இருள் நிழலாய் நானே 13

இருள் நிழலாய் நானே 13

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சமர்.

திடீரென சமரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய அவனை கவனித்தவாறு கூடத்து நீள்விருக்கையில் அமர்ந்திருந்தான்.

அவன் சிந்தைக்குள் உதிக்கும் எதையும் அவனால் நம்ப முடியவில்லை.

சுவற்றில் படிந்த இரு நிழல்களை அவனால் ஏற்க முடியவில்லை. வெளிச்சத்தின் சிதறலால், சில நேரங்களில் இரு நிழல்கள் பிரிந்து விழுவது சாதாரணம். ஆனால் இந்த இரவில்? குழம்பினான்.

“எனக்கு தூக்கம் வருது சீனு” என்ற சமர், படுத்ததும் உறங்கிவிட, என்ன நடக்கிறது எனும் பெரும் யோசனையில் உட்கார்ந்த நிலையிலேயே சீனு உறக்கத்தை தழுவியிருந்தான்.

ஆழ்ந்த உறக்கம்… யாரோ தன்னருகில் தன்னை உற்று நோக்குவதை உணர்ந்த சீனுவால், இமைகளைத் திறக்க முடியவில்லை.

உடலினை அசைக்க முடியாது விறைத்தான்.

மூச்சினை இழுத்துவிட முயல முடியவில்லை.

‘என்ன நடக்குது?’ மனதில் கேள்வி எழுந்த நொடி…

“சீனு அண்ணா” என்ற குரல் அவனின் செவி நுழைந்தது.

“யாரு?” அவனது தொண்டையை யாரோ கையால் கவ்வி பிடித்ததை உணர்ந்தான்.

கருவிழிகள் மேல் சொருகியது. இமை பிரித்திட முயன்றான். இயலாது போனது.

ஒரு புறம் குளுமை. மறு புறம் வெப்பம். இரண்டுக்கும் நடுவில் வதை கொண்டான்.

என்ன நடக்கிறது ஒன்றும் அனுமானிக்க முடியாத நிலை.

காற்று சுழன்றடித்தது.

“ஹக்” என்ற சத்தம் சீனுவின் தொண்டை வழி வெளியேற, பட்டென்று கண் திறந்திருந்தான்.

“அண்ணா பிளீஸ் அத்துவை போக விடாதீங்க.” சீனுவின் காதருகில் ஒலித்த ஓசையில் அவனின் இதயம் நின்ற அதிர்வு.

“மகி…”

“அண்ணா… அண்ணா கேட்குதா? நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா?” மகியின் சத்தம் ஓலமாக அவனை சேர்ந்திட…

“மகி இருக்கியா?”

“அண்ணா கண்ணாடி முன்ன வாங்க.” மன்றாடியது மகியின் அருவம்.

ஆளுயரக் கண்ணாடி அறைக்குள் இருக்கிறது. அங்கு சமர் உறங்கிக் கொண்டிருக்கிறான். செல்ல முடியாது. யோசித்த சீனு அலைபேசியை எடுத்து காமிரா திறந்து பார்க்க… அவன் முன் பனிப் புகையாய் நின்றிருந்தாள் மகி.

“மகி…” சத்தமின்றி சீனுவின் இதழ் பிரிந்தது.

‘என்ன நடக்கிறது?’

“மகி…” துறுதுறுவென ஓடி ஆடிய பெண்ணை இப்படி காற்றின் வடிவமாக பார்த்திட சீனுவின் கண்கள் கண்ணீரை வழியவிட்டது.

“டேய் மகி… என்னடா இது?” அவனது கையில் அலைபேசி ஆட்டம் கண்டது.

“அண்ணா அத்து…” பனிக் காற்றாய் புகைந்து கொண்டிருந்த மகியின் தொண்டையில் நெருப்பு கங்குகள் கனிந்திடும் கரம் ஒன்று இறுக்கி பிடித்தது.

சீனுவுக்கு உலகமே இருண்டது.

கையில் தடதடக்கும் அலைபேசியை இறுக்கி பிடித்தான்.

“உன்னை பேசக்கூடாது சொல்லியிருக்கேன்.” வேறொரு குரல் அத்தனை கண்டிப்பாக ஒலித்தது.

மகியின் விழியில் நீர் இறங்கியது.

தரை சொட்டிய துளி பனியாய் உறைந்தது.

“மகி என்ன நடக்குது? உன்னை யார் கட்டுப்படுத்துறா?”, சீனு.

“நான் சொல்றேன்” என்ற குரலை தொடர்ந்து மகியின் அருகில் நெருப்பில் எரியும் அரூபம் சீனுவின் பார்வைக்கு தன்னை காட்சிப்படுத்தியது.

மகியை ஆன்மாவாக கண்ட போது தோன்றாத பயம், மற்றொரு ஆன்மாவை காண்கையில் நெஞ்சத்தை அழுத்தி மேலெழும்பியது.

அலைபேசியை கீழே தவறவிட்டிருந்தான்.

மகியின் அரூபம் தெரிந்திடாது, தணல் எரியும் அரூபம் அவன் கண்களுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.

“இவளை ரொம்ப பிடிக்குமோ?” எனக் கேட்ட அரூபம், “அப்போ இவ சொல்றதைக் கேட்காத. சீக்கிரம் சமரை அங்கு அனுப்பி வைக்கும் வழியைப் பார்” என்று மறைந்தது.

காற்றின் வேகம் குறைந்து இடம் அமைதியாகியது.

வேர்த்துவிட்டிருந்த முகத்தை அழுந்த துடைத்து, மூச்சினை இழுத்துவிட்டு, பார்வையால் அவ்விடத்தை அலசியவாறு, சீனு மெல்ல குனிந்து அலைபேசியை கையில் எடுத்து மகி தெரிகிறாளா என்று பார்க்க, அவள் இல்லை.

வீடு முழுக்கத் தேடி துவண்டு அமர்ந்தான்.

பனியாய் உறைய வைப்பது மகியின் ஆன்மா என்றும், அவளை கட்டுப்படுத்தி அடக்கி தீயாய் தகிக்கச் செய்வது மற்றொரு ஆன்மா என்றும் அமைதியாக யோசித்து தெரிந்து கொண்டான்.

“மகி… மகி…” ஒருவித தைரியத்தை வரவழைத்து மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தான்.

எவ்வித அரவமும் இல்லை.

‘மகியும் ஆன்மா எனும்போது மற்றொரு ஆன்மாவால் அவளை எப்படி கண்ட்ரோல் செய்ய முடியுது? அப்போ மகியாலும் இன்னொரு ஆன்மாவை கட்டுப்படுத்த முடியுமே? ஏன் செய்யல?’

தலை வெடித்திடும் போலிருந்தது.

“ஆ” என்று தலையை பிடித்துக்கொண்டு கத்தினான்.

வேகமாக எழுந்துச் சென்று சமரை உலுக்கி எழுப்பினான்.

“என்னடா… தூங்கல நீ?”

“உண்மையாவே உனக்கு தனியா இருக்க பயம் இப்போ இல்லையா?”

“இல்லை!” பட்டென்று மொழிந்திருந்தான் சமர்.

சீனு அசரவில்லை. எதிர்பார்த்து தானே கேட்டான்.

“எப்படி சடனா?” சீனுவின் பார்வையில் ஒருவித கூர்மை.

“உனக்கும் மேலடா நான்… என்கிட்டவே போலீஸ் மாதிரி இன்ட்ராக்ட் பண்ணாதே” என்ற சமர் படுக்க முயல பிடித்து இழுத்து அமர்த்தினான் சீனு.

“நான் சொல்லட்டுமா?” என்ற சீனு, “மகியோட ஆன்மா உன்னை சுத்தி வருது… ரைட்?” என்றான்.

சமரிடம் பதிலில்லை.

“ஏற்கனவே நிழல் மாதிரி உன்னோட இருப்பாள்… இப்போ நிழலா மட்டுமே இருக்காள். உன்னையே சுத்தி வருவாள். அதனால் உன் மோனோஃபோபியா சரியாகிடுச்சு கரெக்ட்?” என்றான்.

“உனக்கு என்ன தோணுதோ வச்சிக்கோ!”

“ஓகே லீவ் இட்” என்ற சீனு, “மகி உன்னை எங்கையோ… அனுப்பக்கூடாது சொன்னா, எங்க?” எனக் கேட்டான்.

“நான் எங்கப் போகப்போறேன்? என்னால் தனியா எங்கும் போக முடியாது உனக்குத் தெரியுமே” என்ற சமரின் வார்த்தைகள் சீரற்று வெளிவந்தன.

“இப்போ தான் தனியா இருக்க முடியும் சொன்ன?” கேள்வியாக துளைத்தான் சீனு.

“இப்போ என்னடா வேணும் உனக்கு?” சமர் பொறுமை இழந்து கத்தினான்.

“நாங்க வெளியில் இருக்கும்போது உள்ள என்ன நடந்துச்சு?”

டப்பென்று சத்தம்.

திரும்பி பார்க்க பூச்சாடி கீழே விழுந்தது உடைந்திருந்தது.

சமர் கண்ணாடியை பார்க்க, அனல் அரூபம் சொல்லாதே எனும் விதமாக தலை அசைத்தது.

“யாரந்தப் பொண்ணு?” கண்ணாடியை பார்த்துவிட்டவனாக சீனு கேட்டான்.

“மகியை மீட்கணும்!”

“மகி உயிரோடில்லை.”

“அங்க போனால் மகியை மீட்க முடியும்.” அத்தனை நம்பிக்கையாகக் கூறினான் சமர்.

“யார் சொன்னா?”

சமர் கண்ணாடியில் அந்த அரூபத்தை ஏறிட்டு பார்த்தான்.

சீனுவுக்கு புரிந்துவிட்டது.

“உன்னையும் அங்க வரவச்சு உயிரை எடுக்க மகியோட ஆவியை கட்டுப்படுத்தி உன்னை கார்னர் பண்ணுது இந்த பேய்… ஆமாவா?” என்றான் சீனு.

சீனு பேய் என்று சொல்லியதில் ஆத்திரமுற்ற அரூபம், காற்றாய் சுழன்று கண்ணாடியிலிருந்து வெளி வந்து நெருப்பு வளையமாக சீனுவை சுற்றி வளைத்து இறுக்கியது.

“விடு… விடு… அவனை விடு” என்று சமர் நண்பனை இழுக்க முயல…

“நீ அங்க வா… உன் மகியை நான் உனக்கு மீட்டுக் கொடுக்கிறேன்” என்று கத்தியது அரூபம்.

சீனுவுக்கு விழி பிதுங்கி வெளியில் வரும் போலிருந்தது.

சுழலும் காற்று வேகத்தைக் கூட்ட, நெருப்பு வளையத்தின் கட்டுக்களை தன் பனி கொண்டு அணைய வைத்து சீனுவைக் காப்பாற்றினாள் மகி.

இரும்பிகொண்டே தரையில் விழுந்த சீனு… “என்னடா நடக்குது? சத்தியமா இதையெல்லாம் நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல” என்றான்.

“மகி உயிரோடு கிடைக்க நமக்கு ஒரு வாய்ப்பிருக்கு சொன்னாலும் அங்க போக வேணாம் சொல்லுவியா மச்சான்?” சமர் கேட்க, சீனு மெல்ல தன் கையில் சில்லிப்பை உணர்ந்தான்.

“வேணாம் சொல்லுங்க.” மகி அழுத்தமாக உரைத்தாள்.

“நீ சொன்னா அவன் கேட்பான் மகி. நீயே சொல்லு.” சீனு மகியிடம் சொல்லிட,

“லட்டு… லட்டு பேசுறது உனக்கு கேட்குதா சீனு” என்று சீனுவின் அருகில் கைகளால் மகியைத் தேடி அலைபாய்ந்தான் சமர்.

“அப்போ உனக்கு கேட்கலையா?”

சீனு சமரிடம் வினவ, அனல் அரூபம் இடியென கோரமாக சிரித்தது.

“உன்னை பார்த்ததும் பயம் வந்துச்சு. ஆனால் இப்போ பழகிப்போச்சு. சும்மா சிரிச்சு, நெருப்பை காட்டி பயம் காட்டாத” என்று அரூபத்திடம் சொல்லிய சீனு, “நீ விளக்கமா சொல்லு” என்று சமர் பக்கம் திரும்பிட, சீனுவின் கண் முன் நூலிழை இடைவெளியில் இரு விழிகள் மட்டும் ஜூவாலையாய் எம்பி குதித்து மறைந்தது.

சீனு பயத்தில் நெஞ்சில் கை வைத்து சிலையாகினான்.

“இன்னொருமுறை என்னை சீண்டுன… கண்ணு முன்ன எரிஞ்சதை, உன் கண்ணுக்குள்ள எரிய விட்டுடுவேன்” என்றது அரூபம்.

“ஆத்தி… இது பொல்லாத பேயா இருக்கும் போல” என்ற சீனு, “மகி” என்க,

“அத்து அங்க போகக்கூடாது. அங்க போனால் கண்டிப்பா திரும்பி வர முடியாது. இந்த ஆன்மாவுக்கு அதோட சாவின் மர்மம் தெரியணும். அதுக்காகத்தான் அத்துவை எதுவும் செய்திடுவேன்னு மிரட்டி என்னை அங்க கூப்பிட்டுது. நானும் போன ரெண்டு பேர் வரலன்னு அவங்களுக்காக போனேன்” என்ற மகி, “எதையும் நம்ப முடியல சீனுண்ணா” என்று அழுதது.

சீனு தனக்கு பக்கவாட்டில் திரும்பி இருப்பதை வைத்து, மகி அங்கு இருக்கிறாள், அவனிடம் எதும் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து அந்தப்பக்கம் திரும்பிய சமர்,

அந்தரத்தில் காற்றில் கோடென வழிந்த கண்ணீரில் “மகி” என உயிர் கரைய கதறினான்.

சமரின் ஓலம் காண முடியாது அனல் அரூபம் மகியின் மீதான தனது கட்டுக்களை தளர்த்திட, மெல்ல மகியின் உருவம் பனி படலாமாக சமருக்குத் தெரிந்தது.

சமர் தாவி அணைக்க, பிடியின்றி கீழே விழுந்தான்.

“அத்து…”

இனி கேட்கவே முடியாதென ஏங்கிய குரல்… மொத்தமாய் நொருங்கிவிட்டான் சமர்.

“லட்டும்மா” என்று எழுந்து அவளின் கன்னத்தில் கை வைக்க, அவனால் அவளை உணர முடியவில்லை. உயிர் வலி கொண்டான்.

காற்றாய் தன் முன் பனிப் புகையின் வடிவில் காட்சிக் கொண்டிருக்கும் தன்னுடைய உயிரானவளின் உயிரை மீட்டிட தவியாய் தவித்தான்.

சமரின் முகம் காட்டிய வேதனையில்,

“அண்ணா” என்று விளித்தது அனல் அரூபம்.

முன்பும் சமர் முதல் முறை கண்ட போதும் அண்ணா என்றுதான் அழைத்திருந்தது.

முன்பு போல் இம்முறையும் அனலினை தடுத்திட பனிக்காற்று சுற்றி சுழன்று வீசியது.

சமருக்கு, முன்பும் அந்த நெருப்பு தன்னிடம், “அங்கு வந்தால் உன் மகியை பார்க்கலாம்” என்று சொன்ன போதும் மகி அதனை தடுத்தது நினைவு வந்தது.

ஏனென்று தெரியில்லை.

பனியும், நெருப்பும் ஆக்ரோஷம் கொண்டு சுற்றி சுழன்று சண்டையிட்டது.

மகியின் சக்தி நெருப்பின் முன் தாக்கு பிடிக்க முடியவில்லை. மகி மெல்ல தன் பலம் குறைந்து தொய்ந்திட… நெருப்பு தன் பலத்தை அதீதமாகக் காட்டியது மகியின் மீது.

பனிப்புகை காற்றின் துகள்களாக சிதறி மறைந்தது.

“மகி…” சமர் வெடித்து கதறிட, “மகி ஆன்மாவை என்ன பண்ண?” என்று அரூபத்திடம் மல்லுக் கட்டினான் சீனு.

“மகி வேணும் நினைச்சா கிராமத்துக்கு சமர் வரணும். என் சாவுக்கு காரணம் எனக்குத் தெரியணும்” என்று அரூபம் மின்னலாய் மறைந்தது.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top