அத்தியாயம் 19

அந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, அரவிந்தன் தனியாக வரவில்லை. அவனுடன் இரண்டு நண்பர்களும் வந்திருந்தார்கள். ஒருவன் ரோஹித். உயரமான தோற்றம், கண்ணாடி அணிந்த முகம். இன்னொருத்தி பிரியா. தோளில் வெள்ளை நிறக் கைப்பையுடன், நகரத்து நாகரிகம் வெளிப்படும் தோற்றத்தில் இருந்தாள். இருவரும் அரவிந்தனுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.

“கிராமத்து வாழ்க்கையை நேர்ல பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை. இந்த முறை உன்னோட ஊருக்கு வந்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டோம்,” என்று பேருந்திலிருந்து இறங்கியபடியே சொன்னாள் பிரியா.

அவர்களைப் பார்த்ததும் சிவகாமி வாசலுக்கே வந்து வரவேற்றாள்.

“வாங்க தம்பி… வாம்மா! என் பிள்ளையோட நண்பர்கள்னா எங்களுக்கும் பிள்ளைங்கதான்.”

கருப்பையாவும் திண்ணையிலிருந்து எழுந்து, வெற்றிலையை ஓரமாக வைத்துவிட்டு, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், “குட் மார்னிங்!” என்றார்.

அவர் உச்சரித்த விதத்தைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். அரவிந்தனோ நண்பர்களை அழைத்துக்கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டுவதில் மும்முரமாக இருந்தான்.

“இது எங்க பூர்வீக வீடு. இந்தத் திண்ணைதான் எங்க குடும்பத்தோட முக்கியமான இடம். இது எங்க பாட்டி வள்ளியம்மாள்.”

ரோஹித் மரியாதையாக வணங்கினான். பிரியா, “ஹாய் பாட்டி!” என்று கையை நீட்டினாள்.

அவளுடைய கையைப் பற்றிக்கொண்ட வள்ளியம்மாள், “வாம்மா ராசாத்தி,” என்று புன்னகைத்தார்.

அந்த அழைப்பின் அர்த்தம் புரியாவிட்டாலும், பிரியாவும் சிரித்தாள்.

அப்போது சமையலறைக்கும் திண்ணைக்கும் இடையே வந்துகொண்டிருந்த தாரணி, விருந்தினர்களுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.

“ஓ! நீங்கதான் அரவிந்தன் அண்ணியா? உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கான். நீங்க அக்ரிகல்ச்சர் ஆபீசர்னு சொன்னான். அதான் உங்களைப் பார்க்கணும்னு நினைச்சேன்,” என்றாள் பிரியா.

“அப்படியா? சந்தோஷம்,” என்று தாரணி புன்னகைத்தாள்.

“இங்க ரொம்ப அமைதியா இருக்கு. சிட்டியில இந்த மாதிரி இடம் பார்க்கவே முடியாது!”

அதற்குள் அரவிந்தன் அவர்களைத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த காரிப் பசுவைப் பார்த்ததும் பிரியா சற்று விலகி நின்றாள்.

“ஐயோ! இது முட்டுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் செய்யாது. ரொம்பப் பாசமானது. எங்க அண்ணன்தான் இதைப் பார்த்துக்கறாரு,” என்று அரவிந்தன் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது, பசு வாலை வேகமாக அசைத்தது.

பிரியா சட்டென்று ரோஹித்தின் பின்னால் ஒளிந்துகொண்டாள். ரோஹித் சிரித்தபடி கைப்பேசியில் அந்தக் காட்சியைப் படம்பிடித்தான்.

அந்த நேரத்தில் வரப்பு வழியாக முத்து வந்தான்.

தலையில் துண்டு, முழங்கால் வரை சேறு படிந்த வேட்டி, வியர்வையில் நனைந்த சட்டை என வயல் வேலையை முடித்துவிட்டு வந்திருந்தான். தோளில் ஒரு பெரிய கீரைக் கட்டு.

தம்பியைப் பார்த்ததும் அவன் முகத்தில் இயல்பான மகிழ்ச்சி மலர்ந்தது.

“அரவிந்தா! வந்துட்டியா?”

கீரைக் கட்டை ஓரமாக வைத்துவிட்டு, நேராகப் பசுவிடம் சென்றான். முத்துவின் கையை உணர்ந்ததும் அது அமைதியாகத் தலையைத் தாழ்த்தியது.

“பயப்படாதீங்கம்மா. அது ஒண்ணும் செய்யாது. பழகிட்டா நம்மகிட்டயே வந்துடும்,” என்றான் பிரியாவைப் பார்த்து.

“ஓ… தேங்க்ஸ்!” என்று அவள் புன்னகைத்தாள்.

அந்தச் சிறிய உரையாடலுக்குப் பிறகு முத்து மீண்டும் கீரைக் கட்டைத் தூக்கிக்கொண்டான்.

அப்போதுதான் அரவிந்தன் நண்பர்கள் தன் அண்ணனைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். ஒரு கணம் அவன் முகத்தில் தயக்கம் படர்ந்தது.

“இவர் முத்து… எங்க அண்ணன். இங்க விவசாயம் பார்த்துக்கறாரு,” என்றான்.

அறிமுகம் அவ்வளவுதான்.

ரோஹித் உடனே கையை நீட்டினான்.

“ஹாய் ப்ரோ! நைஸ் டு மீட் யூ. விவசாயம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

முத்து தன் கையை வேட்டியின் ஓரத்தில் துடைத்துவிட்டு அவனுடைய கையைப் பற்றினான்.

“வணக்கம்.”

பிரியா மட்டும் சற்றுத் தள்ளி நின்றபடியே, “தேங்க்ஸ், அங்கிள்!” என்றாள்.

முத்து ஒரு நொடி அவளைப் பார்த்தான்.

“அங்கிளா? எனக்கு முப்பது வயசுதான்மா,” என்று சிரித்தான்.

“ஓ… சாரி!” என்று பிரியாவும் சிரித்தாள்.

அவளுக்கு அது ஒரு சாதாரணத் தவறு. ஆனால் அந்த அழைப்பைக் கேட்ட முத்துவுக்குள் ஏதோ சிறிய நெருடல் தோன்றியது.

“சரி அண்ணா, நீ போய்க் குளிச்சிட்டு வா. நாங்க உள்ளே போறோம்,” என்று அவசரமாகச் சொன்ன அரவிந்தன், நண்பர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றான்.

முத்து சில நொடிகள் அங்கேயே நின்றான். பிறகு கீரைக் கட்டைச் சமையலறை வாசலில் வைத்துவிட்டு, கிணற்றடிக்குச் சென்றான்.

அவன் முகத்திலிருந்த புன்னகை மாறவில்லை. ஆனால் அந்தப் புன்னகையில் முன்பிருந்த இயல்பான மகிழ்ச்சி இல்லை.

தாரணி வாசலிலிருந்து எல்லாவற்றையும் கவனித்திருந்தாள். அரவிந்தன் அறிமுகப்படுத்திய விதமும், அவன் குரலில் இருந்த அவசரமும் அவளுக்குப் புரியாமல் இல்லை.

****

மதிய உணவுக்குத் திண்ணையில் வாழை இலைகள் போடப்பட்டிருந்தன. சிவகாமி விருந்தினர்களுக்குப் பலவிதமான உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

அரவிந்தனும் அவனுடைய நண்பர்களும் முதலில் அமர்ந்தனர். கருப்பையா அவர்களுடன் பேசிக்கொண்டே அருகில் அமர்ந்திருந்தார்.

முத்து குளித்துவிட்டு வந்தபோது அனைவரும் சாப்பிடத் தொடங்கியிருந்தனர்.

“முத்து, இங்க இடம் பத்தாது. நீ அங்க போய் உட்காரு. நான் அங்கேயே வந்து பரிமாறுறேன்,” என்றாள் சிவகாமி.

“சரிம்மா,” என்று தலையசைத்தான்.

அவன் சமையலறை நோக்கிச் செல்ல, தாரணி தன் இலையை எடுத்துக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்தாள்.

“நீ ஏன் இங்க வர்ற? அங்க உட்காரலாமே?”

“நீங்க இங்க சாப்பிடும்போது நான் மட்டும் அங்க எதுக்கு உட்காரணும்? நானும் உங்ககூடவே சாப்பிடறேன்.”

அவள் சாதாரணமாகச் சொன்னாலும், அதன் பின்னால் இருந்த அன்பை முத்து உணர்ந்தான். அவன் எதுவும் பேசாமல் அவளுக்காக இடம் விட்டுக் கொடுத்தான்.

திண்ணையில் கருப்பையாவின் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.

“என் சின்னவன் பெங்களூர்ல பெரிய கம்பெனியில வேலை பார்க்கிறான். நல்ல சம்பளம். ஊருக்கே பெருமை அவன்.”

அரவிந்தன் சிரித்தபடி தலையைக் குனிந்துகொண்டான்.

“மூத்தவன் இங்க நிலத்தைப் பார்த்துக்கறான்,” என்று கருப்பையா அடுத்ததாகச் சொன்னார்.

அந்த இரண்டு அறிமுகங்களுக்கும் இடையில் இருந்த வேறுபாடு தாரணிக்குத் தெளிவாகக் கேட்டது.

சாப்பிட்டுக்கொண்டிருந்த ரோஹித், அரவிந்தனிடம் பேச்சுக்கொடுத்தான்.

“உன் அண்ணா ரொம்ப அமைதியா இருக்காரு. அவர் எங்க படிச்சாரு?”

அரவிந்தன் ஒரு நொடி தயங்கினான். பிறகு இயல்பாகச் சிரித்துக்கொண்டே,

“அவருக்குப் படிப்புல அவ்வளவா ஆர்வம் இல்லடா. சின்ன வயசுலேர்ந்தே விவசாயத்துலதான் அவருக்கு விருப்பம் அதிகம். அதனாலதான் அதையே பார்த்துக்கிட்டு இங்கேயே இருந்துட்டாரு. நான் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகத்தான் வெளியே போய்ப் படிச்சேன்,” என்றான்.

தாரணியின் கையில் இருந்த கவளம் அப்படியே நின்றது.

“அவருக்குப் படிப்புல ஆர்வம் இல்லையா?’

அந்த வார்த்தைகள் அவளுக்குள் ஏதோ ஒன்றை அழுத்தமாகத் தைத்தன.

பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட படிப்பு… குடும்பத்துக்காகச் சுமந்த பொறுப்புகள்… தம்பியின் படிப்புக்காகச் செலவிட்ட பணம்… இத்தனை வருடங்களாகத் தன்னுடைய ஆசைகளை ஒதுக்கி வைத்த வாழ்க்கை…

இதையெல்லாம் அறிந்திருந்தும், முத்து தானாகவே படிப்பை விட்டுவிட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததாக அரவிந்தன் சொல்வதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவளுடைய முகமாற்றத்தைக் கவனித்த முத்து,

“என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

“ஒண்ணுமில்ல. சாப்பிடுங்க,” என்று தன்னைச் சமாளித்துக்கொண்டாள்.

அவன் அவளைச் சில நொடிகள் பார்த்துவிட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினான்.

****

மாலை நேரத்தில் அரவிந்தனும் நண்பர்களும் ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர். அவர்களுடன் கவிதாவும் சென்றாள்.

அவர்கள் கிளம்புவதற்கு முன் அரவிந்தன் மட்டும் முத்துவிடம் வந்தான்.

“அண்ணா… இன்னிக்கு உன்னை அப்படி அவசரமா அறிமுகப்படுத்தினது தப்புதான். சாரி. நண்பர்கள் முன்னாடி கொஞ்சம்…” என்று இழுத்தான்.

அவன் சொல்ல வந்ததை முடிப்பதற்குள் முத்து குறுக்கிட்டான்.

“பரவாயில்லடா. அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ போய் உன் நண்பர்களைக் கவனிச்சுக்கோ.”

அரவிந்தன் நிம்மதியாகத் தலையசைத்துவிட்டுச் சென்றான்.

முத்துவுக்கு அதைப் பெரிதுபடுத்த விருப்பமில்லை. ஆனால் தாரணிக்கு அது அவ்வளவு எளிதாகக் கடந்து போகவில்லை.

சிறிது நேரம் கழித்து கவிதா மட்டும் வீட்டுக்குத் திரும்பினாள்.

“அண்ணா, நீ ஏன் இன்னிக்கு சேறோட வந்தே? அவங்க முன்னாடி கொஞ்சம் சுத்தமா வந்திருக்கலாம்ல. பிரியா கூட என்கிட்ட, ‘உன் அண்ணன் எப்பவும் இப்படித்தானா?’ன்னு கேட்டா,” என்றாள்.

அவளுடைய குரலில் குற்றம் சாட்டும் நோக்கம் இல்லை. சாதாரணமாகச் சொன்ன ஒரு குறைதான்.

“அடுத்த தடவை வயல்லேர்ந்து வந்ததும் குளிச்சுட்டு வந்துடுறேன்,” என்று முத்து சிரித்தான்.

கவிதாவும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

ஆனால் தாரணி மட்டும் அந்த இடத்திலேயே நின்றாள்.

அவர்களுக்குத் தெரியவில்லை. முத்து எப்போது வயலிலிருந்து வந்தாலும், அவன் உடலில் இருக்கும் சேற்றையும் வியர்வையையும் மட்டுமே பார்க்கிறார்கள். அந்தச் சேற்றுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை அவர்கள் பார்க்கப் பழகவில்லை.

****

இரவு, கிணற்றடியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த முத்து, ஒரு கணம் நீரில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்தான்.

வயலின் சேறு இன்னும் அவன் கால்களில் ஒட்டியிருந்தது. கைகளில் உழைப்பின் தடங்கள் தெரிந்தன.

அவன் முகத்தில் எந்தப் பெரிய வருத்தமும் இல்லை. ஆனால் காலையில் நண்பர்கள் முன்னால் தம்பி அறிமுகப்படுத்திய விதம் மட்டும் அவ்வப்போது நினைவுக்கு வந்தது.

தன்னைப் பற்றி உயர்வாகச் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் அவனுக்கு இல்லை. ஆனால், தன் அண்ணன் என்று கொஞ்சம் உரிமையோடு அறிமுகப்படுத்தியிருந்தாலே போதும் என்று தோன்றியது. அந்தச் சிறிய எதிர்பார்ப்பைக்கூட வெளிக்காட்டாமல், மனதுக்குள் எழுந்த ஏமாற்றத்தை அப்படியே அடக்கிக்கொண்டான்.

கையிலிருந்த குடத்தைத் தூக்கிக்கொண்டு, எதுவும் நடக்காததுபோல் வீட்டை நோக்கி நடந்தான்.

தூரத்திலிருந்து அவனைக் கவனித்த வள்ளியம்மாள் எதுவும் கேட்கவில்லை.

அன்று இரவு தாரணி தன் குறிப்பேட்டைத் திறந்தாள்.

சில நொடிகள் யோசித்துவிட்டு எழுதினாள்.

“அவன் படிப்பைத் தானாக விட்டுவிடவில்லை. குடும்பத்துக்காக விட்டுக்கொடுத்தான். ஆனால், அவனுக்காக விட்டுக்கொடுத்த வாழ்க்கையை, அவன் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.”

எழுதி முடித்தவள் பேனாவை மூடினாள்.

இந்த முறை முத்துவின் மனதில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்துவிட்டு அமைதியாகக் கடந்துவிட அவளால் முடியவில்லை.

தொடரும்…

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top