நேரம் சரியாக 4.04

அத்தியாயம் 1., 

“டேய் சீக்கிரம் எந்திருச்சு தொலைங்க டா. இப்போ அந்த வீட்டை க்ளீன் பண்ணா தான். காலைல பாலைக் காய்ச்சிட்டு, திங்ஸ் எல்லாம் மாத்த முடியும்”, என திரு தன் நண்பர்களை திட்டிக் கொண்டிருக்க, 

“இப்போதான் டா வந்தோம். சாவடிக்கிற மச்சா நீ. அந்த மேனேஜர் வேற இன்னைக்கு விட்டா அந்த ஃபைல்லை க்ளியர் பண்ணவே முடியாதுங்கிற மாதிரி பிரசர் ஏத்தி விட்டு அனுப்பிருக்கான்”, என்றான் அர்ஜுன். மற்ற இருவரும் அவனுடன் ஆமாம் சாமி போட்டுக் கொள்ள, கடுப்பானான் திரு.

“நாளைக்கு இந்த வீட்டுக்கு வேற ஆள் வராங்கனு ஹவுஸ் ஓனர் சொல்லிட்டு போய் இருக்காரு. அவரே வேற நல்ல இடமும் பாத்து குடுத்து இருக்காரு. ஒழுங்கா யூஸ் பண்ணிக்கணும். எந்திருச்சு தொலைங்க எரும மாடுகளா”, என மீண்டும் திட்டிக்கொண்டே அவர்களை அழைத்துக் கொண்டு புதிய வீட்டைப் பார்க்கச் சென்றனர். 

வீட்டின் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர் நால்வரும். 

“நமக்கு எதுக்குடா இவ்ளோ பெரிய வீடு, சுத்தம் பண்ணவே ரெண்டு நாள் ஆகும் போல”, என்றபடி முன்னேறினான் விஷ்வா.

“நாலு ரூம் இருக்கு, தனியா கிச்சன், ஹால்னு வீடு பெருசா சூப்பரா இருக்கு டா. அதான் அவர் காட்டின உடனே ஓகே சொல்லிட்டேன்”, என்றான் ராகவ்.

“பேய் பங்களா மாதிரி இருக்கு. உள்ளே வரவே பயமா இருக்கு டா”, என்றான் அர்ஜுன்.

“அப்டியா… பேய் இருந்தாலும் பரவால்ல வா”, என அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான் விஷ்வா.

நால்வரும் வீட்டினுள் சென்றனர். 

” டேய் லைட்ட போடுங்க டா, இருட்டுக்குள்ள எது எங்கன்னு தெரியல”, என ராகவ் சொல்லிக் கொண்டே முன்னேற,

” முன்னாடி போறவன் லைட்ட போடாம எதுக்கு டா போற”, என லைட் சுவிட்சை தேடியபடி கேட்டான் அர்ஜுன்.

“இதோ கிடைச்சிருச்சு”,  என ஒரு சுவிட்சை அழுத்தினான் விஷ்வா.

அது விளக்குக்கு பதில், “கீச் கீச்”, என சத்தம் எழுப்பியது. விருட்டென நால்வரும் பயந்து விட்டனர்.

” என்னத்த டா அமுக்கி தொலைச்ச”, என அர்ஜுன் கத்த,

” தெரியலையே டா. இரு”, என தன் மொபைலில் டார்ச்சை இயக்கிய விஷ்வா,

“ஒண்ணுமில்ல டா. ஆல் இஸ் வெல் சொல்லுங்க, அது சீலிங் ஃபேன் தான்”, என்றான் லேசாக தடத்தடக்கும் இதயத்தை சமன்படுத்திக் கொண்டு,

“டேய் நிஜமாவே எனக்கு பயமா இருக்கு, எனக்கு இது வீடு மாதிரியே தோணலை”, என்றான் அர்ஜுன் எச்சில் விழுங்கிய படி,

“மூடிட்டு வா. நானே அரண்டு போய் வந்துட்டு இருக்கேன். நீ வேற சும்மா பயமுறுத்திட்டே இருக்க”, என திட்டினான் திரு.

“கத்து கத்துன்னு கத்தி இங்க இழுத்துட்டு வந்தியே ராசா, இதுக்கெல்லாம் பயப்படலாமா”, என கேலியாக பேசியபடி அர்ஜுன் முன்னே நடக்க,

“லைட் ஆன் ஆகிட்டா வீடு நார்மலா இருக்கும் டா. இருட்டா இருக்கவும் தான் ஒரு மாதிரி பீதியாகுது”, என்றான் திரு.

“கம்மி வாடகைனு சொல்லும் போதே கொஞ்சம் யோசிச்சு இருக்கணும். காசு கொடுத்தாச்சு, என்ன நடந்தாலும் இங்க தங்கி தான் ஆகணும் வா போலாம்”, என்றான் விஷ்வா.

“ஒண்ணுமே இல்ல டா. எதுக்கு இப்படி பயந்து சாகுறீங்க. இந்த மாதிரி தனி வீடு, குறைஞ்ச வாடகை எங்க கிடைக்கும் சொல்லு. சும்மா கற்பனைப் பண்ணிக்கிட்டே இருக்காதீங்க”, என்ற ராகவ் எப்படியோ விளக்கின் சுவிட்சைக் கண்டு பிடித்து ஆன் செய்து விட்டான்.

அவர்கள் நின்று இருந்தது ஹால், “டேய் வீடு சூப்பரா இருக்கு டா”, என சுற்றியும் பார்த்து வாயைப் பிளந்தான் விஷ்வா.

“ஆபத்து ஆஸம்மா (awesome) தான் டா இருக்கும்”, என்றான் அர்ஜுன் அப்போதும்.

” வாயை மூடுடா பக்கிப் பயலே.  நெகடிவாவே பேசிட்டு”, என திட்டினான் ராகவ்.

“சரி வாங்க க்ளீன் பண்ணலாம்”, என திரு சொல்ல,

“அப்படி ஒன்னும் அழுக்கா இல்லையே டா. இங்க முதல்ல யார் இருந்தாங்க”, எனக் கேட்டுக் கொண்டே கிச்சன் சென்று லைட்டைப் போட்டான் விஷ்வா.

“நம்ம ஹவுஸ் ஓனருக்கு சொந்தக் காரங்களாமா. அவங்க வெளிநாடு போய் மூணு வருஷம் ஆச்சாம். அவங்க பையன் ஏதோ எலக்ட்ரானிக் லேப் ல பெரிய போஸ்டிங்ல இருந்தாராம். அவரோட கிரியேட்டிவிட்டி ரொம்ப பிடிச்சு, வெளிநாட்டு கம்பெனி காரன் ஒருத்தன் அவருக்கு நல்ல சம்பளத்துல வேலை குடுத்து கூப்பிட்டாங்களாம். அவங்க ஃபேமிலியா அங்க செட்டிலாகிட்டாங்கனு சொன்னாரு ஓனர்”, என ராகவ் விளக்கம் சொல்ல, 

“இத்தனை கேட்டியே மச்சா, இந்த வீட்டுக்கு ஏன் இவ்ளோ வருசமா யாரும் வரலனு கேட்டியா? ” என அர்ஜுன் கேட்க, 

“அவருக்கு பிடிச்ச மாதிரி ஆளுங்க வரலயாம். நம்மளை ரொம்ப பிடிச்சுதான்  இந்த வீட்டை நமக்கு வாடகைக்கு விடனும்னு தோணுச்சாம்”, என்றான் ராகவ். 

“அந்த ஆள் சொன்னான்னு இந்த வீட்டை ஓகே பண்ணிட்ட, ஆனா எனக்கு என்னமோ சரியா படல டா”, என்றான் அர்ஜுன். 

“இந்தா”, என  எட்டி ஒரு உதை விட்டான் திரு. 

” ஏன் டா எரும”, என இடுப்பைத் தேய்த்துக் கொண்டே வலியில் முகம் சுருக்கிக் கேட்டான் அர்ஜுன். 

“சரியா படலனு சொன்னயே மச்சா, அதான் இப்போ சரியா பட்டுச்சா டா”, என கேட்டபடி சிரிக்க, 

“போடா காட்டெருமை” என திட்டிக் கொண்டு அங்கிருந்த சோபா ஒன்றில் அமர்ந்து விட்டான். 

அது ஃபுல் ஃபர்னிஷிங் வீடு என்பது ஒரு சந்தேகம், கூடவே வாடகை குறைவு. இத்தனை ஆஃபர் இருந்தால் சந்தேகம் வருவது இயல்பு தானே. 

சும்மாவே அர்ஜுனுக்கு சந்தேகமும் கற்பனையும் அதிகம் என்பதால், மற்றவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவனோ உள்ளுணர்வு சொன்னால் மட்டுமே சந்தேகம் கொள்வான் என்பது மற்றவர்கள் அறியாதது. 

“திரு… நீ கிச்சன் க்ளீன் பண்றயா, இல்ல ஹால் எடுத்துக்கிறயா”, என ராகவ் கேட்க, 

“கிச்சனா”, என யோசித்தவன், 

“சரி நான் கிச்சன் க்ளீன் பண்ணிடுறேன்”, என்றபடி கிச்சன் சென்றான் திரு. 

“ஓகே. அப்போ நான் ஹால் க்ளீன் பண்றேன்”, என வேகமாக சொன்னான் விஷ்வா.

“ம்ம். நான் ஃபர்ஸ்ட்  பெட் ரூம் க்ளீன் பண்றேன். அப்புறம் எல்லாரும் சேர்ந்து பேலன்ஸ் ரூம்ஸ க்ளீன் பண்ணிடலாம் ஓகேவா”, என ராகவ் கேட்க,

“அப்போ நானு”, என அர்ஜுன் கேட்க,

“நீ போய் சாப்பிடறதுக்கு எதாச்சும் வாங்கிட்டு வா டா. அப்புறம் நீயும் எதோரு பக்கம் ஜாயின் பண்ணிக்க”, என விஷ்வா சொல்ல,

“ஓகே. பரோட்டா வாங்கிட்டு வரேன்”, என அவன் வெளியில் போக,

“பத்தா வாங்கிட்டு வா”, என  ஒரு குரல்.

“சரிடா திண்ணி வாயா”, என்றான் அர்ஜுன் திரு என நினைத்து,

“யார் கிட்ட டா பேசற”, என வெளியில் வந்தான் விஷ்வா.

” திரு கிட்ட தான் டா. அவன் தான் பத்து வேணுங்கரான்”, என அர்ஜுன் சொல்ல,

“ஓ சரி போயிட்டு. சீக்கிரம் வா”, என அனுப்பி விட்டு வேலையைத் தொடர்ந்தான் விஷ்வா.

சமலையறையின் ஜன்னல் வாசல் பக்கம் இருக்கவும், ஜன்னல் வழியே திரு சொல்லி இருப்பான் என நினைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.

ஒரு வழியாக மூவரும் அவர்களின் பொறுப்பில் இருந்த அறைகளை சுத்தம் செய்து விட்டு வர, பரோட்டா வாங்க போனவன் வரவில்லை.

“அவனைப் பத்தி தெரிஞ்சும், அனுப்பி விட்ட நம்மளை தான் அடிச்சுக்கணும்”, என்றான் ராகவ்.

அர்ஜுனுக்கு எங்கு போனாலும் எளிதில்  நட்பை பிடித்து விடுவான். அந்த அளவிற்கு வாயாடுவான். புது இடம் என்றெல்லாம் இல்லை. ஜாலியாக பேசி நட்பாகிவிடுவான்.

இப்போதும் ரோட்டில் நின்று யாருடனாவது கடலை தான் வறுத்துக் கொண்டிருப்பான். 

அதை எண்ணித் தான் நண்பர்கள் கடுப்பாவது.

சிறிது நேரத்தில் பரோட்டா பார்சலுடன் வீட்டினுள் நுழைந்தான் அர்ஜுன்.

“எரும மாடே. பரோட்டா வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா” என திட்டியபடி ஆளுக்கொரு இலையைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தனர்.

“டேய் இங்க பக்கத்துல ஒரு அங்கில் பிரெண்ட் ஆகிட்டாரு டா. அவரோட பொண்ணும் இந்த வீட்டு பையனும் ஒரே காலேஜ்ல படிச்சவங்களாம்”, என்றான் அர்ஜுன்.

“அதுக்குள்ளயா டா”, என விஷ்வா அதிர,

“மேல சொல்லு”, என்றான் ராகவ்.

” அந்த பையன் ஒரு இண்ட்ரோவெர்ட்டாம். பக்கத்து வீட்டு ஆளுங்க கூட எல்லாம் பேசவே மாட்டானாம்”, என அர்ஜுன் சொல்ல,

“ஓஹோ”, என்றான் திரு.

அப்டியே பேசிக்கொண்டே உண்டு முடித்தவர்கள் மீத இரண்டு பரோட்டாவை கிச்சனில் வைத்து விட்டு, மற்ற அறைகளை சுத்தம் செய்தனர்.

மீதம் மூன்று அறைகளையும் சுத்தம் செய்து முடிக்க மணி பதினொன்று ஆகியிருக்க,

” போலாம் டா. காலைல வந்து பால் காய்ச்சிடலாம்”, என்றபடி நால்வரும் தங்களின் அறைக்குத் திரும்பினர்.

அவர்கள் வைத்த பரோட்டா இரண்டும். காணாமல் போய் இருந்தது.

###

” எப்படியோ அந்த வீட்ட வாடகைக்கு விட்டாச்சு. இப்போதான் நிம்மதியா இருக்கு”, என தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த ஹவுஸ் ஓனர்.

“யாருக்கு வாடகைக்கு விட்டீங்க. அந்த வீட்டுக்கு ஆளே வரலணு புலம்பிட்டு இருந்தீங்க”, என அவரின் மனைவி கேட்க,

“நம்ம பேச்சுலர் மேன்சன் ல நாலு பசங்க இருந்தாங்கல்ல. அந்த மேன்சன் நம்ம வீடு பிளான் தான கேட்டிருந்தோம்

அந்த பில்டிங் நல்ல விலைல வாங்க ஒரு பார்ட்டி வந்துச்சு. அதான் பசங்களை அங்க மாத்திட்டு அந்த பில்டிங்கை சேல் பண்ண போறேன்”, என்றார் அவர்.

“அந்த பையனைப் பத்தி சொன்னீங்களா”, அவரின் மனைவி முகத்தில் பயத்துடன் கேட்க,

“சொன்னா போவாங்களா. அந்த ஏரியா மக்களுக்கே அந்த வீட்டில என்ன நடந்துதுனு தெரியாது. யாரும் இவங்களுக்கு சொல்லவும் போறதில்ல. நானும் சொல்லல”, என்றார் ஓனர்.

“பசங்களுக்கு எதாச்சும்னா என்னங்க பண்றது. வெளியூர் ல இருந்து வந்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பசங்க”, என்றார் அவரின் மனைவி.

“கெட்டது எதும் நடக்காது டி. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. எல்லாமே தங்கமான பசங்க. அந்த வீடும் அவங்களுக்கு சரினா இருக்கட்டும். இல்லனா நானே வேற இடம் பாத்து குடுக்கிறேன்”, என்றார் அவர்.

“ம்ம்”, என்றவர் அவர்களுக்கு ஒன்றும் ஆகக் கூடாது என வேண்டிக் கொண்டார்.

error: Content is protected !!
Scroll to Top