ரக்ஷனாவை நல்லவள் என்று நினைத்திருந்த மாமியார் நாகேஸ்வரியிடம் அவளது பிம்பம் உடைந்து போனது. தோழியின் மகள், அண்ணனின் மகள் என்ற பாசத்தில் அவளது செயல்களை இத்தனை நாளும் ஏற்றுப் பொறுத்து வந்தவருக்கு, இப்போது நடப்பவை நல்ல விதமாகப் படவில்லை.
அவள் செய்த எத்தனையோ தவறுகளை அவர் கண்டுகொள்ளாமல் பொறுத்துப் போயிருக்க, இப்போது அவள் பேசிய வார்த்தைகள் அவரது மனதில் கொஞ்சமாக வெறுப்பையும் விதைத்துவிட்டன.
தனது மகனை எந்த அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டோம் என அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார் நாகேஸ்வரி. ஆனால் அவளோ, “முதல் மனைவி உயிரோடு இருக்கறப்போ சட்டப்படி அவளை விவாகரத்து செய்யாம, ரெண்டாவது கல்யாணம் செய்வது தப்பு! உங்க மகன் நான் செத்துப்போயிட்டதா நினைச்சுப் பண்ணினாரா? முறைப்படி விவாகரத்து வாங்கி எனக்கு ஜீவனாம்சம் எல்லாம் தந்து அனுப்பிட்டு கல்யாணம் செய்து கூப்பிட்டு வந்தாரா? நான் இப்பவே நல்ல லாயரைப் பார்த்துக் கேஸ் ஃபைல் பண்ணி, இந்தச் சொத்து முழுவதுக்கும் நானும் என் மகளும் மட்டும்தான் உடந்தையானவர்கள். என் கணவரும் அவரது அம்மாவும் என்னை ஏமாத்திட்டதா சொன்னா, உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றதில் அவருக்கு மாரடைப்பே வந்துவிடும் போலிருந்தது.
அவளை அறைந்துவிடுவது போலப் பரிதிவர்மன் சாடி வர, “கட்டுன பொண்டாட்டியை வச்சு நல்ல விதமா பார்க்க முடியல, காதலிச்சுப் பின்னாடி சுத்தியவளையும் முறைப்படி கல்யாணம் செய்து கூப்பிட்டு வரல… நீயும் ஒரு மனுஷனா? என்மேல கையை வச்சுப் பாரு, அப்ப தெரியும்?” என்று எதிர்த்து வந்தாள் திமிராக ரக்ஷனா. அவனால் அவளது வார்த்தையில் உள்ள அர்த்தத்தைத் தாங்க முடியவில்லை.
நாகேஸ்வரியும் கூட மனவேதனை தாளாமல் நின்றார். ‘நந்தனா எல்லாம் தன்னால் வந்தது’ என்று சுவரில் தலையை முட்டிக்கொண்டு அழ, அவளைத் தன் மார்பில் சாய்த்தான் பரிதிவர்மன்.
“மாமா பொண்ணாச்சேன்னு பார்த்தா நீ ரொம்பவும் பேசுறே! இதோ என் பக்கத்துல நின்னுட்டு உன் பேச்சைக் கேட்டு அழுறாளே, அவள் மட்டும் அன்னைக்கு நான் கேட்டப்போ சரின்னு சொல்லி இருந்தா, நீ என்ன அந்த ஆண்டவனே வந்து சொன்னா கூட உன்னைக் கல்யாணம் செய்திருக்க மாட்டேன்” என்று சினந்தான்.
“அவள் என்கிட்ட அந்த மாதிரி நோக்கத்துல பழகல; ‘நீங்க எப்பவும் எனக்கு மாமா மகன் மட்டும்தான், தயவுசெய்து இன்னும் ஒரு முறை இப்படிப் பேசாதீங்க’ன்னு சொல்லி அடுத்த வார்த்தை பேச விடாம, மனதளவில் தள்ளி நிறுத்திட்டா. நானும் அவள் மனசு தெரியாமத் தப்பா பேசிட்டமோன்னு பதறிப்போய் மன்னிப்புக் கேட்டேன். பிறகு, இந்த முட்டாள் என்ன செய்தா தெரியுமா?” என்றவன், “தெரியுமாடி??” என்று சீறினான்.
அந்த அறையில் குண்டூசி விழுந்தால் கூட கேட்டுவிடும் அளவிற்கு அத்தனை அமைதியாக இருந்தது.
“அவள் என்ன செய்தாள்? அதுக்குப் பிறகு என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரியுமா? அவங்க அப்பா எதனால் இறந்தார்? ஏன் நான் உன்னைக் கல்யாணம் செய்தும் வாழ்க்கையில் எவ்வளவோ நடந்தும், யார்கிட்டயும் சொல்லாம இருந்தேன் தெரியுமா? நீ என்ன அவ்வளவு நல்லவளாடி? நிமிஷத்துக்கு நிமிஷம் என்னைக் குற்றவாளி மாதிரி பேசுறியே! நீ யார்? எப்படிப்பட்டவள் எனக்குத் தெரியாதா? ஏதோ டைவர்ஸ், கோர்ட், ஜீவனாம்சம் சொன்னியே… என்கிட்ட அப்படிப் பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? என் மாமனின் மகள் என்பதைத் தாண்டி உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீதான் ஏற்கனவே என்னை டைவர்ஸ் பண்றதா சொல்லி லாயரைப் பார்த்துப் பேசி, அந்தப் பத்திரத்தை என் முகத்தில் விட்டெறிந்துட்டு, ‘உனக்கும் எனக்கும் எதுவுமே இல்லை! என் வாழ்க்கையில் நீ தலையிடக்கூடாது. யாரைக் கட்டினாலும் யார் கூடப் போனாலும் நான் கேட்க மாட்டேன்’னு போயிட்டியே…….
பிறகு, நான் உன்னைத் தேடி வந்து கொஞ்சணும்; காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கணும், உன்னையே நினைச்சு என் வாழ்க்கையை அர்ப்பணிக்கணுமா?” என்று வெடித்தான் பரிதிவர்மன்.
அவன் அம்மா தன் மார்பின் மீது கையை வைத்து அழுத்தியபடி அப்படியே சுவரில் சாய்ந்துவிட்டார். அவன் திரும்பி அவரைப் பார்த்துவிட்டு, “அதோ நிற்கிறார்களே, அவர்களுக்குக் கொஞ்சமாவது பெத்த பிள்ளையின் மீது பாசம் இருந்ததா? இருந்திருந்தா என் வாழ்க்கையைப் பற்றி நினைக்காம, சதா உங்களுக்காகவும் உங்க அம்மாவுக்காகவும் என்கிட்ட சண்டை போடுவாங்களா?” என்று கர்ஜித்தான்.
“என் மாமன் மகள் என்பதைத் தாண்டி உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லைன்னு நான் அவங்ககிட்ட சொல்ல முடியாம இருந்தேன். உனக்கும் எனக்கும் இடையில் இருக்கும் உறவை மொத்தமா முறிச்சுட்டு, என் வாழ்க்கையை ஆரம்பிக்க நினைச்சிருந்தேன். அதுக்கு முன்னாடி இவள் சித்தி செய்த வேலை, இந்த வீட்டுக்கு அவளை மருமகளா கொண்டு வந்துருச்சு. நிமிஷத்துக்கு நிமிஷம் குத்திப் பேசுறியே… அவள் திருப்பிக் கேட்டா உன்னால் பதில் தர முடியுமா?” என்றான்.
ரக்ஷனா அலட்சியமாகத் தோளைக் குலுக்கிக்கொண்டு எதுவுமே நடக்காதது போல நின்றாள்.
“நீ நினைச்சிருந்தா இந்த வாழ்க்கையை நல்ல விதமா மாற்றி அமைத்திருக்கலாம். ஆனா, அம்மாவைப் போன்ற பிடிவாதமான குணம், எல்லாரும் தனக்குக் கட்டுப்பட்டு நடக்கணும், எங்களின் ஒட்டுமொத்த சொத்துக்கும் தானே அதிபதி ஆகணும்னு நினைச்சதால்தான் நிரந்தரமான பிரிவு வந்தது. அதை மறைக்க என்னவெல்லாம் பேசுற?” என்று அவனது உதடுகள் கோணலாக நெளிந்தன.
ரக்ஷனாவின் தில்லுமுல்லுகள் ஒவ்வொன்றாக வெளியே வர, நாகேஸ்வரியின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியது. மகன் மனதில் இருப்பது தெரியாமல் எப்படி எல்லாம் நடந்துவிட்டோம் என்று வருந்தி, மானசீகமாக அவனிடம் மன்னிப்புக் கேட்டார்.
“அன்னைக்கு உங்க பெரியம்மாவுக்கும் உங்க அப்பாவுக்கும் கல்யாணம் நடந்திருந்தா, இப்ப நீ இருக்கும் இடத்தில் அவள்தான் உரிமையான தாய்மாமனின் மகளா, எங்க அம்மாவுக்குப் பிடித்த மருமகளாக இருந்திருப்பா. உன் தாய் செய்த தவறு, அவங்க அம்மாவை அவமதித்து அநாதையாகத் தவிக்கவிட்டு, மறுபடியும் தன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ விடாமல் பண்ணிடுச்சு. அவள் அம்மாவைப் பறிகொடுத்துப் பட்ட கஷ்டம் எங்க அப்பாவைப் பாதித்ததால், அவர்தான் நந்தனாவை பார்த்துக்கிட்டார். எங்க அப்பா மட்டும் இப்ப உயிரோடு இருந்தா, உங்க அம்மாவை இப்படி எல்லாம் நடக்க விட்டிருப்பாரா?” என்று ஆவேசமாகக் கேட்டான்.
ரக்ஷனா கைகளைக் கட்டிக்கொண்டு அவனையே பார்க்க, “நந்தனா பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும். அவளைப்போல நிவேதாவும் கஷ்டப்பட நான் விடமாட்டேன். அவள் என் மகள்; இந்த வீட்டு வாரிசு! எனக்கும் நந்தனாவுக்கும் மகளாக வளரப் போகிறவள். இவளை வச்சு என்னை என்னவெல்லாம் பேசினே! அன்னைக்கு என்ன நடந்தது உனக்குத் தெரியுமா? என்மேல இவ்வளவு கோபப்படவும், நந்தனா இப்படி இருக்கவும் காரணம் யார்? ஏன் அவள் இந்த வீட்டு மருமகளா வர இத்தனை நாள் ஆனதுன்னாவது தெரியுமா? தெரியுமாடி!! அடங்காபிடாரி மாதிரி சதா கத்திட்டு எங்க எல்லார் நிம்மதியையும் பறிக்கிறியே… இப்ப சொல்றேன் கேள்! கேட்டுட்டு நீயே முடிவெடு” என்றான் பரிதிவர்மன்.
மூன்று வருடங்களுக்கு முன்பு தாணுலிங்கம் இறந்துபோன வருத்தத்தில் சோகத்தின் பிடியில் மூழ்கியிருந்த பரிதிவர்மனை, கூடவே இருந்து ஆரம்பத்தில் தேற்றியது வேல்முருகன் என்றாலும், வனிதாவின் அதிகப்படியான பேச்சும், உரிமையாக தன் வீடு போல நடந்து கொண்ட விதமும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவரை எதுவும் சொல்லக் கூடாது என்று அமைதியாக இருந்தான். அப்படி இல்லாத நேரம் பண்ணை வீட்டுக்குப் போய்விடுவான்.
அப்பாவின் சமாதியில் உள்ள அகர்பத்தி வாசனை, ‘நான் இங்கேதான் இருக்கிறேன், கவலைப்படாமல் இரு!’ என்று சொல்லாமல் சொல்லியது.
சதாசிவம் மருமகனிடம் நல்ல விதமாகப் பேசி எதார்த்தத்தை உணர வைக்க, அவனோ சின்னப் பிள்ளை போல ஏற்றுக்கொள்ள முடியாமல் அடம்பிடித்தான். ஒற்றைப் பிள்ளை; அப்பாவின் செல்லம்; அவன் கேட்ட அத்தனையும் மறுக்காமல் செய்து தந்து நிழலாகப் பாதுகாத்தவர். திடீரென அவனை விட்டுப் போய் விட, அவரது இழப்பை அவனால் ஏற்கவே முடியவில்லை.
சதாசிவம் வீட்டிற்குச் சென்ற பின்னர் மருமகன் நிலை குறித்துத் தனது மகளிடம் தெரிவிக்க, அவளோ காலையில் கல்லூரிக்குச் செல்ல வேண்டியுள்ளதால், அவனுக்காக மாலை நேரம் கோழிப்பண்ணைக்கு வருகை தந்தாள். அவனது சோகமே உருவான முகமும், சரியாக உண்ணாமல் வாடிப் போயிருக்கும் தோற்றமும், எப்போதும் குறும்பாகப் பேசிக்கொண்டு துறுதுறுப்பாக இருக்கும் அவனை அப்படிப் பார்க்க விடாமல் செய்தது.
அவன் அருகில் அமர்ந்து பேசினாள்; பசியறிந்து உணவு ஊட்டினாள். மாமாவின் சமாதியின் முன்பு அழைத்துச் சென்று, “உங்க மகன் எதுவும் சொன்னா கேட்பதில்லை மாமா! சின்னப் பிள்ளையை விட மோசமாக நடந்துக்கிறார். வந்து என்னன்னு கேளுங்க” என்று சொன்னாள்.
அவன் அப்போதும் அப்படியே இருக்க, “இந்தத் தூங்குமூஞ்சி அத்தான் நல்லா இல்ல மாமா. எப்பப்பாரு அழுது வடிஞ்சுட்டு, கட்டில்லயே விழுந்து கிடக்குது” என்று கிண்டலாகக் கூறினாள்.
அவன் முறைத்ததும் அவள் அழகு காட்டினாள்; இதழ்களை விரித்து இழித்துக் காட்டினாள்; இடுப்பில் கையை வைத்து முறைத்தாள். சேட்டைகள் பல புரிந்து அவன் மனதை எப்படி எப்படியோ மாற்ற முயன்றாள். அவனும் புரிந்து கொண்டு அவளது கூந்தலைப் பற்றி இழுத்தான்; காதைப் பற்றித் திருகினான்; கன்னத்தில் கிள்ளினான். அவளது செயல்கள் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டு வந்தது.
அவளைப் பார்ப்பதற்காகத் தினமும் மாலை நேரம் வந்தான். அவன் சரியாகிவிட்ட மகிழ்ச்சியில் அவளும் வர, வார விடுமுறை நாளில் கோழிப்பண்ணையின் ஒரு வார கணக்கு வழக்குகளையும் சரிபார்த்துக் கொடுத்தாள். நாளாக நாளாக அவளது அக்கறையும் அன்பும், ‘அவளை மணந்தால் என்ன?’ என்ற கேள்வியுடன், ‘அப்பாவைத்தான் இழந்துவிட்டோம், இவளையும் இழந்துவிடக்கூடாது’ என்ற எண்ணத்தை அவனுக்குள்ளே வரவழைத்தது.
கணவர் வேல்முருகனுடன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாலும், ஏற்கனவே நாகேஸ்வரியை மூளை சலவை செய்வதில் கெட்டிக்காரியான வனிதா, இப்போது பாச முலாம் பூசினாள். மகன் காலையில் வெளிவேலையிலும் மாலையில் கோழிப்பண்ணையிலும் இருப்பதால் அம்மா தனியாக இருப்பதை அவனும் மறந்து போனான்.
அவருக்குத் தனியாக இருப்பதற்கு வெறுப்பு அதிகரித்தது. வனிதா, “கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டுக்கு வந்து தங்களுடன் இருக்குமாறு” அழைத்தாள். நாகேஸ்வரிக்கு ஆசையாக இருந்தாலும், கணவர் இறந்து ஆறு மாதம்கூட ஆகாமல் எப்படி வருவது என்று தயங்கினார்.
மகன் வீட்டிற்கு வரும் நேரம், அத்தை சொல்வதை அவர் சொல்ல, “என்னால எங்கேயும் வர முடியாது. ஆபிஸ் வேலை தலைமேல குவிந்து கிடக்குது. அப்பா இறந்ததால் சரிவர கவனிக்க முடியலை, பி.ஏ. தான் எனக்குப் பதிலா எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கார். அதோடு பண்ணையும் மற்ற சொத்துக்களையும் மாமா தான் சிரத்தையோடு பார்த்துக்கிறாங்க. இதை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு எப்படி வர முடியும்?” என்றான்.
உண்மைதான்! அவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள் அல்லவே! உடனே எப்படிச் சென்றுவிட முடியும்? அதனால் வனிதா சொல்லும்போது நாகேஸ்வரியும் அதையே சொன்னார்.
“நான் மட்டும் இப்ப அங்க இருந்தா, உன் கூடவே இருந்து முழு நேரமும் பார்த்துப்பேன். யாரும் இல்லாத கானகத்தில் வந்து மாட்டிக்கிட்டேனே… உங்க அண்ணா ஊர்ல இருந்து வந்த நேரத்துல இருந்து ஆபிஸ் வேலையில மூழ்கிட்டார். எது சொன்னாலும் அசைவது கூட இல்லை. நான் வேணா ரக்ஷனாவுக்கு ஒரு மாத விடுமுறை வருகிறப்போ, கண்டிப்பா பார்க்க வரேன்” என்றாள் வனிதா. அவளும் வனிதாவின் பேச்சை உண்மை என்று நம்பினாள்.
பின்னர் ஒருநாள் பேசுகையில், “பேசாம உன் பையனுக்கும் என் பொண்ணுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா, உன் மகன் வெளி வேலையா இருந்தாலும், சனா உன்கூட இருந்து பார்த்துப்பா; ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கும். உன் மகனும் பொண்டாட்டி வந்த பிறகு நேரத்துக்கு வீட்டுக்கு வந்து ஒழுங்கா இருப்பான், இங்கேயும் வரலாம்” என்று ஆசையைத் தூண்டிவிட்டாள் வனிதா. அடிக்கடி நாகேஸ்வரியிடம் இப்படியே பேசிக்கொண்டிருக்க, அவளுக்கும் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தால் என்ன என்ற எண்ணம் முளைவிட்டது.
அதைத் தனது மகன் பரிதிவர்மனிடம் வெளிப்படுத்தியபோது அவன் மறுக்கவே செய்தான். அம்மாவின் பேச்சும் பிடிவாதமும் பிடிக்காமல் சத்தமிட்டான்.
“இந்தப் பேச்சை எடுக்கக் கூடாது. பிறகு வீட்டுக்கு வராம பண்ணை வீட்டுலயே இருந்துடுவேன்” என்று எச்சரித்தான்.
ரக்ஷனாவைத் திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இல்லை என்று கடுமையாகக் கூறிவிட்டுச் சென்றான். ஒருநாள் என்றால் பரவாயில்லை, பாதி நேரமும் இப்படியே சொல்வதைக் கேட்கும்போது எரிச்சல் மூண்டது.
அதே கோபத்தில் காலை நேரம் வெளியே வந்தவன், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த நந்தனாவிடம் வம்பு பேசி கிண்டலடிக்கும் சந்திரகுமாரைக் காணவும் கோபம் அதிகரித்தது.
நந்தனா கண்கலங்கியபடி நிற்பதைக் கண்டவன் ஆத்திரமாக அருகில் சென்று, “எதுக்குடா காலேஜ் போற பொண்ணு கிட்ட வம்பு செய்றே?” என்று கேட்டான்.
அவனோ இவனைத் தூசாகக் கருதி ஒதுக்கிவிட்டுப் பிடிவாதமாக இருக்க, பரிதிவர்மனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனது சட்டையைப் பற்றி இழுத்துத் தள்ளிவிட, இருவருக்கும் மோதல் உருவானது.
சந்திரகுமார், “உனக்குத்தான் வீட்டுல வேற கல்யாண ஏற்பாடு நடக்கப் போவதா ஊரெல்லாம் பேச்சா இருக்குதே! பிறகும் எதுக்குடா நான் கட்டிக்கப் போறவ கிட்டயும் வந்து உரிமை எடுக்கப் பார்க்கிற? உனக்கு அந்த வெளிநாட்டுக்காரி போதாதா?” என்று இளக்காரமாகக் கேட்க, அவனை ஓங்கி அறைந்துவிட்டான் பரிதிவர்மன்.
அதில் இருவரும் மாறி மாறிச் சண்டையிட, அவனது சட்டையைக் கிழித்து அவமதித்து ரத்தக்கறையுடன் அனுப்பிவிட்டான். சந்திரகுமாரால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. “உன்னை சும்மா விட மாட்டேன்” என்று கொக்கரித்தான்.
அதே கோபத்துடன் வீட்டிற்கு வந்தவன் நீலாம்பரியிடம் சொல்லிக் காட்டுக்கத்தல் கத்தினான். அவளுக்கும் இதற்கு மேலும் இதை சும்மா விடக்கூடாது என்று தோன்றிவிட, மாலையில் கல்லூரிக்குச் சென்று வந்தவளைப் பிடித்து பிலுபிலுவென உலுக்கி எடுத்துவிட்டாள்.
“அவனுக்கு என்ன தைரியம் இருந்தா இப்படிச் செய்திருப்பான்? சந்திரன் மேல கை வச்சவனின் தலை எடுக்க எவ்வளவு நேரமாகும்! இனிமேல் அவனைப் பார்த்தேன், பேசினேன்னு இருந்தா அப்புறம் அவனை நிரந்தரமா பார்க்க முடியாம செய்துடுவோம்” என்று வெளிப்படையாக மிரட்டினாள்.
சித்தியிடம் இதுநாள் வரை இப்படி ஒரு கோபத்தைப் பார்த்திராத நந்தனா அரண்டு போனாள்.
“உன் மாமன் இருந்த தைரியத்துலதான் இத்தனை நாளும் உங்க அப்பனும் அந்த ஆட்டம் போட்டார். இப்பத்தான் போய் சேர்ந்தாச்சுல்ல! இனியாவது ஒழுங்கா இரு, இல்லை அவருக்குப் பின்னாடியே மகனையும் அனுப்பி வச்சிடுவோம்” என்று எச்சரித்தாள்.
நீலாம்பரியின் வார்த்தையில் பயந்துபோன நந்தனா அவசரமாகத் தலையாட்ட, “உன் மாமியா ஒரு நாளும் இந்த வீட்டுக்கு நான் கல்யாணமாகி வந்த பிறகு சரியா வந்தவ கிடையாது. ஒரு இடத்துல பார்த்தாக்கூடப் பேசுவது இல்லை, பிறகு உன்னை யாருடி அந்த வீட்டுக்குக் கட்டிக் கொடுக்கப் போறாங்க? தன் மவனுக்கு அண்ணன் மகளைக் கட்டி வச்சு கூடவே இருந்து பார்த்துக்கப் போறதா எல்லார் கிட்டயும் தம்பட்டம் அடிச்சுட்டு இருக்கிறவ, உன்னையா மருமகளா ஏத்துக்கப் போறா?
உன் அம்மாக்காரி செய்த தப்பு மாதிரி நீயும் செய்து அவமானப்பட்டு நிற்காதே! உன்னை அவள் ஒரு நாளும் மருமகளா ஏத்துக்க மாட்டா. ஒழுங்கு மரியாதையா இரு! இல்ல நாளைக்கே சந்திரனை வரவச்சு, உன் கழுத்துல தாலியைக் கட்ட சொல்லி அவன் கூடவே அனுப்பிவிட்டுருவேன்” என்றாள்.
அன்று முழுவதும் அதையே போட்டு மனதுக்குள் உளப்பியவள், நிஜமாகவே ரக்ஷனாவுக்கும் அவனுக்கும் கல்யாணம் பேசுகிறார்களா என்று தெரியாமல் குழம்பினாள். அதனால் இரவு நேரத்தில் அப்பா வந்ததும் கேட்க, அவரும் தன்னிடம் வந்து பரிதிவர்மன் சொல்லிப் புலம்பியதாகக் கூறினார்.
அப்படியானால் அவனுக்குத் திருமணப் பேச்சு ஆரம்பித்துவிட்டதா? ரக்ஷனாவைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறானா என்று தெரியாமல் பலத்த குழப்பம் அவளை ஆட்கொண்டது.
யாரிடமும் சென்று வாய் திறந்து கேட்க முடியாமல் மௌனமாகக் கண்ணீர் வடிக்க, மறுநாள் முதல் வீட்டிற்கு முன்புறம் நின்று கல்லூரிப் பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டு வந்தாள். மாலையில் கோழிப்பண்ணைக்குப் போவதைத் தவிர்த்தாள்.
அவனால் இரண்டு நாள்கூடப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
இவனது ஊரின் பின்பகுதியில்தான் கோழிப்பண்ணை அமைத்திருக்கிறான் பரிதிவர்மன். நல்ல காற்றோட்டமாகவும் இதமான வெயில், சாலை வசதி, மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காதவாறு உருவாக்கினான். அதே இடத்திலிருந்து செல்லும் சாலை இரண்டாகப் பிரிந்து அடுத்த ஊருக்குச் செல்கிறது. அங்குதான் நந்தனாவின் வீடு உள்ளது. அவளைப் பார்க்க வீட்டிற்கு வந்தவன் நந்தனாவின் பெயரைச் சொல்லி அழைக்க, அவள் வரவே இல்லை. கல்லூரிக்குச் சென்றுவிட்டு இன்னும் வீட்டுக்கு வரவில்லையா என்று நினைத்தவன், இரண்டொரு முறை அழைத்துப் பார்த்தும்; கைப்பேசியில் தொடர்பு கொண்டும் முடியாமல், பைக்கை எடுத்துக்கொண்டு சென்றுவிட, நந்தனாவின் அறைக்கதவைப் பூட்டி வெளியே காவலாக நின்ற நீலாம்பரி, “வாய் திறந்து பதில் சொன்னால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினாள்.
அவள் வாயை மூடி ஓசையின்றி விம்ம, வீட்டில் அம்மாவின் தொல்லையும், நந்தனாவைக் காணாத விரக்தியும் சேர, பண்ணை வீட்டில் விழுந்து கிடந்தான் பரிதிவர்மன்.
‘ஏன் அவள் தன்னைப் பார்க்க வராமல் இருக்கிறாள்?’ என்ற கேள்வியே அவனை அலைக்கழிக்க, உண்ண மனமற்றுப் படுக்கையில் விழுந்து கிடந்தான்.
அந்த நேரம் உள்ளே வந்த சதாசிவம், மருமகனின் அருகில் சென்று என்னவென்று கேட்க, அவன் நடந்ததை மறைக்காமல் தெரியப்படுத்தினான். அவர் புரியாமல் பார்த்ததும், “நந்துவை பார்க்காம ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா! வீட்டுலயும் அம்மா என்னைப் புரிஞ்சுக்காம நடந்துக்குறாங்க. எனக்கு என்ன செய்வதுன்னு தெரியல” என்று ஆதங்கத்துடன் சொன்னான்.
அவர் தன் மருமகனிடம் ஆறுதலாகப் பேச, அடுத்ததாக அவன் சொன்ன வார்த்தைகள், நம்ப முடியாத அளவுக்கு அவரை அதிர்ச்சியில் மூழ்கடித்தது.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
