வேள்வி : 1

வேள்வித் தீயில் ஓர் இதயம்

     (ஆனந்த ஜோதி)

அந்த அதிகாலை வேளையில் செண்பகராமன்புரத்தில் உள்ள சதாசிவத்தின் இல்லம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, இன்னும் சற்று நேரத்தில் திருமணத்திற்குத் தயாராக வேண்டும் என்பதால், நந்தனாவை எழச் செய்து குளிக்கச் சொன்னாள் அவளது சித்தி நீலாம்பரி. பெயரைப் போலவே ஆளும் பயங்கரமான குணத்தை உடையவள்.

அவளது மகனும் மகளும் திருமணத்திற்குச் செல்லத் தயாராக இருக்க, “வேண்டாம்” என்றும் கேட்காமல் இப்படித் தன்னைக் கட்டாயப்படுத்துகிறார்களே என்று அழுதுகொண்டிருந்த நந்தனா, “தன்னைப் பெற்றெடுத்த தாய் உயிரிழந்தபோது, தன்னையும் சேர்த்துக் கொண்டு போயிருக்கக் கூடாதா?” என்று கதறினாள்.

பெற்ற தாயைப் பிறந்தவுடன் பறிகொடுத்து, வளர்ப்புத் தாயின் கொடுமையில் சிக்கித் தவித்து, எத்தனையோ விதமான இன்னல்களைச் சந்தித்து, எப்போதோ நடக்க இருந்த திருமணத்தைத் தவிர்த்து, அவர் சொல்வதைக் கேட்பதாகச் சம்மதம் தெரிவித்து, தம்பி தங்கையின் மனம் கோணாமல் நடந்து, அவரது அண்ணன் மகன் சந்திரகுமாரை மணக்க முடியாது என்று சொல்லியும் கேட்காமல், இதோ திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. 

எங்கிருந்து அவன் இவளுக்கு முறைப் பையனாகிறான்? இறந்துபோன அவளது அம்மாவின் உடன் பிறந்த சகோதரனின் பிள்ளைகள் தானே இவளுக்கு முறை செய்யும் கடமை உடையவர்கள்!

ஆனால் பாருங்களேன்! தாய் இறந்தவுடன் அவளது உறவும் அதோடு துண்டிக்கப்பட்டு விட்டது. அந்த வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சீர் சாதனங்கள் மட்டும் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நந்தனாவை அவளது தாய் வழி உறவினர்கள் பெண் கேட்டு வந்தும் தர மறுத்துவிட்டாள் நீலாம்பரி. தனது ஒரே அண்ணனின் மகனான சந்திரகுமாருக்கு அவளைத் திருமணம் செய்து தருவதாக சொல்லி, அவளது படிப்பு, நகை, வீட்டின் வறுமையைக் காரணமாக்கி பணத்தை சுரண்ட ஆரம்பித்து விட்டாள். அவனும் அவள் மீதான ஆசையில் கேட்பதை எல்லாம் செய்து தருகிறான். அவளைத் தன் வாழ்க்கை துணையாகவே பாவிக்கிறான்.

இப்போதும் சீதனமாக ஒரு காசு கூட வாங்காமல் தான் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தன்னை அடமானமாக வைத்து சித்தி நடந்து கொள்ளும் விதம் அவளைப் புண்படுத்த, அப்பாவிடம் சொல்லிக் குமுறினாள் நந்தனா. அவர் தட்டிக் கேட்ட போதும் கூட, “நீங்க சம்பாதித்து வச்சிருப்பதில் பாலாறும் தேனாருமா ஓடுது? இதுல எதை எடுத்துச் செலவழிப்பதுன்னு தெரியாம நான் திண்டாடுறேன்” என்று கழுத்தை ஒரு வெட்டு வெட்டினார்.

அவர் மனைவியை முறைத்ததும், “என்னவோ உங்க மகளை அவன்கிட்ட வித்துட்ட மாதிரி பேசுறீங்க? அவன் மட்டும் கேட்பதை வாங்கி தராம இருந்தா, அவள் எங்கே படிக்க போயிருக்க முடியும்? அப்பாவும் பொண்ணும் கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடங்க” என்று பொருமி விட்டு அகன்றார்.

இவள் என்ன சொல்கிறாள் என்பதாக அவர் பார்க்க, “எனக்கு அவங்க காசுல வாங்கும் எதுவுமே வேணாம் அப்பா! ப்ளீஸ்… இதை விட நான்  படிக்க போகாம வீட்டுலயே இருக்கேன்” என்று கெஞ்சினாள் நந்தனா. 

அவருக்கு மனதிற்குள் வலித்தது. மகளின் படிப்பிற்கான தொகையை அவனிடம் இருந்து வாங்கும் அளவிற்கு அவர் ஒன்றும் விட்டு விடவில்லை. மாறாக என்ன நடந்தாலும் மகளது படிப்பு கெட்டுப் போயிட கூடாது என்று மாதா மாதம் ஒரு தொகையை அனுப்புவது, வேறு நபர் அல்லவா! அதைத்தான் யாருக்கும் தெரிய கூடாது என்று முன்பே கூறி விட்டானே!  இவளோ கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்ததை போல, யாரோ செய்ததை யார் பெயருக்கோ மாற்ற பார்க்கிறாள்? என்று வெம்பினார். 

அப்படிப்பட்ட மனிதர் இருக்கும் வரை தன்னை மீறி எதுவும் நடக்க விடாமல் தான் பார்த்திருந்தார். ஆனால் விதி அவரை ஆட்டிப் படைத்து யாரை தலை மீது தூக்கி வைத்து நடத்தி, பல கனவுகளை காண வைத்ததோ அவர்களின் வாயாலே மாறி நடக்க செய்து விட்டது.

எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. பின்னர் அதற்கான காரணம் தெரிந்தபோது தனது பிறப்பையே வெறுத்து விட்டார் சதாசிவம்! மகளுக்கு ஒரு நல்லதை நடத்தி விட வேண்டும் என்று எடுத்த முயற்சிகள் பயனற்று போக, அவளது கண்ணீரைத் துடைக்க தன்னுயிரை பலி கொடுக்க நேர்ந்தது. இப்போது மறுபடியும் அவர்கள் வேண்டாம் என்று நினைத்து முன்பு ஒரு முறை தடுத்து நிறுத்தியிருந்த திருமணம் நடக்க போகிறது. இந்த முறை இதை எப்படி தடுப்பது? என்று அவளுக்குத் தெரியவில்லை.

சற்று நேரத்தில் கேட்ட சித்தியின் சத்தத்தில் வெளியே வந்து, விருப்பமில்லாமல் திருமண மண்டபத்திற்குச் செல்ல தயாராகினாள் நந்தனா.

கண்கள் இறைவன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளைக் கண்டு இளக்காரமாகச் சிரித்த நீலாம்பரி, “என்ன ரொம்ப நேரமா சுவாமி படத்தைப் பார்த்து வேண்டுதல் வச்சிட்டு இருக்க? நீ என்ன நெனச்சாலும் நடக்காது; நடக்கவும் இந்த நீலாம்பரி விட மாட்டா. அன்னைக்கு ஒரு நாள் செய்ய இருந்ததை அப்பனும் மகளும் சேர்ந்து செய்ய விடாம தடுத்துட்டீங்க; இப்ப நடக்கப் போறதை அந்த ஆண்டவன் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது” என்று ஆணவத்துடன் உரைத்தாள்.

ஏற்கனவே எத்தனையோ முறை கேட்டுவிட்டாள். தம்பி தங்கையின் மூலம் சொல்லிப் பார்த்தும் முடியவில்லை; இதில் வாய் திறந்து கேட்டால் மட்டும் செய்து தரவா போகிறாள்?

நந்தனா அமைதியாக நாற்காலியில் சென்று அமர்ந்துகொள்ள, அனைவரும் திருமண மண்டபத்திற்குச் செல்ல வாகனத்தில் ஏறி அமர்ந்தனர். சிவன் கோயிலின் முன்புறம் சென்று வாகனம் நின்றது. அதற்கு எதிர் பக்கமுள்ள மண்டபத்தில்தான் திருமணம் நடப்பதற்காக உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.

இவளும் அவர்களுடன் சென்று அங்கு அமர்ந்திருக்க, மாப்பிள்ளை வண்டி வந்ததும் பெண் வீட்டார் அங்கே சென்றனர்.

மாப்பிள்ளையும் பெண்ணும் முன்புறமாக நின்றிருக்க, அருகில் அவர்களின் குடும்பத்தார் சூழ்ந்து காணப்பட்டனர். அந்தப் பெரிய சிவ ஆலயம் உறவினர்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. அவளது இதயம் திக் திக் என நிமிடத்திற்கு நூறு முறை வேகமாகத் துடித்தது.

‘ஆண்டவா என்னைக் காப்பாற்று! இப்படி ஒருவன் கையில் கொண்டு என்னை ஒப்படைப்பதற்குப் பதிலாக என் உயிரையே எடுத்திருக்கலாமே! எதற்காக இந்தப் புவியில் என்னைப் படைத்தாய்? அப்படி என்ன பாவம் செய்துவிட்டேன் என்று இப்படித் தண்டிக்கிறாய்? இதிலிருந்து எனக்கு மீட்சி கிடையாதா? விடிய விடிய அவனது பணத்தில் தான் இத்தனை வருடம் சாப்பிட்டு வளர்ந்து வந்ததாக சொல்லி சொல்லி  என்னை வதைத்தது போதாது என்று இப்போது அவனிடமே முழு நேரமும் தள்ளி விடப் போகிறாயா?’ என்று மனதிற்குள் புலம்பினாள். 

கண்கள் இரண்டும் சிவந்து கண்ணீராக வடிந்தது. அன்றொரு நாள் நடந்த சம்பவங்கள் நெஞ்சை அடைத்து உயிரையும் உலுக்கியது.

 அந்த நேரம் யாரோ அவளது கழுத்தில் மலர் மாலையைத் தூக்கிப் போட, இதோடு தன் வாழ்க்கை அழிந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் நந்தனா. அருகில் நிற்பவனின் பார்வை விடாமல் துளைத்தெடுக்க, உடம்பெல்லாம் நடுக்கத்தில் ஆடியது. ஏனோ அவனை அவளுக்குச் சிறுவயதிலிருந்தே பிடிப்பதில்லை; அது சித்தி அவளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாலும், அவளது உறவினன் என்ற காரணமும், நந்தனாவிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு, ‘உன்னை நான் தான் கல்யாணம் செய்துக்க போறேன்; வேறு யாருடனாவது பேசினேன் பழகினேன்னு தெரிஞ்சது அப்புறம் அவனைக் கொன்னு போட்டு உன்னைத் தூக்கிட்டுப் போயிடுவேன்’ என்று பயமுறுத்தியதால் ஏற்பட்ட அச்சமும் ஆகும்.

பட்டு வேட்டியும் சட்டையும் அணிந்து முகம் கொள்ளாப் புன்னகையில் நின்றவன், தன் வாழ்க்கையை அழிக்கப் போகும் எமனாகவே தெரிந்தான். அந்த நேரம் மணியோசை கேட்டது. அனைவரும் கைகூப்பி இறைவனை வழிபட்டனர். இவளது கழுத்தில் அணிவதற்காக வாங்கியிருந்த திருமாங்கல்யம் இறைவனின் காலடியில் வைத்து ஆசி பெற்று எடுத்து வரப்பட்டது.

அதைக் கண்டதும் அவள் உடல் நடுங்கியது. நீண்ட நீண்ட பெரிய மூச்சுக்களுடன் பயம் அவளை வியாபித்துக்கொண்டது. வேண்டாம் என்று கண்ணீரால் யாசித்தும் அதற்கு மதிப்பில்லாமல் போனது.

அவளது கனவுக் கோட்டைகள் யாவும் சிதறி சின்னாபின்னமாகின. அவன் கையில் திருமாங்கல்யத்தைக் கண்டதும் தலை கிறுகிறுத்துக்கொண்டு வந்தது. சித்தியின் கொடூர விழிகளில் தெரிந்த சீற்றம், அவளை அச்சுறுத்தி அங்கிருந்து நகரவிடாமல் செய்தன.

வெறித்த பார்வையுடன் நின்றவளின் கழுத்தில் திருமாங்கல்யம் வந்து விழுந்து, அவளைத் திருமதியாகப் பறைசாற்றியது. உலகமே இடிந்து தனது தலையில் விழுந்தது போலத் துடித்துத் துவண்டு போன நந்தனா, தனது உச்சியில் குங்குமத்தை வைத்த விரலில் தெரிந்த மோதிரத்தை பார்த்த பிறகே கண்ணீர் வழியும் விழிகளை நிமிர்த்தி நோக்கினாள். அங்கு தன்னை எதிர்த்து வரும் அத்தனை பேரையும் அடித்து சாய்த்து விடும் வல்லமையுடன் நின்றிருந்தான் பரிதிவர்மன்!

விழிகளைத் தட்ட மறந்து அவனையே பார்த்தபடி இருக்க, பரிதிவர்மனின் அசையாத பார்வையில் அவள் உள்ளம் நிம்மதியால் உறைந்து போனது.

அவனது கண்கள் அவளை விட்டு அசையாமல் இருந்தன. அவள் தான் செய்த தப்பையும் அதற்கு காரணமான சம்பவத்தையும் நினைத்து வெட்கித் தலைகுனிந்தாள். அவன் எதுவுமே சொல்லாமல் அவளது இடது கையைப் பற்றி அழுத்தினான். புரிந்துகொண்டு  அவளும் அமைதி காக்க, சித்தி நீலாம்பரி அவனுக்கு முன்பு வந்து நின்றுகொண்டு மறித்தார். அவனோ ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து, “விலகி நில்; இல்லை உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கி விடுவேன்” என்பதாகப் பார்த்தான்.

அவரோ மகன் அகிலனிடம் சொல்ல வர, “அக்காவுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லைனு தெரிஞ்சு தானே நீங்க அவங்களைக் கட்டாயப்படுத்துனீங்க. இப்ப அவங்க ஆசைப்படியே எல்லாம் நடந்துடுச்சு, இனிமேலாவது அவங்களை நிம்மதியா வாழ விடுங்க…” என்று கூறிவிட்டான் அவனும்.

தன் மகனா இப்படிப் பேசுகிறான் என்று அவர் அதிர்ச்சியுடன் பார்க்க, நந்தனாவும் நம்ப இயலாத பார்வை பார்த்து நின்றாள். ஏனெனில் அவனுக்கு அவள் எவ்வளவோ செய்துகொடுத்தும், அவன் அவளுக்காக என்று இதுவரை எதுவும் செய்ததில்லை. அம்மாவின் குணம் அப்படியே மகனிடம் இருப்பதாக நினைத்து அவள் ஒதுங்கி இருக்க, தம்பியிடம் காணப்பட்ட மாற்றம் வியப்பை அளித்தது.

“நம்ம அக்கா காலேஜ் படிக்கும் நேரத்துல, இதுபோல முன்பு ஒரு முறையும் நீங்க கல்யாண ஏற்பாடு பண்ணியிருந்தீங்க. அப்ப அந்தக்  கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு நம்ம அப்பா விஷம் குடிச்சு தற்கொலை செய்துக்கிட்டாங்க; உங்ககிட்ட சத்தியம் கூடக் கேட்டு, நீங்க கொடுக்காமலேயே இருந்து அவருடைய கடைசி ஆசையும் நிராசையா போயிடுச்சு. அக்காவுக்கு நம்ம அத்தானைப் பிடிக்கலன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் அவங்களுக்குப் புடிச்ச மாப்பிள்ளை யாருன்னு பார்த்து, அவங்ககிட்ட விஷயத்தைக் சொல்லிக் கூப்பிட்டு வந்தேன்.

ஆமாம்! பரிதி அத்தானை நான்தான் நீங்க யாரும் சந்தேகப்படாதவாறு வர வச்சேன். ஏன் தெரியுமா? எங்க அப்பா இருந்த வரை அவங்களுக்கு காவலா இருந்தாங்க. இப்ப அந்த இடத்துல நான் இருக்கேன். இனிமேல் எங்களை மீறி உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று நிமிர்வுடன் சொன்னான்.

மகனைத் தன் ஆத்திரம் தீரும் வரை முறைத்தவர், “உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருந்தா இப்படிச் செய்திருப்பியா? இவன் அம்மா ஒரு பணவெறி பிடித்த மிருகம். ஏழை வீட்டில் பிறந்த உன் அக்காவை ஒரு போதும் மருமகளா ஏத்துக்க மாட்டார்.  அதோடு உன் அத்தானுக்கு ஏற்கனவே கல்யாணமாகி மகளும் இருக்கறா… அவன் மனைவி எப்ப வேணாலும் திரும்பி வரலாம்; அப்ப, உன் அக்காவின் வாழ்க்கை எதிர்காலம் என்ன ஆவது? வசதியான வீட்டுல போய் வப்பாட்டியா இருந்தாலும் பரவாயில்லை, என் அண்ணன் பையன கட்டிக்கிட்டு நல்லா இருக்கக் கூடாதா?” என்று வெகுண்டுபோய் கேட்டார்.

“அப்படி எல்லாம் இல்லை, எங்க பரிதி அத்தான் அக்காவைப் பத்திரமா பார்த்துக்குவாங்க”

“என்ன பார்த்துக்குவாங்க? உனக்கு என்ன தெரியும்னு இவ்வளவு உறுதியா சொல்றே? உங்க அக்காவுக்கும் அவனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். முன்னமே அவங்க அம்மா இவளை எங்க கட்டிக்கிட்டு வந்துடுவானோ பயந்துபோய் தான், அவசர அவசரமா அந்த வெளிநாட்டுக்காரியைக் கட்டி வச்சாங்க. இதுல மறுபடியும் இரண்டாம் தாரமா உன் அக்காவை கல்யாணம் செய்துட்டு போனால், ஆரத்தி கரைச்சு உள்ளே ஏத்துவாரா? நாளைக்கே போலீஸ் வழக்கு பிரச்சனைனு வந்தா உன்னால என்ன செய்ய முடியும்? எனக்கு அவளைப் பிடிக்குதோ இல்லையோ ஆனால் அவளோட வாழ்க்கை அழிஞ்சு போக நான் நினைக்கல” என்றார் நீலாம்பரி. 

அவர் சொல்வதை நம்ப முடியாவிட்டாலும், கூறிய வார்த்தைகள் நிதர்சனம் என்பதால், மேற்கொண்டு பதில் சொல்ல முடியாமல் தயக்கத்துடன் பரிதிவர்மனைப் பார்த்தான் அகிலன்.

அவர் அவன் அருகில் சென்று, “ஏற்கனவே ஒரு கல்யாணம் பண்ணி அந்த மனைவியோடு வாழாம பிரிஞ்சிருக்கும் நீ வந்து, என் பிள்ளையின் வாழ்க்கையை அழிக்கப் பாக்குறியே, உனக்கு மனசாட்சியே இல்லையா? நாளைக்கு அவள் உன்னைத் தேடி வந்தா என் பிள்ளையை உன் வீட்டு வேலைக்காரியைப் போல் வச்சிருப்பாயா? இல்லை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவாயா? எந்த நம்பிக்கையில் அவளை உன்னோடு அனுப்பி வைப்பது?” என்று சினந்தார்.

அவன் வாய் திறக்காமல் அமைதியாகவே நிற்க,  “அநியாயமா என் மகளின் வாழ்க்கையை அழிச்சுட்டியே! உன் வாழ்க்கையில் அவள் வரக்கூடாதுன்னு தானே இவ்வளவு தூரம் பார்த்துப் பார்த்து செய்தோம்.  கடைசி நேரத்தில் வந்து எல்லாத்தையும் கெடுத்துக் குட்டி சுவராக்கிட்டியே… உங்க அம்மாவுக்கு அவளைக் காவு போடவா இத்தனை நாள் சோறு போட்டு வளர்த்தோம்?” என்றவர்

“ஏன்டி கூறு கெட்டவளே! அவன்தான் வந்து நின்னு தாலியைக் கட்டினா உனக்குப் புத்தி எங்க போச்சு? நடந்ததை மறந்துட்டியா …” என்று மனம் தாங்காமல் சொல்ல, அவன் நந்தனாவைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். அவள் தலைகுனிந்தபடி நின்று கொள்ள, “நந்தனா என் மனைவி! இன்று முதல் அவள் என் பொறுப்பு. என்னையும் மீறி யாராலும் அவளை எதுவும் செய்ய முடியாது” என்று வாக்களித்தவன், “அவளுக்கு எந்தத் தீங்கும் வராம பார்த்துக்க வேண்டியது என் கடமை! நீங்க யாரும் அவளைப்பற்றி கவலைப்பட வேண்டாம்” எனச் சொல்லிவிட்டு, கையோடு அழைத்துச் சென்றுவிட்டான்.

காலைப் பொழுது எழுந்த முதலே குழந்தை நிவேதா ஏனோ விடாமல் தொடர்ந்து அழுது கொண்டிருக்க, பேத்தியைத் தூக்கித் தோளில் போட்டுத் தட்டிக்கொண்டே, வெளி வாசலைப் பார்த்துத் திட்டிக்கொண்டிருந்தார் நாகேஸ்வரி.

இரண்டு வயதுக் குழந்தை தாயையும் தகப்பனையும் காணாமல் தேடி அழுதது.

“மகனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சா குடும்பப் பொறுப்பைப் பார்த்துட்டு குழந்தையையும் தூக்கி வச்சு கொண்டாடலாம்; வயசான காலத்துல காலை நீட்டி அக்கடான்னு உட்காரலாம்னு பார்த்தா, இப்படி எல்லாத்தையும் என் தலையில தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாளே!

அவனுக்கும் கொஞ்சமாவது அக்கறை இருந்தா இப்படியெல்லாம் நடப்பானா? என்னமோ இவன் தான் ஊர் மேலயும் ஊர் மக்கள் மேலயும் உண்மையிலேயே அக்கறை உள்ளவன் போல எப்ப பார்த்தாலும் பொதுச் சேவையில் ஈடுபட்டுத் திரிகிறான். நமக்கும் ஒரு குடும்பம் இருக்கு, பெத்த பிள்ளை அப்பாவைத் தேடும்னு கொஞ்சமாவது பாசம் இருந்தா தானே! எல்லாம் என் தலையெழுத்து. கடைசி காலத்துல இதெல்லாம் அனுபவிக்கணும்னு இருக்கு” என்று அங்கலாய்ந்தார் நாகேஸ்வரி.

அந்த நேரம் அருகில் நின்றிருந்த வேலைக்காரப் பெண்மணி ஏதாவது சொன்னால் நம்மையும் இல்லாமல் ஆக்கிவிடுவார் என்பதால் அமைதியாக இருக்க, குழந்தை விடாமல் அழுதுகொண்டே இருந்தது. பாலைக் கொடுத்தும், இட்லியைப் பிய்த்து ஊட்டியும் அவள் விடாமல் அழுது கொண்டிருக்க, “இந்த வீட்டுல இத்தனை வேலைக்காரங்க இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு பச்சைக் குழந்தையைக் கூட உங்களால் பார்த்துக்க முடியுதா?” என்று ஆத்திரத்துடன் கத்தினார்.

அவர்களோ தயங்கியபடி நிற்க, “என்ன கருமமோ! நமக்கு வாய்த்ததெல்லாம் அப்படித்தான் இருக்கு” என்று திட்டிக்கொண்டே இருக்க, அந்த வீட்டில் ஒரே ஒருவரிடம் மட்டும் போகும் நிவேதா, அவருடன் சென்றதும் குழந்தையைச் சமாதானப்படுத்த வீட்டுப் பின்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள் அந்தப் பெண்மணி.

அதே நேரத்தில் வீட்டு வாசலின் முன்பு ஒரு கார் வந்து நின்றது. யார் வருகிறார்கள் என்று பார்க்க அவர் வாசல் பகுதியை நோக்கி நடக்க, மாலையும் கழுத்துமாகத் தன் மனைவி நந்தனாவுடன் இறங்கி நின்றான் பரிதிவர்மன்!

அக்காட்சியை கண்டதும் திகைத்துப்போய், வாயைப் பிளந்தபடி நின்றார் நாகேஸ்வரி. உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது போலிருந்தது. கண் முன் நடந்த சம்பவத்தை அவர் நம்ப முடியாமல் இருக்க, அவனோ அம்மாவை ஒரு பொருட்டாகக் கருதாமல், மனைவியின் கைப்பற்றி அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தான்.

நேராகப் பூஜையறைக்கு அழைத்துச் சென்று சுவாமி வழிபாட்டை முடித்தவன், வேலைக்காரப் பெண்மணியின் கையில் இருக்கும் குழந்தை நிவேதாவைக் காணச் சென்றான்.

அவள் மாலையும் கழுத்துமாக இருக்கும் அப்பாவைக் கண்டதும் புன்னகையுடன் அவனை நோக்கிச் சாட, அவனும் முகம் மலர மகளைத் தன் இரு கைகளிலும் வாங்கிக்கொண்டான்.

நிவேதா “அப்பா, அப்பா!” என்று ஆசையுடன் அழைத்துக்கொண்டே அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள, மகளின் கன்னத்தில் முத்தமிட்டான் பரிதிவர்மன்.

அப்படியே அவள் சற்று நேரம் விளையாடிவிட்டு, அருகில் நின்று தன்னையே பார்த்துப் புன்னகையுடன் இருக்கும் பெண்ணவளைக் கண்டாள்.

புதிய நபராகத் தெரியும் அவளை யார் என்று தெரியாமல் பார்த்திருக்க, “பிள்ளைக்கு அம்மா, பிள்ளை கூடவே இருந்து கடைசி வரை பத்திரமா பாத்துக்கப் போறவங்க. இனி நீ இவங்கள அம்மான்னுதான் கூப்பிடணும்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.

அவளோ மறுபடியும் நந்தனாவின் முகத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர், “அம்மாவா?” என்று கேட்க, நந்தனாவும் “ஆமாம்” என்று தலையசைத்தாள்.

உடனே அவள் நந்தனாவை நோக்கிச் செல்ல, பூக்குவியலாகத் தன் மீது வந்து மோதிய குழந்தையை இரு கைகளிலும் வாரி அணைத்தவள், அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். குழந்தையும் அதுபோலவே செய்ய, “அம்மாவை உனக்குப் புடிச்சிருக்கா? இனிமேல் அம்மாவை விட்டு எங்கேயும் போகாம அழாம இருப்பியா?” என்ற பரிதியின் குரலில் உடனே தலையசைத்தாள்.

மகளையும் மனைவியையும் கண்டு அவன் புன்னகை புரிந்தபடி இருக்க, மூவரையும் நெருப்பு விழிகளால் சுட்டெரித்துக்கொண்டிருந்த நாகேஸ்வரி, “யாருக்கு யார் அம்மா? எப்படி நீ இவளை என் மருமகள் இருக்கும் இடத்தில் கொண்டு வரலாம்? நாளைக்கு அவள் வந்து நின்னு கேட்டா நான் என்ன பதில் சொல்வது?” என்று சீறிக்கொண்டு வந்தார்.

error: Content is protected !!
Scroll to Top