வேள்வி : 16

அத்தியாயம் : 16

நிஜமாகத்தான் பரிதிவர்மன் தன்னிடம் அவ்வாறு சொல்கிறானா என ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் சதாசிவம் நோக்க, “எனக்கு விருப்பம் இல்லைன்னு எவ்வளவோ சொல்றேன், எங்க அம்மா கேட்க மாட்டேங்குறாங்க மாமா! இதே வீட்டுல வந்து ரக்ஷனாவை கட்டிக்கிறேன்னு சொன்ன ஒரு வார்த்தையைக் கூட அப்பாவால் ஏத்துக்க முடியல; அன்னைக்கு ராத்திரியே இறந்தும் போயிட்டது வேறு பயங்கர மன உளைச்சல். முன்னாடி வந்திருந்தப்போ அவள் என்கிட்ட வந்து சகஜமா தொட்டுப் பேசி, சிரிச்சதுக்கும் அப்பா என்னை அவ்வளவு சத்தம் போட்டாங்க. இதுல கல்யாண ஏற்பாடு பண்ணினா எங்க அப்பாவுக்கு நிச்சயம் பிடிக்காது. பிறகும் ஏன் என்னை அதைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தணும்? அம்மா கிட்ட இதை நான் சொல்லியும் கூட, ‘அது வயசுப் பொண்ணு நம்ம வீட்டுல இருக்கறப்போ தப்பு தண்டாவா எதுவும் நடந்துடக் கூடாதுன்னு அப்பா சொல்லி இருப்பாங்க’ன்னு சொல்றாங்க. அப்பா இருக்கறப்பவே நந்து விசயத்தில் கோபப்பட்டாங்க எங்க அம்மா. இனி மட்டும் கேட்டுடவா போறாங்க?” என்று தன் மனதில் இருப்பதை மறைக்காமல் வெளிப்படுத்தினான்.

அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்க, “எனக்கு ரக்ஷனாவை கட்டிக்கும் எண்ணமில்ல; அவளை அந்த மாதிரி பார்த்ததும் இல்லை. நான் நம்ம நந்துவை கட்டிக்கிட்டா, அவளோட எதிர்காலமும் பாதிக்கப்படாது; அப்பாவின் ஆத்மாவும் சந்தோஷப்படும்; நாமும் இப்ப போல ஒற்றுமையா இருக்கலாம். என்ன மாமா சொல்றீங்க?” என்று கேட்டான்.

அவரோ, மருமகனின் வார்த்தையில் மகிழ்ந்தாலும், “உங்க அம்மா சம்மதிக்காம என்ன செய்ய முடியும்?” என்று வருத்தத்துடன் சொன்னார்.

தொடர்ந்து, “உங்க அம்மாவுக்குத் தெரியாமலும் செய்ய முடியாது; நாளைக்கு ஒரு நாள் இந்தச் சொத்துக்காக ஒரே வாரிசான உன்னை அபகரித்து விட்டதா பேசினா நல்லா இருக்காதே!” என்றார்.

“ப்ச் மாமா… வனிதா அத்தைதான் அந்த மாதிரிப்பட்டவர். உங்களை எனக்குத் தெரியாதா? நந்து கிட்ட நான் சுதந்திரமா பேசணும்; இதுவரை இருந்தது போல உரிமையா பழகணும். யாருக்காகவும் அவளை என்னால் விட்டு தர முடியாது” என்று இறுதியாகச் சொன்னான்.

அவருக்கு ஆரம்பம் முதலே அந்த ஆசை இருப்பதாலும், அவனது அப்பாவின் விருப்பமும் அதுவாகவே இருந்து, நன்றாக பழகிய இருவரைப் பிரித்து வைக்க வேண்டாம், பரிதிவர்மனை விட நல்ல மாப்பிள்ளை மகளுக்கு கிடைக்க மாட்டான் என்பதாலும் மறுக்காமல் சம்மதம் தெரிவித்தார்.

மாமாவிடம் மனதில் இருப்பதை முழுவதுமாக தெரிவித்த பரிதிவர்மன், அவளைச் சந்தித்துப் பேசக் காத்திருந்தான். ஆனால் வீட்டில் நீலாம்பரி அவளை அடக்கித் தனக்கு கீழே வைத்திருப்பதை அவன் அறியவில்லை.

இந்நிலையில் வேலை விசயமாக வெளியே செல்லும்போது, இடையே வந்த நபரை இடித்து விடக்கூடாது என்பதற்காகப் பிரேக் பிடித்ததில் லேசாகக் கீழே விழுந்து அடிபட்டு விட, அந்த வலியை யாரிடமும் காட்டாமல் மறைத்திருந்தாலும் சதாசிவத்தின் கண்ணில் இருந்து தப்பவில்லை. அவர் என்னவென்று விசாரித்துப் பதற்றப்பட, “அப்படி ஒண்ணும் பெரிய காயம் இல்லை மாமா” என்று அவன் மழுப்பினான். ஆனாலும் அடிபட்ட பாதிப்பினால், பரிதிவர்மன் வேலை பார்க்கும் நேரம் தவிர மீத நேரம் அங்கேயே விழுந்து கிடக்க, அப்பாவின் மூலம் நடந்ததை அறிந்து அதிர்ந்து போனாள் நந்தனா. உடனே ஓடிச் சென்று பார்க்கும் ஆவல் உந்தியது. கல்லூரி முடிந்ததும் சித்திக்கு தெரியாமல் நேராக அவனைக் காண வந்து விட்டாள்.

அவன் முகம் அவளைக் கண்டதும் பிரகாசமடைந்தது. “நந்து எனக்கு ஒண்ணும் அந்த அளவுக்குப் பெரிய காயமில்லை. நீ பயப்படாதே!” என்றான். ஒரு வாரம் அவனைப் பார்க்காமல் இருப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது! அதிலும் இப்படி ஒரு நிலையில் இருப்பதை அவளால் பார்க்கவே முடியவில்லை.

அவளது கைப்பற்றி அருகில் அமர வைத்துப் பேசினான். அதன் பிறகு அவ்வப்போது பார்த்தும் பேசியும் மகிழ்ந்தனர். ஆனால் மகன் முன்பை விட ஒரேடியாகத் தன்னை விட்டு ஒதுங்குவதும், ஒரு வார்த்தை சொன்னாலும் செவியேற்காமல் இருப்பதும், அடிபட்டும் சொல்லாமல் மறைத்ததையும் அறிந்த நாகேஸ்வரி, சதாசிவமும் அவர் மகளும் தன் கணவரைக் கைக்குள் போட்டுக் கொண்டது போல, தனது மகனையும் செய்து விடுவார்கள்; தனக்குப் பிடிக்காத நந்தனா இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து விடுவாள் என்பதால் மகனின் மனதை மாற்ற பல வழிகளில் முயன்றார். அவன் சம்மதிக்க மறுக்கவே, நேரத்திற்கு உண்டு ஓய்வெடுக்காமல் உடம்பைப் பலவீனமாக்கினார்.

வீட்டு வேலைக்காரர்கள் மூலம் பெரிய வீட்டு ரகசியங்கள் கசிவது வழக்கம் தானே! அப்படி இந்த ஊரில் நந்தனாவின் கூடவே படித்த மாணவிகளும், கல்லூரியில் ஒன்றாக பயிலும் தோழிகளும், இந்த விசயத்தை அறிந்து சென்று அவளிடம் கூறினர். அவளுக்கு நாளுக்கு நாள் மனகஷ்டம் அதிகரித்தது.

பரிதிவர்மன் மாட்டேன் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல், கணவரின் புகைப்படத்தின் முன்பு கதறி அழுதார் நாகேஸ்வரி. ‘கணவர் போன இடத்திற்கு தானும் போய் விட்டால் நன்றாக இருக்கும். எதற்காக என்னை மட்டும் விட்டு வைத்திருக்கிறாய் இறைவா!’ என்று சுவாமி புகைப்படத்தின் முன்பு கண்ணீரும் கவலையுமாக காட்சி அளித்தார். “தனக்குப் பிறகு இந்தக் குடும்ப பொறுப்பை பார்க்க யாருமில்லை, தான் இறந்து போகுமுன் மகனின் திருமணத்தை காண ஆசையாக இருக்கிறது” என்று புலம்பினார். அதனால் அவனும் ஒரு முடிவுடன் நந்தனாவை காண வந்தான்.

காலில் பட்ட காயம் இன்னும் ஆறி விடாமல் இருந்தது. அந்தக் காலை அவன் மெல்ல மெல்லத் தூக்கி வைத்து வருவதைக் கண்ட நந்தனா, அவனுக்காக வருத்தப்பட்டாள்.

அவள் அருகில் வந்த பரிதிவர்மன், “நந்து! நான் உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேச வந்து இருக்கேன். நீ கேட்டுட்டு நிதானமா பதில் சொன்னா போதும்” என்றான்.

அவள் என்னவெனும் விதமாக ஏறிட்டு நோக்க, அவளது வலது கையைப் பற்றித் தனது கைக்குள் வைத்துக் கொண்டான்.

“என்ன ஆச்சு? ஏன் ரொம்ப டிஸ்டர்ப்பா தெரிகிறீங்க?”

“ம்ம்… நந்து! நான் சொல்லப் போவதைக் கேட்டு நீ எதுவும் தப்பா நினைச்சுடக் கூடாதுன்னு பயமா இருக்குடா. ஆனால் ஒண்ணு நந்து, உனக்கு ஓகேன்னா மட்டும் சொன்னா போதும். அதுக்காக என்கிட்ட கோவிச்சிட்டுப் போயிடக் கூடாது” என்றான் மனதில் எழுந்த சிறு பதற்றத்துடன்.

ஏற்கனவே மாமாவிடம் சொல்லி முழுச் சம்மதத்தையும் வாங்கி விட்டாலும், நந்தனா மாற்றி எதுவும் சொல்லி விடக்கூடாதே என்ற பயம் அவனுக்கு இருக்கவே செய்தது. அதன் வெளிப்பாடாகத்தான் பார்த்தும் பேச முடியாமல் தவிக்கிறான்.

“சொல்லுங்க அத்தான் நேரமாகுது”

“நந்து, நந்து! நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

அவன் திடீரென அப்படிக் கேட்டதும் அவள் நம்ப முடியாமல் திகைத்து விழிக்க, “நந்து நான் சொன்னது உண்மைதான்” என்ற பதிலில் கண்ணைத் தட்டி மீண்டவள், அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்வதா இல்லை அழுவதா என்று தெரியாமல் இருந்தாள்.

அவன் எப்போதும் பேசுவது போல, “வீட்டுல அம்மாவால் பயங்கர டார்ச்சர். ஒரு வார்த்தை சொன்னாலும் கேட்பதில்லை. சதா ரக்ஷனாவுக்கும் எனக்கும் கல்யாணம் செய்யும் விஷயமா பேசித் தொல்லை செய்றாங்க. நீயே சொல்லு நந்து! விருப்பம் இல்லாம, மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லாம, யாராலாவது கல்யாணம் செய்துட்டுச் சந்தோஷமா இருக்க முடியுமா?

நமக்கு இருக்கும் வசதிக்கும், வேலைகளுக்கும் வெளிநாடு செட் ஆகுமா? இல்ல ரக்ஷனாதான் இவங்க ஆசைப்பட்ட மாதிரி கூடவே இருக்கப் போறாளா? நான் சொன்னா ஒரு வார்த்தையும் கேட்காம சதா அடம்பிடிக்கிறாங்கடா. என்னால நிம்மதியா இருக்க முடியல” என்றான்.

அவள் இதயம் இருந்த இடத்தில் இரும்புக் குண்டு வைத்தது போல நடுங்கிப் போனாள்.

“நீ நான் இப்படிச் சொல்லுவேன்னு எதிர்பார்த்து இருக்க மாட்டேன்னு எனக்கும் தெரியும் நந்து! இருந்தாலும் இப்ப வேறு வழியும் இல்லை. நீ என்னைக் கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னா மட்டும் போதும், பிறகு உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். உன் ஆசைப்படியே படிக்கலாம்; நம்ம அப்பாவின் அலுவலகத்தில் எனக்கு அடுத்த பொறுப்பில் இருந்து பார்த்துக்கலாம். உன்னை நினைச்சுக் கவலையும் எனக்கு இல்லை. அம்மாதான் கொஞ்சம் முரண்டு பிடிப்பாங்க. நான் அவர்களைப் பேசிச் சமாளிச்சுடுவேன்” என்று தன்மையாக எடுத்துச் சொன்னான்.

அவனது அப்பா மட்டும் இப்போது இருந்திருந்தால், நிச்சயமாக அவன் இப்படிப் பேசும் நிலையே வந்து இருக்காது. அவரே முன்னின்று எல்லாவற்றையும் செய்திருப்பார். இப்போது அவள் முழுவதுமாக அவன் பொறுப்பில் இருப்பதால், அவசரப்பட்டு வார்த்தையை விடவோ குறும்புத்தனம், காதலில் ஈடுபடவோ முடியவில்லை.

தொடர்ந்து வந்த மன அழுத்தம், நிம்மதிக் கேடு, தாயின் வார்த்தைகள், நந்தனாவைப் பார்க்கும் பொறுப்பு என்று பலதும் இருப்பதால், வார்த்தையில் கவனம் இருக்கவே செய்தது.

பரிதிவர்மன் சொன்ன வார்த்தைகள் அவளை அப்படியே வானுலகிற்கு அழைத்துச் செல்வது போலிருக்க, உண்மையில் அவனை ஏற்க முடியாமல் வேதனைப்பட்டாள் நந்தனா.

தன்னிடம் இத்தனை ஆசையாகச் சொல்பவனிடம் எப்படி மறுப்பது என்ற தயக்கமும், அவனை மறுப்பதால் கோபப்பட்டு அன்று பேசியது போலச் சொல்லி விடுவானோ என்ற கலக்கமும், தான் சம்மதித்தால் சித்தி அவனை எதுவும் செய்து விடுவாரோ என்ற நடுக்கமும் மாறி மாறி வந்து தாக்கியது.

“நந்து! உனக்கும் அந்தச் சந்திரனால் எந்தப் பாதிப்பும் வராமல் பாதுகாப்பாய் இருக்கலாம். நானும் என் வேலையைப் பார்ப்பேன். பண்ணை வீடு, பெரிய வீடு ரெண்டிலும் மாறி மாறி இருக்கலாம்டா” என்று மறுபடியும் சொல்ல, தன் மனதை அடக்க அவள் பெரும்பாடு பட வேண்டியிருந்தது.

தான் கூறப் போகும் வார்த்தையால் இருவருக்கும் இடையில் ஏற்படப் போகும் பிரிவை நினைத்துத் தவித்தவள், வேறு வழியில்லாமல் அந்த வார்த்தையை உச்சரித்தாள்.

அவன் அதிர்ந்து போய், “என்ன நந்து சொல்ற? உனக்கு விருப்பம் இல்லையா?” என்று கேட்க, இல்லை என்றாள் நந்தனா.

அவன் அமைதியாக அவளைப் பார்க்க, “சின்ன வயசுல இருந்தே உங்களைப் பார்ப்பதாலும், மாமாவின் மீதுள்ள பாசத்திலும், நீங்க என்மேல காட்டிய அக்கறையிலும் மட்டுமே உங்க கிட்ட இப்ப பேசிட்டு இருக்கேன். இல்லை எங்க மாமா இறந்த பிறகு வந்திருக்க மாட்டேன். எனக்குப் படிக்கணும்; பெரிய வேலைக்குப் போகணும்; கை நிறையச் சம்பாதிக்கணும். இத்தனை வருஷ வாழ்க்கையில் பல அடிகள் பட்ட நான், இனியாவது கொஞ்ச நாள் நிம்மதியா யாருக்கும் கட்டுப்படாம சுதந்திரமா இருக்கணும்…

நீங்களும் எங்க மாமாவும் செய்த நன்றிக்கடனுக்குப் பிரதிபலனாக ஏதாவது செய்யணும். நான் இப்பதான் ரெண்டாவது வருஷம் கல்லூரிக்குப் போறேன். இன்னும் ரெண்டு வருஷப் படிப்பு இருக்கு. அதுக்கு முன்னே கல்யாணம் பண்ண நினைக்கல. நீங்க என்னைத் தப்பா எடுத்துக்க வேண்டாம்! அத்தை சொல்ற மாதிரி ரக்ஷனாவை கட்டிக்கிட்டு நல்லா இருங்க” என்றாள்.

அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அன்று அவன் விளையாட்டாகக் கூறிய வார்த்தையை, இன்று அவள் சொல்லும்போது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“நந்து! அன்னைக்குத் தெரியாம ஏதோ ஒரு வேகத்தில் பேசிட்டதைப் பெரிசுபடுத்தாதே!” என்றான்.

அவளோ, “இல்லை அத்தான்! அத்தை உங்களைக் கட்டாயப்படுத்துவதால் நீங்க என்னைக் கல்யாணம் செய்ய நினைக்கிறீங்க. இது என் மீதான உண்மையான நேசத்தால் வந்தது இல்லை. இப்ப நம்ம கட்டிக்கிட்டாலும் கூட பின்னாளில் சந்தோஷமா இருக்க முடியாது. அத்தை தன் மருமகளாக என்னை ஏத்துக்கவும் மாட்டாங்க, அதோடு நானும் படிப்பு வேலை, வீட்டுல சதா பிரச்சனைன்னு இருந்தா உங்க வாழ்க்கையும் வீணா போயிடும். எங்க அப்பா உட்பட வீட்டுல உள்ள யாரையும் அத்தைக்குப் பிடிக்காது. அவர்களை அவமதித்தாலும், தப்பா நடத்தினாலும் என்னாலும் பார்த்துட்டு இருக்க முடியாது. ஒரு நாத்தனார் பொண்ணா என்னை ஏத்துக்க மறுப்பவர், எப்படி தன் மருமகளா ஏத்துக்குவார்? அதை விட ரக்ஷனாவை கட்டிக்கிட்டா இந்தப் பிரச்சனையே வராது” என்றாள்.

அவனுக்கு மேலும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவள் மனதில் இப்படி எல்லாம் இருக்கும் என்று சற்றும் எதிர்பாராமல் திகைப்புடன் நின்றான்.

அவள் சொன்ன எதுவும் தப்பில்லை. இன்னும் இரண்டு வருடம் முடிந்தால் அவளும் படிப்பை முடித்து விடுவாள், அத்துடன் அம்மாவையும் எப்படியாவது சரி செய்து விட்டுப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.

“நந்து! நான் நினைச்ச நேரம் உன்னைப் பார்க்கணும்; பேசணும். நமக்கு இடையில் வேறு யாரும் வரக் கூடாது. அதுக்கு நீ என் கூடவே இருந்தா போதும்னு நினைச்சுட்டேன். சாரிடா! நீ படிக்கிற பொண்ணு, இப்படி கேட்டிருக்க கூடாது. நான் பேசியதை மனசுல வச்சுக்காதே! நல்லா படி!” என்றவன் திரும்பிச் சென்று விட்டான். அவனது வாடிய முகமும், அவள் இப்படிச் சொல்லித் தன்னைத் தவிர்ப்பாள் என்று எதிர்பாராமல் அதிர்ந்த கண்களும் அவளை வதைத்தது. கையருகில் வந்த சொர்க்கத்தைக் கை நழுவ விட்டு விட்டோமே என்று வாய் விட்டு அழ முடியாமல் துடித்தாள். கண்களிலிருந்து பெருகி வடிந்த நீரைத் துடைக்கத் தோன்றாமல் அங்கேயே நின்று அழுதாள்.

பின்னர் கல்லூரிக்குச் சென்றும் படிப்பு ஏற மறுத்தது. அன்று முழுவதும் பித்துப் பிடித்தது போலக் காணப்பட்டாள். அவனை மறுபடியும் எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வியும், யாரோ ஒருவனாக அவனை நிறுத்திப் பார்க்க முடியாமலும் மனம் வேதனை கொண்டது. அன்று முதல் அவளது வாழ்க்கை கண்ணீரில் கரைந்து போனது.

இத்தனை நாளும் நன்றாகப் பழகிய பெண்ணின் மனதில் தான் இல்லை என்பதை அறிய வந்தது முதல், எதையோ இழந்தது போலத் துடித்தாலும், வேறு எதிலும் நாட்டம் வர மறுக்க, முகத்தில் சந்தோசத்தைத் தொலைத்து நடமாடினான் பரிதிவர்மன்.

மகனின் மனதில் இருப்பது தெரியாமல் நாகேஸ்வரி அவன் திருமண விசயமாகப் பேசினார். இவன், “அப்பா இறந்து அப்படி எத்தனை நாளாகிடுச்சு? நல்ல காரியம் செய்வதற்கு இதுதான் நேரமா? ரெண்டு வருஷம் போகட்டும். அதுவரை வாயை மூடிட்டு இருங்க. ஒருவேளை இந்த வீட்டுல இருக்கப் பிடிக்கலயா, உங்க அண்ணன் வீட்டுக்குக் கிளம்பிப் போங்க” என்று கோபமாகச் சொல்லி விட்டுச் சென்றான்.

சதா நேரமும் இப்படியே சொன்னால் அவன்தான் என்ன செய்வான்? ஆனால் அவனது அம்மா சரியாக உண்ணாமல் உறங்காமல் மகனை நினைத்து ஏக்கத்திலும், இப்படி பேசி விட்டுச் சென்ற கவலையிலும் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகி மயங்கி விழுந்து விட, வீட்டுப் பணியாட்கள் மூலம் விசயம் அறிந்து ஓடி வந்தான் பரிதிவர்மன். உடனே அவரை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு விரைந்தான். அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர் சொன்ன தகவல் அவன் மனதைக் காயப்படுத்தியது. வீட்டிற்கு அழைத்து வந்த பிறகும் சரியாகப் பேசாமல் அழுதபடி இருக்க, சதாசிவத்திடம் விசயத்தைச் சொல்லி விட்டு அப்படியே இருந்தான் பரிதிவர்மன்.

அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“நந்துவும் என்னைக் கல்யாணம் செய்ய விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா; இப்ப நான் என்னதான் செய்றது?” என்று கூற, அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார்.

அவன் நடந்ததைச் சொன்னதும், மகளிடம் பேசித் திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பதாகக் கூறினார். ஆனால் அவன் படிப்பு, வேலை, வயசு எனப் பல காரணங்களைச் சொல்லி, “அவளை எந்தக் காரணத்துக்காகவும் நீங்க கட்டாயப்படுத்தக் கூடாது. அவள் படிக்கட்டும். பெத்த பிள்ளையின் மீது அக்கறையில்லாத தாய்; தான் மட்டும் நினைத்தது நடக்க வேண்டும்னு நினைக்கும் தாய்; மகன் மனதில் என்ன இருக்குன்னு தெரியாத தாய், எனக்குக் கிடைச்சது போல யாருக்கும் இருக்க மாட்டாங்க. எங்க அப்பாவின் ஆசை, பேச்சு எல்லாம் சொல்லியும் கூடக் கேட்கலன்னா நான் என்னதான் செய்றது மாமா?” என்று விம்மினான்.

அவரை நாகேஸ்வரிக்குப் பிடிக்காது எனும்போது வீடு தேடிச் சென்று பெண் கேட்கவும் முடியவில்லை. அதனால் அவரும் அவனது நிலையை நினைத்து வருந்த, “ஏன் மாமா நந்துவுக்கு இருக்கும் ஆசைதானே ரக்ஷனாவுக்கும் இருக்கும்! பிறகும் ஏன் அவள் வாழ்க்கையையும் அழிக்கப் பார்க்குறாங்க? அந்தப் பொண்ணும் இப்பதான், அதுவும் வெளிநாட்டில் படிச்சுட்டு இருக்கு. சின்னப் பெண்ணைக் கட்டி வச்சு அவள் வாழ்க்கையை அழிக்கப் பார்ப்பதோடு, அவள் எதிர்காலத்தையும் குட்டிச்சுவர் ஆக்கப் பார்க்கறாங்க. ஏற்கனவே அவள் அம்மா சின்னப் புத்தியுடன்தான் பேசும். இதுல அவர் மகளைக் கட்டிட்டா முடிஞ்சது” என்று கசப்புடன் கூறினான்.

அவருக்கு மனம் வலித்தது. என்ன சொல்லிச் சமாதானப்படுத்துவது என்று கூடத் தெரியவில்லை. அதன் பிறகான நாட்களில் எந்த மாற்றம் இல்லாமல் இருந்தது. அம்மாவின் உடல்நிலை தொடர்ந்து பலவீனம் ஆவதால், அவருக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதால் பேசி பார்த்தான்.

அப்போதும் அவர் அசையாமல் இருக்க, “உங்க விருப்பப்படி செய்யுங்க” என சொல்லி விட்டுச் சென்றான் பரிதிவர்மன்.

உடனே அவர் பரபரப்புடன் செயல்பட்டார். அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் வேல்முருகனுக்கு அழைத்து விசயத்தை தெரியப்படுத்தியதும், அவர் பரிதிவர்மனுக்கு மேலாக மறுத்தார். ஆனால் நாகேஸ்வரி தனது மகன் சம்மதித்து விட்டதாகவும், விடுமுறையில் அவர்கள் வரும்போது திருமணத்தை முடித்து விடலாம் என்றும் கூறினார்.

வேல்முருகன் முதலில் பரிதிவர்மனிடம் பேசி உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் இது குறித்துப் பேசலாம் என்று நினைத்தார். அது போல அவனிடம் பேசும்போது, “உங்க விருப்பம் போல செய்யுங்க மாமா! எனக்குன்னு தனிப்பட்டு எதுவும் இல்லை. ரெண்டு வருஷம் போகட்டும்னு சொல்லியும் அம்மா கேட்கல. எனக்கு அவர் வேணும், அதுதான் அம்மா பேச்சுப்படி நடக்க முடிவு பண்ணினேன்” என்றான்.

அவர் அப்படியும் நந்தனா குறித்து விசாரிக்க, இவன் அவள் சொன்னதையும் மறைக்காமல் கூறினான். அவளை நினைத்து ஆச்சரியமாக இருந்தது வேல்முருகனுக்கு. பின்னர் மனைவியை அழைத்து சத்தமிட்டு நீதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றார். அவளோ கேட்காமல், இந்தக் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ரக்ஷனா ‘எனக்குப் படிக்கணும் இப்ப வேணாம்’ என்று கூறினாள்.

மகளை அணைத்துக் கொண்டவர், நண்பரின் மகனுக்கு அவளை மணமுடித்து வைக்க நினைத்திருக்க அவன், இவர்கள் தாணுலிங்கத்தின் இறப்பின்போது ஊருக்கு வந்திருந்த நேரத்தில், தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து இருக்கிறான். அதனால் ரக்ஷனா இவர்கள் திரும்பி வரும் வரை ஹாஸ்டலில் சென்று தங்கி இருக்கிறாள். மறுபடியும் அமெரிக்காவிற்கு வந்ததும், மகள் மூலம் விசயத்தை அறிந்த வேல்முருகன், அவனை அழைத்துக் கண்டித்தார். விசயம் வீட்டிற்கும் தெரிய வர, இவர்களது திருமண பேச்சு முறிந்து போனது. இப்போது தங்கையும் இப்படி சொல்வதுடன், நந்தனாவும் விருப்பமில்லை என்றதால் ஊருக்குச் சென்றதும் இது குறித்துப் பேசலாம் என்று நினைத்தார். வனிதா இவர் சம்மதம் தெரிவித்து விட்டதாக நாகேஸ்வரியிடம் மாற்றி சொல்லி விட, அண்ணனின் சம்மதம் கிடைத்து விட்டதாக கருதி உடனடியாக ஜோதிடரை பார்த்து நாள் குறித்து, அவர்கள் விடுமுறையில் வரும் நேரம் திருமணம் நடக்கும் விதமாக அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டார் நாகேஸ்வரி.

சரியாக ஆறாவது மாதம் அவர்களும் வந்து விட, வேல்முருகனின் எதிர்ப்பையும் மீறி, எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. சதாசிவத்தின் முகத்தில் இருந்த போலிப் புன்னகையும், நந்தனாவை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமலும், அவள் ஹாஸ்டலுக்கு போய் விட்டதை அறிந்த வருத்தத்திலும் இருந்த பரிதிவர்மன், அவளிடம் நேரில் சென்று திருமண விசயத்தைத் தெரிவிக்கவில்லை.

திருமண இரவு அன்று தனது அறைக்குள் வந்தும் அவன் ரக்ஷனாவிடம் பேசவில்லை. அவள் இருக்கும் அறையே மூச்சு முட்டியது. அவளிடம் என்ன பேசுவது என்று தடுமாறியது. வார்த்தைகள் வராமல் தந்தியடித்தது. எதுவும் சொல்லாமல் அப்பாவின் தனிப்பட்ட அறைக்கு வந்தவன், தன்னை மன்னித்து விடுமாறு கேட்டான்.

அவர் அமைதியாகப் புகைப்படத்தில் இருந்து அவனையே பார்த்தார். அவன் அதே அறையில் இரவு முழுவதும் இருந்து விட, மறுநாள் காலை நேரம் வரும்போது அவள் கீழே சென்றிருந்தாள்.

காலை உணவை அவளைப் பரிமாறச் சொல்ல, நந்தனாவின் நினைவு அதிகமாகத் தாக்கியது. ஒரு வாய் உணவு உள்ளே போக மறுக்க, அவன் வேண்டாம் என்று எழுந்து சென்று விட்டான்.

சலசல பேச்சு செவியை அடைக்க மாடிக்குச் சென்று பால்கனியில் வெறித்தபடி நின்றான். ரக்ஷனா அவன் அருகில் வந்து நிற்க, அவன் பார்வையைத் திருப்பக் கூட இல்லை. அவளும் விடுமுறையில் வந்த முதல் அவனிடம் பேசிவிட பல வழிகளில் முயற்சிக்கிறாள், அவனோ எதற்கும் அசைந்து கொடுக்க மறுக்கிறான். இப்போதும் அவன் இருக்கும் நிலை சந்தேகத்தை வர வழைத்தது.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top