வேள்வி : 14

அத்தியாயம் : 14

இரவு நேரம் அனைவரும் உணவை முடித்தனர். பேத்தியை தூக்கிச் செல்ல நாகேஸ்வரி முயற்சிக்க, “இல்ல அத்தை! இத்தனை நாளும் நீங்கதானே பார்த்துக்கிட்டீங்க. இனி நான் என் மகளைப் பார்த்துக்கறேன். நீங்க போய் ஓய்வெடுங்க” என்றவள், நந்தனாவைப் பார்த்துத் தன்னுடன் வருமாறு அழைத்தாள்.

அவள் தயங்கியபடி கணவனைப் பார்க்க, “வா, உன்கிட்ட நான் பேசணும்” என்று அழைத்துச் சென்றாள்.

நந்தனா தலையசைத்தபடி மாடிக்கு வர, பரிதிவர்மன் தப்பாக எதுவும் சொல்லிக் கொடுத்து விடக்கூடாது என்று பயந்தான்.

இருவரும் உள்ளே வந்ததும், “அம்மா!” என்று மகள் அவளிடம் தாவ, நந்தனா குழந்தையைத் தூக்கி அணைத்து முத்தமிட்டாள்.

“நந்தனா, உனக்காக நான் சில கிஃப்ட்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். சென்ற முறையே வாங்கிட்டு வந்தும் தர முடியல. ஆமாம், அத்தனை நாளும் சொந்த ஊரில் இருந்தவ எதனால் ஹாஸ்டலுக்குப் போன? ஏன் உங்க அப்பா உன் கல்யாண நேரம் இறந்து போனார்? இப்ப எப்படி உன் கல்யாணம் நடந்தது? உன் சித்தி இந்த வீட்டுப் பக்கமே வர அனுமதிக்க மாட்டாரே, எங்க அத்தையும் கூட உன்னைப் பற்றி நல்ல விதமா பேசி நான் அறியலையே!” என்று கேட்க, நந்தனா பதில் கூறத் தடுமாறினாள்.

அவள் எழுந்து நின்று, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு இந்தக் கல்யாணத்தில் கொஞ்சமும் விருப்பமில்லை. எப்போதுடா இங்கே இருந்து ஃபாரினுக்குப் போயிட மாட்டோமான்னு இருந்தது. மறுபடியும் வந்தால் எங்கே இங்கிருந்து போக முடியாதோன்னு வரவே இல்லை” என்றாள்.

நந்தனா அப்போதும் வாய் திறக்காமல் இருப்பது கண்டு, “என் மகளை என்னோடு அழைத்துச் செல்லவே நான் இங்கு வந்தேன். இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பிடுவேன்” என கூறினாள்.

நந்தனா அதிர்ந்து போனாள்.

அவளால் குழந்தை நிவேதாவைப் பிரிந்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை; அவள் கணவன் கண்டிப்பாக மாட்டான். அத்தையும் கூடப் பேத்தியைப் பிரிந்து இருக்க சம்மதிக்க மாட்டார். இவள் வந்தவுடன் இப்படிப் பேசுகிறாளே!

“ஒரு நாள் அந்தக் கோழிப் பண்ணைக்குப் போனேன். பிறகு அங்குப் போகும் ஆசையே இல்லாம ஆகிடுச்சு. எப்பவும் நீட் அண்ட் க்ளீனா இருக்கும் எனக்கு அந்த ஸ்மெல், அங்குள்ள அட்மோஸ்பியர் சுத்தமா ஒத்து வரல; அதை டிஸ்போஸ் பண்ணிட்டு வரச் சொல்லியும் கேட்கல” என்றவள், நந்தனாவின் அருகில் வந்தாள்.

“நீயே சொல்லு! சாதாரண நேரத்துலயே எனக்கு அதைப் பிடிக்கல, இதுல கல்யாணமான பிறகு மாலை முதல் ராத்திரி வரை அங்கேயே இருந்தா பிடிக்குமா?”

நந்தனா எச்சிலைக்கூட்டி விழுங்கினாள்.

“ரெண்டாவது, எங்க அம்மா இவர் என்னை விரும்பி கல்யாணம் பண்ணச் சம்மதம் தெரிவித்து இருப்பதாகச் சொன்னாங்க. ‘உன்மேல அவருக்கு இருப்பது இரக்கம்; யாருமில்லாத நிலையில் கஷ்டப்பட்ட உனக்குச் செய்த கைம்மாறு, அவளை விரும்பியிருந்தா உன்னைக் கல்யாணம் செய்ய சம்மதித்து இருக்க மாட்டான்’னு சொன்னாங்க. ஆனா, அவர் முன்னாடி நான் வந்தப்போ பேசின அளவு கூட அதுக்குப் பிறகு பேசல. அதிலும் எங்க அத்தையின் வற்புறுத்தலில் வெளியே கூட்டி வந்தப்ப கூட, உன்னைக் கண்டதும் என்னை விட்டுப் போயிட்டார். நீ பெருசா என்னைப் பற்றி அறிஞ்சிருக்க வாய்ப்பில்லை! நான் என் மனசைச் சுத்தமா வச்சிருப்பது போல, என்னைக் கட்டிக்கப் போறவரும் இருக்கணும். அவருக்கு எல்லாமே நானாக மட்டும் இருந்து, அவருக்கானத்தைச் செய்து தரணும்னு ஏகப்பட்ட ஆசைகள்! அது அத்தனையும் எரிந்து கருகிப் போயிடுச்சு…” என்று முகம் இறுகச் சொன்னாள்.

நந்தனாவின் அடிமனதில் அவள் மீது ஒருவிதப் பரிதாபம் பிறந்தது. யாராக இருந்தாலும் தொட்டுத் தாலி கட்டிய கணவனின் மனதில் தாங்கள் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும் என்றுதானே நினைப்பார்கள்?

“ம்கூம்… அதோடு எங்க அம்மா செய்த ஒருசில காரியங்கள் இன்னும் கோபத்தை அதிகரிக்க, எதுவும் வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டேன். எனக்கு அவரைப் பார்த்தாலே பிடிக்கல; மனசுல உன்னை வச்சுட்டு என்னைக் கட்டிக்கிட்ட அவர் இருக்கும் இடத்தில் இருக்கவே வெறுப்பா இருக்கு! அவர் ஆம்பிளை தானே, நினைச்சா அவர்களை அடக்க முடியாதா?” என்று கோபமாகக் கேட்டாள்.

 

அவள் கணவனைத் தன் முன்னே தொடர்ந்து குறை சொல்வதைக் கேட்க முடியாமல், “இல்லை ரக்ஷனா! அத்தான் மீது எந்தத் தப்பும் இல்லை. அவர் உன்னைப் பற்றி மாமா இறந்துபோவதற்கு முந்தைய நாள் கூட, எவ்வளவு பெருமையா பேசினார் தெரியுமா?” என்றதும், அவள் புருவத்தை சுருக்கினாள். நந்தனா தன் பிறந்தநாள் அன்று நடந்ததை மறைக்காமல் தெரியப்படுத்தி, கணவன் மீதான எதிர்மறையை களைய முயன்றாள்.

 

ரக்ஷனா அவள் முகத்தையே பார்த்தாள். “அதுமட்டுமல்ல, நானும் அத்தானும் சாதாரணமா பேசியது தவிர, வேறு எதுவும் பேசியதில்லை; நாங்க ஒருவரையொருவர் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணும் நோக்கத்தில் பழகவும் இல்லை” என்று கூறி அவளது சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

இன்னும் நந்தனா என்ன சொல்ல வருகிறாள் என்று அவள் பார்க்க, “ரக்ஷனா, உன்னை அவர் கல்யாணம் செய்யணும் என்பது கடவுளின் விருப்பம். அதுதான் நடந்தது. இனியும் அதைப் பற்றிப் பேச வேண்டாமே! ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கே, பழையதை மறந்துட்டு சந்தோஷமா இரு” என்றாள்.

ரக்ஷனாவின் தொண்டை அடைத்துக் கண்களில் நீர் நிரம்பியது. அதை நந்தனாவிடம் காட்டாமல் மறைத்து, “ம்கூம்… சந்தோஷமா? அதைத்தான் எல்லாருமா சேர்ந்து குழி தோண்டிப் புதைச்சிட்டாங்களே! இனி எங்கே வரப் போகுது?” என்றவள், “என் பிள்ளையைத் தவிர வேறு எதுவும் எனக்கு இல்லை” என்று கசந்த மனதுடன் கூறினாள்.

அவளை எப்படிப் பேசி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் நந்தனா தவிக்க, “என்னைப் பற்றி விடு! அது முடிஞ்சு போனது. உன்னைப் பற்றிச் சொல்லு. முன்னாடி வந்தப்போ ரொம்பச் சின்னப் பெண்ணா நாம இருந்தோம். இப்ப பாரு பெரிய ஆளாகிட்டோம் குடும்ப ஸ்திரி…..” என்ற வார்த்தையில் நந்தனா மெலிதாகச் சிரித்தாள்.

“எனக்கு உங்க அப்பா இறப்பு பற்றித் தெரியணும். அப்படியே இந்த வீட்டுக்கு நீ எப்படி வந்தே? உன்னை எப்படி அத்தை அனுமதித்தார்?” என்று கேட்டாள் ரக்ஷனா.

எப்படிச் சொல்வது என்று நந்தனா தயங்க, “உனக்காவது என்மேல உண்மையான பாசமிருந்தா சொல்லு” என்றதும், “ரக்ஷனா, அத்தான் ரொம்பவும் நல்லவர்! நீ ஏன் நடந்ததை எல்லாம் மறந்துட்டு இதே வீட்டில் அவர் கூட சேர்ந்து வாழக் கூடாது? குழந்தையும் பாவம் இல்லையா!” என்று கேட்டாள்.

ரக்ஷனா தன் எதிரே நின்றவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். பின்னர், “முதல்ல உன்னைப் பற்றிச் சொல்லு! உனக்கு எப்ப எப்படி கல்யாணம் நடந்தது? அந்த ரௌடி பையன் உன்னைத் தொடர்ந்து வந்து வம்பு செய்ததா கேள்விப்பட்டேன். அவன் கிட்ட இருந்து காப்பாத்த அத்தான் உன்னைக் காப்பாற்றிக் கட்டிக்கிட்டாரா?” என்றதும், படாரென எழுந்துவிட்டாள் நந்தனா.

அவளது கைகால் நடுங்கியது. பேச நா வராமல் திக்கியது.

“சொல்லு!” என்று ரக்ஷனா அழுத்தமாகக் கேட்க, ‘எல்லாம் தெரிந்துதான் வந்திருக்கிறாள். இப்போது என்ன செய்வது?’ என்ற தடுமாற்றம் நந்தனாவின் மனதில் எழுந்தது.

“எனக்குத் தெரியாம இங்கு எதுவும் நடக்காது நந்தனா?” என்று ரக்ஷனா சொல்ல, அவள் பயத்தில் மெய் விதிர்விதிர்க்க நின்றாள்.

‘கடவுளே! இதென்ன விபரீதம்? நான் சொல்லப் போகும் வார்த்தையால் அவளது வாழ்க்கை வீணாகிப் போய்விட்டால் என்ன செய்வது?’ என்று நந்தனா பதற்றம் அடைந்தாள்.

“என்ன, உன்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ணியவருக்கு ஆதரவா எப்படிப் பேசுவதுன்னு யோசிக்கிறியா? உனக்கு வேணா அவர் நல்லவரா, உன் வாழ்க்கையைக் காப்பாற்றியவரா இருக்கலாம்; எனக்கு அவர் எப்பவும் வேண்டாதவர் தான்!” என்று அழுத்திச் சொன்னாள். கூடவே “என் மகளுக்கு இனிஷியல் பிரச்சனை வராம இருக்க மட்டும் அவர் போதும்!” எனச் சொல்லிவிட்டாள்.

நந்தனா பலமாக தாக்கப்பட்டு, வாய் திறக்க முடியாத நிலையில் இருந்தாள்.

“மிஸ்டர் பரிதிவர்மனைப் போல ஒரு முட்டாளை நான் எங்கேயும் பார்த்ததில்லை. உன்னைக் கண்டதும் உன் கூடவே சுற்றினார்; நான் வந்ததும் என்னைக் கட்டிக்கிட்டார். இப்ப விட்டுப் போனதும் மறுபடியும் உன்னை… என்னால இனிமேல் அவரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பில்லை. எனக்கு எப்பவும் ப்ரெஷ்ஷாகத் தான் இருக்கணும்” என்ற வார்த்தையில் நந்தனா வெலவெலத்துப் போனாள்.

தன்னைச் சொன்னபோது கூட அமைதியாக இருந்தவளுக்கு, அவனைப் பற்றிச் சொன்னதும் தாங்க முடியாமல் போய்விட்டது. இன்னும் இன்னும் அவள் பேச, நந்தனாவால் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை.

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஜூஸில் கலந்திருப்பது விஸ்கின்னு கூடத் தெரியாம குடிச்சுட்டு வந்து, என்கூட அப்படி நடந்து இந்தப் பிள்ளையை வயித்துல தந்துட்டார். என் கூட இருந்தது கூட அவருக்கு ஞாபகம் இல்லை. பிறகு எப்படி அவரை உத்தமன்னு சொல்ல முடியும்?” என்ற அந்த ஒற்றை வார்த்தையில் நிஜமாகவே அதிர்ந்துவிட்டாள் நந்தனா.

‘இல்லை! என் கணவன் அப்படிப்பட்டவன் இல்லை! ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாதவன் அவன்’ என்று மனதிற்குள் கதறினாள்.

 

மேலும் தங்கை பேசிய வார்த்தையைக் காது கொடுத்துக் கேட்க முடியாமல், செவி இரண்டையும் மூடிக் கொண்டு மனதிற்குள் மௌனமாய் அழுதாள். அதற்கு மேலும் அங்கேயே நின்று அவளது பேச்சைக் கேட்க விரும்பாமல், கீழே இறங்கிச் சென்றுவிட்டாள்.

 

நேராகத் தனது அறை வாசலுக்கு வந்து சுவரில் சாய்ந்து கொண்டு தேம்பி அழ, அவளைப் பார்த்து அருகில் சென்று ஆதரவாக ஒரு வார்த்தைகூடப் பேச முடியாமல் தவித்தார் நாகேஸ்வரி.

பரிதிவர்மன் மனைவியின் அருகில் சென்று தோளில் கை வைக்க, அவன் முகத்தை ஏக்கமாக நோக்கியவள், ‘உன்னைப் போய் அவள் இப்படி எல்லாம் சொல்லிவிட்டாளே!’ என்று விம்மினாள்.

அவன் மனைவியை தன் மார்பில் சாய்த்துத் தட்டிக்கொடுக்க, நாகேஸ்வரி இருவரையும் பார்த்துக் கண்கலங்கி நின்றார்.

மறுநாள் காலையில் கீழே இறங்கி வந்த ரக்ஷனா, குழந்தை தன் தந்தையை நோக்கி ஓடுவதைக் கண்டு வேண்டுமென்றே உதாசினப்படுத்திப் பேசினாள்.

நாகேஸ்வரி மருமகளின் அருகில் வந்து, “என்னம்மா இது, உங்க அம்மாவைப் போல நீயும் அடுத்தவங்க மனசைப் புரிஞ்சுக்காம நடந்துக்கிறே! அவன் தானே இத்தனை நாளும் இந்தக் குழந்தையைத் தூக்கிப் போட்டு வளர்த்தான்? உங்களுக்குள்ள ஆயிரம் மனஸ்தாபம் இருந்தாலும், குழந்தை நிவேதாவிடம் அவன் இதுவரை அதைக் காட்டியதே இல்லையே!” என்று ஆதங்கப்பட்டார்.

“அது எப்படி இல்லாம போகும்? அந்தக் குழந்தையின் அப்பா அவர்தான் என்கிறப்போ பார்க்காம தூக்கி வீசி எறிஞ்சுடுவாரா?” என்று நக்கல் செய்தாள் ரக்ஷனா.

அவர் புரியாமல் மகனையும் அவளையும் மாறி மாறிப் பார்க்க, “பிடிக்காத பொண்டாட்டியின் குழந்தையை மட்டும் புடிச்சிருக்குதாம், காமெடியா இல்ல?” என்றதும், இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவர் விழித்தார்.

நந்தனா தனது அறையை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருக்க, “நந்தனா, எனக்கும் குழந்தைக்கும் வயிறு பசிக்குது. சாப்பாடு எடுத்துக்கொடு!” என்று சத்தமாக அழைத்தாள்.

நந்தனா தன் முகத்தைக் கழுவி சுத்தம் செய்து விட்டு வெளியே வந்தாள். அப்படியும் அவள் அழுதிருப்பது சிவந்திருந்த விழிகளில் தெரிந்தது.

அவள் வந்ததைக் கண்டதும் குழந்தை நிவேதா ‘அம்மா’ என்று ஓடிவந்தாள். குழந்தையைத் தூக்கி அணைத்து முத்தமிட்டவள், “நிவிக்குப் பசிக்குதுமா” என்ற வார்த்தையைக் கேட்டதும், உடனே சமையலறைக்குச் சென்று உணவை எடுத்து வந்து ஊட்டிவிட்டாள்.

குழந்தை அழகாக உணவு அருந்துவதை பார்த்துக் கொண்டிருந்த ரக்ஷனா, “என்னவோ இவளோட பாட்டி குழந்தை ஒரு நேரமும் சாப்பிடாம சதா அழுதுகிட்டு இருக்குன்னு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா அவள் என்னைத் தேடிய மாதிரியே இல்லையே!” என்றாள்.

“அது என்ன அப்படிச் சொல்லிட்ட? இத்தனை நாளும் அவளோடு பட்ட கஷ்டம் எனக்கு இல்லையா தெரியும்? நந்தனா வந்த பிறகுதான் எனக்குப் பாதி வேலை குறைஞ்சது. அதுவரைக்கும் தூக்கித் தூக்கி என் தோளே தேய்ந்துபோனது” என்றபடி பேத்தியின் கன்னத்தைப் பற்றிக் கிள்ளினார் நாகேஸ்வரி.

நிவேதா, “பாட்டி, சாப்பாடு உவ்வா…..” என்று சொல்ல, “ஏதே, நல்லா இல்லையா? இப்ப மட்டும் உன் அம்மா தான் சமைத்துத் தருவதா?” என அவளுடன் மல்லுக்கு நின்றார் நாகேஸ்வரி.

“பேஜாரி பாட்டி… ஆ…” என்று குழந்தை சொல்ல, அங்கே சிரிப்பலை சிதறியடித்தது.

பின்னர் உணவை முடித்ததும், பரிதிவர்மன் வெளியே செல்வதைக் கண்டு மாமியாரின் முன்பு அவனைக் குறைவாகப் பேசினாள் ரக்ஷனா. அவளது அறையைச் சுத்தப்படுத்தச் சொல்லி நந்தனாவை வற்புறுத்தினாள். தனக்கும் மகளுக்கும் தேவையானதைத் தன் அறைக்கே எடுத்துவரச் செய்தாள்.

“இந்த வீட்டுச் சமையல் நல்லா இல்ல, நீ உன் கையால் கொஞ்சம் மாடலா செய்து கொடு” என்று ஏவினாள்.

 

மாமியாருக்கு நந்தனாவை பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனாலும், ரக்ஷனாவின் மனம் வருந்தாத வகையில்தான் பேசவே செய்தார்.

அப்படியும், “அத்தை, அவளைத்தான் உங்களுக்குப் பிடிக்கவே செய்யாதே! பிறகும் என்ன தண்டசோறு சாப்பிட்டு சும்மா இருப்பதற்கு வேலை செய்யட்டும்” என்று குத்திப் பேசியதைக் கேட்டு,  அவளுக்காகவும் பேச முடியாமல்; இவளுக்காகவும் பேச முடியாமல் இருதலை கொள்ளியாக தவித்தார்.

மதிய உணவு நேரம் பரிதிவர்மன் வந்தான்.

சூடான உணவினை பணியாட்கள் மேஜையில் எடுத்து வைத்ததும், “நந்தனா, இந்தச் சாப்பாட்டை எடுத்து எங்க எல்லாருக்கும் பரிமாறு!” என்று கணவனின் முன்பு உத்தரவிட்டாள்.

அவள் குனிந்த தலை நிமிராமல் வந்து எல்லாருக்கும் பரிமாற, “நேத்து சாப்பிட்டதை விட இதுதான் நல்லாயிருக்கு. என்னதான் வேலைக்காரர்கள் விதவிதமாகச் செய்தாலும், வீட்டுக்காரர்கள் செய்யும் சாப்பாட்டுக்குத் தனி ருசி! நாளை முதல் நீயே மூணு நேரத்துக்கும் செய்துடு” என்று சப்புக் கொட்டினாள்.

பரிதிவர்மனுக்குக் கோபம் தலைக்கேறியது. அவள் என்ன வேலைக்காரியா? வீட்டில் அத்தனை பேர் இருக்கும்போது நந்தனா மட்டும்தான் செய்ய வேண்டுமா?

ரக்ஷனா அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், “அத்தை! நான் என்னோட விடுமுறை முடிஞ்சு கிளம்புறப்போ, நந்தனாவையும் கூடவே கூப்பிட்டுப் போகலாம்னு இருக்கறேன். அவளும் என் கூடவே வந்தா சமையலும் செய்து தந்து, குழந்தையையும் அக்கறையா பார்த்துக்குவா. உங்களாலும் அவளுக்கு எந்தப் பாதிப்பும் வராது” என்றாள்.

 

பரிதிவர்மனின் பொறுமையின் எல்லை மீறிப்போனது. எப்போது வெடித்துச் சிதறுவான் என்று தெரியாமல் இருந்தான்.

குழந்தை உணவை முடித்ததும் அப்பாவை விட்டு அகலாமல் இருக்க, ரக்ஷனா அழைத்தும் வர மறுத்தது. அதனால் அவள் பிடித்து இழுக்கப் போக, “குழந்தையிடம் இந்த மாதிரி வீம்பாக நடப்பதை முதலில் நிறுத்து! அவள் என் மகள். என்கிட்ட வருவதிலும் பேசுவதிலும் உனக்கு என்ன வருத்தம்? நீதான் பிறந்த அன்றே தூக்கி எறிந்துபோனவள் தானே!” என்று நறுக்கெனக் கேட்டான்.

“பின்னே, பிடிக்காதவரின் குழந்தையைப் பெற்றெடுத்துக் கையில தூக்கி வச்சு கொஞ்சவா முடியும்? வயித்துல இருக்குறப்பவே கலைச்சுட எனக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? அதை உங்க மாமியார் செய்ய விடல, ஏன்னா இந்தக் குடும்பத்தோட வாரிசாம். மிஸ்டர் பரிதிவர்மனின் ஒட்டுமொத்த சொத்தையும் நிர்வகிக்கப் பிறந்தவளாம்” என்று அசட்டுப் புன்னகையுடன் சொன்னாள்.

அவன் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, “உன் அம்மாவுக்குத்தான் பணம், பணம், பணம்! இதைத் தவிர வேறு எதுவும் தெரியாதே! அதுக்குத்தானே எங்க அம்மாவின் மனசை மாத்தி உன்னை என் தலையில் சுமக்க வைத்தார்” என்று சொல்ல, அந்த வார்த்தை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருப்பவளை விட, அவன் அம்மாவைப் பதம் பார்த்தது.

“பின்னே! ஒரே வாரிசு, திரண்ட சொத்துக்கு அதிபதியா இருந்தா ஆசைப்படாம, அதோ நிற்கிறாளே, அவளைப்போல ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமலா இருப்பார்கள்?” என்று நந்தனாவைத் தாக்கிப் பேசினாள்.

“நந்தனாவைப் பற்றிப் பேச உனக்கு உரிமையில்லை. அவள் தகுதிக்கு முன் நீயும் உன் அம்மாவும் தூசுக்குச் சமம்” என்று அவளை எடுத்தெறிந்து பேசினான் பரிதிவர்மன்.

அதனால் எழுந்த கோபத்தில், ரக்ஷனா கையில் கிடைத்ததைத் தூக்கிப் போட்டு உடைத்தாள். குழந்தை பயந்து அப்பாவை ஒட்டிக்கொண்டது.

நாகேஸ்வரி ஓடிவந்து மறித்தார். அவள் அதைக் கேட்காமல் கண்ணாடி டீப்பாயைத் தூக்கி உடைக்க, நந்தனா விரைந்து சென்று அத்தையை அவளிடமிருந்து அகற்றிவிட்டு, கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அப்போது அவளது காலிலிருந்து ரத்தமாக வடிந்தது. பரிதிவர்மன் விரைந்து வந்து மனைவியைத் தூக்கினான். அவளது கண்களிலிருந்து நீராக வடிந்தது.

“ஏய்! படித்தவ தானே, உனக்கு அறிவில்லை? என்னடி உன் மனசுல நினைச்சுட்டு இருக்கே? உன் அம்மாவால்தான் அவள் இன்னைக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கா… கூடப் பிறந்த அக்கா மேல பாசம் இல்லாம உன் அம்மா செய்த சதி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை அழிச்சிடுச்சு. இப்ப அவங்க மகளின் வாழ்க்கைப் பறிபோகவும் அவர்தான் காரணம்! உன்னை என் மாமன் மகளாக நினைச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனால், நீ என் தாய்மாமனின் மகளில்லை; வனிதாவின் மகள்னு நிரூபிச்சிட்டே! இது என் வீடு. இங்கு என் விருப்பப்படி இருப்பவர்களுக்குத்தான் இடம். இல்லாதவர் வெளியே போகலாம்” என்று சீறினான்.

நந்தனா அவசரமாக இடைமறிக்க, நாகேஸ்வரி செய்வதறியாமல் திகைத்தார்.

அவன் அவளைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் செல்ல, காலிலிருந்து வடிந்த ரத்தம் தரை எங்கும் பரவி கிடந்தது.

உடனே துடைத்துச் சுத்தம் செய்து மருந்திட, நந்தனா அழுதுகொண்டே இருந்தாள். அவன் அருகில் அமர்ந்து ஆறுதலாக பேச, அதன் பிறகு ரக்ஷனா எதுவும் சொல்லாமல் வெளியேறிச் சென்றுவிட்டாள். வீடு மயான அமைதியில் ஆழ்ந்தது.

இரவு நேரம் அதிகப்படியான போதையின் பிடியில் அகப்பட்டு வந்தவள், வீட்டிற்குள் நுழைந்ததும் பலமாக சிரித்தாள். அடுத்த கணம் என்னவென தெரியாமல் அனைவரும் வந்துவிட, நந்தனா காலில் போடப்பட்டிருந்த கட்டுடன் கெந்தி கெந்தி நடந்து சுவரைப் பற்றியபடி நின்றாள்.

கண்கள் இரண்டும் சிவந்திருக்க, ரக்ஷனா நின்ற விதமே சரியில்லாமல் இருந்தது.

நாகேஸ்வரி, “என்னம்மா இது, ஏன் இப்படி நடந்துக்கிற? நான் உன்மேல எத்தனைப் பாசம் வச்சிருந்தேன், உன்னால எப்படி இந்த மாதிரி நடக்க முடியுது? நீ மறுபடியும் திரும்பி வந்துட மாட்டியா? பரிதியும் நீயும் ஒண்ணு சேர்ந்து வாழ்ந்துட மாட்டீங்களான்னு வேண்டாத தெய்வமில்லை. நீயானால் இப்படி எல்லாம் நடந்துக்கிறியே!” என்று விசனப்பட்டார்.

அவள் இன்னும் பலமாகச் சிரித்துவிட்டு, “உங்களுக்கு உண்மையிலே என்மேல பாசமிருந்தா இப்படி நடக்கத் தோணுமா? நான் இல்லாத நேரத்தில் உங்க மகன் வேறு கல்யாணம் செய்துட்டு வந்திருப்பதை உங்களால் எப்படி ஏற்க முடிஞ்சது? இதுதான் எங்க அம்மாவின் மேலயும் என் மீதும் உள்ள பாசமா?” என்று எள்ளலாகக் கேட்டாள்.

அவர் நெஞ்சுக்குள் இருந்த ஏக்கத்தை மறைத்தபடி, “நான் அப்படிச் செய்த தப்புதான் இப்ப என் மகனிடம் வாய் திறந்து பேச முடியாம, யாரோ ஒருவரைப் போல இருக்க வைக்குது” என்று விசும்பினார்.

தொடர்ந்து, “நந்தனாவும் பாவம்! அவள் வாழ்க்கை அழியாம காப்பாற்ற வேண்டியது நம்ம பொறுப்பு! நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனால், ரெண்டு பேரின் வாழ்க்கையும் பாதிக்கப்படாம இருக்கும்” என்று நல்ல விதமாக எடுத்துச் சொன்னார்.

அவளோ, “எப்படி மாடியில் நானும், கீழே அவரது ரெண்டாவது பொண்டாட்டி கூடயுமா? நான் இப்ப போலீஸ்ல வழக்கு தொடுத்தாலும், அடுத்த நிமிஷம் வந்து அரெஸ்ட் பண்ணிச் சிறையில் தள்ளிடுவாங்க தெரியுமா?” என்று ஆவேசமாக கேட்க, அவர் அதிர்ந்துபோனார்.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top