இருள் நிழலாய் நானே 16

இருள் நிழலாய் நானே 16

“கண்ணுல பார்க்கிறது, காதுல கேட்கிறது எதுவும் உண்மை இல்லை அத்து. எதையும் கண்டுக்காம போ!”

வனம் முழுவதும் ஒருவித கோர சிரிப்பின் சத்தம் அலை அலையாய் பொங்கிப்பரவ, சீனு வெளிப்படையாக நடுங்கினான்.

சமருக்கும் உள்ளுக்குள் ஒருவித அச்சம் பரவியது. இருப்பினும் தன் பயம் தன் அடியை பின்னோக்கி நகர்த்தும் என்பதாலும், தன்னுடன் நிழலாய் தனது லட்டு இருக்கிறாள் என்பதாலும் அவள் சொல்லியது போல் எதையும் கருத்தில் கொள்ளாது முன்னேறி நடந்தான் சமர்.

சட்டென்று எங்கிருந்தென தெரியாது இரு பக்கமிருந்து பருத்த மரங்கள் பாய்ந்து வந்தது. அந்தரத்தில் உலவியவை யாவும் சமர் மற்றும் சீனுவை குறி வைத்து வர, அனல் ஒரு பக்கமும் பனி ஒரு பக்கமும் அரணாக நின்று காத்தனர்.

பாய்ந்து வந்த மரங்கள் யாவும் உண்மையானது இல்லை என்பது, அவை காற்றில் மாயமாகியத் தருணம் தெரிந்தது.

“என்னடா நடக்குது இங்க?” என்ற சீனு, “அப்போ இதெல்லாம்? நம்மை தாக்க வந்ததுலாம் நிஜ மரமில்லையா?” எனக் கேட்டான். இருட்டில் தாங்கள் இருக்கும் இடம் மட்டும் அனலினால் வெளிச்சமாக இருக்க, மற்ற இடங்கள் யாவும் கும்மிருட்டில் பார்க்கவே அச்சத்தை தோற்றுவிக்க, அவ்விடத்தை பார்வையால் அலசியவனாக.

“என்னவாயிருந்தலும்… ஒன்றை தேடும் போது, நம் தேடலை தேடும் ஒன்றே முடிவை நோக்கி நகர்த்திடும். சீக்கிரம் எல்லாம் முடிவுக்கு வரும்” என்ற சமர் இப்போது கண்ட காட்சியில் தெளிவு பெற்றான்.

‘இவை உண்மையல்ல என்றால், எல்லாம் மாயை. சம் மேஜிக்’ என மனதில் உருபோட்ட நொடி எதோ ஒன்று விளங்கியது.

மெல்ல முன்னேரினார்கள். ஆங்காங்கே பச்சை இலைகள், செடிகள், கொடிகள் தீப்பற்றி எரிந்தன. எரிந்த இடத்தில் கரும்புகை உண்டாக நெருப்பு அணைந்தது. எரிந்த யாவும் நிறம் மாறாது பச்சையாகவே இருந்தன.

“இன்னும் என்னெல்லாம் வித்தைடா காட்டுவானுங்க?” சீனுவுக்கே இங்கு நடப்பது, நடத்துவதெல்லாம் எதோ மனித சக்தி என்று நொடியில் புரிந்திருந்தது.

“இந்த மாதிரி செய்து ஒரு ஊரையே கிட்டத்தட்ட நாப்பது வருசமா மர்ம பூமியா மாத்தி வச்சி, மக்களையும் நம்ப வச்சி, பல உயிர்களை எடுத்து… அப்படி என்ன ஆதாயம் தேடுறானுங்க?” என்றான் சீனு.

“அதை சமர் தான் கண்டுபிடிக்கனும்!” என்றது தும்பையின் ஆன்மா.

“அது ஏன் சமர்?”

“பெரியம்மா, பெரியப்பா இங்க தானே இறந்தாங்க” என்ற தும்பை, “அவங்க இங்க வந்ததிலிருந்து தான் எல்லாம் திரும்ப நடக்க ஆரம்பித்தது” என்றது அரூபம்.

சமர் இறுகி நின்றான். பெற்றோர் இல்லாத வலி. அவர்களின் இழப்பிற்கான காரணம் என்னவாக இருக்குமென்று இதுநாள் வரை அவன் யோசித்ததே இல்லை. அதன் குற்றவுணர்வு. மனம் கலங்கியது.

அவர்கள் இறந்தபோது அறியா வயது. ஒன்றும் விளங்கவில்லை. அடுத்து அவன் மனதால் கொண்ட அழுத்தம். அவனை அவன் பாதுகாத்துக்கொள்ளவே போராடிக் கொண்டிருந்தபோது, அவனுக்கு எப்படி அன்னை, தந்தையின் இறப்பின் காரணத்தை தேட வேண்டுமென சிந்தையில் தோன்றியிருக்கும்?

சமர் இருட்டில் முதல் முதலில் கண்டு அலறிய காட்சி, அவனது கனவு. இன்றும் அவன் உறங்கும் போது வரலாம். தன் கனவிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்று அவன் இதுவரை நினைத்தது இல்லை. ஆனால் தற்போது தோன்றியது.

தனக்கு இங்கு நடப்பதை அப்போதே கனவு மூலமாக தாய், தந்தை உணர்த்திட முயன்று இருக்கின்றனர் என்பது புரிந்தது.

சமர் தனது கனவினை மகியை தவிர்த்து யாரிடமும் சொன்னது இல்லை.

இப்போ சீனு, மற்றும் தும்பையிடம் கூறினான்.

“இதுதான் இங்க நடக்குது?” என்ற தும்பை, “நீயே பார்ப்ப” என்று அழைத்துச் சென்றது.

காடு முடிய சீனுவிடம் “ஹப்பா…” என்று பெருமூச்சு.

திடீரென அவ்விடம் முழுக்க சதுப்பு நிலமாக மாறியது. அடி வைத்தால் உள்வாங்குமோ? புதைக்குழி போல் இழுத்துக் கொள்வேன் எனும் தோற்றம். சேறு அலை அலையாய் ஊர்ந்தது.

“மச்சான் இதுல எப்படிடா போறது? நிச்சயம் நம்மள உள்ள இழுத்துக்கும்” என்றான் சீனு.

“பார்க்கிறது எதுவும் உண்மை இல்லை அத்து” மகி அவனின் கரத்தில் அழுத்தம் கொடுத்தது.

கண் மூடி திறந்த சமர், காட்டை கடந்து தெரிந்த பாதையில் அடி வைத்தான்.

தூக்கி வைத்த கால் உள்வாங்கியது போல் கண்ணில் தோன்றினாலும் தரையில் அழுத்தம் கொடுத்து நின்றது.

“இது உண்மை இல்லை சீனு” என்று சமர் முன்னோக்கி நடக்க, காட்சி மறைந்தது.

“இதுதான் நீங்க வரும் போது நடந்ததா?” சீனு மகியிடம் கேட்டான்.

“ஹம்…” என்ற மகி, “நாங்க பகலில் வந்தோம். அதனால் காட்டுக்குள் நடந்த எதுவும் எங்களுக்கு நடக்கல. ஆனால் இந்த இடம் இப்படி மாறியது மட்டும் நடந்தது” என்றாள்.

காட்டை கடந்து கிராமத்து எல்லைக்குள் நுழைந்ததும் மலை நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தது.

“இந்த மலைக்குள் தான் எல்லாம் நடக்குது அத்து” என்றாள் மகி.

“போய் பார்ப்போம்” என்று சமர் சொல்ல, உடனடியாக வேண்டாமென மறுத்த மகி, “போய் பார்ப்போம் நினைத்து போயி தான் இப்போ நான் உன்னைவிட்டு இப்படி இருக்கேன்” என்றது.

“எப்படி இருக்க?” எனக் கேட்ட சமர், “எனக்கு நீ என் கூட இருக்க. இப்போதைக்கு இது போதும்” என்று இறுக்கமாக அணைத்து விடுத்தான்.

மகிக்கு கண்கள் கலங்கியது.

அழக் கூடாது என்பதைப்போல் சமர் இட வலமாக தலை அசைத்து, “என்னோட மொத்த தைரியமும் நீதான் லட்டு” என்று தழுதழுத்தான்.

“சமர்…” சீனு அவனது தோளில் கை வைத்திட…

“ஹேய்… ஓகேடா! கஷ்டமா இருக்குதான். ஆனாலும் என் லட்டுவை மீட்டிட முடியும் நம்பிக்கை இருக்கு” என்றான்.

“ஆலமரம் வந்தாச்சு.” தும்பை சொல்லிட, மகி சமரின் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றினாள்.

“அந்த மரத்துகிட்ட என்ன நடந்தாலும் கண்டுக்காம திரும்பிப் பார்க்காம நடங்க” என்றது மகியின் ஆன்மா.

“இதுக்குமேல இங்க என்னால் உங்களுக்கு ஓரளவு தான் உதவ முடியும். என் சக்தி அதிகம் வேலை செய்யாது. என் ஆவியை இந்த எல்லைக்குள் கட்டி வச்சிருக்காங்க” என்ற தும்பை மறைந்து போனாள்.

“அங்க எங்கடா தங்குறது?” சீனு கேட்டிட,

“நீங்க தும்பை வீட்டில் தங்கிக்கலாம். அத்து யாருன்னு தெரிந்தால் அவங்களே தங்க வச்சிப்பாங்க” என்றாள் மகி.

“நீங்க எப்படி தும்பை வீட்டில் தங்குனீங்க?”

“நானும் தினேஷும் பத்திரிக்கையில் இருந்து வரோம்ன்னு உண்மையை தான் சொன்னோம். இந்த ஊரைப்பற்றி தெரிந்துகொண்டு பத்திரிக்கையில் எழுதுவோம் சொன்னோம். இது மூலமாவது விடிவு வராதான்னு நினைச்சாங்க போல… தங்க வச்சிக்கிட்டாங்க. ஆனால் ஊருக்குள்ள வேற யாரும் எங்ககிட்ட பேசவே தயாரா இல்லை” என்ற மகி, “பனை மரம் வருது. இனிதான் ரொம்பவே கவனமா இருக்கணும் அத்து” என்றாள்.

“பார்த்துக்கலாம் லட்டு. நீ இப்படி ஒவ்வொண்ணுக்கும் பயந்துட்டு இருக்காதே! எனக்கு ஒண்ணும் ஆகாது” என்றான்.

இருவரும் நடந்து செல்ல… பின்னால் தீ எரியும் சுவடு. முன் காட்டிய வெளிச்சம் மற்றும் நாசி தீண்டிய பிண வாடையும் அறிவுறுத்தியது.

“பின்னால் என்னவோ எரியுது!” சீனு சொல்லிட, “திரும்பிப் பார்க்காதீங்க” என்ற மகி, “இப்போ குதிரை, காகம் சத்தமெல்லாம் கேட்கும். காதில் எதுவும் கேட்காததைப்போல் போயிட்டே இருங்க” என்றாள்.

எல்லாம் நடந்தது. மகி சொல்லியதைப் போன்று, எதையும் கருத்தில் கொள்ளாது ஊருக்குள் வந்திருந்தனர்.

காற்று சுழன்றடித்தது. அவர்களை இயற்கை வரவேற்றதோ? விரைந்து சூழல் சீர் பெற்றது.

“தும்பை வீடு எங்க?”

“கடைசியா இருக்கு” என்ற மகி, வழி காட்டினாள்.

வீட்டின் முன்னிருக்கும் பாறையில் தும்பையின் ஆவி கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது.

நாணல் கூரை வேய்ந்த மண் வீடு. வீட்டின் இருபுறமும் திண்ணை. முன் சிறு இடம். வீட்டைச் சுற்றி மூங்கில் வேலி.

சமர் வேலி கதவை திறந்து கொண்டு சென்று வீட்டின் கதவைத் தட்டினான்.

“யாரு?” உள்ளிருந்து பருத்தியின் குரல் ஒலித்தது. பயம் கொண்டு கேட்டது போலிருந்தது. இங்கு நடக்கும் நிகழ்வுகளால் இந்நேரம் கதவு தட்டப்பட உண்டான பயம் என சமருக்கு புரிந்தது.

“நான் உங்க அக்கா கோமளாவின் மகன்.” சமர் சொல்லிய நொடி, கதவை திறந்து வெளி வந்தார் பருத்தி.

தன் முன் ஆறடியில் நெடுநெடுவென நின்றிருக்கும் சமரை ஊன்றி கவனித்தார்.

கோமளத்தின் ஜாடை தெரிய,

“கண்ணு” என்று கரம் பிடித்துக் கொண்டார்.

“நல்லாயிருக்கியா கண்ணு. அக்கா எப்படி இருக்காள்?”

அவரின் அக்கேள்வி சமருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏற்கனவே மகள் இறந்து ஒடுங்கி போனத் தோற்றத்தில் இருப்பவரை மேலும் வருத்தம் கொள்ள வைக்க வேண்டாமென நினைத்த சமர்,

“ரொம்பவே நல்லாயிருக்காங்க” என்றான்.

“இந்த அம்மாவை பார்க்க இப்போ தான் தோணுச்சா கண்ணு” என்ற பருத்தி, “பேர் என்னப்பா?” எனக் கேட்டார், அவனின் தாடையை வாஞ்சையாக தடவியபடி.

“சமர்… சமர் அத்வத்” என்றான். தழுதழுப்பாக. இக்கணம் அவன் கண் முன் அவனுக்கென்று இருக்கும் ஒரு உறவு அல்லவா. கண்கள் பனிக்கும் போலானது.

சில நிமிடங்களுக்கு பின் தான், வெளியில் தெரியும் இருளை கண்டு,

“எப்படி கண்ணு வந்த? இந்த ஊர் பொல்லாத ஊரு சாமி. மொத நீ உள்ள வா” என்று அழைத்தார்.

சமர் உள்ளே நுழைய, தூரத்தில் ஓநாய் கத்தும் சத்தம்.

“டேய் என்னை விட்டு போயிடாத” என்று சீனு பயந்து அலறியவனாக சமர் பின்னால் ஓடினான்.

“சாரி மச்சான்” என்ற சமர், “இவன் என் ஃபிரண்ட்” என்று பருத்தியிடம் சீனுவை அறிமுகம் செய்தான்

“நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?” சமர் கேட்க, பொங்கும் கண்ணீரை சேலை தலைப்பில் துடைத்தவராக, “உன் சித்தப்பா செத்து வருஷம் பத்தாவுது” என்றவர், “உனக்கு ஒரு தங்கச்சி இருந்தாள். இப்போ இல்லை” என அடைத்த தொண்டையை சரி செய்து, “ஆறு மாசமாவுது” என்றார்.

சமருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரின் அருகில் சென்று நின்று கொண்டான்.

“முதல் முறை வந்திருக்க பிள்ளை கிட்ட அழுது வடியிறேன்” என்ற பருத்தி, “அந்த அறைக்குள்ள தங்கிக்கங்க சாமி” என்றார்.

“ஆண்ட்டி நீங்க கேட்க மறந்துட்டிங்க நினைக்கிறேன். நாங்க இன்னும் சாப்பிடல” என்றான் சீனு.

“மன்னிச்சிக்கய்யா… மண்டையில கேட்கணும் தோணாமாப் போச்சு” என்றவர், “வீட்டு பின்னாடி குளியலறை இருக்கு. உடம்பை கழுவி வாங்க. எடுத்து வைக்கிறேன்” என்றவர், கூடம் போலிருந்த அவ்விடத்திலேயே சிறு மண் சுவர் தடுப்புக்கு பின் சென்றார்.

இருவரும் கை கால் கழுவி வர,

“ராத்திரிக்கு தான் களி கிண்டினேன். இளஞ்சூடா தான் இருக்கு. சாப்பிடுங்க” என்று தட்டில் இரு உருண்டை களி வைத்து, வெந்தயம், பூண்டு காரக் குழம்பு ஊற்றிக் கொடுத்தார்.

“குழம்பு வாசனையா இருக்கு” என்று சீனு தட்டினை மூக்கிற்கு அருகே வைத்து வாசம் பிடிக்க…

“பேசாம சாப்பிடுடா” என்று அவனது தொடையில் தட்டினான் சமர்.

“இருக்கட்டும் கண்ணு. சாப்பிடுங்க. ருசியா இருக்கும்” என்ற பருத்தி, “நான் ஊட்டி விடட்டுமா கண்ணு?” என்று சமரிடம் கேட்டிட, அவனுக்கு கண்கள் பனித்தது. லாவகமாக மறைத்துக்கொண்டு சரியென தலையசைத்தான்.

இரு வாய் அவர் ஊட்டிவிட,

“நீங்க சாப்பிட்டிங்களா?” எனக் கேட்டான் சமர்.

“சாப்பிட்டு என்ன கண்ணு பண்ணப்போறேன். நீ சாப்பிடு சாமி” என்று ஊட்டி முடித்தார்.

“நீங்களும் சாப்பிடுங்க. எனக்காக நீங்க இருக்க வேண்டாமா?”

சமர் கேட்டதில், “எய்யா!” என்று நெகிழ்ந்த பருத்தி, அவன் முன்பே தட்டில் களியை எடுத்து வைத்து அவன் முகம் பார்த்துக்கொண்டே கண்களில் நீர் இறங்க உண்டார்.

“ரொம்பவே தனிமையில் மனசால் கஷ்டப்பட்டிருப்பாங்க போல மச்சான்” என்றான் சீனு.

சமருக்கு பருத்தியை பார்க்க பார்க்க நெஞ்சம் அடைத்தது.

தனக்காவது மகி என்றவள் இருந்தால். இல்லையென்றும் உடன் இருக்கிறாள். ஆனால் இவருக்கு?

“முழுசா சாப்பிட்டு தான் எழனும்” என்றவனாக கண்ணீரை கட்டுபடுத்த முடியாது, வேகமாக வெளியில் வந்திருந்தான்.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top