ ஆரம்பித்த சத்யவதி வாழ்வில் விதி மீண்டும் விளையாடியது.
ஹேமமாலினியை பெற்றவுடன் ஸ்ட்ரோக் வந்து ஆபத்தான நிலையில் தன் இறுதிநொடியை நோக்கி சென்று கொண்டிருந்தார் சத்யவதி. தங்களால் ஆன முழு முயற்சியையும் செய்து முடித்த மருத்துவர்கள் கைவிரிக்க தன் கடமை முடிந்ததென்று பூலோக வாழ்வை துறந்தார் சத்யவதி. தன் சிறுவயது பருவம் முதல் ஆசிரமத்திலேயே வளர்ந்தாள் ஹேமமாலினி.
ஒரு ஷேரிட்டி பண்ட் நிறுவனம் மூலம் தன் படிப்பை தொடர்ந்தவள் தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.
மனதை மயக்கும் குரல் வளம் கொண்டிருந்தவள் விரும்பி படித்த படிப்பே பி. ஏ. ஜெர்னலிசம். தன் பட்டப்படிப்பு முடிந்தவுடன் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்தில் நிற்க, அதற்குப்பின் தான் இந்த அபார்ட்மெண்ட் வாசம்.
அனைத்தையும் எண்ணிப் பார்த்தவள் மனதுள் சூறைக்காற்று சுழன்றடித்தது.
தன் தந்தையை பற்றி தெரிந்து கொண்டபின் ஆண்களைப் பார்த்தாலே ஒவ்வாமை தான் ஹேமமாலினிக்கு.
தன் முன் கிருஷ்ணாவே காதலென்று வந்து நின்றாலும் அது அவளுக்கு எட்டிகாயாய் கசக்கத்தான் செய்யும்.
காதல், திருமண பந்தம் இதெல்லாம் அவளைப் பொறுத்தவரை சுத்த மாயை.
இத்தகைய எண்ணம் கொண்ட அவள் மனதை கிருஷ்ணாவால் மாற்ற முடியுமா என்ன?
வானில் தெரிந்த நிலவு மௌனியாய் சிரித்துக் கொண்டது.
இரவில் உலாப்போன நிலவை தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று வெறித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
அவன் மனமெல்லாம் ஹேமமாலினியை நினைத்து கூப்பாடு போட, என்று அவளை நேரில் காண்போம் என்ற எண்ணத்தோடே நின்று கொண்டிருந்தான்.
“இங்க என்னடா பண்ற?”, என்றவாறு அவனருகில் வந்து நின்றார் கிருஷ்ணாவின் தந்தை.
“ஒண்ணுமில்லப்பா இயற்கைய இரசிக்கணும் போல இருந்தது அதான்”, வலக்கையால் முன் நெற்றியில் வீழ்ந்த முடியை கோதிக் கொண்டான்.
“இளையராஜா இல்லாம இருக்க அதிசயம் தான். யாருதான்டா அந்தப் பொண்ணு?”, சிரித்தவாறே அவன் தோளில் கைபோட்டவாறு கேட்டார்.
“அப்பா”, அதிர்வாய் அவரை நோக்கினான் கிருஷ்ணா.
“தெரியும்டா ஆறு மாசமா உன்னை நோட் பண்ணிட்டுதான் இருக்கேன். சொல்லு யாரந்தப் பொண்ணு?”,
“ஹேமாப்பா ஹேமமாலினி”, இதழ் கடையோரம் சிறு புன்னகை உற்பத்தியானது.
“அவங்க வீட்ல பேரண்ட்ஸ் ஒத்துக்கிட்டாங்களா? எப்போ சம்மந்தம் பேசப் போகலாம். எனக்கு உன்னோட சம்மதம் தான் முக்கியம். நீ ஓக்கே சொன்னா அப்பா நாளைக்கு கூட சம்மந்தம் பேச வர்றேன்”,
“அவங்களுக்கு பேரண்ட்ஸ் இருக்கா? இல்லையானு எனக்குத் தெரியாதுப்பா”,
“தெரியாதா என்ன சொல்லுற கிருஷ்ணா?”,
ஆறு மாதமாக நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் கிருஷ்ணா.
மெதுவாக சிந்தனை வயப்பட்டவர், “இதெல்லாம் சரியா வருமா கிருஷ்ணா”, என்றார்.
“என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்குப்பா”,
அவன் தோளில் தட்டிக் கொடுத்தவர், “உன்னோட காதல் நிறைவேற அப்பாவோட மனமார்ந்த வாழ்த்துகள்”, என்று கட்டியணைத்தார்.
“கீழ அம்மா சாப்பாடு எடுத்து வச்சு வெயிட் பண்ணிட்டு இருக்கா வா சாப்ட போகலாம்”,
‘வீட்ல எனக்கு கிரீன் சிக்னல் ஹேமா நீ எப்போ எனக்கு கிரீன் சிக்னல் தரப்போற’, மனதுள் எண்ணியவன் தந்தையின் கரம் பற்றி உடன் நடந்தான்.
மூன்று அடுக்கு கொண்ட பெரிய ஷாப்பிங் மால் அது.
முதல் பகுதி கிஃப்ட், டாய்ஸ் என்று பொருட்கள் குழுமியிருக்க, இரண்டாவது தளம் திரையரங்கம், மூன்றாவது தளம் பொருகாட்சி தீவு திடல் போல் இருந்தது. கீழ் தளத்தில் தன்னுடைய தோழி ஒருத்திக்கு பிறந்தநாள் பரிசை வெகு சிரத்தையாக தேர்வு செய்து கொண்டிருந்தாள் ஹேமமாலினி.
கிருஷ்ணா இரவு காட்சிக்காக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு தன் தந்தை, தாய் வரவிற்காக வெளியே காத்துக் கொண்டிருந்தான்.
இரவு வானம் மழையின் வரவை பறைசாற்ற நிலா, நட்சத்திரமின்றி இன்னும் இருட்டிக் கொண்டு கிடந்தது.
தன் ஹேண்ட் பேக்கில் கிப்டை பத்திரப்படுத்தியவள் வெளியே நடந்து வர கிருஷ்ணாவின் பார்வை அவளை ஒருநொடி தழுவி மீண்டது.
அவன் செல்லெல்லாம் புதுவித உணர்ச்சி பொங்க தேகமெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கியது.
போனை தன் பாகெட்டில் சொருகிக் கொண்டவன் அவளருகில் செல்ல நினைக்க, அவள் பின்னே நடந்து கொண்டிருந்த இருவரின் உரையாடல் தெளிவாய் அவன் செவியில் வந்து உராய்ந்தது.
“டேய் குட்டியோட வண்டிய பஞ்சர் பண்ணிட்டதான?”,
“அதெல்லாம் பண்ணிட்டேன்டா இன்னைக்கு நமக்கு செம்ம வேட்டை இருக்கு”,
“குட்டிய பாருடா சும்மா தள தளன்னு தக்காளிப் பழம் போல இருக்கு. நாக்குல இப்போவே எச்சு ஊறுது”,
முகம் கோபத்தில் கொதித்துப் போயிருக்க அவர்களின் பின்னோடே சென்றான் கிருஷ்ணா.
தன் ஸ்கூட்டியின் நிலை பற்றி அறியாத ஹேமமாலினி வண்டியை எடுத்துக் கொண்டு பயணப்பட அந்த இருவரும் அவள் பின் சென்றார்கள். அவர்கள் மூவரையும் தொடர்ந்து கிருஷ்ணா தன் காரில் சென்றான்.
பிரதான சாலையை நோக்கி ஹேமமாலினி சென்று கொண்டிருக்க வலுப்பெற்று அடித்து ஊற்றத் தொடங்கியது மாமழை.
சேறும் சகதியும் தேங்கி கிடந்த சாலையில் வண்டியை செலுத்தியவள் பேலன்ஸ் தவறி கீழே விழுக, தங்கள் வண்டியை நிறுத்தி வந்த இரு கயவன்களும் ஓடிவந்து ஹேமமாலினியை தூக்கி விட்டார்கள். ஒரு பத்தடி தூரம் முன்பே தன் காரை நிறுத்திய கிருஷ்ணா அங்கு என்ன நடக்கிறதென்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளை கைகொடுத்து தூக்கி வண்டியை தூக்கி நிறுத்தயவாறே, “பார்த்து வரக்கூடாது. எழுந்திருமா”, என்றனர்.
“பார்த்துதான் வந்தே அண்ணா. வண்டி சிலிப் ஆகி வாரி விட்டுறுச்சு”,
“இங்கபாரு பாப்பா வண்டி பஞ்சர் ஆகி இருக்கு”,
“அச்சச்சோ”, மெல்லிய பயம் அவள் நெஞ்சைத் தாக்க முகத்தில் வடியும் நீரோடு அரண்டு போய் நின்றாள்.
“சரி எங்ககூட வா நீ சொல்லுற இடத்தில உன்னை இறக்கி விடுறோம்”,
“இல்ல உங்க ஹெல்ப்க்கு ரொம்ப நன்றி நான் ஆட்டோ புக் பண்ணி போயிக்குறேன் நீங்க போங்க”,
“இந்த மழையில ஆட்டோ எல்லாம் கிடைக்காது வாமா சொன்னாக் கேளு எங்ககூட வா”,
ஆள் அரவமற்ற சாலையில் இதெல்லாம் நடக்க அந்த கயவன்களுக்கு இன்னும் வசதியாகிப் போனது.
“ஹலோ நான்தான் ஆட்டோ புடிச்சு போயிக்குறேன்னு சொல்லுறேன்ல அப்புறமென்ன உங்க வேலைய பார்த்துட்டு போங்க”, ஹேமமாலினி முன்னேறி நடக்க, அவளின் வழிமறைத்து நின்ற இருவரும் அவளின் கைபற்றி இழுக்க, தன் காரை விரைவாய் அழுத்தி ஹேமாவின் அருகில் வந்து நின்றான் கிருஷ்ணா.
“இதோ வந்துட்டாருடா ஹீரோ”, ஒருவன் சொல்ல ஹேமமாலினி பயந்த முகத்தோடு அவன் பின்னே சென்று ஒளிந்து கொண்டாள்.
தன் கைமுட்டி இறுக்கி இருவருக்கும் இரண்டு அடியை போட்டு தள்ளியவன் தூக்கி போட்டு மிதி மிதியென்று மிதிக்க, விட்டால் போதுமென்று ஓடியே போனார்கள் இருவரும்.
தன் முறுக்கு குறையாமல் அவளை திரும்பிப் பார்த்தவன், “பார்த்தா மெச்சூர்ட் ஆன ஆள் போல இருக்கீங்க. சென்னை சிட்டில எத்தனை வருஷமா இருந்துருப்பீங்க இராத்திரி நேரத்துல இப்படித்தான் தனியா வர்றதா? ஷேப்டி ரொம்ப முக்கியம் மேடம்”, கூறியவன் அவள் கைமுட்டி சிராய்த்திருப்பதை கண்டு,
“நீங்க போக வேண்டிய இடத்துக்கு நான் கூட்டீட்டு போறேன் வாங்க. உங்க ஸ்கூட்டிய காலையில வந்து எடுத்துக்கலாம்”,
‘இந்தக்குரல் இந்தக்குரல்’, யோசித்தவாறே அவள் நிற்க,
“ஹலோ மேடம் கொட்டுற மழையில எவ்ளோ நேரம் நிக்குறதா உத்தேசம் வாங்க போகலாம். வேணும்ன்னா நீங்களே கார ட்ரைவ் பண்ணுங்க. நீங்க போக வேண்டிய இடத்துக்கு கொஞ்சதூரம் முன்னாடியே வண்டிய நிறுத்திட்டு நடந்து போங்க நான் பாலோ எல்லாம் பண்ணமாட்டேன்”, மெல்லிய சிரிப்போடு அவன் கூறி முடிக்க,
ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தாள் ஹேமமாலினி.
‘ரொம்ப ஜாக்கிரதை தான். நான் மட்டும் இந்நேரம் இல்லாட்டி என்ன செஞ்சுருப்பாங்க. ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல ஒருவார்த்தை பேசவும் இல்ல. ம்ஹும்…’, மனதுள் நினைத்தவன் அவளருகில் ஏறி அமர்ந்தான்.
ரிவர்ஸ் கியர் போட்டு காரை எடுத்தாள் ஹேமமாலினி.
“மேடம் ஒரு டூ மினிட்ஸ் ஒதுக்குபுறமா வண்டிய நிறுத்துங்க”,
தன் கண்களை பெரிதாய் விரித்துப் பார்த்தாள்.
“அய்யே தப்பா நினைக்காதீங்க மேடம் பேசிக்கலி ஐ யம் டீசண்ட் யூ நோ”,
அப்படியும் அவள் அவனையே பார்க்க,
“உங்க கைமுட்டியில இருந்து இரத்தம் வருது பர்ஸ்ட் எய்ட் பண்ணத்தான் கார நிறுத்தச் சொன்னேன்”,
காரை நிறுத்தியவள் கரத்தை பட்டும் படாதவாறு தொட்டவன் பஞ்சை வைத்து தோய்த்து எடுத்து பேண்டேஜை ஒட்டி முடித்தான்.
இன்னும் மழை குறைந்த பாடில்லை.
கார் அதன் போக்கில் பயணமாக, இருகரத்தையும் தேய்த்து தன் கன்னத்தில் வைத்தான் கிருஷ்ணா.
“என்ன மேடம் எதுவுமே பேசமாட்டீங்களா? நீங்க ஊமையா? இல்ல அதிர்ச்சியில இருக்கீங்களா?”,
அவள் புருவம் உயர்த்தினாள்.
“அப்போ நீங்க மௌன விரதம் இருக்கீங்களா?”, லொட லொடவென்று கிருஷ்ணா பேசிக் கொண்டு வர,
சிறு சந்தேகத்தில் நீந்திக் கொண்டு வந்தாள் ஹேமமாலினி.
“இரவு, மழை, இளையராஜா இசை, டீ இதெல்லாம் ஜென்ம சாபல்யம் தீர்க்க வல்லது மேடம்”, என்று கூறியவன் தன் பிளே லிஸ்டில் ஒரு பாடலை ஒலிக்க விட்டான்.
“இளையநிலா பொழிகிறதே
இதயம்வரை நனைகிறதே
உலாப்போகும் மேகம் கனாக்காணுதே
விழாப் போகுதே
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அதுமழையோ…”,
அவன் கிருஷ்ணா என்று உணர்ந்து கொள்ள அந்த நொடி அவளுக்கு போதுமானதாக இருந்தது.
ஆண்களைப் பற்றிய தவறான பிம்பம் அவளுள் கண்ணாடி சட்டம் போல் சிதறிப் போனது.
அவள் குரலைக் கண்டு அவன் காதல் கொண்டால் அவள் அவனைக் கண்டு காதல் கொண்டாள்…
காதலின் வீதியில் அவளும் ஓர் அந்தாதி எழுதத் தொடங்கினாள் அவன் மூலம்.
“எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசைபாடுது
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புதுவெள்ளம்…”…..
நதி கரை தொடும்…
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
