அத்தியாயம் 15

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கே முத்து எழுந்துவிட்டான். வழக்கம்போல வயலுக்குக் கிளம்பத் தயாரானவனுக்கு, பின்னாலிருந்து வந்த தாரணியின் குரல் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“நானும் வர்றேன்.”

திரும்பிப் பார்த்தான். தலையில் துண்டைக் கட்டியபடி வேலைக்குத் தயாராக நின்றிருந்தாள் அவள்.

“எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்தீங்க? இன்னும் நேரம் இருக்கு. நீங்க தூங்குங்க.”

““இன்னைக்கு உங்க கூட நானும் வயலுக்கு வர்றேன். சந்தையில நீங்க எப்படி வியாபாரம் பண்றீங்கன்னு பார்க்கணும். என்னையும் கூட்டிட்டுப் போறீங்களா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் தாரணி.

அவளுடைய கேள்வியில் இருந்த உரிமையை ரசித்தபடி முத்து சிரித்தான்.

“சரி, வாங்க.”

இருவரும் வயலுக்குச் சென்று கத்திரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் எனக் காய்கறிகளைப் பறிக்கத் தொடங்கினர். தாரணி ஆர்வமாகக் கத்திரிக்காய் பறிக்க முயன்றபோது, செடியிலிருந்த முள் அவளுடைய விரலைக் குத்தியது.

“ஆ…!”

அடுத்த நொடியே அவளருகில் வந்த முத்து, அவளுடைய கையைப் பிடித்துப் பார்த்தான்.

“பாத்துப் பறிக்கக் கூடாதா? இதுல முள்ளு இருக்கும்.”

“வயலுக்கு வந்த முதல் நாளே முள்ளுகிட்ட குத்து வாங்கிட்டேனே!” என்று தன் விரலைப் பார்த்துச் சிரித்தாள் தாரணி. அவளுடைய பேச்சைக் கேட்டு முத்துவும் சிரித்தான்.

காய்கறிகளைப் பறித்து கூடைகளில் நிரப்பியவர்கள், அவற்றைச் சாக்குப் பைகளில் அடுக்கிக்கொண்டு பேருந்தில் ஏறினர்.

டவுன் சந்தை ஏற்கனவே பரபரப்பாக இருந்தது. வியாபாரிகளின் கூச்சலும், வாடிக்கையாளர்களின் பேரமும், வாகனங்களின் இரைச்சலும் என அந்த இடமே தனி உலகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

சந்தையின் ஓரத்தில் இருந்த பழைய ஆலமரத்தடியில் தனக்குப் பழக்கமான இடத்தைத் தேடிப்பிடித்தான் முத்து. சாக்கைப் பையை விரித்து, காய்கறிகளை அழகாக அடுக்கி வைத்தான்.

வீட்டில் அதிகம் பேசாத முத்துவா இவன் என்று வியக்கும் அளவுக்கு அவனுடைய குரல் சந்தையில் ஓங்கி ஒலித்தது.

“வாங்கம்மா… இன்னிக்குக் காலையில பறிச்ச புதுக் காய்!”

வந்தவர்களைப் பெயர் சொல்லி அழைத்தான். வாடிக்கையாளர்களின் விருப்பம், அவர்களுடைய பேரம் பேசும் விதம் என எல்லாவற்றையும் அவன் நன்றாக அறிந்திருந்தான்.

ஒரு பாட்டி கத்திரிக்காயைத் தொட்டுப் பார்த்துவிட்டு விலை கேட்டார்.

“கிலோ முப்பது ரூபாய் மா.”

“இருபத்தைந்துக்கு கொடு.”

“இன்னைக்குத்தான் பறிச்சது மா. இருபத்தெட்டு கொடுங்க.”

“சரி, இருபத்தேழு.”

“உங்களுக்காக இருபத்தெட்டு!”

அந்தப் பாட்டியும் சிரித்தபடி வாங்கிச் சென்றார்.

தாரணி அவனையே வியப்புடன் பார்த்தாள். அவனுடைய உழைப்பையும், கணக்கையும் இதுவரை பார்த்திருந்தவளுக்கு, மனிதர்களை அணுகும் அவனுடைய திறமை புதிதாக இருந்தது.

அவளும் வாடிக்கையாளர்களிடம் பேசத் தொடங்கினாள். ஒரு பெண்மணி முருங்கைக்காய் விலை கேட்டபோது,

“ஐம்பது ரூபாய் கட்டு,” என்றாள் தாரணி.

“ஐம்பதா? ரொம்ப அதிகமா இருக்கு!”

“இது நாட்டு முருங்கைக்காய். நல்ல தரமானது. சத்தும் அதிகம்.”

அந்தப் பெண்மணி அவளை வித்தியாசமாகப் பார்த்தார்.

“அம்மா, காய் விக்கிறீங்களா? இல்ல பாடம் நடத்துறீங்களா?”

அருகிலிருந்த முத்து சிரிப்பை அடக்கிக்கொண்டு,

“இவங்க வேளாண்மை அலுவலர் மா!” என்றான்.

அதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி இரண்டு கட்டு முருங்கைக்காய்களை வாங்கிச் சென்றார்.

தாரணி பெருமையுடன் முத்துவைப் பார்த்தாள்.

“பார்த்தீங்களா? நானும் நல்லா வியாபாரம் பண்றேன்!”

“நல்லாத்தான் பண்றீங்க. ஆனா எல்லார்கிட்டயும் பாடம் எடுத்தா சந்தை முடிஞ்சாலும் காய் விக்காது,” என்றான் அவன் சிரித்தபடி.

அவளும் சிரித்தாள்.

மதியத்திற்குள் காய்கறிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. முத்து கிடைத்த பணத்தை எண்ணினான். மூவாயிரத்து இருநூறு ரூபாய்.

பிறகு சட்டைப் பையிலிருந்த சிறிய பிளாஸ்டிக் உறையை எடுத்தான்.

“அது என்ன?” என்று கேட்டாள் தாரணி.

“சொட்டுநீர்ப் பாசனத்துக்காகச் சேர்த்து வச்ச பணம். கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேன். இதுவரைக்கும் எட்டாயிரத்து முந்நூறு இருக்கு. இன்னிக்குக் கிடைச்ச பணத்தையும் சேர்த்தா பதினோராயிரத்து ஐநூறு.”

அவன் முகத்தில் தெரிந்த அந்தச் சிறிய பெருமையை தாரணி கவனித்தாள்.

குடும்பச் செலவுகளுக்காக எத்தனையோ முறை தன் ஆசைகளை ஒதுக்கியவன், மீண்டும் தன்னுடைய கனவை நோக்கிப் பணம் சேர்க்கத் தொடங்கியிருந்தான்.

“நல்லா சேர்த்திருக்கீங்க,” என்றாள் அவள் மனதார.

அதன்பிறகு இருவரும் செருப்புக் கடைக்குச் சென்றனர்.

கடைக்குள் நுழைந்ததும் முத்துவின் பார்வை விலைப்பட்டியல்களிலேயே இருந்தது. நூற்றைம்பது, இருநூறு, முந்நூறு என விலைகளைப் பார்த்தவன் தயங்கினான்.

தாரணி பழுப்பு நிறத்தில் அழகான செருப்பு ஒன்றை எடுத்தாள்.

“இதைப் போட்டுப் பாருங்க.”

“வேண்டாம்… விலை அதிகமா இருக்கும்.”

“முதல்ல போட்டுப் பாருங்க. அப்புறம் பேசலாம்.”

வேறு வழியின்றி பழைய செருப்பைக் கழற்றினான் முத்து. தைத்துத் தைத்துத் தேய்ந்திருந்த அந்தச் செருப்பைப் பார்த்த தாரணியின் மனம் கனத்தது.

புதிய செருப்பைக் காலில் அணிந்தவன் மெதுவாக இரண்டு அடி நடந்தான். அவனுடைய முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்து அவள் புன்னகைத்தாள்.

“எப்படி இருக்கு?”

““காலுக்கு ரொம்ப இதமா இருக்கு… போட்டதும் வித்தியாசமா தெரியுது,” என்றான் முத்து, புதுச் செருப்பை ரசித்தபடி.

அவன் குரலில் இருந்த குழந்தைத்தனமான வியப்பு அவளுடைய மனதைத் தொட்டது.

கடைக்காரர் இருநூறு ரூபாய்க்குக் கொடுக்க முன்வந்ததும், முத்து பணத்தைக் கொடுத்து செருப்பை வாங்கினான். பதின்மூன்று வருடங்களாகத் தள்ளிப்போட்டிருந்த ஒரு சின்ன ஆசை, அன்று நிறைவேறியிருந்தது.

கடையை விட்டு வெளியே வந்ததும் அவனுடைய கைப்பேசி ஒலித்தது.

கவிதா!

“சொல்லுமா?”

“அண்ணா, பயிற்சி மையத்துல இன்னிக்கு மாலைக்குள்ள இரண்டாவது தவணை எட்டாயிரம் ரூபாய் கட்டணும்னு சொல்றாங்க. இல்லன்னா என் இடத்தை வேற யாருக்காவது கொடுத்துடுவாங்களாம்.”

முத்துவின் முகத்திலிருந்த புன்னகை மெல்ல மறைந்தது.

“எட்டாயிரமா? இன்னைக்கேவா?”

“ஆமாண்ணா. இன்னும் மூணு மாசத்துல தேர்வு இருக்கு. இந்த வாய்ப்பை விட்டுட்டா கஷ்டம்.”

“சரி மா… நான் பார்த்துக்கறேன்.”

அழைப்பைத் துண்டித்தவன் கையிலிருந்த பணத்தைப் பார்த்தான். சொட்டுநீர்ப் பாசனத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பதினோராயிரத்து ஐநூறு ரூபாயில், இப்போது எட்டாயிரம் ரூபாய் தங்கையின் பயிற்சிக்காகச் செல்லவிருந்தது.

“முத்து சில நொடிகள் அமைதியாக நின்றான். பிறகு தன் கையிலிருந்த பணத்தைப் பார்த்தான்.

“நான் நேரா இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் கட்டிடுறேன். பணம் கட்டினதுக்கான ரசீதையும் வாங்கிக்கலாம்,” என்றான்.

“சரி, போயிட்டு வரலாம்,” என்று தாரணி அவனுடன் கிளம்பினாள்.

இருவரும் கவிதா படிக்கும் பயிற்சி மையத்திற்குச் சென்றனர். அங்கே இரண்டாவது தவணைக்கான கட்டணத்தைச் செலுத்திய முத்து, ரசீதை வாங்கிப் பத்திரமாக மடித்துப் பையில் வைத்துக்கொண்டான்.

“அண்ணா!” என்றபடி அப்போது கவிதா அவர்களை நோக்கி வந்தாள்.

“பணம் கட்டிட்டியா?” என்று அவசரமாகக் கேட்டாள்.

“கட்டிட்டேன் மா. இனிமே படிப்புல மட்டும் கவனம் வை. நல்லா படிச்சு வேலைக்குப் போகணும்,” என்றான் முத்து.

“ரொம்ப நன்றி அண்ணா!” என்று அவனுடைய கையைப் பிடித்தாள் கவிதா.

அவளுடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த முத்துவின் முகத்திலும் நிம்மதியான புன்னகை மலர்ந்தது. தன்னுடைய கனவு மீண்டும் கொஞ்சம் தள்ளிப்போனதை அவன் அப்போது நினைக்கவில்லை.

ஆனால், அவன் அருகில் நின்ற தாரணிக்கு அந்தப் புன்னகைக்குப் பின்னால் இருந்த தியாகம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

திரும்பிச் செல்லும் வழியில் ஒரு வேளாண் பொருள் கடையின் வாசலில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சொட்டுநீர்க் குழாய்களைப் பார்த்ததும் முத்துவின் நடை ஒரு கணம் தளர்ந்தது. ஆனால் அடுத்த நொடியே எதுவும் பார்க்காதவன்போல் நடக்கத் தொடங்கினான்.

அவனைச் சற்று முன்னால் போகச் சொன்ன தாரணி, அந்தக் கடைக்குள் நுழைந்து ஒரு ஏக்கருக்கான சொட்டுநீர்ப் பாசனக் கருவியின் விலையைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். மானியத்தில் பாதிக்கும் குறைவாகச் செலவாகும் என்பதையும் அறிந்துகொண்டு விலைப்பட்டியலை வாங்கி வைத்துக்கொண்டாள்.

வெளியே வந்தபோது முத்து அவளுக்காகக் காத்திருந்தான்.

““சரி, கிளம்பலாமா?” என்று முத்து கேட்டான்.

“ம்… போகலாம்,” என்றபடி அவனுடன் நடந்தாள் தாரணி.

பேருந்தில் ஏறி இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டனர். முத்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்தான். சிறிது நேரம் கழித்து அவனே பேச்சைத் தொடங்கினான்.

“இன்னிக்கு நாள் நல்லா போச்சு இல்ல?”

“ஆமா… உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் போல?”

“பின்னே! இத்தனை நாளா வாங்கணும்னு நினைச்சிருந்த செருப்பையும் வாங்கியாச்சு. கவிதாவுக்கும் பணம் கட்டியாச்சு. அவளும் சந்தோஷமா இருந்தா. எனக்கு அதுவே போதும்,” என்றான் முகம் நிறைந்த புன்னகையுடன்.

தாரணி அவன் தோளில் மெதுவாகச் சாய்ந்து கொண்டாள்.

அவனுடைய சந்தோஷத்தில் அவளுக்கும் பங்கு இருந்தது. ஆனால், அவன் ஒவ்வொரு முறையும் தனக்கான கனவைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, மற்றவர்களின் கனவுகளுக்கே முதலிடம் கொடுப்பதை நினைத்தபோது அவளுக்குள் ஒரு தீர்மானம் பிறந்தது.

இந்த முறை, அவன் கனவை பாதியில் நிற்கவிடக் கூடாது.

தொடரும்.. 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top