அத்தியாயம் 2

சனிக்கிழமை காலைப் பொழுது செங்கமலப்பட்டி வீட்டில் வழக்கத்தைவிடக் கொஞ்சம் உற்சாகமாகவே விடிந்தது.

விடியற்காலையிலேயே எழுந்த சிவகாமி முற்றத்தைச் சுத்தம் செய்து கோலமிட்டிருந்தாள். சமையலறையில் நாட்டுக்கோழிக் குழம்பின் மணம் வீடு முழுவதும் பரவியிருந்தது. கருப்பையாவும் வழக்கத்தைவிடச் சுறுசுறுப்பாகத் திண்ணையில் அமர்ந்து வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்னப்பா, இன்னைக்கு வாசல்லயே கண்ணு நிக்குது?” என்று கவிதா சிரித்தாள்.

“நீ சும்மா இரு. என் பையன் பெங்களூர்ல இருந்து வர்றான். அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதுல என்ன தப்பு?”

அந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த முத்துவின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

மூன்று மாதங்களாகத் தம்பியைப் பார்க்கவில்லை. அதற்காகவே அதிகாலையில் மாடுகளுக்குத் தீவனம் வைத்தது முதல் பால் கொடுத்துவிட்டு வருவது, வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது என எல்லா வேலைகளையும் வேகமாக முடித்திருந்தான்.

“முத்து, போய்க் குளிச்சுட்டு வா. தம்பி வர நேரமாச்சு,” என்றாள் சிவகாமி.

“இதோம்மா…”

பத்தரை மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினான் அரவிந்தன். ஒரு கையில் பெரிய பயணப்பை, இன்னொரு தோளில் மடிக்கணினிப் பை, கண்களில் கறுப்புக் கண்ணாடி என நகரத்து மிடுக்குடன் வந்தவனைப் பார்த்ததும் முத்துவின் முகம் மலர்ந்தது.

“அண்ணா!”

“வாடா தம்பி!”

அரவிந்தன் அருகில் வந்ததும் அவனுடைய பெரிய பையை முத்து வாங்கிக்கொண்டான்.

“இருக்கட்டும்ணா. ரொம்பக் கனமா இருக்கு.”

“எனக்குத் தெரியாதா? இந்தக் கை இதையெல்லாம் தூக்கித்தான் பழகியிருக்கு.”

அரவிந்தன் சிரித்தான். இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வழியெல்லாம் அலுவலகத்தில் நடந்த விஷயங்களை அரவிந்தன் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே வந்தான்.

“எங்க டீம் லீடே என்னைப் பாராட்டினார்ணா. ஒரு பெரிய ப்ராஜெக்ட் பொறுப்பைக் கொடுத்திருக்காரு. இந்த மாசம் இன்கிரிமென்ட்டும் வரப்போகுது.”

அவன் சொன்னதில் பாதி வார்த்தைகள் முத்துவுக்குப் புரியவில்லை. ஆனால் தம்பியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பெருமையும் அவனுக்குப் புரிந்தது.

“அப்படியா? நல்லா பண்ணிருக்கடா. இன்னும் மேல போகணும். அதுதான் எனக்குச் சந்தோஷம்.”

வீட்டு வாசலில் சிவகாமி ஆரத்தி எடுத்தாள்.

“என் ராசா வந்துட்டியா! முகமெல்லாம் வாடிப்போயிருக்கு. ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா?”

“நல்லாத்தான்மா இருக்கேன்.”

கருப்பையா எழுந்து மகனின் தோளைத் தட்டினார்.

“வேலை எப்படிப்பா போகுது? ஆபீஸ்ல எல்லாம் நல்லா இருக்காங்களா?”

அவருடைய குரலில் இருந்த பெருமையை முத்து கவனித்தான். தந்தை தன்னிடம் கடைசியாக எப்போது இப்படிக் கேட்டிருப்பார் என்று நினைக்கத் தோன்றியது. அடுத்த நொடியே அந்த எண்ணத்தை ஒதுக்கினான். தம்பியின் மகிழ்ச்சிதானே அவனுக்கும் மகிழ்ச்சி!

“வாடா ராசா!” என்று பாட்டி வள்ளியம்மாள் அழைத்ததும் அரவிந்தன் குனிந்து அவர் காலில் விழுந்தான். பாட்டி அவன் தலையை வருடிவிட்டு, பார்வையை முத்துவின் பக்கம் திருப்பினார். அந்தப் பார்வையில் ஏதோ சொல்லப்படாத கேள்வி இருந்தது.

மதியத்துக்கு முன்பே அரவிந்தன் கைப்பேசியைத் தூக்கிக்கொண்டு வீடு முழுவதும் அலைந்தான்.

“என்னம்மா இது? வீட்டுக்குள்ள ஒரு சிக்னலும் கிடைக்க மாட்டேங்குது!”

“கிணத்துமேட்டுக்குப் போடா. அங்கதான் கிடைக்கும்,” என்றாள் கவிதா.

அவன் தன்னுடைய வெள்ளைக் காலணியுடன் கிணற்றடிக்குச் சென்றவன், சேற்றில் கால் வழுக்கித் தடுமாறினான்.

“ஏய் பார்த்துடா!” என்று ஓடி வந்த முத்து அவனைப் பிடித்துக்கொண்டான்.

“இந்த ஊர்ல நடக்குறதுக்கே தனிப் பயிற்சி வேணும்போல இருக்குண்ணா!”

“நகரத்து மனுஷனுக்கு நம்ம மண்ணு ஒத்துக்க மாட்டேங்குதோ?”

இருவரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பில் பழைய சிறுவயது திரும்பி வந்தது.

மதிய உணவுக்கு வீட்டில் பெரிய விருந்தே தயாராகியிருந்தது. நாட்டுக்கோழிக் குழம்பு, முட்டை வறுவல், ரசம், பாயசம் என இலை நிறையப் பரிமாறினாள் சிவகாமி.

“அரவிந்தா, இந்தத் துண்டு உனக்குப் பிடிக்கும்ல? இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”

“அம்மா, போதும்மா!”

“விடு, அவன் சாப்பிடட்டும்,” என்றார் கருப்பையா.

“அண்ணா, நீயும் உட்காருண்ணா,” என்றான் அரவிந்தன்.

“நீங்க சாப்பிடுங்கடா. வயல்ல தண்ணி மாத்தணும். அப்புறம் வைக்கோலும் இறக்கணும்.”

“சாப்பிட்டுட்டுப் போகலாமே?”

“இதோ வந்துடறேன்.”

அவன் துண்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான். அவன் பின்னால் பார்த்த அரவிந்தன் மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான்.

மாலை நான்கு மணிக்குத்தான் வேலைகளை முடித்துவிட்டு முத்து வீடு திரும்பினான். வயிற்றில் பசி இருந்தாலும், அவனுக்குப் பழக்கமான வேலைகள் முடிந்த திருப்தியே முதலில் தோன்றியது.

வாசலில் கவிதாவும் அரவிந்தனும் கைப்பேசியில் ஏதோ பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

“கவிதா, நீ கேட்ட பேனா.”

நீல நிற ஜெல் பேனாவை அவளிடம் நீட்டினான்.

“அட! இதே நிறம்தான் அண்ணா. தேங்க்ஸ்!”

அவள் வாங்கிய மறுநொடியே மீண்டும் அரவிந்தனின் கைப்பேசியில் கவனம் செலுத்தினாள்.

அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உள்ளே செல்ல முயன்ற முத்துவை அரவிந்தன் அழைத்தான்.

“அண்ணா, ஒரு நிமிஷம்!”

அவன் கொடுத்த பையைத் திறந்த முத்துவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. உள்ளே அழகான சட்டை ஒன்று இருந்தது.

“எனக்காடா?”

“ஆமாண்ணா. உனக்குப் பிடிக்கும்னு நினைச்சு வாங்கினேன்.”

முத்து அந்தச் சட்டையை விரல்களால் தடவிப் பார்த்தான்.

“நல்லா இருக்கு. எவ்வளவு ஆச்சு?”

“அட, மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா? நான் உனக்காக வாங்கினது. விலை கேட்காத.”

“சரி சரி… விசேஷத்துக்கு போட்டுக்கறேன்.”

அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து அரவிந்தனும் சிரித்தான்.

அந்த நேரத்தில் சமையலறையிலிருந்து வந்த சிவகாமி, “முத்து, நீ இன்னும் சாப்பிடலையா? இதோ, மிச்சம் இருக்கு. சாப்பிடு,” என்று ஒரு தட்டை வைத்தாள்.

தட்டில் குழம்பு கொஞ்சம், முட்டை வறுவலில் சிறு துண்டு மட்டுமே இருந்தது.

“போதும்மா,” என்றபடி உட்கார்ந்தான்.

“இரு,” என்று வந்த பாட்டி, தன்னுடைய இலையிலிருந்த கோழித் துண்டை அவன் தட்டில் வைத்தார்.

“பாட்டி, உங்களுக்கு?”

“எனக்கு இதுவே போதும். நீ காலையிலிருந்து உழைக்கிறவன். நல்லா சாப்பிடு.”

முத்து எதுவும் பேசாமல் அவரைப் பார்த்துப் புன்னகைத்தான்.

இரவு திண்ணையில் எல்லோரும் அமர்ந்திருந்தபோது அரவிந்தன் பேச்சைத் தொடங்கினான்.

“அப்பா, நான் வேலை பார்க்கிற இடத்துக்குப் பக்கத்துல ஒரு பிளாட் பார்த்திருக்கேன். ஹாஸ்டல்ல இருந்து வெளிய வந்துடலாம்னு நினைக்கிறேன்.”

“அப்படியா? நல்லதுதானேப்பா,” என்றார் கருப்பையா.

“ஆனா முன்பணம் எண்பதாயிரம் கேட்கிறாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல கட்டணும். இப்போதைக்கு அண்ணா கொடுத்தா, சம்பளம் வந்ததும் கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடுத்துடுவேன்.”

அந்தப் பேச்சு முடிந்ததும் எல்லோருடைய பார்வையும் முத்துவை நோக்கித் திரும்பியது.

அவன் மனதிற்குள் கணக்குப் போட்டான். சொட்டுநீர்ப் பாசனக் கருவிக்காகச் சேர்த்து வைத்திருந்த பணம் நினைவுக்கு வந்தது. இன்னும் கொஞ்சம் சேர்த்தால் வாங்கிவிடலாம் என்று நினைத்திருந்தான்.

ஆனால் தம்பியின் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பைப் பார்த்ததும் அந்தக் கணக்கு மாறியது.

“இன்னும் ரெண்டு மாசம் இருக்குல்ல? பார்த்து ஏற்பாடு பண்றேன்,” என்றான்.

“தேங்க்ஸ் அண்ணா!” என்று அரவிந்தன் அவன் தோளைத் தட்டினான்.

“நம்ம வீட்டுக்கு முத்துதான் தூண். அவன் பார்த்துக்குவான்,” என்றார் கருப்பையா பெருமையுடன்.

எல்லோரும் சிரித்தார்கள். முத்துவும் சிரித்தான்.

“அண்ணா, உன் கல்யாணத்தையும் சீக்கிரம் முடிச்சிடலாம்,” என்றாள் கவிதா.

“அதெல்லாம் இப்போ வேண்டாம். உன் படிப்பு முடியட்டும்.”

“எப்பப் பார்த்தாலும் என் படிப்பு, என் படிப்புன்னு சொல்லாதண்ணா. உனக்கும் வாழ்க்கை இருக்கு.”

அவள் சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தை முத்துவுக்குள் எங்கோ சிறு சலனத்தை ஏற்படுத்தியது.

“பார்த்துக்கலாம்,” என்று பேச்சை முடித்துவிட்டு எழுந்தான்.

இரவு எல்லோரும் உறங்கிய பிறகு கிணற்றடியில் கை கழுவிக்கொண்டிருந்தான் முத்து.

“முத்து…”

பின்னால் பாட்டியின் குரல் கேட்டது.

“என்ன பாட்டி? இன்னும் தூங்கலையா?”

“அது இருக்கட்டும். இன்னிக்கு ஒழுங்கா சாப்பிட்டியா?”

“நல்லாத்தான் சாப்பிட்டேன்.”

“என்கிட்டயே பொய் சொல்றியா? உன் தட்டுல என்ன இருந்துச்சுன்னு எனக்குத் தெரியாதா?”

முத்து அமைதியாக நின்றான்.

“உன் அம்மா கெட்டவ இல்லடா. ஆனா இந்த வீட்டுல எல்லாருக்கும் என்ன வேணும்னு யோசிக்கிறவங்க, உனக்கு என்ன வேணும்னு யோசிக்க மறந்துடுறாங்க. இப்படியே போனா ஒரு நாள் உனக்குன்னு எதுவுமே மிஞ்சாது.”

அந்த வார்த்தைகள் அவனுக்குள் ஆழமாக இறங்கின.

பாட்டி மெதுவாகத் திரும்பி நடந்தார்.

நீண்ட நேரம் அங்கேயே நின்ற முத்து, சட்டைப் பையிலிருந்த புகைப்படத்தை வெளியே எடுத்தான். நிலவொளியில் அந்தப் பெண்ணின் முகம் மங்கலாகத் தெரிந்தது.

தனக்கென்று ஒரு வாழ்க்கை இருக்குமா? தன்னையும் புரிந்துகொள்ள ஒரு துணை கிடைப்பாளா?

அந்தப் பெண்ணைப் பார்த்தபடி அவன் மனதிற்குள் ஒரு கேள்வி எழுந்தது.

இவளை என் வாழ்க்கைக்குள் அழைத்து வர எனக்குத் தகுதி இருக்கிறதா?

error: Content is protected !!
Scroll to Top