அத்தியாயம் 10

ஒரு வாரம் ஓடிவிட்டது.

தாரணி காலையில் ஏழு மணிக்கு எழுந்து, எட்டரை மணிப் பேருந்தைப் பிடித்து அலுவலகம் சென்று, மாலை ஏழு மணிக்கு வீடு திரும்புவது எனத் தன் அன்றாட வாழ்க்கைக்குள் மெல்லப் பழகியிருந்தாள்.

அந்த ஒரு வாரத்தில் அவள் அலுவலக வேலைகளைப் பழகிக்கொண்டதைவிட, அந்த வீட்டின் அன்றாட வாழ்க்கையைத்தான் அதிகம் கவனித்திருந்தாள். யார் எப்போது சாப்பிடுகிறார்கள், யாருக்கு என்ன பிடிக்கும், யாருக்காக என்னென்ன பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள் என்று அமைதியாகக் கவனித்தாள்.

அந்தக் கவனிப்பில் அவளுக்குப் புரிந்த ஒரு விஷயம் மட்டும் மனதை உறுத்தியது.

முத்து எப்போதும் கடைசியாகத்தான் சாப்பிட்டான்.

திங்கட்கிழமை இரவு அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தபோது, சிவகாமி எல்லோருக்கும் இட்லியும் சாம்பாரும் பரிமாறினாள். முத்து மட்டும் வயலிலிருந்து இன்னும் திரும்பியிருக்கவில்லை.

“அவன் வந்ததும் சாப்பிடுவான். நீ சாப்பிடு கண்ணு,” என்றார் சிவகாமி.

தாரணி சாப்பிட்டு முடித்துச் சென்ற பிறகு முத்து வீட்டிற்கு வந்தான். பாத்திரத்தில் எஞ்சியிருந்த உணவை எடுத்துக்கொண்டு தனியாக அமர்ந்து சாப்பிட்டான்.

செவ்வாய்க்கிழமையும் அதே நிலைதான். புதன்கிழமை கவிதாவுக்குப் பிடித்த தக்காளிக் குழம்பு. வியாழக்கிழமை கருப்பையாவுக்காக இளஞ்சூடான கஞ்சி. ஒவ்வொருவருடைய விருப்பத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்த சிவகாமி, முத்துவுக்கு மட்டும் கடைசியில் எஞ்சியதையே வைத்திருந்தாள்.

புதன்கிழமை இரவு தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த தாரணி, சமையலறையில் முத்துவைப் பார்த்தாள்.

மங்கலான விளக்கொளியில், ஆறிப்போன சோற்றில் ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவசரமாகச் சாப்பிடும் அவனுடைய தோற்றம் ஏனோ அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவளைப் பார்த்ததும் அவன் சாப்பிடுவதை நிறுத்தினான்.

“தூக்கம் வரலயா?” என்று கேட்டான்.

அவள் எதுவும் சொல்லாமல் தண்ணீரை எடுத்துக்கொண்டு அறைக்குத் திரும்பினாள். ஆனால் அந்தக் காட்சி மட்டும் அவள் மனதை விட்டு அகலவில்லை.

யாரும் முத்துவை வேண்டுமென்றே அலட்சியப்படுத்தவில்லை. எல்லோருமே அவனிடம் அன்பாகத்தான் இருந்தார்கள். ஆனால் அந்த வீட்டில் அவனுக்கென்று தனியாக எதுவும் ஒதுக்கப்படுவதில்லை. எல்லோருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யும் உணவில் அவனுக்கானது மட்டும் கடைசியில் எஞ்சியிருப்பதுதான்.

வியாழக்கிழமை மாலை சிவகாமியிடம் அதைப் பற்றிக் கேட்டாள்.

“அம்மா, அவர் ஏன் எப்பவுமே கடைசியாவே சாப்பிடறாரு?”

சிவகாமி சிரித்தார்.

“அவன் அப்படித்தான் கண்ணு. எல்லாரையும் சாப்பிட வெச்சுட்டுத்தான் அவன் சாப்பிடுவான். சின்ன வயசுலேர்ந்தே அப்படித்தான்.

அவர் அதைச் சொல்லும்போது பெருமையாகவே சொன்னார். ஆனால் தாரணிக்கு அந்தப் பெருமைக்குப் பின்னால் இருந்த உண்மைதான் கவலையைக் கொடுத்தது.

எல்லோரையும் கவனித்துக்கொள்பவனை யாராவது கவனிக்க வேண்டாமா?

யாரிடமும் குறை சொல்லாமல், முத்துவுக்காக ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தாள்.

அதற்கான வாய்ப்பு வெள்ளிக்கிழமை கிடைத்தது.

அன்று அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்த தாரணி, சமையலறையில் இருந்த சிவகாமியிடம்,

“அம்மா, இன்னைக்கு நான் சமையல்ல உதவி பண்ணட்டுமா?” என்று கேட்டாள்.

“நீ வேலைக்குப் போயிட்டு வந்திருக்க. களைப்பா இருப்பே. நான் பார்த்துக்கறேன்.”

“இல்லம்மா, இன்னைக்கு எனக்கு நானே சமைக்கணும்னு ஆசையா இருக்கு.”

சிவகாமி புன்னகைத்தார்.

“சரி, அப்போ வெண்டைக்காய் வதக்கல் செய்யலாம். கவிதாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.”

தாரணி தலையசைத்தாள்.

இரவு உணவு தயாரானதும், எல்லோரும் சாப்பிட அமருவதற்கு முன் சிவகாமியிடம்,

“அம்மா, இன்னைக்கு நான் பரிமாறட்டுமா?” என்றாள்.

“அட, நீ புதுப் பொண்ணு. நான் பார்த்துக்கறேன்.”

“பரவாயில்லம்மா. இன்னைக்கு நானே பரிமாறுறேன்.”

அவளுடைய ஆர்வத்தைப் பார்த்து சிவகாமியும் மறுக்கவில்லை.

தாரணி ஒவ்வொருவருக்கும் உணவைப் பரிமாறினாள். கருப்பையா, சிவகாமி, பாட்டி, கவிதா என அனைவருக்கும் வைத்துவிட்டு, சமையலறைக்குள் சென்றாள்.

யாரும் கவனிக்காதபடி ஒரு பெரிய எவர்சில்வர் தட்டில் இட்லிகள், வெண்டைக்காய் வதக்கல், சாம்பார், வேர்க்கடலைச் சட்னி என அனைத்திலிருந்தும் போதுமான அளவு எடுத்து வைத்தாள். அதன் மேல் இன்னொரு தட்டை மூடிவிட்டு அடுப்பின் பின்னால் பத்திரப்படுத்தினாள்.

அது முத்துவுக்கான உணவு.

“அண்ணி, நீங்க சாப்பிடலையா?” என்று கேட்டாள் கவிதா.

“இதோ வர்றேன்,” என்று சொல்லிவிட்டு தன் தட்டில் சிறிதளவு உணவை எடுத்துக்கொண்டு அனைவருடனும் அமர்ந்தாள்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த கருப்பையா, வெண்டைக்காய் வதக்கலைச் சுவைத்துவிட்டு,

“இன்னிக்கு வெண்டைக்காய் வதக்கல் நல்லா இருக்கு. யாரு செஞ்சது?” என்றார்.

“தாரணிதான்ப்பா,” என்று பெருமையாகச் சொன்னாள் கவிதா.

“அட, நல்லா சமைக்கிறியேம்மா!” என்றார் கருப்பையா.

தாரணி வெட்கத்துடன் சிரித்தாள்.

கவிதா இன்னொரு கரண்டி வெண்டைக்காய் கேட்டாள். சிவகாமி இன்னொரு இட்லி எடுத்துக்கொண்டார். பாட்டியும் சிரித்தபடி இன்னும் கொஞ்சம் வதக்கல் கேட்டார்.

அனைவரும் சாப்பிட்டு முடிக்கும்போது பாத்திரங்கள் கிட்டத்தட்டக் காலியாகியிருந்தன.

தாரணி அவற்றைப் பார்த்தாள். அவள் தனியாக எடுத்து வைக்கவில்லை என்றால், இன்று முத்துவுக்கு உணவு போதுமானதாகக் கூட இருந்திருக்காது.

இரவு ஒன்பதரை மணி.

வீட்டில் அனைவரும் உறங்கச் சென்றிருந்தனர். வாசலில் காலடிச் சத்தம் கேட்டதும் தாரணி சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

முத்து முகத்தில் தெரிந்த களைப்பைத் துண்டால் துடைத்துக்கொண்டே உள்ளே வந்தான்.

“நீ இன்னும் தூங்கலையா?” என்று அவளைக் கேட்டான்.

“உங்களுக்காகத்தான் காத்திருக்கேன். உட்காருங்க.”

“இல்ல, பாத்திரத்துல இருக்கறதைச் சாப்பிட்டுக்கறேன். நீ போய்த் தூங்கு.”

“பாத்திரத்துல ஒண்ணுமில்ல.”

அவன் அவளைப் பார்த்தான்.

“அதனாலதான் உங்களுக்காகத் தனியா ஒரு தட்டு எடுத்து வெச்சிருக்கேன்.”

அடுப்பின் பின்னால் வைத்திருந்த தட்டை எடுத்து அவன் முன்னால் வைத்தாள்.

மூடியைத் திறந்ததும் அதிலிருந்து சூடான ஆவி வெளியேறியது.

முத்து வியப்புடன் அந்தத் தட்டைப் பார்த்தான்.

“இது… எனக்கா?”

“வேற யாருக்கு? இந்த வீட்டுல ராத்திரி ஒன்பதரை மணிக்கு வயல்ல இருந்து வர்ற ஒரே ஆளு நீங்கதானே!”

அவன் முகத்தில் லேசான சங்கடம் தெரிந்தது. இதுவரை யாரும் அவனுக்காகத் தனியாக உணவு எடுத்து வைத்ததில்லை. எல்லோரும் சாப்பிட்ட பிறகு தனக்குக் கிடைப்பதைச் சாப்பிடுவதுதான் அவனுக்குப் பழக்கமாகியிருந்தது.

“நான் இதெல்லாம் எதிர்பார்க்கலீங்க. எனக்குப் பழக்கமில்ல,” என்றான் மெதுவாக.

அவனுக்கு அருகில் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள் தாரணி.

“தெரியும். அதனாலதான் இனிமேல் பழகிக்கோங்க.”

அவளுடைய வார்த்தைகளில் பரிதாபமோ, வற்புறுத்தலோ இல்லை. அக்கறை மட்டுமே இருந்தது.

முத்து ஒரு இட்லியை எடுத்துச் சாப்பிட்டான்.

“சட்னி நல்லா இருக்கு,” என்றான்.

“வேர்க்கடலைச் சட்னி. உங்களுக்கும் பிடிக்கும்னு நினைச்சேன்.”

“எனக்கும் பிடிக்கும்.”

சிறிது நேரம் அமைதியாகச் சாப்பிட்டவன், பிறகு புன்னகையுடன்,

“எனக்குப் பிடிக்கிற சில விஷயங்கள் இருக்குன்னு இப்பதான் தெரியுது,” என்றான்.

தாரணி சிரித்தாள்.

“அப்போ நம்ம கணக்குல இன்னும் ரெண்டு விஷயம் சேர்ந்திருக்கு. வயல்ல காலை நேரம், வேர்க்கடலைச் சட்னி.”

“நீங்க எல்லாத்தையும் கணக்குப் போட்டுக்கிட்டே இருக்கீங்களா?”

“நீங்கதான் கணக்குல கெட்டிக்காரர்னு சொல்றாங்க. உங்ககிட்ட கத்துக்கிறேன்.”

இருவரும் மெல்லச் சிரித்தார்கள்.

சாப்பிட்டுக்கொண்டே முத்து அவளிடம் பேசத் தொடங்கினான். அன்று அலுவலகத்தில் ஒரு விவசாயி பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வாழைத்தோட்டத்தைப் பற்றிப் புலம்பியதாகத் தாரணி சொன்னாள்.

அதைக் கேட்ட முத்து யோசித்துவிட்டு,

“வேப்பெண்ணெயும் காதி சோப்புக் கரைசலும் கலந்து தெளிக்கச் சொல்லுங்க. மாலை நேரத்துல தெளிக்கணும். வெயில்ல தெளிச்சா இலை கருகிடும்,” என்றான்.

தாரணி உடனே தன் குறிப்பேட்டை எடுத்துக் குறித்துக்கொண்டாள்.

தன்னுடைய அனுபவ அறிவை ஒருவர் இவ்வளவு ஆர்வமாகக் கேட்டு எழுதிக்கொள்வது அவனுக்குப் புதிதாக இருந்தது.

அவன் இரண்டு இட்லிகளைச் சாப்பிட்டு முடித்ததும், தாரணி இன்னொன்றை அவன் தட்டில் வைத்தாள்.

“போதும்,” என்றான் முத்து.

“பரவாயில்ல. சாப்பிடுங்க. நான் சாப்பிட்டுட்டேன்.”

சிறிது தயங்கியவன், அவள் அன்போடு வைத்த இட்லியையும் சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடித்ததும் கைகளைக் கழுவிவிட்டு வந்தான்.

“நன்றி,” என்றான்.

அந்த ஒரு வார்த்தையில் அவன் மனதிலிருந்த நன்றியெல்லாம் கலந்திருந்தது.

“இதுக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க? ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் வாக்கு கொடுக்கணும்.”

“என்ன?”

“இனிமேல் ராத்திரி எவ்வளவு நேரம் ஆனாலும், நீங்க சாப்பிடணும். வெறும் வயித்தோட தூங்கக் கூடாது.”

முத்து அவளைப் பார்த்துவிட்டு,

“சரிங்க,” என்றான்.

அவன் அறைக்குச் சென்ற பிறகு சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்த தாரணிக்கு, வாசலில் அமர்ந்திருந்த வள்ளியம்மாள் கண்ணில் பட்டார்.

“பாத்தேன்,” என்றார் பாட்டி மெல்லிய குரலில்.

“பாட்டி, இன்னும் தூங்கலையா?”

“கிழவிக்குத் தூக்கமா வருது? நீ அவனுக்கு இன்னிக்கு செஞ்சதை அவன் காலத்துக்கும் மறக்க மாட்டான். ஆனா ஒண்ணு… இதுக்காக வீட்டுல யாரும் உன்னைக் குறை சொல்லாதபடி பார்த்துக்கோ.”

தாரணி சிரித்தாள்.

“எல்லார்கிட்டயும் நல்ல பேரு வாங்கணும்னு நான் இதைச் செய்யல பாட்டி. அவருக்கு நல்ல துணையா இருக்கணும். அவ்வளவுதான்.”

வள்ளியம்மாள் அவள் தலையில் அன்பாகக் கை வைத்தார். அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

அறைக்குள் சென்ற தாரணி, முத்து ஏற்கெனவே உறங்கியிருப்பதைப் பார்த்தாள். அவன் முகத்தில் தெரிந்த மெல்லிய புன்னகை அவளுடைய மனதையும் நிறைத்தது.

 எல்லோருக்காகவும் வாழ்ந்துகொண்டிருந்த ஒருவனுடைய வாழ்க்கையில், அவனுக்காகவும் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை விதைத்த முதல் நாள் அது.

தொடரும்..

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top