முகவரி 10

கதிர் மூன்று மாதங்கள் மட்டுமே விடுமுறையில் வந்திருந்ததால், அவன் மீண்டும் வெளிநாடு திரும்புவதற்குள் கையோடு திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் இரண்டு வீட்டாரும் உறுதியாக இருந்தனர்.

“தம்பிக்கு லீவ் கம்மியாத்தான் இருக்கு, அதனால அடுத்த நல்ல முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிடலாம். தம்பி பொண்டாட்டியையும் கூடவே கூட்டிட்டுப் போயிடும்,” என்று சுதாகர் வீட்டார் சொல்ல, சிந்துவின் பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு சம்மதித்தனர்.

தன் அண்ணனின் கல்யாணப் பேச்சு உறுதியான சந்தோஷத்தை தோழிகளிடம் சொல்லி சந்தோஷப்பட்டாள். 

அடுத்த மாதமே நல்ல சுபமுகூர்த்த நாள் குறிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடந்தன!

மண்டபம் பிடிப்பது, பட்டுப் புடவைகள் எடுப்பது, அழைப்பிதழ் அடிப்பது எனச் சுதாகரின் வீடே திருவிழாக் கோலம்பூண்டு பரபரப்பாக இயங்கியது.

குறிப்பிட்ட அந்த சுபமுகூர்த்த நாளில், உற்றார் உறவினர்கள் ஆசிர்வார்தங்களோடு, கதிருக்கும் சிந்துக்கும் விமரிசையாகத் திருமணம் நடந்து முடிந்தது.

கல்யாணம் முடிந்த கையோடு, புதுப் பெண்ணுக்கு பாஸ்போர்ட், விசா  வேலைகளைச் சுதாகரும் கதிரூம் தீவிரமாகப் பார்த்து முடித்தனர். நாட்கள் வேகவேகமாக ஓட, இதோ கதிரின் மூன்று மாத விடுமுறையும் முடியும் தருவாயை எட்டியது!

தன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளிநாட்டிற்குப் புறப்படும் அந்த நாள் வந்தது.

சென்னை விமான நிலையத்தில், தனது அப்பாவின் கையைப் பிடித்தவன் “அப்பா… அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க. பாப்பா பைனல் இயரை நல்லபடியா முடி, அண்ணன் அங்க இருந்து கூப்பிடுறேன்,” என்று தங்கையின் தலையைக் கோதியவன், புது மனைவியின் கரங்களைப் பிடித்தபடி விமானத்திற்குள் நுழைந்தான்.

மகனும் மருமகளும் சந்தோஷமாக வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்து, சுதாகரின் குடும்பம் கண்கள் கலங்கினாலும் மன நிறைவோடு சொந்த ஊருக்குத் திரும்பினர்.

அண்ணனின் திருமணமும் கோலாகலமாக முடிந்துவிட, கமலி மீண்டும் தன் கல்லூரி வாழ்க்கைக்குத் திரும்பினாள். தோழிகளுடன் கலகலப்பான அரட்டைகளும், இறுதியாண்டு படிப்பின் தீவிரமுமாக நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தன.

அந்த வருடம் கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பிரம்மாண்டமான ‘கல்சுரல் போட்டிகள்’  அறிவிக்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்ட கமலியும் ஆடிஷனில் கலந்துகொள்ள, ஹாஸ்டலிலிருந்து அவளுடன் சேர்த்து எட்டு மாணவிகள் இறுதி நடனக் குழுவாகத் தேர்வாகினர்.

அதில் குழு நடனத்தோடு , கமலி ஒரு சோலோ நடன நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அது வேறெதுவுமில்லை—அவளது சொந்த இரத்தத்தில் ஊறிய, அவளது சொந்த மண்ணான கடலையும், மீனவப் பெண்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் ஒரு கம்பீரமான கதாபாத்திரம்!

ரிகர்சலின் போதே கதாப்பாத்திரமாக மாறி கமலி பாவங்களைச் செய்து காட்டியதைப் பார்த்து, கல்லூரி முதல்வரும் பேராசிரியர்களும் மெய்சிலிர்த்து அசந்து போய்விட்டனர்.

போட்டிக்கான அந்த நாளும் வந்தது!

திருச்சியிலேயே மிகவும் புகழ்பெற்ற, பிரம்மாண்டமான வேறொரு கல்லூரியின் வளாகத்தில் தான் அந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சுற்றிலும் பல்வேறு பிரபலக் கல்லூரிகளிலிருந்து வந்திருந்த மாணவ மாணவிகள். அவசர அவசரமாகத் தயாராவதும், மற்றவர்களை ஒருவிதப் போட்டிப் பார்வையோடு பார்ப்பதுமாக அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது.

உள்ளுக்குள் பயம் நெஞ்சை அடைத்தாலும், கூட வந்த பேராசிரியரின் “பயப்படாதீங்க பொண்ணுங்களா, கலக்குங்க!” என்ற தைரிய வார்த்தைகளை மனதில் ஏந்திக் கொண்டாள் கமலி. தன் கண்களை மூடி, நெஞ்சில் கைவைத்து, “ஆத்தா காளியம்மா… நீதான் கூடவே இருந்து வழிநடத்தணும்!” என்று மனதார வேண்டிக் கொண்டாள்.

நிகழ்ச்சிகள் கோலாகலமாகத் தொடங்கின. ஒவ்வொரு கல்லூரியும் தங்கள் திறமைகளை மேடையில் இறக்கிக் கொண்டிருக்க, மதியம் 12:00 மணி வாக்கில் கமலியின் கல்லூரி மாணவர்களின் முறை வந்தது.

ஆரம்பத்தில் அவளது கல்லூரி தோழிகள் குழு நடனம், மைம், மற்றும் பாட்டுப் போட்டிகளைத் தூள் கிளப்பி முடித்தனர்.

அடுத்து… அரங்கமே ஆவலுடன் எதிர்பார்த்த  ‘சோலோ பெர்ஃபார்மன்ஸ்’!

மேடையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, ஒரே ஒரு அடர் நீல நிற ‘ஸ்பாட்லைட்’ மட்டும் மேடையின் நடுவே ஒளிர்ந்தது… பின்னணியில் சீறிப் பாயும் அலைகளின் ஓசையும், கடற்பறவைகளின் ஒலியும் அசல் கடலோரத்தின் உணர்வைக் கொண்டு வந்தன!

அந்த நீல வெளிச்சத்திற்குள் கம்பீரமாக நடந்து வந்தாள் கமலி! அவளது தோற்றத்தைப் பார்த்த அரங்கம் ஒரு நொடி மூச்சடைத்துப் போனது!

கருநீலமும் அடர் சிவப்பு நிறமும் கலந்த பாரம்பரியக் ‘கண்டாங்கி சேலை’யைக் கச்சிதமாக கட்டிக்கொண்டு, இடையில் ஒட்டியாணம் போலத் துணியால் இறுக்க முடிச்சுப் போட்டிருந்தாள். அடர்த்தியான கூந்தலை நெளித்து முடிந்து, அதில் வாசம் தூக்கும் வெண்மையான ‘பிச்சுப்பூ’வை அள்ளிச் சூடியிருந்தாள். நெற்றியில் அகலமான சிவப்புக் குங்குமப்பொட்டும், அவளது மூக்கில் சூரிய ஒளியெனப் மின்னிய அந்த ஒற்றைக் கல் மூக்குத்தியும் அவளது கிராமத்து அழகை வேறொரு பரிமாணத்திற்குக் கொண்டு சென்றன.

அவள் எடையும் நடை அழகுமாக மேடையில் அடி எடுத்து வைக்கும் போதெல்லாம், காலில் அணிந்திருந்த பித்தளைத் தண்டையும் கொலுசும் ‘ஜல் ஜல்’ என கம்பீரமாக ஒலித்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவளது இடையின் வளைவில் சாய்த்துச் சொருகப்பட்டிருந்த அந்த மூங்கில் மீன் கூடை! 

இடது கையை இடுப்பில் வைத்து மீன் கூடையைத் தாங்கிக் கொண்டு, வலது கையால் சேலைத் தலைப்பை ஒதுக்கியபடி, ஒரு கையில் மீன் பிடிக்கும் லாவகத்தோடு அவள் நிமிர்ந்து நின்ற அந்தத் தோற்றம்…

அவள் ஏதோ ஒரு நாடகத்திற்காக வேஷமிட்ட கல்லூரிப் பெண் போலத் தெரியவில்லை; அலைகளோடு போராடி ஜெயிக்கத் தெரிந்த, கடலன்னையின் செல்ல மகளான ஒரு நிஜமான வீரமிக்க ‘மீனவச் சிறுமி’யாகவே மேடையில் விஸ்வரூபம் எடுத்து நின்றாள்!

அவளது அந்த தத்ரூபமான தோற்றத்தையும், கண்களில் வழிந்த கம்பீரத்தையும் பார்த்த நீதிபதிகளும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் தங்களையும் அறியாமல் எழுந்து நின்று, “வாவ்! அமேசிங்!” என்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்!

அரங்கமே அதிரும் அந்தச் சத்தத்திற்கு நடுவே, தன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகையோடு, கமலி தன் அசாத்திய நடனத்தைத் தொடங்கினாள்!

மூன்று நிமிடமே ஆனாலும், அந்த மேடையில் கமலி மீனவப் பெண்ணாகவே மாறி வாழ்ந்து காட்டினாள்!

கடலுக்குச் சென்ற கணவனுக்காகவும் மகன்களுக்காகவும் கரையில் காத்திருக்கும் மீனவப் பெண்களின் பயம், புயலையும் அலையையும் எதிர்கொள்ளும் துணிச்சல், மீன் கூடைகளைச் சுமந்து வீதி வீதியாக விற்கும் உழைப்பு, இறுதியில் கடல் தாய் தாராளமாகத் தந்த வளத்தைக் கண்டு அடையும் பேரானந்தம் என அத்தனை உணர்ச்சிகளையும் தன் கண்கள், கைகள் மற்றும் கால்களின் தண்டை ஒலியிலேயே தத்ரூபமாகக் கொண்டு வந்தாள்.

அவள் ஆடி முடித்து அமைதியாக நின்றபோது, அரங்கம் சில நொடிகள் உறைந்து போய், அடுத்த நொடியே இடிமுழக்கம் போலக் கரகோஷத்தால் அதிர்ந்தது!

மாலை நேரம் வந்தது. அனைத்து போட்டிகளும் முடிந்து முடிவுகளுக்காக மாணவர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

சிறப்பு விருந்தினராக வந்தவர் மேடையேறி முடிவுகளை அறிவிக்கத் தொடங்கினர். சோலோ டான்ஸ் தனித்திறமைப் போட்டிக்கான முதல் பரிசை கமலி தட்டிச் சென்றாள்! 

அவளது நடனத்திற்குச் சான்றாகப் பிரம்மாண்டக் கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவளது தோழிகள் கலந்துகொண்ட குழு நடனம், பாட்டு, மற்றும் மைம் போட்டிகளுக்கு இரண்டாம் பரிசுகள் கிடைத்தன. மொத்தத்தில் அவர்களின் கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றியைக் கைபற்றியது.

வெற்றிக் கோப்பைகளோடும், அளவில்லாத மகிழ்ச்சியோடும் மாணவிகள் அனைவரும் தங்கள் கல்லூரிப் பேருந்தை நோக்கி ஆரவாரத்துடன் நடந்து வந்து ஏறிக்கொண்டிருந்தனர்.

திருச்சியில் ஒரு முக்கியமான பிசினஸ் விஷயங்களை முடித்துவிட்டு, ஆதவனோடு பேசிக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தான் அருண். 

மாலை நேரத்து நெரிசலான திருச்சி டிராஃபிக். கார்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன.

தற்செயலாகக் காரின் ஜன்னல் வழியே வெளியே ஆதவன் திரும்ப, சாலையோரம் நின்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றம் அவனது பார்வையில் பட்டது!

கண்டாங்கி சேலை, ஒரு பக்கமாக முடித்த கூந்தலில் பிச்சுப்பூ, இடுப்பில் ஒரு ரசனை மிகு கலை நயம்…

அவ்வளவுதான்!

அந்த ஒரு வினாடி பின்புறத் தோற்றத்தைக் கண்டதும் ஆதவனின் இதயத் துடிப்பு அப்படியே நின்றுபோனது!

சில மாதங்களுக்கு முன்பு தன் கனவில் வந்து வந்து போன அதே தேவதையின் பின் தோற்றம்… தன் மனதை ஆக்கிரமித்து வைத்திருக்கும் அதே பெண்!

“முத்தழகு…!”

அவன் தொண்டை அடைத்தது. வார்த்தைகள் வரவில்லை. மருண்டு போய், கண்கள் அகல விழித்து அந்தப் பேருந்தையே உற்றுப் பார்த்தான்.

ஆனால், அது திருச்சியின் மிக முக்கியமான, வாகனங்கள் அலைமோதும் டிராஃபிக் நிறைந்த பகுதி என்பதால், பின்னால் வந்த வாகனங்களின் ஹாரன் சத்தம் காதை அடைத்தது. 

சிக்னல் கிடைத்தது அருண் காரை மூவ்ப் பண்ணவும், “மச்சி! காரை நிறுத்துடா! சீக்கிரம்!” என்று ஆதவன் கத்த, பதறிப்போன அருண் சற்றுத் தள்ளிச் சென்று கஷ்டப்பட்டுச் சாலையோரத்தில் காரை நிறுத்தினான்.

கார் நின்ற அடுத்த நொடியே, ஆதவன் கதவைத் திறந்து கொண்டு பதற்றத்துடன் பின்னால் ஓடி வந்தான்.

ஆனால்… அதற்குள் அந்தப் பேருந்து புறப்பட்டுச் சென்றிருந்தது. அவள் யார், எங்கே போனாள், எந்தக் கல்லூரிப் பேருந்து என்று எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. கூட்ட நெரிசலுக்கு நடுவே முகம் தெரியாதவளை பார்ப்போமா என்று ஆதவன் பித்துப் பிடித்தவன் போலத் தேடினான். ஆனால் அவளோ அவன் கண்ணில் படவே இல்லை!

பின்னாலேயே ஓடி வந்த அருண், ஆதவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்பதைப் பார்த்து, அவனது தோளைப் பிடித்து உலுக்கியவன், “ஆது… என்னடா ஆச்சு? ஏன் திடீர்னு காரை நிறுத்தச் சொல்லி இப்படி ஓடி வர்ற? யாரைப் பார்த்தடா?” என்று பதற்றமாகக் கேட்க…

ஆதவனோ பேச்சு மூச்சின்றி, வார்த்தைகளை இழந்து அவள் பஸ் நின்ற இடத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்க,அவனது கண்கள் கலங்கியிருந்தன; நெஞ்சம் வேகமாக அடித்துக் கொண்டது. 

தனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த அந்தத் தேவதை, இதோ தன் கண்ணெதிரே வந்து மறைந்துவிட்டது போன்ற ஒரு தவிப்பு அவனை அப்படியே சுருட்டி விட்டது!

வெற்றிக் களிப்பில் இருந்த கமலி, அன்று இரவு வழக்கம் போல ஹாஸ்டலில் இருக்கும் அந்த ஒரு ரூபாய் காயின் போனிலிருந்து தன் வீட்டிற்கு கால் பண்ண, சுதாகர் தான் போனை எடுத்தார்.

“அப்பா… நான் தான் பேசுறேன்!” என்று கமலியின் குரலில் அவ்வளவு உற்சாகம்.

“சொல்லுடா ஆத்தா… காலேஜ் எல்லாம் நல்லபடியா போகுதா?, சாப்டியா?” என்று சுதாகர் பாசத்தோடு விசாரிக்க, பரஸ்பரம் வீட்டினரின் நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, ஒரு விஷயம் சொல்லணும் என்றாள். 

தேடல் தொடரும்… 

 

 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top