முகவரி 7

மதியச் சாப்பாட்டுக்குக்கூடச் சுதாகர் எழுந்திருக்கவில்லை. கடலுக்குப் போய் வந்த அசதியும் கலைப்பும் அவரைத் தூக்கத்தில் ஆழ்த்தியிருக்க, ஒரு வழியாக அவர் கண் விழித்து எழுந்தபோது மாலை மணி நான்காகியிருந்தது.

எழுந்து சென்று கை, கால்களைக் கழுவிவிட்டு வந்தவர், மனைவி பரிமாறிய உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, பின்னர், “கலை… கமலி… கிளம்புங்க, நகைக்கடைக்குப்போயிட்டு வந்துடலாம்,” என்றார்.

மூவரும் கிளம்பி, டவுனில் இருந்த கடைக்குச் சென்றனர். அங்கே கமலி ஆசையாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்த அழகான தோடையும், சுதாகர் தன் மகளுக்காகப் பார்த்து எடுத்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியையும் வாங்கிக்கொண்டனர்.

நகை எடுத்து முடித்து வெளியே வந்தபோது இரவு நேரமாகிவிட்டது. சமையல் வேலையை மிச்சப்படுத்தலாம் என்று நினைத்த சுதாகர், நால்வருக்கும் சுடச்சுடப் பரோட்டாவும் சால்னாவும் பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். 

பேசிக்கொண்டே உணவை முடித்துவிட்டு, வழக்கம் போலத் தன் இரவு நேர வேலைகளையும் கலை கவனிக்கத் தொடங்கினார்.

ஆனால், அதன் பின்னர் வந்த நாட்களோ கமலிக்குத்தான் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக நகர்ந்தது!

புதிய கல்லூரி வாழ்க்கை, திருச்சி பயணம், புதிய நண்பர்கள் என அவள் மனதுக்குள் ஒரே எதிர்பார்ப்பும் படபடப்பும் அலைமோதின. காலண்டரைப் பார்த்து ஒவ்வொரு நாளாக விரல் விட்டு எண்ணத் தொடங்கினாள்.

“இன்னும் 14 நாள்… 13 நாள்… 12 நாள்… 11 நாள்…”

நாட்கள் வேகமாக ஓட, இதோ… அவள் கல்லூரிக்குக் கிளம்ப இன்னும் இரண்டே இரண்டு நாட்களே இருந்தன!

முதல் ஏற்றுமதி ஆர்டர் கைக்கு வந்ததும், “குடும்பத்தின் வழக்கப்படி அவர்களின் குலதெய்வமான தில்லைகாளியம்மன் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து அர்ச்சனை செய்தனர்”

கோவில் அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை ஆதவன்-அருண் நெற்றியில் பூசி, “எல்லாமே நல்லபடியா நடக்கும் கண்ணுகளா!” என்று பரமுவும் சீதாவும் மனதார வாழ்த்தினர்.

சாமி கும்பிட்டு வந்த கையோடு, முதல் ஆர்டருக்கான 500 கிலோ மீன்களைச் சேகரித்து, பக்குவமாகப் பேக் செய்து அனுப்பும் வேலைகள் துரிதமாக நடக்கத் தொடங்கின.

ஆனால், ஏற்றுமதிக்குத் தேவையான உயர்தர வஞ்சிரம் மற்றும் பாறை மீன்கள் எதிர்பார்த்த அளவை விட இன்னும் கொஞ்சம் குறைவாக இருந்தது.

“ஆது, முதல் ஆர்டரை சொன்ன நேரத்துல கரெக்ட்டா அனுப்பணும்டா. இன்னும் கொஞ்சம் மீனு தேவைப்படுதே… என்ன பண்ணலாம்?” என்று அருண் யோசனையோடு கேட்க…

பரமு சற்று யோசித்துவிட்டு, “அதுக்கென்னப்பா… நம்ம பக்கத்து ஊரான பூம்பாறையில எனக்குத் தெரிஞ்ச நண்பர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட கேட்டா ஒரே நாள்ல நல்ல தரமான மீன்களை ரெடி பண்ணிக் கொடுத்துடுவாங்க!” என்றார்.

அதைக்கேட்டு ஆதவனும், “அப்படியா அப்பா? நமக்கு நம்பிக்கையான ஆட்களா இருந்தா ரொம்ப நல்லது. உங்களுக்கு அவங்க நல்லா தெரிந்தவங்க தானே?” என்று யோசனையோடு கேட்டான்.

“ஆமா கண்ணு… சுதாகரும் வேலுவும் சின்ன வயதில் இருந்து எனக்கு நல்ல பழக்கம். அவங்க பிடிச்சுட்டு வர்ற மீனு எல்லாமே தங்கமான தரம்!” என்று பரமு உறுதியாகச் சொன்னவர், அருணை அழைத்துக்கொண்டு பூம்பாறைக்குக் புறப்பட்டுச் சென்றனர். 

மாமா…எந்த தெரு என்கவும், கடற்கரை பக்கம் போ கண்ணு என்றார்.

“ஹம்” என்றவாறு அருணும் பைக்கை அந்த பக்கம் திருப்பினான். அங்கே கரையில் நின்று வலைகளைச் சரிசெய்து கொண்டிருந்த சுதாகரையும் வேலுவையும் பார்த்ததும் பரமுவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

“என்ன சுதா, நல்லா இருக்கியா? வேலு… சௌக்கியமா?” என்று பரமு நலம் விசாரிக்க…

“அட, வா பரமு! என்ன இந்தப்பக்கம்? திடீர்னு பூம்பாறை பக்கம் காத்து அடிக்குது?, ஆனந்த் அண்ணா நல்லாருக்கா?” என்று சுதாகரும் வேலவும் நண்பனை வரவேற்றனர்.

சற்று நேரப் பேச்சுக்குப் பிறகு,  “நம்ப தம்பி பெங்களூர்ல படிச்சுட்டு வந்து இப்போ சொந்தமா மீன் ஏற்றுமதி தொழில் தொடங்கியிருக்கான்டா. சிங்கப்பூருக்கு முதல் ஆர்டர் அனுப்பணும். அதுக்குத் தான் தரமான மீன்கள் கொஞ்சம் தேவைப்படுது,” என்றார் பரமு.

அதைக் கேட்ட சுதாகர்-வேலுவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்!

“அடடே! ரொம்ப சந்தோஷம்… நம்ம வீட்டுப் பிள்ளை சொந்தமா பெரிய தொழில் தொடங்குதுன்னு சொல்ற இதுக்கு போயி யோசிச்சுக்கிட்டு! நாம எப்படி இருந்தாலும் வியாபாரிககிட்டதானே மீனைக் கொடுக்கப்போறோம்? இனிமே அத்தனை மீனையும் உங்ககிட்டயே கொடுத்துடுறோம்டா!” என்று சுதாகரும் வேலவும் ஒருமனதாகச் சொன்னார்கள்.

“ரொம்ப நன்றிங்கடா மாப்பிள்ளை!” என்று நெகிழ்ந்துபோன பரமு, கையோடு கொண்டுவந்திருந்த அட்வான்ஸ் பணத்தை எடுத்து நண்பர்கள் முன்பு நீட்டினார்.

சுதாகர் சிரித்துக்கொண்டே அதைத் தடுத்து, “ஏன் பரமு நீ வேற… நமக்குள்ள என்ன அட்வான்ஸ் பணமெல்லாம்? பிள்ளை தொழிலைத் தொடங்கட்டும், அப்புறமா பார்த்துக்கலாம்!” என்று அன்போடு மறுத்துவிட்டார்.

அத்தோடு, அன்று அதிகாலையில் அவர்கள் பிடித்துக் கொண்டு வந்திருந்த புதிய மீன்களையும் கையோடு பக்குவப்படுத்தி பரமுவின் வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பரமுவும் அருணும் நிறைவான மனதோடு பூம்பாறையிலிருந்து வானகிரிக்குத் திரும்பினர்.

அந்த இரண்டு நாட்களும் இறக்கை கட்டிப் பறந்துவிட, இதோ கல்லூரிக்குக் கிளம்பும் நாளும் வந்துவிட்டது!

முதல் நாளே கமலி தன் துணிமணிகள், புதிய லேப்டாப் பேக் என எல்லாவற்றையும் பேக் பண்ணி எடுத்து வைத்திருந்ததால், காலையிலேயே சுதாகர், கலை, கமலி மூவரும் லக்கேஜ்களோடு பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தனர். சரியாக அவர்கள் வந்த நேரத்தில் திருச்சி செல்லும் பஸ்சும் வர, மூவரும் அதில் ஏறிப் புறப்பட்டனர்.

அடுத்த சில மணி நேரத்தில் திருச்சிக்கு வந்தவர்கள், நேராகக் கல்லூரி ஹாஸ்டலுக்குச் சென்றனர். கமலிக்காக ஒதுக்கப்பட்ட அறை எதுவென்று தேடிப் பிடித்து, லக்கேஜ்களை உள்ளே கொண்டு போய் வைத்தனர்.

அந்த அறையில் மொத்தம் ஐந்து மாணவிகள் தங்கும் வகையில் கட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன. கமலியைப் போலவே மற்ற மாணவிகளும் தங்கள் பெற்றோருடன் வந்து அறையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

சுதாகரும் கலையும் அறையின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் பார்த்துவிட்டு, “பத்திரமா இரு ஆத்தா… கூடத் தங்குற பொண்ணுங்களோட அனுசரிச்சுப் போ,” என்று அறிவுரை கூறினர்.

பின்னர், பெற்றோர் வெளியே காத்திருக்க, ஹாஸ்டல் நடைமுறைகளை முடித்துவிட்டு கமலி மெயின் கேட் அருகே நின்றிருந்த பெற்றோரிடம் வந்தாள்.

சுதாகர் தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து மகளின் கையில் வைத்தவர் “என்ன வேணுமோ வாங்கிச் சாப்பிடு ஆத்தா… அப்பாவுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க வர்றேன். மாசத்துல இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தான் பேரண்ட்ஸ் விசிட்டிங் டே-னு சொல்லி இருக்காங்க. நானும் அம்மாவும் கண்டிப்பா அப்ப வர்றோம். படிப்புல கவனமா இரு, உடம்பைப் பத்திரமா பார்த்துக்க,” என்று சொல்லும்போதே சுதாகரின் குரல் தழு தழுத்தது. கலையின் கண்களிலிருந்தும் கண்ணீர் துளிர்த்தது.

கமலிக்கும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. எல்லாம் கடந்து தானே ஆகணுமென்று பெத்த பிள்ளையைப் பிரிய மனமே இல்லாமல், கமலியைப் விட்டுவிட்டு சுதாகரும் கலையும் கனத்த இதயத்தோடு அவர்களது ஊருக்கு புறப்பட்டனர்.

பெற்றோர்கள் இருவரும் கண்ணிலிருந்து மறையும் வரை கண்ணீரோடு  பார்த்துக்கொண்டிருந்தவள் பின்னர் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள். 

நேரமும் கடந்து செல்ல ஐவரும் அவரவரைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டனர்.

மறுநாள் காலிஜில் முதல் நாள் வகுப்பு தொடங்கியது…

கமலியும் தனது கிளாஸை தேடி உள்ளே போக, சில மாணவிகள் உட்கார்ந்திருந்தனர். அவர்களை பார்த்தபடியே அங்கிருந்த ஒரு பெஞ்ச்சில் உட்கார, சிறிது நிமிடத்தில் அவளது பக்கத்தில் மூன்று மாணவிகள் வந்து உட்கார்ந்தனர்.

அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர் — ஒருவர் ரூபஸ்ரீ, இன்னொருத்தி பெயர் செல்வராணி, மூன்றாமவள் நந்தினி. அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவர்களின் பயமும் தயக்கமும் நீங்கி, நால்வரும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர்!

செல்வராணியும் ரூபஸ்ரீயும் திருச்சியிலேயே இருக்கும் ‘டே ஸ்காலர்’ மாணவிகள்; நந்தினியோ கமலியைப் போல ஹாஸ்டலில் தங்குபவள். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் — நந்தினியின் அறை ஹாஸ்டலின் மூன்றாவது மாடியில் இருந்தது, கமலிக்கு இரண்டாவது மாடியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

கல்லூரியின் முதல் நாளே நல்ல தோழிகள் கிடைத்த சந்தோஷத்தில் கமலியின் மனதிலிருந்த கவலையும் மெல்லக் குறையத் தொடங்கியது.

முதல் வாரங்கள் கமலிக்கு முற்றிலும் புதிய உலகத்தை அறிமுகப்படுத்தின. பள்ளிக்கூடத்தின் இறுக்கமான விதிகள் இல்லாமல், விசாலமான மைதானமும், பெரிய லைப்ரரியும், சுதந்திரமான சூழலும் அவளுக்குள் புதுவிதமான உற்சாகத்தைத் தந்தன.

தினமும் காலையில் கமலியும் நந்தினியும் ஹாஸ்டலில் இருந்து ஒன்றாகவே வகுப்பறைக்கு கிளம்பி வருவார்கள். அங்கே ஏற்கனவே வந்து காத்திருக்கும் ரூபஸ்ரீயும் செல்வராணியும் இவர்களைப் பார்த்ததும் கையசைத்து இடம்பிடித்து வைப்பார்கள்.

வகுப்புகள் நடக்கும் போது பேராசிரியர்களின் கவனிப்பைத் தாண்டி, பெஞ்ச் அடியில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, தோழிகளுக்குள் ரகசியமாகச் சீட்டு எழுதிப் போட்டுக்கொள்வது என நான்கு பேரின் கூத்தும் கலகலப்பும் நாளுக்கு நாள் அதிகமாகியது.

ஒரு நாள் மதிய இடைவேளையின் போது நால்வரும் கல்லூரியின் பெரிய மரத்தடி நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

ரூபஸ்ரீ தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவையும், செல்வராணி கொண்டு வந்த காரசாரமான உருளைக்கிழங்கு வறுவலையும் நால்வரும் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டனர்.

“ஏய் கமலி… ஹாஸ்டல் சாப்பாடு உனக்குச் செட் ஆகிடுச்சாடி? இல்ல தினமும் நைட் வெறும் மேகி சாப்பிட்டே காலத்தைக் கடத்துறியா?” என்று நந்தினி கிண்டலாகக் கேட்க…

“அதை ஏன்டி கேக்குற? எங்க அம்மா சமைக்கிற மீன் குழம்பு வாசனையை நினைச்சுக்கிட்டே, இந்த ஹாஸ்டல் ரசத்தைச் சாப்பாட்டுல ஊத்தி விழுங்குறேன் தெரியுமா?” என்று கமலி பாவமாகச் சொன்னதும் மூவரும் சத்தமாகச் சிரித்தனர்.

“கவலைப்படாதடி கமலி… இந்த வீக்கெண்ட் எங்க வீட்டுக்கு வா, எங்க அம்மா கையால நல்ல காரசாரமான நண்டு குழம்பு செஞ்சு போடச் சொல்றேன்!” என்று செல்வராணி சொன்னாள்.

அப்போது திடீரெனப் புயல் போல அங்கே வந்தார்கள் கல்லூரியின் சீனியர் மாணவிகள் சிலர்!

“யாரெல்லாம் ஃபர்ஸ்ட் இயர்? எந்திரிச்சு நில்லுங்கடி!” என்று சீனியர்கள் அதட்டலாகக் கேட்க, கமலி உட்பட நாலு பேரும் சாப்பாட்டுத் தட்டோடு பயந்து போய் எழுந்தனர்.

தேடல் தொடரும்….

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top