இருள் நிழலாய் நானே 9

இருள் நிழலாய் நானே 9

தன் கண்ணை விட்டு மறைந்த மகியை, அவள் சென்ற பாதையில் தேடி நின்றான் சமர்.

“சீக்கிரம் வந்திடுவாள் சமர். அவளோட தைரியம் தான் உனக்கு தெரியுமே” என்ற சுந்தர், “எதுவா இருந்தாலும் கூப்பிடுப்பா” என்று அவனின் தோள் தட்டி எதிர் வீட்டிற்குச் சென்றார்.

“சாப்பாடு நானே செய்திடுறேன் சமர். ரெண்டு பேரும் அங்க வந்து சாப்பிடுங்க” என்று ரேவதி சொல்ல…

“இருக்கட்டும் அத்தை” என்றான் சமர்.

“உன் பொண்டாட்டி வந்து உண்மை தெரிஞ்சா என்னை மொத்தி எடுத்திடுவாள். அடி வாங்க எனக்கு தெம்பில்லை சமர். ஒழுங்கா வந்து சாப்பிடுங்க. இல்லைன்னா நான் இங்க கொண்டுவரேன்” என்றவரை மறுத்து அவர்களே தினமும் அங்கு சென்று உணவு நேரம் கழித்தனர்.

சீனு உடன் இருப்பதால் சமரின் நாட்கள் சீராகவே சென்றது.

சென்றவளிடமிருந்து முதல் இரண்டு நாட்கள் அழைப்பு, குறுந்தகவல் என வந்தது.

எல்லாம் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியிருந்தாள்.

இறுதியாக பேசியபோது,

“வேலை அதிகம் இருக்கும் போல அத்து. கால் பண்ண முடியல, என்கிட்ட இருந்து மெசேஜ் வரலன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்காதே! முடிஞ்சளவு சீக்கிரம் வர பார்க்கிறேன்” என்ற மகியின் குரலில் தெளிவென்பது இல்லை.

“எதையும் மறைக்காத லட்டு.” சமர் கண்டு கொண்டவனாகக் கேட்க, நொடியில் தன்னை சீர் செய்து பேச்சினை மாற்றி வைத்திருந்தாள்.

அதன் பின்னர் மகியிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லை.

இங்கு சமர் தான் வெகுவாக தவித்துப் போனான்.

வினைதீர்த்தானிடம் சென்று சமர் கேட்க, “தனியா போகலையே ஏசிபி சார். அவங்களுக்கு முன்ன ரெண்டு பேர் போயிருக்காங்க… அப்படி அங்க எதும் தப்பா நடந்திருந்தால், திரும்ப இவங்க ரெண்டு பேரும் போயிருப்பாங்களா?” என்று தன் பக்கம் குற்றம் திரும்பிடுமோ என பயந்து நயமாகப் பேசினார்.

அவருக்கு அங்கு சென்றிருக்கும் நான்கு உயிர்களை விட, தன் பத்திரிக்கை முக்கியமாகப் பட்டது.

“எங்க போயிருக்காங்க சொல்லுங்க?”

வினைதீர்த்தான் தயங்கினார்.

“போயிருக்கிறது என் உயிர் சார். இதுக்குமேல இந்த காக்கியை போட்டுகிட்டு என்னை கெஞ்ச சொல்றீங்களா?” என சமர் கேட்ட வலி நிறைந்த முகம் கண்டு, கிராமத்தின் பெயரை வினைதீர்த்தான் கூறினார்.

கேட்ட நொடி சமரின் சர்வமும் நடுங்கியது.

“சார் அதுவொரு மர்மமான கிராமம். பல வருஷமா அங்கு நம்ப முடியாத விஷயம் எல்லாம் நடக்குதுன்னு அந்த கிராமத்துக்கு போகவே அரசாங்கம் தடை விதிச்சிருக்கு. அங்க எப்படி நீங்க எந்தவொரு கவர்மென்ட் பெர்மிஷனும் இல்லாம நியூஸ் கலெக்ட் பண்ண ஆளுங்களை அனுப்புவீங்க?” சீனு தான் அத்தனை காட்டமாகக் கேட்டான்.

“முன்னாடி போனவங்க ரெண்டு மாசம் ஆகியும் தகவல் எதுவுமில்லை. அப்புறம் எந்த தைரியத்தில் இவங்க ரெண்டு பேரையும் அனுப்பி வச்சீங்க. பதினைந்து நாளுக்கு மேல் ஆகிப்போச்சு, ஒரு தகவலும் இல்லை. உங்க பக்கமிருந்து என்ன ஆக்ஷன்ஸ் எடுத்திருக்கீங்க?”

“சார் போயிருக்கிறது அவரோட ஒய்ஃப்…” சீனுவின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பேச்சினை திசை திருப்ப முயற்சித்தார்.

“சீனு விடு… இவர்கிட்ட கேட்டு நிக்கிறது வேஸ்ட்” என்ற சமர், “நாமே அங்கு போவோம்” என்று திரும்பி நடந்தான்.

“சமர்… ஒரு நிமிஷம்” என்ற தீர்த்தான், முதலில் வந்த இரு கடிதத்தையும் அவனிடம் கொடுத்தார்.

“இவ்ளோ ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சுமா சார் அமைதியா இருக்கீங்க?” என்ற சமர், “உங்க ரேட்டிங் விட உயிர் முக்கியமா படலையா உங்களுக்கு?” என்று முன்னிருந்த மேசையை ஓங்கிக் குத்தி உடைத்தவனாக சீனு உடன் வெளியேறினான்.

சமரிடமிருந்து கடிதத்தை வாங்கி படித்த சீனு…

“டேய் என்னடா இது? இதையெல்லாம் எப்படிடா நம்புறது?” சீனு மென் அதிர்வை உணர்ந்தான்.

‘ஏன் லட்டு?’ சமருக்கு மனதில் வேறொன்றும் தோன்றவில்லை.

லட்டு என்ற அவனின் மனதின் ஓலம் நிற்கவில்லை.

“நான் இல்லைன்னாலும் நீ தைரியமா இருக்கணும் அத்து.” எதற்காக அன்று இதை கூறினாள் என இன்று புரிந்தது அவனுக்கு. அவனது மன சூழல் குறித்து அவள் சொல்வதாக அன்று அவன் நினைத்திருக்க… அவளோ இப்படியொரு நிலை வருமென அறிந்து சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்தது.

“சீனு…” சமரின் குரல் கமறியது.

“சமர்… மகிக்கு ஒன்னும் ஆகாது. கண்டுபிடிச்சிடலாம்” என அவன் சொல்லும்போது மணியிடமிருந்து அழைப்பு வந்தது.

“சீனு சார் திரும்ப மேம்பால கொலை… கோணி கிடக்குன்னு தகவல் வந்திருக்கு” என்ற மணி, இடத்தைக் குறிப்பிட… சமரும் சீனுவும் அங்கு விரைந்தனர்.

“முந்தைய கொலைகளுக்கு இந்த கொலை வைத்து லீட் கிடைத்தால் இந்த கேஸ் நீ டீல் பண்ணு சீனு” என்றான் சமர்.

“அப்போ நீ?”

“நான் அந்த மலைகிராமம் போறேன்” என்றான்.

சீனுவிடம் அதிர்வு.

வீட்டிலேயே தனித்து இருக்க முடியாது அவனால், அவன் எப்படி அத்தனை ஆபத்தான பகுதிக்கு தனியாக செல்வான் என்கிற கேள்வி மனதில் தோன்ற அதிர்ந்து போனான்.

“சமர்…”

“என் மகி டா… அவ இல்லாம எப்படி? அவளுக்காகன்னு வரும் போது எதுவும் என்னால் முடியும் நம்பிக்கை இருக்கு” என்றான். சமரிடம் அத்தனை திடம்.

தனிமைக்கு அஞ்சுபவன். ஒரு நொடி தனித்து இருத்தலுக்கு பேரச்சம் கொள்பவன்… இப்படி சொல்வதே பெரும் மாற்றம் தான். மாற்றம் நிகழ இருக்கும் சமயம் தான் தடையாக எதுவும் சொல்லக்கூடாது என நினைத்த சீனு…

“உன்னால முடியும் மச்சான்” என்றான்.

இருவரும் உடல் கிடப்பதாகக் கூறிய மேம்பாலத்திற்கு வந்து சேர்ந்தனர்.

சமர் வந்த பின்னர் தான், அப்பகுதி காவலர்களே வந்தனர்.

“அப்போ இன்னும் மூட்டை ஓபன் பண்ணலையா?” சமர் கேட்டவாறு கீழே இறங்கினான்.

“யார் முதலில் பார்த்தது?”

அங்கு தேநீர் கடை வைத்திருக்கும் நபர் முன் வந்தார்.

“எப்போ போட்டாங்க சொல்ல முடியுமா?”

“அரை மணிக்கு முன்ன தான் போட்டிருக்கணும் சார்” என்றார் கடைக்காரர்.

“எப்படி சொல்றீங்க” என்று கேட்டுக்கொண்டே சீனுவை மூட்டையை அவிழ்க்க கை காண்பித்தான் சமர்.

“அரை மணிக்கு முன்ன குப்பை கொட்டும் போது பார்த்தேன் எதுவும் இல்லை சார். ஒரு கருப்பு ஆம்னி வந்து நின்னுச்சு. ரெண்டு பேர் டீ குடிச்சாங்க. அதுக்கு அப்புறம் தான்” என்றார்.

“சமர்…”

மூட்டையை அவிழ்த்த சீனு பதறி விலகி தரையில் பின் விழுந்தான்.

“தினேஷ்” சமர் மண்டியிட்டு அவ்விடம் அதிர உடலை அணைத்துக் கொண்டு கத்தினான்.

தினேஷின் உடல் தூக்கிப்போட்டு, தொண்டைக்குழியில் ஹக் என்ற ஒலி எழும்ப…

“சமர் உயிர் இருக்குடா” என்று உளுக்கினான் சீனு.

சடுதியில் அதிர்வை புறம் ஒதுக்கி தினேஷின் உடலை தூக்கிக்கொண்டு மருத்துவமனை விரைந்தான் சமர். உடன் சீனு.

அருகிலிருக்கும் மருத்துவமனை செல்ல உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை துவங்கியது.

தினேஷின் உடல் இருக்கும் நிலையை பரிசோதித்த மருத்துவர்…

“முடிஞ்சளவு முயற்சி செய்றோம்” என்று சொல்லிவிட, சமருக்கு உயிர் அடங்கி சீரானது. இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான்.

“எப்படியாவது டிரை பண்ணுங்க டாக்டர்” என்ற சீனு… சமரின் கையை இறுக்கிப் பிடித்தான்.

எத்தனையோ முயன்றும் தினேஷின் உடல் ஒத்துழைக்கவில்லை.

முடிந்தளவு மருத்துவர்கள் தினேஷை மீட்கப் போராடிக் கொண்டிருந்தனர்.

“மகிக்கு ஒன்னும் ஆகியிருக்காது டா!” சமர் நிலைக்குற்றி அமர்ந்திருக்க, மகியுடன் சென்ற தினேஷ் குற்றுயிராக கிடைத்திருக்க, மகியை நினைத்து கவலை கொள்கிறானோ என நினைத்து சீனு ஆறுதல் படுத்த முயன்றான்.

“ஹேய் சீனு… நான் உயிரோடு இருக்கேன். மகி நிச்சயம் நல்லாயிருப்பாள்” என்ற சமருக்கு தினேஷின் நிலை கண்டு அந்த நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. இருப்பினும் அவள் எங்கோ ஓரிடம் நலமுடன் இருக்க வேண்டுமே எனும் தவிப்பில் அவ்வாறு கூறிய சமர், “இப்போ தினேஷ்க்கு ஒன்னும் ஆகக்கூடாது… அவன் மீண்டு வரணும்” என்றான்.

அப்போது அங்கு வந்தான் ரூபேஷ்.

“ஹாய் சமர்…”

ரூபேஷ் அந்த மருத்துவமனையில் வேலை செய்பவன் கிடையாது.

“நீ எங்க இங்க?” எனக் கேட்டான் சமர்.

“ஒரு அறுவை சிகிச்சைக்காக வந்தேன்” என்ற ரூபேஷ்… “யாருக்கும் எதுவும் உடல்நிலை சரியில்லையா” எனக் கேட்டான்.

ரூபேஷின் கண்களில் சிறு அலைப்புறுதல்.

சமர் கவனிக்கத் தவறிய போதும், சீனு கவனித்தான்.

“டென்ஷனா இருக்கீங்க… எதும் பிரச்சினையா?” எனக் கேட்டான். ரூபேஷிடம்.

“நத்திங்” என்ற ரூபேஷ் “நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே” என்றான்.

“ஒரு கேஸ்” என்று முடித்துக்கொண்டான் சமர்.

“ஹோ…” ரூபேஷ் அங்கவே நிற்க,

“நீங்க கிளம்புங்க” என்றான் சீனு.

ரூபேஷ் சீனுவை முறைத்தபடி ஒன்றும் செய்ய முடியவில்லையே என மெல்ல திரும்பி நடக்க…

“ஹாய் டாக்டர் ரூபேஷ்” என்ற குரலில் நின்று திரும்பினான்.

தினேஷிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களில் ஒருவர் வெளியில் வர, ரூபேஷை கண்டு விட்டு அழைத்தார்.

“ஹலோ டாக்டர்!”

“ஒரு சிவியர் இஞ்சூரி கேஸ்… நீங்க ஒன்ஸ் பார்க்க முடியுமா?” எனக் கேட்டார்.

“அஃப்கோர்ஸ்” என்றவன் சமர் மற்றும் சீனுவை கண்டுகொள்ளாது சிகிச்சை அறைக்குள் நுழைய கதவில் கை வைத்திட…

அவனை உள்ளே செல்ல அனுமதிக்காது கதவினை காற்றாய் சுழன்று அழுத்தம் கொடுத்து தவித்து நின்றது அரூபம்.

திடீரென வீசும் காற்றில் குழம்பிய மருத்துவர்,

“எப்படி இப்படி” என கதவை திறக்க பார்க்க… கொஞ்சமும் அசைவு கொடுக்கவில்லை.

சமர், சீனு உட்பட முயற்சிக்க… பனி நிறைந்து உறைந்து சில்லிப்பைக் காட்டியது கதவு.

“ஐஸ்?” நால்வரும் குழம்பி நின்றனர்.

சில நிமிடங்களில் உள்ளிருந்து கதவினை மிக எளிதாக திறந்துகொண்டு வெளியில் வந்தார் செவிலி ஒருவர்.

ஆச்சரியமாகப் பார்த்தனர் நால்வரும்.

“உள் பக்கம் ஜாம் ஆகியிருக்கும்” என்ற மருத்துவரிடம்,

“டாக்டர் பேஷன்ட் ரெஸ்பாண்ட் பண்ண ஆரம்பிச்சாச்சு. ஹார்ட் பீட் இன்கிரீஸ் ஆகுது” என்று செவிலி சொல்லிட…

“தேங்க்ஸ் டாக்டர் ரூபேஷ். உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டியதா போச்சு” என்று அவனின் கரம் பற்றி குலுக்கி வேகமாக உள் சென்றார்.

ரூபேஷிடம் உள்ளுக்குள் அத்தனை ஆத்திரம் கனன்றது. ஆனால் ஒன்றும் செய்திட முடியாத நிலை.

“உள்ளிருக்கிறது யாரு?” தெரியாததைப் போன்று வினவினான்.

“தினேஷ்…” சீனு சொல்ல…

“மகி டீம்?” என்றான் கேள்வியாக.

“ம்ம்…” சமர் தலையாட்டிட…

“அப்போ மகி?”

“தெரியல” என்ற சமரின் கண்கள் சட்டென்று குளம் கட்டியது.

“ஹேய் சமர்… மகிக்கு ஒன்னும் ஆகியிருக்காது. பீ ஸ்ட்ராங்” என்ற ரூபேஷ் அப்படியே அவர்களுடனே அமர்ந்துவிட்டான்.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top