மறுநாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய தாரணியின் கையில் ஒரு படிவம் இருந்தது. சொட்டுநீர்ப் பாசனத்திற்கான அரசு மானிய விண்ணப்பம் அது. அன்று அலுவலகத்தில் அந்தக் கோப்புகளைக் கையாண்டபோது, அவளுக்கு முதலில் நினைவுக்கு வந்தது முத்துதான்.
இரவு உணவு முடிந்ததும் அறைக்கு வந்தவள், படிவத்தை மேசையில் விரித்தாள்.
“உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்,” என்றாள்.
முத்து அருகில் வந்து அமர்ந்தான்.
“இந்த மானியத்துக்கு விண்ணப்பிக்கப் பண்ணையோட பழைய செலவு, வருமானக் கணக்கெல்லாம் தேவைப்படும். உங்ககிட்ட ஏதாவது இருக்கா?”
“இருக்குங்க,” என்றவன் முகத்தில் லேசான பெருமை தெரிந்தது. “கணக்கு நோட்டு இருக்கு. கொஞ்சம் பழைய நோட்டுதான்.”
“கொஞ்சமா?”
“நிறைய!” என்று தலையைச் சொறிந்துகொண்டே சிரித்தான்.
அறையின் மூலையிலிருந்த பழைய மரப்பெட்டியைத் திறந்த முத்து, அதற்குள் பத்திரமாக வைத்திருந்த இரண்டு பெரிய தகர டப்பாக்களை வெளியே எடுத்து மேசையின் மீது வைத்தான்.
அவற்றைத் திறந்ததும் தாரணியின் கண்கள் விரிந்தன.
உள்ளே சிறிய பள்ளி நோட்டுகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. சிலவற்றின் அட்டைகள் கிழிந்திருந்தன. சில நூலால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு நோட்டின் முகப்பிலும் ஒவ்வொரு வருடம் குறிப்பிடப்பட்டிருந்தது.
மொத்தம் பதின்மூன்று வருடக் கணக்குகள்!
“இதெல்லாம் நீங்களே எழுதினதா?”
“ஆமாங்க. சின்ன வயசுல இருந்தே கணக்கு எழுதிப் பழகிட்டேன். எழுதினா மனசுக்கு ஒரு நிம்மதி. சில நோட்டை எலி கடிச்சிருக்கு. மத்ததெல்லாம் நல்லாத்தான் இருக்கு.”
தாரணி முதல் நோட்டை எடுத்தாள். முகப்பில் பதினேழு வயதில் முத்து எழுதிய கோணலான கையெழுத்து.
முதல் பக்கத்தைத் திறந்தவளின் பார்வை அங்கிருந்த சில வரிகளில் நின்றது.
தந்தை – மருத்துவமனை – ₹3,400.
அம்மா – நகை அடகு – ₹18,000.
அதற்குக் கீழே…
பள்ளி – நிறுத்தம்.
அந்த இரண்டு சொற்களையும் பார்த்தவள் சில நொடிகள் அப்படியே இருந்தாள். எந்தத் தொகையும் இல்லை. ஆனால் அந்த வரிக்குப் பின்னால் அவன் இழந்துபோன வாழ்க்கை முழுவதும் இருப்பதுபோல் தோன்றியது.
“நீங்க படிங்க. நான் மாடு பார்த்துட்டு வரேன்,” என்று முத்து எழுந்தான்.
“உட்காருங்க. எனக்குப் புரியாதது இருந்தா நீங்கதானே சொல்லணும்?”
அவளுடைய குரலில் இருந்த அன்பான உரிமை அவனை மீண்டும் அமர வைத்தது.
தாரணி அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டினாள். வருமானம், செலவு, கடன், சேமிப்பு என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்த கணக்குகள் மிகவும் நேர்த்தியாக இருந்தன. பால் கொடுத்த தேதி, லிட்டர், விலை என ஒவ்வொன்றும் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உரம் வாங்கிய கடையின் பெயரைக்கூட அவன் விட்டுவைக்கவில்லை.
சில பக்கங்களின் ஓரத்தில் சிறிய மாடுகள், கிணறு, தென்னை மரம் என்று கோணலான ஓவியங்கள் இருந்தன.
“இதெல்லாம் என்ன?” என்று சிரித்தாள் தாரணி.
முத்து சற்றே வெட்கப்பட்டான்.
“அது… சும்மா பேனா கையில இருக்கும்போது கிறுக்கினது.”
அந்தக் கணக்குகளுக்கு நடுவே அவனுக்குள் ஒளிந்திருந்த இன்னொரு முத்துவையும் தாரணி கண்டுகொண்டாள்.
ஒரு பக்கத்தில் இருந்த வட்டிக் கணக்கைப் பார்த்தவள் வியந்துபோனாள்.
“இந்தக் கணக்கெல்லாம் எப்படிப் போட்டீங்க? கூட்டு வட்டி மாதிரி இருக்கே!”
“பழனிச்சாமி செட்டியார் வட்டி கேட்கும்போது சரியா இருக்கான்னு பார்க்கணும்ல. அதுக்காக நானே ஒரு வழி கண்டுபிடிச்சேன். ஒவ்வொரு மாசமும் கட்டின தொகையையும், மீதியையும் எழுதி வைப்பேன். அவரு சொல்றதும் என் கணக்கும் ஒத்துப்போகுதான்னு பார்ப்பேன்.”
தாரணி அவனைப் பார்த்தாள்.
பள்ளிப்படிப்பு பாதியில் நின்றுவிட்டது என்பதற்காக அவனுடைய அறிவும் அங்கேயே நின்றுவிடவில்லை. வாழ்க்கை அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தது. அவனும் தனக்கான வழியில் அதைக் கற்றுக் கொண்டிருந்தான்.
அடுத்தடுத்த பக்கங்களில் அவள் பார்த்த பெயர்கள் அவளுடைய மனதை கனக்கச் செய்தன.
தம்பி – பத்தாம் வகுப்புக் கட்டணம்.
தங்கை – பள்ளிச் சீருடை.
தம்பி – பிளஸ் டூ சிறப்புப் பயிற்சி.
தம்பி – பொறியியல் கலந்தாய்வு – ₹62,000.
அதற்கருகில் சிறிய எழுத்தில்…
என் பங்கு – தோப்பு.
“தோப்புன்னா என்னங்க?” என்று கேட்டாள்.
முத்துவின் விரல்கள் மெத்தையின் விளிம்பை இறுகப் பற்றின.
“அது… தாத்தா காலத்துக் கணக்கு. பழைய விஷயம்.”
அவன் முகத்தில் தெரிந்த தயக்கத்தைப் புரிந்துகொண்ட தாரணி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
தொடர்ந்து புரட்டியவளின் கண்களில் மேலும் பல வரிகள் பட்டன.
கவிதா – கல்லூரிக் கட்டணம்.
அப்பா – மருத்துவமனைச் செலவு.
வீடு – கூரை ஓடு மாற்றம்.
தம்பி – மடிக்கணினி.
மாமா – கைமாற்று.
மாமா – கைமாற்று.
மாமா – கைமாற்று.
மாமாவின் பெயர் ஒவ்வொரு வருடமும் வந்துகொண்டே இருந்தது. ஆனால் திரும்பக் கொடுத்த தொகைக்கான இடம் மட்டும் வெறுமையாகவே இருந்தது.
தாரணி கைப்பேசியின் கணிப்பானைத் திறந்து சில எண்களைக் கூட்டினாள். மீண்டும் ஒருமுறை சரிபார்த்தாள்.
சுமார் இருபத்தாறு லட்சம்!
அவளால் அந்த எண்ணை நம்ப முடியவில்லை.
“இத்தனை வருஷமா குடும்பத்துக்காக இவ்வளவு செலவு செய்திருக்கீங்களா?” என்று வியப்புடன் கேட்டாள் தாரணி.
“எல்லாமே ஒரே நேரத்துல செலவானதில்லையே… கொஞ்சம் கொஞ்சமாத்தான் சேர்ந்திருக்கும்,” என்றான் முத்து, அதில் பெரிதாக எதுவுமில்லை என்பதுபோல்.
“இதுல உங்களுக்கான செலவு எங்கே?”
அந்தக் கேள்விக்கு அவனிடம் உடனடியாகப் பதில் இல்லை.
தாரணி ஒவ்வொரு வருடத்தின் கடைசிப் பக்கத்தையும் புரட்டினாள். அங்கே ஒரே வரி மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருந்தது.
செருப்பு – ₹150 – அடுத்த மாசம்.
ஒரு வருடம் அல்ல… ஏழு வருடங்களாக!
ஒருமுறைகூட அந்தச் செலவு நிறைவேறியதாக எழுதப்படவில்லை.
தாரணியின் கண்கள் கலங்கின.
“இன்னும் அதே செருப்பைத்தான் போட்டிருக்கீங்களா?”
முத்து கதவின் அருகே கிடந்த தைத்துச் சீரமைக்கப்பட்ட தன் செருப்பைப் பார்த்துவிட்டு லேசாகச் சிரித்தான்.
“வாங்கலாம்னு நினைக்கும்போதெல்லாம் ஏதாவது செலவு வந்துடும். அதான் அடுத்த மாசம்னு போட்டிருப்பேன்.”
அவன் சொன்ன விதம் சாதாரணமாக இருந்தது. ஆனால் தாரணியால் அதை அப்படிக் கடந்து செல்ல முடியவில்லை.
கடைசியாக இந்த வருடத்துக் கணக்கு நோட்டை எடுத்தாள் தாரணி. அதன் கடைசிப் பக்கத்தைப் புரட்டியவளின் பார்வை, சில வாரங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்த அந்தச் சிறிய வரியில் வந்து நின்றது.
மல்லிகை – ₹20.
அதற்குக் கீழே, இன்னும் சிறிய எழுத்துகளில்…
எனக்காக.
அந்த இரண்டு வார்த்தைகளையும் தாரணி நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். பதின்மூன்று வருடக் கணக்குகளில், முதன்முறையாகத் தனக்காக ஒரு செலவை அவன் எழுதி வைத்திருந்தான். அதுவும் வெறும் இருபது ரூபாய்க்கு வாங்கிய மல்லிகைப்பூவை!
“இது…” அவளுடைய குரல் மெல்லத் தடுமாறியது.
“அன்னிக்கு உனக்காக வாங்கின பூதான். வெறும் இருபது ரூபாய்தானே…” என்றான் முத்து, அதை அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல்.
தாரணி மெதுவாக அவன் கையைப் பற்றினாள்.
“அந்தப் பூ எனக்கு எவ்வளவு சந்தோஷம் கொடுத்துச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டவள், அவன் விரல்களை மென்மையாகப் பற்றிக்கொண்டாள்.
“ஆனா, இத்தனை வருஷக் கணக்குல முதன்முறையா உங்களுக்காக ஒரு செலவை எழுதியிருக்கீங்க. அந்த இருபது ரூபாயை விட, அதுக்குக் கீழே நீங்க எழுதியிருக்கிற அந்த ரெண்டு வார்த்தைகள்தான் எனக்கு ரொம்பப் பெருசு…”
அவள் பார்வை மீண்டும் அந்தப் பக்கத்தில் பதிந்தது.
‘எனக்காக’ என்று எழுதியிருந்த அந்த வார்த்தைகளுக்குள், இத்தனை வருடங்களாகத் தன்னை மறந்து வாழ்ந்த ஒரு மனிதனின் ஆசைகளும், நிறைவேறாமல் போன சின்னச் சின்ன விருப்பங்களும் புதைந்திருப்பதை அவளால் உணர முடிந்தது.
சிறிது நேரம் இருவருக்குள்ளும் அமைதி நிலவியது.
“மானிய விண்ணப்பத்துக்காக இந்தக் கணக்கு நோட்டுகளைப் பயன்படுத்திக்கலாமா?” என்று அவள் கேட்டாள்.
“இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி கேட்கிறீங்க? எடுத்துக்கோங்க. நம்ம வீட்டுக் கணக்குதானே!” என்றான் முத்து இயல்பாக.
அவனைப் பார்த்துப் புன்னகைத்த தாரணி, “நம்ம வீடு…” என்று மெதுவாகச் சொன்னாள்.
அந்தச் சொற்களின் அர்த்தம் புரிந்ததுபோல், முத்துவின் இதழ்களிலும் மெல்லிய புன்னகை அரும்பியது.
அன்றிரவு முத்து தூங்கிய பிறகும் தாரணி அந்த நோட்டுகளைப் புரட்டிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு எண்ணுக்குப் பின்னாலும் அவன் விட்டுக்கொடுத்த ஆசைகளும், ஒத்திவைத்த தேவைகளும் அவளுக்குத் தெரிந்தன.
மறுநாள் காலை முத்து வயலுக்குக் கிளம்பத் தயாரானபோது, தாரணி அவனருகே வந்து நின்றாள்.
“ஞாயிற்றுக்கிழமை என்ன பிளான்?” என்று கேட்டாள்.
“பெருசா ஒண்ணுமில்லையே. வழக்கம்போல வயல் வேலைதான்.”
“அப்போ மாலை என்கூடக் கடைத்தெருவுக்கு வரணும்.”
“எதுக்கு?”
“உங்களுக்கு ஒரு நல்ல செருப்பு வாங்கணும். எத்தனை நாளா இதைத் தள்ளிப் போட்டுட்டே இருக்கீங்க? இந்த முறை எந்தக் காரணமும் சொல்லக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை நாம ரெண்டு பேரும் போறோம். சரியா?”
முத்து சிரித்தபடியே, “பார்க்கலாம்…” என்றான்.
“அந்தப் பதில் வேண்டாம். கண்டிப்பா போகணும்!” என்று செல்லமாக அதட்டினாள் தாரணி.
அவளுடைய பிடிவாதத்தைப் பார்த்து முத்துவின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. பதின்மூன்று வருடங்களாகத் தள்ளிப்போட்டிருந்த ஒரு சின்ன ஆசை, இந்த முறை அவளுடைய அன்பான பிடிவாதத்தால் நிறைவேறப் போகிறது.
தொடரும்…
